கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம் சமூக நீதி
கதைப்பதிவு: May 5, 2012
பார்வையிட்டோர்: 7,920 
 
 

அன்னம்மா காலையில்தான் வீடு திரும்பியிருந்தாள். விடிய விடிய கம்பெனியில் வேலை. அது ஒரு தேங்காய் மட்டைக் கம்பெனி. அவள் தலை முழுவதும் மட்டை தூசு படிந்திருந்தது. குளிக்க வேண்டும் என்பதைத் தாண்டி அவளுக்குத் தூங்க வேண்டும் என்றிருந்தது. ஆட்டுக்கொட்டத்தில் போட்டிருந்த கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்தவள் எப்படி தூங்கிச் சரிந்தாள் என்று அவளுக்குத் தெரியாது.

அவன் கணவன் போன வருஷம் செத்துப்போனான். அன்று அவள் கதறி அழுதாள். அப்படி அழாவிட்டால் ஒரு மாதிரி பேசுவார்கள் என்பதால் அழுதாள். மற்றபடி அவளுக்குச் சந்தோஷம்தான். கல்யாணம் ஆன நாள் முதல் அவள் இருட்டில்தான் இருந்தாள். வீட்டை விட்டு வெளியேற முடியாது. போனால், மலையடிவார மாந்தோப்பு அதைவிட்டால் வீடு. அதற்கப்புறம் எதையும் யோசிக்க முடியாது.

காலையில் எழுந்தவுடன் வேலை ஆரம்பிக்கும். சமைத்து முடித்து பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, தோட்டத்திற்கு சாப்பாடு தூக்குடன் செல்வாள். கால் ஏக்கரில் மாவும் நவ்வாவும் இருந்தது. அவனுக்குச் சாப்பாடு கொடுத்துவிட்டு, இவளும் சாப்பிட்டுவிட்டு வேலையை ஆரம்பிப்பாள். மாலை தலைச்சுமையாக விறகும் ஆட்டுக்குட்டிக்கு கொலையும் கொண்டுவருவாள். கணவன் திரும்புவதற்கு முன்பு சோறு காய்ச்சி குழம்பு வைக்க வேண்டும். இதுதான் வாழ்க்கை.

அவள் கல்யாண‌த்திற்கு முன்பு அம்மாவின் வீடடிலும் சமைத்திருக்கிறாள். அது ஒரு தனி அனுபவம். புங்கமரத்தடியில் அடுப்பு. தாளிக்கும்போது எழும் மணம் நாசியைத் தாக்க வேண்டும். அனைத்தும் சரியாக சேர்ந்தால்தான் அந்த மணம் வரும். அதற்காக அவள் ஓயாமல் சோதனை செய்து பார்த்திருக்கிறாள். அவளைக் குழம்புக்காரி என்றுதான் அவள் தெருவில் சொல்வார்கள். அவள் மீன் குழம்பு வைத்தால் தெருவுக்கே தெரியும். சாத்தையாறு டேம் மீன் கிடைத்தால்தான் இவள் மீன் குழம்பே வைப்பாள். கடல் மீன் நொந்து போயிருக்கும்..

அதெல்லாம் ஒரு காலம்.. கல்யாணத்திற்குப் பின்பு சமையல் கூட கடனே என்று செய்யும் வேலையாயிற்று.

அவள் 12வரை படித்தவள். செய்தித்தாள் படிப்பது பள்ளி நாட்களில் வழக்கமாக இருந்தது. பள்ளியின் தகவல் பலகையில் அன்னம்மா தான் செய்திச் சுருக்கம் எழுதுவாள். நீ பத்திரிகை வேலைக்குப் போகலாம் என்று ஜோசப் வாத்தியார் சொல்வார்.

12 முடிச்சவுடனே கல்யாணம். கணவன் இல்லாதபோது தொலைக்காட்சியில் செய்தி கேட்பாள்.. அவன் வந்துவிட்டால், ‘பாருடி பொட்டச்சி வேலைய.. மந்திரி ஆவப்போறாளோ’ என்று காய்ச்சப்பாடு ஆரம்பிக்கும்.

கணவன் செத்தது அவளுக்கு நிம்மதியாக இருந்தது. கஷ்டம்தான். ஆனால், அழுது தொலைய வேண்டுமே என்று அன்று அழுதாள். அப்புறம் அவனோடு வாழ்ந்த நாட்கள் நினைவுக்கு வர அழுகை தானாக வந்தது. வந்து சேர்ந்த பெண்களின் ஒப்பாரிக்கு மத்தியிலும் அவள் குரல் ஓங்கி ஒலித்தது.

அவளுக்கு முதலில் பிறந்தது பையன். இரண்டாவது பெண். பெண் கருவானபோதுதான் பிரச்சனையும் உருவானது.

அன்று அவள் நவ்வாப்பழம் உலுக்குவதற்காக அவர்களின் தோட்டத்திற்குச் சென்றிருந்தாள். நவ்வாப்பழத்தை அதிகாலையில்தான் உலுக்க வேண்டும். அன்று அவள் கணவன் அவளோடு வரவில்லை. பால் கறக்கச் சென்றவனைக் காணோம். என்ன பிரச்சனையோ? ஆனால், பத்து மணிக்கெல்லாம் மதுரை பழக்கடைக்குப் பழங்கள் போக வேண்டும். வரவு செலவு அவன் பார்த்தாலும், இவள் ஏனோதானோன்னு இருக்க முடியுமா?

அவள் தோட்டத்திற்குச் சென்றபோது கிழக்கு வெளுத்துக்கொண்டிருந்தது. ‘ரொம்ப தாமசமாயிடுச்சி’ என்று முனகியபடியே வேலையை ஆரம்பித்தாள்… அலக்கை உயர்த்தி கிளைகளை உலுக்க ஆரம்பித்தாள்.

பின்பக்கம் சருகு மிதிபடுவது கேட்டு திரும்புவதற்கு முன்பு அவளைப் பின்புறமிருந்து அணைத்தன முரட்டுக் கைகள். திமிறிக்கொண்டு திரும்பினாள். அவன் பக்கத்துத் தோட்டக்காரன். இவள் வீட்டுக்காரனை விட இளையவன். அவளுக்குப் பயம் வந்தது. ஆனாலும் திமிறிக்கொண்டு விலகி, கீழே தடுமாறி விழுந்து எழுந்தாள்.

அருகாமையில் போட்டிருந்த கூடையில் இருந்த அருவாளை எடுத்துக்கொண்டாள், ‘வாடா, பொட்ட நாயே.. வாடா’ என்று அருவாளை வீசினாள். அந்த நாய் பயந்து பின்சென்றது.

மாராப்பு விலகியதோ, சற்று தூரத்தில் அவள் கணவன் வந்ததோ அவளுக்குத் தெரியவில்லை. வெட்டிப் பொலிபோடாமல் ஓயமுடியாது.. அவள் கையின் அருவாள் காற்றில் மாறி மாறி இறங்கிக்கொண்டிருந்தது. அந்த நாள் இவள் கைகளைப் பிடிக்கப் பார்த்தது. இவளின் கணவன் வருவதைக் கண்ட அந்த நாய் எதிர்த் திசையில் ஓடியது.

அவள் கணவன் அவனை விரட்டிக்கொண்டு ஓடுவது தெரிந்தது. அவனின் குரல் கேட்டு ஆட்கள் திரள்வது தெரிந்தது. இவளும் ஓடினாள்… அருவாளும் கையுமாக ஓடி அந்த நாயை வெட்டுவதற்குப் பாய்ந்தாள்….

அன்று காலை மதுரைக்குப் பழம் போகவில்லை. அனேகமாக முழு ஊரும் மந்தையில் கூடியிருந்தது. அந்த நாயின் கைகளைப் பின்பக்கம் கட்டியிருந்தார்கள். இவள் நேவக்கா பாட்டியின் பின் பதுங்கி நின்றிருந்தாள். உடல் நடுங்கியது.

என்ன பொழப்பு இது? எல்லோரும் அவளையே பார்ப்பதாகப் பட்டது.. என்ன‌ கேட்பார்கள்? இப்படி ஆகிப்போனதே..

ஊர் பெரியவர் அவனை மிரட்டிக்கொண்டிருந்தார். போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுக்கலாம் என்றார். அவனோ அஞ்சுவதாக இல்லை. ‘அய்யா, அவ கூப்பிடாமலா நா போனேன்னு கேளுங்கையா..’

அவன் சொன்னது இவள் காதில் நெருப்பை வாரிக் கொட்டியது போல இருந்தது. ‘ரொம்ப நாள் பழக்கமையா.. வூட்டுக்காரரு லேட்டுன்னு அவதான் கூப்பிட்டா… புருஷனப் பாத்திட்டு நாடகமாடுறா.. ’

ஊரும் அதிர்ந்துபோனது. அசாத்திய மௌனம். கீழத்தெரு மாரி ‘இருக்கும் அவ நெறத்துக்கு எவனும் கூப்பிட்டா போவான்’ என்றுகுரல் கொடுத்தான்.

இவள் சீற்றத்துடன் நேவக்காவை வெலக்கிவிட்டு முன்னே வந்தாள். ‘பல்லு மேல நாக்கைப் போட்டு எவம் பேசினாலும் நாக்கை அறுப்பேண்டா..’ என்று கத்தினாள். அவள் நெஞ்சு எழுந்தெழுந்து தாழ்ந்தது. அவிழ்ந்த முடியை தூக்கிக் கட்டிகொண்டாள்.

அவள் கணவன் எங்கிருந்தான் என்று அவள் கவனித்திருக்கவில்லை. அவன் அங்குதான் இருந்திருக்கிறான் என்பது கன்ன‌த்தில் அறை விழுந்தபோதுதான் தெரிந்தது. மிளகாயை அறைத்து தடவியதுபோல் கன்ன‌ம் எரிந்தது. அவள் கூந்தலை பிடித்திழுத்துக்கொண்டு அவன் நடந்தான் வீட்டுக்கு…

இந்தப் பழியோடு எப்படி போக முடியும்? ஆனால் அவன் கையில் இவள் தலைசிக்கிக்கொண்டிருந்தது… தூண்டிலில் சிக்கிய மீன்போல துடித்தபடி இழுபட்டாள்..

அன்று துவங்கியதுதான் பிரச்சனை. அப்படி இப்படி என்று இருந்தது, பெண் குழந்தை பிறந்தவுடன் வெடித்தது. அவனின் ஜாதகத்துக்கு ஆண் குழந்தைதான் பிறந்திருக்க வேண்டுமாம்.. பிறந்தது பெண் என்றால் அது அவனது இல்லையாம்..

அன்று அவள் பச்சை உடம்பில் விழுந்த அடி இன்றைக்கும் வலிக்கிறது. மழைபெய்து கொண்டிருந்த அந்த மாலை நேரம் இன்றும் நினைவில் இருக்கிறது. குட்டியைக் கவ்விக்கொண்டு மறைவிடம் தேடி ஓடும் நாய் போல அடுத்த தெருவில் இருந்த அம்மா வீட்டுக்கு ஓட்டமும் நடையுமாக, அடிவயிறு இழுத்துப்பிடிக்க, தொடைகளுக்கிடையே ஈரம் கசிய சென்று சேர்ந்தாள். அம்மாவின் மடியில் மயங்கி சாய்ந்தாள்..

‘அன்னம்மா’ என்ற இதமான குரல் அவளை எழுப்பியது. தலையைத் திருப்பி பார்த்தவளுக்கு வெள்ளை வேஷ்டி தெரிந்தது. தோழர்தான் என்று உணர்ந்தாள். அவர் எப்போதுமே வெள்ளை வேஷ்டிதான்.

‘பேங்க்குக்குப் போவேனாமா?, நைட் வேலைக்கிப் போகாம இருந்திருக்கலாம்லா?’

அவள் அந்த கயிற்றுக் கட்டிலில் இருந்து எழ சிரமப்பட்டாள். பசி வயிற்றைக் கிள்ளியது. விலாவில் பிடித்துக்கொண்டது. கட்டிலோ நைந்துபோன கயிறால் தொட்டிலாகி இருந்தது.

‘சரி, சீக்கிரம் ரெடியாகிப் போய் சேருங்க… நான் ஆபிஸ்லதான் இருப்பேன். வேணுன்னனா கூப்பிடுங்க’, என்று விலகி நடந்தார்.

அவர் கையைப் பிடித்து தூக்கிவிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று அவளுக்குத் தோன்றியது. சிரமப்பட்டு கொட்டத்துத் தூணைப் பிடித்துக்கொண்டு எழுந்தாள்.

அந்தத் தோழர் அவள் ஊருக்கு வந்தபிறகு நெறைய நடந்திருக்கிறது. அதிலும் ஓடை வேலையில் நிறைய பிரச்சனை. வேலை கிடைக்க வேண்டுமானால், அட்டை கிடைக்க வேண்டும். இவள் தோட்டை அடகு வைத்து பேங்கில் பணமும் கட்டிவிட்டாள். ஆனால், அட்டை வரவில்லை.

ஒருநாள் எல்லா பெண்களையும் அழைத்துக்கொண்டு தோழர் பிடிஓ ஆபீஸ் போனார். நேராக பிடிஓ அம்மா அறைக்குள் நுழைந்தார். அதிகாரியின் முன்பிருந்த நாற்காலியில் உட்கார்ந்துகொண்டார். ஏதோ சட்டம் பற்றி சொன்னார்.

அந்த அம்மா ‘அவசரப்பட்டா நடக்குமா?’ என்று ஆரம்பித்தபோது இவள் குறுக்கிட்டாள்.

‘ரெண்டு வருசமா அட்ட கொடுக்கலம்மா. இன்னிக்கு வந்துருக்கோம்.. இது அவசரமா?’

அப்புறம் தலைக்குத் தலை பேசினார்கள். தோழர் வேண்டுமென்றே ஒதுங்கிக்கொண்டார். ஒரே கூச்சலாக இருந்தது. அட்டை கிடைக்காத வெறியில் அனைவரும் கோபத்தோடு குரல் எழுப்பினார்கள்.

பிடிஒ அம்மா எழுந்து நின்றார்.. கைகூப்பி அமைதியாக இருக்கும்படி கேட்டார். ’நாளைக்கே அட்ட வரும்’ என்று மன்றாடினார்.

அப்புறம் அவள் பஞ்சாயத்துக்கு நானூத்தி சில்லறை அட்டைகள் நான்கு நாட்களில் வந்து சேர்ந்தன.

அட்டை வருவதற்குத்தான் நான்கு நாட்கள் ஆனது. ஆனால், அடியோ அன்று மாலையே அவளுக்கு விழுந்தது.

‘நீதானடி மொதல்ல பேசினியாம்.. வார்டு மெம்பரு சொன்னாரு’, என்று ஆரம்பித்த பூஜை வெகுநேரம் நடந்தது. இப்போது அவளை வைத்திருக்கும் ஆண்களின் பட்டியலில் தோழரும் சேர்க்கப்பட்டார். ‘ஒன்நாக்கு அழுகிடும்’ என்று இவள் சீறினாள்.

அப்புறம் அவள் எந்த கட்சி நிகழ்ச்சிக்கும் போவதில்லை. தலைவி லட்சுமியிடம் தோழர் தன் வீட்டுகு வரக்கூடாது என்றும் சொல்லிவிட்டாள்.

அவன் சாகும் வரை அவள் அப்புறம் எங்கேயும் போனதில்லை. அவன் நாக்கு பாம்பின் நாக்கு.. சட்டென்று நீண்டு தீண்டிவிட்டு ஒதுங்கிவிடும். நாக்கின் நஞ்சு அவளைக் கொன்று கொண்டேயிருக்கும்.

அவனின் மரணமும் பாம்பின் வழியாகத்தான் வந்தது. மாலை வீடு திரும்பும்போது பாம்பு கடித்த‌தாம். மதுரைக்குத் தூக்கிக்கொண்டு ஓடினார்கள். அப்புறம் பிணமாக வீடு வந்தான்.

அப்படி அவன் செத்து, இவள் விதவையானதால் அரசாங்கம் கொடுக்கும் பணத்துக்கு எழுதிப் போட்டிருந்தாள். தோழர்தான் எழுதிக்கொடுத்தார். அந்தப் பணம் வந்துவிட்டது, வங்கிக்குச் சென்று காசாக்குவதுதான் இன்றைய‌ வேலை.

வேப்பமரத்தில் கொலை ஒடித்து ஆட்டுக்குட்டிகளுக்கு கட்டிவிட்டு மினி பஸ் பிடிக்க நடந்தாள்.

எழுதிப்போட்டு ஆறு மாதம் ஆகிவிட்டது. அப்படி இப்படின்னு இழுத்தார்கள். சரி வந்துவிட்டது. அந்தப் பணத்தில் ஆட்டுக்குட்டி வாங்கிவிடுவது அவளின் யோசனை. அப்புறம் ‘பாழாப்போன மட்ட கம்பெனிகு நைட் வேலை போக வேண்டாம். மலைக்காடு போனமா, குட்டிய மேய்ச்சமா, ஆறு மாசத்துகு ஒரு தடவை வித்தமா என்று வாழ்க்கை ஓடிவிடும்’, என்று மகிழ்ந்துகொண்டாள்.

வங்கியில் பணத்தை கையில் வாங்கிக்கொண்டு வெளியேறுவதற்கு முன்னமேயே பாலு தலையாரி வந்துவிட்டான். கையிலிருந்த பணத்தைப் பிடுங்கிக்கொண்டு மூன்று ஆயிரம் ரூபாய் நோட்டுகளை எடுத்துக்கொண்டு மீதியை இவளிடம் கொடுத்தான். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்தது. அன்னம்மாவுக்கு அடிவயிறு பதைபதைத்தது. ’மூனு ஆயிரம்’. ஓடிச்சென்ற வங்கி கம்பிக் கதவில் அவனை மறித்தாள். உள்ளே தள்ளிக்கொண்டு வந்து அமட்டினாள், ‘பணத்தைக் கொடுத்துடு.. இல்லன்னா…’

அவன் அசருவதாக இல்லை. ‘என்ன செய்வ? டிஆர்எஸ்கிட்டதானே போவே.. அவருதான் வாங்கிட்டு வரச்சொன்னாரு’, என்றபடி அவன் விலகி நடந்தான். வங்கியில் உள்ள எல்லாரும் வேடிக்கை பாத்தார்கள்.

ஒரு பெரிசு, ‘எங்கேயும் நடக்கிறதுதானம்மா, அரசாங்கக் காசு ஓசி காசுதானே..’ என்றார்.

அன்னம்மா முடிவு செய்தாள். அவர்களுக்கு ஒரே மருந்துதான் இருக்கிறது என்று அவளுக்குத் தெரியும்.

‘ரெண்டு ஆட்டுகுட்டி காச எடுத்துக்கிட்டா..பொழப்பு என்ன ஆவுறது..? பத்து வயசிலேயும் பதினோரு வயசிலயும் ஆணையும் பொண்ணையும் வச்சிக்கிட்டு மானம் காத்து பொழைக்க வேணாமா? ஓட வேலை முடிஞ்சுபோயி மட்ட கம்பெனிக்குப் போற கஷ்டத்தில எத்தன நா வாழறது?’

ஆபீசுக்கு அவள் போனபோது தோழர் சைக்கிளில் எங்கோ புறப்பட்டுக்கொண்டிருந்தார். இவள் பிரச்சனையை சொன்னாள்.

‘டீஆர் எஸ்சா?.. ஓ.. டிரிபிள் எஸ் தாசில்தாரா?.. வாங்க போகலாம்.’ என்றவர் சற்று யோசித்துவிட்டு, ‘நீங்க பஸ்ல போயி அங்க இருங்க நா வந்துடறேன்’ என்று சைக்கிளில் ஏறி புறப்பட்டார்.

‘நல்ல மனுஷன், சைக்கிள்ள பின்னாடி ஒக்காரவைச்சு அழைச்சிட்டுப் போவ மாட்டாரோ?’ என்று முனகியபடி குறுக்கு வழியில் பேருந்து நிலையத்திற்கு நடந்தாள்.

தாலுகா ஆபீஸ் போய் சேரும்போது தோழர் காத்துக்கொண்டிருந்தார். அவளை அழைத்துக்கொண்டு நேராக டீஆர்எஸ் தாசில்தார் அறைக் கதவைத் திறந்துகொண்டு நுழைந்தார். கதவைத் திறந்தபடி பிடித்துக்கொண்டார்.

யாரோ அவருடன் பேசிக்கொண்டிருந்தார். தோழர் நேரடியாக ஆரம்பித்தார், ‘தாலி அறுத்த காசிலேயும் பங்கு கேப்பீங்களோ?’

தாசில்தார் முகம் சுருங்கியது. தோழரின் குரல் ஆபீஸ் முழுக்கக் கேட்டது.

‘ஒங்களுக்கு ஆயிரம், ஆர் ஐக்கு ஆயிரமாம்லா?’, தோழரின் குரல் கேட்டு வாசலில் சிலர் எட்டிப்பார்த்தனர். இவளுக்கோ பயமாக இருந்தது. தான் சொல்லாததையல்லாம் தோழர் சொல்கிறார் என்ற பயம்.

அந்த அதிகாரி கர்ச்சீப்பை எடுத்து முகத்தைத் துடைத்துக்கொண்டார். ‘யாரம்மா ஒங்கிட்ட வாங்கினது?’ என்று இவளிடம் கேட்டார். சொன்னாள்.

‘அந்த நாயி இன்னும் டிபார்ட்மெண்ட் ஸ்ட்டாஃப் ஆகுல..அதுக்குள்ளாறயா.. சரி சரி.. தோழர் நீங்க ஆபிஸ் போங்க அவுங்க வூட்டுக்கே பணம் வந்துடும்’ என்றார்.

நன்றி கூட சொல்லாமல் தோழர் வெளியேறினார். அந்த ஸ்பிரிங் கதவு தானாக சாத்திக்கொண்டது.

‘நீங்க வீட்டுக்குப் போங்க அன்னம்மா, பணம் வந்துவிடும்’ என்றவர் சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட்டார்.

இரண்டு மணி நேரத்தில் பணம் வீட்டுக்கு வந்தது. அந்த நாய் டாஸ்மாக்குல இருந்தபோது பிடித்து பணத்தை வாங்கி வந்ததாக விஏஓ சொன்னார்.

அன்னம்மா அத்தனைப் பணத்தையும் அப்படியே மஞ்சள் பையில் முடிந்து கொண்டு கட்சி ஆபீசுக்குப் புறப்பட்டாள்.

ஆபீஸ் கூறைக் கொட்டகையில் தோழர் யாரோடோ பேசிக்கொண்டிருந்தார். இவள் போனவுடனே, ‘பணம் வந்துடிச்சின்னு தெரியும்.. செல்லுல கூப்பிட்டு அதிகாரி சொன்னார்’ என்றார்.

’தோழர் ஒங்களுக்கு.. அதாங் கட்சிக்குப் பணம்’ என்று இழுத்தாள். அவரோ, ‘இப்ப வேணாம்.. கேப்போம்.. தேவைன்னா கேப்போம்..கேக்கும்போது கொடுங்க. மொதல்ல ஆட்டுக்குட்டிகள வாங்கி வுடுங்க.. அந்த நைட்டு வேலைய உடுங்க’, என்றவர், ‘தோழரே ஒரு டீ போட்டுத்தரமுடியுமா?’ என்று இவள் முகத்தைப் பார்த்தார்.

இவள் மகிழ்வோடு மூலையில் இருந்த அடுப்படிக்குப் போனாள். பானையில் சோறு இருந்தது. குழம்பைக் காணோம். தயிர் பாக்கெட் பாதி காலியாகியிருந்தது.

‘என்ன வாழ்க்கை இவருக்கு, சோறு தண்ணி கூட சரியா இல்லாம’ என்று யோசித்தபடி அடுப்பில் டீயைக் காய வைத்தவள். ‘இன்னிக்கு தோழருக்கு நல்ல சாப்பாடு சமைப்போம்’ என்று எண்ணியவளாக காய்களை எடுத்து நறுக்க ஆரம்பித்தாள். டீ கொதித்தபோது எழுந்து போய் டீயைக் கொடுத்துவிட்டு வந்தாள்.

அவள் குழம்பு கூட்டி தாளித்தபோது அந்தக் குழம்பில் அந்த நாளின் பழைய மணம் திரும்பியிருந்தது அவளுக்கே தெரிந்தது…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *