ரஞ்சிதாவா . . .?
இருக்காது. இவள் யாரோ? கன்னங்கள் ஒட்டி, கண்களில் கருவளையம், இடுப்பில் அழுக்குப் புடவை எண்ணெய் காணாத தலை. . . இவளா ரஞ்சிதா சே! சே! இருக்காது. ராதா தடுமாறினாள்.
அந்த வளையம் சூழ்ந்த கண்கள் ராதாவை மீண்டும் பார்த்துவிட்டுத் திரும்பிக்கொண்டன. அந்தப் பார்வை ஆழத்துள் இறங்கி அறுந்த தந்தியைச் சேர்த்து மீட்டினாற் போல ராதாவின் உணர்வைச் சுண்டிவிடுகிறது. நாடி, நரம்புகள் எல்லாம் அதிர்கின்றன. உயிரை உயிரே மறைத்து விடுமோ? அந்த வீட்டையே பார்த்தபடி நிற்கிறாள் ராதா.
உள்ளே சென்ற அந்தப்பெண் கதவைப் படீரென்று சாத்திவிட்டு உள்ளே போய்விட்டாள்.
இல்லை, இல்லை. அவள் ரஞ்சிதாவாக இருக்க முடியாது. அவளென்றால் ராதாவைப் பார்த்தும் இப்படி முகத்திலறைந்தாற்போல் கதவைச் சாத்துவாளா? அப்படிப் பட்ட பழக்கமா அவர்களுக்குள்?
சிந்தித்தபடியே நின்ற ராதாவை அக்கா பானுமதி சுய உணர்வுக்குக் கொண்டுவந்தாள். “என்னடி ராதா எதிர்வீட்டை முறைத்தபடியே நிற்கிறாய்? என்ன விஷயம்?”
“ம் . . . ஒன்றுமில்லை அக்கா. அந்த வீட்டில் யார் இருக்கிறார்கள்?” ராதா கேட்டாள்.
“அந்தப் பெண் யாரு கூடவாவது பேசினால் தானே விவரம் தெரியும். அவள் புருஷன் அவளை வெளியே விடுவது கிடையாது. பக்கத்து வீடு, எதிர்த்த வீடு என்று யார் கூடவும் பேசவும் அனுமதிப்பதில்லை. எப்பொழுதும் சிறைவாசம் தான். என்னவோ, இன்று கதவைத் திறந்து வெளியில் சற்று நின்றிருக்கிறாள். நீ முறைத்து, முறைத்துப் பார்த்ததும் உள்ளே ஓடிவிட்டாள். இவ்வளவு தான் எனக்குத் தெரியும், ஏன் கேட்கிறாய்” அக்கா சொன்னதும் ராதாவுக்கு எப்படியாவது அவளிடம் பேசி யாரவள் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் பிறந்தது.
ஆனால், அவள் கணவன் யாரென்று இவளுக்குத் தெரியுமாதலால் அவனைக்கொண்டு அது ரஞ்சிதாவா? இல்லையா? என்று கண்டுபிடித்துவிடத் துடித்தாள்.
“அக்கா அவளைத்தான் யாரென்று உளக்குத் தெரிந்து கொள்ள முடியவில்லை. அவள் கணவனையாவது பார்த்திருப்பாய் இல்லையா? அவர் எப்படியிருப்பார்?”
“பனங்காய்த்தலை, லொடுக்கு விழுந்த கன்னம், ஈர்க்குச்சி உடம்பு, எடுப்பான பல், குடமிளகாய் மூக்கு, சே! சே! அவனைப் பார்த்தாலே பெண்களுக்குக் கல்யாண ஆசையே வராதுடியம்மா அத்தனை கோரம். இவ்வளவு அழகா இருக்கிற அவ எப்படி அவனை மணக்கச் சம்மதித்தாளோ தெரியவில்லை” வெறுப்போடு சொன்னாள் அக்கா.
ராதாவுக்கு இப்பொழுது புரிந்தது. அவள் பார்த்தது ரஞ்சிதாவைத்தான். அவள் கணவன் தான் இத்தனை வர்ணனைகளுக்குப் பொருத்த முடையவன். ஏன் இப்படி? புரியாமல் குழம்பிய அவள் அக்காவிடம் சொன்னாள்.
“அக்கா, அந்தப்பெண் என் கூடப் படிச்சவள். பெயர் ரஞ்சிதா. கல்லுhரியிலேயே அவள் தான் பேரழகி. அத்துடன் மேட்சிங்கில் யாரும் அவளைப் பீட் பண்ணமுடியாது. புடவை , ரவிக்கை, திலகம், வளையல், தோடு, செருப்புவரை மேட்சாக அணிந்துகொள்வாள். அது கூட ஒரு கலை தானே! தோழிகளுக்குள்ளே அவளைக் கண்டாலே பொறாமைப் படுவார்கள்.
அப்படி சின்ன விஷயத்தில் கூட மாட்சிங் பார்க்கும் ரஞ்சிதா தன் வாழ்க்கைத் துணைவனாகத் தேர்ந்தெடுத்த ஆளோ, கொஞ்சங்கூட மேட்ச் ஆகாதவன். தன் கணவனை எங்கள் எல்லோரிடமும் பெருமையாக அறிமுகப்படுத்தினாள். எப்பொழுதையும் விட மகிழ்ச்சியாக இருந்தாள். என்னிடம் மட்டும் அந்த ரகசியத்தைச் சொன்னாள் தான் ஏன் இப்படியொரு அவலட்சனத்தைத் தேர்ந்தெடுத்தாள் என்பதை
“ராதா, என்னைவிட அவர் அழகாக இருந்தால் என்னிடம் பிரியமாக இருக்கமாட்டார், தன் அழகிலேயே கர்வம் கொண்டு என்னை அலட்சியப்படுத்தினாலும் ஆச்சரியமில்லை. நான் அழகாக இருப்பதால் அவர் என்னை மிகவும் நேசிப்பார், பிரியமாக வைத்துக்கொள்வார் இல்லையா? அதற்காகக்தான் அவரைத் தேர்ந்தெடுத்தேன்” என்று சொன்னாள்.
ஆனால், இன்று அவள் இருக்கும் நிலையையும் நீ சொல்லும் விஷயத்தையும் பார்த்தால், அவள் கணவன் அவளைச் சந்தேகப்படுகிறான் எனத்தெரிகிறது. ஆரம்பத்தில் சந்தோஷமாக இருப்பதாகச் சொன்னாளே, எப்படி இப்படித் திடீரென்று அவள் கணவன் அவளைக் கொடுமைப்படுத்த ஆரம்பிச்சான்?
எப்படியோ? ரஞ்சிதாவின் கணக்கு இப்படித் தவறாகப் போய்விட்டதில் எனக்கும் மனவருத்தமே, அவளுக்கு ஏன் இப்படியொரு கோணம் இருக்கும் என்று புரியவில்லை? அவளை ஏன் இந்த நிலையில் பார்த்தோம் என்றிருக்கிறது. ரொம்ப மனக்கஷ்டமாக இருக்கு அக்கா. இங்கு இருந்தால் அவள் நினைவு என்னைப் பைத்தியமாக்கிவிடும். நான் இன்றே ஊருக்குப் போகிறேன் அக்கா.”
“என்னடி, ஒருவாரம் தங்குகிறேன் என்று சொல்லிவிட்டு இப்ப, உடனே புறப்படுறியே?”
“மனசு நிம்மதி இல்லே. இன்னொரு முறை வருகிறேன். என்னைக் கட்டாயப்படுத்தாதே” மனச்சுமையுடன் புறப்பட்டாள் ராதா.