கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 21, 2021
பார்வையிட்டோர்: 3,758 
 

ஸ்பிடி (Spiti valley, Himachal Pradesh) பள்ளத்தாக்கிற்கு என்னைக்காவது போயிருக்கீங்களா?

இந்தியாவிற்கு வடக்கே இமைய மலையில் இருக்கும் ஒரு தொலைதூர பள்ளத்தாக்குதான் இந்த ஸ்பிடி. மக்கள் தொகை குறைவான, மொபைல் சிக்கனாலே கிடைக்காத இடம் இது. அதனாலதான் நான் அங்கே போனேன்.

நிம்மதியா ஒரு சுதந்திரப் பறவை மாதிரி உணரத்தான் நான் அங்கே போனேன். நான், என் தோழி மற்றும் என் டிரைவர் மட்டும்தான் அங்கே போனோம். அன்று ராத்திரி என் டிரைவர் எங்களுக்கு ஒரு பேப்பர் கப்புல நாட்டு சரக்கு ஊத்திக் கொடுத்தாரு. ஐயோ, என்ன ருசி.. அதை மறக்கவே முடியாது. கசப்பான அந்த விஷத்தை வாங்கி நாங்க குடிச்சோம், சும்மா ஒரு சநதோஷத்துக்கு. அவ்வளவுதான்..

நான் என்னோட கார்மீது ஏறி உட்கார்ந்தேன். சில்லுன்னு வீசிய ஊதக்கத்து என் உடம்புக்கும் மனசுக்கும் அவ்வளவு புத்துணர்ச்சி கொடுத்தது. முப்பது வயசுல இருக்கற கல்யாணமான மிடில் கிளாஸ் பொண்ணுக்கு இதெல்லாம் நெனச்சுக்கூட பார்க்கமுடியாத ஒன்று. தெரியாத மனிதர்களுடன், தெரியாத இடத்தில் என்னுடைய கணவர் மற்றும் வீட்டின் கண்காணிப்புல இருந்து நான் விலகி இருப்பதை நெனச்சா என்னாலேயே நம்ப முடியல.

இந்த திரில்லலுக்காக மட்டும்தான் இதைச் செய்யல. வீட்டை விட்டு மொபைல் சிக்னலே இல்லாத ஒரு இடத்துக்கு வருஷத்துக்கு ஒரு வாட்டியோ, ரெண்டு வாட்டியோ போறதுல பல ஆழமான காரணங்கள் இருக்கு. நானும் எனது கணவரும் ஓவியர்கள்; பயணம் செய்யறது எங்க ரெண்டு பேருக்கும் பொதுவான பொழுதுபோக்கு. ஆனா நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா பயணிச்சா, அவரு என்னை ஒரு பொறுப்பா நினைப்பாரு.

எதுல பயணிப்பது, எந்த ஹோட்டலில் தங்குவது, நாள், நேரம் போன்ற எல்லாத்தையும் அவருதான் முடிவு செய்வாரு. என் விருப்பத்தையும் பேச்சுக்கு கேட்பாரு; ஆனா ஏற்கனவே அவர் எடுத்த முடிவுகளுக்கு நான் ‘ஆமாம்’ சொல்லவேண்டியதாக இருக்கும்.

நான் ஒரு ஹோட்டலுக்குள்ள போறதுக்கு முன்னாடி அவரு அந்த இடத்த முதல்ல சுத்திப்பாப்பாரு; அவருதான் முதல்ல மெனு கார்டை கையில் எடுப்பாரு. எடுத்து நான் என்ன சாப்பிட விரும்பறேன்னு கேட்பாரு. ஹோட்டல் கதவ சாத்துறதுல இருந்து எங்க பெட்டி படுக்கைகளை தூக்கிறவரைக்கும் எல்லாத்துலயும் அவருதான் முன்னிலை வகிப்பாறு.

நான் அவருக்கு ஒரு பொறுப்பு மாதிரிதான் இருந்தேன்; அவருதான் எல்லாத் துலேயும் முடிவெடுப்பாரு. போதுமடா சாமி!! எனக்கு நிச்சயமா ஒரு பிரேக் தேவைப்படுது! என் பையன் பிறந்ததும்தான் நான் இதை இன்னும் உணர ஆரம்பித்தேன். என் வேலையும் பயணங்களும் முற்றிலும் தடை பட்டுச்சு. ஆனா என் கணவர் இதயெல்லாம் பழைய மாதிரி இப்பவும் தொடர்ந்து செய்யறரு.

அப்போதுதான் நான் தனியா பயணம் போகணும்னு முடிவு செய்தேன். அப்படி நான் போகாணும்னா என் கணவர் தனியா வீட்டில் இருந்து எங்க பையனை பாத்துக்கணும். அவரும் அதுக்கு சம்மதிச்சாறு. அவர் இல்லாத அந்த முதல் பயணம் ரொம்ப திட்டமிட்டதா இருந்திச்சு. இருந்தாலும் அவரு இரண்டு அல்லாது மூன்று மணி நேரத்துக்கு ஒருவாட்டி மெசேஜ் இல்லன்னா கால் செய்து, “நான் போய்ச் சேரந்துட்டேனா? டிராபிக் இருந்துச்சா; இதை செக் பண்ணியா? அதை செக் பண்ணியா?ன்னு கேப்பாறு.

என்னோட பாதுகாப்புல அவருக்கு ரொம்ப அக்கறை உண்டுன்னு எனக்குத் தெரியும். இருந்தாலும் இப்படி நிமிஷத்துக்கு நிமிஷம் செல்போன் செய்து நான் எங்க இருக்கேன்; என்ன செய்யிறேன்னு சொல்லி சொல்லி நான் அலுத்து போயிட்டேன். என்னை யாரோ பாத்துக்கிட்டே இருக்கா மாதிரியும், யாரோட கண்காணிப்புலயோ நான் இருக்கிற மாதிரியும், என் பயணத்தை யாரோ டிராக் செய்யிற மாதிரியும் இருக்கும்.

அதனாலதான் மொபைல் சிக்னலே இல்லாத இடம் எதுன்னு தேட ஆரம்பிச்சேன். வீட்டுக்கு அடிக்கடி போன் செய்து வீடு சம்பந்தமான கேள்விகளுக்கு பதில் சொல்லி, என் கணவர் சாப்பிட்டாரா இல்லையா என் பையன் ஹோம் ஒர்க் செய்தானா இல்லையா? என்றெல்லாம் என் இன்ப பயணத்தின்போது நான் கேட்கவே கூடாதுன்னு முடிவு செய்தேன்.

நான் முப்பது வயதிலிருக்கும் கல்யாணமான மிடில் கிளாஸ் பெண்; இப்போ நான் ஏழு வயசு பையனுக்கு அம்மா என்பது உண்மைதான். ஆனா அது மட்டும்தான் எனக்கான அடையாளமா? கல்யாணமான ஒரு பெண், விதிமுறை நாட்களில் தன்னோட கணவர்கூட மட்டும்தான் வெளியே போகணும்னு ஏதாவது சட்டம் இருக்கா என்ன? ஒரு பெண் கணவர் இல்லாம தன் இன்பததுக்காக பயணம் செய்யுறது பல பேருக்கு வித்தியாசமா தெரியுது. குறிப்பா எங்க குடும்பத்துக்கு,

நான் முதல் முறையா ஒரு பயணம் போக முடிவு செய்தது என் மாமியாருக்கு ரொம்ப விசித்திரமா தெரிந்தது. ஆனா நான் ஏன் இப்படி செய்யுறேன்னு புரிந்துகொண்ட என் கணவர் என் மாமியாருக்கு விளக்கம் கொடுத்த பிறகு அவங்க எனக்கு தடை எதுவும் விதிக்கவில்லை.

ஆனா, என்னைப் பெத்த தாயே இதைப் புரிந்துகொள்ள இன்னும் சில மாதங்கள் ஆகும் போல. இந்தவாட்டி அவங்ககிட்ட சொல்லாமலே நான் கிளம்பிட்டேன். அப்புறம் அவங்க எனக்கு போன் பண்ணாங்க.

“நீ எங்கேடி போனே? நேத்துல இருந்து உனக்கு போன் பண்ணிக்கிட்டே இருக்கேன்.. லைனே கிடைக்கல..”

“நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன் அம்மா.”

“என்னது மறுபடியும் பயணமா?”

“ஆமா, சும்மா ஒரு மாற்றம் வேணும்னு தோணிசிச்சு. இந்த வாட்டி கார்லதான் போனேன்.”

“சரி, உன் பையனும், கணவரும் எப்படி இருக்காங்க?”

“அவங்களுக்கு என்ன? நல்லாவே இருக்காங்க. ஆனா இப்ப என்கூட இல்லை.. வீட்டுல இருக்காங்க.”

“அடக் கடவுளே, நீயெல்லாம் ஒரு அம்மாவா? அந்தச் சின்னக் குழந்தையை விட்டுட்டுப் போக உனக்கு எப்படிடி மனசு வந்துச்சு? அம்மா நம்மள விட்டுட்டுப் போயிட்டாங்களேன்னு உன் பையன் படும் வருத்தம் அந்தக் கடவுளுக்குத்தான் தெரியும். சரி,உன் மாமியார் எப்படி இதுக்கு அனுமதிச்சாங்க? என்றெல்லாம் அடுக்கிட்டே போனாங்க..

“அம்மா, நீ என்னை ஒரு கயத்துல கட்டிப் போடணுமினு நெனக்கிறேயா என்ன?” என்று நான் திருப்பிக் கேட்டேன்.

இது எனக்கு புதிதல்ல; ஒவ்வொரு தடவை நான் பயணம் போகும்போதும் இது நடக்கும். அவங்களுக்கு இதுல விருப்பம் இல்லைன்னு எனக்குத் தோணல. ஆனா மத்தவங்க என்ன நினைப்பாங்களோ என்கிற பயம்தான் அவங்களுக்கு பெருசா தெரியுதுன்னு நான் நினைக்கிறேன்.

நான் யார் என்ற தேடுதலுக்காக நான் தனியா போக விரும்புகிறேன். என் குடும்பத்தபத்தின கவலையும், அக்கறையும் எனக்கும் இருக்கு. அதே சமயத்துல என்னை நானே பாத்துக்க வேண்டிய பொறுப்பும் எனக்கு இருக்கு. இந்த மாதிரி நான் தனியா போகும்போது பொறுப்பு, கடமை ரெண்டுமே என்னுடையதா இருக்கு. நான் பாதுகாப்பாத்தான் இருப்பேன். நிறைய சாகசங்கள் செய்யவும் விரும்புகிறேன். சொல்லப்போனா ஒரு வித்தியாசமான பெண் நான்.

ஸ்பிடி பள்ளத்தாக்கில், எங்க டிரைவர் மதுபானம் குடித்துவிட்டு நாட்டுப்புறப் பாடல்களை ரசித்துப் பாடினாரு. ரொம்ப ரம்மியமாக இருந்திச்சு. இந்த அனுபவங்களும், இப்படிப்பட்ட மனுஷங்களும்தான் என் நிஜமான உலகம்.

இந்த லூட்டி அனுபவங்கள் எல்லாம் கிடைக்கணும்னா கல்யாணமான பெண்; மனைவி; அம்மா என்ற பட்டத்தையெல்லாம் சில நாட்களுக்கு நீக்கினா மட்டும்தான் பெற முடியும்.

Print Friendly, PDF & Email

ஒட்டாத உறவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2023

பணம் பிழைத்தது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *