கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 6, 2024
பார்வையிட்டோர்: 904 
 
 

(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

வீட்டு முகப்பிலிருந்து பிதுங்கிய பால்கனியில் அவன் நின்று கொண்டிருக்குமிடத்திலிருந்தே அப்பருந்து வட்ட மிட்டுக்கொண்டே வானிலிருந்து கீழ் நோக்கியிறங்கு வதைக் கண்டான். அவனுடைய அப்போதைய மனநிலையில், அதன் விரிந்த சிறகுகள் ஊரையே போர்த்துவது போலிருந்தன. 

சுற்று முற்றும் தெரியும் வீட்டுக் கூரைகளின் நடுவில் ஓங்கிய ஒரு மசூதி ஸ்தூபியின்மேல், அது சிறகுகளை ஒடுக்கிக் கொண்டு வந்து அமர்ந்தது. அவனைப் போலவே அதுவும் ஊரின் நிலையைச் சிந்திப்பது போன்று சுற்று மௌனமாய் உட்கார்ந்து முற்றும் நோக்கிக்கொண்டு கொண்டிருந்தது. அதன் தோற்றமே ஒரு அபசகுனம். அதன் மௌனம் அதனினும் பயங்கரம். யார் தன்னுள் எப்பொழுது விழப் போறார்கள் என்று வாயைத் திறந்து கொண்டு காத்திருக்கும் பாழுங்கிணற்றின் ஆழமான மௌனம்.உயிர் நீங்கியவைகளைத் தின்றுத் தின்று உயிர்த் பிரிந்த சடலத்தின் உயிருள்ள மௌனத்தின் உருத்தானோ பருந்துக்கள் என்றும் அவன் எண்ணிய துண்டு. அபசகுனங்கள். 

ஆயினும் ஊரில் இரண்டு மாதங்களாகவே அக்கா வாசந்தான். நாயும் நரியும் ஓடின என்று வசனம் சொல்லக்கூட நாய்கள் கண்ணில் படவில்லை. ஊர் அவ்வளவு வெறிச்சென்றாய் விட்டது. 

‘ஜப்பான்காரன் அதோ அங்கு வந்து விட்டான்’ ‘இதோ இங்கு வந்து விட்டான்’ என்ற ‘குபார், கிளம்பியதும், சமுத்திரக் கரையோரம் இருப்பவர்கள் ஊருக்கு உட்புறம் நகர்ந்தார்கள். ஊருக்கு உட்புறம் இருப்பவர்கள் ஊரை விட்டுவெளியேற ஆரம்பித்தார்கள். அவ்வளவுதான், கொஞ்ச நாளில் பட்டணம் கலகலத்து விட்டது.பணக்காரன் மோட்டாரில் ஓட்டம் பிடித்தால் ஏழை ரிக்ஷாக்காரன், தன் பெண்டாட்டி பிள்ளையையும், ஓட்டைப்பானையையும் ஓலைப்பாயையும் ரிக்ஷாவில் வைத்துக்கொண்டு ஓடினான். ஜன நடமாட்டமற்று, தெருக்களும், தெருக்களில் கட்டடங்களும் பயங்கரமாய்த் திமிர்த்துக்கொண்டு நின்றன. அசையாப் பொருள் களாகிய தமக்கும் தம்முடைய அசையாத் தன்மை யினாலேயே அச்சமுறுத்தும் உயிருண்டு எனக் காண்பித்தன. 

நாளை முதல் இந்த வீடும் அம்மாதிரிச் சாபம் பிடித்த வீடுகளுள் ஒன்றாய்விடும். ஏனெனில் மாதுவின் குடும்பத் தாரும் விடியற்காலையில் வண்டியேறப் போகிறார்கள். 

மாது ஆனால் லேசில் கிளம்புவதாயில்லை. மாது பெரிய இரும்புத் தலையன். 

“இப்போத்தான் உத்தியோகத்தில் ஒட்டிக்கொண் டிருப்பவனுக்குச் சம்பளம் உயர்த்திக்கொண்டிருக்கிறான். முதலாளி வேலைக்காரனைக் கெஞ்சும் காலம் இப்போதான் வந்திருக்கிறது. இந்தச் சமயத்தில் அடித்துப் பிடிங்கிச் சம்பாதிக்காமல் எப்போடா சம்பாதிக்கிறது? 

அடேயப்பா, மாது பெரிய ‘பேர்வழி’ அவனுக்கு வாழ்க்கையில் ஒரே குறிதான். ஒரு ரூபாயை எப்படி பத்து ரூபாய் ஆக்குவது, பத்தை எப்படி நூறாக்குவது? ஒரு நிமிஷம் சும்மாயிருக்க மாட்டான். பக்க ஜோலி பத்து வைத்துக்கொண்டிருந்தான். எல்லோருக்கும் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாளெனில் அன்றுதான் மற்றைய நாட்களை விட வேலை அவனுக்கு மிகவும் மும்முரம். இத்தனைக்கும் மாதுக்குப் பூர்வீகச்சொத்து ஊரில் இருக்கிறது. பங்குக்கு உடன் பிறந்தவர்களும் கிடையாது. இருந்தும் அவன் பிறந்த வழி அப்படி! 

அவசியச் செலவு காலணாக் கூட அளந்துதான் பண்ணுவான். 

அடிக்கடி அவனுக்கும் பாருவுக்கும் தர்க்கம் வந்து விடும். 

“குழந்தைக்கு ஹார்லிக்ஸ் வேணும், அதுவேணும் இதுவேணும்” என்பாள். 

“நான் அப்படி ஹார்லிக்ஸில் வளரவில்லையே!”

“நீங்கள் பிறந்தாப்போல் நம் குழந்தை பிறக்க வில்லையே! நம்ம காலமே வேறே, நம் குழந்தை காலமே வேறு” 

“நன்றாய்க் காலத்தின்மேல் பழியைப் போட்டாய்! எத்தனை அகமுடையான் பெண்டாட்டி இம்சை தாங்க முடியாமல் ஓடியோ, செத்தோ போனபிறகு அவன் குழந்தைகள் வளரவில்லை! அதுகள் எல்லாம் ஹார்லிக்ஸ் இல்லை, ஓவல்டின் இல்லை என்று வாயைப் பிளந்து விட்டனவா?” 

“உங்களுக்கு இது மாதிரிதான் பேசத் தெரியுமா? இல்லாட்டா…”

“இதோ பார், நம்மிடத்தில் ஒன்று வைத்துக்கொள். எந்தெந்தச் சமயத்தில் எந்தச் சாமான் சுளுவாயும் மலிவாயும் கிடைக்கிறதோ, அதுதான், குழந்தையா னாலும் சரி, பெரியவர்களானாலும் சரி – நான் வாங்கிக் கொடுக்கக்கூடிய சாமான். நீ அதை மருந்தென்று வைத்துக் கொண்டாலும் சரி, ஊட்டமென்று கொண் டாலும் சரி. அதுக்குத் தகுந்தாற்போல், அதைச் சாப்பிடு பவர்கள் வளர்ந்தது போதும். உனக்கு ஒரு கதை தெரியுமா?” 

பாருவுக்குக் கதை கேட்கப் பொறுமை இராது. கதவுகள் படாரென மூடும், திறக்கும். 

மாது அடிக்கடி சொல்வான். 

”உன்னைப் பார்த்தால் எனக்கு, அசூயையாயிருக்கிறதப்பா? பெண்டாட்டி பிள்ளையென்று ஒரு பிடுங்கல் உண்டா? பெரியவர்களெல்லாம், பேரனைப் பார்க்க வேண்டும், பேத்தியைப் பார்க்கவேண்டும் என்று பெண்டாட்டிகளைக் கட்டிவைத்து விடுகிறார்கள். கூடவே கலியும் பிடித்து விடுகிறது. உன் மாதிரி யிருந்தால், நான் இத்தனை நாளைக்குப் பட்டணத்திலேயே ஒரு வீடு வாங்கியிருப்பேன். இதோ பார். பாரு மறுபடியும் வருகிறாள். இப்பொழுது என்னத்தைக் கேட்கப் போகிறாளோ, தெரியவில்லை. என்ன சமாசாரம்?” 

“இன்னிக்கு ஜப்பான்காரன் நோட்டீசை வாரி இறைச்சானாமே, புதன் கிழமை வரப்போறேன். எல்லோரும் முன்னைக்கு முன்னாலே ஊர்போய்ச் சேருங்கோ”ன்னு” 

“ஆரம்பித்து விட்டாயா? இந்த ஜப்பான்காரன் எங்களிடம் சொல்லியிருக்கிறானோ இல்லையோ, முதலில் நம் வீட்டுப் பொம்மனாட்டிகளிடம் கண்டிப்பாய்ச் சொல்லிக்கொள்கிறான். ‘நான் வருகிறேன், இட்லி தோசைக்கு அரைத்துப் போடுங்கள்.” 

“எதுவுமே உங்களுக்கு வேடிக்கைதானா? கோடி யாத்திலே இன்னிக்கிக் கிளம்பிட்டா-” 

“சரிதான் போ, வேலையைப் பார். எல்லோரும் பண்ணுகிறதை நான் பண்ண முடியுமா?” 

மாது இவ்வளவு வீறாப்புப் பேசினானே யொழிய, திடீரென்று ஒரு நாள் தெருவில் எல்லா வீடுகளும் பொட்டலான பிறகு, தன் வீடு தனியாய் நின்றதைத் தானே உணர்ந்ததும், அவனுக்கே சற்று ‘திக்’ கென்றது. அத்துடன், ஊரில் இவ்வளவு வெளியேற்றமும் நிசப்தமும் நேர்ந்துவிட்ட பிறகுகூட, கொஞ்ச நாளாய், முன்னை விட உடலும் மனமும் இருப்புக் கொள்ளாத பரபரப்பு. ஆபீசில் கூட, ஒருவர் முகத்தையொருவர் பார்க்கையில், அங்கு வாய்விட்டுச் சொல்லவும் மெல்லவும் முடியாது. உள்பயத்தால் ஏற்படும் ஒரு மனத் தவிப்பு. போலீஸ், ராணுவம், ஏ. ஆர். பி. வேலையைச் சேர்ந்தவர்களெல்லாம் அவரவர் வேலைகளைச் செய்யும் வெளிப் பாவனையிலேயே ஒரு புது ‘உஷார்”, மூன்று நாட்களாய்த் தெரு விளக்கு எரியவேயில்லை. 

இந்தப் புது ஜரூரையெல்லாம் கண்டவுடன் பாரு வுக்கு வயிற்றில் இன்னும் புளியைக் கரைத்தது. மாதுவின் ஊர்ப் போய்ச் சேர தாயார் கண்டிப்பாய்த்தான் வேண்டும் என்று கெடுபிடி பண்ண ஆரம்பித்தாள். 

“நான் சாகணும்னு இருந்தால், நம்மூரிலேயே நான் செத்துப்போறேன். இங்கே இந்த அனாசாரப் பட்டணத் திலே மாட்டிண்டு குண்டு பட்டுத் துர்மரணமானாள் என்று நாலு பேர் பேசிண்டாக்கூட, என் ஆவிக்குக் கேட்கச் சகிக்காது.. 

ஆகையால் மாது மறுநாள் காலை அவன் வீட்டு மனுஷாளை ஊர்போய்ச் சேர்த்துவிடப் போகிறான். “இதுகளைத் தொலைத்துவிட்டு வந்தால்தான், நம் வேலையை நிம்மதியாய்க் கவனிக்க முடியும்…” 

எப்படி யிருந்தாலும் மாது கெட்டிக்காரன். அப்பா இப்பொழுது உயிரோடிருந்தால், மாதுவை மெச்சிக் கொள்வார். *கெட்டிக்காரன், பிழைக்கிற பிள்ளை ‘ யென்று. 

பருந்து பறந்துவிட்டதா, இருக்கிறதா என்று இப்பொழுது பார்க்க முடியவில்லை, யோசனையின் மும்முரத்தில் இரவு நேர்ந்தது கூடத் தெரியவில்லை. 

பெருமூச்செறிந்துகொண்டு உள்ளே சென்றான். அறை மூலையில் சுருட்டி வைத்திருக்கும் படுக்கைமேல் இடுப் பொடிந்த மாடாய்ச் சாய்ந்தான். 

நினைவு அப்பாவைத் தொட்டதும், அவரையே தொடரத் தலைப்பட்டது மனக் கண்முன் அவர் உருவம் எழுகிறது. எண்ணுகிற தினுசில் விலா எலும்புகள் தெரிய நலிந்த உடல் சாய்வு நாற்காலியில் சாய்ந்த வண்ணம், தான் நல்லபடியாய் இருந்த நாளை யெல்லாம் எண்ணி எண்ணிப் பேசிப் பேசி உக்கிப் போவார். அவர் பார்த்த பழங்கணக்குகள் தாம் அவர் உடலையும் உள்ளத்தையும் கொஞ்சம் கொஞ்சமாய்த் தின்றன. 

அவசர அவசரமாய்க் கூப்பிடுவார். 

“மல்லி, இப்படி உட்கார். என்னைப் பார், வாழ்க்கை யில் என் தோல்வியைப் பார்த்துப் புத்தி தெரிந்து பிழைத் துக்கொள். நான் நன்றாயிருந்து சின்ன வயதில் புத்தி சொல்ல யாருமில்லாததால் சறுகி விட்டேன். என் கண் மூடுவதற்குள் நீ வயிற்றிற்குக் கஷ்டப்படாமல், ஏதாவது ஒரு உத்தியோகத்தில் நிலைத்துவிடுவதை நான் பார்த்து விட்டால் எனக்குப் போதும். 

“என்னப்பா எப்போ பார்த்தாலும் வயிற்றுப் பிழைப் பைப் பற்றிய பேச்சுத்தானா? வேறெதுவுமில்லையா?

”பின் எதைப்பற்றிப் பேசவேண்டுமென்கிறாய்! உல கத்தில் அதைவிட முக்கியம் எது? எப்படியாவது இந்த வருஷம் இந்த ஷார்ட்ஹாண்டு, டைப்ரைட்டிங்குப் பரீக்ஷை…” 

“எனக்கு இந்த ஷார்ட்ஹாண்டு, டைப்ரைட்டிங்கு பிடிக்கவேயில்லை.” 

அப்பாவுக்கு முகம் கறுக்க ஆரம்பித்துவிட்டது. 

“லோகத்தில் எல்லாமே அவனவனுக்குப் பிடிக்கிறபடி நேருமா? பிழைக்கிற வழியை முன்னால் பார். எப்படியும் எனக்கப்புறம் தான் நீ. உன்னைவிட நான் உலகத்தில் அடி பட்டிருக்கிறேன். நான் சொல்வதை…” 

“எல்லோரும் பண்ணுவதையே நானும் பண்ண ணுமா ? ஏதாவது புதிசாய்…” 

அப்பாவுக்குக் கோபம் மண்டைக்கேறிவிட்டது. ஒரேயடியாய்ப் படபடவென்று சத்தம்போட ஆரம்பித்து விட்டார். 

“என்ன பண்ணப் போகிறாய்? நீ என்ன, ஸர். ஸி. வி. ராமனா? புதிசாய் பண்ணப்போகிறானாம், புதிசாய் என்ன பண்ணப் போகிறாய், புதிசாய்?” 

ஆம் என்ன பண்ண வேண்டும்? இந்த நியாயமான கேள்விக்கு விட்டுச் சொல்ல என்ன பதில் அவனிடமிருக் கிறது. 

ஆயினும் விட்டுச் சொல்ல முடியாத பதில்கள் ஒரே சமயத்தில், எத்தனை மனதில் எழுகின்றன ! முழுமை குலைந்து, கொப்பரைத் துருவலைப்போல் செதில் செதிளாய் ஒன்றுக்கொன்று சம்மந்தமற்ற சிதர்கள்……. 

எங்கேயோ, எப்பவோ, ஜன்னற் கதவில் பதித்த நீலக் கண்ணாடியின் மேல் சூரிய ஒளிபட்டு எதிர்ச் சுவரில் நீல நிழல் தளும்பியாடுவதைக் கண்ட ஞாபகம் இப்பொழுது அவனுக்கு வந்தது. அச்சமயத்தில் அவன் உணர்ச்சிகளை அந்நீலச் சாலையின் அழகு அசைத்த வேகத்தில், தானும் அந் நிழலுள் ஒளிந்துகொண்டு அதன் ஆட்டத்துடன் இழைந்து ஆடவேண்டும் எனும் அர்த்தமற்ற பித்துப் பிடித்த எண்ணம் ஒன்று தனக்குத் தோன்றியதை நினைக்கையில் இப்பொழுதுகூட அவன் உள்ளத்திலிருந்து உதட்டிற்கு ஒரு புன்னகை எழுந்தது…. 

‘இதுதான் நான் செய்ய விரும்பியது’ என்று அப்பா விடம் அவன் சொல்ல முடியுமா? 

இன்னொரு சிதர் சிந்தனையில் மூண்டது. 

ஒரு வருஷம் ஊரில் பெருமாள் கோயில் உற்சவத் திற்கு மஹாராஜபுரம் விசுவநாதையர் பாட வந்திருந் தார். அப்பொழுது அவனுக்குச் சங்கீதத்தில் ஆசையே யொழிய ஞானம் அதிகமில்லை. ஆகையால் அவர் என்ன பாடினார் என்று திண்ணமாய் அவனுக்குப் புரியவில்லை, இருந்தும், இரவில் பாதியும் கிடந்தபிறகு, நெருப்பில் உருக்கியது போன்று பாகுபட்டுப் போன அச்சாரீரம். தனக்கென்றே தனி உயிர் பெற்றுக்கொண்டு, சரிகையோடு ஒட்டிய கரை (அல்லது கரையோடு ஒட்டிய சரிகையா ?) போல் தம்பூரா சுருதியுடன் லயித்துக்கொண்டு தான் எழுப்பும் நாத வெள்ளத்தில் தானே திளைத்துக்கொண்டு பாடுபவன், கேட்பவர் எல்லோரையும் தன்னில் மூழ்கிக் கொண்டு பந்தலில் தானே நிரம்பி, தன்னிச்சையாய், உள்ளம் நெகிழும் குழைவுகளிலும், மதி மயங்கும் பிர்க்காக்களிலும், பாம்பைப்போல் வளைந்தும் விரைந்தும் கற்பனையில் திரிந்து சஞ்சரிக்கையில், இவரைப்போல் எனக்கும் பாடவராதா? என்று எழுந்த அசூயையோ ஆசையோ ஒரு பக்கமிருக்கட்டும், அதனினும் உருவற்றதாய், ‘இவர் எழுப்பும் இந் நாத ஜாலத்துள் நான் கலந்துவிட முடியாதா? என் இதயத்தைத் தொண்டைவரை எழுப்புகிறதே, இந்தக் கமகங்களுடன் ஒன்றாய் நான் தேய்ந்துவிட முடியாதா? வங்கி வளையல் போன்ற இந்தப் பிர்க்காவின் பல இன்னொலிச் சிதர் களுள் ஒன்றாய் நான் பதுங்கிவிட முடியாதா?……” 

இன்னொரு சமயம் அவன் வாய்க்காலின் கரையோர மாய்ப் போய்க்கொண்டிருக்கையில் மீன்கொத்திப் பறவை யொன்று மீன் பிடிப்பதைக் கண்டான். அதன் நீல நிறம் வெய்யிலில் பட்டுப்போல் பளபளக்க, ஜல மட்டத்துக்கு நேர்ச் செங்குத்தாய், இறக்கைகள் அடித்துக் கொள்ளும் வேகம் ஓரோர் சமயம் பார்வையையும் ஏமாற்ற, வானில் ஒரே நிலையில் மிதந்து கொண்டு, திடீரென்று ஜலத்தின் மேல் கல்லைப்போல் நேர்க்கணக்கில் விழுந்து அலகில் கொத்திய மீனுடன் ஆகாயத்தில் மறுபடியும் எழும் வேகத்தைப் பார்த்ததும், அது விழுந்து எழும் வேகத்தின் அழகில் நான் ஒடுங்க மாட்டேனோ?…… 

இம்மாதிரியாய் அநிச்சயமாய், உருக்களற்று, மனத் திரையில் எழும் எண்ணங்களினூடே இன்னொரு நினைவு…

‘ஓரிரவு வாசற் குறட்டில் கயிற்றுக் கட்டிலில் படுத்து உறங்குகையில் நடுநிசியில் விழித்துக்கொண்டு.. எங்கும் நிசப்தம்.முழுநிலா வானில் பதிர்ப்பேணிபோல் பிசுபிசு வென்று படர்ந்த மேகம். அதன்மேல் தனித் தனியாயும் சேர்ந்தும் மிதந்துகொண்டு சுடர்விட்டு ஒளி வீசும் நட்சத்திரக் கூட்டங்கள். எதிரில் திறந்த வெளியில் பசும் புற்றரை. ஓரத்தில் நிற்கும் மரங்களினடியில் நிலவுப் பால்பிழிந்து புள்ளிகளிட்ட இலை நிழற் கோலம். இவ்வழகின் அனுபவம் என்னைத் தாக்குகிறது. இன்ன தென்று விவரிக்க இல்லாததோர் விசனம் மனதில் கசிகின்றது. இல்லை, விசனம் கலந்த இன்பம்; இன்பம் கலந்த விசனமா? எப்படியும் மறுபடியும் கிட்டாத நிமிஷம் இது. இத்துடன் நான் காலத்திற்கும் விஷயத் துக்கும் வித்தியாசமற்று இழைந்துவிட முடியாதா இரவையும் பகலையும் அவைகளின் பயனுக்காகமாத்திரம் பகவானை வணங்காது வேளைகளின் அழகுக்காகக் கூடச் சிருஷ்டிக்கு நன்றி செலுத்தும் வேளையிது. ஹே பகவான், இவ்வளவு அற்புதமான சமயத்தை நான் அனுபவிக்க எனக்குக் கொடுத்தாயே, அதற்கு உன்னைத் துதிக்கிறேன். என் நன்றியும் “என் அனுபவத்தின் வென்பது, நிறைவும் இன்பமும் எப்படியிருக்கின்றன எனக்கே கூட நான் சொல்லிக்கொள்ள முடியாதபடி என் தொண்டையை அடைக்கிறது… 

காலம் எல்லோருக்கும் பொதுவா யிருப்பினும் அது தனக்கென்றே சில நேரங்களைப் பிரத்தியேகமாய் வைத்துக் கொண்டிருக்கிறது. இந் நேரங்கள் எதிர்பாராத சமயங்களில், நெருப்புத் தூணிலிருந்து பிரிந்த நட்சத்திரப் பொறிகள் போல், எதிர்பாரா இடங்களில் தங்கித் அவைகளின் தயங்கி, அவிந்தும் போய் விடுகின்றன. அழகின் நினைவுகளும், அந்நினைவுகளின் அழகும்தான் மிச்சம். 

இன்னமும் பார்க்கப் போனால், காலமே குறைக் கனிவில் பறித்த பழம் போல்தான். ஒரே பழத்தில் புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, சப்பு, இன்னமும் இவ்வுருசி களெல்லாம் விதவிதமாய்க் கூடுவதால் ஏற்படும் ருசிகளும், எங்கேயோ ஒரு இனிப்பும் ருசிக்குத் தட்டுவதுபோல் தோன்றுகின்றன. ஆனால் அந்த இனிப்புக் கண்ட இடத் திலேயே மறுபடியும் கடித்தால் அந்த இனிப்பைக் காணு வதற்கில்லை. அப்படியே இனிப்பு இருந்தாலும் அதே இனிப்பு இல்லை…… 

“என்னடா யோசனை பண்ணுகிறாய்?” 

அப்பாவின் பொறுமையற்ற குரல் அவன் சிந்தனை களிலிருந்து அவனை அடித்து எழுப்புகிறது. அவன் என்னென்று நினைப்பதையெல்லாம் அப்பாவிடம் சொல்ல முடியும்? சொன்னால்தான் அவருக்கு என்ன புரியப் போகிறது. அவனுக்கே புரியவில்லையே? இந்தப் பேச்சைத் தொடர்வதில் ஒரு அசதிதான் ஏற்படுகிறது…… 

“சரிதான் அப்பா, ஷார்ட்ஹாண்டு பரீக்ஷைக்கே போகிறேன்.” 

“அதுதான் சரி, உனக்கு இப்பொழுது தெரியாது. சொல்லப் உனக்கு நல்லத்தைத் தவிர என்னத்தைச் போகிறேன். ஓடுகிற பாம்பை மிதிக்கிற நாளில் குருட்டு யோசனை பண்ணிக் கொண்டிருக்காதே.” 

அவ்வளவு ஆசையாய் அவன் எதிர் காலத்தைக் கணித்த அப்பா, அவர் கணித்தபடி அது நடப்பதைப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை. ஒருநாள் இரவு வேளை எல்லாரும் ஏதோ சந்தோஷமாய்ப் பேசிக் கொண்டிருந்து விட்டுப் படுக்கும் வேளையில், அப்பா பாலைக் குடிக்கையில், புரைக்கேறி விட்டது. அம்மா பதறிக் கொண்டு அவர் வாயில் வார்த்த இரண்டாவது முழுங்கு வாயோரம் வழிந்தது. அப்பாவின் தலை ‘டக்’ கென்று தலையணையில் ஒரு பக்கமாய்ச் சாய்ந்து விட்டது. அவர் முகம் மனக்கண்முன் வந்து நிற்கிறது. கடைவாயில் ஒழுகிய பால் முள்போல் வளர்ந்த தாடி மயிர்களின் நுனிகளின்மேல், துளித்துளியாய் நிற்கின்றன. இமைகள் விழிகளை அரைக்கண்ணாய் மூடின. 

திடீரென்று அப்பா காலை வாரிவிட்ட, இந்தச் சாவு. அவன் மனதில் கிளறியது என்ன? அவருடைய பிரிவின் துயரமா, அல்லது அவரைப் பிணமாய்க் காணும் பயமா? இப்பொழுது அவரை-இல்லை -அதைத் தொடக்கூடக் கை கூசுகிறது. ஆனால் அம்மா அதன்மேல் விழுந்து புரண்டு அழுகிறாள். அம்மாவை இம்மாதிரி அவன் கண்டதில்லை. கண்டது சஹிக்கவில்லை. 

அம்மா ‘அப்பா! அப்பா!!’ என்று கதறுகிறாள். அம்மாவும் அப்பாவும் அந்தரங்கமாயிருக்கையில் ஒருவரை யொருவர் எப்படி அழைத்துக் கொள்வார்களோ? ஆயினும் இப்பொழுது அம்மா, பிள்ளைக்கெதிரில் அழுகையில், அவள் மனம் குறிக்கும் உறவு வேறாயினும் வாய் அதை வெளிவிட்டுச் சொல்ல முடியாமல் “அப்பா அப்பா!, என்றே அலறித் தவிக்கிறது. 

“அப்பா! அப்பா” 

குடும்பத்துக்கு அவன்தான் இனிமேல் தலைவன்* கலியாணத்திற்கு இரண்டு தங்கைகள். கழுத்துக்கு மேல் கடன். பொறுப்புகளுக்கு அடிமையாகி விடுதல்தான் தலைமை போலும்!

உண்மைதான், அழகு என்கிறார்களே. அப்படியாயின் இதுதான் அழகா? இது அழகு இன்மையால், இது உண்மையில்லையா? சாவும் உண்மையில்லை; பின் எது தான் ஊன்றுகோல்? அல்லது ஊன்றுகோலேயில்லையா? ஒருவிதமான பிடிப்பும், அர்த்தமுமற்று கூட்டுள் அடைபட்டாற்போல், சுற்றிச் சுற்றி, சுற்றிய இடத்தையே சுற்றிக்கொண்டு, சுயநினைவுடனேயும் இருப்பது எவ்வளவு பயங்கரமாயிருக்கிறது. அல்லது மறதிதான் உண்மையா ? நடந்ததையெல்லாம் மறந்து விடுவதுதான் சாத்திய மில்லாவிடிலும், மரத்துப் போவதாவது சாத்தியமா? 

கொள்கை முறையிலும், தொன்று தொட்ட வழக்க முறையில் அவன் பாவிக்கும்படி அவன் உள்ளே ஊறியும் சுயச் சிந்தனையாலும் அவன் வாழ்க்கைக்குக் கண்டு பிடிக்க முயன்ற அர்த்தத்திற்கும் அவன் அனுபவமாய்க் கண்டதிற்கும் ஒன்றுக்கொன்று சம்பந்தமற்று இருந்தன. இவையிரண்டிலேயுமே எது உண்மை? 

மனம்தான் இவ்வளவு பாடுபடுகிறதேயொழிய, காலம் கழிந்து கொண்டு தானிருக்கிறது. அதன் கதியிலேயே ஒரு இரக்கமற்ற தன்மையிருக்கிறது. 

“படுவதையெல்லாம் நீ பட்டுக்கொண்டிரு. போவதை நான் போய்க் கொண்டிருப்பேன். என்னைத் தடுக்க யாராலும் முடியாது என்னாலேயே முடியாது….”

அப்பா இறந்து போய்விட்டார் என்று, அவனால் அவன் இஷ்டப்படி என்ன செய்யமுடிகிறது? அவர் இஷ்டப்பட்ட பரீக்ஷைகளுக்குத்தான் படிக்க நேர்ந்தது. ஆவிபிரிந்து இவ்வுலகை நீத்த பின்னரும், இறந்த உலகிலிருந்து கொண்டே, இறந்தவர் உயிருள்ள உலகத்தில் நடத்தும் ஆக்கினைகள் தாம் உண்மையா? 

எதுதான் புரிகிறது? 

கடனோடு கடனாய் அவன் தங்கைகளுக்கு எப்படி கலியாணத்தை முடித்து வைத்தான் என்பதை இப் பொழுது யோசிக்கையில் திகைப்பாய்த்தானிருக்கிறது. 

ஒரு தடவை புக்ககம் போய் வந்த தங்கைமார்கள் எப்படி மாறிவிடுகிறார்கள் ! ஒட்டாமல் நுனி நாக்கால் பேசும் தினுசும், உடலையும் முகத்தையும் கோணிக் கொள்ளும் மாதிரியும் பார்த்தால் “ஏதேது, இதுகளெல் லாம் நம் உடன் பிறப்புத்தானா !” இங்கு இருக்கையில் ஒரு முழம் பூவிற்கும், அடிக் குழம்பு சாதத்திற்கும் சண்டை பிடித்தவர்கள் தானா? என்று அவனுக்கே சந்தேகம் தோன்றுகிறது. 

“எங்காத்துலே ஒரு நாளைப் பார்த்தாப்போல் உருளைக்கிழங்கு வறுவல் நெய்யிலே வறுத்துப் போடணும் அம்மா; அது எப்படித்தான் நடக்குமோ? எனக்குத் தெரியாதம்மா ஆனால் நடந்தாகணும்.” என்கிறாள் ஒருத்தி தோளைக் குலுக்கிக்கொண்டு. 

“ஏம்மா, ஒரு முப்பத்தஞ்சு ரூபாய்க்குக்கூட கொறைஞ்சு புடவை எப்படிக் கட்டறது? என்று இன் னொருத்தி ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டே மூக்கைச் சுருக்குகிறாள். திடீரென்று அவளுக்குப் பிறந்த வீட்டு வாசனையே புதிதாயும் ஆகாததாயும் இருக்கிறது. 

பேச்சு மாத்திரம் இவ்வளவு வறட்டு ராங்கியாயிருந்த போதிலும், இன்னமும் இங்கு மிச்சமும் மீதமுமாய் இருப்பதை வாரிச் சுருட்டிக் கொண்டு போவதில் ஒருத்திக் கொருத்தி தோற்றவளாயில்லை. 

”அம்மா எனக்கு இந்தத் துருவலகாயைக் கொடேன்”

“ஏனம்மா, இது ஒடிஞ்சிருக்கே, அத்தோடே இது ஒண்ணுதானிருக்கு” 

“பரவாயில்லை – நீ புதுசா வாங்கிக்கோ” 

அதற்குள் இன்னொருத்தி : ‘உனக்கென்ன குறைச்சல்; இனிமேல் அண்ணாவும் நீயும் மாத்திரம்தானே? அண்ணா உனக்கு வாங்கித்தரான். அதைவிட அவனுக்கென்ன வேலை?” 

ஏன் இப்படி மாறுகிறார்கள்? 

மாடிப் படியேறி யாரோ வரும் சப்தம். ஒரு ஆளின் வடிவம் 

அறை வாயிலை அடைத்தது. 

“உள்ளே ஒருத்தருமில்லையா? யாரோ நடமாடினாப் போல இருந்ததே !” 

“நான் தான்’ 

“மல்லியா? விளக்கைப் போடாமல் இருட்டில் என்ன பண்ணறே? ஏன், சாப்பிட வரல்லே? எல்லாரும் சாப்பிட்டாச்சே!”

“பசிக்கவில்லை” 

“ஏதோ இறங்கின மட்டும் சாப்பிடேன்” 

“இல்லை. இல்லை, எனக்கு உடம்பு சரியாயில்லை”

பாரு அரை மனதுடன் ஒரு அரைகணம் நின்றுவிட்டு, பிறகு அசதி நடையுடன் கீழே இறங்கிப் போகிறாள். 

கால கதியில் மனிதர்கள் மாறுவதையும், அச்சிந்தனை யின் தொடர்பில் இப்பொழுது இப்படியிருக்கும் பாரு, இதற்கு முன்னால் எப்படியிருந்தாள் என்பதை நினைக் கையில் கால புருஷனின் மேல் சகிக்க முடியாத ஒரு கரிப்பு. அவன் மனதில், பாம்பைப்போல் சீறிக்கொண்டு எழுந்து நெளிவதை யுணர்ந்தான், ஒரு ஆணுக்கு ஒரு பெண் என்றும், ஒரு பெண்ணுக்கு ஒரு ஆண் என்றும். உயிர்கள், தமக்குள் தாம் வகுத்துக்கொண்டு விரதம் அனுஷ்டிப் பினும் அவன் அணைப்புக்குத் தப்பித்துத் தங்கள் கற்பைக் காத்துக் கொண்ட உயிர்கள் எதுவுமேயில்லை. அனுபவித்த பின்னர்தான் அவைகளை அவன் எப்படி முறித்தெறிகிறான்! எத்தனை அவன் அனுபவித்தும் அவன் வெறி ஏன் இன்னமும் தணிந்த பாடில்லை ? 

அன்னாளைய பாரு கட்டுக் கடங்காத குதிரையாய் வளைய வருவாள்; நடையாய் வரமாட்டாள், குதித்துக் கொண்டுதான் வருவாள். துளசி மாடத்தண்டை ஒருகால் வைத்தால், மறுகால் அம்மி போட்டிருக்கும் தாழ்வாரத்தில்தான் வந்து குதிக்கும் பூமியதிரும். 

“ஐயோ பாரு -நீ பொம்மனாட்டி டீ, இன்னமும் கொஞ்சம் அமரிக்கையாயிருக்கணும்டீ – நான் பெத்த பொண்ணுன்னா எனக்கு மானம் போறதேடீ” என்று அவள் அம்மை அடிக்கடி தன் கன்னங்களை நிமிண்டிக் கொள்வாள். 

“சரிதாம்மா போம்மா” 

“ஐயோ, குரலைக் கொஞ்சம் தாழ்த்திப் பேசேண்டி -“

“சரிதாம்மா போம்மா-” 

பாருவுக்கு எல்லாமே அப்பொழுது “சரிதாம்மா போம்மா”தான். ஒன்றும் சட்டை செய்ய மாட்டாள். 

வெறும் மேனி வளர்ச்சியே ஒரு வசீகரமாய் அவள் மேல் கவிய, அவள் மனத்தில் அவள் தன்னை மறந்து  எவ்விதமான சிந்தனையுமற்றுத் திரிந்தாள். சுயமான அழகு அவளுக்கு இல்லாவிடினும் அவளைச் சூழ்ந்த அவ்வுன்மத்தமே அவள் முகத்திற்கும் செயல்களுக்கும் ஒரு கவர்ச்சியைத் தந்தது. அக்கவர்ச்சியைக் காணமுடியாத வர்களுக்கு அக்கவர்ச்சியே அருவருப்பாயும் அமைந்தது. அவள் வளர்வதை அவள் அம்மையும் மற்றவர்களும் கரித்தார்கள் என்றுகூடத் தோன்றியது. 

“குதிர் மாதிரி, பெண்ணை வச்சிண்டு இன்னமும் பிள்ளை தேட நாளாகல்லையா?’ 

அவள் உடலின் மீறின வாளிப்பில், சாதாரணமாய் வெறும் சட்டையும் பாவாடையும் அணியும் பருவத் திலேயே தாவணி போர்த்தும் அவசியம் நேர்ந்துவிட்டது. அதையொட்டினாற் போலேயே புடைவையுடுத்தும் கட்டாயமும் ஏற்பட்டு விட்டது. 

“இனிமேல் நீ கொஞ்சம் கட்டு திட்டமாய் இருக் கணும் பாரு; கண்டவாளோடே பேசிண்டு, நீ நினைச்ச படி வந்துண்டும் போயிண்டும் இருக்க முடியாது-‘ 

“சரிதாம்மா போம்மா…” 

சில சமயங்களில் நமக்கு வாழ்க்கையில் சில சம்ப வங்கள் நேரிடுகின்றன. சந்தோஷமாயிருக்கலாம், அல்லது துக்ககரமாயுமிருக்கலாம், ஆயினும் அவை நமக்கு மாத்திரம் ஏற்படுத்தும் ஒரு உள்ளக் கிளர்ச்சிக்காக, மற்ற சம்பவங்களைப்போல் மறந்து விடாது. மற்றவர் களுக்கும் காட்டாமல் மனத்தில் நினைவுப் பேழையுள் பத்திரமாய்ச் சேமித்து வைப்பதில் நமக்கு ஒரு அலாதி திருப்தி. பிறகு, சாவகாசமாய் ஏழைக் கருமி தனக்கிருக்கும் ஒன்றிரண்டு செல்வங்களைத் தனக்கெதிரே பரப்பிக்கொண்டு அவைகளைப் பார்த்து மகிழ்வதைப் போல் மனமும் இடமும் கூடிய சமயங்களில், நாம் அச்சம்பவங்களைச் சிந்திக்கையில், சதா இருண்டிருக்கும் மனக்கம்பளத்தில், அத் தனி நினைவுகள் மாத்திரம் உருண்டு கொண்டு தனிச்சுடர் விடுகையில் நம்முள் ஊறும் இன்பமும் தனிதான். இன்ப நினைவுகளாயிருப்பின் மனத்தைச் சந்தோஷத்தில் ஆழ்த்துகின்றன. துக்க நினைவு களாயிருப்பினும் திரும்பத் திரும்ப எண்ணுவதால், அவைகளும் ஒரு துலக்கம் பெறுகின்றன. அத்தூய்மையும் இன்பமாய்த்தானிருக்கிறது. 

அம்மாதிரி முன்மணம் வீசிக்கொண்டு அவன் மனப் பேழை திறந்து பாருவைப்பற்றிய ஒன்றிரண்டு நினைவுகள் வெளிக் கிளம்புவதை உணர்ந்தான். 

அவன் மன வெளியில் இப்போது ஒரு காட்சி அமைகிறது:- 

நடு வெய்யில் முதுகைப் பிளக்கிறது. பக்கத்துக் கிராமத்துக்கு ஏதோ ஜோலியாய்ப் போய்விட்டு, வயல் வரப்புக்களின் வழியே வீட்டுக்குத் திரும்பி வந்து கொண்டிருக்கிறான். சுற்று முற்றும் எவருமே தென் படவில்லை. வயல்களில் அங்குமிங்கும் ஏர்கள் சில தனித்து நின்றன. வெய்யிலின் கடுமையாலோ, அல்லது மத்தியானக் கூழுக்கோ, உழவர் வேலையினின்றி இறங்கி யிருந்தனர். 

எதிரே பூமி, கசத்தின் கரை மேட்டுக்கு வழுக்கிக் கொண்டு ஏறுவது தெரிகிறது. கசமேட்டில் வேலி நட்டாற் போல், மரங்கள் கிட்டக் கிட்ட வளர்ந்து ஓங்கி நிற்கின்றன. கசந்தாண்டினால் ஊர். ஆகையால் கரை மேட்டில் ஏறினான். 

முதலில் அவன் கண்களில் பட்டது எதிர்க்கரையில் பந்தாய்ச் சுருட்டி வைத்திருந்த புடவைதான். பூக்கள் பொறித்த ப்ரிண்ட் புடவை அவன் பார்வை ஏதேச்சை யாய் புடவையிலிருந்து ஜலத்தின் மேல் நழுவியது. ஓடும் ஜலத்தில் ஒருத்தி குளித்துக்கொண்டிருந்தாள். அவனை அவள் இன்னமும் காணவில்லை. ஆனந்தமாய் தன்னை மறந்த வெறியில் திளைந்து கொண்டிருந்தாள். மார்புள்ளிருந்து தொண்டை வரையில் ஏதோ கிளம்பி உள்ளேயே வெடித்தது. முட்டை வெடித்து குஞ்சு வெளி வந்தது போல், ஏதோ படபட வென்று மார் புக்கும் தாண்டைக்குமாய் இறக்கையடித்துக் கொண்டது. திடீரென்று அவனுள், இப்படிப் பொறுக்க முடியாத இன்பத்தைக் கொடுத்துக்கொண்டு துடிப்பது என்ன? 

ஏதோ ஜீவ ரகசியத்தின் எல்லையில் மனம் தளும்பிக் கொண்டு நிற்பதுபோல் ஒரு உணர்ச்சி. இன்னமும் பலமாய் ஒரு தளும்பு தளும்பினால், அவ்விரகசியத்துக்குள்ளேயே விழுந்து விடுவான், அப்பொழுது அவ்விரக சியம் இன்னதென்று அவன் அறிவான் எனினும், மற்ற வர்களுக்குத் தெரிவிக்க இயலுமோ இயலாதோ? ஏனெனில் அவன் அப்படிக் கண்டுபிடிக்க முடிந்தால் அவன் கண்டுபிடித்த ரகசியத்துக்குள்ளேயே மூழ்கிவிடு வான் ஏதோ ஒன்று எட்டியும் எட்டாமல் அவன் மனப் பிடிப்புக்கு நழுவி, அவனை ஏய்த்து அவனுடன் விளையாடுகிறது. 

பாரு என்ன பரையாகிவிட்டாளா? உலகின் ஆதிப் பெண்ணாக மாறிவிட்டாளா? உருவழிந்த பின்னர் நிற்கும் அதன் அர்த்தமாயில்லாமல் உருவுடனேயே பொலியும் அர்த்தமா அவள் இப்பொழுது; அல்லது அர்த்தத்தினுடைய உருவா? 

சுற்றும் முற்றும் நோக்குகையில் ஒரு பக்கம் மரங்கள், எதிரே திட்டுத் திட்டாய் மணல் மேடுகள், வயல்களில் நெற் கதிர்கள் ஒன்றுடனொன்று உராய்ந்து பேசும் ரகசியங்கள் காற்றில் மிதந்து வருகின்றன. களத்து மேட்டில் ஒரு வைக்கோல் போர் தெரிகிறது. தோப்பு களினிடையில் கோவில் ஸ்தூபி எட்டிப் பார்க்கிறது. உச்சிக் கால மணியின் சத்தம் தூரத்திலிருந்து ஏதோ வடிகட்டப் பெற்ற அர்த்தத்துடன் வந்து மோதுகின்றது. தூயதான நீலவான் ஒரு பெரிய வயிறுபோல், அவன் உள்பட எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டிருக்கிறது. அவனெதிரில் அகன்று விரியும் ஜலத்தில் இவையத்தனை யுடன் வெகு பொருத்தத்துடன் தன்னையறியாமல் இயங்கிக்கொண்டு, பாரு ஸ்நானம் பண்ணிக் கொண் டிருக்கிறாள். வான் எனும் வயிறு அடக்கியிருக்கும் வித்துத்தானா அவள்? 

ஆதியில் எல்லாம் இப்படித்தானே யிருந்திருக்கும்? 

அப்படியாயின் இதுதான் விடுதலையா? 

அவன் தன்னை மறந்து சிந்தனையில் ஆழ்ந்து விட்ட தில், அவள் அவனைப் பார்த்து விட்டது கூடத் தெரிய வில்லை. தேளைத் தொட்டதுபோல் கொட்டிய வெடகத் தில் அவள் முகத்தில் ரத்தம் குழம்பியது. மறுகணம் ஒரு பெரும் ஜலத்திரை எழுந்து அவன் முகத்தில் விசிறி விழுந்து அவன் உடலைத் தெப்பமாக்குகிறது. கண்களை நிரப்பிய ஜலத்தை உதற, கைகள் முகத்தைப் புதைத்தன. அவன் காதில் ஒரு சிறு சிரிப்பு – வெட்கச் சிரிப்பு ஒலித்தது. அவன் சமாளித்துக்கொண்டு முகம் நிமிர்வதற்குள் அவளையும் அவள் புடவையையும் காணோம். சிட்டாய்ப் பறந்து விட்டாள். 

அவள் ஜலத்தில் உட்கார்ந்திருந்த இடத்தில் இதழ்கள் அகல விரிந்ததோர் பூமிதந்து கொண்டிருந்தது. 

“புஸ்-புஸ்-‘ 

பத்தடி தூரத்தில் அவனுக்கெதிரில் ஒரு தாழம்பூப் புதரிலிருந்து விரித்த படத்துடன் ஒரு நல்ல பாம்பு அவனைச் சந்தித்துக் கொண்டிருப்பதைக் கண்டான். 

அவனுக் கென்னவோ, அச்சமயம் அதைப் பார்த்துப் பயம் ஏற்படவில்லை. அவனே அவன் வசமில்லை. அவனை அழுத்திய மூர்சையிலிருந்து தெளிய அவனுக்குச் சற்று நேரமே சென்றது. பக்கத்து வீடுதான் எனினும், அன்று மற்றைய பொழுதெல்லாம் அவள் அவன் கண்ணில் படவேயில்லை. அவனைக் கண்டு ஒளிந்தாள் என்றே உணர்ந்தான். ஆயினும் அவன் என்ன செய்ய முடியும்? 

மாலைப் பொழுது இரவுள் நழுவும் வேளை. அம்மா வுக்கு மாலைப்பார்வை மங்கல். வயதாகிவிட்டது. தள்ள வில்லை. மருமகள் வந்து அவளைத் தாங்க வேண்டிய நாள். கொல்லைப் புறம் போய்க் கிணற்றில் ஒரு தவலை மொண்டுவரப் பிள்ளையை அனுப்பினாள். 

கிணற்றுக் கருகாமையிலிருந்து துளசி மாடத்தில் ஏற்றி வைத்திருக்கும் மாக்கல் விளக்கின் மேல் கண்ணை வைத்துக் கொண்டு, மனத்தை எங்கேயோ ஓடவிட்டுக் கொண்டு, கயிற்றில் தவலையைக் கட்டிக் கிணற்றுள் விட்டான். அப்பொழுது இடையில் குடந் தாங்கி ஒரு உருவம் கிணற்றை நோக்கி வருவதைக் கண்டான். பாரு வின் அம்மாவா? அவனைக் கண்டுவிட்டு அது சற்றுத் தயங்கி நின்றது, பாருவேதான். 

அவள் காலும் மனமும் அப்படியும் இப்படியும் இம்மி நேரம் தவித்தது. மறுபடியும் வீட்டுக்குள்ளேயே ஓடிப் போய் விடலாமா? அவள் அவஸ்தை அவனுக்கும் தெரிந்தது. ஆனால் பாரு லேசானவளா? முன் வைத்த காலைப் பின் வைப்பதா? திடம் பண்ணிக் கொண்டு குடத்தைக் கீழே வைத்துவிட்டுக் கைகளைத் தீர்மானமாய் மார்மேல் கட்டிக் கொண்டு நின்றாள். 

திடீரென அவள் நின்ற நிலை தவறியது. கைகள் பிடிப்புக்கு ஆகாயத்தைத் துழாவின. காலடியில் பாசியோ, எதுவோ, தாம்பைவிட்டு, அவள் விழுவதைத் தடுக்க அவள் பக்கம் தாவினான். அவன் ஆலிங்கனத்துள் அவள் “லட்டுப் போல் விழுந்தாள். கிணற்றில் ‘சகடை’ குடுகுடு வென உருண்டது. அவனை வெள்ளம் அடித்துக் கொண்டு போயிற்று. அவன் மார்பிற்கும் தொண்டைக்குமாய், வாய்வழி வெளிப்பட முயல்வதுபோல் உள்ளக் குருவி பறந்து குதிக்கத் தலைப்பட்டது. இப்படி அவர்கள் சதையோடு சதை தீண்டுகையில், உள்ளத்துடன் உள்ளம் தீண்டியதா? உள்ளங்கள் ஒருமித்தலில் உண்டாகும் இன்பம் இவ்வளவு பெரிதா? உடம்பு உள்ளத்தில் உருகி உடம்பே உள்ளமாய் விடுகிறதா? அப்பறம், உள்புறம் என்று இல்லையா? எல்லாம் ஒரே வெள்ளந்தானா? துன்பமும் வேதனை இன்பமும் ஒரே வேதனைதானா? இப்பொழுது அவனுள் குதிக்கும் உள்ளக்குருவி, அவனை ஊசலாட்டுவது போல? 

“நான் ‘குளிச்சதை அம்மாவிடம் சொல்லுவையா?? அவன் தலையை ஆட்டுகிறான். அவனுக்கு மாரைப் ‘பக், பக்,கென்று அடைக்கிறது. அவனுள்ளிருந்து கொண்டு, வேதனை பயங்கரமா அவனைப் படுத்தும் இன்ப யிருக்கிறது. இதற்கு இக்கிணற்றடிதான் சாட்சி. துளசி மாடத்திலெரியும் விளக்குத்தான் சாட்சி. 

“குடத்தைத் தேடிக்கொண்டே இப்போ சறுக்கிவிட்டதையும் சொல்லமாட்டையே ?” 

அவனுக்கு நாக்குத்தான் மேல் கூரையை முட்டுகிறது. அவன் கைகள் அவளுக்காக அவளுடன் சேர்ந்து தேடு கின்றன குடத்தை அவள் இடுப்பில் வைக்கின்றன. திடீரென்று சகிக்க முடியாத தனிமையுடன் தான் நின்று கொண்டிருப்பதை உணர்ந்தான். சகிக்க முடியாத தனிமை, வெளியிருள் அவனுள் இறங்குவதையும் உணர்ந் தான். அவ்விருளில் அவன் மனக்கண்ணெதிரில் இரண்டு பொறிகள் தெரிகின்றன. ஆம்; ஞாபகம் வருகிறது.. அன்று மத்தியானம் தாழம்புதரில் அவன் கண்ட அரவின் கண்கள். அவனையுமறியாமல் அவன் கைகளை நீட்டுகிறான். 

“இதோ என்னைக் கடி. என்னை ஏற்றுக்கொள். என்னைக் கோபியாதே. என்னை அன்புடன் கடித்து; என்னை விடுதலை செய்…’ 

இது என்ன பிதற்றல்? என்ன விடுதலை ? ஒரு வேளை பாரு அவனுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தால் இப்படியாகி இருக்கமாட்டாளோ? 

பாருவுக்கும் அவனுக்கும் ஜாதகம் பார்க்காமல் இல்லை. ஆனால் ஜாதகம் ஒத்துக்கொள்ளவில்லை. 

மாதுவுக்கும் பாருவுக்கும் ஜாதகப் பொருத்தங்கள் அத்தனையுமிருந்தன. ஆகையால் தான் பாரு இப்படீ ஆகிவிட்டாள் போலும்! ஆயினும் எப்படி ஆகிவிட்டாள்? சாறு பிழிந்த சக்கை மாதிரி! போதும் போதாதற்கு, இரண்டு மூன்று குறைப் பிரசவங்களும், குடும்பத் தொல்லைகளும் அவளை உருத்தெரியாமல் குலைத்து விட்டன. நிறைப் பிரசவத்தில் பெற்ற இக் குழந்தையும் சொட்டுச் சொட்டாய்க் குடித்துக் கொண்டிருந்தது. அவள் நாளுக்கு இழையிழையாய்த் தேய்ந்து வருவது அவனுக்குத் தெரிந்தது. 

இருந்தும் யார் என்ன செய்யமுடியும்?

ஒரு வேளை பாரு அவனுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தால்…  

இப்படியிருந்தால் அப்படியிருந்திருக்குமோ எனும், ‘ஆல்’களும், ‘உம்’களும் ஆகியதுதான் வாழ்க்கையா? 

அம்மா இந்த ‘ஆல்’கள் ஒன்றில் அடங்கிக் கால மானாள். உடம்பு சுகமில்லாத சமயத்தில், அப்பா உயிருடனிருக்கையில் அவருக்கு வாங்கி எஞ்சிப்போயிருந்த மருந்தைக் குடித்துவிட்டாள். ஒருவரையும் கேட்கவு மில்லை. குடிக்கும் வரையில் சொல்லவுமில்லை. அந்த மருந்தைக் குடித்தால், தனக்குச் சரியாய்ப் போய்விடும் எனும் எண்ணம். மூன்றாம் நாள் காலையில் படுக்கையில் சவமாய்க்கிடந்தாள். எப்பொழுது இறந்துபோனாள் என்றுகூடத் தெரியவில்லை. 

தன் தனி வயிற்றை அலம்பவும், குடும்பக் கடன்களை அடைக்கவும் இப்பொழுது அவன்தான் எஞ்சி நின்றான் வாழ்க்கையில் எந்த வெற்றியின் சின்னமாய் இப்பொழுது அவன் விளங்கினான் என்று அவனுக்கே புரியவில்லை. எதுதான் புரிகிறது? எதுதான். 

அவன் அப்படியே தூங்கித்தான் போய்விட்டானா, அல்லது விழித்துக் கொண்டிருந்தானா என்றே தெரிய வில்லை. திடீரெனக் குடலைக் குழப்பும் ஒரு ஊளை எங்கிருந்தோ கிளம்பியது. பாம்பைப்போல் வளைந்து வளைந்து பக்கத்தறையிலும் கீழேயும் அலறிப் புடைத்துக் கொண்டு எழுந்திருக்கும் சப்தம். 

அபாயச் சங்கு! அவன் முதுகுத் தண்டு சில்லிட்டது. வாசலில் ஆட்கள் ஓடுகிறார்கள். கீழேயிருந்தவர்கள் மாடிக்கு ஓடிவருகிறார்கள்; மாடியிலிருந்தவர்கள் கீழே ஓடுகிறார்கள்; ஒருவரையொருவர் முந்திக்கொண்டு பாரு-மாது-அவன் – பாதிப் படியில் பாரு க்ரீச்சென்று கத்தினாள். மனிதக்குரலாயில்லை. மிருகத்தின் அலறல் தான். “ஐயோ குழந்தை.” அப்பொழுது அவன் தன் கையில்  குழந்தையிருப்பதை உணர்ந்தான். இந்தச் சந்தடியில் அவனையுமறியாமல், குழந்தையைத் தூளியிலிருந்து எடுத்திருக்கிறான். இத்தனைச் சந்தடியிலும் அது தான் நிம்மதியாய்த் தூங்கிக் கொண்டிருக்கிறது. 

எல்லோரும் சமையலறையில் முயற்குட்டிகள் போல் ஒரு மூலையில் குழுமுகிறார்கள். பாருவுக்கு உடலே வெட வெடவென உதறுகிறது. 

அவன் தன்னிலிருந்து தான் பிரிவதையுணர்ந்தான். மனம் சுழலும் வேகத்தில் அவன் இருமைப்படுவதை அவன் உணரும் தெளிவில் ஒரு வேளை ஏற்கனவே குண்டு தன்மேல் விழுந்து, அவன் ஆவி உடலிலிருந்து பிரிந்து, ஆவி வேறு, உடல் வேறாய்த் தனிப்பட்டு விட்டானோ என்றுகூடச் சந்தேகம் தோன்றியது. ஆயினும் அவன் உடல், அவனிடம் தானேயிருக்கிறது. அதுவும் உயிருடன் தானேயிருக்கிறது? ஆயினும் இப்பொழுது வாழ்வைச் சாவினின்று பிரிக்கும் நடுக்கோட்டில் தான் நிற்கையில் தன்னிலிருந்தும் தான் பிரிந்து தன்னையும் 

தன்னைச் சுற்றியவையையும் ஒரு தனி முறையில் சிந்திக்க முடிகிறது. கண்ணிற்குக் கலிக்கமிட்டாற்போல் தனக்கு நேர்ந் திருக்கும் புதுத் திருஷ்டியில், எல்லாமே ஒரு புதுத் தெளிவுடன் பிதுங்குகின்றன. 

ஜன்னல் கம்பிகளின் வழி வெளித்தெரியும் வானத் திலும் ஒரு தெளிவு நிற்கிறது. வெள்ளி முளைத்தபின் தோன்றும் தெளிவு. 

அவன் மனத்தை எந்தெந்த உணர்ச்சிகள் அலசு கின்றன? ? பயமா, துக்கமா, பரபரப்பா, சந்தேகமா? உணர்ச்சிகள் எல்லாமே இறந்து விட்டன. 

ஆனால் நினைவு செத்துவிடவில்லை. முன்னிலும் வேகமாகத்தான் வேலை செய்கிறது. எண்ணங்கள் வேகமாய்க் கடக்கையில் ஒன்றுக்கொன்று சம்பந்தமற்ற பழைய சம்பவங்கள் மனவிளிம்பில் திரிதிரியாய்ப் படருகின்றன. 

ஒரு தோற்றம். நள்ளிரவில் இடி மின்னலுடன் மழை கொட்டுகிறது. நடுமுற்றத்தில் ஜலம் நிரம்பிக் கூடத்தை எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. குழந்தைகளைக் கூடத்தில் போட்டுக்கொண்டு அம்மா நடுவில் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். எல்லோருக்கும் போர்த்தியிருக் கிறாள். தானும் துப்பட்டி ஒன்றைப் போர்த்திக் கொண் டிருக்கிறாள். அவன் மாத்திரம் விழித்துக்கொண்டிருக் கிறான் என்று அவளுக்குத் தெரியும்போலும். அவன் கண்களில் மின்னல் படாவண்ணம் அவள் கையால் அவன் முகத்தை மூடிக்கொண்டிருக்கிறாள். பயநடுக்கம் கண்ட குரலில் அவள் ஏதோ மொண மொணக்கிறாள். 

‘அர்ச்சுனப் பல்குன கிரிடி பாசுபத …” 

குண்டு விழுந்தாலும் இடிபோல்தான் இருக்குமோ? காட்சி கரைந்து, இன்னொன்று உருவாகின்றது. 

இப்பொழுது அவன் இரவில் வாசல் திண்ணையில், காலை ஆட்டியவண்ணம் உட்கார்ந்திருக்கிறான் அவனுக்கு இச்சமயத்தில் வயது, பத்து, பன்னிரண்டு தானிருக்கும். அவன் கையில் ஒரு சின்ன சீசா நிறைய மின்மினிப் பூச்சிகளைப் பிடித்துப்போட்டு வைத்திருக் கின்றான். அவை மினுமினுக்கையில், ஆனந்தமான அவுட்டுச் சிரிப்பு அவன் வாயினின்று உதிர்கின்றது. மின் மினிகளின் ஒளி அவன் முகத்தை விட்டு விட்டு ஏற்று கட்டை மயிர் கின்றன. பால்வடியும் கன்னங்கள். முன்னெற்றியில் சரிந்து கண்ணைக் குத்துகிறது. ஆனால் கொள்ளவில்லை. தலையைத்தான் அதையொதுக்கிக் உதறிக் கொள்கிறான். அவன் கவனமெல்லாம் அவன் கையிலிருக்கும் சீசாவில் தான்…… 

இதற்குள் வெளியில் ஏதோ சப்தம். 

“யாரங்கே, ஒதுங்கு” 

“வேலைக்குப் போறேம்பாட” 

“ஏ நாட்டான், ஜப்பான் குண்டு மண்டையிலே வெடிக்கப்போவுது. ஒதுங்கு ஒதுங்கு – வேலைக்குப் போறானாம் வேலைக்கு !-” 

“போய்யா, நாஸ்தாகூடப் பண்ணாமே, காலங் கார்த்தாலே ஜப்பான்காரன் வந்துடறானோ ?-” 

“ஏகாட்டான், நீ ஓதை வாங்கப்போறே, ஒதுங்குன்னா ஒதுங்கு-” 

“சாமந்திப் பூ!-சாமந்திப் பூ!!’ஒரு பூக்கூடைக்காரி ஒதுங்கிய இடத்திலிருந்தே கத்துகிறாள். 

இப்பெரும் நாடகத்தில் ஹாஸ்ய கட்டங்களும் உண்டு போலும்! 

-இப்பொழுது அவன் ஒரு கூடத்தில் முன்னும் பின்னு மாய் உலாவிக்கொண்டிருக்கிறான். பாரு வாசலிலிருந்து கவலையுடன் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். 

அவள் வீட்டிற்கு விலக்கு. அவன் கைகளில் ஒரு கம்பளி மூட்டையை ஏந்தினாற்போல் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டிருக்கிறான். அம் மூட்டையிலிருந்து ஒரு சிறு முகம் எட்டிப் பார்க்கிறது. பாருவின் குழந்தை. அதற்கு மாந்தம் கண்டிருக்கிறது. அதன் மேலிருந்து கிளம்பும் வேப்பெண்ணெய் நாற்றம் குடலைக் குமட்டு கிறது. ஆயினும் தன் உஷ்ணத்தை அதற்குக் கொடுத்து அதற்குக் குறைந்து போய்க்கொண்டிருக்கும் உஷ்ணத்தை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறான். இப்படியெல்லாம் காப்பாற்றும் உயிர்கள் பின் எப்படி எப்படியோ- 

திடீரென ஆர்மோனியத்தில் ஒரேபல்லை அமுக்கினாற் போல் சங்கு நேர்ச் சப்தத்துடன் அபாயம் நீங்கியதற்கறிகுறியாய் ஒலிக்கிறது. மறுபடியும் வாழ்வில் நம்பிக்கை, உயிர்ப்பயம், சபலம் எல்லாம் அலைபோல் எழுந்து மோதுகின்றன. 

ஊஹும், இந்த வியூகத்திலிருந்து தப்புவதற்கே வழியில்லை. கடைசி வரையில், இதோ இப்பொழுது தப்பித்தோம், தப்பித்தோம் என்று நம்மை நாம் ஏமாற்றிக் கொண்டே, அங்கு ஓடி இங்கு ஓடி, ஆனால் வியூகத் தினுள்ளேயே ஓடி, ஓடி அதனிலிருந்து தப்பாமலேயே, அதனுள்ளேயே மடியப்போகிறோம், நம்பிக்கையிருக்கும் வரையில் வாழ்வு, வாழ்வு இருக்கும் வரை நம்பிக்கை யென்றிருக்கும் வரையில், நாம் இதிலிருந்து தப்புவதேது? 

யானை விலை, குதிரை விலையில் மாது இரண்டு ஜட்கா வண்டிகளைப் பேசிக்கொண்டு வந்தான். 

ரயில்வே ஸ்டேஷனுக்குப் போகும் வழியில் ஒரு பசும் புல்தரை தென்படுகிறது. ஒன்றிரண்டு பசுக்கள் சாந்த மாய் மேய்ந்து கொண்டிருக்கின்றன. இந்தவிடத்தில் குண்டு விழுந்திருந்தால்-? 

ரயில்வே ஸ்டேஷனில் கூட்டம் விழி பிதுங்குகிறது என்னென்ன பராக்கிரமங்களோ புரிந்து மாது டிக்கட்டுகளை வாங்கிவந்தான். ஜன்னல்களிலும் கதவுகளிலும் ஜனங்கள் கொத்துக் கொத்தாய்த் தொங்குகின்றனர். வண்டி நகருகின்றது. ஒன்றையொன்று அடுத்து அடுத்து அவன் எதிரில் போய்க் கொண்டேயிருக்கின்றனர். வண்டித்தொடர் நடுமேட்டில் ஒரு திருப்பத்தில் பாம்பைப்போல் வளைந்து செல்கிறது. 

இது எங்கே செல்கிறது ? இதிலிருக்கும் அத்தனை பேர்களும் எங்குச் செல்கின்றனர்? எந்தச் சாவிற்குப் பயந்து செல்கின்றனர்? இப்பொழுது வரவிருந்த சாவுக்கா?’ இப்பொழுதில்லாவிடில் என்றேனும் இங்கு வரவிருக்கும் சாவுக்கா? அல்லது இவர்கள் எல்லாம் போகுமிடத்தில் சாவே கிடையாதா? 

சாவிற்கும் வாழ்விற்கும் இடையிலிருக்கும் நடுக்கோட்டி லிருந்தால்தான் நிம்மதி. சாவினிடமிருந்து ஓடிக் கொண்டு அதை மறுப்பதைவிட அதன் அருகாமையில் இருந்து கொண்டு அதை அங்கீகரிப்பதே தேவலை, சாவைத் தேடிக் கொண்டு போக வேண்டாமேயொழிய அதன் அருகில் இருப்பதில் எவ்வளவோ அர்த்தமிருக்கிறது…… ஸ்டேஷனிலிருந்து சண்டைக்கு ஆள் சேர்க்கும் ஆபீஸை நோக்கி நடந்தான்.

– த்வனி (சிறுகதைகள்), இரண்டாம் பதிப்பு: செப்டம்பர் 1990, ஐந்திணைப் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (30 அக்டோபர் 1916 – 30 அக்டோபர் 2007) தமிழ் எழுத்தாளர். இவருடைய முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக ல.ச.ரா என்ற பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *