கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 3, 2021
பார்வையிட்டோர்: 4,336 
 
 

எதிர் வீட்டில் வழக்கம் போலவே இன்றும் சண்டை. எப்போதும் போல் பெண்ணின் குரலே ஓங்கி ஒலித்தது.

கேசவன் நூற்றுக்குப் பத்து வார்த்தைகள் ஆரம்பத்தில் பேசினான். இப்போது ஒரு வார்த்தைகூட பேசுவதில்லை.

“நீங்க ரோசம் இல்லாதவர் போல நடிச்சி இப்படி மௌனமா இருந்தே என் கழுத்தை அறுக்குறீங்க. ! மொதப் பொண்டாட்டி செத்ததும் புது மாப்பிள்ளையாய் வந்து என் கழுத்துல தாலி கட்டி இருக்கக் கூடாது. பேசாம பெத்த பொண்ணு, புள்ளைங்களோட தனிக்கட்டையாய் இருந்து ஆக்கித் தின்னிருக்கனும். இல்லே… அதுங்களை எங்காவது சொந்த பந்தம் வீடு, அனாதை ஆசிரமத்துல சேர்த்துட்டு நீங்க சாமியாராவோ, சன்னியாசியாவோ போயிருக்கனும்.” ஜானகி என்றும் போல் இன்றும் இந்த தகாத வார்த்தைகளை வீசினாள்.

தாங்கமாட்டாத கேசவன் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தான்.

தனலட்சுமிக்கு அவனைப் பார்க்கப் பாவமாக இருந்தது. அழைத்துக் கேட்டு ஆறுதல் சொல்லவும் யோசனை.

“என்ன அவர்கிட்ட போட்டுக் கொடுக்குறே..?” என்று ஜானகி…..ஏசலாம், பேசலாம், கோபப்படலாம். அல்லது எதிர்த்துப் பேச தெம்பு, திராணி இன்றி தவறாகவும் நினைக்கலாம்.! – நினைக்கவே இவளுக்குத் தயக்கமாக இருந்தது.

கேசவன் பிறந்த நாளிலிருந்து தனலட்சுமி எதிர் வீடு. இவள் கண்ணுக்குத் தெரிந்து வளர்ந்தவன். படித்து அரசாங்க வே லையில் கை நிறைய சம்பளம் வாங்குபவன். மிகவும் நல்லவன், பரோபகாரன். தன் பரிவு,பச்சாதாப குணத்தால் ஏழை வீட்டில் பெண் எடுத்தான்.

விசாலம் சாதாரண கோவில் குருக்கள் மகள். நான்கு பெண்கள் கொண்ட குடும்பம். தம்பதிகள் இருப்பதை வைத்துக் கொண்டு இருவரை எப்படியோ கரை சேர்த்துவிட்டார்கள். அப்புறம் ரொம்ப தடுமாற்றம். அந்த கஷ்டத்தைக் கண்ட கேசவன் ‘ வரதட்சணை ‘ எதுவும் தேவை இல்லை என்று மாப்பிள்ளை ஆனான்.

வாய்த்த விசாலம் தங்கமான பெண். கேசவனைத் தாண்டிய குணநலம் அழகானவள்.

கைபிடித்தவன் மனம் கோணாமல் நடப்பவள். ரொம்ப அன்பு, ஆசையாய் குடித்தனம் செய்தாள் இரு ஆண், ஒரு பெண் பிள்ளைகள் பெற்றாள்.

இந்தக் காலத்தில் மூன்று என்பது அதிகம். இரண்டும் ஆணாகப் பிறந்த காரணத்தால் பெண் ஒன்றுக்கு ஆசைப் பட்டு பெற்றுக் கொண்டு விட்டார்கள். எப்படி சீரும், சிறப்புமாக வாழ்ந்தாளோ அதற்கு நேர்மாறாக சீக்கிரமே கார் விபத்தொன்றில் அகப்பட்டு ,சிதைபட்டு காலனிடம் போய் சேர்ந்துவிட்டாள்.

கேசவன் உடந்தான். மறுமணம் பற்றி யோசிக்கவே இல்லை. மூன்று குழந்தைகளை வைத்துக் கொண்டு இவன் படும் பாட்டைப் பார்த்து… மாமனார், மாமியார், சுற்றத்தார்கள் எல்லாம் சேர்ந்து விசாலத்தின் தங்கையான இந்த ஜானகியை வற்புறுத்தி கட்டி வைத்து விட்டார்கள்.

இவள்தான் அக்காளுக்கு நேர் மாறாக முற்றிலும் நடந்து இப்போது குடித்தனம் நடத்துகிறாள். கணவனைப் போட்டுத் தாக்குகிறாள்.!!

இவ்வளவிற்கும் கேசவன் ஜானகிக்கு எந்த குறையும் வைக்கவில்லை.. முதல் மனைவியைப் போலவே இவளையும் பொன்னாக, பூவாக தாங்குகிறான். ஆனால் இவளுக்குத்தான் கணவ னை எப்படி வைத்திருக்க வேண்டும் என்று தெரியவில்லை. அவன் உட்கார்ந்தால் குறை. படுத்தால் குற்றம் என்று குதறி எடுக்கிறாள்.

அது ஏன்..?

ஆண் எத்தனை அழகு, தங்கமானவனாக இருந்தாலும்…. எந்தப் பெண்ணிற்கும் இரண்டாம்தாரமென்றால் ஒரு கசப்பு, வெறுப்பு. வாழ்க்கைப் பட விருப்பமிருக்காது. அதுவும் வறுபுறுத்தி கட்டி வைத்து விட்டால்..??….எவளுக்குப் பொறுக்கும்..? !

இது தெரிந்தே கேசவன் போகப் போக சரியாகி விடும் என்று பொறுத்துப் போகிறான். ஆனால் அவளோ இதற்கு மாறாய் மறுப்பாய் இருக்கிறாள்.

“பொண்டாட்டி செத்தா புருசன் புதுமாப்பிள்ளை ஆசையில்தானே என்னைக் கட்டிக்கிட்டீங்க..?” வந்து.. சண்டை என்று ஆரம்பித்த நாள் முதலாய் இந்த வார்த்தைகள்தான் எடுத்த எடுப்பாக இருக்கும்.

கேசவனிடமிருந்து பதிலே வராது. வாய் திறக்க மாட்டான்.

“நாலு வயித்துக்கு ஆக்கிப் போட ஆள் தேவை. பெத்ததுகளுக்கு அம்மா,சித்தி என்கிற இடத்துல பெண் வேணுமென்கிற கட்டாயம். அதான் தேடிப் பிடிச்சி எனக்குக் குறி, கழுத்துக்குக் கத்தி. !” அடுத்து அவள் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் அத்தனையும் கேட்கத் தகாததாகவும் தேள் கொடுக்குகளாகவும் வந்து கொட்டும். !

கேசவன் ஆரம்பத்தில்…

“நான் மறுமணத்துக்கு ஆசைப்படவில்லை…புள்ளைங்களுக்கு ஆயா, அம்மா தேவை இல்லே என்கிறதும் என் எண்ணம்.” எடுத்துச் சொன்னான்.

அதெல்லாம் அவள் காதில் ஏறவே இல்லை. அப்படி அது எடுபடாமல் போக… பத்துக்கு ஒரு வார்த்தை என்று மாறி இப்போது நூற்றுக்கு ஒன்றாக ஆகிவிட்டான்.

இருந்தாலும் ஜானகிக்குச் சற்றும் குறை வைக்கவில்லை. அவள் கேட்காமலேயே பட்டு சேலை ரவிக்கை, பிறந்த நாட்களுக்குப் புதுக் துணிமணிகள், கணிசமாக சேமிப்பு தேறினால் நகை. நறுவிசாக வெளி இடங்களுக்கு அழைத்து செல்லல், குழந்தைகளோடு சுற்றுலா என்று கொண்டாடுகிறான்.

ஆனால் அவளுக்கோ அதையும் ஏற்க மனமில்லை.

“இப்படி எல்லாம் பண்ணினால் நான் சாந்தப்படுவேன், சந்தோஷப்படுவேன் என்கிறது தப்பு கணக்கு. இதெல்லாம் என் பொணத்து மேல போடுற போர்வை. நான் இதுக்கெல்லாம் மசிய மாட்டேன், மாற மாட்டேன்.” சொல்கிறாள்.

என்ன செய்ய முடியும்..?

மருமகன் படும் பாட்டைக் கண்டு…

“பாம்பாகக் கொத்தாதே ! பத்ரகாளியாய் ஆடாதே !! ‘ என்று எச்சரிக்கத்தான் செய்கிறார்கள். கேட்டால்தானே..?!

கேசவன் ரொம்ப நல்லவன், பெண்ணின் இயல்பு தெரிந்தவன். உணர்ந்தவன் என்பதால் ரொம்ப பொறுத்துப் போகிறான்.

சராசரி ஆண், சாதாரணமானவனாக இருந்தால்…. தினம், சண்டை, சச்சரவு . அடி உதை என்று அல்லல். குடும்பமே குட்டிச்சுவர் ! வாழ்க்கையே நாசமென்றாகி இருக்கும்.!!

“ஐயோ ! மருமகனே..!” என பாய்ந்து பரிதாபப்பட்டு…

“நாங்க இருக்கிறோம். கவலைப்படாதீங்க. ஆதரவா, ஆதாரமா நின்று தாங்குறோம்…”என்று மறுமணம் செய்து வைத்த அந்த நல்ல உள்ளங்களுக்கு அவன் படும் பாட்டைப் பார்த்து…

“நாங்க தப்பு செய்துட்டோம் தனலட்சுமி.! ‘’ என இவளிடமே வந்து ஆளாளுக்குப் புலம்புகிறார்கள். கண்ணீர் வடிக்கிறார்கள்.

‘ இதற்காகவா விசாலம் ஆசைப்பட்டாள்..? அவள் உயிரோடு இருந்திருந்தால்…இந்தத் திருமணம் நடந்திருக்குமா..? பெற்றவங்களும், கட்டினவனும் துடிதுடிப்பதை பார்த்து சகித்திருப்பாளா..? அவளது ஆத்மா சாந்தி அடையுமா..?” – யோசிக்க யோசிக்க.. தனலட்சுமிக்குப் பொறுக்க முடியவில்லை.

கேசவன் மௌவுனப் பொம்மையாக அலுவலகம் செல்லவும், பிள்ளைகள் கால் முளைத்த மலர்களாக பள்ளிக்கூடம் போகவும் காத்திருந்தாள்.

அவர்கள் நகர்ந்த சிறிது நேரத்தில்..

“ஜானகி…!” அழைத்தபடி உள்ளே நுழைந்தாள்.

“வாங்க பாட்டி !” என்றவாறு அடுப்படியில் இருந்து வெளியே வந்தாள் அவள்.

“என்ன வேலையா..? ”

“இல்லே. வழக்கமான வேலைதான். உட்காருங்க..”இருக்கையைக் காட்டினாள்.

தனலட்சுமி அமர்ந்தாள். ஜானகியும் உட்கார்ந்தாள்.

இவர்கள் எதிரே உள்ள மேசையில் புது பட்டுச் சேலை பிரிக்கப்படாமல் அப்படியே இருந்தது.

”என்ன ஜானகி விசேசம்..பட்டுப்புடவை ?”

“எனக்கு இன்னைக்குப் பிறந்த நாள். ராத்திரி எடுத்து வந்தார் பாட்டி !”

” சந்தோசம்..’’ – அதை எடுத்த தடவிப் பார்த்த தனலட்சுமி…

“அம்சமா இருக்கு. அது சரி… நல்ல நாளும் அதுவுமாவா இன்னைக்குச் சண்டை…?” தான் வந்த வேலையைத் தொடங்கினாள்.

“அது என் தலையெழுத்து..!” ஜானகிக்குத் தொண்டை கமறியது.

“தினம் தினம் அப்படி என்னதான் உங்களுக்குள் பிரச்சனை..?”

“ஏதோ.. ஒன்னு. விடுங்களேன்..!” தவிர்த்தாள்.

“சொல்ல விருப்பமில்லேன்னா வேணாம். ஆனா… பொண்ணா பொறந்த நான் சொல்றேன். உனக்கு அணில் கடிச்ச பழத்தில விருப்பமில்லே சரியா..?” கேட்டு அடிக்கண்ணால் பார்த்தாள்.

ஜானகி மனசுக்குள் மாயையாய் மறைந்து கிடைப்பதைத் தொட்டுவிட்ட உணர்ச்சி…

“பாட்டி… !” துணுக்குற்றுப் பார்த்தாள்.

“எல்லா வயசுப் பொண்ணுங்களுக்கும் ரெண்டாம்தாரமென்றால் கசப்பு. அது பெண்ணாய்ப் பிறந்தவர்கள் இயல்பு. எல்லாம் மனசுதான் காரணம். அது நினைச்சா மலையையும் உடைக்கலாம். எதையும் சாதிக்கலாம். என்கிறது சாதாரண வார்த்தை இல்லே. எல்லாமும் அடங்கின வாசகம். எதையும் சலிப்பா நினைச்சா சலிப்புதான். கசப்பை நினைச்சா கசப்பு. அழகா நினைச்சா அழகு.. அது இனிப்பு.” நிறுத்தினாள்.

“………………………”

“நீ பொறந்தது சாதாரண வீட்ல. இங்கே இருக்கிற எந்த வாய்ப்பு வசதியும் அங்கே கிடையாது. சரியா..? ”

”. ஆமாம்…”

“உன் அக்காள்கள் ரெண்டு பேருக்கும் சுமாரான வாழ்க்கை. சராசரி கணவன்கள். சரியான வேலை வெட்டி இல்லாதவர்கள் ! அப்படித்தானே..! ”

”. ஆமாம்…”

” உன் அம்மா அப்பா உனக்கு வரன் பார்த்து முடிச்சாலும் அப்படித்தான் முடிச்சிருப்பாங்க சரியா..? ”

“ஆமாம். !”

“அதை முடிக்கவே அவுங்க படாத பாடு படனும். . கடைக்குட்டியாய் இருக்கிற அடுத்தவளை கை பிடிச்சி கொடுக்க முழி பிதுங்கும். அதுக்குள்ளே அவ முத்திப் போய் மொட்டை மரமாய் நிக்க வாய்ப்புண்டு. நிசமா….? !”

” ம்ம்… ”

“என்கிட்டே விசாலம் இப்படியெல்லாம் சொல்லி வருத்தப்படுவாள். எப்போதும் அவளுக்குப் பெத்தவங்க, கூடப் பொறந்தவங்க கவலை. ‘ நான் இங்கே மூணு வேலையும் நிம்மதியாய் சாப்பிடுறேன் பாட்டி. அங்கே ரொம்ப கஷ்டம். கிராமத்துக் கோயில்தானே சம்பளம் குறைவு. பக்தர்கள் வரவும் இல்லாததுனால அர்ச்சனை தட்டுல விழற காசும் கம்மி ! சொல்லுவாள். ”

ஜானகியின் மனதில் என்னவோ நெருடியது போல முகம் மாறியது.

“அதுக்கு என்ன பண்ண முடியும் ? எல்லாம் விதி. உன் அதிர்ஷ்டம் கேசவன் கண் பட்டு நீ நல்ல இடத்துக்கு வந்துட்டே. அவுங்களுக்கும் நல்ல காலம் வரும்’ ன்னு நான்தான் அவளுக்கு ஆறுதல் சொல்லி தேத்துவேன். விபரம் புரிந்த புத்திசாலிப் பொண்ணில்லையா ? ! அவள் ஏத்துக்க மாட்டாள். ‘ விதியை மதியால் வெல்லலாம் ‘ பதில் சொல்லுவாள் ! ”

” அப்படியா….?!” ஜானகி வியப்பாய்க் கேட்டாள்.

“ஆமாம். நானும் பதிலுக்கு… எப்படி வெல்ல முடியும்..?” கேட்டேன்.

“அதெல்லாம் வாயால சொல்ல மாட்டேன். செயலால செஞ்சு காட்டுறேன். சொன்னாள். அதே மாதிரி செய்தும் காட்டினாள். ”

“எப்படிப் பாட்டி ! ??” ஜானகி அவசரமாகக் கேட்டாள்.

“எனக்குத் தெரிஞ்ச ரகசியம் சொல்றேன். யார் காதிலும் போடாதே !”

“இல்லே பாட்டி !”

“அவ சாவு விபத்து இல்லே. கார்ல விழுந்து தீருமானமா செய்த தற்கொலை. அதனால நஷ்டஈடு பணமா குடும்பத்துக்கு வருமானம் பண்ணித் தந்த அப்பாவி புத்திசாலி. ! ”

“பாட்டீஈ…….”ஜானகி ஏகத்துக்கும் அலறினாள்.

“அந்த நஷ்டஈடு தொகையும் நீதி, நேர்மையாய் மொத்தமா பெத்தவங்களுக்குப் போய் சேர்றதில்லே. கட்டினவனுக்குத்தான் சேரனும். கேசவன்தான் எனக்கு வேணாம். கஷ்டப்படுற என் மாமனார், மாமியார் குடும்பத்துக்கு உதவனும்ன்னு கதறித்துடித்த உங்க அப்பா, அம்மாவுக்குச் சமாதானம் சொல்லி சேர வச்சான்.”

“அப்புறம் தான் செத்துப் போனால் தன் இடத்துக்கு நீ வருவே. தன் பொண்ணு புள்ளைங்களை நல்லாப் பார்த்துப்பே என்கிற கணக்குலத்தான் இப்படி பண்ணி இருப்பாள்ன்னு எனக்குத் தெரியுது. இல்லே அப்படித்தான் பண்ணி இருக்காள்.!!” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிட்டு தன் விழியோரம் துளிர்த்த கண்ணீரைத் துடைத்த தனலட்சுமி துக்கம் தாளமுடியாமல் விம்மினாள்.

ஜானகி உறைந்தாள்.

“அக்கா…ஆஆ…” உடைந்தாள்.

“அக்கா புள்ளைங்களை மட்டுமில்லே. அவள் அத்தானையும் நீ தங்கமா தாங்கி காபந்து பண்ணினால்தான் அவள் ஆத்மா சாந்தியடையும் !” சொல்லி தனலட்சுமி முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்து நடந்தாள். .

உறைந்து சிலையாக இருந்த ஜானகிக்குள்….

விசாலம் மனம் பளீர் வெளிச்சமாகத் தெரிய…. அதில் தன் தப்பு, தவறு, ஆத்திரம் அகம்பாவமெல்லாம் உடைந்து தூள்தூளாகி விழ… தான் புது மனுசியாவதை உணர்ந்தாள்.

அந்த உணர்வில் கேசவன் மலையளவு மனிதனாகத் தெரிய தலை கவிழ்ந்தாள்..!!

என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *