கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 24, 2023
பார்வையிட்டோர்: 1,344 
 

(2010ல் வெளியான சீர்திருத்த நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எனக்கு ஒரே ஓர் ஆசை. எண்பது வருடங்கள் தூல சரீரத் துடன் இந்த உலகத்தில் உலாவும் சிதம்பரம் என்றைக்காவது ஒரு நாள் சாகவேண்டிய தென்னவோ நிச்சயம். அப்படிச் செத்துப் போன பின்புதான் என் ஆசை நிறைவேறவேண்டும். ‘அப்பனே, ஆனைமுகத்தனே இந்த ஏழையின் ஒரே ஆசையை நிறைவேற்ற மறந்துவிடாதே!”

கோவில் மணியின் புளகாங்கித சப்தத்துடன் ஆனைமுக னைப் பக்தி சிரத்தையுடன் பணிந்தெழுந்தேன். உடல், உள்ளம் எல்லாம் இலேசாகி விட்ட உணர்ச்சி! விருத்தெரிந்த காலந்தொட்டு, விருத்தாப்பியதசை கப்பிக்கொண்ட இந்நாள்வரை கரிமுகக் கட வுளிடம் கணமும் நான் வேண்டும் வரம் இந்த ஒன்றுதான்.

அந்த ஒரு வரமும், நான் உலகத்தில் வாழ்வதாக மற்றவர்கள் நினைத்துக்கொண்டிருக்கும்போது எனக்கு வேண்டியதில்லை. என்றோ இம்மாய உலகைவிட்டு மறைந்த பின்புதான் எனக்கு அது வேண்டும்.

நினைத்து, நினைத்து வேண்டுதல் செய்து பழகிப் போன மனம் கரிமுகன் சந்நிதியில் மீண்டும் மீண்டும் அதையே கூறி ஓலமிட்டது. கண்களிலிருந்து நீர் தாரை தாரையாக ஒழுகியது. மண்ணுலக நினைவுகள் கொஞ்சங் கொஞ்சமாக மங்கி மறைந்து கொண்டிருந்தன. இப்படி எவ்வளவு நேரம் இருந்தேனோ தெரி யாது. கோவில் குருக்கள் குரல் கொடுத்த போது தான் என் நிட்டை கலைந்தது.

‘சிதம்பரம்..என்ன அழுகிறாயா?’

“இல்லைச் சுவாமிகாள்…”

என் குரல் தழுதழுத்தது. ஏனோ…?

அருச்சனைக்குப் பணம் இல்லாவிட்டால் பரவாயில்லை. நான் அருச்சனை பண்ணித் தருகின்றேன்!”

கோவில் குருக்களின் அன்பு மொழிகளில் என் இதயம் மீண்டும் நெக்குருகியது; விம்மியது. உதடுகள் உணர்விழந்தன. நான் என்னை இழக்கலானேன். குருக்களின் ஈரநெஞ்சத்தின் தன்மையில் என்னிடமிருந்த வறுமை என்றோ பூண்டற்றுப் போய்விட்டது. ஆனைமுகனை அருச்சனையோடு சந்திக்க வழியற்று வருந்திய போதெல்லாம் குருக்கள் என் நெஞ்சைக் குளிர்வித்தார். இன்றும் அதேபோல நினைத்துவிட்டார்.

“மன்னிக்கவேண்டும் சுவாமி! அருச்சனை இன்றைக்கு வேண்டியதில்லை. இன்றுடன் என்னையே அவனுக்கு அருச்சனையாக்கிக் கொண்டேன்!”

என் உடல் கிடு கிடுவென நடுங்கியது. என்றுமில்லாத பிரேமையில் மனம் சிக்கிக்கொண்டதா? பேசுவது நானா, அல்லது வேறொன்றா..?

குருக்கள் மௌனமாக மெல்லடி எடுத்து வைத்துத் திருவுள் ளைக் கடந்து வெளியே நடந்தார். சிறிது நேரம் மீண்டும் அதே மௌன நிலையில் நின்றுவிட்டு நான் வீடு திரும்பினேன். வயது எண்பதல்லவா உடலுக்கு? ஒரே அசதியாக இருந்தது? வீடு வந்ததும் விழுந்து படுக்கத் தோன்றியது. மனம் மாத்திரம் மண்ணி லிருந்து விண்ணுக்குத் தாவிக்கொண்டிருந்தது!

நான் விழித்துக்கொண்டபோது, எல்லாம் புதுமையாக இருந்தது. வீட்டின் மையத்தில் கிடந்த கட்டிலைச் சுற்றிப் பத்துப் பதினைந்து பேர் பெண்கள், ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தனர். அட, அது நான் படுத்துக் கொண்ட கட்டிலல்லவா? பக்கத்தில் சென்று பார்த்தேன். அங்கு நானா படுத்திருக்கிறேன்….? அழுகைக் குரலதிகரித்தது! ஈதென்ன மாயமோ? உள்ளுக்குளிருக்க எனக்குப் பிடிக்கவில்லை. ‘சட்’டென்று வெளியே வர எண்ணினேன். எண்ணி முடியவில்லை. வெளியே வந்துவிட்டேன். தள்ளாத வயதில் எப்படி என் பார உடம்பு இதற்கெல்லாம் வளைந்து கொடுக்கிறது? உற்றுக் கவனித்தேன்; எனக்கொன்றும் அப்படி ஒரு உடலிருப்பதாகவே தெரியவில்லை! எள்ளுக்குள் எண்ணெ யாகவிருந்து எண்ணெய்க்குள் எள்ளாக மாறி விட்டேனா? என் னவோ ஒரு கட்டுக்குள்ளிருந்து விடுதலை பெற்றுவிட்டதைப் போன்ற தோருணர்ச்சி என்னை ஆட்கொண்டது! அத்துடன் சுற்றிவர நிகழும் செயல்களைக் காண வேடிக்கையாகவும், ஆவலாகவுமிருந்தது.

நான் இவ்வளவு நேரமாக, வெளிப்படையாகத் திரிகிறேனே, ஒருவரும் என்னைக் கவனிக்கிறார்களில்லையே! கவனிக்கா விட்டாற் போகட்டும்! எனக்கென்ன பெரு நட்டமா விளையப் போகிறது…? மீண்டும் சுற்றி வந்து ஒரு நோட்டம் விட்டேன். அடே, அப்பா! எனக்குத் தெரிந்த எத்தனை மனிதர்கள், பெண் கள், பிள்ளைகள் கூடியிருக்கிறார்கள். என்ன விசேடமோ? அதோ, என் மூத்த மகன் அழுதுகொண்டு போகிறானே! அவனுக்குக் கூடவா அழுகை வருகிறது? அட, எமகாதப் பயலே! அங்கே பாருங்கள்! என் மனைவி எதற்காக அழுது தொலைக்கிறாள்? என்னிடம் வந்த காலந்தொட்டு ஐம்பது வருடங்களுக்கு மேலாக அழுகிறாள், அழுகிறாள் இன்னும் இந்த அழுகையில் சலிப்பு தட்டவில்லையா இவளுக்கு…?

எங்கிருந்தோ சுகந்த வாசணை மிதந்து வந்து என்னைத் தாக்கியது. நேரே அங்கு பறந்தேன்!

தோல் நீக்கிய உருளைக்கிழங்கைப் போன்ற மழுங்கச் சிரைத்த தலை மனிதர் ஒருவர் ஏதோ மந்திரங்களை முணுமுணுத் துக் கொண்டிருந்தார். அவரைச் சுற்றியுள்ளவர்கள் – எல்லோரும் எனக்குத் தெரிந்தவர்கள் தான். வெகு பக்தி, சிரத்தையுடன் கண்ணீர் மல்கத் தேவார திருவாசகங்களைப் பாடிக்கொண்டிருந் தனர். அவர்கள் ஒவ்வொருவரும் தனி வாழ்வில் ஒவ்வொரு வகையினர்! என்னவோ திடீரென்று இப்படி மாறி விட்டார்கள்.

நடுவிலே அனல் ஒளிவிட்டு எரிந்து கொண்டிருந்தது. சுகந்தவர்க்கங்கள் அதில் அர்ப்பணிக்கப்பட்டு நறிய வாசனை யைப் பரப்பிக்கொண்டிருந்தன. எங்கு நோக்கினும் மக்கள், கச முசவென்று ஏதேதோ பேசிக்கொண்டிருந்தனர். என் பிள்ளைகள் கூட என்னைக் கவனியாமல் துக்கந் தோய்ந்த முகபாவத்துடன் செல்கிறார்களே! ஏன்…?

அதோ என் வயது நண்பர்கள் மாணிக்கமும், அம்பலம் வாத்தியாரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். என்ன பேசுகிறார் களோ ….?

“அட கடவுளே, இப்பத்தானே விடயம் புரிகிறது! “நான் இறந்துவிட்டேனாம்…” நன்றாய்ச் சொன்னார்கள்! பைத்தியக்கார மனிதர்கள். இதோ, அவர்கள் முன்பு அவர்கள் பேசுவதையே கேட்டுக் கொண்டிருக்கிறவனைச் செத்துப்போனான் என்று கதையளக்கிறார்கள்! நான் செத்தாபோனேன்….? சதையுணர்வில் பிறந்த இவர்களுக்குச் சதைப்பிண்டமற்ற அருவவாழ்வு அறியாத ஒன்றுதானே! நிகழும் சம்பவங்களையும், கூடி நிற்கும் மனிதர் களையும் காண எனக்கு ஒரே வேடிக்கையாக இருக்கிறது. எவ் வளவு நேரம் இப்படித் ‘தடபுடல்’ செய்யப்போகிறார்கள்? எனது அன்புக்குரிய பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் ஒவ்வொருவரையும் காண வேண்டுமென்ற ஆசை என்னை அலைக்கழித்தது! ஒவ் வொருவராகத் கவனித்துக்கொண்டு சென்றேன். அவர்களுக் குத்தான் என்னைப் பார்க்கச் சகிக்கவில்லைப் போலும்.

அந்த வீட்டுத்திண்ணையின் தென்கோடியில் ஓர் இளம் பெண் தலைவிரிகோலமாகத் தன் கரங்களுக்குள் தலையப் புதைத் துக் கொண்டு ‘தாத்தா, தாத்தா’ என்று கரைகிறாளே!அவன் தான் என் பேர்த்தி பத்மா! மூத்தமகனின் மகள். நல்ல பெண்! அவளுக் குச் சற்றுத் தூரத்தில் சிந்தனை தேங்கிய முகத்துடன் காட்சியளிக் கிறானே ஒரு வாலிபன், பத்மாவின் கணவன் அவன்.

சமீபகாலமாகப் பெண் வீட்டாருடன் மனத்தாபமாக இருந்து விட்டு, இன்று தான் ‘என் சாவீட்டுக்கு’ வந்திருக்கிறானாம். பத்து உரத்து அழுவதற்கு என்மீது கொண்ட அன்பு மாத்திரமல்ல, பெற்றோரின் பிடிவாதத்தால் கணவனைப் பிரிந்திருந்த வேதனை யும் கூட ஒருவேளை காரணமாகலாம்! பாவம் பத்மா! இனியாவது கணவனுடன் குடித்தனஞ் செய்ய வழிபிறக்கட்டுமே….! என் வாழ்த்துப் பலிக்குமோ?

மேலே கவனித்துக் கொண்டு சென்றேன். என்ன விசித்திரம்! நான் உயிருடன் இருக்கிறவனாகக் கருதப் பட்டபோது அணு வளவும் ஆதரவு காட்டாதவர்கள் கூட இப்பொழுது உயிரை மாய்த்துக் கொண்டல்லவா புலம்புகிறார்கள்! எனக்குப் பசித்த போது, பணம் தேவைப்பட்டபோது, தேக நலமற்றிருந்தபோது, திரும்பிப் பார்க்கவும் விரும்பாதவர்கள் இன்றைக்குக் காட்டுகிற அருவருப்பு நிறைந்த அன்பைக் காண என்னாற் சகிக்க முடிய வில்லை. மனிதனுக்குச் செத்தபிறகுதானா சிறப்புத்தேவை? நல்ல சித்தாந்திகள் இவர்கள்! யார், யாரையோ பிரிந்த துக்கத்தை யெல்லாம் நான் செத்து விட்டதாகக் கருதி இங்கே அழுது தீர்க் கிறார்கள்.

திடீரென்று அழுகைக் குரலதிகரித்தது. பறை மேளம் வான மேயதிரக் கொட்டிமுழக்கியது. சுகந்தவர்க்கங்களின் வாசனைப் புகை மூட்டமிட்டது. சனங்கள் ஊர்வலமாக நடக்க ஆரம்பித்து விட்டனர். அவசரம், அவசரமான அந்தப் பக்கம் சென்றேன்! பாடையைத் தூக்கிக்கொண்டு கிளம்பிவிட்டனர்! அந்தப் பாடைக்குள் பழைய மனிதன் சிதம்பரம் இறுதி யாத்திரை செல்கிறான். ‘செத்தாரைச் சாவார் சுமந்து’ செல்ல ஆரம்பித்து விட்டார்கள். நாடகமே உலகமல்லவா? அவர்களைத் தொடர்ந்து செல்ல எனக்குப் பிடிக்கவில்லை . அவர்கள் போய் வரட்டும் ! நான் வீட்டிலேயே தங்கிவிட்டேன்?

மாலை மயங்கி இருள் கவியத் தொடங்கி விட்டது. சத்தம் ஓய்ந்து விட்டது. கூட்டம் குறைந்து விட்டது. பகல் முழுவதும் அழுது புரண்ட அலுப்புடன் வீட்டாரிற் பலர் சோர்ந்து, துவண்டு, சுருண்டு துயின்று கொண்டிருந்தனர்!

மின் விளக்கின் ஒளி வெள்ளம் இருளைப் பிளந்து சிரித்துக் கொண்டிருந்தது. அந்த விசித்திர ஆசை மீண்டும் என்னுள் தலை யெடுத்தது.

“பத்மாவும் கணவனும்…?”

ஒருவேளை அவன் ‘இழவு’ காரியம் முடிந்ததும் போயிருப் பானோ…? எதற்குத் தயங்க வேண்டும். என் நடமாட்டத்தை யார் கவனிக்கப் போகிறார்கள்?

ஒவ்வொரு அறையாகப் பார்த்துக் கொண்டு வந்தேன், கடைசி அறையில் கைவிளக்கு மங்கி எரிந்து கொண்டிருந்தது. பேச்சுக் குரல் கேட்டது. உள்நுழைந்தேன்….! அதோ பத்மாவும் கணவனும் ஒரே படுக்கையில் ..!

எல்லையற்ற மகிழ்ச்சி என்னை ஆட்கொண்டது. இனிப் பத்மாவும் கணவனும் ஒரு போதும் பிரியமாட்டார்கள்.

“தாத்தா, தன்னைக் கொடுத்து எங்களை இணைத்து விட்டார்.”

கணவனை அணைத்தபடியே பத்மாவின் பவள உதடுகள் முணுமுணுத்தன. பிரிந்தவர் கூடினாற் பேசவும் வேண்டுமா? வாழ்க அவர்கள்.

வெளியே வந்தேன். சாவிலே வாழ்வு மலர்கிறது! புதிய சீவகளை உயிர்க்கிறது. ஏன் சஞ்சலப்பட வேண்டும்?

– முற்போக்குக் காலகட்டத்துச் சிறுகதைகள், முதற் பதிப்பு: மாசி 2010, பூபாலசிங்கம் பதிப்பகம், கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *