கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 13, 2017
பார்வையிட்டோர்: 8,467 
 

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

சிவசம்புவை எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் கொழும்பு வீட்டுக்க அப்பாவைப் பார்க்க அடிக்கடி வருவார். மெலிந்த உயரமான உருவம்; முன்னத்தம் பல்லிலே கதியால் போட மறந்ததுபோல ஒரு பெரிய ஓட்டை கரைபோட்ட வேட்டிதான் எப்பவும் கட்டிக்கொண்டிருப்பார். தலைமுடி கோரைப்புல் போல நட்டுக் கொண்டு நிற்கும். முகம் என்றால் பார்க்க வெகு சாதாரணம் தான்.

ஆனால் அவர் கதைக்கத் தொடங்கினால் அந்த முகத்திலே ஏற்படும் மாறுதல் அதிசயிக்க வைக்கும். ஒரு ரோஜா மலர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பூப்பதுபோல அவருடைய முகம் விகசித்துக்கொண்டே வரும். அபூர்வமான ஒரு புது மனிதராக அவர் மாறிவிடுவார். அவர் குரல் வளமும், சொற்களை உச்சரிக்கும் விதமும் எவரையும் வசீகரித்துவிடும். இப்படியாக ஒரு பரிணாம அழகை நான் வேறு யாரிடமும் பார்த்ததில்லை.

எங்கள் வீட்டின் முன் வளவில் வீதியை ஒட்டியபடி ஒரு வேப்பமரம் இருந்தது. நான் எப்பவும் அந்த மரத்தின் கீழ் இருந்து விளையாடிக் கொண்டிருப்பேன். ஐந்து தலைமுறையாக அந்த மரம் அங்கே இருப்பதாக அம்மா சொல்லுவாள். அவ்வளவு பிரம்மாண்டமான மரம். அதன் கொப்புகளெல்லாம் வளைந்து நாலாபக்கமும் கிளை பரப்பி அடர்ந்து ஆகாயத்தை நிறைத்துக் கொண்டிருக்கும். நான் அண்ணாந்து பார்க்கும் சமயங்களில் சூரியகிரணங்கள் மிகவும் சிரமப்பட்டு இந்த இலைகளைத் துளைத்து பொட்டுப் பொட்டாக கீழே விழுந்து கண்களைக் கூசச்செய்யும்.

சிவசம்பு என்னைப் பார்க்காமல் ஒருபோதும் திரும்ப மாட்டார். ‘சண்டைக்கு வாறியா? திறப்பு தாறியா? என்று சொல்லிக்கொண்டே வந்து என் விளையாட்டிலேயே கலந்து கொள்வார். என்னுடைய மந்திரசக்தியின் மகிமையில் அவர் ஒருவருக்கே பூரண நம்பிக்கை இருந்தது. நான் வேப்பமரப் பொந்திலே ஒளித்து வைத்திருக்கும் என்னுடைய மந்திரக் கோலினால் உயிர் கொடுத்த கிளிகளும், குயில்களும், காக்கைகளும், கருக்குரிவிகளும், நாகணவாய்களும் அந்த மரத்தை நிறைத்திருந்தன. இதை நான் அவரிடம் கூறும்போதெல்லாம் அவர் என்னிடம் மிகுந்த பயபக்தியுடன் நடந்துகொள்வார்.

அவகாசமான சமயங்களில் எனக்கு அவர் கதைகள் சொல்லுவதுமுண்டு. எல்லாம் மந்திர தந்திரக் கதைகள்தான். ஏழு கடல் தாண்டி ராஜகுமாரியை ஒளித்து வைத்திருக்கும் ராட்சசனைப்பற்றியும், ஆயிரம் தலைநாகத்தைப் பற்றியும், ஒரு கதைகள் வைத்திருக்கிறார். அமாவாசை இருட்டிலே தனியாகப் போகும்போது பேய்கள் செய்யும் சேஷ்டைகளை தான் எப்படித் தந்திரோபாயங்கள் செய்து முறியடிப்பார் என்றெல்லாம் சொல்லுவார்.

அநேக மந்திரவாதிகளையும், பேயோட்டிகளையும் அவர் நேருக்கு நேர் பாத்திருக்கிறாராம் மந்திரவாதிகள் இவரை மதிப்பதற்கு காரணம் இவர் ஒரு சக்தி வாய்ந்த பேயை வாலாயம் செய்து வைத்திருப்பதுதான் என்றும் சொல்லுவார். கடும் வெய்யிலில் சைக்கிளில் செல்லும்போது அவர் குடையே பிடிப்பதில்லை. அவர் வாலாயம் செய்த பேய்கள் இவர் சால்வையை தலைக்குமேல் செவ்வடிவமாகப் பிடித்தபடியே வருமாம். இவற்றையெல்லாம் அவர் சொல்லும்போது நான் அடக்கமுடியாத ஆவலுடனும், திகைப்புடனும் வாய் மூடாமல் கேட்டுக்கொண்டிருப்பேன்.

கருதியை விட்டு விலகிச் செல்லும் பாடகர் திரும்பத் திரும்ப வந்து சுருதியில் சேர்ந்து கொள்வதுபோல சிவசம்புவும் அடிக்கடி வந்து அப்பாவை சந்தித்தார். கடைசியில் ஒருநாள் அப்பாவிடம் நிரந்தரமாக வேலைக்கு சேர்ந்துவிட்டார். தன்னுடைய வாக்கு சாதுர்யத்தினால் அவர் அம்மாவையும் சீக்கிரமே வளைத்துப் போட்டுக்கொண்டார். சமையல் கட்டு வரைக்கும் தங்கு தடையின்றி போய்வருவார். அப்பா வழக்கறிஞர் என்றபடியால் அவருடைய கட்சிக்காரர்களின் கேஸ் விஷயங்களை இவர் கவனித்துக் கொண்டார். அவர் செய்த வேலை என்னவென்று திட்டவட்டமாக எனக்குச் சொல்லத் தெரியாது. ஆனால் ஓர் எழுத்தருக்கும், வேலைக்காரனுக்கும் இடைப்பட்ட இடத்தை அவர் நிரப்பினார் என்றே நினைக்கிறேன். அப்பாவின் கட்சிக்காரர்கள் செருப்புடன் உள்ளே நுழைவார்கள். ஆனால் இவருடைய செருப்பு எப்பவும் வெளியேதான் காட்சியளிக்கும்.

நாலுமணிப்பூ இரண்டு மணிக்கே பூத்ததுபோல் ஒருநாள் அதிகாலை எங்கள் வீடு ஓர் அவசரத்துடன் விடிந்தது. ஏதோ கல்யாண வீட்டு ஆரவாரம்போல அது திமிலோகப்பட்டுக் கொண்டிருந்தது. என் நாலு வயதுத் தங்கை கண்கள் பொங்க புன்சிரிப்போடு இருந்தாள். அவள்தான் நாயகி; சந்தோஷம் தாங்க முடியாமல் நெளிந்தாள்.

அவள் கழுத்திலே போட்டிருந்த தங்கச் சங்கிலியைக் காணவில்லை. இரவோடு இரவாக யாரோ திருடன் வந்து களவாடிவிட்டான் என்று அம்மா சத்தமாகக் கூவிக் கொண்டிருந்தாள். சன்னல்களும், கதவுகளும், கூரை முகடுகளும் அப்படி அப்படியேதான் இருந்தன. கள்ளன் எப்படி வந்து போயிருப்பான் என்ற விடை தெரியாமல் எல்லோரும் தவியாய்த் தவித்தார்கள்.

என் தங்கை போட்டிருந்தது சின்ன விரல் சைஸ’ல் மொத்தமான சங்கிலி. அதில் ஒரு குண்டுப் பதக்கம் வேறு, மாட்டுக்குச் சங்கிலி போட்டு மணி கட்டியதுபோல இவள் இந்தப் பெரிய சங்கிலியின் பாரம் தாங்காமல் குனிந்து கொண்டுதான் நடப்பாள். சங்கிலி இல்லாமல் அவள் கழுத்து லேசாகவும் வடிவாகவும் இருந்தது. அவளுடைய கடைக்கண் புன்சிரிப்புக்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

தான் ஒரு பிரபல வழக்கறிஞரின் மனைவி என்பது ஞாபகம் வந்தவுடன் அம்மா என் தங்கையை முறையாக குறுக்கு விசாரணை செய்ய ஆரம்பித்தாள். என் தங்கையோ குமுக்காக இருந்தாள். அம்மா அவளை உலுக்கியதும் இது விளையாட்டில்லை என்ற விஷயம் முதன் முறையாக உறைத்தது. ஒற்றைக் கையால் கண்ணைக் கசக்கிக்கொண்டே என்னைப் பார்த்து புதில் சொல்ல ஆரம்பித்தாள். அவளுடைய புன்சிரிப்பு இப்போது போய்விட்டது. பதில்கள் ஒன்றுக்கொன்று முரணாக வந்தன.

அந்த நேரம் பார்த்து அப்பா அவள் சகாயத்திற்கு வந்தார். அம்மாவின் குறுக்கு விசாரணை குறுக்காலே தறிக்கப்பட்டது. என் தங்கையோ ஓவென்று அழுதுகொண்டு அப்பாவிடம் ஓடினாள். அம்மா அவளைப் படுக்கையில் போட்டபோது கழுத்திலே சங்கிலி இருந்ததைத் தன் கண்ணாலே பார்த்ததாகக் கூறினாள். சிறிது நேரம் கழித்து அம்மாவுக்கும் தான் சொல்வதில் கொஞ்சம் ஐமிச்சம் வந்துவிட்டது.

அம்மாவின் சந்தேகம் இப்பொழுது வேலைக்காரர்களின் மேல் திரும்பியது. அப்பாவோ வீட்டையும் தோட்டத்தையும் மூலை முடுக்கு விடாமல் தேடும்படி உத்தரவு போட்டிருந்தார். வேலைக்காரர்கள் தங்கள் பேர்களைக் காப்பாற்றிக் கொள்ள வீட்டைத் தலைகீழாகக் குலுக்கித் தேடினார்கள். ஓர் இளவும் கிடைக்கவில்லை; நான் எப்பவோ தொலைத்த பொன்வண்டு நெருப்புப் பெட்டிதான் கிடைத்தது.

அப்பொழுதுதான் சிவசம்பு மந்திரவாதியைக் கூப்பிட வேண்டும் என்ற சிலாக்கியமான யோசனையை முன்வைத்தார். அப்பாவுக்கு இப்படியான விஷயங்களில் நம்பிக்கை இல்லை. தீர்க்கமாக மறுத்துவிட்டார். பொங்கல் பானையை சுண்டிப் பார்த்தும், முட்டைய தூக்கிப் பார்த்தும் வாங்கும் அம்மாவோ சிவசம்புவின் மகுடியில் மயங்கி இருந்தார். இந்த மந்திரவாதி இதற்குமுன் செய்த மகத்தான காரியங்கள் எல்லாவற்றையும் பக்கத்தில் நின்று பார்த்ததுபோல சிவசம்பு விஸ்தரித்தார். மந்திரவாதியின் updated biodata – வை சமர்பித்தும் அப்பாவிடம் பருப்பு வேகவில்லை.

விரதம் இருந்து பூஜை முடித்து குத்து விளக்கின் ஒளியில் வெற்றிலையில் மைதடவி பார்க்கும்போது இஷ்ட தெய்வம் வந்து களவெடுத்த ஆளைக் காட்டிக் கொடுத்து விடும் என்ற சங்கதியை சிவசம்பு எனக்கு ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால் மந்திரவாதியை வீட்டுக்குத் தருவிக்கும் இப்படியான ஓர் அருமையான சந்தர்ப்பம் அப்பாவுடைய முரட்டுப் பிடிவாதத்தால் முடங்கிப் போனது.

அடுத்த நாள் எங்கள் வீட்டில்தான் அவசரத்துக்கு வெற்றிலை கிடைக்காதே! நான் வேப்பமரத்தின் கீழ் இருந்து பூவரசம் இலையில் அம்மாவுக்குத் தெரியாமல் மறைத்துக் கொண்டுவந்த தங்கச்சியின் பொட்டுச்சிரட்டை மையைப் பூசி, சங்கிலியை மீட்பதற்கு தகுந்த மந்திரங்களை ஓதியபடி இருந்தேன். அந்த நேரம் பார்த்து சங்கிலி சலவைக் கூடையில் தங்கச்சியின் உடுப்போடு சங்கிலி மாட்டியிருந்த விவகாரத்தை பறையடித்து சொல்லிவிட்டார். சிவசம்புக்கு நான் வாலாயம் செய்து வைத்த தேவதையின் சக்தியைக் காட்டவேண்டிய அருமையான சந்தர்ப்பம் இப்படித்தான் ஓர் இழையில் தவறிப்போனது.

அப்பா ஒரு பேர்போன வழக்கறிஞர். இந்த இந்த வழக்குகளைத்தான் எடுப்பதென்ற கொள்கையில்லை. எல்லாவிதமான வழக்குகளையும் எடுத்து திறமையாக வாதாடி வென்றுவிடுவார். கூர்மையான அறிவும், சாதுர்யமான குறுக்கு விசாரணையும்தான் காரணமென்று அம்மா சொல்லுவாள்.

ஒரு ஓடிப்போன (elopement) கேஸ். அந்தப்பெண் வழக்காட வந்தபோது கேர்ட்டே ஸ்தம்பித்துவிட்டதாம். அவ்வளவு அழகு. அவள் நடந்து வந்தபோது வழக்கு மண்டபமே ஒளிவிட்டு பிரகாசித்ததாம். அவளுடைய சிரிப்பி இதயத்திலே இருந்து முளைத்து வெளியே வந்து விரியும் பூப்போல இருக்கும் என்று அப்பா வர்ணித்தார். நீதிபதி அவளையே பார்த்துக் கொண்டிருந்ததில் வழக்கை கவனிக்கவில்லையாம். அந்த வழக்கிலும் அப்பாவுக்கே வெற்றி. அம்மா எரிச்சலுடன் இந்தக் கதையைக் ‘சரி, சரி காணும்’ என்று அரைவாசியில் நிறுத்தியதாக ஞாபகம்.

அப்பாவுடைய உண்மையான திறமைக்கு சவாலாக ஒரு வழக்கு விரைவிலேயே வந்தது. சிவசம்பு மூலமாகவே வரும் என்பதைமட்டும் யாரும் அப்போது கனவிலே கூட நினைத்திருக்கவில்லை.

என் அப்பா எப்பவும் சிரித்தபடியே இருப்பார். அது அவர் சுபாவம். சோகமாக அவர் இருந்த நேரங்கள் மிகவும் குறைவு. அவரைச் சுற்றிவர ஆட்கள் இருக்க வேண்டும். சவடலாகப் பேசி முசுப்பாத்தி கதைகள் சொல்லி ஆனந்தமாகப் பொழுது போக்குவது அவருக்கு நிறையப் பிடித்த கலை.

அம்மா அப்படியல்ல. சூட்சுமமான புத்தி கொண்டள். ஒருவர் பேசும்போதே அவர் அடுத்து என்ன சொல்லப் போகிறார் என்பதை ஊகித்துவிடுவாள். அங்கசாஸ்திரம் (body language) என்பது என்னவென்று தெரியாமலே அதைப்பற்றிய எல்லா விபரங்களும் அறிந்து வைத்திருந்தாள். சிவசம்புவுடைய வாக்கு சாதுர்யத்தில் மயங்கியிருந்தாலும் தொடக்கத்திலிருந்து அம்மாவுக்கு அவரைப் பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லை. அவர் கால்களை ஒடுக்கிக்கொண்டு நிற்கும் விதம், நிலம் படாமல் எவ்வி நடக்கும் தோரணை, முழங்கால்களை முட்டிக்கொண்டு உட்காருவது எல்லாம் அம்மா அவர் மேல் கொண்டிருந்த எண்ணத்தை வலுவாக்கின.

வேப்பம்பூ உதிர்ந்து நிலம் எல்லாம் மெத்தைபோல ஆகியிருந்தது. நாங்கள் நடக்கும்போது அந்தச் சின்னச் சின்னப் பூக்களெல்லாம் கால்களில் ஒட்டிக்கொள்ளும். அம்மா நாலு இடங்களில் பாய் விரித்து வேப்பம் பூக்களைச் சேகரித்துக்கொண்டு இருந்தாள் வடகம் செய்வதற்கு. பூ மணம் காற்றிலே பரவி இனிய போதை தந்து கொண்டிருந்தது.

என் தங்கைக்கு மந்திரவித்தை காட்டிக்கொண்டு இருந்தேன். பள்ளிக்கூடத்தில் இருந்து வரும்போது எப்பவும் என் பெட்டியில் சிறு உணவு மிச்சம் வைத்து கொண்டு வருவேன். என் குருவிகளுக்கும் அணில்களுக்கும் போ அணில்களுக்கு சாப்பாடு கொடுத்தபோது அவை என் கைகளுக்கு அருகிலேயே வந்து சாப்பிட்டன; சில சமயம் என் கைகளிலே எறிக்கூட விளையாடும்.

பால் காவடியில் கட்டிய மனிதன் கிணுங்குவதுபோல பறவைகளின் சப்த ஜாலங்கள் மரத்தை நிறைத்திருந்தன. சிட்டுக்களும், குயில்களும், குக்குறுப்பான்களும், மைனாக்களும் கலகலவென்று தங்கள் தங்களுக்கு விதித்த ஸ்வரங்களை எழுப்பின. இந்தப் பறவைகள் தங்களுக்குள்ளே மட்டும் கதைக்கின்றனவா அல்லது மற்றப் பறவைகளுடனும் பேசிக்கொள்கின்றனவா? இவைகளுக்கும் மனிதனுக்கும் ஏற்பட்ட சாபம் போல் மொழிப் பிரச்சனை உண்டா? இந்த மைனாக்களக்குத்தான் எத்தனை வார்த்தைகள்! சற்று உன்னிப்பாகக் கேட்டால் அவை கதைப்பது புரிவது போலவே இருக்கும்.

அப்பாவின் அலுவலக அறையின் முன்பு வழக்கமாக காணப்படும் சிவசம்புவின் செருப்பு அன்றைக்கு இருக்கவில்லை. நான் அதைப்பற்றி யோசித்த அந்தக்கணமே வாசல் கதவைத் திறந்து கொண்டு அவர் விறுக்கென்று வெளிப்பட்டார். அவருக்குப் பின்னால் ஒரு வயதான சிங்கள மனுசியும். இளம் பெண்ணும் வந்தார்கள். அந்தப் பெண்ணுடைய சடை மேகத்தைப்போல கறுத்து விரிந்துபோய் அவள் தோள்களைத் தொட்டபடி இருந்தது. செக்கச்சிவப்பாக இருந்தாள். மாமிச பட்சணியா, தாவர பட்சணியா என்று தீர்மானிக்க முடியாதபடி கழுத்தில் கிடந்த சங்கிலியை மென்றபடி காணப்பட்டாள். சிவசம்பு என்னை சட்டை செய்யாமல் அவர்களுக்கு முன்னாலே அடியழித்துக்கொண்டு போனார். இவர் வாசலிலே செருப்பைக் கழற்றி விட்டபோது அவர்களும் கழற்றினார்கள்.

அன்றிரவு அப்பா அந்த வழக்கு விஷயமாக அம்மாவிடம் சொன்னார். அந்த மனுசியின் கணவன் இறந்து விட்டானாம். அவர்களுடைய சொத்தில் பங்கு கேட்டு எல்லோரும் சண்டை போடுகிறார்களாம். அதை மீட்பதற்குத்தான் அவள் தான் மகளுடன் வந்திருந்தாள். சொத்தை எப்படியும் மீட்காவிட்டால் அவர்கள் நடுத்தெருவில்தானாம்.

இப்படி அவர்கள் அடுத்தடுத்து கேஸ் விஷயமாக வந்தார்கள். சிவசம்புவும் நிலபாவாடை விரித்து அவர்களைக் கூட்டிக்கொண்டு வந்தார்; போனார் அம்மாவுக்கு இந்த விஷயம் நெருடியது. இவர் ஏன் இந்த வழக்கில் இவ்வளவு கரிசனை எடுக்கிறார். அவை சொந்த பந்தமும் இல்லை; இவர் தமிழ்; அவர்கள் சுத்தமான சிங்களம். சமயலறை வரைக்கும் படையெடுத்து அம்மாவிடம் தேநீர் வாங்கிவந்து அவர்களுக்கு தன் கையால் கொடுக்கிறாரே!

வெகு சீக்கிரத்திலேயே இந்த மர்மத்துக்கு விடை கிடைத்தது. ஒருநாள் சிவசம்புவின் மனைவி அம்மாவைத் தேடி வந்தார். கறுப்பு உருவம். மூக்கிற்குப் பொருத்தமில்லாமல் பெரிய மூக்குத்தி. அந்த மூக்குத்தியிலும், அதைச் சுற்றியிருந்த தோல் பிரதேசத்திலும் அழுக்கு கணிசமான அளவுக்கு சேர்ந்திருந்தது. புழுதி படிந்த செருப்பை போட்டுக்கொண்டு எனக்கு முன்னாலே அவர் உயரமாக நின்று கொண்டிருந்தார்.

நான் என்னுடைய மந்திர வித்தையை அரைகுறையாக நிறுத்தி மந்திரக்கோலை அவர் அறியாதவாறு மரப்பொந்தில் ஒளித்துவிட்டு அவரைப் பின்பக்கமாக அம்மாவிடம் அழைத்துப் போனேன். மந்திரக்கோலை ஒரு நாளைக்கு ஒருமுறைதான் பாவிக்கலாம். மரப்பொந்தில் திருப்பி வைத்துவிட்டால் அதனுடைய சக்தி போய்விடும் இனி அடுத்த நாள்வரை நான் காத்திருக்க வேண்டும்.

அந்த மூக்குத்தி மாமி அழுதழுது கதைகள் சொல்லிக் கொண்டிருந்தபோது அம்மாவும் அது தனக்கு ஏற்கனவே தெரியும் என்ற தோரணையில் கேட்டுக்கொண்டிருந்தாள். மாமிக்கு கண் எல்லாம் சிவந்து முகம் வீங்கியிருந்தது. அம்மா மாமியைத் தேற்றி அப்பாவிடம் கதைப்பதாக உறுதிமொழி கூறி அனுப்பி வைத்தாள். நான் திரும்பவும் கேட் வரைக்கும் கூட்டிக்கொண்டுபோய் விட்டேன் மாமி என் தலையைத் தடவிவிட்டு வீச்சாக நடந்து போனார். அப்படிப் போகும்போது அந்த உடம்பில் இருந்து புறப்பட்ட ஒரு மண்ணென்ணெய் வாசனையும் கூடவே போனது.

அப்பா வந்ததும் வராததுமாக அம்மா இந்த விஷயத்தை சாங்கோபாங்கமாக விவரித்தாள். இந்த உரையாடல்களில் மூக்குத்தி மாமி சொல்லாத பல விஷயங்களும் அம்மாவின் ஞானக்கண்ணால் விரிவுபடுத்தி அலசப்பட்டன. அப்பா அதிர்ந்து விட்டார். இருந்தாலும் அவருடைய முகம் அதைக்காட்டவில்லை.

அம்மா சொன்னதில் சாராம்சம் இதுதான். சிவசம்பு இப்போது வீட்டுக்கே போவதில்லை; காசும் கொடுப்பதில்லையாம். அந்த சிங்கள மனுசியின் வீட்டிலேயே பழியாய் கிடக்கிறாராம். அந்த மனுசியின் மகளோடு சிநேகமாம். அந்தப் பெண்ணுக்கோ இவருடைய வயதில் அரைவாசிதான் இருக்கும் ஆனால் இந்த மன்மதனிடத்தில் மனதைப் பறிகொடுத்து விட்டாளாம்.

அம்மா இந்த விஷயத்தில் பல ஆராய்ச்சிகளை ஏற்கனவே செய்து முடித்திருந்தாள். இந்தப் பெட்டைக்கும் அந்த மனுசனுக்கும் எப்படி இவ்வளவு தீவிரமான காதல் முளைத்தது இதில் ஏதோ மர்மம் இருக்கிறது. அவர் சமயலறையில் வந்து அவர்களக்காக தேநீர் எடுத்து போகும்போது வசியமருந்து போட்டிருப்பார் என்பது அம்மாவுடைய அசைக்க முடியாத ஊகம். மந்திரம், மாந்தரீகத்தில் சிவசம்புவுக்கு உள்ள ஈடுபாடு பற்றி அம்மாவுக்கு ஏற்கனவே தெரியும் அப்பா வழக்கம்போல ஒரு சிரிப்புடன் அந்த விஷயத்தை dismiss பண்ணிவிட்டார்.

அம்மாவின் தொடர்ந்த வற்புறுத்தலுக்குப் பிறகு சிவசம்புவுடன் இந்த விஷயத்தையெல்லாம் கதைப்பதற்கு அப்பா ஒப்புக்கொண்டார். இன்னொருவருடைய சொந்த விவகாரத்தில் தலையிட அப்பாவுக்கு ஒரு தயக்கம் இருந்தது. அம்மாவுக்காக வேண்டா வெறுப்பாக சம்மதித்தார் என்றே நினைக்கிறேன். அப்பா இப்படிப் பயப்பட்டிருக்கத் தேவை இல்€டில. அவர் கதைக்க வேண்டிய அவசியம் வரவேயில்லை! வேப்பம்பழக் காலம் வந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். விதம் விதமான பறவைகளும், அணில்களும், குருவிகளும் மரத்தை வந்து மொய்த்துவிடும். இருப்புப் பறவைகள் தவிர வரத்துப் பறவைகளும் உரிமை கொண்டாடி எங்கிருந்தோ எல்லாம் வந்துவிடும். அவற்றில்தான் எத்தனை ஜாதிகள், எத்தனை வண்ணங்கள், எத்தனை உருவங்கள், எத்தனை ஒலிகள். கலவன் பாடசாலைக் குழந்தைகள் போல அந்தப் பறவைகளின் கலகலவென்ற ஆரவாரத்தில் அந்த மரம் ஒரு தொனிக்கூடமாக மாறிவிடும்.

இந்தக்காலங்களில் வரும் விடுமுறை நாட்களை நிறைய அனுபவிக்கவேண்டும் என்ற ஆசையில் நான் அதிகாலையிலேயே எழும்பிவிடுவேன். கட்டிப் பிடிக்கலாம் போன்று ஆர்வத்தைத் தூண்டும் மோகனமான வைகறையில் பறவைகளுக்கு தப்பிய வேப்பம்பழங்கள் கீழே விழுந்தபடியே இருக்கும். அந்தக் கீச்சல்களுக்கிடையிலும் நான் ஒருநாள் என்னுடைய மந்திரக்கோல் தியானத்தில் இருந்தபோது தோட்டக்காரன் வந்ததையோ, அவனுடைய முகம் பேயைக்கண்டதுபோல வெளுத்துப்போய் இருந்ததையோ கவனிக்கவில்லை.

தோட்டக்காரன் சொன்ன சேதியைக் கேட்டதும் அப்பா அவனையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தார். ஒன்றுமே பேசவில்லை. அவர் கையிலே இருந்த பத்திரிகை கீழே பொத்தென்று விழுந்தது. முழுசாக ஒருநிமிடம் கழிந்த பிறகுதான் தோட்டக்காரனை இன்னொருமுறை நடந்ததைக் கூறும்படி சொன்னார். அம்மா வார்த்தைகள் இல்லாத ஒரு ஒலியில் ஓவென்று சத்தமிட்டு கண்­ர் விட்டபடி இருந்தாள்.

சிவசம்பு முதல்நாள் இரவு தன்னுடைய மனைவி அம்மாவிடம் வந்து புலம்பியதை அறிந்துவிட்டார். அதிலேயிருந்து சண்டைதொடங்கி கடுமையாகி விட்டது. உச்சக்கட்டத்தில் ஆத்திரத்தில் கண்தெரியாமல் கைக்கெட்டிய பாண்வெட்டும் கத்தியை எடுத்து மனைவியைக் குத்திவிட்டார். படாத இடத்தில் பட்டு மனைவி இறந்துவிட்டார். சிவசம்பு இப்போது காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கிறாராம்.

இந்த வழக்கை அப்ப எடுக்கக் கூடாதென்று அம்மா பிடிவாதமாக இருந்தாள். சிவசம்பு தன்னுடைய மனைவிக்கு செய்த துரோகம் அம்மாவினால் பொறுக்க முடியாததாக இருந்தது. அப்பாவின் கணிப்பு வேறுமாதிரி ஆத்திரத்தில் அறிவிழந்து செய்துவிட்டார்; வேண்டுமென்று செய்யவில்லை. தூக்கு நிச்சயம், தன்னிடம் விசுவாசமாக வேலை செய்தவரை இப்படிச் சடாரென்று கைவிடுவது மகா பாபம் என்று எண்ணியிருக்கக்கூடும்.

ஆனால் நான் இதுவெல்லாம் அவசியமில்லை என்றே நினைத்தேன். சிவசம்பு வாலாயம் செய்து வைத்திருக்கும் பேய்களின் வல்லமை பற்றி என்னைத்தவிர வேறு யாருக்கும் தெரியாது. அந்தப் பேய்கள் பெரும் சக்தி வாய்ந்தவை. விரைவிலேயே சிறைக் கதவுகளைத் தகர்த்து அவரை வெளியே கொண்டு வந்துவிடும் என்று எதிர்பார்த்தேன்.

இந்த வழக்கு யாரும் எதிர்பாராத ஒரு பரபரப்பை சனங்களிடையே ஏற்படுத்தியது. இனக்கலவரம் முதலாம் ஆட்டம் முடிந்து கொஞ்சம் ஓய்ந்திருந்த நேரம். ஒரு நடுத்தர வயது ஆம்பிள்ளை இருபது வயது சிங்களப் பெண்ணை காதலிப்பதும், அவளுக்காக சொந்த மனைவியையே கொல்வதும் நாளாந்தம் நடக்கிற காரியமா? பத்திரிகைகள் எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு கொட்டை எழுத்துக்களில் தலைப்புகள் எழுதின.

அப்பா இதை எதிர்பார்க்கவில்லை. அவருக்கு புதிசாக புகழ் சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் பேப்பர்கள் இப்படி எழுதியதும் வேறு வழி இல்லை என்று ஆகிவிட்டது. எப்படியும் வழக்கை வென்று தன் புகழைக் காப்பாற்ற வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தார். அரசாங்க தரப்பிற்கு இது ஒரு open and shut case. ஏதாவது ஓர் அற்புதம் நிகழ்ந்தால் ஒழிய அப்பா இந்த வழக்கில் வெற்றிபெறும் சாத்தியமே இல்லை.

இந்த அவலங்கள் போதாதென்று தோட்டக்காரன் இன்னொரு கெட்டசேதி கொண்டுவந்தான். இவன் தோட்ட வேலை செய்வதிலும் பார்க்க கெட்ட சேதிகள் சேகரிப்பதிலேயே காலத்தை செலவு செய்தான். நான் சமயம் வரும்போது அம்மாவை கேட்கலாம் என்று நினைத்துக் கொண்டேன்.

அன்று நான் படுத்தபோது இந்தக் கவலையே என்னைப் பிடித்து ஆட்டியது நித்திரை வராமல் நெடுநேரம் உழன்றேன். எப்போது உறங்கினேனோ தெரியாது. ஆழ்கடலின் நிசப்தம் போல் கனவுகள் இல்லாத அற்புதமான துயில். திடீரென்று விழிப்பு ஏற்பட்டது. நடுச்சாமம் இருக்கும். அப்பா இன்னும் கண்விழித்து வழக்கு சம்பந்தமாக படித்துக் கொண்டிருந்தார். அம்மா, பாவம்! விழித்திருந்தாள், அப்பாவையே பார்த்தபடி.

‘அம்மா! எங்கடை ரோட்டை அகலாக்க வேப்பமரத்தை வெட்டப்போகினமாம், உண்மையா? என்றேன்.

என்னுடைய குரல் கம்மிப்போய் இருந்தது. அம்மா கொஞ்ச நேரம் பதிலே பேசவில்லை. என் முதுகைத் தடவியபடியே இருந்தாள். பிறகு அம்மா சொன்ன பதில் விசித்திரமாக இருந்தது.

‘தினை விதைத்தவன் தினை அறுப்பான்; வினை விதைத்தவன் வினை அறுப்பான். மரம் வைத்தவன் மரத்தையும் வெட்டுவான்’ என்றாள் பதில் எனக்கு சொன்னதுபோலப் படவில்லை சிவசம்பு மாமாவுக்கு கூறியதுபோலவே நான் உணர்ந்தேன்.

சிவசம்புவின் பேய்களுக்கு சிறைக்கம்பியை உடைக்கும் வல்லமை இல்லையென்ற உண்மை எனக்கு மெதுவாக உறைக்கத் தொடங்கியது. வேப்பம் பொந்துக்குள் மறைத்து வைத்த என் மந்திரக் கோலின் மகிமைகளை இப்போதெல்லாம் என் தங்கச்சிகூட நம்புவதாகத் தெரியவில்லை. சிவசம்பு வெளியே வந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும் என்று நான் அடிக்கடி நினைத்துக் கொண்டேன்.

வழக்கு முடிவு நெருங்கிக்கொண்டு வந்தது. எங்கள் வீடு என்றுமில்லாத ஒருவித இறுக்கத்தில் இருந்தது. அப்பா அடிக்கடி இந்த வழக்கை எடுத்த முட்டாள்தனத்தை நினைத்து நொந்து கொண்டார். இதை எடுத்த நாளிலிருந்து மற்ற வழக்குகளெல்லாம் தள்ளி வைக்கப்பட்டன. வருமானம் சரிந்துவிட்டது. இதில் தோற்றால் அவர் இனி தலை நிமிர்த்தவே முடியாது. அப்பாவுடைய எதிரிகள் இந்த நாளை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார்கள்.

இந்த நாட்களில் அம்மாவைப் பார்க்க பரிதாபமாக இருக்கும். அப்பா படும் கஷ்டத்தை அம்மாவால் தாங்க முடியவில்லை. அதே சமயம் அழுக்கு மூக்குத்தியுடன் ஆடை குலைந்த அவசரத்தில் வந்த சிவசம்புவின் மனைவியையும் அம்மா அடிக்கடி நினைத்துக் கொள்வாள். அப்போதெல்லாம் அம்மா தன் உள்மனத்தில் என்ன பிரார்த்தித்துக் கொண்டாளோ! யார் அறிவார்?

ஆனால் கோர்ட்டில் நடந்தது எல்லோரையும் அதிசயிக்க வைத்தது. இதை அப்பாவோ, அம்மாவோ கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அப்பா அதை அம்மாவிடம் விவரித்தபோது எனக்கு சிவசம்புவில் இருந்த அசைக்க முடியாத நம்பிக்கை மீண்டும் வலுத்தது.

அன்று தீர்ப்புக் கூறும் நாள். சிவசம்பு என்றுமில்லாத விதமாக தன்னை விசேஷமாக அலங்கரித்து வந்திருந்தார். மாப்பிள்ளைக் கோலம்; பட்டு வேட்டி, உத்தரீயம். நெற்றியிலே திருநீறு, குங்குமப்பொட்டு என்று கலாதியாக இருந்தார். பார்த்தால் பத்து வயது குறைந்தே காணப்பட்டார். கண்களில் நம்பிக்கையும், முகத்திலே மாறாத புன்னகையுமாக தோற்றமளித்தார்.

அப்பாவுக்கு அவரைப் பார்த்ததும் கதி கலங்கிவிட்டது. இவ்வளவு நம்பிக்கையுடன் இந்த மனுசர் வந்திருக்கிறாரே! ஆயிரம் ஓட்டைகள் உள்ள கேஸ் கச்சேரி பார்க்கப் போவது போல வந்திருக்கிறார் என்று நினைத்துக் கொண்டார்.

அரசாங்கத் தரப்பு வக்கீல் தன் வாதங்களை ஒவ்வொன்றாக வைத்துக் கொண்டு வந்தார். கடற்கரையில் தேடிப் பொறுக்கி ஒவ்வொரு சங்காகக் கோத்து இறுக்கிக் கட்டிய மாலையாக அது இருந்தது. அவ்வளவு நெருக்கமாகவும், இடைவெளியே இல்லாமலும் நேர்த்தியாக வாய்த்திருந்தது.

அப்பா வாதாடும்போது ஒவ்வொரு சாட்சியாக உடைத்துக்கொண்டே வந்தார். எல்லா வாதமும் கடைசியில் வந்து கொலை செய்ய பயன்பட்ட கத்தியிலேயே தொங்கி நின்றது. அங்கேதான் அப்பாவின் வாதம் எதிர்பாராத வகையில் திசை திரும்பியது எதிர்க் கட்சிக்காரர்கள் திகைத்துப் போய்விட்டார்கள்.

கத்தியிலேயே சிவசம்புவின் மனைவியின் ரத்த வகை இருந்தது; சிவசம்புவின் ரத்த வகையும் இருந்தது. இது தவிர ஒரு மூன்றாவது குரூப் ரத்தமும் கண்டு பிடிக்கப்பட்டது. இதை எதிர்க்கட்சி தெரிந்திருந்தும் சாமர்த்தியமாக மறைத்துவிட்டது. அப்பா இந்த ஓட்டையை குரங்குப் பிடியாகப் பிடித்து விஸ்தரித்துவிட்டார். இந்த வாதம் எதிர் தரப்பு சோடனையில் ஓர் ஆழமான சமுசயத்தை உண்டு பண்ணிவிட்டது.

தீர்ப்பு வழங்கிய நீதிபதி குற்றம் போதிய அளவுக்கு நிரூபிக்கப்படவில்லை என்று கூறி சிவசம்புவை விடுதலை செய்தார். அப்பொழுதுதான் ஒருவரும் எதிர்பாராத அந்த ஆச்சரியம் நடந்தது.

சிரித்துக்கொண்டே வெளியே வந்த சிவசம்பு தன் நண்பர்களையும் உறவினர்களையும் போய்க் கட்டிக் கொண்டார். அவர் முகத்திலே இருந்த புன்னகை மாறவேயில்லை. ‘எப்படி, நான் சொன்னது போலத்தான் நடந்தது! பார்த்தீங்களா?’ என்பது போல் இருந்தது. அவர் பார்வை. அப்பா இவையெல்லாவற்றையும் பார்த்து பொருமிக்கொண்டு ஒரு பக்கமாக நின்றார்.

ஆரவாரமெல்லாம் முடிந்த பிறகு சிவசம்பு சாவகாசமாக அப்பாவிடம் வந்தர். ‘பார்த்தீங்களா ஐயா! நான் சொன்னன்! என்னை ஒருவரும் அசைக்க முடியாது!’ என்றார்.

இந்த வழக்குக்காக அப்பா இரவிரவாகக் கண்விழத்து தயார் செய்திருந்தார். ஒரு சாட்சி கூட சாதகமாக இல்லை; ஒரு தடயமாவது வழி கொடுக்கவில்லை. தன்னுடைய மற்றக்கேஸ்கள் எல்லாவற்றையும் தூக்கி மேலே போட்டுவிட்டு இதற்காக பாடுபட்டு வேலை செய்திருந்தார். சல்லிக் காசுகூட வாங்கியதில்லை. கடைசி நிமிடம் வரை சிவசம்பு தூக்கிலே தொங்குவது நிச்சயமாக இருந்தது. இவர் என்ன சொல்கிறார்?

அப்பா ஸ்தம்பித்து நின்றார். அவர் வசம் இருந்த திகைப்பு எல்லாம் தீர்ந்துவிட்டது.

ஐயா, பார்த்தீங்களா! இதைப் பாருங்கோ! என்று தன் நெற்றிப் பொட்டைக் காட்டினார்.

சிதம்பரத்தம்பூவை அரைச்சு வைத்தது போல கருஞ்சிவப்பில் ஒரு பொட்டு.

இது வசியப் பொட்டு ஐயா! என்னை அசைக்க முடியாது! நீதவான் இதைப்பார்த்து மயங்கித்தான் தீர்ப்பு சொன்னவர்; எனக்கு இது முந்தியே தெரியும், ஐயா!” என்றார்.

அப்பா இதைக்கேட்டுவிட்டு ஆழமான சோகத்தோடு காணப்பட்டார். `இனி விடுங்கோ! வழக்கை வென்று விட்டீங்கள்தானே! என்றாள், அம்மா .

பள்ளிக்கூட பஸ் சந்தியிலே என்னை இறக்கிவிட்டது. நான் கட்டாடி பொதி சுமப்பதுபோல் என் புத்தகங்களைக் காவியபடி வீட்டை நோக்கி அடியெடுத்து வைத்தேன். எனக்கு முன்னால் நாலைந்து பள்ளிக்கூட மாணவிகள் சீருடையில் போய்க் கொண்டீருந்தனர். எல்லோரும் சடை நுனியில் ஒழுங்கா நீல ரிப்பன் கட்டியிருந்தார்கள். குழந்தைகளும் இல்லை; பெண்களும் இல்லை. கிலுகிலுவென்று எதற்கெடுத்தாலும் சிரிக்கும் இடைப்பட்ட வயது.

பாம்புக் குட்டிகள் போல ஒருவரோடு ஒருவர் பின்னிக் கொண்டு நடந்தனர். ஒருத்தி ஏதோ சொல்ல மற்றவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். ஒருத்தி தோளை இன்னொருத்தி இடித்தாள். மறுபடியும் சிரிப்பு. நாளையே பிறக்காது போல அந்தச் சந்தோஷம் இருந்தது.

என்னுடைய மனது அவர்களுடைய குதூகலத்தில் கலந்து கொள்ளவில்லை. புத்தகம் என்றுமில்லாமல் கனத்தது! மனசும் அப்படித்தான்!

விளக்குத் திரியை தூண்டியதுபோல திடீரென்று என் கண்கள் பிரகாசமடைந்தன. மேகங்கள் இடம் மாறியிருந்தன. சூரியன் ஆடைகளை அவிழ்த்தெறிந்துவிட்டு வெட்கமில்லாமல் வெளிச்சத்தை வீசிக்கொண்டிருந்தான்.

அப்போதுதான் கவனித்தேன். ஏதோ வெறிச்சென்றிருந்தது. என்னுடைய வேப்பமரத்தைக் காணவில்லை. அது இருந்த இடம் வெட்டவெளியாய் கிடந்தது.

ராமனுடைய வாலியைத் துளைத்தபோது அவன் ஆச்சாரம் போல விழுந்து கிடந்தான் என்று கவி வர்ணிக்கிறார். ஆச்சாரமே விழுந்து கிடந்தால் அதை எப்படி வர்ணிப்பது?

எப்பேர்ப்பட்ட மரம் அது! ஐந்து தலைமுறையாக நின்று நிழல் தந்த மரம் இப்படி கேட்பாரற்று நீட்டிலும் விழுந்திருந்தது. விண்ணையும் மண்ணையும் தொட்டுக் கடவுளுடைய அற்புதத்துக்கு சாட்சியாக இருந்த மரம் இப்படி அநாதையாகக் கிடந்தது.

மரத்தை வெட்டிய இடத்தில் இருந்து பால் கசிந்த வண்ணம் இருந்தது. அதை நேற்றுவரை நம்பியிருந்த காக்கைகளும், கிளிகளும், மைனாக்களும், அணில்களும் போகும் திசை தெரியாமல் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தன. கருஞ்சிட்டு ஒன்று இறக்கையை அடித்து அடித்துப் பறந்து எதோ சேதி சொல்லப் பார்த்தது. என்ன நியாயம் இது? இவர்கள் இந்த மரத்தை வைத்தார்களா, வெட்டுவதற்கு. அம்மா சொன்னாளே, மரம் வைத்தவன் வெட்டுவான் என்று.

நான் புத்தகப்பையை கீழே வைத்துவிட்டு மெல்லப்போய் என்னுடைய மரத்தைத் தொட்டேன். என்ன மணம்! என்ன சுகமான ஸ்பரிசம். அது கொடுத்த நிழலும், அதனுடைய ரகஸ்யமான பொந்தும் மறைந்துவிட்டன. அந்தப் பறவைகளின் ஒலிகள் எனக்கு கேட்கப்போவதில்லை. என்னுடைய அணில்களை நான் பார்க்கப் போவதில்லை. என் மீதுள்ள மதிய உணவு அவைக்கு கிடைக்கப் போவதில்லை. என் நெஞ்சை ஏதோ அடைத்து மூச்சு முட்டியது.

அப்போதுதான் கவனித்தேன். அப்பா வெளி விறாந்தையில் தனியாளாக இருந்தார். அவர் அப்படி இருந்து நான் கண்டதில்லை. அப்படியான ஒரு சோகத்தையும் அவர் முகத்திலே நான் இதுக்கு முன்பு பார்த்ததில்லை.

‘சின்னவனே!’ என்று அப்பா என்னை கையைத் தூக்கி கூப்பிட்டார். கதிரையில் சாய்ந்துபோய் ஆயாசமாக இருந்தார். கழுத்திலே கட்டியிருந்த இரட்டைவால் தளர்த்தியிருந்தது.

நான் காலைத் தேய்த்து தேய்த்து மெதுவாகப் போனேன். கீழே பார்த்தபடியே வெகு நேரம் நின்றேன். கண்களில் தேம்பிய நீர் வழிந்து விடாமல் இருக்க இமைகளை மூடாமலே வைத்துக் கொண்டேன். அப்பா என்னை இரண்டு கைகளாலும் தூக்கி மடிமேல் இருத்தினார். என் தலையைத் தடவி ‘படிக்கிறாயா? என்று கேட்டார். நான் தலையை ஆட்டினேன்.

வழக்கம்போல் அவர் என்னைக் கீழே இறக்கி விடவில்லை. எனக்கும் ஓடுவதற்கு ஓர் இடமும் இல்லை. அவருடைய கதகதப்பான மடியிலேயே இருந்தேன். நாங்கள் இருவரும் எங்கள் எங்கள் துக்கங்களில் மெய்மறந்துபோய் இருந்தோம்.

– 1996-97, வடக்கு வீதி (சிறுகதைத் தொகுப்பு), மணிமேகலைப் பிரசுரம், நவம்பர் 1997

– அ.முத்துலிங்கம் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2003, தமிழினி, சென்னை.

Print Friendly, PDF & Email

0 thoughts on “வசியம்

  1. உதவி வரைத்தன்று உதவி ;உதவி
    செயப்பட்டார் சால்பின் வரைத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *