கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம் சமூக நீதி
கதைப்பதிவு: January 12, 2012
பார்வையிட்டோர்: 22,053 
 
 

கதை ஆசிரியர்: மு.வரதராசனார்.

    காலை எட்டு மணிக்கு முன்னமே தலைமையாசிரியர் வந்து பள்ளிக்கூட வாயிலில் நின்று கொண்டிருந்தார். வேலையாட்கள் அவருக்கு முன்னே வந்து காகிதத் துண்டெல்லாம் பொறுக்கித் தூசெல்லாம் துடைத்துக் கொண்டிருந்தார்கள். சிவப்புக் காகிதமும் நீலக் காகிதமும் கத்தரித்துச் செய்த காகிதத் தோரணங்களைத் தலைமை ஆசிரியர் வேலையாட்களின் உதவிகொண்டு கட்ட முயன்றார். அதற்குள் பள்ளிக்கூடச் சிறுவர்களில் பெரியவர்கள் – வளர்ந்த பிள்ளைகள் சிலர் – முன் வந்து வேலையாட்களின் கையிலிருந்து அந்தத் தோரணங்களை வாங்கிக் கொண்டார்கள். தங்கள் கை உழைப்பால் கத்தரித்து ஒட்டிச் செய்த விலைமதிப்பற்ற அந்தத் தோரணங்களை தங்கள் கையாலேயே கட்ட வேண்டும் என்பது அந்தப் பெருஞ் சிறுவர்களின் ஆவல். “பள்ளிக்கூட வேலையில் இவ்வளவு அக்கறை! படிப்பில் இவ்வளவு அக்கறை இல்லையே!” என்று தலைமையாசிரியர் முணுமுணுத்தார். சிறுவர்கள், இதைக் கேட்டதும் திரும்பித் திரும்பி அவருடைய முகத்தைக் கண்டு புன்முறுவலை உணர்ந்து ஊக்கமே கொண்டார்கள். “இன்றைக்குக் கூடவா படிப்பு!” என்று ஒருவன் அவருடைய செவியில் விழுமாறு சொல்லிவிட்டுத் தலை குனிந்தான்.

     தலைமையாசிரியர் அன்று அழகாக உடுத்திருந்தார். சலவை செய்த கருப்புக் கோட்டு அவருக்கு நல்ல தோற்றத்தைக் கொடுத்தது. தூய்மையான வெள்ளாடையைக் கீழ்ப் பாய்ச்சலாகக் கட்டியிருந்தார். அவருடைய தலைப்பாகையும் புதிதாக இருந்தது. அதன் ஓரங்களில் அழுக்குக் கறை அமையவில்லை. இன்னும் இரண்டு வார காலம் அவருடைய தலை மேல் இருந்து வியர்வை ஊறினால் தான் அந்த அழுக்கு ஓரங்களில் கரை போல் அமையும்.

     அவருடைய கையில் இருந்த பிரம்பில் மட்டும் புதுமைத் தோற்றம் இல்லை. அது ஒடிந்து மொக்கையாய் நின்ற பழைய பிரம்பே. அதற்கு ஒன்றும் வேலை இல்லாமையால் கோட்டுக்கும் தலைப்பாகைக்கும் வந்த வாழ்வு அதற்கு வரவில்லை. மற்ற நாட்களில் பள்ளிக்கூட ஒழுங்கு முறைக்குக் காரணமாக இருந்த அந்த பிரம்பு இன்று ஒரு நாள் மட்டும் கோட்டுக்கும் தலைப்பாகைக்கும் செல்வாக்கைக் கொடுத்துவிட்டுத் தான் இருக்குமிடம் தெரியாமல் இருந்தது. அந்த ஊர் நகர மன்றத்தின் பழைய தலைவர், தேர்தலில் தோற்றுவிட்ட மறு நாள் மானம் காத்து மறைந்து வாழ்ந்ததுபோல், அன்று காலையில் அந்தப் பிரம்பு அவர் கையில் இருந்தது. அவர் அந்தப் பிரம்பை ஆட்டவுமில்லை; ஓச்சவுமில்லை. வாளா வைத்திருந்தார். அது அசைவின்றிக் கிடந்தது. ஆனால் அந்தப் பள்ளிக்கூடத்தில் பிரம்பின் பதவிக்குத் தேர்தல் ஒன்று நடந்ததாகவோ, நடந்தாலும் பிரம்புக்குப் போட்டி ஒன்று இருந்ததாகவோ தெரியவில்லை. எப்படியோ, பிரம்பு செல்வாக்கு இழந்திருந்தது.

     பிரம்பின் செல்வாக்கற்ற நிலைக்காகச் சிறுவர்கள் ஒருவரும் வருந்தியதாகத் தெரியவில்லை. ஐந்து வயது முதல் பன்னிரண்டு வயது வரையில் உள்ள சிறுவர்களே அந்தப் பள்ளிக்கூடத்தில் படிப்பவர்கள். அது தொடக்கப்பள்ளி ஆதலால், காலை எட்டரை மணி முதல் பதினொன்றரை மணி வரையில் வந்து கொண்டிருந்தார்கள். ஆனால் அன்று காலை மட்டும் எட்டேகால் மணிக்கெல்லாம் சிறுவர்கள் பெரும்பாலோர் வந்து திரண்டுவிட்டார்கள். பள்ளிக்கூடம் திறந்திருந்தும் அதனுள்ளே புகாமல் வெளியே விளையாடுமிடத்தில் நின்று ஆடியும் ஓடியும் துள்ளிக் கொண்டிருந்தார்கள் அந்த இளங்கன்றுகள். தலைமையாசிரியர் அத்தனைக்கும் இடம் கொடுத்தார். அவர் அவ்வாறு பொறுமையாக விட்டுவிட்டதைக் கண்ட மற்ற ஆசிரியர்களும் இடம் கொடுத்தார்கள். அவர்களுடைய மகிழ்ச்சிப் பெருக்கு பலர்முகத்தில் நகையொளியாய் வீசிற்று. மாசற்ற இளங் குமுத வாய்கள் – பொய் அறியாத திருவாய்கள் – குறுநகை அரும்பிப் பெரு நகையாய் மலர்ந்தன. அந்தத் திருவாய் மலர்களில் வெண் முத்துக்களாய்த் தூய பற்கள் ஒளிவீசின. இந்த அழகொளியே அந்தக் காலைப் பொழுதில் முத்துக்காரத் தெருவைச் சிறப்பித்தது.

     “டே, இன்றைக்கு இன்ஸ்பெக்டர் தானே வருகிறார்?” என்று கேட்டான் ஒருவன்.

     “போடா, போ. இன்ஸ்பெக்டர் வந்தால் காகிதத் தோரணம் கட்டுவார்களா?” என்றான் மற்றொருவன்.

     “நேற்று ஆசிரியர் சொன்னாரே, கேட்கவில்லையா?” என்றான் ஒரு சிறுவன்.

     “இன்றைக்குச் சுகாதாரக் கொண்டாட்டம்; எனக்குத் தெரியும்” என்றான் மூன்றாம் வகுப்புச் சிறுவன் ஒருவன்.

     “சுகாதாரம் என்றால் என்ன? யானையா? அது எங்கே இருக்கிறது?” என்று கேட்டான் முதல் வகுப்பில் படிக்கும் சிறுவன் ஒருவன்.

    அவன் கேட்ட கேள்வியைப் பற்றி பக்கத்தே இருந்த சிறுவர்கள் சொல்லிச் சொல்லி சிரிக்க, அது அப்படியே எல்லாச் சிறுவர்களுக்கும் எட்டித் தலைமையாசிரியருக்கும் எட்டியது. அவரும் தம்மை மறந்து சிரித்தார். அந்தச் சிறுவனை அழைத்து வரும்படி ஏவினார். சிறுவன் நடுநடுங்கிக்கொண்டே வந்து நின்றான்.

     “உன் பெயர் என்ன?” என்றார் தலைமையாசிரியர்.

     “திருவேங்கடம்” என்று அஞ்சி நின்றான் சிறுவன்.

     அவனை அந்த நிலையிலேயே விட்டால் கண்ணீர் கலங்கி அழுதுவிடுவான் போலத் தோன்றியது. அதை உணர்ந்த தலைமையாசிரியர், புன்சிரிப்போடு முதுகில் தட்டிக் கொடுத்து “நீ இதுவரையில் யானையைப் பார்த்ததில்லையா? உனக்குக் காட்டுவேன். யானை பூனை எல்லாம் பார்க்கலாம்” என்று தேறுதல் சொல்லி அனுப்பிவிட்டார்.

     அருகே இருந்த மற்றொரு சிறுவனைப் பார்த்துத் தலைமையாசிரியர் அவனுடைய அழுக்கடைந்த ஆடையைக் காட்டி, இப்படி யாராவது வந்தால் இங்கே சேர்க்க மாட்டேன். இரண்டு மணிக்குப் பள்ளிக்கூடம் வரும் போது எல்லாரும் புதுச் சொக்காய் போட்டுக்கொண்டு தலைக்குக் குல்லாய் போட்டுக்கொண்டு ஒழுங்காக வர வேண்டும். தவறிக் கந்தலும் அழுக்குமாக வந்தால் வெளியே நிறுத்தி விடுவேன். கொண்டாட்டத்திற்குச் சேர்த்துக் கொள்ள மாட்டேன், தெரியுமா?” என்று ஒரு கனைப்புக் கனைத்தார்.

     “சார், இவனும் அழுக்குத் துணி போட்டுக் கொண்டு வந்திருக்கிறான்” என்று ஒருவனை இரண்டு மூன்று சிறுவர்கள் தள்ளிக் கொண்டு போய்த் தலைமையாசிரியரிடம் நிறுத்தினார்கள்.

     “நீ என்ன சின்ன பையனா? இப்போது தான் பள்ளிக்கூடத்தில் வந்து சேர்ந்தாயா? இப்படி வரலாமா? மூன்றாவது படிக்கிறாய், அறிவு இல்லை?” என்றார் தலைமையாசிரியர்.

     “நேற்று நீங்கள் சொன்னபோது நான் இல்லை. எனக்குத் தெரியாது” என்றான் அவன்.

     “நேற்று ஏன் பள்ளிக்கூடத்திற்கு வரவில்லை?”

     “வந்திருந்தேன். மூன்று மணிக்குத் தண்ணீர் குடிக்கக் கேட்டுக் கொண்டு வீட்டிற்குப் போய்விட்டேன். அதனால்தான் -”

     “அப்புறம் தெருவில் மற்றப் பிள்ளைகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளக் கூடாதா? நீ சோம்பேறி.”

     “மற்றப் பையன்கள் யாரும் என்னோடு பேசுவது இல்லை.”

     “நீ சண்டைக்காரன் என்று தோன்றுகிறது” என்று தலைமையாசிரியர் கடுகடுத்தார்.

     “வீட்டுக்குப் போய்ப் புதுச்சொக்காய்ப் போட்டுக் கொண்டு வந்திடுவேன்” என்று அவன் போக விடை கேட்டான்.

     “அவன் போனால் இப்போது வரமாட்டான். அடிக்கடி தண்ணீர் வேண்டும் என்று கேட்டுக் கொண்டு வெளியே போய் எங்கேயாவது திரிந்து கொண்டிருப்பான். இர்ரெகுலர் பாய் (irregular boy)” மற்றோர் ஆசிரியர் எடுத்துரைத்தார்.

     “ஒழியட்டும், எப்படியாவது போகட்டும். இன்றைக்கு ஒருநாளாவது ஒழுங்காக வரக்கூடாதா?” என்று தலைமையாசிரியர் சொல்லிவிட்டு மணியடிக்கச் செய்தார். மணி அடித்தது. சிறுவர்கள் வகுப்பு நோக்கி ஓடத் தொடங்கினார்கள். அவர்களை ஓடாதவாறு நிறுத்தி, “மறுபடியும் சொல்கிறேன். இரண்டு மணிக்குப் பள்ளிக்கூடம் வரும் போது, எல்லாரும் அரையணா எடுத்துக் கொண்டு வரவேண்டும். அரையணா இல்லாதவர்களுக்குக் கொடி கிடைக்காது. அந்தக் கொடி வாங்கிச் சொக்காயில் குத்திக் கொண்டால் தான் கொண்டாட்டத்தில் சேரலாம். ஒரு கொடி அரையணா” என்று சொல்லித் தம்முடைய கோட்டில் குத்திக் கொண்டிருந்த கொடியைக் காட்டினார். சிறுவர்கள் வகுப்புக்களில் போய் நின்றார்கள். கடவுள் வாழ்த்துப் பாட்டு முழங்கியது; கடலொலி போல் குழப்பமாய்க் கேட்டது.

     “நம்முடைய தேசத்திற்கு என்ன பெயர்? இந்தியா என்று நேற்றுச் சொன்னேன் அல்லவா?” எனத் தலைமையாசிரியரின் குரல் கேட்டது. “ஒரு வியாபாரி 800 தேங்காய் வாங்கி-” என்று மற்றோர் ஆசிரியர் கணக்குக் கொடுக்கலானார். “நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி” என்று ஒரு வகுப்பில் சிறுவன் ஒருவன் பாட்டு ஒப்புவிக்கத் தொடங்கினான். “கண்ணன் தின்னும் பண்டம் வெண்ணெய்” என்ற ஒளி மற்றொரு வகுப்பில் கேட்டது. வெளியே, “நேரமாய்விட்டது, நல்ல அடி விழும்”என்று சொல்லிக் கொண்டே சிறுவர் இருவர் பள்ளிக்கூடத்தை நோக்கி ஓடி வந்தார்கள்.

     மாலை மூன்று மணிக்குப் பள்ளிக்கூடத்தை அடுத்த வெட்டவெளி பெரும் பொலிவு பெற்றிருந்தது. ஐந்து வகுப்புகளும் ஐந்து அணியாக நிற்க, ஐந்து ஆசிரியர்கள் அவற்றின் முன் நின்று கொண்டிருந்தார்கள். மாலை வேளையின் கூரை முகப்பில் அணிவகுத்து அமர்ந்து ‘கா’ என்ற நெட்டெழுத்தையே பல நூற்றாண்டுகளாகக் கற்று வரும் காக்கைப் பள்ளிக்கூடமும் இன்று அழகில் தோற்று விட்டது எனலாம். சிறுவர்கள் ஐந்து ஐந்து பேராகப் பிரிக்கப்பட்டுப் பெரிய பையன் ஒருவனிடம் ஒப்படைக்கப்பட்டார்கள். அந்தப் பெரிய பையன் கையாம். அவனிடம் ஒப்படைக்கப்பட்ட ஐவரும் ஐந்து விரல்களாம். அவனுக்கு அந்த ஐவர் பெயரும் தெரிய வேண்டுமாம்.

     சுண்டு விரல் – திருமால்
     மோதிர விரல் – முருகேசன்
     நடு விரல் – பார்த்தசாரதி
     சுட்டு விரல் – வேலப்பன்
     கட்டை விரல் – அப்துல் ரசாக்

என்று இப்படி ஒருவன் கைவிரல் விட்டு விட்டு மனப்பாடம் செய்து கொண்டிருந்தான். எல்லாருடைய தலையிலும் குல்லாய்கள் பல நிறமாய் அழகு செய்தன. சரிகைக் குல்லாய்கள் சில, துருக்கிக் குல்லாய்கள் சில, குரங்குக் குல்லாய்கள் சில, வெள்ளை சில, நீலம் சில, கருப்புப் பல, சிவப்புப் பல. கோட்டும் கால்சட்டையும் அணிந்தவர்கள் சிலர்; சொக்காயும் துண்டும் அணிந்தவர்கள் பலர்; பட்டாடையும் பளபளப்புமாய் விளங்கியவர்கள் சிலர்; பருத்தியாடையும் பாங்குமாய் விளங்கியவர்கள் சிலர். காகிதக் கொடிகள் குண்டூசிகளால் குத்தப் பெற்றுச் சிறுவர்களின் சொக்காயிலும் கோட்டிலும் விளங்கின.

     ஒரே நிறமான உடை மட்டும் அவர்களுக்குத் தந்து உடுக்கச் செய்திருந்தால் ஏதோ ஒரு புதிய படையெடுப்பு என்று சொல்லத்தக்க பெருமை பெற்றிருக்கும் அந்தச் சிறுவர் அணிவகுத்த அழகு. அவர்களிடம் காணப்பட்ட பெரிய மாறுதல் ஒன்று; அதாவது அவர்கள் கையில் பலகையும் புத்தகமும் இல்லை; சிலர் கைகள் வெறுங்கையாக இருந்தன. சிலர் கைகள் கைக்குட்டையுடன் அசைந்தன. சிலர் கைகள் குண்டூசியையும் கொடியையும் தடவிக் கொண்டிருந்தன. சிலர் கைகள் குல்லாயின் சரிகைக்கரையையோ மெத்தென்ற மேற்புறத்தையோ தடவிக் கொண்டிருந்தன. சிலர் கைகள் பொத்தான் பொருத்தத் தெரியாமல் அலைந்து கொண்டிருந்தன. சிலர் கைகள் ஆடையின் சரிகைக் கரையை நேரே நீட்டி ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தன. சிலருடைய கைகளோ முன்னே இருந்த சிறுவர்களின் குல்லாயில் காகிதத் துண்டுகளை அவர்கள் அறியாமல் செருகிக் கொண்டிருந்தன.

     “நான் சொல்லுகிற வரைக்கும் இங்கே அங்கே நகரக் கூடாது; நகர்ந்தால் நாளைக்குப் பள்ளிக்கூடம் வந்தால் பழுக்கப் பார்த்துக் கொள்வேன், இன்றைக்கு இனிப்புப் பொட்டலமும் கிடைக்காது. நகர்ந்தால் வெளியே போகவும் முடியாது; போலீசார் சுற்றிலும் காவல் இருப்பார்கள், தெரியுமா? தண்ணீர் வேண்டுமானால் இப்போதே கேட்கலாம்; அப்புறம் கிடையாது. ஒன்றுக்கும் இப்போதே கேட்டுக் கொண்டு போய் வரலாம். கலெக்டர் ஆபீசின் எதிரே போய்ச் சேர்ந்ததும் ஒருத்தனும் வாலாட்டக் கூடாது. நல்ல பிள்ளைகள் என்று பெயரெடுக்க வேண்டும் தெரியுமா?” என்று தலைமையாசிரியர் நீண்ட உபதேசம் செய்தார்.

    அப்போது முதிய அம்மையார் ஒருவர் தம் பேரனை அழைத்துக் கொண்டு அணிவகுப்பில் நுழைந்தார். அம்மையார்க்கு நரை வந்துவிட்டதே அல்லாமல் இன்னும் திரை வரவில்லை. மூப்பு என்று சொல்லிவிட இயலாது. ஆனாலும் அவர் நிலையினைக் கூற வேறு சொல் இல்லையாகையால் மூப்பின் தொடக்கம் எனலாம். வயது ஐம்பதுக்கு மேற்பட்டிருக்கலாம். சிவந்த மேனியும், கட்டுத் தளரா யாக்கையும், எளிய உடையும் ஒரு வகை வீறு அளித்தன. கண்களின் கலக்கம் அற்ற ஒளி, உள்ளத்தின் தெளிவை வெளியாக்கிற்று. நடையில் பெண்மையும் வீரமும் ஒருங்கே குடி கொண்டிருந்தன. பிரான்சு நாட்டில் வாழ்ந்து வீரப்போர் புரிந்து தீக்கு இரையாகிய ஜோன் என்னும் அம்மையார் இன்னும் 30 ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருந்தால், அவரை இந்த, அம்மையாருக்கு உவமையாக்கிக் கூறலாம். ஜோன் ஒரு நாட்டைக் காக்க வாழ்ந்தவர். நசேம்மா என்னும் இந்த அம்மையாரோ ஒரு பேரனைக் காக்க வாழ்ந்தவர்.

     பேரனைக் கையில் பிடித்துக் கொண்டு தலைமையாசிரியரிடம் நேரே சென்று, “வாத்தியாரே! எங்கள் பையனும், உங்களோடு வர வேண்டும் என்று பிடிவாதம் செய்கிறான். இன்றைக்கு ஏதோ கொண்டாட்டமாமே. பையனை மறுபடியும் வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும். அவன் குழந்தை; ஒன்றும் அறியாதவன். மற்ற பிள்ளைகளைப் போல் வெளியே போய்ப் பழக்கப்படாதவன். பையனைப் பார்த்துக் கொள்ளுங்கள். வீடு வந்து சேரும் வரை உங்கள் பொறுப்பு. அப்படியானால் அழைத்துக் கொண்டு போகலாம். இல்லையானால் வேண்டா” என்றார்.

     தலைமையாசிரியரோ இந்தத் துறையில் பழக்கம் உள்ளவர். எவ்வளவோ பெற்றோருக்கு உறுதியும் தேறுதலும் சொல்லிச் சொல்லி, வீடு சுற்றி வளர்ந்த சிறுவர்களை நாடு தெரியச் செய்தவர். “பெரியம்மா! எங்கேயும் வெளியூருக்கோ காட்டுக்கோ நாட்டுக்கோ போகவில்லை. ஆலங்காயம் சாலைவழியாகப் போய் ஐந்து ராந்தல் கம்பத்தருகே நின்று அங்கிருந்து கலெக்டர் ஆபீசுக்கு எதிரே போய் இருப்போம். இருநூறு பிள்ளைகள் வருகிறார்கள். பையனோடு பையனாய் வரட்டும். நாங்கள் பார்த்துக் கொள்வோம்” என்று மென்மையும் இனிமையும் ததும்ப மொழிந்தார்.

     “மற்ற வீட்டுப் பிள்ளைகள் வேறே, எங்கள் பையன் வேறே. இவனுக்கு எங்கள் வீட்டுப் பழக்கம் இல்லை. உங்கள் கையிலே வைத்துப் பார்த்துக் கொள்வதாக இருந்தால் அனுப்புகிறேன். இந்தாங்க ஓர் அணா. கொடியோ என்னவோ வேண்டுமாம் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று அந்தப் பாட்டியார் சொல்லிவிட்டு வீடு நோக்கி அடி எடுத்து வைத்தார். திரும்பித் திரும்பிப் பேரனையும் மற்றப் பிள்ளைகளையும் பார்த்துக் கொண்டே சிறிது நடந்தார். திரும்பிப் பேரனிடம் வந்து “அப்பா, திருவேங்கடம்! பத்திரமாய், வாத்தியார் பக்கத்திலேயே இரு. வாத்தியார் வரும்போது வா. இங்கே அங்கே வேடிக்கை பார்த்துக் கொண்டு எங்கேயாவது போய்விடாதே. பொழுது போவதற்குள் வந்துவிடு. நான் வரட்டுமா? பத்திரம், பத்திரம்” என்று சொல்லிவிட்டுச் சென்றார். பூனை குறுக்கே வராமையாலும், காலைக் கல் தடுக்காமையாலும் ஒன்றும் ஐயுறாமல், “பையன் வந்திடுவான்” என நம்பியது அந்த பேதை மனம்.

     திருவேங்கடத்தின் வெல்வெட்டுக் கோட்டில் பச்சை நிறக் கொடி வந்து பொருந்தியது. அவனுடைய சரிகைக் குல்லாய் குடுமியை உள்ளே அடக்கிக் கொள்ளாமல் வெளியே தெரியவிட்டது. அரையில் கட்டிய வெள்ளாடையின் சரிகைக்கரை, குல்லாய்க்குப் போட்டியாக விளங்கியது. இடுப்பில் நிற்காத அந்த ஆடையை அடிக்கடி இழுத்துக் கட்டும் தொல்லையைப் போக்க பாட்டியார் கட்டிய கச்சு, பேரனுடைய வயிற்றை இறுக்கியது. ஆறு வயது உள்ள சிறுவன் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வது இவ்வளவு திண்டாட்டமாக இருந்தது.

     நாற்பது ஆண்டுகளுக்கு முன் சிறுவர் உலகம் இப்படி இருந்தது. வீட்டை விட்டுப் பெற்றோர் அனுப்பவதும் அருமை; பெற்றோர் அனுப்பினாலும் சிறுவர்கள் துணிந்து திரிவதும் அருமை. இந்தக் காலத்திலோ, அந்த வயது சைக்கிள் உருட்டிக் கற்கும் வயதாகும். ஆடை வகையிலும் இப்போது அவ்வளவு தொல்லை இல்லை. அரைக்கால் சட்டை அணியாத சிறுவனை இப்போது நாட்டுப் புறத்திலும் காண்பது அரிது. குடுமியும் குல்லாவும், இந்தக் காலத்துச் சிறுவர்கள் “பைத்தியக்காரன்” “பட்டிக்காட்டான்” என்று எள்ளி நகையாடும் கோலங்கள். ஆசிரியர் கையைப் பிடித்துக் கொண்டு கொண்டாட்டத்திற்குச் செல்லும் சிறுவர்கள் இந்தக் காலத்திலே வெறுங் கற்பனை. ஆசிரியர்களின் துணையும் தூண்டுகோலும் இல்லாமலேயே இந்த காலத்துச் சிறுவர்கள் ஊர்க்கொண்டாட்டங்கள் எல்லாவற்றிலும் சென்று அங்கே அமைந்துள்ள நாற்காலிகளையெல்லாம் நிரப்பி, கொண்டாட்டத்திற்கு வரும் பெரியவர்களுக்கு இடம் இல்லாமல் திகைக்கச் செய்கிறார்கள். இது உலக முன்னேற்றத்தின் விளைவு.

     ஆனால் திருவேங்கடம் வளர்ந்த குடும்பம் வேறு; வாழ்ந்த காலமும் வேறு. இவன் மூன்று குடும்பங்களுக்கு ஒரு மகனாய் – ஆண் குழந்தையாய் – வளர்ந்து வந்தவன். இவனுடைய பெரியப்பனுக்கு மகனாய் இருந்தவன் இறந்துவிட்டான். எனவே அந்தக் குடும்பத்திலும் ஆண் மகன் இல்லை. இவனுடைய தாய் தந்தையர்க்கோ இவன் ஒருவனே ஆண் குழந்தை. இவனுக்கு முன் பிறந்த இருவரும் பெண்கள். இவனுடைய தாயைப் பெற்ற குடும்பத்திலே ஆண் பிறக்கவே இல்லை. பிறந்த ஒரு குழந்தையும் பெண். அதுவே இவனுடைய தாயாக வளர்ந்த அம்மையார். அந்த ஒரு பெண்ணின் தாயே இவனை அன்று அழைத்து வந்து தலைமையாசிரியரிடம் விட்ட பாட்டியார். தம்முடைய மகள் வயிற்றில் ஒரு மகன் பிறக்க வேண்டும் என்று அந்த பாட்டியார் தவம் கிடந்தார். தாய் பிறந்த காஞ்சி நகரில் கோயில் கொண்டிருந்த திருமாலைப் பலகாலும் வேண்டிவந்தார். ஒரு முறை இந்தக் கருத்தோடு திருப்பதிக்குச் சென்று நெடுமாலை நோக்கித் தொழுது வேண்டினார். பிள்ளை வரம் கேட்போர் செய்யும் சடங்கைப் பின்பற்றி அந்த ஏழுமலையில் ஓர் அடுப்பை மூட்டி வந்தாராம். வேங்கடத்தான் அருள் செய்யப் பிறந்த குழந்தையே திருவேங்கடமாய் இன்று குல்லாயும் சரிகைக்கரை வேட்டியும் அணிந்து சுகாதாரக் கொண்டாட்டத்திற்காகக் கடைத்தெரு வழியாகச் செல்லும் ஊர்வலத்தில் மாணவர் குழுவில் இருந்தவன். அவன் மேல் தலைமையாசிரியருக்கு ஒரு கண் இருந்தே வந்தது.

     ஊர்வலம் பாட்டொலியோடு நகர்ந்தது. “செந்தமிழ் நாடு எனும் போதினிலே” என்னும் பாட்டு அந்தக் காலத்துப் பள்ளிக்கூடங்கள் அறியாத ஒன்று. அதைப் பாடிய பாரதியாரும் அந்தக் காலத்து மக்களுக்கு யார் என்று தெரியாது. அரச வாழ்த்துப் பாட்டை ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்துப் பாடச் செய்தார்கள். கலெக்டர் ஆபிசின் எதிரே நின்று ஒரு பாட்டுப் பாடி முடித்து மாணவர்கள் உட்கார்ந்தார்கள். அந்தக் கூட்டத்தின் முன் வரிசையில் இருந்தான் திருவேங்கடம்.

     குறித்த நேரம் கழிந்ததும் ஒவ்வொருவராகப் பெரியவர்கள் வந்து உட்கார்ந்தார்கள். இசை முழக்கம் தொடங்கியது. ஆங்கிலேயர்கள் விரும்பும் ‘பாண்டு’ என்னும் இசையும் கலந்தது. கலெக்டர் ஆங்கிலேயர் ஆகையால் அவர் விரும்பும் இசை அங்கு வந்தது. அவர் விரும்பும் ஆங்கில மொழி அந்த இசையைவிட வீறுகொண்டு விளங்கியது. மாலைகள் கழுத்துகளில் விழுந்தன. விழுந்ததும் கழன்று மேசைகளின் மேல் கிடந்து உறங்கின. கைகள் தட்டின. சிலர் எழுந்து பேசினர். ஏபிசி என்னும் எழுத்துகளும் அறியாத இளஞ் சிறுவர்கள் பலரை உட்கார வைத்துவிட்டு, திறம்பட எழுதி வந்த ஆங்கில வாக்கியங்களைச் சிலர் படிக்கத் தொடங்கினார்கள். படித்தபோது, அஞ்சாத மாணவர் சிலர் பேச முயன்றார்கள். அஞ்சி அடங்கிய மாணவர்கள் பலர் தூங்க முயன்றார்கள். ஆசிரியர்கள் அடிக்கடி தலையிட்ட காரணத்தால் இந்த இருவகை முயற்சியும் பயன்படவில்லை. ஒவ்வொரு முறையும் படித்து முடிந்த பிறகு பெரியவர்கள் வன்மையாகக் கைகளைத் தட்டினார்கள். அப்போது சிறுவர்கள் உண்மையான ஊக்கம் கொண்டு தம் சிறு சிறு கைகளை உரத்தோடு தட்டினார்கள். அவர்கள் அப்படியே தட்டிக் கொண்டு மகிழ்ந்திருப்பார்கள். ஆனால் ஆசிரியர்கள் அதிலும் குறுக்கிட்டுப் “போதும் போதும்” என்று கையமர்த்திக் கத்தியபோது இளைஞர்களின் உள்ளங்கள் திகைப்பு உற்றன. மறுபடியும் கை தட்டும் வாய்ப்பு வருமா என்று காத்திருந்தார்கள் சிறுவர்கள்.

     இனிப்புப் பொட்டலம் வரும் வரும் என்று சிறுவர்கள் பலரும் காத்திருந்தார்கள். ஆனால் இதுவரையில் ஒன்றும் வரவில்லை. நான்காம் வகுப்பு, ஐந்தாம் வகுப்புச் சிறுவர்கள் ஆசிரியர்களிடம் அஞ்சும் அச்சம் குறைந்தவர்கள். ஆதலால், ஒரு சிலர் மெல்ல எழுந்தார்கள்; எழுந்தவர்களில் சிலர் நகர்ந்தார்கள்; இந்தக் காட்சிகளில் திருவேங்கடத்தின் மனம் சென்றது. ‘பொழுது போவதற்குள் வந்து சேர வேண்டும்’ என்று பாட்டியார் இறுதியில் சொன்ன சொல் அவன் நினைவுக்கு வந்தது. சுற்றிலும் திரும்பிப் பார்த்தான். பெரியவர்களும் ஒரு சிலர் எழுந்து செல்வதைக் கண்டான். அவன் மனமே அல்லாமல் வயிறும் வீட்டை நினைப்பூட்டியது. பகலுணவு உண்ணும் போது கொண்டாட்டத்திற்குப் போக வேண்டும் என்று பாட்டியாரிடத்தில் போராடி வெல்லும் முயற்சியில் வயிற்றை மறந்தான்; கால் வயிறும் உண்ணாமல் கவலையோடு பள்ளிக்கூடம் வந்து சேர்ந்தான்; ஊர்வலத்தில் கலந்து, ஆசிரியர்க்கு அடங்கி எண்ணாத எண்ணிய அவனுக்கு இப்போது வயிறு கிள்ளியது. பொழுதோடு போகத் துணிந்த மனத்தின் முயற்சிக்கு வயிறும் துணை செய்தது.

     அவன் மெல்ல எழுந்தான். அந்த நேரத்தில் கலெக்டர் மாணவர்களுக்கு அழகான பரிசுகள் வழங்கிக் கொண்டிருந்தார். தலைமையாசிரியரின் நோக்கமும் மற்றவர்களின் பார்வையும் கலெக்டர் மேசையில் இருந்தன. திருவேங்கடம் மெல்ல நடந்து சாலையின் ஓரத்தில் வந்து சேர்ந்தான். இது தான் வந்த வழி என்று தெற்கு நோக்கித் தயங்காமல் நடந்தான்.

     ஆறு வயதுள்ள சிறுவனுக்குக் தெற்கு என்றும் கிழக்கு என்றும் வேறுபாடு இல்லை. கிழக்கு மேற்கு என்னும் பகுப்பு அவனுக்கு கண்மூடி வழக்கமாக – மூட நம்பிக்கையாக இருக்கும். சூரியன் தோன்றுவது கிழக்கு என்று சொல்லிக் கொடுத்து வற்புறுத்தும் வயது அது அல்ல. அப்படி வற்புறுத்தினாலும் சூரியன் மறையும் திசையும் கிழக்குத்தான் என்று அவனுடைய மூளை வற்புறுத்தும். சூரியனை நோக்கி நின்று பார்க்கும் போது இடக்கைப் பக்கம் வடக்கு என்றும் வலக்கைப் பக்கம் தெற்கு என்றும் தெளிவாக்கினால், அவன் ஒரு சுற்றுச் சுற்றி வேறு வகையாக நின்று, தெற்கை வடக்கு என்பான்; வடக்கைத் தெற்கு என்பான். கையால் பற்றியோ, கண்ணால் கண்டோ , செவியால் கேட்டோ அறிய முடியாதவற்றை அவன் எள்ளுவான். அவனுடைய அறிவுலகத்தில் அவற்றை மூட நம்பிக்கை எனத் தள்ளுவான்.

     ஆறு வயது சிறுவனுக்கு இவை எட்டாதவை. பதினாறு வயது இளைஞனுக்குக் கீழ்வீடு மேல் வீடு என்பவை பெரு மயக்கம் விளைக்கின்றன. நாட்டுப் பற்றுக் கொண்ட இளைஞனுக்குக் கீழ்நாடு மேல்நாடு என்னும் தொடர்கள் திகைப்பைத் தருகின்றன. அவையெல்லாம் சொல்லால் வரும் மயக்கம். ஆனால் அறுபது வயது நிரம்பிய முதியவர்க்கும் திசை மயக்கம் உண்டு. புதிய ஊருக்குச் சென்றவர் பலர் நண்பகலிலும், இரவிலும் திசையறியாமல் மயங்குகிறார்கள்; அறிவித்தாலும் “இது எப்படித் தெற்காகும் இது தானே வடக்கு?” எனத் தயங்குகிறார்கள். ஆகையால் திசையறியாத் திருவேங்கடத்தின் மீது குற்றமே இல்லை.

     அவன் நம்பிக்கையோடு வீட்டை நாடிப் பாட்டியை நினைந்து நடந்த சாலை கண்ணமலைச்சாலை எனப்படும். அவன் சென்ற திசையோ தெற்கு. செல்ல வேண்டியதோ கிழக்கே உள்ள ஆலங்காயச் சாலை. இரண்டும் ஓரிடத்திலிருந்து பிரியும்போது வேறுபாடு தெரியுமா? வண்டிகளின் சக்கரம் சென்று சென்று தேய்ந்த தேய்வும், இரு புறமும் எழுந்து விளங்கும் கற்களின் தோற்றமும், மக்கள் நடமாட்டமும், மரங்களின் தலையசைவும் திருவேங்கடத்தின் உள்ளத்தில், ‘வந்த வழி இதுதான்’ என்ற நம்பிக்கையை விளைவித்துவிட்டன. ஆகையால், முதலிலேயே “இதுதானா வழி?” என்ற ஐயமே எழவில்லை. அவனுடைய மனம் நினைத்ததெல்லாம் “பொழுது போவதற்குள் போக வேண்டும்” என்னும் ஒன்றே.

     அப்போது மணி ஆறரை. பொழுது எனப்படும் கதிரவன் மேற்குத் திசையில் மறைந்தான். அவனைத் தொடர்ந்து செல்லும் ஒளி இன்னும் ஊரை விட்டுப் பிரிய மனமில்லாமல் எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. விளக்கொளி அங்கங்கே வந்து பரவிக் கொண்டிருந்தது.

     திருவேங்கடம் நடந்தான். அவனுடைய கால்கள் சாலையில் நடந்தன. மனமோ தான் பழகிய அந்தத் தெருவை நாடியது; ஆனால் கடைத்தெருவோ இல்லை; அதனை அடுத்த முத்துக்காரத் தெரு முனையோ வரவில்லை. பள்ளிக்கூடக் கட்டடமோ கண்ணிற்கே தெரியவில்லை. வீடோ இருப்பதாகவே தெரியவில்லை. இவையெல்லாம் இனி வரும் என்னும் நம்பிக்கை தளர்ந்தது. இரண்டு பர்லாங்கு நடந்ததும் வீடுகள் ஒழுங்காக ஒன்றை ஒன்று அடுத்து அடர்ந்திருப்பது போய், அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறிக் காணப்பட்டன. பிறகு அவையும் அற்றன. தெருக்கள் ஒன்றும் இல்லை; தொலைவில் சிறு குடிசைகள் தெரிந்தன. வெறுந் தரையும் காணப்படாமல் அவையோ நெல்லும் புல்லும் போல் தோன்றின. நெல் விளையும் மரம் என்று கூறினாலும் உண்மை என்று நம்பும் திருவேங்கடம் இதற்கு முன் காணாத வயல்களைக் கண்டான். அவற்றைப் பாடத்திலும் படித்திராத காரணத்தால் காடு என எண்ணினான். யானையின் பாடம் முதல் வகுப்பிலேயே வருவதால் யானையை நினைத்தான். “சுகாதாரம் என்பது யானையா அது எங்கே இருக்கிறது?” என்று கேள்வி கேட்டவனுக்கு விடை வந்து சேர்வதுபோல் தோன்றியது. போதாக் குறைக்கு ஒளியெல்லாம் மறைய, ஊர் இல்லாக் குறையால் விளக்கொளியும் இல்லாதிருக்க, இருள் மூடியது. அந்த இருளைக் கண்டு அஞ்சி அலறினான். அதற்கு முன் ஆண்டில் தன் தமக்கையனோடு சேர்ந்து கூடத்து விளக்கு அணைந்த போது இருளைக் கண்டு கூக்குரலிட்டு நடுங்கி அஞ்சின அச்சம் இப்போதும் அடைந்தான். தெரு முனையும் பள்ளிக்கூடக் கட்டடமும், முறுக்குக் கடையும் மற்றவைகளும் தோன்றாமையால் மயங்கிக் கலங்கினான். இனி வீடு வருமா, பாட்டியும் அம்மாவும் வருவாரா என நினைத்து விம்மினான். பித்தர் மனம் கொண்டு நினைப்பற்று வெறியர் மனம் கொண்டு விரைந்து நடந்தான். கால்கள் யந்திரம் போல் இயங்கின. நடை ஓட்டமாயிற்று; விம்மல் அழுகையாயிற்று; எண்ணம் அலறலாயிற்று. பாட்டியை அம்மா என்று அழைக்கும் மனத்தில் ‘அம்மா’ என்ற ஒலியே எண்ணமாய் நிற்க, அதுவே அலறலாயிற்று. “அம்மா, அம்மா” எனக் கூவியபடியே அழுதுகொண்டு ஓடினான் சிறுவன். அந்த நள்ளிருளில் அவன் செவியில் ஒன்றும் கேட்கவில்லை. குள்ள நரிகள் ஊளையிட்டன. மற்ற விலங்குகள் உறுமின. அலறலுக்கும் அழுகைக்கும் இடையே ஒன்றும் கேட்கவில்லை; பாட்டியை நினைத்த மனம் அச்சம் மீதூர்ந்து அவன் செவியை செவிடாக்கிற்று. சாலையின் இருமருங்கும் என்ன இருந்தன என்பதை அவன் கண்கள் அறியவில்லை. அச்சத்தை வளர்த்த இருள் அவனுடைய கண்கள் எதிரே தன்னை ஒழிய வேறொன்றும் தோன்றாதபடி செய்திட்டது. அத்தகைய அருளாவது இருள் என்னும் பேய்க்கு இருந்தது நல்லதாயிற்று. இல்லையானால், அந்தக் குழந்தைக் கண்ணெதிரே அந்தத் தனிமை வெறியிலே எது தோன்றியிருந்தாலும் கொடுமையாய்த் தோன்றியிருக்கும். இருளும் அருள் கொண்டது. இருண்ட வானமும் மருண்ட சாலையும் தவிர வேறொன்றும் அறியாமல் சிறுவன் ஓடினான்.

     சிறுவன் தன்னை மறந்தான். கால் ஓட்டத்தை மறக்கவில்லை; வாய் அலறலை மறக்கவில்லை. இரண்டு கல் தொலைவு ஓடி வந்தாயிற்று. கூப்பிடும் தூரத்தில் விளக்கு ஒன்று தெரிந்தது. இருவர் பேச்சுக் கேட்டது. தன் பாட்டியோ என எண்ணினான் சிறுவன். எண்ணியதும் தன்னை நினைத்தான்; காலின் ஓட்டமும் வாயின் அலறலும் பன் மடங்கு மிகுந்தன. அழுகைக் குரல் இருவர் மனத்தநயும் உருக்கிற்று.

     “யாரப்பா? தம்பி! அழாதே வா, அப்பா” என்று விளக்கு வைத்துக் கொண்டிருந்த அந்த இருவரும் கூவி அழைத்தார்கள். அந்தக் குரலும் இந்தச் செவிகளில் விழவில்லை. சிறுவன் அலறலைக் காண மனம் பொறுக்காதவர்களாய், அவர்கள் எதிரே ஓடிவந்து அவனை அப்படியே ஏற்றுக் கொண்டார்கள். “எந்த ஊர் அப்பா?” எங்கே இருந்து வருகிறாய் அப்பா?” என்றெல்லாம் அவர்கள் கேட்ட கேள்விகளுக்குச் சிறுவன் வாய் திறக்கவில்லை. அவர்களிடம் நிற்காமல் அவன் ஓடத் தொடங்கினான். “அம்மா, அம்மா” என்றான். அவன் மனம் மருண்டு வெறி கொண்டிருப்பதை ஒருவர் உணர்ந்து, “அதோ அம்மா காத்திருக்கிறார்கள்; வா, போகலாம்” என்று தூக்கி தோள்மேல் வைத்துக் கொண்டு நடந்தார். அப்போதும் அழுகையும், அலறலும் ஓயவில்லை; சிறிது குறைந்தது; அவ்வளவே.

    விளக்குடன் இருவரும் நின்றது நாய்க்கன்பட்டி என்ற ஊரை அடுத்துச் சிறிது தொலைவிலாகும். தங்கள் நிலத்தில் ஏதோ வேலையாக வந்து பார்த்துவிட்டு அவர்கள் ஊருக்குத் திரும்பும் நேரம் அது. சிறுவனின் நிலையைக் கண்டு மனம் உருகி நின்றார்கள். ஊருக்குள் சென்று மணியக்காரரின் திண்ணைமேல் சிறுவனை விட்டார்கள். விட்டதும் பாட்டியைக் காணாத சிறுவன் ஏமாற்றம் மிகுந்து அலறினான். ஊர் திருப்பத்தூரே என்று வந்த திசையால் அறிந்து கொண்ட மணியக்காரர் “தெரு என்ன?” என்று கேட்டார். அதற்கும் வாய் திறக்காமல் இருந்தது கண்டு சிறிது பொறுக்கச் சொல்லித் திரளாகக் கூடிய மக்களை அப்புறப் படுத்தினார். பாலும் பழமும் கொண்டு வந்து கொடுத்துப் பார்த்தார். பாலைக் குடித்தால் அம்மாவிடம் கொண்டு போய்ச் சேர்ப்பதாக இரண்டு மூன்று பேர் வேண்டினார்கள். ஓர் அம்மையாரும் வந்து கெஞ்சினார். பால் சிறிது உள்ளே சென்று உலர்ந்த தொண்டையை நனைத்தது. “புறப்படு, போகலாம். நான் கொண்டு போய் அம்மாவிடம் விட்டு வருவேன்” என்று எழுந்தார் மணியக்காரர். “எனக்குத் தெரியும் இவனுடைய வீடு, நான் காட்டுவேன்” என்று பொய் சொன்னார் மற்றொருவர்.

     சிறுவன் முகத்திலே சிறிது தெளிவு காணப்பட்டது. நம்பிக்கை என்னும் மருந்து சிறிதளவு பயன்பட்டிருந்ததை உணர்ந்ததும், ஒருவர், “அப்பா! உன் அப்பா பெயர் சொல்லு” என்றார். “நயனா” என்று மறுமொழி வந்தது. அம்மாவின் பெயர் கேட்க, “அம்மாக்கண்ணு” என்று சிறுவன் விம்மலுக்கிடையே சொன்னான். “நீ எங்கே படிக்கிறாய்?” என்ற வினாவுக்குப் “பள்ளிக்கூடத்தில்” என்று விடை வந்தது. சிறுவனுடைய துன்பம் கண்டு நகைச்சுவை இடம் பெறாமல் போயிற்று. ஒருவர் இருவர் பல்லைக் காட்டத் தொடங்கினார்கள். ஆனால் மணியக்காரரின் முகத்தைக் கண்டு அடங்கினார்கள். மறுநாள் காலையில் செல்லலாம் என்றார் கணக்குப்பிள்ளை. பையனைவிடப் பெற்றோர் எவ்வளவு துன்பப்படுகிறார்களோ என்று சொல்லிக் கொண்டே கைவிளக்குடன் மணியக்காரர் நடந்தார். திருவேங்கடம் ஒருவர் தோள்மேல் இருந்தபடி உறங்கி விட்டான். மெல்ல ஊர் வந்து சேரலாயினர்.

     இதற்குள் முத்துக்காரத் தெருவும் அடுத்த சில தெருக்களும் அமர்களமாகிவிட்டன.

     கொண்டாட்டம் முடிந்துவிட்டது. சிறுவர்களை அணிவகுத்து நிற்கச் செய்தார் தலைமையாசிரியர். அப்போது அவர் திடீரெனத் திருவேங்கடத்தை நினைத்தார். சுற்றிச் சுற்றிப் பார்த்தார். மற்ற ஆசிரியர்களைக் கேட்டார். தெருப்பிள்ளைகளைக் கேட்டார். ஒவ்வொருவரும் மற்றவரின் முகங்களை நோக்கி நோக்கித் திகைக்கலாயினர். தலைமை ஆசிரியரின் கண்முன்னே பல காட்சிகள் வந்து நின்றன. “வாத்தியாரே! பையனைப் பார்த்துக் கொள்ளுங்கள், அவன் குழந்தை; ஒன்றும் அறியாதவன்; வீடு வந்து சேரும் வரையில் உங்கள் பொறுப்பு. அப்படியானால் அழைத்துக் கொண்டு போகலாம்” என்ற ஒலிகள் அவருடைய செவியில் கேட்டன. “பெரியம்மா! நாங்கள் பார்த்துக் கொள்வோம்” என்று தேறுதல் சொன்னதையும் நினைத்தார்; திடுக்கிட்டார்; திகைத்தார். மற்ற ஆசிரியர்களைப் பார்த்து, “நீங்கள் இவர்களை ஒருவரையும் விடாமல் அழைத்துக் கொண்டு வாருங்கள். நான் முன்னே பள்ளிக்கூடத்திற்குப் போகிறேன்” என்று சொல்லி விரைந்தார்.

     தெருவினுள் நுழையுமுன் பேரனை அழைக்க வந்த பாட்டியார் தெருமுனையில் நிற்பதைக் கண்டார். “வாத்தியாரே பையன் எங்கே?” என்று பாட்டியார் அலறுவதற்கு முன், “பையன் வீட்டுக்கு வந்துவிட்டானா” என்று தலைமை ஆசிரியர் கேட்டுவிட்டார். “இல்லையே” என்றார் அம்மையார். “எங்கே போயிருப்பான்?” என்றார் ஆசிரியர். “எங்கே அய்யா! எங்கே அய்யா விட்டுவிட்டீர்கள்?” என்று கதறினார் அம்மையார். கலங்கினார் ஆசிரியர்.

     ஆசிரியர் அங்கேயே திகைத்து நிற்பதும் தெரியாமல் அம்மையார் கடைத்தெரு வழியாகப் பறந்தார். சுற்றிலும் பார்வை ஓடிற்று. “எங்கேடா போய்விட்டாய், கண்ணே” என்று கதறிவிட்டு வெளியே சென்றார். அவருடைய குரல் ஒலித்துக் கொண்டே நடுங்கிற்று. மீண்டும் வந்தார். வீட்டினுள் புகுந்து, “அம்மாக்கண்ணு? பையன் இல்லையாமே” என்று அலறினார். பாட்டியார், அன்னையார், தமக்கையார் எல்லாரும் மூலை முடுக்கெல்லாம் விளக்குக் கொண்டு தேடத் தொடங்கினார்கள்.

    தலைமையாசிரியர் பொறுப்பை உணர்ந்து தக்க ஏற்பாடுகளை விரைந்து செய்தார். முன்னே சென்று போலீசில் எழுதி வைத்துவிட்டு மற்ற ஆசிரியர்களை ஏவி ஊரெல்லாம் தேடச் செய்தார். பாட்டியாரிடம் மறுபடியும் எதிர்ப்பட்டார்; “பெரியம்மா! உங்கள் பேரனைத் தேடிக் கொண்டு வந்து வீடு சேர்க்காமல், நான் சாப்பிடுவதில்லை. நாள் எத்தனை ஆனாலும் ஆகட்டும்” என்றார். “அப்போதே சொன்னேனே அய்யா! வாத்தியார் என்று நம்பி அனுப்பினேனே அய்யா! தவமிருந்து பெற்றேனே அய்யா! குழந்தையை அனுப்பிவிட்டேனே அய்யா! எங்கே போய்விட்டானோ! குழந்தை எப்படி ஏமாந்துவிட்டானோ அய்யா! எங்கே கலங்குகிறானோ! அப்போதே சொன்னேனே அய்யா!” என்று அலறியதைக் கேட்ட தலைமையாசிரியர் கண்ணீர் வடித்தார்.

     மீண்டும் போலீசாரிடம் சென்றார்; எதிரே நாய்க்கன்பட்டி மணியக்காரர் கையில் பிடித்த விளக்கையும் பின்னே வருபவரின் தோள்மேல் உறங்கும் சிறுவனையும் கண்டார். பெருமூச்சு விட்டு நின்றார். “திருவேங்கடம்” என்றார்.

     இது ஒரு கதை. இந்தக் கதையை என்மேல் ஏற்றிச் சொல்வார்கள் என்னுடைய பாட்டியாரும் அன்னையாரும். என்னுடைய இளமையிலேயே அடிக்கடி இந்தக் கதையைச் சொல்வார்கள். நான் தான் அப்படி ஓடிப்போன பையன் என்று அவர்கள் சொல்லும்போதெல்லாம் எனக்குச் சினம் எழும்; வெட்கமும் வருத்தும். இதை எத்தனை நாள் பொறுத்திருப்பேன்? சில நாட்களில் ஒரே வெறுப்பாய், கதை சொன்ன பாட்டியாரிடமும், அன்னையாரிடமும் பேசாமல் இருந்துவிடுவேன். என்னுடைய பெரிய தமக்கை இந்தக் கதையைச் சொல்லி என்னைக் கேலி செய்தது எனக்கு நினைவு இல்லை. அந்த அருமைத் தமக்கை எனக்கு நல்ல நினைவு நிலைக்கும் முன்பே என் எட்டாம் வயதில் காலமானார். சிறிய தமக்கை என்றோ ஒரு நாள் யாருடனாவது இதைப் பேசிக் கொண்டிருக்கக் கேட்டாலும் சினம் கொண்டு போராடி வந்தேன்.

     இந்தக் கதையும் கலக்கமும் வீட்டளவில் நிற்கவில்லை. மூன்றாவது நான்காவது வகுப்புகளில் படிக்கும்போதெல்லாம் அந்தத் தலைமையாசிரியரைக் காணும் வேளைகளில் என் உள்ளத்தே போராட்டம் நிகழும். அவருடைய பார்வையோ, கையோ, கையில் இருந்த மொக்கைப் பிரம்போ என் கலக்கத்திற்குக் காரணம் அல்ல.

     என் மீது தவறு காணாமல் என் ஒழுங்கையும் படிப்பையும் தலைமையாசிரியர் போற்றும்போது என் பெயரைச் சொல்லி அழைப்பார். என்னிடம் பாடத்திலோ ஒழுங்கிலோ குறை கண்டபோதோ, அல்லது என்னை எள்ளி நகையாட வேண்டும் என்று அவருக்குத் தோன்றியபோதோ அவர் என் பெயரைச் சொல்லி அழைப்பதில்லை. பெயரைச் சொல்லாமல் குறும்பு செய்தாலும் கவலைப்பட்டிருக்க மாட்டேன். வேறு குறும்புப் பெயர்களைக் கொண்டு எள்ளினாலும் ஏங்கியிருக்க மாட்டேன். ஆனால் என் கலக்கத்திற்குக் காரணம் ஒன்றே! அது தான் அந்தக் கதை. கதையை என் பாட்டியார், அன்னையார் போல முழுதும் சொன்னாலும் அவ்வளவு கவலை இருந்திருக்காது. ஆனால் கதை முழுமைக்கும் ஒரு தலைப்புக் கொடுப்பது போல் என்னை அவர் அழைத்தது தான் என் மனத்தை நோகச் செய்தது. அவர் என்னை “நாய்க்கன்பட்டியான்” என்று அழைத்தபோது எல்லாம் நான் அலமந்தேன்.

     ஆசிரியர் என்னைவிட வலியவர். அவர் மீது சினம் கொள்ள எனக்கு வலிமை இல்லாமல் போயிற்று. ஆனால் என் மனம் வாளா இருப்பதில்லை. வீட்டிற்கு வந்ததும் அவ்வளவு சினத்தையும் பாட்டியாரிடம் காட்டுவேன். “நீ இப்படிச் சொன்ன கதை வாத்தியாருக்கும் யாரோ போய்ச் சொல்லிவிட்டார்கள். திருட்டுப் பையன் யாரோ போய்ச் சொல்லிவிட்டான். அந்தக் கதையைக் கேட்டுக்கொண்டு அவரும் என்னைக் கேலி செய்கிறார். நான் இனிமேல் பள்ளிக்கூடம் போக மாட்டேன்” என்று உடனே மட்டம் போடுவேன்.

     இந்தத் தொல்லையைத் தவிர்க்க வேண்டும் என்று எண்ணிப் பாட்டியார் தலைமையாசிரியரிடம் ஒருநாள் சென்று “பையனை இனிமேல் அப்படி அழைக்க வேண்டா. அவன் அதனாலேயே கவலைப்பட்டு மெலிந்து துரும்பாய்ப் போகிறான்” என்று சொன்னதாகத் தெரிந்தது.

     இவ்வளவும் பழங்கதை. இதுவும் என் நினைவில் இல்லை. இதையும் பிற்காலத்தில் என்னுடைய பாட்டியாரே சொன்னார். பேச்சுவன்மை மிக்க அவர் இதையும் கற்பனையாகப் படைத்து மொழிந்திருக்கலாம் என்று எண்ணினேன்.

     என்னுடைய தமக்கையையும் பாட்டியார் வேடிக்கையாக அழவைப்பது உண்டு. “உன்னைக் கருவேப்பிலைக்காரியிடம் காலணாவிற்கு வாங்கினேன். ஒரு நாள் அவள் குழந்தையாக இருந்த உன்னை முதுகில் கட்டிக் கொண்டு வந்தாள். காலணா கொடுத்தேன். அதற்காக அவள் உன்னைக் கொடுத்துவிட்டுப் போய்விட்டாள். மறுபடியும் அவள் எப்போதாவது வந்து கேட்டால் உன்னைக் கொடுத்து விடுவேன். நீ அவள் பின்னே போக வேண்டும். அவள் தான் உன்னைப் பெற்ற தாய்” என்று தங்கையிடம் பாட்டி சொல்லுவார். தங்கை கண்ணீர் விடும் வரையில் போராட்டத்தை வளர்த்து, “இல்லை, இல்லை, கருவேப்பிலைக்காரி வந்தால் தெரு வழியே சேர்க்காமல் துரத்தியடிக்கலாம்” என்று தேறுதல் சொல்லிக் கண்ணீரைத் துடைப்பார்.

     தங்கையைப் பற்றி இவ்வாறு கதை சொல்லி ஏமாற்றும் போது எனக்கு ஒரு வகையான விடுதலை கிடைத்தது போல் மனம் மகிழும். என் கதையும் இப்படிப்பட்ட பொய்தான் என்று ஆறுதல் பெறுவேன்.

     தங்கைக்கும் இந்த மனம் உண்டு. அவள் தன் கதையை மறந்து என் கதையைக் கேட்பாள். அப்போது பாட்டியார் “அண்ணனா? அவனை நாய்க்கன்பட்டியில் வாங்கினோம். இதனால் தான் அவன் ஒரே கருப்பாக இருக்கிறான் பார். அங்கேதான் அவன் பாலும் பழமும் சாப்பிட்டு வளர்ந்தான். ஒரு நாள் தோள் மீது தூக்கிக் கொண்டு வந்து விற்று விட்டுப் போனார்கள். நாங்கள் விலைக்கு வாங்கியபோது வாத்தியாரும் இருந்தார்” என்று சொல்லுவார். இதைக் கேட்ட தங்கை துள்ளி மகிழ்வாள். எனக்கு சிறிது வருத்தமும் ஏற்படும். தங்கை மேல் சினமும் உண்டாகும்.

     ஒரு நாள் தங்கையும் நானும் ஒருவரை ஒருவர் எள்ளிப் பேசுவதில்லை என்றும், நான் நாய்க்கன்பட்டியான் அல்ல என்றும், அவள் கருவேப்பிலைக்காரி மகள் அல்ல என்றும் உடன்படிக்கை செய்து கொண்டோ ம். அன்று பாட்டியாரின் சூழ்ச்சி ஒன்றும் பலிக்கவில்லை. “எங்கள் கதை பொய். அந்தக் கதையெல்லாம் வேண்டா. அக்காவை எங்கே வாங்கினாய்? அதைச் சொல்” என்று கேட்டோ ம். “அக்காவா? தவிட்டுக்காரியிடம் தவிடு கொஞ்சம் போட்டு அவளிடம் வாங்கினோம். அவள் கோணிப்பையில் அக்காவைக் குழந்தையாகப் போட்டு வைத்திருந்தாள். அதனால் தான் அக்காவின் முகமெல்லாம் புள்ளிபுள்ளியாக இருக்கிறது” என்று தமக்கையின் முகத்தில் உள்ள அம்மைத் தழும்புகளைப் போய் பார்க்கச் சொல்லுவார். உடனே ஓடிப்போய்த் தமக்கையின் முகத்தைப் பார்த்து இருவரும் சிரிப்போம். காரணம் தெரியாமல் தன்னைக் கண்டு சிரிப்பதால் தமக்கைக்கு சினம் எழும். நாங்கள் இருவரும் வெளியே ஓடிவந்து பாட்டியாரின் பக்கத்தில் நின்று கொண்டு மனமாரச் சிரிப்போம். எங்கள் கதையை மறப்பதற்குத் தமக்கையின் கதை ஒரு துணையாக இருக்கும்.

     கருவேப்பிலைக்காரியின் கதை போலவும், தவிட்டுக்காரியின் கதை போலவும், நாய்க்கன்பட்டிக் கதையும் பொய்க்கதை – புனைகதை – என்று நெடுங்காலம் எண்ணி வந்தேன்.

     ஆனால், என் நினைவில் மட்டும் மாற்ற முடியாத சில நிகழ்ச்சிகள் மறைந்தும் மறையாமல் இருந்து வந்தன.

     இருண்டவழி ஒன்று என் கண்முன் அடிக்கடி வந்து நிற்கும். அந்த வழியில் சிறு பையனாய் அலறி அலறிவெறி பிடித்தாற்போல் ஓடியதாக ஒரு நினைவு எழும். இருமருங்கும் மரச்செறிவும் நெடுந்தொலைவு அடர்ந்த இருட்செறிவும் அந்த நினைவில் நிற்கும். கைவிளக்கு ஒன்று திடீரெனத் தோன்றும். ஒரு திண்ணையில் பால் நிறைந்த கிண்ணமும் பக்கத்தே நான்கு வாழைப்பழமும் சுற்றிலும் ஆண்களும் பெண்களுமாகப் பலரும் தோன்றுதல் உண்டு. இவையெல்லாம் தோன்றும் போது இவற்றினிடையே சிறுவர்கள் அணிவகுத்த கூட்டமும் தலையில் சரிகைக் குல்லாவும் அரை குறையாகச் சிறிதளவு தோன்றி உடனே மறையும். இத்தகைய நிலையில்லாத் தோற்றங்களுக்கிடையே சிறிது நிலை பெற்றதாய்த் தோன்றுவதும் ஒன்று உண்டு என்றால், அது இருள்செறிந்த நெடுவழியில் வெறிபிடித்த ஓட்டமே ஆகும். இத்தனையும் என் நினைவில் வந்து வந்து போகும். நாளடைவில் அவற்றின் வருகையும் குறைந்து போயிற்று.

    இந்த நினைவும் பொய் என்றே துணிந்திருந்தேன். பாட்டியாரும் மற்றவர்களும் மீண்டும் மீண்டும் சொன்ன நாய்க்கன்பட்டிக் கதையே இந்த நினைவை வளர்த்துப் பதிய வைத்துவிட்டது என்று முடிவாகக் கருதினேன். அரசிளங்குமரனை அடிக்கடி ஆண்டி ஆண்டி என்று கூறிக் கூறி ஆண்டியாக்கிவிடலாம் என்று ஒருநாள் உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு ஆசிரியர் கூறினார். குளவி புழுக்களைப் பிடித்துக் கொண்டு போய்க் குளவியாக்கிவிடுவதாகச் சொல்லி அதனை விளக்குவதற்காக அரசிளங்குமரனுடைய கதையைச் சொன்னார். என் கதையும் இப்படித்தான் ஆய்விட்டது என எண்ணினேன். பாட்டியாரும் மற்றவர்களும் அடிக்கடி ஓடிப்போன பையன் ஓடிப்போன பையன் என்று சொல்லிச் சொல்லி, என் நினைவு இவ்வாறு மாறிவிட்டிருக்கலாம் என எண்ணினேன். எனவே இருள் செறிந்த நெடுவழியும் பொய் நினைவே, அலறி ஓடிய ஓட்டமும் பொய் நினைவே என்று தெளிந்தேன்.

     நான் பத்தாவது படித்துக் கொண்டிருந்த போது தொடக்கப்பள்ளியிலிருந்து தலைமையாசிரியர் எதிர்பாராமல் நான் இருந்த வகுப்பிற்கு வந்தார். என் வகுப்பில் அப்போது கற்பித்துக் கொண்டிருந்தவர் உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர். அவரைக் காணவேண்டும் என்றே அவர் அங்கே வந்தார், கண்டு பேசினார். வகுப்பு முடியும் மணி அடித்தது. அப்போது அவர் என்னைப் பார்த்ததும், “என்ன நாயக்கன்பட்டியான்!” என்றார். என்முகம் சுண்டைக் காயாய்ச் சுருங்கிற்று. அவரோடு பேசுவதற்கு வெறுத்தோ அஞ்சியோ பின்வாங்கினேன். உடன் வந்த மாணவர் இருவர் “என்னடா, அவர் உன்னை அப்படி அழைக்கிறார்?” என்றனர். இன்னொருவன் “நாய்க்கன்பட்டியான் என்னப்பா” என்றான். மற்றொருவன், “உங்கள் ஊரா அது? நாயக்கன்பட்டி எனக்குத் தெரியுமே! எந்தத் தெரு?” என்று கேட்டான். நான் தப்பித்துக் கொள்ள வழி இல்லாமல் திகைத்தேன். பிறகு ஒரு பொய் கூறத் துணிவு பிறந்தது. என் மூளையில் தோன்றிய பொய்யை வாயார வாழ்த்தினேன். மாணவ நண்பர்களைத் தலைநிமிர்ந்து பார்த்து ஒரு கோணல் சிரிப்புச் சிரித்தேன். “அவருக்கு நினைவு சரியாக இல்லை போல் தெரிகிறது. யாரையோ பார்த்து என்னவோ பேசுகிறார். அவருடைய மூளையை ஆராய்ச்சி செய்ய வேண்டியது தான்” என்றேன். மாணவர்கள் என்னோடு சேர்ந்து சிரித்தார்கள். அன்றைக்கு அந்த ஊரையும் பேரையும் மறந்தார்கள்.

     ஆனால் என் உள்ளத்தில் மட்டும் கவலை இருந்து வந்தது. வெளியே நடந்தேன். உள்ளே நைந்தேன். வீட்டிற்கு சென்றதும் வாடியிருந்தேன். பாட்டியார் என் வாட்டம் உணர்ந்து காரணம் கேட்டார். நான் வாய் திறக்கவில்லை. “படிப்பு படிப்பு என்று நாளுக்கு நாள் பையன் கவலைப்படுகிறான்; கரைந்து போகிறான். இன்னும் எழெட்டு மாதத்தில் ஒழிந்து போய்விடும் இந்தப் படிப்பு. வெள்ளைக் காகிதத்தையும் கருப்பு எழுத்தையும் ஓயாமல் பார்த்துப் பார்த்து வாடிப் போகிறான்” என்று சொல்லி வருந்தினார். அன்று முதல் என்னை வாரத்திற்கு இருமுறை தவறாமல் எண்ணெய் தேய்த்துக் குளிக்கச் செய்தார். உண்ணும் போது நெய்யும் தயிரும் மிகுதியாகக் கிடைத்தன. உறங்குவதற்கு முன் குடிக்கப் பாலும் மிகுதியாகக் கிடைத்தது. அடுத்த வாரத்தில் வெண்ணிறப் பசு ஒன்று வீட்டு வாயிலில் வந்து நின்றது. பாலைக் கண்டால் எனக்கு வெறுப்பு வரும் வரையில் என்னை விடவில்லை.

     பள்ளிப்படிப்பு முடிந்தது தொழில் நிலையம் என்னை வரவேற்றது. திருமணப் பேச்சும் முயற்சியும் வளர்ந்தன. பாட்டியாரை எதிர்த்துப் புரட்சி செய்யும் முயற்சியும் என்னிடம் வளர்ந்தது. ஆயினும், அவர் என்னைப் பொறுப்புணர்ந்த மனிதன் என்று எண்ணாமல், ஒன்றும் அறியாக் குழந்தை என்றே எண்ணி வந்தார். எனக்கோ அது பிடிக்கவில்லை.

     யாராவது நண்பர்கள் என்னிடம் வந்து பேசிக் கொண்டிருக்கும்போது, பாட்டியாரும் என் அருகே வந்து உட்கார்ந்து கொண்டு பேச்சில் தலையிடுவார். “பையனுக்குப் பேசக்கூடத் தெரியாது. யார் யாரோ வந்து ஏமாற்றுவார்கள். நானும் போய்க் கவனித்துத் துணையாகப் பேச வேண்டும்” என்று அந்த அன்பு மனம் எண்ணியது. ஆனால், எனக்கோ அது பிடிக்கவில்லை.

     காலையில் வீட்டை விட்டுத் தொழில் நிலையத்திற்குப் புறப்படும்போது, “அடே அப்பா! பொழுதுபோவதற்குள் வீட்டுக்கு வந்துவிடு அப்பா” என்று சொல்லி ஏழடி வந்து வழியனுப்புவார். “இருளைக் கண்டால் பையன் பயப்படுவான்” என்று அந்த அன்பு மனம் உருகியது. ஆனால் எனக்கோ அது பிடிக்கவில்லை.

     மாலையில் விளக்கு வைத்திடும் நேரத்தில் வீட்டிற்கு நான் திரும்பி வரவில்லையானால், பாட்டியாரின் கால்கள் வீட்டில் நிற்பதில்லை; பரபர என்று நடந்து தெரு முனையில் திரிந்து கொண்டிருக்கும். “பையன் இன்னும் வரவில்லையே! உடம்பு நல்லபடி இல்லையா? எங்காவது சோர்ந்து உட்கார்ந்துவிட்டானா? போய் வரலாமா?” என்று அந்த அன்பு நெஞ்சம் அலையும். ஆனால் எனக்கோ அது பிடிக்கவில்லை.

     ஒருநாள் நான் ஏழரை மணிக்கு வீடு திரும்ப நேர்ந்தது. நண்பர்களோடு பேசிக் கொண்டே புகை வண்டி நிலையத்தில் நேரத்தைப் போக்கினேன். “நேரமாயிற்று என்று அந்தக் கிழம் தேடிக் கொண்டிருக்கும். சொன்னாலும் கேட்டுத் தொலைப்பதில்லை” என்று மனதிற்குள் எண்ணி, வெளியே நண்பர்களுக்கு, “எனக்கு உடம்பு நன்றாக இல்லை. பசியாகவும் இருக்கிறது. நான் மட்டும் போகிறேன்” என்று சொல்லி விடைபெற்று விரைந்தேன். எதிரே அந்த அன்புருவம் வந்து கொண்டிருந்ததைப் பார்த்து முதலில் மனம் உருகினேன். பிறகு ஒருவாறு வெறுப்புக்கொண்டு, சின முற்றவன் போல் நடித்து, “ஏன் அம்மா? நீ ஏன் வரவேண்டும்? நான் என்ன சின்ன குழந்தையா? உன் தொல்லைக்கு பயந்தே எங்கயாவது வெளியூருக்குப் போய்க் குடும்பத்தார் இல்லாமல் வாழப்போகிறேன். நீ உன் பாட்டுக்கு வீட்டில் கிடப்பது தானே? உன்னால் எனக்கு அவமானமாகவும் இருக்கிறது. பள்ளிக்கூடத்தில் படிக்கும் போதும் இப்படித்தான்? அப்போதாவது பிள்ளையார் பூசை செய்ய வேண்டும் என்று உயிரை எடுத்தாய்; இப்போது என்ன இருக்கிறது; ஏன் தேடிக் கொண்டு வர வேண்டும்?” என்று ஆத்திரத்தைக் கொட்டினேன். “நேரம் ஆய்விட்டதே அப்பா” என்பதையே அந்த அன்புருவம் திருப்பித் திருப்பி விடையாக மொழிந்தது.

     நான் வளர்ந்து இருபதாண்டு இளைஞன் ஆனேன்; பாட்டியாரும் வளர்ந்து அறுபத்தைந்தாண்டு கிழவி ஆனார். நரை மட்டும் இருந்த நிலை மாறித் திரையும் வந்துற்றது. நடையில் தளர்ச்சியும் பேச்சில் சோர்வும் வந்துற்றன. என் மனம் வளர்ந்தது. ஆனால் பாட்டியாரின் மனம் வளரவில்லை. அன்பு மனத்திற்கு வளர்ச்சி என்பதே இல்லைபோல் தெரிகிறது. பாட்டியாருக்கு நான் இன்னும் ஆறாண்டுள்ள சிறுவனாகவே இருந்தேன். இருபதாண்டு நிரம்பியும் அவருக்குச் சிறு பையனாகவே தோன்றினேன். அன்று இரவு தேடி வந்ததன் காரணம் அதுதான். நான் அடிக்கடி மறந்து விட்ட நாய்க்கன்பட்டிக் கதையை அவர் மறக்கவில்லை. புகைவண்டி நிலையத்தில் பேசிக் கொண்டிருந்து திரும்பிய அன்றிரவு அந்தப் பாட்டியாரின் மனம் இருண்டவழியையும் பொழுது போனதையும் நினைத்தது. என்னைக் கண்டதும், “நேரம் ஆய்விட்டது! இருட்டிப் போய்விட்டது அப்பா” என்று பலமுறை எனக்கு விடையாகச் சொன்ன காரணமும் அதுதான். அன்பு மனத்திற்கு வளர்ச்சி இல்லை என்பது போலவே, மறப்பும் இல்லை போல் தெரிகிறது.

     அந்த ஊரை விட்டும் வெளியேற நேர்ந்தது. ஊதியம் மிக்க தொழில் வெளியூரில் கிடைத்தமையால் அவ்வாறு வெளியேற நேர்ந்தது. ஆடி ஓடின இடங்களையும், அரட்டையடித்த இடங்களையும், அமர்ந்து மகிழ்ந்த இடங்களநயும், பலநாள் கண்ட காட்சிகளையும், பலவகையாக நிகழ்ந்த நிகழ்ச்சிகளையும் எண்ணி எண்ணி உருகினேன். என்னைப் பெற்று வளர்த்துப் பாராட்டிய அந்த ஊர், அருமையான அன்னை போல் என் உள்ளத்தில் தோன்றியது. கலங்கினேன்; உருகினேன்; கண்ணீர் வடித்தேன்; நண்பர்கள் காணாதபடி கண்களைத் துடைத்தேன். புகை வண்டி நகர்ந்தது; கண்ணீர் பெருக்கெடுத்தது; உள்ளம் நைந்தது.

     ஓராண்டு கழிந்தபின் அந்த ஊருக்குச் சென்று நண்பர்களைக் காணப் புறப்பட்டேன். புகைவண்டி நிலையத்தில் நின்றதும் அந்தக் கல்தரையும், நிலையத்தை அடுத்துள்ள வெளியில் தண்டவாள வேலியும், அதனுள் நின்ற மாட்டு வண்டிகளும், என் முன் தோன்றிய சாலையும், சாலையின் மரங்களும், மரங்களின் நிழலில் நின்ற நெடு மாடிகளும் என்னை வரவேற்றன. தலை நிமிர்ந்து நோக்கினேன். அந்த நீலவானம் கண்டு நெடுநாள் ஆனதாக எனக்குத் தோன்றியது. தொலைவில் தெரிந்த நீலமலை என் பழைய நட்பை மறக்கவில்லை. நீர் காணாத பழைய ஏரி என் பிரிவாற்றாப் பேச்சுகளை மறக்கவில்லை. சாலையில் ஊர்ந்த எறும்புகளும் என் உள்ளத்திற்கு உவகை அளித்தன. அங்கும் இங்கும் காணப்பட்ட நாயும் கழுதையும் கூட எனக்குப் பழைய நண்பர்களைக் கண்டாற் போன்ற களிப்பைத் தந்தன.

    பழைய தலைமையாசிரியர் என் கண்ணில் தென்பட்டார். அது யாரும் இல்லாத இடமாக இருந்திருந்தால் அவரைக் கண்டவுடன் நான் குதித்தோடியிருப்பேன். ஆனால் கடைத்தெருவாக இருந்தமையாலும் பலர் சூழ இருந்தமையாலும் நடந்தே சென்றேன். ஆயினும் என் உள்ளக்களிப்பு என் குறுமொழியில் வெளிப்பட்டது. “சார்! நினைவிருக்கிறதா! உங்களிடம் படித்தவன் திருவேங்கடம்” என்றேன்.

     “எப்போது வந்தாய்? எங்கே இருக்கிறாய்? நினைவு இல்லாமல் போகுமா?” என்று அவர் தம் மீசையை நீவிவிட்டு அன்போடு பார்த்தார், கனைத்தார், தோள்மேல் கை வைத்தார்.

     “உங்களிடம் தராசுக் கணக்கு ஒரு நாள் கற்றுக் கொண்டது நினைவு இருக்கிறது. கனமான தட்டுத்தான் மேலே போகும்; கனமில்லாத தட்டுத்தான் கீழே இறங்கும் என்று சொன்னேனே, அதற்கு பிரம்பால் பழுக்கப் பார்த்தீர்களே!” என்று கேட்டேன்.

     “அதெல்லாம் எனக்கு ஒன்றும் நினைவுக்கு வரவில்லை. ஆனால் உன் பாட்டியார் உன்னை அழைத்துக் கொண்டு வருவதும் பையனைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்வதும் நினைவுக்கு வருகின்றன. தவிர உன் பாட்டிக்கு நல்ல மனம் அப்பா! அன்பு என்றால் அந்த அம்மாவிடம் தான் பார்க்க வேண்டும். அது போல் நான் பார்த்ததே இல்லை. ஒரு நாள் நீ காணாமல் போய்விட்டாய். அப்பப்பா! உன் பாட்டி பட்டபாடு சொல்ல முடியாது. ‘வாத்தியார் என்று நம்பித்தானே உன்னோடு அனுப்பினேன்’ என்று என்னைச் சரியான கேள்வி கேட்டார்கள் அந்த அம்மா, இப்போது எப்படி இருக்கிறார்கள்?” என்றார்.

     “வயசு ஆய்விட்டது; வலுவும் குறைந்துவிட்டது. எழுபதுக்கு ஏறக்குறைய ஆகிவிட்டது. முன்போல் அங்கே இங்கே போக முடியவில்லை” என்றேன்.

     “போதும், போதும். இவ்வளவு காலம் இருந்து உன்னை முன்னுக்குக் கொண்டு வந்தது போதும். இனிமேல் நல்லபடியே இருந்து போய்விடுவது நல்லது” என்றார். மீண்டும் சிறிது பொறுத்து, “முன்னெல்லாம் உன்னை நாயக்கன்பட்டியான் என்று கூப்பிடுவேன். உனக்கு வருத்தமாயிருக்கும். இப்போது பெரியவனாகிவிட்டாய். நல்ல நிலையில் இருக்கிறாய். கடவுள் காப்பாற்றுவார். இவ்வளவு அன்போடு பார்த்துப் பேசினாயே அதுவே போதும்” என்றார்.

     என் மனதில் பழைய கலக்கம் முழுதும் ஏற்படவில்லை. அதன் சாயல் மட்டும் புகுந்தது. நாயக்கன்பட்டிக் கதை பொய்க்கதைதானே என்று கேட்டுவிட வாயெடுத்தேன். ஆனால் காணாமல்போன நிகழ்ச்சி என்று சொன்னாரே, மெய்யாகத்தானே இருக்கும் என்று தயங்கினேன். ஒருவேளை அது வேறு நிகழ்ச்சியாக இருக்கலாம் என்று ஐயுற்றுப் பேசாமல் இருந்தேன். அவரே பேச்சை தொடர்ந்தார்.

     “எனக்கு 55 வயது ஆய்விட்டது. நானும் வேலையில் இருந்து ஓய்வு பெற்று மூன்று மாதம் ஆய்விட்டது. இங்கே ஒரு வீட்டிலும், செட்டித் தெருவில் இரண்டு வீட்டிலும் தனிப்பாடம் சொல்லிக் கொடுத்துக் காலம் கழிக்கிறேன்” என்றார். அந்தக் குரலில் துன்பவாடை கலந்துவருதலை உணர்ந்து வருந்தினேன். மனம் கசிந்து விடை பெற்றுச் சென்றேன்.

     “பாட்டியார் நல்லபடியாக இருந்து போய்விடவேண்டும்” என்று தலைமையாசிரியர் சொன்னது இன்னும் என் செவியில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அந்தச் சொல்லை நான் மறக்க முடியாது; மறக்க முடியாதபடி என் குடும்ப நிலைமை மாறிவிட்டது.

     பாட்டியார் இப்போது பயித்தியம் பிடித்துத் தன்னையும் என்னையும் மறந்திருக்கிறார். என்னை அன்போடு பார்த்த கண்கள் இப்போது எவற்றையோ சுற்றிப் பார்த்து மருள்கின்றன. எனக்காக அன்பு கொண்டு சோறும் காயும் அள்ளியிட்ட கைகள் இப்போது கண்ட இடத்தில் எல்லாம் மண்ணும் கல்லும் அள்ளுகின்றன. அன்பு மிகுதியால் இன்குரல் கொண்டு கசிந்து, ‘திருவேங்கடம்! திருவேங்கடம்!’ என்று அழைத்த வாய் இப்போது பொருளற்ற சொற்களைப் பெருக்கி எவ்வெவற்றையோ சொல்லிக் கொண்டிருக்கிறது. என்னுடைய பேச்சைக் கேட்டும் செயலைக் கண்டும் மகிழ்ந்த மனம் இப்போது எதனாலும் மகிழவில்லை; எதனாலும் அமைதி பெறவில்லை. எதையாவது எண்ணுகிறதோ, அல்லது எண்ணம் என்பதும் இல்லையோ, அறிய முடியவில்லை.

    தெருவில் திரிந்த காலம் போயிற்று; கண்டோ ர் வருந்த அங்கும் இங்கும் அலைந்த காலம் போயிற்று. இரவும் பகலும் பெருமுழக்கம் செய்த காலமும் போயிற்று. இன்று அந்த உடலுக்கும் சோர்வு வந்துவிட்டது. இருண்டதோர் அறையில் ஓர் மூலையில் குந்தித் தலை குனிந்தபடியே மணிக் கணக்காகக் கழிகிறது. நள்ளிரவில் எழுந்து பார்த்தாலும் பாட்டியாரை அதே நிலையில் காணலாம். படுத்து உறங்கிப் பல வாரங்கள் மாதங்களும் ஆகிவிட்டன. பித்தர் நிலையிலும் நாளடைவில் ஒருவகை அமைதி உண்டு என்று தெரிகிறது.

     பலர் பலவாறு பேசிக் கொள்கிறார்கள். சிலர் ஊழ்வினை என்கிறார்கள். அதில் எனக்கும் கருத்து வேறுபாடு இல்லை. நான் நினைக்கும் ஊழ் பெரியது; வலியது; சிறந்தது. ஆனால் அவர்கள் கூறும் ஊழோ சிறியது; மெல்லியது; இழிந்தது. போன பிறவியில் யாரையோ இப்படி இரவும் பகலும் உட்கார வைத்து உறக்கமும் இல்லாமல் இந்த அம்மையார் வதைத்தாராம்; அதனால் இந்தப் பிறவியில் வதைகிறாராம். இப்படி அவர்கள் எடுத்துரைக்கும்போது என் வயிறெல்லாம் எரியும். இப்படியும் கடவுள் ஒறுக்கும் முறை உண்டா? உண்டானால் அந்தக் கடவுளும் கடவுளா? அதை ஒரு பிசாசு என்று அல்லவா கூறவேண்டும்? குற்றம் செய்தவரை ஒறுத்தல் எங்கும் காண்கிறோம். குற்றம் உணர்ந்து திருந்தவேண்டும் என்பதே ஒறுத்தலின் நோக்கம். செய்த குற்றத்தை உணர்த்தவும் உணர்த்தாமல், திருந்தும் வழியை அமைக்கவும் அமைக்காமல், ஒறுக்கும் முறை கடவுளின் ஆட்சியில்தான் இருக்குமா?

     திருப்பதியில் நான் பிறப்பதற்காகச் செய்துகொண்ட வேண்டுகோளை – பிரார்த்தனையை – நிறைவேற்றவில்லை. அதனால் ஏழுமலையான் சினம் கொண்டு அறிவைக் கெடுத்தான் என்று சிலர் சொல்லும்போது என் உள்ளம் கொதிக்கும். மூட்டி வந்த அடுப்பை மீண்டும் சென்று எடுத்துவைப்பதால் அந்தக் கடவுளுக்கு என்ன மகிழ்ச்சி? உண்மையன்புக்கு மகிழாமல் வெறுஞ் சடங்கிற்கு மகிழ்வதாகக் கடவுளின்மேல் சிறுமை ஏற்றி வெகுளியும் ஏற்றிப் பழிக்கலாமா என எண்ணினேன். ஏழுமலையான் அருள் சிறுமை அறியாதது எனப் போற்றினேன்.

     நண்பர் ஒருவர் மட்டும் ஒருநாள் வந்து கண்டு உண்மையை அஞ்சாமல் எடுத்துரைத்தார். அவர் பொதுவுடைமைக் கொள்கை உடையவர். எந்நேரமும் புது உலகத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார். பாட்டியார் புகையிலை அபின் முதலிய தூண்டுப் பொருள்களை உட்கொண்டது பழக்கமோ என்று கேட்டார். “அபின் முதலியவற்றை இந்தக் குடும்பத்தில் கேட்கலாமா?” என்றேன். பிறகு, “புகையிலையை உட்கொள்ளாதவர் ஒருவரும் இல்லை. என்னை ஆராய்ந்து பார்த்தாலும் தெரியும். எனக்குப் பீடி சிகரெட் முதலியவற்றைக் கண்டாலும் ஆகாது. ஆனால் நானும் அவற்றின் பயனை உட்கொள்கிறேன். எப்படி என்று கேட்பீர்கள். புகை வண்டியிலே ஏறிப்போகும்போது என் பெட்டியில் எத்தனையோ பேர் புகை பிடிக்கிறார்கள். அவர்கள் விடும் புகையில் ஒரு பங்கு என் மூக்கின் வழியாக இரத்தத்தில் கலக்கவில்லையா? காசு பணம் செலவில்லாமல் நானும் புகையிலையின் பயனை அடையவில்லையா? சினிமாவிற்குப் போய்ப் பார்க்கும் போது என்னைச் சுற்றிலும் எத்தனையோ பேர் எனக்கு இந்த உதவி செய்கிறார்கள். நெருங்கிப் பழகும் நண்பர்களும் செய்கிறார்கள்” என்றேன்; நண்பர் நகைத்துக்கொண்டே, “நான் அந்த உதவியை இதுவரையில் செய்ததில்லை. ஆனால் நானும் உதவி பெற்றுக் கொண்டது உண்டு,” என்றார். புகையிலையை நினைத்தவுடன் என் மூளை சுறுசுறுப்புப் பெற்று வேலை செய்தபடியால், “நீங்கள் பேசும் பொதுவுடைமை வெறும் பேச்சு, புகை பிடிக்கும் நண்பர்களே அதைச் செயலில் காட்டுகிறார்கள். தாங்கள் பிடிக்கும் புகையை அனைவர்க்கும் பரப்பிப் பொதுவாக்குகிறார்கள். அவர்களே தங்கள் பொருள் செலவாவதையும் பொருட்படுத்தாமல், பொதுவுடைமைக் கொள்கையைப் போற்றுகிறார்கள்” என்றேன்.

     பாட்டியார் வெற்றிலை போடும்போது புகையிலையும் சேர்த்துக் கொள்வார்கள். இரண்டு இலைக்கும் உள்ள உறவு நம் நாடு அறிந்த உறவு அல்லவா? இந்தப் பைத்தியத்திற்கு இதுதான் காரணம் என்றார் நண்பர். என்னால் நம்ப முடியவில்லை. “புகையிலையில் நஞ்சு இருப்பதுபோல் காப்பி முதலிய எல்லாவற்றிலும் உள்ளதே! காப்பி முதலியவை உலகமெல்லாம் இருக்கின்றன! உலகத்தார் எல்லாரும் பைத்தியக்காரரா!” எனக் கேட்டேன்.

    “உடம்பின் அழுக்கு வெளிப்பட எத்தனையோ சாய்க்கடைகள் உண்டு. அவர்கள் படைப்பிலே அமைந்தவைகள். அழுக்கு மிகுந்துவிட்டால் புதிய சாய்க்கடையும் ஏற்படும். அதற்குத்தான் நோய் என்று பெயர். காய்ச்சல் முதலியவை சில நாள் வரைக்கும் வந்து மறைந்துவிடும் சாய்க்கடைகள். கண்ணோய் முதலியவைகளும் அப்படியே. தீராத நோய்களான எலும்புருக்கி காசம் முதலியவைகள் அழியாத சாய்க்கடைகள். குட்டமும் அப்படியே. கீல்வாயு முதலியனவும் அப்படியே. உடம்பு தளர்ந்த பிறகு ஏதாவதொரு நிலையான புதுச் சாய்க்கடை – புது நோய் இருப்பதே நல்லதாகத் தெரிகிறது. இல்லையானால் புகையிலை முதலியனவற்றின் நஞ்சு தலைக்கு எட்டி மூளை நரம்புகளைத் தாக்கிப் பைத்தியமாக்கிவிடும். புகையிலையும் காப்பியும் வழக்கமாக நாள்தோறும் வேலை செய்து தூண்டிய இடம் மூளைதான். அதனால் தான் சுறுசுறுப்பும் ஊக்கமும் உண்டாக்கும் பெருமை அவைகளுக்குக் கிடைத்துள்ளது. உடல் தளர்ந்த பிறகும் மூளையைத் தாக்கி வேலை செய்கின்றன. அழுக்கும் நஞ்சும் அங்கே நிற்கின்றன. மூளை கெடுவதால் பைத்தியம் ஆகிறது. காலிலோ வயிற்றிலோ மார்பிலோ ஏதாவது நோய் தீராமல் நின்றால் அழுக்கும் நஞ்சும் அங்கே நின்றுபோய்விடும். தலைக்கு ஏறாமல் நின்றுவிட்டால் பைத்தியம் வராது. சாகும் நிலைமையில் குடலில் பேதி முதலியவை இருந்தால் நல்ல நினைவு இருப்பது தெரியவில்லையா? அவர்கள் மூளை கெடாமல் நினைவு தவறாமல் பேசிக்கொண்டு சாகிறார்களே, அதற்கும் அதுதான் காரணம்?” என்றார். நண்பர் அப்போது சொன்ன காரணம் பொருத்தமாகப் படவில்லை. நாளடைவில் மெல்ல மெல்ல நம்பிக்கை ஏற்பட்டுவருகிறது. எனக்கு அடிக்கடி வயிற்றுக் கோளாறும் கீல்வாயும் வருவதுபோல் தெரிவதால் என்னுடைய முதுமையில் பைத்தியம் பிடிக்காது என்னும் நம்பிக்கை இருக்கிறது.

     நண்பர் இன்னும் ஒன்று கூறினார்: “பைத்தியம் பிடித்தவருக்கு கவலை என்பதே இல்லை. அந்தப் பைத்தியத்தைச் சுற்றியிருப்பவர்களுக்கே கவலை. இப்போது உங்கள் பாட்டிக்கு இன்பமும் இல்லை; துன்பமும் இல்லை. இரண்டும் அற்ற நடுநிலை இது. ஷேக்ஸ்பியர் எழுதிய ஒரு நாடகத்தில் லியர் என்னும் அரசனுக்குப் பைத்தியம் பிடிக்கிறது. அதைக் கண்ட மற்றோர் அரசன் பொறாமைப்படுகிறான். இப்படிப் பைத்தியம் பிடித்தால் என் கவலையெல்லாம் பறந்துபோகும் என்று பொறாமைப்படுகிறான்” என்று அந்த அடிகளை ஒப்புவித்தார். அதன் உண்மை மட்டும் எனக்கு அப்போதே தெளிவாகிவிட்டது.

     நண்பர் தொடர்ந்து, “ஷேக்ஸ்பியர் போன்ற புலவர்களே வாழ்க்கையில் உண்மையைத் தெளிவாக எடுத்துக் காட்ட வல்லவர்கள். மற்றவர்கள் அங்கொன்றும் இங்கொன்றும் பார்க்கிறார்கள். அதனால் அடிப்படையான உண்மைகள் அவர்களுக்கு விளங்குவதில்லை. ஆனால் சிறந்த புலவர்கள் ஆழ்ந்த பார்வை பார்க்கிறார்கள். எல்லாவற்றையும் ஆழ்ந்து துருவிப் பார்க்கிறார்கள். அவர்களுக்கு விளங்காத உண்மையே இல்லை” என்றார்.

     சிறிது நேரம் கழித்து, நண்பர் என்னை நோக்கி, “புது உலகத்தில் பைத்தியத்திற்கு வீட்டில் இடம் இருக்காது. இப்போது வீட்டில் விடுவதால், ஒரு பைத்தியம் போய் வீடெல்லாம் பைத்தியக்காரராக மாறிவிடுகிறார்கள். நூறு குழந்தைகளை வைத்துக்கொண்டு ஒருவர் காப்பாற்றலாம். ஆனால் ஒரு பைத்தியத்தை வைத்துக்கொண்டு நூறுபேர் காப்பாற்ற முடியாது. பைத்தியத்துக்குத் தொண்டு செய்வதைப்போல் களைப்பான வேலை இல்லை. அதனால் நம்முடைய மூளையும் கெட்டுக் கோபமும் கொதிப்பும் பொங்கும். நம் உடம்பும் நாளடைவில் கெடும். பொதுவுடைமை அரசாங்கமானால் இப்படி வீட்டில் விட்டிருக்கமாட்டார்கள். இப்போதுள்ள பைத்தியக்கார நிலையம் யாரோ ஒரு சிலருக்குத்தான் பயன்படுகிறது. செல்வர் சிலர்க்குத்தான் அங்கே இடம் உண்டு. ஏழைகள் போனாலும் பயன் இல்லை; போவதற்கு இடமும் இல்லை. எதிர்காலத்தில் தொடக்கத்திலேயே பைத்தியத்தைக் குணப்படுத்த வழி தேடுவார்கள். முடியாவிட்டால், அமைதியாக உயிரைப் போக்கிவிடுவார்கள்” என்றார்.

     நான் திடுக்கிட்டுக் கலங்கி, “அப்படிப்பட்ட அரசியல் வேண்டா; அது பொதுவுடைமையா யிருந்தாலும் வேண்டா. என்ன கொடுமை! நன்றி கெட்ட உலகம்!” என்றேன்.

     “உங்கள் பக்கத்து வீட்டில் ஒரு பைத்தியம் இருந்து இரவும் பகலும் தொல்லை கொடுத்தால் என்ன செய்வீர்கள்?”

    “அவர்கள் எங்களைத் திட்டிக்கொண்டிருப்பதுபோல் நாங்கள் அவர்களைத் திட்டிக் கொண்டிருப்போம்.”

     “அப்போது துன்பம் இடையூறு முதலியவை எவ்வளவு என்று உணர்வீர்கள் அல்லவா?”

     “ஏன்? இப்போது கூட உணர்கிறோம். நாங்கள் படாததா?”

     “ஆகையால் உங்கள் பாட்டியாரால் அக்கம்பக்கத்தாருக்கும் உங்களுக்கும் எவ்வளவு துன்பம்?”

     “அதற்கு என்ன செய்யலாம்?”

     “நீங்கள் வேண்டுமானால் படலாம். காரணம் இல்லாமல் மற்றவர்கள் படுவது ஏன்? சமுதாயத்திற்கு தீங்கு செய்வது பெரிய குற்றம் அல்லவா?”

     “உண்மைதான்.”

     “உங்கள் பாட்டியார் செய்த நன்றியை மறக்க வேண்டா. ஆனால் சமுதாயம் உங்களுக்குச் செய்த நன்றியை மறக்கலாமா? சமுதாயத்தில் நன்றியில்லாமல் ஒரு குடும்பமும் தனி ஒருவனும் வாழ முடியாது என்பதை உங்களுக்குப் பலமுறை சொல்லியிருக்கிறேன்.”

     “நினைவு இருக்கிறது.”

     “இப்போது சமுதாயத்திற்கு தீங்கு செய்யலாமா? இதைவிடப் பெரிய பாவம் வேறு உண்டா?”

     “அப்படியா?”

     “ஆமாம், நீங்கள் உங்கள் முயற்சியை யெல்லாம் விழலுக்கு இறைத்த நீராய் வீணாக்குகிறீர்கள். உங்கள் தொண்டினால் – உதவியினால் பாட்டியாருக்கு எள்ளளவாவது நன்மை உண்டா? இன்ப துன்பம் உண்டா?”

     “அறிவு கலங்கியபோது இன்பம் ஏது?”

     “நீங்கள் செய்வது பயனற்ற முயற்சிதானே? கல்லுக்கும் கட்டைக்கும் நீங்கள் செய்யும் உதவியும் இந்த உதவியும் ஒன்றுதானே!”

     “அப்படித்தான் இருக்கிறது.”

     “இப்போது நீங்கள் ஏன் செய்கிறீர்கள் என்று உங்களுக்கே தெரியாது. நான் வேண்டுமானால் சொல்கிறேன். பாட்டியாரைக் காப்பாற்ற வேண்டும் என்று ஓர் எண்ணம். ஆனால் பாட்டியார் போய் நெடுநாள் ஆய்விட்டது. அவர் அணிந்திருந்த கந்தல் சொக்காய் போன்றது இந்த உடம்பு. இதைக் காப்பாற்றுகிறீர்கள். இது உங்கள் மூடநம்பிக்கை. ஆனாலும் இது உங்களுக்கு அமைதியும் திருப்தியும் அளிக்கிறது அவ்வளவுதான்.”

     “இருந்தாலும் அமைதியாக உயிரைப் போக்கச் சொன்னீர்களே!”

     “நான் உங்களை இப்போது செய்யச் சொல்லவில்லை. இப்போது செய்தால் உலகம் பழிக்கும். உலகம் ஒன்றுபட்டு உண்மை உணர்ந்து அப்படிச் செய்யும் காலம் வரும் என்று சொன்னேன். அப்போது நீங்களும் உங்கள் மூட நம்பிக்கையும் தடுக்கவே முடியாது.”

     “அப்போதுகூட உயிரைப் போக்க முடியுமா?”

     “அதற்குத்தானே அரசாங்கம் அமைப்பது? தனி மனிதன் கொலை செய்யக் கூசவேண்டும். அரசாங்கம் கூடி நன்மைக்காகக் கொலை செய்யலாம். களை எடுப்பது போன்றது அந்தச் செயல். திருவள்ளுவர் கூறவில்லையா?”

     “திருவள்ளுவர் பைத்தியத்தைப் பற்றி ஒன்றும் கூறவில்லையே!”

    “பைத்தியம் என்று குறிப்பிடவில்லை. அன்பு இல்லாதவன் பிணம் என்றார். பண்பு இல்லாதவன் மரம் என்றார். என்ன பொருள்? அரசாங்கம், பிணத்தையும் மரத்தையும் உயிர் வாழும் மக்களுக்கு இடையூறாக வைத்திருக்கக்கூடாது; புதைத்துவிட வேண்டும். கொளுத்திவிட வேண்டும் – இதுதான் பொருள். திருவள்ளுவர் மூளை கெடாத பைத்தியத்தையும் அப்படித்தான் சொல்லுகிறார். மூட நம்பிக்கை பிடித்தவர்களை அவர் தொத்துநோய் என்கிறார். “ஏவவும் செய்கலான் தான் தேறான் அவ்வுயிர் போவும் அளவுமோர் நோய்” தொத்துநோயைப் போக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை அல்லவா? ஆகையால் இவற்றைவிடப் பயனற்ற முழுப் பைத்தியத்தைக் குணப்படுத்தாமல் வைத்திருக்க இடம் கொடுக்க மாட்டார். திருவள்ளுவர் அமைச்சராக வந்தால் அப்படித்தான் செய்வார்” என்றார்.

     நண்பருடைய நீண்ட பேச்சைக் கேட்டுச் சொக்கிப் போனேன். பைத்தியக்கார நிலையத்தில் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டு அடிக்கடி போய்ப் பார்த்துக் கொண்டிருக்கலாம் என்று எண்ணி நண்பரை வழி கேட்டேன்.

     “மாதம் முப்பது ரூபாய்க்குக் குறையாமல் கட்டினால் தான் சேர்த்துக்கொள்வார்கள்” என்றார். வேறு பேச்சின்றி வாயை மூடிக் கிடந்தேன். நண்பரோ, “இப்படித்தான் படவேண்டும். பொதுவுடைமை வரும் வரையில் எவ்வளவோ பட்டாக வேண்டும். அவற்றில் இதுவும் ஒன்று. வேறு என்ன செய்வது?” என்று சொல்லிப் புறப்பட்டார்.

     “அந்தக் கிழவிக்குப் பண ஆசை, நில ஆசை உண்டு. அவற்றைப் பேரன் கையில் கொடுத்துவிட்டதால் மனம் கெட்டுவிட்டது” என்று சிலர் சொன்னார்கள். அது பாட்டியாரின் மனமும் வாழ்வும் தெரியாதவர்கள் கூறிய சொல். பேரனைப் பற்றி அவர் கொண்டிருந்த கவலையை நோக்க, நிலத்தைப் பற்றி அவர்க்குக் கவலையே இருந்ததில்லை எனலாம். பேரன்மேல் இருந்த பற்றுக் கடல் போன்றது என்றால் மண்ணிலும் பொன்னிலும் இருந்த பற்று நீர்த்துளி யளவு எனலாம். ஆனால் மனம் கெட்டது என்பது பொய். அப்படி இருந்தால், ஒரு நாளாவது பாட்டியாரின் வாய் நிலத்தைப் பற்றியும் பணத்தைப் பற்றியும் பிதற்றலாம் அல்லவா? ஒரு நாளும் அந்த வாய் அவற்றைப்பற்றிப் பேசியதே இல்லை.

     நண்பரின் பேச்சைக் கேட்டபோது எங்கள் குடும்பம் ஒரு சிறைச்சாலைபோல் இருப்பதாக உணர்ந்தேன். அந்தச் சிறைக்குள்ளே பாட்டியாரின் உடலும் அடைக்கலப்பட்டிருந்தது. என் மனமும் அடைபட்டிருந்தது. பாட்டியாரின் உடலுக்கு அந்த மண் சுவர்கள் தடையாக இருந்தன. என் மனத்திற்கோ காணாமற்போன பழங்கதை முதல் பைத்தியம் பிடித்ததற்குச் சொல்லப்படும் காரணம் வரையில் எல்லா எண்ணங்களும் தடைகளாக இருந்தன. பாட்டியாரோ சிறைக்குள் இருப்பதை உணராதபடி அறிவு கலங்கி விட்டார். அவர் வாழ்க்கை டிக் டிக் டிக் என்ற ஒலியுடன் ஓடிக்கொண்டிருக்கும் கடிகாரம்; ஆனால் முள் அசைவதில்லை; மணி காட்டுவதில்லை. அதனால் சிறைத் துன்பம் பாட்டியாருக்குத் தெரியாது. என் மனமோ ஓயாமல் உணர்ந்து துன்பப்பட்டு வந்தது. விடுதலை அறியாத சிறை என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் விடுதலை வேட்கைக்கோ அளவில்லை.

     பாட்டியார் பலநாள் மறவாமல் அடிக்கடி பேசியது வெற்றிலையைப் பற்றியும் புகையிலையைப் பற்றியுமே ஆகும். உணவு உண்டதும், “வெற்றிலையும் பாக்கும் எடுத்து வர இவ்வளவு நேரமா?” என்பார். இந்த வெற்றிலைப் பித்தை மாற்ற எவ்வளவு முயன்றும் பயன் இல்லாமல் போயிற்று. வெற்றிலையே தராமல் நிறுத்தியும் ஆயிற்று. துப்பும் இடம் தெரியாமல் கண்ட இடமெல்லாம் துப்பியதாலும், வெற்றிலை கொடுத்தாலும் அமைந்திடாமல் அலைந்திட்டதாலும் அதை நிறுத்த நேர்ந்தது. கண்பார்வை அடியோடு போய் விட்ட பிறகே இவ்வாறு நிறுத்தலாயிற்று. ஆயினும் அப்போது கூடப் பக்கத்தில் கிடைத்த காகிதத்துண்டு முதலியவற்றையோ, அவை கிடைக்காதபோது தன் புடவையைக் கிழித்துத் துண்டாக்கியோ வாயிலிட்டுக் குதப்பிக் கொண்டிருப்பார். வெற்றிலைப் பித்து அவ்வளவு மிகுதியாக நிலைத்திருந்தது. அறிவோடு இருந்தபோது காலையில் வெற்றிலை புகையிலை இரண்டு தெய்வத்தையும் தொழுது எழுவதும், இரவில் அவற்றை வணங்கியே உறங்குவதும் வழக்கமாகக் கொண்ட வாழ்க்கை அவர் வாழ்க்கை. ஆகையால் அவை அவ்வளவு ஆழமாகப் பதிந்திருந்தன. பித்துற்றபோதும் அந்த நினைவு அப்படியே இருந்தது.

     வாழ்க்கையில் பல நிகழ்ச்சிகள் மறந்து அழிந்த போதிலும் அந்தப் பித்தர் மூளையில் ஆழ்ந்த நிகழ்ச்சிகள் சில அழியாமல் இருக்கின்றன. கதிரவன் ஒளியும் அந்த ஒளி படரும் நிகழ்கால உலகமும் கண்முன் தோன்றாப் பேறு அவருக்கு இருந்தது. ஆதலால் கழிந்த சில நிகழ்ச்சிகள் கண்முன் வந்து நின்றபோது இவையே மெய்யாகவும் நாங்கள் கூறுவன எல்லாம் பொய்யாகவும் அவருக்குப்பட்டன!

     திடீரென்று ஒருநாள் விடியற்காலை பாட்டுப்பாடி நீட்டி நீட்டி அழத்தொடங்கினார். நான் சென்று காரணம் என்ன என்று கேட்டேன். “இன்றைக்குத்தான் நான் தாலி அறுப்பது. நானும் வாழ்ந்து முடிந்து போச்சே…” என்று, “முடிந்து போச்சே” என்பதையே பல்லவியாக வைத்துக் கொண்டு அழுகைப் பாட்டைத் தொடர்ந்தார். அந்த நாளை – என் பாட்டியார் தாலியறுத்த நாளை – நான் கற்பனையுலகிலேனும் காண முடியுமா என முயன்று பார்த்தேன். முடியவில்லை. ஆனால், தாலியறுப்பு நாள் இந்த நாட்டு பெண்களுக்கு எவ்வளவு துன்பம் தருவது என எண்ணிப் பார்த்து நெஞ்சம் குமைந்தேன். மற்றொரு நாள் அவ்வாறு அழுது கொண்டிருந்தபோது கேட்டதற்கு, “எங்கள் அம்மா செத்துப் போய் விட்டார்களே; இன்றைக்கு மூன்று நாள் ஆகிவிட்டதே” என்று அழுதார்.

     அழுகைப் பாட்டே அல்லாமல் நந்தனார் கீர்த்தனை முதலிய நல்ல பாட்டுகளும் அவருக்குத் தெரியும். பித்துப் பிடித்த பிறகும் பலமுறை அவற்றைக் கேட்டுக் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். ஓர் எழுத்தும் தெரியாத அந்த அம்மையார், சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய “பொன்னார் மேனியனே” என்னும் தேவாரப் பாடலை இசையோடு பாடுவார். “இதை எப்படி கற்றுக் கொண்டாய்? அம்மா!” என்று ஒரு நாள் கேட்டேன். “எங்கள் அண்ணா (தம் தந்தையார்), என்னை மடிமேல் தலை சாய்த்துப் படுக்கவைத்துக் கொண்டே கற்றுக் கொடுத்தார். அப்போது நான் சின்ன பெண். அண்ணாவுக்கு என்மேல் தான் ஆசை” என்றார். தெய்வமே! அன்பால் வளர்ந்து அன்புருவாய் வாழ்ந்து, அன்பை வளர்த்த அம்மையாருக்குப் பித்து வர வேண்டுமா?” என்று பெருமூச்சு விட்டேன். அவர் அடிக்கடி பாடும் அரைகுறையான பாட்டு ஒன்று. இலக்கணக்குறை உடையதேனும் பாட்டின் உயிர்ப் பண்பு முற்றிலும் உடையது.

     நாராயணா என்ற நல்ல மருந்திருக்க
     வேறான வேர் மருந்து வேண்டுமோ…(?)
     அம்மருந்தை நாடி நாவில் உரைப்பவர்க்குத்
     தாழ்வுண்டோ நெஞ்சே தவிர்.

இவ்வாறே அவ்வையார் பாடிய சாதியிரண்டொழிய ‘ஆண்டாண்டு தோறும்’ முதலிய பல வெண்பாக்களையும் இசையோடு பாடுவார்.

     தம்முடைய இளமையிலும் முதுவையிலும் பலகால் செய்து பழகிய தொழில்களையும் அவர் மூளை அழித்துவிடவில்லை. “ஏய், ஏய்… போகுதா, பார்” என்று கோழி முதலியவற்றை ஓட்டுவதுபோல் செய்து, அருகில் உள்ள எந்தப் பொருளையும் எடுத்து அந்தக் கற்பனைக் கோழிகளின் மேல் எறிவார், அந்தப் பொருள்கள் எதிரில் உள்ளவர் மேல் பட்டுத் துன்பம் தருவதும் உண்டு. நெல் முதலியவற்றை வெளியில் உலரவிட்டிருக்கும் எண்ணம் நள்ளிரவில் வந்துவிட்டால், “மழை வந்துவிட்டது, வாருங்கள், வாருங்கள்” என்று அங்கும் இங்கும் அலைந்து சுவர்களில் முட்டிக் கொண்டு வருந்துவார். “இவ்வளவு கூலி போதாதா, போ மா போ” என்று எவருக்கோ சொல்லுவார். “சோறு கொதி வந்துவிட்டதா, பார்” என்று யாரையோ ஏவுவார். “குழம்பு தாளிக்க வேண்டுமே, குழந்தையையாவது பிடி, நீயாவது போய்ப்பார்” என்று எந்தச் சமையலறையிலோ கற்பனைக் குழம்பு தாளிப்பார். “நீ தான் போய்த் தாளிக்க வேண்டும்” என்று யாரேனும் சொன்னால், “நீ கையை வீசிக்கொண்டு திரி. நான் அழுகிற குழந்தையை வைத்துக்கொண்டு தாளிப்பேன்” என வெகுள்வார். அது எந்தக் குழந்தையோ? அந்தக் குழந்தையின் அழுகுரல் அவருடைய செவிக்கு மட்டும் கேட்கும்போல் இருக்கிறது.

     சில வேளைகளில் யாராவது நடந்துவரும் காலடி ஒலி கேட்டதும், தம் காலிரண்டையும் நீட்டிக்கொண்டு “குழந்தையை என் காலில் போடு. அப்படியே தூங்கிவிடுவான்” என்பார். சிலவேளை, வெறுந்தரையைத் தட்டிக்கொடுத்து, “தூங்கப்பா தூங்கு. அம்மா அடித்தாளோ அழகான கையாலே உன்னை – அத்தை அடித்தாளோ அன்பான கையாலே” என்று பாடிக் கொண்டிருப்பார். கண் அவிந்த வாழ்வில் கற்பனைக்கு அளவில்லை போலும்! கண் கெட்டதோடு நின்று அறிவு கெடாமல் இருந்திருந்தால் மூளையின் கற்பனைகளுக்கும் மில்டன், வீரராகவ முதலியார் முதலிய கவிகளும் தோன்றியிருக்கக்கூடும்.

     ஒரு நாள் இரவு முன்னேரத்தில் நல்ல மழை விடாமல் பெய்து கொண்டிருந்தது. வீடெல்லாம் ஒழுகலாக இருந்தது. எது போனாலும் எது வந்தாலும் என் தூக்கம் மட்டும் நிற்காது. அது என்னை நெருங்கியது. படுக்கவே எங்கும் இடம் இல்லை. மழையின் ஒழுகலுக்கும் தூக்கத்திற்கும் சிறு போர் நடந்தது, தூக்கம் வென்றது; ஒழுகல் தோற்றது. மேசைமேல் படுத்தபடியே நெல் மூட்டையின் மேல் காலை நீட்டிச் சாய்ந்தேன். உயர்ந்த அன்னை – கவலைக்குப் பெரு மருந்தான உயிரன்னை – உறக்கம் என்னும் அன்னை – எனக்கு விடுதலை கொடுக்க வந்தாள்; என்னை வாழ்வித்தாள். வீட்டை மறந்தேன், மழையை மறந்தேன். ஒழுகலை மறந்தேன், குடும்பக் கவலையை மறந்தேன், பாட்டியாரின் பித்தை மறந்தேன், என்புகழ்ப் பித்தை மறந்தேன், ஏடுகளை மறந்தேன், எல்லாம் மறந்தேன். உழைப்பாளிகளுக்கே கிட்டுவதாய் உயர்ந்த அரசர்க்கும் அரியதாய் உள்ள அந்த இன்ப உலகத்தில் – ஏழை என்றும் செல்வர் என்றும் வேறுபாடு அற்ற அந்த உரிமை உலகத்தில் – சாதி என்றும் சமயம் என்றும் குழப்பம் அற்ற அந்த அமைதி உலகத்தில் – உயர்ந்தோர் என்றும் தாழ்ந்தோர் என்றும் பூசல் அற்ற அந்தப் புனித உலகத்தில் – அறிஞர் என்றும் அறிவிலார் என்றும் பிணக்கு அற்ற அந்தப் பேருலகத்தில் என் சிறுமை வாழ்வை மறந்து இறுமாந்து கிடந்தேன்; உறக்க உலகத்தில் விடுதலை எய்தி வாழ்ந்திருந்தேன்.

     மணி இரண்டு அடித்தது கேட்டேன். மேசைமேல் படுத்துக் கிடத்தலை உணர்ந்து எழுந்தேன். மழை பெய்தது என்பதை நினைந்தேன். பெய்து விட்டிருந்ததை உணர்ந்தேன். தெருக்கதவைத் திறந்து வெளியே சென்றேன். திண்ணை மீது நாய் ஒன்று உட்கார்ந்திருந்தபடியே தலை நிமிர்ந்து இருந்தது. அந்த நாய் எந்தச் சீர்திருத்தத்தைப் பற்றியோ எண்ணிக் கொண்டு தன் வாலின் கோணலை மறந்திருந்தது. எதிர்வீட்டில் எண்பது வயதான கணவனும் எழுபது வயதான மனைவியும் கால் நீட்டி உட்கார்ந்தபடியே வெற்றிலை போட்டுத் துப்பிக் கொண்டிருந்தார்கள். நிலா ஒரு சிறிது தோன்றி மறுபடியும் கருமுகிலிடையே மறையப் பார்த்தது. தெருத் தென்னை மரத்திலிருந்து தேங்காய் ஒன்று தொப்பென்று விழுந்தது, அமைதியாயிருந்த நாய் எழுந்து ஓடிக் குலைத்துக் குலைத்து அலைந்தது. நான் மெல்லச் சென்று அந்தத் தேங்காயை எடுத்துக் கொண்டு தெருக் கதவைத் தாழிட்டு உள்ளே வைக்கச் சென்றேன். அந்தப் பித்தர் அறையில் “அப்பா! பையா! எங்கேடா போய்விட்டாய்? அப்பா! திருவேங்கடம்! திருவேங்கடம்!” என்று ஒரே மூச்சாகப் பாட்டியார் அலறுவதைக் கேட்டேன். “என்ன அம்மா! என்னம்மா! ஏன்’மா கூப்பிடுகிறாய்?” என்று உரத்த குரலில் கேட்டேன். இங்கும் அங்கும் ஓடிச் சுவரில் முட்டிக் கொண்டு தலையெல்லாம் அடிபடுவதை விளக்கெடுத்துக் கண்டேன். மீண்டும் கேட்டேன். “ஏன்’மா கூப்பிடுகிறாய்? என்ன’மா! சொல்லம்மா” என்றேன். “வாத்தியாரே! வாத்தியாரே! பையன் எங்கே அய்யா! அப்போவே சொன்னேனே அய்யா! வாத்தியார் என்று நம்பி அனுப்பினேனே அய்யா! தவமிருந்து பெற்றேனே, அய்யா! வாத்தியாரே வாத்தியாரே!” என்று மறுபடியும் அலறினார். என் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே அவர் தலையிலிருந்து வடிந்த செந்நீரையும் துடைக்கலானேன்.

Print Friendly, PDF & Email

2 thoughts on “விடுதலையா?

 1. வணக்கம் ஐயா !
  1967 முதல் 1980 வரையிலும், மு.வ. அவர்களின் நாவல்கள், அரசு நூலகத்தில் எடுத்துப் படித்துத் தான், எளிமையாக வாழக் கற்றுக் கொண்டேன் ! அந்தக் கதைகள் மறந்துவிட்டேன் !
  இன்று 11-04-2015 இந்தக் கதை முழுவதும் படித்தேன் !
  மிகவும் அருமை ! பெரிய கதை தான், ஆனாலும் அருமை !
  அன்பை ஆராய்ந்து எழுதி இருக்கிறார் ! ஆனாலும்
  உங்களது பதிவில் ஒரு சிறு எழுத்துப் பிழையும் இல்லை என்பதையும் இங்கே நான் கவனமாகக் குறிப்பிடுகிறேன் ! வாழ்த்துக்கள் !
  மகிழ்ச்சி ! நன்று !
  வாழ்க என்றும் அனைவரும் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *