வசிய மருந்து!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 21, 2023
பார்வையிட்டோர்: 1,807 
 
 

“மாட்டுக்கட்டித்தரைய ஊட்டுச்சாளைக்கு பொறகால போட்டிருக்கோணும். கொசு கடிச்சுத்திங்கறதுனால திண்ணைல படுக்கவே முடியல. உள்ள போய் படுத்தா உப்பசந்தாங்க முடிலீங்கிறத விட, எதுத்தாப்ல இருக்கற பங்காளி ஊட்டு வயசான கெழடு ஜன்னல் கதவ தொறந்தே வெச்சுட்டு, நம்மூட்டு கதவையே வேவு பாக்கறதுனால கொசுக்கடிய தாங்கீட்டு அந்தக்கெழவி கண்ணுப்படற மாதர திண்ணைலயே கெடக்க வேண்டீதாப்போச்சு. ஒரு நாளு பகல்ல உள்ள படுத்ததுக்கே ‘மத்தியானத்துல கூட கதவச்சாத்தீட்டு என்ன பொழப்பு…? ஆம்பள மேல ஆச இருக்கறது தா… அதுக்குன்னு ஒரு நேரங்காலம் வேண்டாமா…?’ ன்னு ஊர்காரங்க, ஒறவுக்காரங்களோட எழவு, கண்ணாலமுன்னு எங்க பாத்தாலும் அந்தப்பொம்பளையால மானம் போகுது. ஆம்பளையோட பொம்பள ஊட்டுக்குள்ள சும்மா படுத்தாலும் அதுக்குத்தான்னு நெனைக்கற கெழுடுகள எப்படி சமாளிக்கறது…? ராத்திரிலியே ஒன்னும் நடக்கறதில்ல…. அவிங்க தப்பா நெனைச்சிடப்பிடாதுன்னு தான் கொசுக்கடிச்சாலும் கெடக்குதுன்னு பகல்ல திண்ணைலயே படுத்து தொலையறேன்…” என சக வயதுள்ள உறவுக்கார சினேகிதி ராணியிடம் புலம்பித்தீர்த்தாள் மயிலி.

உழவு ஓட்டி விட்டு வந்து காளைகளைப்பூட்டியிருந்த கலப்பையிலிருந்த நுகத்தின் கன்னிக்கயிறுகளை அவிழ்த்து மண் தாளியில் ஊறவைத்திருந்த பருத்திக்கொட்டை, புண்ணாக்கு, தவிடு கலந்த தண்ணீரைக்குடிக்கக்காட்டிய போது, காளைகள் ஊரிஞ்சிக்குடித்து விட்டு திருப்திப்பட்டதில் தானும் திருப்திப்பட்டு, மூக்கணாங்கயிற்றால் இணைக்கப்பட்டிருந்த, கையில் பிடிக்கப்பயன்படும் கயிற்றால் காடியில் கட்டிவிட்டு, மனைவி துண்டுகளாக கருக்கருவாளில் வெட்டி வைத்திருந்த சோளத்தட்டு தீவனத்தை காளைகளுக்கு அள்ளிப்போட்டார் மாரப்பன்.

கைகளை மண் தாளிக்குள் விட்டு தண்ணீரைக்கலக்கியதால் அடித்த புளித்த வாடை கைகளை கழுவிய பின்னும் போகவில்லை.

காலையிலிருந்து காளைகளுடன் வெயிலில் ஓய்வின்றி காட்டில் உழவு ஓட்டியதில் வெளிவந்த வியர்வை உடலில் உப்பு போல் படிந்து வெண்ணிறமாகத்தெரிந்ததை, விறகு அடுப்பில் மனைவி மயிலி மண்பானையில் காய வைத்திருந்த வெந்நீரால் தென்னை ஓலைகளால் மறைத்து கட்டியிருந்த குளியலறைக்குள் கூட செல்லாமல் வெளியிலேயே பலரும் பார்க்கும் விதமாக கோவணம் மட்டும் கட்டியிருந்த நிலையிலேயே குளித்தார்.

உடல் அழுக்கு போக தேய்ப்பதற்கு கைக்கு அடக்கமான ஒரு கல்லைப்பயன் படுத்தி உருண்டு வரும் அழுக்கினை தேய்த்து சுத்தம் செய்து குளித்தவர், தோளில் போடவும், தலைக்கு வெயில் படமலிருக்க உருமாலை கட்டவும் பயன்படும் துண்டை இடுப்பைச்சுற்றிக்கட்டியபடி குளிப்பதற்கு உதவிய கோவணத்துண்டை அவிழ்த்து அதை துவைக்கும் கல்லில் அடித்து துவைத்து தண்ணீரில் அலாசி முறுக்கி பின் உதறி மாட்டுக்கு போடப்பட்டிருந்த ஓலைச்சாளையின் கூறை மீது காய்வதற்க்காக போட்டு விட்டு, தான் குடியிருக்கும் ஓலைச்சாளை வீட்டிற்குள் சென்று கயிறால் கட்டப்பட்டிருந்த துணி போடும் தூக்கில் தொங்க விட்டிருந்த வெள்ளை நிற வேட்டியை எடுத்துக்கட்டியபடி கயிற்றுக்கட்டிலில் வெறும் மேலுடன் அமர்ந்தார்.

மனைவி மயிலி தட்டில் போட்டு நீட்டிய கறிக்கோழி வறுவலும், அரிசி சோறும் வாசனை தூக்க, அள்ளி எடுத்து வாயில் திணித்து பசியைப்போக்கி ஏப்பம் விட்டதும், அப்படியே கட்டிலில் தலை சாய்த்தவர் அடுத்த சில நிமிடங்களில் உடல் சோர்வால் உறங்கிப்போனதை அவரது குரட்டைச்சத்தமே காட்டிக்கொடுத்தது.

விவசாயியான மாரப்பன் தனது மூத்த சகோதரியின் மகளையே தன்னைவிட பதினைந்து வருடம் இளையவளானாலும் சொத்தும், சொந்தமும் விட்டுப்போகக்கூடாது என்பதால் திருமணம் செய்து கொண்டார். பெற்றோருக்கு ஒரே பெண்ணாக இருந்ததாலும், ஒரு விபத்தில் பெற்றோர் இறந்து போனதால் அனாதையாகிவிட்ட மயிலியை தாய் மாமனுக்கு உறவுகள் கூடி திருமணம் முடித்ததால் மயிலிக்கு படிக்க விருப்பமிருந்தும் பள்ளிக்குச்செல்ல முடியாமல் குடும்பமெனும் வாழ்க்கை முறை அவளை வீட்டிலேயே முடக்கி விட்டது.

திருணமாகி ஐந்து வருடங்கள் ஓடியும் இன்னும் குழந்தை பிறக்காதது மிகுந்த வருத்தத்தைக்கொடுத்தது. நகரத்திலுள்ள பிரபல மருத்துவ மனையில் இருவரும் மருத்துவ பரிசோதனை செய்த போது “உங்க ரெண்டு பேர் கிட்டேயும் ஒடம்புல குறை எதுவுமே இல்ல… உங்க மனசுல தான் குழந்தை பிறக்க மருந்து இருக்குது…”என மருத்துவர் கூறிய போது வெளியே வந்து தேம்பி, தேம்பி அழுதாள் மயிலி.

திருமணமாகி இரண்டு வருடங்கள் மயிலியை நெருங்கவே இல்லை மாரப்பன். தோட்டத்தில் மாடாக உழைப்பது, உண்பது , உறங்குவது . இதுவே வாடிக்கையாகி விட்டது. இளம் வயதின் வளம் மிகுந்த உடலின் வேட்கையைத்தணிக்க இயலாமல் இரவில் குளிர்ந்த நீரில் குளித்தே மனதுக்கும், உடலுக்கும் மூக்கணாங்கயிறு போட்டுக்கட்டுப்படுத்தி விட்டு பின் உறங்குவாள் மயிலி. 

மற்ற ஆண்களுடன் தனது மனைவி மயிலி சிரித்து பேசி விட்டால் இரண்டு நாட்களுக்கு பட்டினி கிடப்பார் மாரப்பன். அதற்க்காகவே அண்ணன், தம்பி முறை உள்ளவர்கள் வீட்டிற்கு கூட போகாமல் அனைத்து உறவுகளையும் கணவனின் சந்தேகத்தின் காரணமாக இழந்து நின்றாள் மயிலி.

தான் வளர்க்கும் மாடுகள் மட்டும் குலாயடித்து கத்தினால் உடனே காளைக்கு கொண்டு போய் சேர்த்துபவர், மனைவியிடம் அவளது ஆசைகளையும், எண்ணங்களையும் கேட்டுத்தீர்த்து வைப்பதில்லை.

சில சமயம் ‘இறந்து போகலாமா?’ எனும் எண்ணமெல்லாம் மயிலிக்கு வந்து போகும்.

ஒருமுறை தன்னைப்பார்க்க சித்தி மகன் தம்பி வந்த போது “அக்கா செதுக்கி வெச்ச சிலை மாதிரியே இருக்கற. நீ மட்டும் நல்லா படிச்சிருந்தீன்னா கலெக்டரே வந்து உன்னக்கல்யாணம் பண்ணியிப்பாரு..” என கூறியதை திண்ணையில் படுத்திருந்து கேட்டு விட்ட மாரப்பன் கோபத்தில் காட்டிற்குள் சென்று சாப்பிட வராமலேயே மரத்தடியில் படுத்துக்கொண்டதைப்பார்த்த மயிலியின் தம்பியும் சாப்பிடாமலேயே சென்று விட, தானும் உண்ணாமல் சமைத்த உணவை குப்பையில் கொட்டினாள்.

இன்று மயிலியைப்ப்பார்க்க வந்த அவளது சினேகிதி ராணி “என்ற புருசனும் இப்படித்தா என்ற நெனப்பே வராம இருந்தாரு. நல்ல ஒடம்புக்கு நாலு பேரிச்சம்பழம் போதும். ஆனா காட்டுக்குள்ள வேலை செஞ்சு கலைச்சுப்போயி வாரவங்களுக்கு சத்து நெறையா இருக்கோணும்னா அதுக்கு தகுந்த சாப்பாடு போடோணும். என்ற அப்பத்தா சொன்ன ஒரு ரோசனதான் என்ற ஊட்டுக்காரரையே தலைகீழா மாத்திப்போடுச்சு. அப்புறம் என்ற முந்தானையப்புடிச்சிட்டே சுத்தீட்டுக்கெடந்தாரு. நாலு கொழந்தீக பொறந்ததுக்கப்பறம் நாந்தா அந்த மருந்த அவருக்கு கொடுக்கறதில்லை. அந்த வசிய மருந்து வேறொன்னுமில்ல. கருங்கோழிக்கறிதான்” எனக்கூறியதோடு தங்கள் வீட்டில் வளர்த்த கருங்கோழியை தன் கணவன் மூலமாக கொண்டு வந்து மயிலியிடம் கொடுக்க வைத்தாள் ராணி.

கருங்கோழி கறி உண்ட மாரப்பன் காலை வரை எழுந்திராமல் தூங்கியது மயிலிக்கு வேதனையை அதிகரித்தது.

“காட்டுக்குள்ள வேலை செஞ்சிட்டு ஊட்டுக்குள்ளயும் வேலை செய்ய முடியாது. அதுதான் காரணமா இருக்கோணும். நீ ஒன்னு பண்ணு. ஒடம்புக்கு செரியில்லீன்னு ரெண்டு நாளைக்கு ஆஸ்பத்தில போயி டாக்டர்கிட்ட விசியத்த விளக்கமா சொல்லிப்போட்டு ரூமெடுத்து படுத்துக்கோ. நீங்களும் கூடவே இருக்கோணும்னு சொல்லு. மூனாவது நாள் ஊட்டுக்கு போனதும் கருங்கோழி சாரு குடிச்சாத்தான் சளி போகும்னு வாங்கி வரச்சொல்லி சமைச்சுப்போடு. அப்பறம்பாரு…” எனக்கூறிய சினேகிதி ராணியின் பேச்சையும் செயல் படுத்தினாள் மயிலி.

காலையில் எழுந்த போது உடல் மிகவும் சடவாக இருந்தாலும் மனம் சந்தோசமாக இருந்தது. கணவர் மாரப்பன் என்றுமில்லாமல் இன்று மனைவிக்கு காபி போட்டுக்கொடுத்தார். மயிலியின் உடல் நிலையைக்காரணங்காட்டி அவளுக்கு தான் கூட இருந்து உதவி செய்ய வேண்டுமென அன்று காட்டிற்குள் செல்ல மறுத்தார். தினமும் பகலில் வெளித்திண்ணையில் படுப்பவளுக்கு இன்று கணவனின் பிடிவாதத்தால் வீட்டிற்குள்ளேயே படுக்க நேர்ந்தது. வீட்டிற்கு வெளியே எப்போதும் போல இப்போது சுற்றிய கொசுக்களும் பசி தீர்க்க இரத்தமின்றி ‘மயிலி திண்ணையில் வந்து படுப்பாளா?’ என எதிர்பார்த்தபடி கவலையில் அலைந்தன. ‘ஜன்னல் கதவையாவது திறப்பாளா?’ என வீட்டைச்சுற்றிச்சுற்றி வந்து சோர்ந்து போயின. எதிர் வீட்டு ஜன்னல் கிழவியின் கற்பனை இன்று நிஜமானது!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *