கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 19, 2021
பார்வையிட்டோர்: 11,550 
 
 

சாலாவுக்கு இவ்வளவு தூரத்துக்கு உடம்புக்குச் சரியில்லை என்பதெல்லாம் அவனுக்குத் தெரியாது. ரொம்பவும் தற்செயலாகவும் யதேச்சையாகவும்தான் ஊருக்குப் போகிற வழியில் அவன் இங்கே வந்திருந்தான்-தன் மூத்த பையனுடன் தாண்டிப் போக முடியாதபடி இந்த வீட்டில் அவனுக்கு நிறைய இருக்கிறது. இன்னதுதான் என்று சொல்ல முடியாது என்றாலும் அது அப்படித்தான் அவனுக்குத் தோன்றியது. ராஜா மாமா வீட்டை ஒத்திக்கு வைக்கப் போகிறார்கள் என்று அவனுடைய அம்மா அவனிடம் சொன்னபோது ஏற்பட்ட வருத்தம் இன்னும் தீரவில்லை. சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு மத்தியானம் தான் இதை அவன் கேள்விப்பட்டான். அப்பாவிடம் டவுனுக்குப் போயிருந்த போது, உரக்கடையில் வைத்து யாரோ சொன்னார்களாம். அம்மா அழுது கொண்டே சொன்னாள். அம்மாவுடன் பிறந்தவர்கள் இன்னும் மூன்று பேர் உண்டு. ஆனாலும் கூட அண்ணன் தம்பிகளில் நொடித்துப் போன ராஜா மாமாவையே அம்மாவுக்குப் பிடித்திருந்தது. சாலாவை இவனுக்குக் கட்டிவைக்க முடியாமல் போனதிலிருந்து அவள் தன் அண்ணன் வீட்டிற்குப் போகாமல் இருந்து விட்ட போதிலும், அம்மா ராஜா மாமா ஞாபகமாகவும் அந்த வீட்டு ஞாபகமாகவுமே இருந்திருப்பது நிச்சயமாயிற்று, அவள் அழுகையில். அந்த வீடு ஒத்தியைத் திருப்பாமல் முழுகிப் போய் மாமா இப்போதிருக்கிற வாடகை வீட்டுக்கு வந்த பிறகும் இவன் மாத்திரம் மறுபடி மறுபடி வந்து போய்க் கொண்டுதானிருக்கிறான்.

இந்த வீட்டிற்குள் மாமா எப்படிப் புழங்க முடிகிறது என்று தெரியவில்லை. மங்களா வீட்டு வாசலில் வைத்து ராஜா மாமா வளர்த்த புனுகுப் பூனையும் கூண்டும் எல்லாம் எங்கே போயிற்று என்று தெரியவில்லை. அந்த புனுக்குப் பூனையை யாருக்கும் கொடுக்க மனமின்றி மாமா கொன்று தாழை மூட்டுக்குள் ஆற்றங்கரையில் புதைத்து விட்டதாகவே அம்மா சொல்கிறாள். ஆனால் ராஜா மாமாவிடம் கேட்டால், கங்காணித் தேவர் வருவாரில்ல, அவர் கேட்டாரு, தூக்கிக் கொடுத்துட்டேன்’ என்றே சொன்னார். மாமா பேசுகிற தோரணையிலும் சிரிப்பிலும் எதையும் சந்தேகிக்க முடியாது. எதுவும் நிஜமென்றே ஒப்புக்கொள்ளத் தோன்றும். ‘சாலாச்சிக்கு இஷ்டமிருந்தாக் கட்டிக்கிடுதா: நானா குறுக்கே நிற்கப் போறேன்’ என்று ராஜா மாமா சொன்னார். ஆனால் சாலாவுக்கு இஷ்டமிருந்தும், ராஜா மாமாவுக்குத்தான் கிராமத்தில் விவசாயம் பார்க்கிற தனக்குக் கட்டிவைக்க இஷ்டமில்லை என்று அம்மா சொன்னபோதுகூட, அவனுக்கு அம்மாவை நம்ப முடியாமலேதான் இருந்திருந்தது. ராஜா மாமா அப்படிப்பட்ட வரில்லை, தங்கமானவர். சாலாவுக்குத்தான் தன்னைப் பிடிக்கவில்லை!” என்பதுதான் சரியாக இருக்குமென்று பட்டது. ஆனாலும் எப்படி மறக்க முடியும் சாலாவை?

அப்புறம் ராஜா மாமாவேதான் அவனுக்குச் செல்லம்மாவைப் பார்த்துக் கட்டி வைத்தார். எட்டு வருஷத்துக்குள் இரண்டு பையனும் ஒரு பெண்ணுமாகி இப்போதும் பிரசவத்தை முன்னிட்டே தாய்விடு போயிருக்கிறாள். இங்கே வந்திருப்பது கூடஅவளைப் பார்த்துவிட்டு ஊருக்குத் திரும்புகிற வழிதான். பையில் பனங்கிழங்குக் கட்டும் பிரண்டைக் கொடியும் வைத்து அனுப்பியிருப்பது கூடச் செல்லம்மாதான். அவளுக்கு இவன் கண்டிப்பாக ராஜா மாமா வீடு போகாமல் ஊருக்குக் கார் ஏற மாட்டான் என்று தெரியும். இதையெல்லாம் யாரும் யாருக்கும் சொல்ல அவசியமின்றியே செல்லம்மாவுக்கு எல்லாம் புரிந்துவிட்டதுதான் ஆச்சரியம். சாலாவின் அழகு பற்றியும், சாலாவிடம் ஒரு மாறாத பிரியம் தன் கணவனுக்கு உண்டு என்பதும், எத்தனை வருஷம் வாழ்ந்து, எத்தனை குழந்தைகள் பிறந்து, மாறிமாறி வயலில் எத்தனை பூ நெல் விளைந்தாலும் சரி இவன் சாலா ஞாபகமாகவே இருப்பான் என்பதுவும், எல்லாம் அவளுக்குத் தெளிவாகவே தெரிந்திருந்தன. சாலாவின் சடங்கு வீட்டில் எடுத்த பழைய புகைப்படத்தைத் தொட்டில் ஆட்டும் போதெல்லாம் பார்த்துப் பார்த்து அவளும் எத்தனையோ தடவை அவனுடன் சாலாவுக்கு இன்னும் கல்யாணம் ஆகாததற்காக வருத்தப்பட்டிருக்கிறாள்.

சாலா இவளை விடவும் மூப்பு. ராஜா மாமா முதலில் ரொம்பவும் கம்பிக்கையுடன் உயர்ந்த இடத்து மாப்பிள்ளைகளாக மட்டும். பார்த்துக் கொண்டு இருந்ததெல்லாம் ஒரு இரண்டு வருஷத்துடன் முடிந்து போயிற்று. இவ்வளவு லட்சணம் இவ்வளவு அமரிக்கை பொருந்திய சாலாவை ஏதோ ஒரு காரணத்துக்காக எல்லோரும் நிராகரித்தபோது ராஜாமாமா ரொம்பக்குறுகிப் போய்விட்டார்.தான் புனலூர், செங்கோட்டை, கொல்லம் என்று அலைந்தது எல்லாம் சாலாவின் தலையில் ரொம்பவும் பிந்தி விடிகிறதுபோல் ராஜா மாமாவுக்குப் பட்டது. தன்னுடன் நேருக்கு நேர் யாரும் சண்டை போடாமல் எல்லாப் பத்துக்களும் சாலாவுடன் மறைமுகமாகச் சண்டை போடுவதை உணர்ந்ததும் ராஜா மாமா ரொம்ப அடங்கிப் போய் விட்டார். அப்படி அடங்கின முகத்துடன், குறைந்த அளவு பேச்சுடன், வீட்டுக்குள் நடமாடும்போது சீட்டிஅடிக்காமல், மருந்துக் கடை சாயபுவுடன் வெளியே போகாமல் இருக்க ஆரம்பித்ததுமே எல்லாம் செங்கலை உருவினது போல ஆகிவிட்டது. வீட்டை ஒத்திக்கு வைத்து, ரிஜிஸ்தர் பண்ணினது. இந்த வீட்டுக்கு வந்தது எல்லாம் இப்போதைக்குள்தான். இடையில் மில்லில் வேலை பார்க்கிற ஒரு பையனுக்கு பள்ளிக்கூட வாத்தியார் ஒருத்தருக்கு எல்லாம் சாலாவைப் பேசி முடிக்கப்போவதாகச்சொன்னார்கள். ஒரு தடவை ராஜா மாமாவைக் கோயில் வாசல் மண்டபத்து நிழலில் வைத்துப் பார்த்தபோதுகூட, ‘ஸ்கூல் வாத்தியாருக்குச்சம்பளம் என்ன வரும்? ஒரு டியூஷன் கியூஷன் எடுத்தால் இவள் அதிஷ்டத்துக்கு எல்லாம் நல்லபடியாக நடக்காதா’என்று பேசிக் கொண்டிருந்தார். ராஜா மாமா இவனிடம் சாலாவின் கல்யாணத்தைப்பற்றிப் பேசியது இரண்டுபேருக்குமே சந்தோஷம் உண்டாக்கியதுபோல இருவருமே ரொம்பவும் நெகிழ்ச்சியாக விடை பெற்றுக் கொண்டார்கள். ‘கல்யாணம் பேசி முடிவாச்சுதுன்னா எல்லாருமா வாங்க வீட்டுக்கு, ராஜா மாமா அம்மாவை உத்தேசித்துச் சொன்னபடி கையை ஆட்டிக் கொண்டு கோவில் வாசலிலே நின்றது ஞாபகமிருக்கிறது. பின்பு அந்தப் பையன் இன்னும் ஒரு பஞ்சாயத்து போர்ட் ஸ்கூல் வாத்திச்சியையே கல்யாணம் பண்ணிக் கொண்டது தெரிந்தது.

சாலாவின் கல்யாண விஷயத்தில் ஏற்பட்ட இந்தத் தோல்வியைத் தான் மாமாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதைத் தாங்க முடியாமல் தாங்கிக் கொண்டுதான் சாலாவின் அண்ணனுக்குக் கல்யாணம் நடந்தது. இந்தச்சின்ன வாடகை வீட்டுக்குள் குடித்தனம் நடத்த முடியாமல் ஒருத்தருக்கொருத்தர் பிடிக்காமல் போய்ச் சச்சரவுகள் வலுத்துத் தனியாக அவர்கள் இன்னொரு வீடு போய் ஒரு குழந்தையும் பிறந்த பிறகு மறுபடியும் அந்தச் சின்ன வீட்டிற்கே எல்லோருமாகக் குடியிருக்க வந்த பிறகு கொஞ்ச நாட்களுக்கு எல்லாம் நன்றாகவே நடந்து கொண்டு வந்தது.

இடையில் கமிஷன் கடைவரை ஒரு தடவை வந்திருக்கும்போது வீட்டை எட்டிப் பார்க்கையில் சாலா தன் அண்ணன் மகனுக்குப் பவுடர், பொட்டு எல்லாம் வைத்துக் கொண்டு பட்டாசலில் உட்கார்ந்திருந்தாள். இவனைப் பார்த்ததும் சட்டென்று உள்ளே எழுந்து போனாள். போவதற்கு முன் இவனைப் பார்த்த மாதிரியும் இருந்தது. அவள் விட்டுப் போன குழந்தையை எடுத்து வைத்துக் கொண்டு அவன் ராஜா மாமாவுடன் சத்தமாகவே பேசினான். ராஜா மாமா ஈசிச்சேரில் சாக்கைத் தைத்துப் போட்டுக் கொண்டு படுத்திருப்பதையெல்லாம் தாங்கமுடியவில்லை. ராஜா மாமா இதற்கெல்லாம் கூச்சப்படக்கூட இல்லை. பழசைஎல்லாம் முழுதாக மறந்து விட்டு இப்படிப் பட்டாசலில் உட்கார்ந்திருக்கிறது சாதாரண காரியமில்லை. அவருடன் பேசுகிற பொழுது எல்லாம் சாலா ஊடு சுவருக்கு அந்தப்புறம் இதைக் கேட்டுக் கொண்டு நிற்பாள் என்ற உணர்வு அவனுக்கு அதிகம் இருந்தது. அவள் இப்படிக் காய்ச்சலில் படுப்பாள் என்று அப்போது தோன்றவேயில்லை. ராஜா மாமாவீட்டு அத்தைதான் கொஞ்சம் நாளா ரம்பமாவே மெலிந்து விட்டாள். அத்தையைப் பார்க்கிற போதுதான் இந்தக் குடும்பத்தின் கஷ்டம் முகம் காட்டும். இலையெல்லாம் உதிர்ந்த மாதிரி அத்தைதான் நின்றாள். அவள் திடீர்திடீரென்று ராஜாமாமாவை வாய்க்கு வந்தபடி திட்டுகிறதாகவும், “என்னைக் கெடுத்தது மில்லாமல் பாவி எம் புள்ளையையும்ல உக்காத்தி வச்சுட்டான் படுபாவி என்று மேற்கொண்டு சொல்லக் கூடாதது எல்லாம் சொல்லிச் சத்தம் போடுகிறதாகவும், அவளுக்குச் சீக்கிரம் புத்திக்குச் சரியில்லாமல் போய்விடலாம் என்றும் எல்லாம் சொன்னார்கள். அது நிஜமாக இருக்குமென்று.அத்தையின்முகத்தில் உடம்பின் மெலிவில் எல்லாம் போன தடவை வந்திருக்கும்போதே தெரிந்தது.

இந்த தடவை பையனுடன் நடையேறும்போது உள் கட்டில்தான் எல்லோரும் உட்கார்ந்திருந்தார்கள். ராஜா மாமாதான் இவனைப் பார்த்ததும் பக்கத்தில் கிடந்த துண்டை அள்ளி மேலே போட்டுக் கொண்டு எழுந்து வந்தார். ராஜாமாமா சொன்னது எல்லாவற்றையும் கேட்க முடியவில்லை. சாலாபத்துப் பன்னிரண்டு நாளாகப் படுத்த படுக்கையாக இருக்கிறாள். காய்ச்சல் மண்டையிடி என்று ஒன்றுமில்லை. அன்ன ஆகாரம் இறக்கமற்றுப் போச்சு. கைகால் எல்லாம் ஈர்க்குக் குச்சியாக மெலிஞ்சிட்டுது. எல்லாரையும் அடையாளம் தெரியுது. எல்லார்கிட்டேயும் தொண்டைக் குழிக்குள்ளே இருந்து பேசுறாள். டாக்டர் மருந்து மாத்திரைக் கெல்லாம் ஒரு பிரயோஜனமில்லை.துக்க ஒரு ஆளு, கிடத்த ஒரு ஆளு வேண்டியிருக்கு. எல்லாம் நான் பண்ணினது, நான் பண்ணினது’,ராஜா மாமா பக்கத்தில் வந்து கையைப் பிடித்துக் கொண்டு கரகரவென்று அழுதார். அவரிடமிருந்து கையைத் திருகிப் பிடுங்கி அவர் கைகளைத்தன்கைகளுக்குள் பிடித்துக்கொண்டு உள்கட்டுக்குள் பார்த்தான். பையன்.அவனோடு ஒட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தான். சாலா தெரியாமல், அவளைச் சுற்றியிருப்பவர்கள் மட்டும் தெரிய அவனுக்குள் கனம் இறங்கி நகர்ந்து அழுத்தியது.

சாலா கைகளை நெஞ்சின் மேல் வைத்துக் கால் இரண்டையும் நேராக நீட்டிப் படுத்திருந்தாள். அவளாகக் கால் கைகளை மடக்கி நீட்டுகிற தன்மை அதில் தெரியவில்லை. யாராவது அப்படிச் செய்து அவளைப் போர்த்தியும் இருக்க வேண்டும். தூங்குகிறாளா நோயின் குணமா என்பது தெரியவில்லை. கண்கள் மூடியிருந்தன. மணிக்கட்டு எலும்பு நெஞ்சின் மீது கிடந்த கைகளில் துருத்தியிருந்தது. ஒரே ஒரு பழைய தங்க வளையல் ஒரமெல்லாம் தேய்ந்து இரண்டு பக்கமும் கருப்பு வளையல் முன்னும் பின்னுமாகக் கிடந்தது. துணை ஒட்டி அத்தை உட்கார்த்திருந்தாள். அங்கணக் குழிப் பக்கத்து ஜன்னலில் மருந்து சீசாவெல்லாம் இருந்தது. தொட்டிலில் தூங்குகிற வயதுக்கு மேல் ஆகியும் சாலாவுடைய அண்ணன் குழந்தை தொட்டிலில் துங்கிக்கொண்டிருந்தான். வீட்டின் மொத்தத்திலும் ஒரு நிச்சயமற்ற இருட்டு இருந்தது. ஒருவருக்கொருவர் எதுவும் பேசிக் கொள்ளாமல் சாலா மறுபடி கண்களைத் திறந்து கொள்வதற்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள்.

சாலா இப்படி இடை இடையே ரொம்ப நேரம் அசந்து கண்ணை மூடிக் கொள்கிறாள். முழிக்கிறபோது தொடர்ந்து பேசுகிறாள். இரண்டு நாளைக்கு முன்னால் தலைசீவி விடச்சொன்னாள். தோளில் சாய்ந்து கொண்டு அவளே ரிப்பன் வைத்துப் பின்னிக் கொள்வாள். முகத்தில் ஒரு தெளிச்சை வந்து விட்டது. அந்தத் தெளிச்சை வரக்கூடாது. சீக்காளிகளுக்குத் திடீரென்று தெளிவு கூடுவது நல்லதுக்கில்லை. ஆகாது, அத்தை இவற்றையெல்லாம் சொன்னதில் வித்தியாசமிருந்தது. அத்தை அழகாயிருப்பாளே தவிர அதிகம் வெடிதுடியாக இருந்ததில்லை. நறுக்கென்று பேசியதில்லை. சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற் போல நடக்கத் தெரிந்தவளாக இதுவரை தோன்றியதில்லை. ராஜா மாமா வீட்டைவிட்டு ஊர் ஊராக அலைந்ததற்கு இதுவும் காரணம் என்று எல்லோருக்கும் தெரியும். அந்த அத்தைக்கு இப்போது ஒரு மாறுதல் வந்திருக்கிறது. சாலாவின் பக்கத்தில் இருந்து இருந்து சாலாவின் தீட்சண்யம் எல்லாம் அத்தைக்கும் வந்துவிட்டது போல் இருக்கிறது. ராஜாமாமாவுக்கு இது தெரியாமல் இருக்காது. தெரியப் போய்த்தான் அத்தை திடீர் திடீரென்று சத்தம் போடுவதாகச் சொல்கிறதையெல்லாம் சகித்துக் கொண்டு இருக்க முடிகிறது. ராஜா மாமா மாதிரி யாராலும் வெளியே சொல்லாமல் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு உட்கார்ந்திருக்க முடியாது. சாலாவுக்குக்கூட இந்தக் குணம் இருந்திருக்கிறது. அதுதான் இப்படி ஆளை ஒரேயடியாக உருக்கிப் படுக்கையில் போட்டிருக்கிறது.

எல்லோரும் இப்படி உட்கார்ந்திருக்கிறதைப் பார்த்து அவனுடைய மகன் ஒருவிதப் பயத்தினால் அழ ஆரம்பித்தான். அந்த அழுகை எல்லோர்க்குள்ளும் இருந்து இப்படியொரு பயத்தை முரட்டுத்தனமாகக் கவ்வி வெளியே இழுப்பது போல முரண்டு பிடித்தது. ராஜாமாமாசமாதானப்படுத்தியும் அழுகை நிற்கவில்லை. சாலாவுக்குக் பக்கத்தில் தாள் பொட்டணத்தில் இருந்த அறுப்பு ரொட்டியை எடுத்து அத்தை நீட்டினாள். முன்னால்அத்தைக்கு இதைச் செய்யத் தெரியாது. பையன் அதை வாங்கிக் கொள்ளாமல் ‘அம்மாகிட்டப் போகணும்’ என்று மறுபடி அழுதான். அழுகைச் சப்தம் எந்த வழியாக வெளியே போவது என்பது தெரியாமல் தடுமாறுவது போல் வீட்டுக்குள்ளேயே பெரிதாகச் சுற்றிச்சுற்றி வந்தது. அவனுக்குப் பையனைக் கூப்பிடத் தோன்றவில்லை. பையன் அந்த இடத்திலேயே இல்லாததாக மறந்து எல்லோரும் அசைவற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சாலாவின் முகத்தில் மட்டும் அவனுடைய பார்வையிருந்தது.

பையனின் அழுகை அதிகபட்சமான ஒரு சப்தத்துக்குப் போய்த் தானாகக் கொஞ்ச நேரத்தில் நின்றபொழுது, சாலாவின் முழு உடம்பும் போர்வைக்குள் லேசாக நடுங்கியது.

– அஃக் – 1978

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *