சென்னை கிளைக்கு அஜய்யை மாற்றல் செய்திருந்தார்கள். இன்னும் பத்து வருடங்கள் சென்னை கிளையில்தான் வேலை பார்க்க வேண்டும். அதனால் குடும்பத்தை அழைத்து வருவதற்கு முன் வீடு பார்த்துவிட்டால், அவர்கள் வந்து குடியேறுவதற்கு வசதியாக இருக்கும் என்று வீடு பார்க்கத் தொடங்கினார்.
அஜய் வேலை பார்க்கும் நிறுவனத்தின் அருகிலேயே பார்த்தால் நன்றாக இருக்குமென்று, காலையிலிருந்து ஒவ்வொருத் தெருவாக அலைகிறார். அவருக்கு ஏற்றாற் போல் வீடு கிடைக்கவில்லை, அஜய்க்கு பிடித்திருந்தால் வாடகை அதிகமாக உள்ளது, வாடகை குறைவில் வீடு பார்த்தால் வீடு நன்றாக இல்லை.
மாலை நான்கு மணியளவில் ஒரு வீட்டை ரூபாய் ஐந்தாயிரம் வாடகைக்கு பேசி முடித்திருந்தார். அதற்கு முன் தொகையாக ரூபாய் ஐம்பதாயிரம் கொடுத்து ஒப்பந்த பத்திரமும் போட்டு சாவியை வாங்கிக் கொண்டுச் சென்றார்.
ஒரு நல்ல நாள் பார்த்து, குடும்பத்தை அழைத்துக் கொண்டு வந்து, வீட்டில் குடியேறினார். மாதம் ஒன்றானது வீட்டுக்காரர் ஐந்தாம் தேதிக்குள் வாடகை கொடுத்துவிட வேண்டுமென்று ஒப்பந்தம் போட்டிருந்ததால், முதல் தேதி சம்பளம் வந்ததும் வாடகைத் தொகையை தனியாக எடுத்து வைத்துவிட்டார்.
வீட்டுக்காரரும் சொன்னது போலவே சரியாக ஐந்தாம் தேதி காலையிலேயே வந்துவிட்டார். அஜய்யிடம் ஒரு ரசீதைக் கொடுத்தார், அதில் வாடகைத் தொகை ரூபாய் ஐந்தாயிரம், மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ. 5/- வீதம் 200 யூனிட்டுக்கு ரூபாய் ஆயிரம், கார்ப்பரேஷன் தண்ணீர்க்கு ரூபாய் ஐனூறு, கிணத்து தண்ணீர்க்கு ரூபாய் ஐனூறு, பராமரிப்பு செலவு ரூபாய் ஆயிரம் என்று மொத்தம் ரூபாய் எட்டாயிரம் என்று ரசீது கொடுத்தார்.
“ஐயா வாடகை மட்டும் ஐந்தாயிரம் என்று சொன்னீர்கள் இப்போது எட்டாயிரத்துக்கு ரசீது போட்டுத் தருகிறீர்கள்” என்றார் அஜய்
“ஆமாம் இங்கு நான்கு குடித்தனங்கள் இருக்கீங்க, உங்கள் வீட்டை மட்டும்தான் சுத்தம் செய்வீங்க, வெளியில் சுத்தம் செய்ய வேலைக்கு ஆள் வைத்திருக்கிறோம் அவங்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டுமில்லையா”
“சரிங்கய்யா எங்களுக்கு தனி மீட்டர்தானே அப்போ மின் கட்டணம் ரூ. 1.50/- வீதம் 200 யூனிட்க்கு ரூபாய் முன்னூறுதானே ஆயிற்று, அதற்கு ஏன் ரூ. 5/- என்று வசூல் பண்றீங்க, கார்ப்பரேஷன் தண்ணீர், கிணத்து தண்ணீர் எல்லாம் இலவசம் தானே அதற்கு எதுக்கு பணம் வசூல் பண்றீங்க” என்றார் அஜய்.
“நான்தான் வீட்டின் சொந்தக்காரர், நீங்கள் கேள்வி மேல கேள்வி கேட்டுகிட்டு இருக்கீங்க ரசீதுப்படி தொகை கொடுத்தால் வீட்டில் இருக்கலாம், இல்லையென்றால் இன்றே காலி செய்யலாம்” என்றார் வீட்டுக்காரர்.
இப்போதைக்கு வீடு கிடைப்பது கடினம் என்பதால் அஜய் வேறு வழியின்றி ரசீதுப்படி தொகையை கொடுத்தார், “என்னங்க நீங்க வேறு வீடு பார்த்தாலும் அங்கும் இதே மாதிரி இருந்தால் என்ன செய்வது, அதனால் நன்றாக விசாரித்துவிட்டு, நமக்கு ஏற்ற மாதிரி வீடு கிடைக்கும் வரை இங்கயே சமாளிப்போம்” என்றார் அஜயின் மனைவி.
அவர்கள் அந்த வீட்டிற்கு வந்து ஆறு மாத காலம் ஆகிவிட்டது, முதலில் குளியலறையில் குழாய் பழுதாக, அதை சரி செய்து தருமாறு வீட்டுக்காரரிடம் கேட்டார் அஜய், “உங்களோட தேவைக்கு நீங்கள்தான் சரி செய்துக் கொள்ள வேண்டும்” என்றார் வீட்டுக்காரர்.
அடுத்த ஒரு மாதத்தில் தண்ணீர் இயந்திரம் பழுதாக அதை சரி செய்து தரச் சொல்லி அஜய் கேட்க, “உங்களோட தேவைக்கு நீங்கள்தான் சரி செய்துக் கொள்ள வேண்டும்” என்றார் வீட்டுக்காரர்.
இப்படியே ஒவ்வொரு பிரச்சினையாக வர எல்லாவற்றிற்கும் வீட்டுக்காரரின் பதில், உங்களோட தேவைக்கு நீங்கள்தான் சரி செய்துக் கொள்ள வேண்டும் என்றே இருந்தது. வீட்டிற்கு வந்து ஒரு வருடம் ஆனதால் வாடகை ரூபாய் ஆயிரம் ஏற்றியுள்ளதாக கூறி மாதம் ஒன்பதாயிரம் வசூல் செய்யத் தொடங்கினார்.
கடுப்பாகி போன அஜய் வெகு நேரம் யோசிக்கத் தொடங்கினார், யோசித்து முடித்து ஒரு வழக்கறிஞரைப் பார்க்கச் சென்று அவர் மூலம் வீட்டுக்காரர்க்கு ஒரு அறிக்கை ஒன்றை அனுப்பினார், அதில் உங்கள் வீட்டை அஜய் பெயருக்கு எழுதித் தரும்படியும், இல்லையெனில் வழக்கு தொடுக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார் வழக்கறிஞர்.
வீட்டுக்காரரும் நீ என்ன வழக்கு போடுவது, நான் போடுகிறேன் என்று அஜய் மீது வழக்கு போட, நீதிமன்றத்திற்கு வந்தது வழக்கு, நீதிபதி, “வாடகைக்கு குடியிருக்கும் வீட்டை உங்கள் பெயரில் எழுதிக் கேட்டு எப்படி வழக்கு போட முடியும்” என்று கேட்டார்.
“ஐயா நான் வீட்டை ரூபாய் ஐந்தாயிரத்துக்குதான் வாடகைக்கு எடுத்து அதற்கு ஒப்பந்தப் பத்திரம் போட்டேன் அதற்குரிய நகல் என்னிடம் இருக்கிறது, ஆனால் இவர் வாடகையை மட்டும் வசூலிக்காமல் வாடகைத் தொகை ரூபாய் ஐந்தாயிரமும், மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ. 5/- வீதம் 200 யூனிட்டுக்கு ரூபாய் ஆயிரம், கார்ப்பரேஷன் தண்ணீர்க்கு ரூபாய் ஐனூறு, கிணத்து தண்ணீர்க்கு ரூபாய் ஐனூறு, பராமரிப்பு செலவு ரூபாய் ஆயிரம் என்று மொத்தம் ரூபாய் எட்டாயிரம் என்று ரசீது கொடுத்தார்”
“மின்கட்டணத்திற்கு அரசாங்கம் நிர்ணயித்துள்ள மதிப்பு ஒரு யூனிட்டுக்கு ரூ.1.50/- ஆகும், ஆனால் இவர் ரூ. 5/- வசூல் செய்தார், கார்ப்பரேஷன் தண்ணீர் இலவசம் அதற்கு ரூ. 500/-, கிணற்றுத் தண்ணீர்க்கு ரூ. 500/- வசூல் செய்தார், இதையெல்லாம் எதற்கு என்று கேட்டேன், இந்த தொகை கொடுத்து இருப்பதால் இருந்தால் இருங்கள், இல்லையெனில் வீட்டை காலி செய்யுங்கள் என்றார், இது அனைத்திற்கும் ரசீது என்னிடம் உள்ளது” என்றார் அஜய்.
“சரி தண்ணீர்த் தொட்டி பராமரிப்பு செலவுக்கு வசூல் செய்திருப்பார் என்று வைத்துக் கொண்டால் கூட, பழுதடையும் போது வீட்டுக்காரர் சரி செய்து தரவேண்டியது அவருடைய பொறுப்புதானே, ஆனால் ஒவ்வொரு முறையும் கைபேசியில் அவரை அழைத்து சரி செய்துத் தரச் சொல்லி கேட்டால் அவருடை பதில், “உங்களுடைய தேவைக்கு நீங்கள்தான் சரி செய்துக் கொள்ள வேண்டும்” என்றுதான் சொன்னார், “அவர் கைபேசியில் பேசியதை பதிவு செய்துள்ள நகலும் என்னிடம் இருக்கிறது, பழுதுப் பார்த்த செலவுக்குரிய ரசீதும் என்னிடம் இருக்கிறது”
“ஐயா எங்களுடைய தேவைக்கு நாங்களே எல்லாவற்றையும் சரி செய்துக் கொள்ள வேண்டுமென்றால், இவர் எங்களிடம் அதிகமாக வசூல் செய்தது ஏன்?, எங்களுடைய தேவைக்கு நாங்களே எல்லாவற்றையும் சரி செய்துக் கொள்ள வேண்டுமென்றால், வீடும் எங்களுடைய தேவைதானே அப்போ வீட்டை எங்கள் பெயரில் எழுதித் தருவதுதான் நியாயம்” என்று அஜய் பேசியதைக் கேட்டு அனைவரும் திகைத்துப் போயினர்.