அப்பாவிடம் எப்படி இதைக் கேட்பது என்று புவனாவுக்குத் தெரியவில்லை. இன்றைக்குள் கேட்டு முடிவு சொல் என்று கொஞ்ச நேரத்திற்கு முன்புதான் ரமேஷ் போனில் சொல்லியிருந்தான்.
ரமேஷ் புவனாவின் கணவன். திருமணம் நடந்து ஒன்றரை வருடங்கள் ஆகிறது. இருவருமே மெத்தப் படித்த என்ஜினீயர்கள். ரமேஷ் வேலை செய்வது கிண்டியில் ஒரு பன்னாட்டு எஞ்சினீரிங் கம்பெனியின் அலுவலகம் ஒன்றில். புவனா தேனாம்பேட்டை அருகில் ஒரு சாப்ட்வேர் அலுவலகத்தில்.
அவர்கள் தங்கியிருந்த தாம்பரம் பகுதியில் இருந்து, அழகாக மின்சார ரயிலில் கிண்டிக்கு வேலைக்குப் போய் வரலாம். ஆனால், ரமேஷ் அவன் வைத்திருந்த யமஹா பைக்கில் வேலைக்குப் போய் வந்தான். புவனா ரமேஷோடவே கிளம்பி கிண்டி வரை பைக் பயணம், பின் அங்கிருந்து பஸ் அல்லது ஆட்டோவில் போவாள்.
அப்படித்தான் கடந்த ஒரு வருடம் இரண்டு மாதங்களாக போய் வந்து கொண்டிருந்தனர். கார் வாங்க வேண்டுமென்று ரமேஷுக்கு எப்போது தோன்றியதோ, அந்தப் பொழுதில் இருந்துதான், புவானாவுக்கு தலைவலி ஆரம்பித்தது.
கல்யாணத்தின் போதே, இது பற்றி சொல்லியிருப்பதாகவும், ஓராண்டுக்கு மேல் காத்திருந்தாயிற்று, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரத்தில் ரமேஷ் சொன்ன தொகையை (பாதி அவன் ஆபிசில் லோன் போட்டுக் கொள்கிறானாம்) புவனா தன் அப்பாவிடம் பேசி வாங்கிக் கொடுக்கவேண்டும்.
காலையில்தான் அப்பா தொலைபேசியில், புவனாவின் தங்கை பரமேஸ்வரியை, யாரோ சாயந்தரம் பெண் பார்க்க வருவதாக சொன்னார். முடிந்தால் வேலையில் இருந்து திரும்பும்போது வீட்டிற்கு வந்து போ என்றார். ‘வந்துவிட்டு போ’ என்று அப்பா சொல்லியிருக்கலாம். ஆனால் அப்பாவால் ‘முடிந்தால் வா’ என்றுதான் சொல்ல முடிகிறது. புவனாவின் மாமியார் குறித்த எச்சரிக்கை அதில் தெரிகிறது. இதுவரைக்கும் புகுந்த வீட்டு ஆட்கள் பற்றியோ, தன் மாமியாரைப் பற்றியோ எதையும் வெளிப்படையாக புவனா அப்பாவிடம் சொன்னதில்லை. ஆனால் அப்பாவுக்கு எப்படியோ எல்லாம் பூடகமாக தெரிந்திருக்கிறது.
இதுவரைக்கும் ஏழு பேர் வந்து பரமேஸ்வரியைப் பார்த்து விட்டு, ஏதாவது ஒரு காரணத்துக்காக வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். பரமேஸ்வரி புவனாவை மாதிரி அத்தனை சிவப்பு இல்லாவிட்டாலும் மாநிறமாக இருந்தாள்.
புவனாவாவது அவள் பெண் பார்க்கும் படலங்களில் இருந்தபோது, உள்ளே மூக்கை நுழைத்து, வந்த மாப்பிள்ளைகள், நிறமில்லை, குள்ளம் போன்று பலவற்றை சொல்லி, அவளாகவே நிராகரித்திருக்கிறாள். அதனாலேயே, அவளது மாப்பிள்ளை தேடும் ஒரு ஒன்பது மாதங்கள் வரை போனது.
ஆனால் பரமேஸ்வரி இந்த விஷயத்தில் அப்பாவிதான். அவளாக இதுவரை எந்த வித அபிப்பிராயமும் சொன்னதில்லை. புவனா கல்யாணம் முடிந்ததில் இருந்தே அவளுக்கு வரன் தேடும் படலத்தை ஆரம்பித்து விட்டார் அப்பா. ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது. இன்னமும் எதுவும் சரியாக அமையாமல் ஏதேதோ காரணங்களால் தள்ளிக் கொண்டே போகிறது.
அவள் கல்யாணம் நிச்சயம் ஆகும் பட்சத்தில், ஆகக் கூடிய செலவுகள் எதிர்நிற்கும் இந்த சமயத்தில், எப்படி அப்பாவிடம் பணம் கேட்பது? இன்னொரு தரம் எதற்கும் ரமேஷிடம் பேசிப் பார்க்கலாம் என்று கைபேசியோடு அலுவலக காபி மெசின் இருக்கும் காரிடர் பக்கம் வந்தாள்.
ரமேஷின் கைபேசியில் ரொம்ப நேரம் அந்தப் பக்கம் “காற்று வெளியிடைக் கண்ணம்மா” பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. (இதுக்கு ஒன்னும் குறைச்சலில்ல). வேலையில் பிஸியாக இருந்தால் பிறகு கூப்புடுகிறேன் என்று ஒரு வார்த்தை சொல்லலாம். ஆனால் எப்போதும் ரமேஷ் அப்படித்தான். அதை சொல்லக் கூட நேரம் இல்லாத அளவு வேலையாம். ஆனால். அதே இவளை அவன் கூப்பிட்டு புவனா போனை எடுக்கவில்லை என்றால், “கொஞ்சம் போனை எடுத்து அப்புறம் பேசறேன்னு சொல்றதுக்கு என்ன? இல்ல ஒரு மெசெஜாவது அனுப்பலாம்ல” என்பான்.
அவனே கூபிட்டடட்டும் என்று காபி மெசினில் ஒரு காபி எடுத்துக் கொண்டு தன் சீட்டுக்கு வந்தாள் புவனா.
ஒரு மணி நேரம் கழித்து ரமேஷ் அழைத்தான். காரிடாரி நோக்கி நடந்தபடியே “ஹலோ..ரமேஷ்” என்றாள் புவனா.
“என்னாச்சு.. பேசிட்டியா?” என்றான் எடுத்தவுடன் ரமேஷ்.
“இல்ல..ரமேஷ். அதப்பத்திப் பேசத்தான் கூப்பிட்டேன். நீங்க ஏதோ பிசியா இருந்தீங்க போல”
“ஆமா..ஒரு புது பிராஜக்டோட கிக் ஆப் மீட்டிங். இப்பகூட ப்ரேக்ல வந்துதான் பேசுறேன். அத விடு. ஏன் இன்னும் பேசல”
“கொஞ்ச நேரம் முன்னாடி அப்பா போன் பண்ணியிருந்தார். பரமேஸ்வரியை சாயந்தரம் யாரோ, பெண் பார்க்க வர்றாங்களாம். முடிஞ்சா நம்மை வரச் சொன்னார்”
“எத்தனை மணிக்கு?”
“அஞ்சரை மணிக்கு”
“நோ வே. இப்பவே மணி மூணு. மீட்டிங் முடிய எப்படியும் அஞ்சாவது ஆவும். அதுக்கு அப்புறம் இன்டர்னல் மீட்டிங் வேற இருக்கு. நானே இன்னிக்கு சாயிந்திரம் எனக்காக காத்திருக்காமே உன்னை போகச் சொல்லலாம்னு நினைச்சிட்டிருந்தேன். ஒண்ணு பண்ணு, நீ வேணா பர்மிசன் போட்டுட்டு, உங்க வீட்டுக்கு போ, நான் மீட்டிங் முடிஞ்சு வந்து உன்னை பிக்கப் பண்ணிக்கிறேன். ஓகேவா?” என்றான் படபடவென்று.
“நீங்களும் வந்தா நல்லா இருக்கும்னு..”
“ஸீ…புவனா.. இது ரொம்ப முக்கியமான ப்ராஜக்ட். நான் தான் லீட். நான் இருந்தே ஆகணும். நீ கிளம்பிப் போய் அங்கே இரு. நான் ஆபீஸ்ல இருந்து கிளம்பறப்போ போன் பண்றேன். மறக்காமே உங்கப்பா கிட்ட அந்தப் பணத்தைப் பற்றி பேசிடு, சரி, நான் மறுபடியும் மீட்டிங் உள்ளே போறேன். ஓகே? பாய்?”
தொடர்பு துண்டிக்கப்பட்ட கைபேசியோடு சீட்டுக்கு வந்து அமர்ந்தாள் புவனா. லேசாக தலை வலிப்பது போல் இருந்தது. எழுந்து போய் இன்னொரு காபி எடுத்துக் கொண்டு வந்தாள்.
பர்மிசன் கிடைத்து, புவனா ஆபீஸ் விட்டு கீழே இறங்கியபோது, நல்ல மழை பெய்துகொண்டிருந்தது. ஆட்டோ கிடைக்க ஆன தாமதம், சென்னையின் மாலை நேர மழையோடு சேர்ந்து ட்ராபிக் ஜாம் எல்லாம் சேர்ந்து, குரோம்பேட்டையில் இருக்கும் வீட்டை அடையும்போது மணி ஆறரை ஆகியிருந்தது.
கிறீச்சிட்ட கிரில் கதவை மூடிவிட்டு உள்ளே நுழைந்தவளை “வா புவனா” என்று வரவேற்றாள் அம்மா, கூடவே “இப்ப பத்து நிமிஷம் முன்னாலதான் எல்லோரும் கிளம்பிப் போனாங்க, நடுவில உன் செல்லுக்கு போட்டா, சுவிட்ச் ஆப் னு வந்தது” என்றாள்.
“சார்ஜ் போயிடுச்சும்மா” என்றபடி ஹாண்ட் பேக்கை ஹால் சோபாவில் வைத்தபடியே “பையன் என்ன பண்றாராம்” என்றாள் புவனா.
“உன்ன மாதிரி தான், ஏதோ ஒரு சாப்ட்வேர் கம்பெனியில ப்ரோக்ராமராம். கம்பெனி பேரு கூட ஏதோ சொன்னாங்களே…பரமுவை கேளு” என்று சொல்லிவிட்டு “ஏ பரமு, புவனா வந்திருக்கா பாரு” என்று உள்ளே பெட்ரூமை நோக்கி குரல் கொடுத்தாள்.
“இதோ வரம்மா” என்ற குரலோடு ஹாலுக்கு வந்த பரமேஸ்வரி, “வாக்கா…எப்படியிருக்கே” என்றாள்.
“நல்லா இருக்கண்டி” என்றாள் பரமுவை ஏற இறங்கப் பார்த்தபடி.
“காபியா, டீயாடி?” என்றபடி சமையலறையை நோக்கி நடந் தாள் அம்மா.
காபியே குடும்மா, லேசா தலையை வலிக்குது, ஆமா, அப்பா எங்கக் காணும்?” என்றாள் புவனா.
“மார்க்கெட் பக்கம் போயிட்டு வரேன் னு போனாரு, வந்திருவாரு” என்றாள் சமையல் ரூம் உள்ளிருந்தபடியே.
ஹாலில், தனியாக மாட்டிய பரமுவிடம், “என்னடி.. நல்லா, சாப்டு சாப்டு தூங்கறியா?..வெயிட் போட்டாப்ல இருக்கு?” என்றாள் புவனா.
“அப்படியெல்லாம் இல்லக்கா. அந்தக் கால் சென்டர் வேலையை விட்டப்புறம், இந்த ரெண்டு மாசமா, கொஞ்ச நேரம் மத்தியான தூக்கம் போட்டேன், ரொம்ப குண்டாவாத் தெரியுது?” என்ற பரமுவின் குரலில் ஒரு கவலை தெரிந்தது.
“கொஞ்சம் பார்த்துக்க, சரி, இன்னைக்கு வந்த பையன் எப்படி? ஓகேவா? அவங்களுக்கும் ஓகேவா?”
“வழக்கம் போலதான், போய் போன் பண்றாங்களாம்” என்றாள் பரமு.
“அவங்களுக்கு ஓகே மாதிரி தான் தெரியுது, பையன்தான் கொஞ்சம், கொஞ்சமென்ன, நல்ல கருப்பு. போட்டோ குடுத்துட்டுப் போயிருக்காங்க, இதோ எடுத்துட்டு வரேன், இந்தா நீ காபியை குடி” என்றபடி புவனா கையில் காபியைக் கொடுத்துவிட்டு, பெட்ரூமுக்குள் போனாள் அம்மா.
சோபாவில் நன்றாகச் சாய்ந்து உட்கார்ந்து காபியைக் குடிக்கத் தொடங்கினாள் புவனா. நல்ல சூட்டில் காபி தலைவலிக்கு இதமாக இருந்தது.
பாதிக் காபியிலே, கவர் ஒன்றைக் கொண்டு வந்து நீட்டினாள் அம்மா. மீதிக் காப்பியை எதிரே இருந்த குட்டித் டேபிளில் வைத்தவள், கவரிலிருந்து போட்டோவை வெளியில் எடுத்தாள்.
போட்டாவில் இருந்த முகத்தை எங்கோ பார்த்த மாதிரி இருந்தது. சட்டென்று ஞாபகம் பொறி தட்டியது.
இவளைப் பெண் பார்க்க வந்த முகம். நிறமில்லை கருப்பு வேண்டாமென்று இவளால் மறுதலிக்கப்பட்ட முகம். நிறைய வரன்கள் வந்து போனதில், அம்மா அப்பாவுக்குக் கூட மறந்து போய்விட்டது போலிருக்கிறது.
“கொஞ்சம் கருப்புதான் இல்ல…ஆனா ஆள் பார்த்தா நல்ல மாதிரிதான் தெரியுது” என்றாள் அம்மா.
எதை வைத்து அம்மா அப்படி சொல்கிறாள் என்று புவனாவுக்குப் புரியவில்லை. போட்டோவைத் திருப்பி அம்மாவிடம் கொடுத்தாள்.
“நீ என்ன சொல்றே” என்றாள் அம்மா மறுபடியும்.
“அவங்ககிட்ட இருந்து முதல்ல பதில் வரட்டும்.. பார்க்கலாம்” என்றாள் புவனா.
– அக்டோபர் 2014