ராஜத்தின் காதல்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: மணிக்கொடி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 6, 2023
பார்வையிட்டோர்: 5,079 
 
 

(1935ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்று ஞாயிற்றுக்கிழமையாகையால் மத்தியான்னம் சாப்பாடானதும் வீட்டைக் கொஞ்சம் சுத்தப்படுத்தலாம் என்று முனைந்தேன். இருட்டறையான உக்கிராணத்துள், அடுக்குள், அலமாரி, புரை எல்லாவற்றையும் காலிசெய்து சாமான்களைக் கூடத்தில் கொண்டுவந்து நிறைத்தேன். அடுக்குள்ளை நான் சோதனை போடுவதில் என் மனைவிக்கு இஷ்டமில்லை. பல தடவை, ‘அங்கொன்றுமில்லை, அங்கொன்றுமில்லை’ யென்று என்னைத் தடுத்தாள்.

‘இல்லாவிட்டால் நல்லதுதான். ஒரு தரம் எல்லாவற்றையும் இடம் மாற்றி வைத்துச் சுத்தமாகப் பெருக்கிவிட்டால் கெடுதல் என்ன?’ என்று சொல்லிக் கொண்டே அடுக்குள்ளை ஆராய ஆரம்பித்தேன்.

ஒரு மூலையில் சாமான்கள் கட்டிவந்த காகிதங்களையெல்லாம் சுருட்டிச் சுருட்டி வைத்திருந்தாள். அவற்றையெல்லாம் எடுத்துக் குப்பையில் போட்டேன்.

‘அதை ஏன் குப்பையில் போடுகிறீர்கள்உ பேப்பர்காரனிடம் போடலாமே!’ என்று அவள் குறுக்கிட்டாள்.

‘ஒரு வண்டி இருக்கிறதே! இத்தனை நாள் போட்டிருக்கலாமே!’ என்று சொல்லிக்கொண்டே அஞ்சறைப் பெட்டியை எடுத்தேன்.

‘அதற்குள் என்ன இருக்கிறது உங்களுக்கு?’ என்று கொஞ்சம் கோபத்துடனேயே அதைக் கையிலிருந்து வெடுக்கென்று பிடுங்கப் பார்த்தாள் நீலா.

தான் அதைப் பார்க்கக் கூடாதென்று அவள் அவ்வளவு கவலைப் பட்டதிலிருந்து அதில் ஏதோ விசேஷம் இருக்கிறது என்று தெரிந்து கொண்டேன்; அல்ல, அது பொய், அதில் விசேஷம் இருக்கிறதைத் தெரிந்துதானே நான் அதைக் கையில் எடுத்ததே!

எனவே நான் பிடியை விடவில்லை. வெகு உற்சாகமாக அதைத் திறந்தேன். அதற்குமேல் ஒன்றும் நடக்காது என்று தீர்மானித்து என் மனைவி சற்று விலகிப்போய் நின்று கொண்டாள். மிருகக் காட்சிச் சாலையைப் பார்த்திருக்கிறோம். அந்த அஞ்சறைப்பெட்டி ஒரு சின்னப் புழுக்காட்சிச் சாலையாக இருந்தது.

ஒவ்வோர் அறையிலும் ஒரு தினுசுப் புழு. உளுத்தம்பருப்பு அறையில் ஒரு வகை; சீரக அறையில் ஒரு வகை. நான் அதைத் திறந்ததும் அதிலிருந்து குப்பென்று வாடை வந்தது. ஒருவிதமான விஷமச் சிரிப்புடன் தீலாவின் முகத்தைப் பார்த்தேன்.

அந்த அஞ்சறைப் பெட்டியை நான் இப்போது உபயோகிக்கிறதே. இல்லையே! எல்லாச் சாமான்களையும் ஓவல்டின் டப்பாக்களிலல்லவா வைத்திருக்கிறேன்’ என்று அவளாக ஆரம்பித்தாள்.

‘பின் ஏன் இதைக் குப்பையில் கொட்டிக் காலி செய்யாமல் வைத்திருக்கிறாய்?’ என்று கேட்டேன்.

‘செய்யணும்; எங்கே? இந்த பீடையைப் பார்த்துக்கறத்துக்கே பொழுது சரியாய்ப் போகிறது’ என்று தெய்வமே என்று தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த ராஜத்தைச் சுட்டிக் காட்டினாள்.

உடனே நான் ராஜத்தை எழுப்பினேன்.

‘அவனை ஏன் எழுப்புகிறீர்கள் இப்பொழுது? இப்படிச் சாமானை யெல்லாம் கீழே இறக்கிவைத்து விட்டு அவனையும் எழுப்பி நடுவில் விட்டு விட்டால் போதும்’ என்றாள் நீலா.

‘இல்லை,அவம்மா அவனுக்காக வளர்த்து வைத்திருக்கிற புழு தினுசுக்களை அவனுக்குக் காட்ட வேண்டாமா?’ என்று அவளிடம் சொல்லிவிட்டு, ‘டே, ராஜம், இதோபார், பூச்சி” என்று பெட்டியை அவனுக்குக் காட்டினேன்.

அவ்வளவுதான்! ஒரே உற்சாகம் அவனுக்கு, சாமான்களுக்கு நடுவே பாய்ந்தான். அதற்குப் பிறகு அவன் தாயும் நானும் எவ்வளவு பராக்குக் காட்டியும் அவனை அந்த இடத்திலிருந்து வெளியேற்ற முடியவில்லை. என்ன சாமான்கள்! ரிப்பேரான ஹரிகேள் லாந்தர் இரண்டு, உடைந்த ஜாடி, உபயோகித்த தைல சீசாக்கள், பௌடர் டப்பிகள், உடைந்த பொம்மைகள்!

ராஜம் எல்லாவற்றையும் புரட்டிப் புரட்டிப் போட்டான், நாலு பக்கங்களிலும். என் மனைவிக்கு இப்பொழுது ஆனந்தம்.

‘சொன்னாக் கேட்டாத்தானே!’ என்றான்.

திடீரென்று ராஜம் ஒரு கத்துக் கத்தினான். இருவரும் தூக்கிவாரிப் போட்டதுபோல அந்தக் களேபரத்திலிருந்து தேன் ஏதாவது கொட்டி விட்டதோ என்று பார்த்தோம். குப்பையிலிருந்து அவன் இரண்டு கையும் போன மரப்பாச்சிப் பொம்மையொன்றைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டு அதைப்பார்த்துச் சிரித்து ஆனந்தப்பட்டு கொண்டி ருந்தான். சரிதான் என்று நாங்கள் வேற காரியங்களைக் கவனித்தோம்.

ஆனால் அந்த நிமிஷமுதல் ராஜம் அந்தப் பொம்மையை விட வில்லையென்பதை நாங்கள் கவனிக்கவில்லை.

இரவு சாப்பாடாயிற்று. நீலா வேறோர் இடத்தில் ஸ்டவ்வை வைத்துச் சமையல் செய்தாள். ஏனெனில் வெளியே எடுத்துப்போட்ட சாமான்களை அடுக்குள்ளில் அந்த அந்த இடத்தில் எடுத்து வைக்க வில்லை. எல்லாம் தாறுமாறாகக் கிடந்தன.

மாலையிலேயே தூங்கிப் போய்விட்ட ராஜம் நாங்கள் படுத்துக் கொள்ளப் போகிற சமயத்தில் எழுத்தாள். எழுந்ததும் அவன் தாய் பால் புகட்டுவதற்காக அவனைத் தொட்டிலிலிருந்து எடுத்தாள். திடீரென்று அவன் வீரிட்டு அழ ஆரம்பித்தான். அவன் தாய் என்ன என்னவோ சமாதானம் செய்தாள். அழுகை அடங்கவில்லை. நானும் சர்க்கரை கற்கண்டு எல்லாம் கொடுத்துப் பார்த்தேன். நடக்கவில்லை. குழந்தை விக்கி விக்கி அழுததில் அவன் உடம்பு வியர்த்துக் கொட்டியது. மூச்சே விட முடியவில்லை அவளால்; அப்படித் திணறினான்.

‘கொழந்தெ என்னமோ பயப்பட்டுனுட்டாள்’ என்று ஆரம்பித்தாள் நீலா. எனக்குக் கோபம் வந்துவிட்டது. ஏனென்றால் எனக்கு இன்னது செய்வது என்று புரியவில்லை.

திடீரென்று என்கு ஒரு ஞாபகம் வந்தது.

‘அவன் மத்தியான்னம் கையில் வைத்துக்கொண்டிருந்த மரப்பாச்சி எங்கே?’ என்று அவளைக் கேட்டேன்.

‘அதா, அத்தைத் தொட்டிலில் தன் பக்கத்தில் போட்டுக்கொண்டு தூங்கினான். தூங்குகிற வரையில் கையை விட்டுக் கீழே வைக்க வில்லை. அதுதான் சமயம் என்று எடுத்துத் தூரப் போட்டுவிட்டேன்!’

‘எங்கே போட்டாய்?’

‘ஏன், கூடத்துக் குப்பையில்தான் போட்டேன். அதற்கு எதுக்காக இப்படிச் சீறுகிறீர்கள்?’

நான் அவளுக்குப் பதில் சொல்லவில்லை. ஹரிகேனை எடுத்துக் கொண்டு போய்க் குப்பையைக் கிளறினேன். வெகுநேரம் தேடி அந்த மரப்பாச்சியைக் கண்டுபிடித்தேன்.

அதை நான் அவன் கையில் கொடுத்ததுதான் தாமதம்! அவன் அழுகை விசை நின்றதுபோவ நின்றுவிட்டது. அவன் ரோஜா முகத்தில் ஒரு புன்முறுவல் பூத்தது. தன் சிறு இதழ்களைக் கூட்டி அந்தப் பொம்மையை முத்தமிட்டான். பிறகு அதைக் கையில் வைத்துக் கொண்டு, ‘கக்கா!’ என்றான்.

அந்த நேற்று முளைத்த முளைப்பின் உணர்ச்சிப் பெருக்கைக் கண்டு எங்கள் வாய் அடைத்துப் போய்விட்டது. அந்தப் பொம்மையைக் கையில் வைத்துக்கொண்டே, ‘மொம்மே! மொம்மே!’ என்று சொல்லிய வண்ணம் நிமிஷத்தில் தூங்கிவிட்டான் ராஜம்.

நான் முற்றத்து நிலவில் படுக்கையில் படுத்துக்கொண்டேன். ராஜத்தின் காதல் என் உள்ளத்தைக் கிளறிவிட்டது. என்ன என்னவோ யோசனைகள் ஓடின. டில்லி பாதுஷாவின் பெண், ரங்கநாதர் உருவத்தை வைத்துக்கொண்டு உருகின கதை, ஆண்டாள் ரங்கநாதரை மணந்து மகிழ்ந்த கதை – எல்லாம் சித்திரப் படங்கள்போல என் மனக்கண்முன் தோன்றின.

நீலா மெதுவாக என் பக்கத்தில் வந்து உட்கார்ந்துகொண்டு, ‘எப்படித் தெரிந்தது உங்களுக்கு?’ என்றான்.

‘எனக்கே தெரியாது, நீலா!’ என்றேன்.

– மணிக்கொடி, 10.02.1935

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *