“அப்பா நானு…” என்ற குழந்தைக்கு முத்தம் தந்துவிட்டு “நான் ரொம்ப தூரம் போறேன்… இங்கயே இருடா” என்று சொல்லி செருப்பை மாட்டிக்கொண்டேன். குழந்தையின் பார்வையில் தங்கிய விரோதம் கலந்த விரக்தியை கவனித்தேன். இன்னொரு “அப்பா நானு…” என்றால் அறை விழும் என்பது அதற்கு நன்றாகத் தெரியும். ரெண்டரை வயதில்லையா? எனக்கு பாவமாய்போய் என் கால்கோடி பெறுமானமுள்ள முத்தமொன்றை வாரி வழங்கி, பக்கத்தில் நின்றிருந்த மனைவியை சினிமாவில் வருகிற புருசன் போல் அர்த்த புஷ்டியுடன் பார்த்தேன்.
சினிமா மனைவியாக இருந்திருந்தால் வெட்கப்பட்டோ அல்லது ச்சீ… போ என்றோ சொல்லியிருப்பாள். இன்றைய தேதிக்கு அவள் சினிமா பாணியில் கன்னம் சிவக்க வெட்கப்பட்டு உதட்டை புறங்கையால் மூடி “கொழந்தை இருக்கா” என்று செல்லமாய் சிணுங்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவளும் அவ்வாறு செய்யவில்லை. இருந்தாலும் நான் அந்த அர்த்தபுஷ்டியுடன் பார்த்தேன். அவள் வெட்கப்பட்டு நாணம் மேலிட என்னிடம் பேசியதெல்லாம் ஒரு காலம். இப்பொழுது கோயில் வாசலில் விளக்கை கையில் ஏந்தியபடி நிற்கும் ஆளுயர பெண் சிலைபோல் எனக்கு குழந்தையை முத்தமிட காட்டியபடி நின்றாள்.
நான் மன்னனைப் பாடி பரிசோடு வந்த காலங்களில், பொன் கலங்களில் சுடு சோறிட்டு வெண்சாமரம் வீசியவள்தான் இவளும். நான் மன்னர்களைப் பாடுவதை நிறுத்தி, பின் வெண்சாமரமும், பொன்கலமும் நீங்கலாக மற்றதெல்லாம் சத்தமில்லாமல் சப்தமால்ஜெயின் அடகு கடையில் வைத்து, கடை சேட்டின் கைபட்டு சாபவிமோசனம் அடைந்தன.
“இவளை கூட்டிட்டு போனா எதாவது வாங்கிக் குடுன்னு அடம் புடிப்பா…” என்று கூட்டிப் போகாததற்கு நொண்டிக் கழுதை காரணம் தேடி சொல்ல, அவள் வெடுக்கென்று உள்ளே ஓடினாள். “ஓட்டை பாத்திரத்தை குடுத்து ஆத்தா என்னை தண்ணிக்கு அனுப்பிட்டாளே…” என்பது அவளின் சமீபத்திய தத்துவார்த்த புலம்பல்.
நான் கிளம்பினேன். இருள் கூடிக் கொண்டிருந்தது. கடை வீதியின் ஒவ்வொரு கடையிலும் விளக்குகள் பளிச்சென வெளிச்சம்கூட்ட ஆரம்பித்தன. என் தேனொத்த இனிமையான வீடு சமீப காலங்களில் பாகற்காயாய் உருமாறிய பின்பு கடை வீதிகளுக்கு வருவது அதிகமாகிவிட்டது. லாரி ஓட்டுவது, வீட்டுக்கு வருவது, பின் முகம் கழுவிக்கொண்டு கடைவீதிக்கு வந்துவிடுவது.
சிலநாள் கார்ப்பரேஷன் மகாராஜா மானாவாரியாக நீர் விட்டிருந்தால் குளித்துவிட்டு வந்தும் கடைவீதியை நகர்வலம் வருவேன். நகர்வலம் முடிந்த பின்பு என் பிள்ளையுடன் பிள்ளைத் தமிழ் பேசுவேன். மனைவி இரக்கம் காட்டினால் கன்னம் வருடுவேன். அந்த கன்னம் வந்த புதிதில் அப்பன் வீட்டு தீனியில் மெருகோடு மினுமினுத்து வந்ததுதான். தற்போதைக்கு மினுமினுப்பு காலாவதியான ஒன்று. எதிர்பாராத தருணங்களில் உதட்டிலெல்லாம் முத்தம் தந்து அவளை மல்லுக்கட்டுவேன். இப்படி அடிக்கடி அல்லது எப்பொழுதாவது செய்வேன். அதனால் என் மனைவி மீண்டும் வயிற்றை நிரப்பிக் கொண்டாள். பப்பாளிப்பழம் எள்ளுருண்டை என்று என்னென்னவோ தின்று பார்த்தும் “நான் இந்த உலகத்தை பார்த்தே தீருவேன்” என்று அடம் பிடிக்கும் ஐந்தரை மாத வயிற்று சிசுவோடு நிற்கிறாள்.
இப்படி பிள்ளையோடும் பெண்டோடும் கொஞ்சுவது நிரந்தர சந்தோச மார்கமில்லை. ஐந்து மாத பிள்ளைத்தாச்சியின் பிலாக்கனங்கள் கேட்க இனிமையானது இல்லை.
கடைவீதியில் பூவிற்கும் பெண்ணிடம் “முழும் பூ என்ன விலை..?” என்று கேட்பது இனிமை. அவள் சொன்ன விலைக்கு பாதி விலையில் “தர்றயா…?” என்று கேட்பது இன்னும் இனிமை. அதற்கு அந்த பூக்காரி முறைப்பது இன்னும். இன்னும் இனிமை. “சர்தான் தராட்டி போ… நான் அங்க வாங்கிக்கறேன்…” என்று எதிர்கடைக்கு போவது போல் பாவம் காட்டுவதும் பூக்காரப் பெண்ணின் பொய்க் கோபமும் மிக மிக இனிமை.
பூவாங்கும் நோக்கமோ இல்லை, காசோ இல்லை என்றாலும் பிள்ளைப் பூச்சியின் நண்டு பிராண்டல்களில் இருந்து தப்பிக்க கடைவீதி நல்ல வழி.
நான் மெதுவாக நடந்தேன். சற்றே என்னை உற்றுப் பார்ப்பவர்களுக்கு நான் அழகிப் போட்டியில் தொடைகாட்டி இடையாட்டி நடக்கும் நெஞ்சு சிறுவட்டக்காரிகள் நடக்கும் அழுகிநடை போல் இருக்கும். இன்னும் சற்றே என்னை உற்றுப் பார்த்தால் என் கால்களில் நான் போட்டிருக்கும் எட்டணாவிற்கு மூன்று முறை உயிருட்டப்பட்ட, நைந்த தைத்த செருப்பு தெரியும். அதனோடு சமாதானம் பேசி, அது அறுந்து விடாமல் இருக்க கால்களை உள்பக்கம் மடக்கி மடக்கி நடப்பதுதான் எனக்கு அழகிப் போட்டி நடைப்பொழிவைத் தருகிறது. நான் நடந்தேன்.
கடைவீதி நீண்டிருந்தது. வெளிச்சத்தை வாரி இறைத்தபடி நீண்டிருந்தது. பெண்கள். ஆண்கள். பிள்ளைகள். கிழட்டுத் தம்பதிகள் எல்லாம் அலைபாய நீண்டு இருந்தது. நான் ஒவ்வொரு கடையாக நோட்டம் விட்டபடி நடந்தேன். ஒன்றும் வாங்காமல் தினம் ஒருமுறை கடை வீதிக்கு வருபவர்கள் இருப்பார்களா? நான் இருக்கிறேன்.
எனக்கு விழாக்கால ஜவுளிக் கடைகளை மிக பிடிக்கும். அங்குதான் கூட்டம் மொய் மொய்யென மொய்க்கும். அழகான பெண்கள் விற்கவும் வாங்கவும் இருப்பார்கள். தப்பர்த்தம் இல்லை. துணிகளை விற்கவும், துணிகளை வாங்கவும் பெண்கள் இருப்பார்கள். விதவித வண்ணங்களில் மின்சார வோல்டேஜ்; மாயாஜால வெளிச்சங்களில் துணிகள் இருக்கும்.
சுடிதார். புடவை. மிடி. பேண்ட் என்று உடை உடுத்தி டிசர்ட் புடைப்புடன் பெண்களும், தொந்திகளை இறுக்கிக்கட்டி, வழுக்கைகளுக்கு பவுடர் மற்றும் மீசைக்கு சாயம் பூசி கவலை ரேகைகளுடன் ஆண்களும் வலம் வருவார்கள். நான் உள்ளே நுழைந்து சந்தைக்குப் புதிதாய் வந்த துணி ரகங்களை பார்த்துக் கொண்டிருப்பேன். ஏதாவது ஒரு அழகான பெண் பக்கத்தில் நின்று கொண்டால் அந்த பெண்ணின் புருசன் நான்தானென்று அந்த அழகான கடைப்பெண் துணிகளின் மகாத்மியங்களை அடுக்கி சொல்வாள்.
இது பண்டிகைக் காலம். கூட்டம் வழிகிறது. கடையின் முன் பக்கம் “முப்பது முதல் அறுபது சதவீத தள்ளுபடி” என்றும், குலுக்கலில் ஒரு கார் தருவதாகவும் பம்பர் பரிசாக தன் கடையையே தருவதாகவும் பேனர் எழுதி விளக்கு போட்டு போவோர் வருவோரை எல்லாம் ஏமாற்றி உள்ளுக்குள் இழுத்துக் கொண்டிருந்தார்கள். நான் என் அழகிப் போட்டி நடையை துரிதப்படுத்தி ஒரு ஜவுளிக் கடையில் நுழைந்தேன். இதே கடைக்கு வனிதாவை ஒரு நாள் கூட்டி வந்திருக்கிறேன். சிரித்தால் விழும் அவள் உதட்டின் குழிவிலும் பல் வரிசை அழகிலும்தான் நான் வெகு காலம் சொக்கிக் கிடந்தேன். சொல்ல மறந்து விட்டேனே என் மனைவி பெயர் வனிதா இல்லை.
வனிதா ஒல்லியான, சிவப்பான, உதடு பருத்த பெண். பதினெட்டு வயதில் என் முதல் காதலி. முதல் காதலி என்பதில் உள்ள முதல் நான் வாய் தவறி சொன்ன வார்த்தையல்ல. என் புடவையில் அவள் சிரித்த அந்த “பர்த்டே” சிரிப்பு எனக்கு அப்போது பிடித்திருந்தது. இந்த ஜவுளிக்கடையில் வேலை செய்த பெண்ணும்தான் பிடித்திருந்தது. இன்றைக்கும் இந்த ஜவுளிக்கடை பிடித்திருக்கிறது. என் மனைவியோடு வந்தால்தான் இந்த ஜவுளிக்கடையை பிடிக்க மாட்டேன் என்கிறது. மனைவியோடு வரும்போது ஜவுளிக்கடையில் வேலைசெய்யும் பெண்ணை பிடித்திருக்கிறதா? என்ற கேள்விக்கு பதில் சொல்ல எனக்கு விருப்பமில்லை.
ஆளாளுக்கு மனைவி மக்களோடு துணிக் கடலில் குளித்துக் கொண்டிருக்க நான் கடையைவிட்டு அகன்று ஏளனச் சிரிப்பு வழங்கிய செக்யூரிட்டியின் பார்வையை அலட்சியப்படுத்தி வெளிவந்தேன்.
பக்கத்தில் பெயிண்ட் கடை. என்னென்னவோ வண்ணங்கள். வண்ணக் கலவைகள். டிஸ்டம்பர்கள். எனாமல்கள். சற்று நேரம் நின்று வீட்டிற்கு என்ன வர்ணம் அடிக்கலாம் என்று யோசித்தேன். அடர்த்தியான வண்ணங்கள் வீட்டின் அகப்புற அழகை கெடுத்துவிடுகின்றன. மெல்லிய கண் உறுத்தாத வண்ணமாக அடிக்க வேண்டும். பிறகு ஜன்னல், கதவுகளுக்கு சுவற்றின் வண்ணத்தோடு இணைந்த சற்றே தூக்கலான வண்ணம். வானம் சாயிங்காலத்தில் ஜொலிப்பதைப்போல் இயல்பான வண்ணமாக இருக்கும்படி அடிக்க வேண்டும்.
யோசித்தேன். என்னென்னவோ வண்ணங்களை நினைத்தபடி செருப்பை மறக்காமல் இழுத்து இழுத்து நடந்தேன். என் இரண்டு மாத வாடகை பாக்கி ஆயிரத்தி எழுநு}று ரூபாயை அடைத்துவிட்டு நான் நிச்சயமாக கோட்டை போல் வீடு கட்டுவேன் என்றும், என் ஜாதகத்தில் என்னென்னவோ யோகக்கார கிரகங்கள் சஞ்சாரிப்பதாகவும் இரண்டு ரூபாயை வாங்கிக் கொண்டு ஒரு ஜோசியன் சொன்னான்.
அப்படி நான் வீடு கட்டாவிட்டால் பாதாம் பருப்பு ஊட்டி வளர்த்த பச்சைக் கிளியை பூனைக்கு தின்னக் கொடுப்பதாக அவன் சத்தியம் செய்தான். எனக்கு நம்பிக்கை வந்தது. கிளியை பார்க்க பாவமாக இருந்தது. எதற்கும் என் மனைவியோடு கலந்தே வண்ணங்கள் விசயத்தில் முடிவு எடுக்க வேண்டும்.
சற்று தள்ளி புதுமைப் பொருளகம் என்று தமிழ்ப் பெயர் பலகையுள்ள தமிழ்க்கடையில் பாரின் செண்ட், பாரின் சிகரெட், கீபோர்டு, பேனா, டீ சர்ட்டுகள், வாக்மென், ரேடியோ, டிவி என்று வெளிநாட்டு உருப்படிகளாக வைத்திருந்தார்கள். இங்கு ஆட்கள் கொஞ்சம் பேர்தான் நடமாடுவார்கள். எனக்கு அந்த கடைக்காரன் பழைய பழக்கம். “எதுனா புதுசா வந்திருக்கா பாய்…” என்று கேட்டால் “குரங்கு பொம்மை இருக்கு… பேட்டரியில. நல்லா சார்ஜ் பண்ணிட்டா சாப்பாடு கேக்கும். இல்லேன்னு சொன்னா அழும்…” என்று சொல்லியபடி ஏதாவது ஒரு தமாசை காண்பிப்பான்.
என் வீட்டிலேயே இல்லை என்று சொன்னால் அழுவதற்கு தயாராய் உள்ள உள்நாட்டு தயாரிப்பு, சுதேசிப் பொருள் ஒன்று இருப்பது அவனக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. அவனுக்கு கல்யாண பத்திரிக்கை வைக்கவில்லை. அப்பன் சம்பாத்தியத்தில் காதலித்தபடி படித்த என் அந்தக் காலத்தில் விதவித புதுமை நோக்குகளும், நவீன போக்குகளும் கொண்ட எனக்கும் என் பெண் சினேகிதிகளுக்கும் பிடித்த கடை இதுதான்.
அதன் பக்கத்தில் நகைக்கடை. மிக பிரகாசமானதாய் நிறைய வெளிச்ச விளக்குகளும் கல் பித்தலாட்டங்களும் கொண்ட கடை. அதனுள் நான் நுழைவதில்லை.
புருசன் பெண்டாட்டியாய் வருவார்கள். கிராம் கிராமாய் வாங்குவார்கள். வெள்ளி, தங்கம், நீல, பச்சை, சிவப்புக் கற்கள், பூஜை விக்கிரகங்கள், வெள்ளிப் பாத்திரங்கள் வாங்குவார்கள். காரில் வருவார்கள். ரெண்டு சக்கர வாகனத்தில் ரெக்கை கட்டி பறப்பார்கள். என் போன்றவர்கள் நான்கு கிராம் தாலிக்கு கடை ஏறி பேரம்பேசி. கண்ணாடி அணிந்த நகைக் கடை ஆளின் தாலி அறுத்துவிடுவார்கள். ஏழைக்கெல்லாம் நகைக்கடை ஒருமுறைதான்.
நான் மூன்று முறை இந்த கடைக்கு வந்திருக்கிறேன். முதல் முறை புவனாவிற்கு மோதிரம் வாங்க. இன்னொரு முறை காயத்திரிக்கோ, கோமதிக்கோ காது வளையம் வாங்க. கடைசி முறை என் மனைவியின் மாங்கல்யம் வாங்க.
ஜவுளிக்கடை, வண்ணக்கடை, நகைக்கடை, டீக்கடை என்று மாறிமாறி வரும். பின்பு வளைவு வரும். வந்தால் முதலில் பேக்கரி, கேக்குகள், பிளம்கள், ஐஸ்கிரிம்கள். ஒரு காலத்தில் உடம்பெல்லாம் ஈமொய்க்கும்படி இனிப்பினிப்பாய், வாய்க்கு வந்த பெயரெல்லாம் சொல்லித் தின்று தீர்த்தாயிற்று இந்த பேக்கரியில். நான் என் முதல் வேலையில் சேர்ந்த அன்று, ஒரு குட்டி இன்ஜினியர் ஆன மிதப்பில் கண்ட, போனவர்களுக்கெல்லாம் பப்ஸ், சிப்ஸ், கூல்டிரிங்க்ஸ் என்று வாரியிறைத்திருக்கிறேன். மாபெரும் உபகாரி நான்.
வேலைக்குப் போன இரண்டாம் நாள் நான் இன்ஜினியர் இல்லை என்பது புரிந்தது. நொண்டிக் கழுதையாய் ஆகும் வரை வேலை வாங்கினார்கள். அந்த வேலை ஆதிஆப்ரிக்க அடிமைபோல் இருப்பதாக நண்பர்களிடம் வருத்தப்பட்டு சொல்லி, தரமான ஆங்கிலத்தில் மேனேஜரைத் திட்டி, ஒரு மாத சம்பளத்தை கவனமாக வாங்கிக்கொண்டு முதல் வேலையை விட்டுவிட்டேன். பின் ஒரு வாரம் ஒயின் ஷாப்பில் ஜின் அடித்து ராத்திரியில் ஜென் படித்தேன். இன்னொரு வேலையில் சேர்ந்தேன். இன்னொரு வேலையில் சேர்ந்தேன். இன்னுமின்னுமொரு வேலையில் சேர்ந்தேன்.
பெற்ற அம்மாக்களுக்கு பையன் திருமணம் செய்தால்தான் சொர்க்கத்தில் சீட் கிடைக்கும் போலிருக்கிறது. என் அம்மா பெண் தேட ஆரம்பித்தாள். பெண் பார்க்கும் நேரமாக பார்த்து என் அப்பா பணி ஓய்வு பெற்று, தன் ஆறாயிரம் தடிமனான சம்பளத்தை மூவாயிரமாக பெண்ணின் இடைபோல் சிலிம் ஆக்கிக் கொண்டார். பின் கல்யாணத்திற்கு முன்பே உலகத்திலிருந்து பணி ஓய்வும் பெற்றார்.
என் கல்யாணத்தை பார்க்காமல் போன அவருக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்ததா இல்லையா தெரியாது. அப்பா எங்களுக்கு வைத்து போன சொத்து மிக அற்பம் என்பது தெரியும். நான், என் அம்மா, ஒரு வாடகை வீடு, சில பத்தாயிரம் ரூபாய் கடன். இவைதான் அப்பா சொத்து. அப்பா செத்த பத்தாம் மாதம், கல்யாணம் செய்து கொண்டேன். என் அம்மா, அப்பாவின் கடன் கட்டி பிறைநிலவாக தேய்ந்தாள். பின் பூர்ண அமாவாசையானாள்.
நானும் என் மனைவியும் மட்டும் காலத்தை தள்ளோ தள்ளென்று தள்ளினோம். எனக்கு ஒன்பதாவதாகக் கிடைத்த வேலையை நான் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். ஒரு வேலை அது கூட என்னை கெட்டியாக பிடித்து இருக்கலாம். படித்தது என்னவோ டிப்பளமோ இன் மெக்கானிக்கல். இப்பொழுது ஓட்டுவது பால் லாரி. என் பவிசும் அந்தஸ்தும் தெரிந்து எவனும் என்னை நடத்தவில்லை என்று வேலை வேலையாக தாவி, கடைசியில் நாதியற்று பால் வண்டி ஓட்டுகிறேன்.
வேறு நல்லவேலைக்கு போகலாம். ஒரு மாசம் சோற்றுப் பிச்சைக்காரன் ஆகும் அபாயம் அறிந்தே இந்த வேலையில் ஒட்டி பால் லாரி ஓட்டுகிறேன். கவிதாவிடம் வீரம் காட்டடுவதற்காக லாரி ஓட்டக் கற்றுக் கொண்டது நல்லதாயிற்று.
கஷ்டமென்று என்ன இருக்கிறது இந்த உலகத்தில். எவ்வளவு சந்தோசம் கொட்டிக் கிடக்கிறது நகர கடை வீதியில். எத்தனை தினுசு சிரிப்பு. எத்தனை வித பெண்கள், அழகான கணவன்மார்கள், அப்பாக்கள், அம்மாக்கள், அப்பாக்களின் அப்பாக்கள், அம்மாக்களின் அம்மாக்கள். தினமும் ஏதாவது ஒன்றை வாங்கிக் குவித்தபடி இருக்கிறார்கள். டிவிக்களின் பிரம்மாண்டமென்ன… பிரிஜ்களின் குளிர்ச்சியென்ன… மெத்தென்ற பஞ்சு மெத்தை என்ன… அதை கிடத்த கட்டில் என்ன… தேக்கு பர்னிச்சர்கள். அதோ பாத்திரக்கடை. அதோ பிளாஸ்டிக் உலகம். இதோ நகையங்காடி. மியூசிக் மெசின்கள். மனைவியை பூப்போல வைத்திருக்க என்னென்னவோ கருவிகள். உபாயங்கள். பணம் புரள்கிறது. பஜார்களில் வாங்க கூட்டம் வழிகிறது. நான் கட்டாயமாக மனைவியை இங்கு கூட்டி வருவதை தவிர்த்து விடுவேன். கிட்டாதாயின் வெட்டென மறக்கத் தெரியாது அவளுக்கு.
நான் பத்மினியோடு கடைசியாக சுற்றியது இந்த கடைவீதியில் தான். அவள்தான் என் கடைசி காதலியும் கூட. மொத்தம் எத்தனை காதலி என்பவர்கள் பத்மினியைக் கேட்டு தெரிந்துகொள்ளலாம். அவளுக்குத் தெரியும். அவள் எங்கிருக்கிறாள் என்று எனக்குத் தெரியாது. அவள்தான் என்னை சக்கையாக பிழிந்தவள். அது இது என்று எதையெதையோ என் காதோடு சொல்லி கையோடு வாங்கி கொண்டாள்.
ஒரு முறை வாங்கிக் கொடுக்க காசு போதாமல் அப்பாவின் பீரோவில் இருந்து ஆயிரத்தை எண்ணிக் கொண்டேன். அதில் அவளுக்கு வாங்கி தந்ததில் கன்னத்தில் ஒன்று கொடுத்தாள். கொடுத்தது முத்தம். காசு காணாமல் அப்பா என்னை அதட்டிக் கேட்க அவர் கன்னத்தில் ஒன்று கொடுத்தேன். கொடுத்தது முத்தமல்ல. எனக்கு அம்மா பெண் பேச்சு எடுத்தபோது கவிதா, பத்மினி, கோமதி. என்ற ஒவ்வொரு பெண்களாக மனக் கண் முன் வலம் வந்தார்கள். அவர்களை நான் கல்யாணம் செய்து கொள்ள முடியாது. “நட்பு என்பது தெய்வீகமானது அதை கொச்சைப்படுத்துபவர்களை நரக ஆடு மேயும்” என்பது எங்கள் இலக்கணம். அவர்களின் ஒவ்வொரு சிறப்பு அவயங்களும் என்னை உறுத்தியது உண்மை. அதனால் எனக்கு கிளியோபாட்ராதான் வேண்டுமென்று அம்மாவிடம் நான் அடம்பிடித்தேன்.
என் சோகம் பாருங்கள் இன்றைக்கு கடைவீதியில் எத்தனை எத்தனை வடிவழகான பெண்கள் இருக்கிறார்கள். என் அம்மாவோ சொல்லிவைத்தாற் போல தேவாங்குப் பெண்களாக காண்பித்தாள். பெண் தேடும் அந்த நாட்கள் எனக்கு மிருக காட்சி சாலையில் குரங்குப் பண்ணையை சுற்றி சுற்றி பார்த்த அனுபவ நாட்களாய் இருந்தது.
என் பெண் பார்க்கும் காலத்தில் உலகத்தில் உள்ள பெண்களெல்லாம் அவலட்சணமாய் போனது போல் இருந்தது. அம்மாவோ கிளியோபாட்ரா என்றெல்லாம் ஒருத்தி உலகத்தில் கிடையவே கிடையாது என்று நம்பவைத்து, என் கிளியோபட்ரா ஆசையை போக்கி, கண் எடுப்பும், பல் எடுப்புமுள்ள என் மனைவியை எனக்குக் கட்டி வைத்தாள். அத்தனை நாளும் எந்த ஒரு பெண்ணாலும், புனித நட்பாலும், காதலாலும் கலங்கப்படாத என் கற்புநிலையின் கம்பீரத்தை என் மனைவியிடம் நிரூபித்து இரண்டரை வயதுள்ள என் பெண்பிள்ளைக்கு தகப்பனானேன். பெண் வளர வளர பீடையும் வளரும் என்ற பழமொழி அபத்தமாயிருந்தாலும் பீடை வளர்ந்ததென்னவோ உண்மை.
வந்துவிட்டது பார் இந்த கடை வீதியில் அந்த ஓட்டல். அந்தக்கால அமுதசுரபி. வாயில் நீர் ஊறுகிறது. அம்மாவின் சமயலறையை நொட்டை சொல்லி இங்கு கொட்டிக்கொண்ட காலம் எத்தனை. மசால் தோசையில் வெண்ணை தடவி அது உருகி வழிவதை பார்த்தால் நாக்கில் எச்சில் ஊறும். நாக்கு நீண்ட நான் ச்சீ.. ச்சீ.. என்று எட்டி தூரே போனேன். கிட்டாதாயின் வெட்டன மற.
பின் ஓட்டலை ஒட்டிய சிறு சந்தின் இருட்டில் சிறுநீர் கழித்தேன். பக்கத்து பீடா கடையில் ஒத்தை ரூபாய்க்கு பீடி வாங்கினேன். வீட்டிற்குப் போக இன்னொரு சந்து திரும்பினேன். இந்த சந்தில் தான் அந்த ஜெயின் இந்த ஜெயின் என்று வரிசையாக சேட்டு அடகுக்கடைகள் இருக்கும். இங்கேதான் என்னுடைய எல்லாமே மூழ்கிப் போயிற்று. அம்மா தாலி, மனைவி மூக்குத்தி, சில பித்தளை பாத்திரங்கள், வெள்ளி டம்ளர்கள், துண்டு துக்கடா பாத்திரங்கள், மானம், ரோசம் எல்லாமே சேட்டுக் கடையில் மூழ்கிப் போயிற்று.
அதன் பின், பெண் பின் சுற்றிய வீர தீர செயல்களுக்காக நான் பட்ட கடனால் ஜப்தி என்ற பெயரில் என் உள்ளாடைகள் உட்பட என் சான்றிதழையும் அள்ளிக் கொண்டுபோனார்கள். சேட்டுக் கடையை பார்த்தால் எரிகிறது. ஒன்றும் லேசுபட்ட வாழ்க்கை வாழ்ந்துவிடவில்லை நான். வா என்றால் வர, போ என்றால் போக எத்தனை பட்டாளம் என் பின்னால் இருந்தது. காசு… காசு… “ம்… நாட்டியம் ஆரம்பமாகட்டும்” என்றதும் நாட்டியமாட எத்தனை மிடிப் பெண்கள். “மந்திரியே புதிய சரக்கு ஏதும் உண்டா?” என்றதும் மூளை கிறுகிறுக்க வைக்கும் எத்தனைவித புட்டிகள். ராஜபோகம்.
அதெல்லாம் அன்று நிஜம் போலவே தோன்றியதே. இன்றைக்கு ரதிப் பெண்களைக் காணோம். ராஜ தர்பார்களைக் காணோம். உடை கசங்கி, ஒத்தை ரூபாய் பீடியைப் பிடித்தபடி அறுந்த செருப்போடு நான் நடக்கிறேனே இது என்ன காலம்? இறந்த காலமா…?
என் அழகிப்போட்டி நடையை துரிதப்படுத்தி வீட்டிற்கு வந்தேன். பெண் உறங்கிக் கொண்டிருந்தாள். மனைவி விட்டம் பார்த்து யோசித்திக் கொண்டிருந்தாள். “சாப்பாடு ஆச்சா?.” கேட்டடேன். அங்கே பார்த்த ஓட்டல் மசால் தோசையில் வெண்ணை தடவி உருகி வழிந்து.
“எப்படி ஆவும்… நேத்தே ஸ்டவ்வுல கெரெசின் தீந்து போச்சின்னேன். வாங்கிட்டு வந்தாத்தானே ஆவும். செருப்ப மாட்டிகிட்டு மகாராஜா ஊரை சுத்திட்டு வந்தா சாப்பாடு எப்படி ஆவும். அந்த செருப்பையே கடிச்சி தின்ன வேண்டியதுதான்.”
விட்டேன் அவள் கன்னத்தில் ஒரு அறை. என்னிடம் பணம் இல்லை என்பதை வேறு எப்படி சொன்னாலும் அவளுக்குப் புரியாது. கோபமாய் வந்தது. கடைவீதியெல்லாம் வெளிச்சாய் இருக்க என் வீடு மட்டும் மங்கலாய் இருப்பது ஏன்?
ஐந்து மாதக்கர்ப்பினி அறை வாங்கி சாப்பிடாமல்கூட அழுதபடி படுத்திருக்கிறாள். இவளும் அப்பன் வீட்டில் சொகுசாய் வளர்ந்து, நு}றாயிரம் கனாக்களோடு என்னை கைப்பிடித்தவள் தானே. அவள் கட்டியிருந்த தாலி அடகிற்கு போய் மூழ்கிய பின்னும், நான் பரம ஏழையாய் போன பின்னும் அந்த கோமதி, காயத்திரி, பத்மினி போல் என்னைவிட்டு எங்கேயும் போகவில்லையே. பாவம் இவள். குழந்தை சாப்பிட்டதோ இல்லையோ. வாய் பிளந்து வறண்ட உதட்டோடு தூங்குகிறது.
வெளியே சென்று டீக்கடையில் தலைசொரிந்து கடனுக்கு பன்ரொட்டிகளை வாங்கிவந்து அவளை சமாதானப் படுத்தினேன். குழந்தை கலக்கக் கண்ணோடு பன் தின்றது. இவள் அடம் பிடித்தாள். சமாதானத்தின் பொருட்டு அவளை அருகே இழுத்து முத்தமிட எத்தனித்தால் ஐந்தரைமாதக் கர்ப்பவயிறு இடிக்கிறது. அவள் பொசுக்கென்று சிரித்தாள். அவளின் கணுக்கால் தசையில் வாய் வைத்து அவள் கூச்சத்தில் நெளிய நெளிய கடித்தேன். என்னிடம் ஏராளமான அன்பிருக்கிறது என்பதை வேறு எப்படி சொன்னாலும் அவளுக்குப் புரியாது. காசுள்ளவர்களுக்கு கடைவீதியில் கொட்டிக்கிடக்கிறது வெளிச்சம். எனக்கு இதயத்தில் கொட்டிக்கிடக்கிறது வெளிச்சம்.
SUPER STORY BRO