கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 27, 2012
பார்வையிட்டோர்: 6,774 
 
 

தமிழ்ச்செல்வி பதற்றமாக இருந்தாள். திருமணத்துக்கு முதல் நாள் வரவேற்பின்போது இப்படித்தான் காணப்பட்டாள். நான்கு வருடங்களுக்குப் பிறகு இப்போது!

ஆனந்தி, தன் அம்மாவையும் என்னையும் மிரட்சியாகப் பார்த்தாள். மிரட்சிக்குக் காரணம் அறிமுகம் இல்லாத இடம். அவள் வயதையத்த குழந்தைகள் கண்களிலும் அதே மிரட்சி! ”ஏங்க, சொதப்பிட மாட்டாளே?” என்ற தமிழ்ச் செல்வி, ”சாக்லெட் கொடுத்தா என்ன சொல்லுவே?” என்றாள் ஆனந்தியிடம்.

ஆனந்தி சில விநாடிகள் யோசிக்க, ”என்னங்க இவ இப்படி யோசிக்கறா..?” என்று படபடக்கத் தொடங்கும்போதே, குழந்தை ”தேங்க்ஸ்” என்றது. தமிழ்ச்செல்வி முகத்தில் கொள்ளை சந்தோஷம்!

இரண்டு மாதங்களாகவே தமிழ்ச்செல்வி புலம்பத் தொடங்கிவிட்டாள். மூன்று வயது ஆனந்தியை எல்.கே.ஜி. சேர்க்க வேண்டிய நிர்பந்தத்தில், எந்தப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கலாம் என்கிற சிந்தையோடு ஏரியாவில் உள்ள அத்தனை பள்ளிக்கூடத்தின் பயோடேட்டாவையும் சேகரித்து விட்டாள். அலுவலகத்தில் நேரம் காலம் இல்லாமல் அலறும் எனது செல்லிடப் பேசியில் தமிழ்ச்செல்வி யின் ஆர்வக் குரல்.

”ஏங்க… சின்மயால போட்டுடலாங்க..!”

”சரிம்மா!”

மூன்றாவது நாள், ”கிளாரன்ஸ் ஸ்கூல் நல்லா இருக்காங்க!”

”ஓ.கே! உன் இஷ்டம்!”

அடுத்த சில நாட்களில் ஏவி.எம்.ஐ. முன்மொழிவாள். பிறகு பாலலோக்.

மூன்று வயதுக் குழந்தையை பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப வேண்டுமா என்கிற சிந்தனையில் ஆழ்ந்திருந்த எனக்கு அவள் கூறும் பள்ளிக்கூடப் பெயர்கள் மனதில் பதியவே இல்லை. நான் படித்த அல்வாத்துண்டு பள்ளிக்கூடமும், ஒண்ணாம் வகுப்பில் சேர்ந்த முதல் நாள் கொடுத்த நார்த்தங்கா மிட்டாயும், சரஸ்வதி டீச்சரும், எம்.காம்., முடித்த அரசினர் கலைக் கல்லூரியும் மட்டுமே நிழலா டியது.

ஒருவழியாகப் பள்ளிக்கூடம் முடிவான பிறகு, அங்கே அட்மிஷன் வாங்க என்ன செய்ய வேண்டும் என்கிற அடுத்தகட்ட கவலைக்கு தமிழ்ச்செல்வி ஆளானாள்.

”அக்கா, அண்ணன்னு யாராவது படிச்சா, சுலபமா சேர்த்துப்பாங்களாம். இல்லேன்னா நம்ம படிப் பையெல்லாம் பார்ப்பாங்களாம். இன்டர்வியூ வெச்சுதான் எடுத்துப் பாங்களாம். ஏங்க, இவ இன்டர் வியூவுல கரெக்டா பதில் சொல்வாளா?” என்றாள் கவலையாக.

”அதுக்கு ஏம்மா இப்பவே கவலைப்படறே? யாரையாச்சும் ரெகமண்ட் பண்ணச் சொல்லி சேர்த்துடலாம்!”

”ஐயையோ! அந்த ஸ்கூல்ல அதெல்லாம் எடுபடாதாம்” என்றுபதறியவள், ”நாளன்னிக்கு அப்ளிகேஷன் கொடுக்கிறாங்களாம். பெரிய க்யூ இருக்குமாம்! காலை யில சீக்கிரமே போனாதான் அப்ளிகேஷனே வாங்க முடியுமாம்” என்றாள்.

அதிகாலை ஐந்து மணிக்கே அலாரம் வைத்து, அப்ளிகேஷன் வாங்க என்னை எழுப்பிவிட்டாள். அந்நேரத்துக்கு க்யூவில் ஆள் இருக்கும் என்று தமிழ்ச்செல்வி கூறியதில் நம்பிக்கை இல்லாமல், பல் துலக்கிய கையோடு பள்ளிக் கூடம் பக்கம் வந்த எனக்கு மகா அதிர்ச்சி! கையில் பால் கவருடன் பல அப்பாக்கள் அப்ளிகேஷன் வாங்க அரண் அமைத்திருந்தார்கள். ஓரிருவர் கையில் ஃப்ளாஸ்க்.

கிட்டத்தட்ட நான்கு மணி நேரக் காத்திருப்புக்குப் பிறகு, அப்ளிகேஷன் வாங்கி வந்தேன். தமிழ்ச் செல்வி அதைச் சாமி படத்துக்கு முன் வைத்து, ஒரு சுப முகூர்த்த நாளில் என்னோடு அமர்ந்து அதை நிரப்பினாள்.

”ஏங்க… கண்டுபிடிச்சிட்டேன்” என்றாள், திடுமென ஒரு நாள்.

”என்னம்மா?”

”எல்.கே.ஜி. இன்டர்வியூவுல குழந்தைங்ககிட்டே என்ன கேள்வி கேட்பாங்கன்னு கண்டுபிடிச்சிட்டேன். இதுக்காக ஒரு வாரம் ஒரே அலைச்சல்ங்க!” என்றாள் பாவ மாக.

”என்ன கேள்வி கேட்பாங்களாம்?”

”எதிர்வீட்டு இனியா ப்ரீகேஜி படிக்கிறாள்ல… அவ ஸ்கூல்ல சொல்லிக் கொடுத்தாங்களாம். பெரும்பாலும் இந்த ரெண்டு கேள்விகளைத்தான் அந்த ஸ்கூல் ப்ரிகேஜி இன்டர்வியூவுல கேட் பாங்களாம்!”

”என்னென்ன கேள்விகள்?”

”யாராவது உனக்கு சாக்லெட் கொடுத்தா நீ உடனே என்ன சொல்லுவே?”

”சரி, அடுத்த கேள்வி?”

”சாக்லெட்டைத் தின்னுட்டு அந்த பேப்பரை என்ன பண் ணுவே?”

”இதுக்குக் குழந்தை என்ன பதில் சொல்லணுமாம்?”

”முதல் கேள்விக்கு தேங்க்ஸ் சொல்லணும். அடுத்ததுக்கு டஸ்ட் பின்னுல போடுவேன்னு சொல்லணும்!”

அன்றைய தினத்திலிருந்து, மூன்று வயது ஆனந்தியை இன்டர் வியூவுக்குத் தயார் செய்யத் தொடங்கிவிட்டாள் தமிழ்ச் செல்வி.

காலையில் எழுந்ததும், பத்து முறை இரண்டு கேள்விகளையும் கேட்பாள். பிறகு, ஆனந்தி ஆசைப்படும் சாக்லெட் அயிட்டத்தை வாங்கிக் கொடுத்துவிட்டுக் கேட் பாள். பார்க்கில் விளையாட விட்டுவிட்டுக் கேட்பாள். ஆனந்தி மழலை மொழியில் இமைகளை விரித்து, முகத்தைச் சாய்த்து பதில் சொல்வது அத்தனை ரசனையாக இருக்கும். ஒரு நாள் நள்ளிரவில், தூங்கிக்கொண்டு இருந்த குழந்தையிடம் தமிழ்ச்செல்வி கேள்விகளை கேட்க, தூக்கக் கலக்கத்திலேயே ஆனந்தி பதில் சொன்னதைக் கேட்டு நான் சிறிது கலங்கித்தான் போனேன்.

ஒருவழியாக, தமிழ்ச்செல்வி எதிர்பார்த்திருந்த நாள் வந்து விட்டது. ”ஏங்க, எல்லாம் நல்ல படியா முடிஞ்சா, சாயங்காலம் வடபழனி முருகன் கோயிலுக்குப் போயிட்டு, குழந்தை பேர்ல ஒரு அர்ச்சனை பண்ணிட்டு வரலாங்க. அதோட அடுத்த தடவை தஞ்சாவூர் போறப்ப புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கும் போயிட்டு வரணும். போன தடவை ஊருக்குப் போயிருந்தப்ப வேண்டிக் கிட்டேன்!”

”சரிம்மா” என்றபோது, அறைக்குள்ளிருந்து வெளியே வந்த பியூன் குரல் கொடுத்தார்…

”ஆனந்தி… ஆனந்தி…”

தமிழ்ச்செல்வி வியர்த்துப்போன, முகத்துடன் கடைசி கட்ட ஆயத் தத்தில் ஆனந்தியை நோக்கி அந்தக் கேள்விகளை வீசினாள்.

குழந்தை பதில் சொல்லாமல், அவளைச் சில விநாடிகளும் என் னைச் சில விநாடிகளும் நோக்க….

தமிழ்ச்செல்வி பதைபதைத்துப் போனாள்.

”ஏய்… மறந்துட்டியா? என்னடி இது, இங்க வந்து சொதப்புறே! உலக்கை! தேங்க்ஸ், டஸ்ட்பின்… ஞாபகம் இருக்கா?” என்றபடி குழந்தையை முறைக்க, குழந்தை முகம் மாற… அதற்குள் மறுபடியும் அழைப்பு.

அறைக்குள் நுழைந்தோம்.

பெரிய மேஜைக்குப் பின் சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்த, கண்ணாடி அணிந்திருந்த அந்த நடுத்தர வயதுப் பெண்மணி குழந்தையைப் பார்த்தாள். பின்பு எங்களைப் பார்த்தாள். எனக்கு அவரை எங்கேயோ பார்த்த நினைவு. யோசித்தேன்.

”நீங்க ரெண்டு பேரும் அப்படித் தள்ளி உட்காருங்க. ஆனந்தி,இப்படி வாம்மா!” என்றாள்.

குழந்தை எங்களைப் பார்த்தபடியே, அவள் அருகில் சென்றது.

அந்தப் பெண்மணி மேஜை இழுப்பறையைத் திறந்து, சாக்லெட் ஒன்றை எடுத்தாள். ஆனந்தியிடம் நீட்டினாள்.

ஆனந்தி அம்மாவைப் பார்த் தது. பின்பு, என்னைப் பார்த்தது.

”வாங்கிக்கோ” என்றதும் வாங்கிக்கொண்டது.

”சாக்லெட் வாங்கின உடனே என்ன சொல்லணும்?” இன்டர்வியூ வின் முதல் கேள்வி ஆனந்தியை நோக்கி வீசப்பட்டது.

குழந்தை சிறிது யோசித்தது.

தமிழ்ச்செல்வி முகத்தில் பதற் றம். வியர்வை! குழந்தை முகத்தைப் பார்த்தபடி, ஏதோ சொல்ல முனைய, இதைக் கவனித்த மேடம், ஆனந்தியைத் தன் பக்கமாகத் திருப்பிக்கொண்டாள்.

சில விநாடிகள் ஆனந்தி, குரோர்பதி நிகழ்ச்சியின் ஒரு கோடி ரூபாய்க்கான கடைசிக் கேள்வி போல டென்ஷன் ஏற்றியபின், ”தேங்க்ஸ் சொல்வேன்!” என்றாள் மழலையில்.

அந்தக் குரலும், அதற்கு முன்னோட்டமாக அவள் இமைகளை உருட்டி முகத்தைச் சாய்த்து சொன்ன அழகும், அப்படியே குழந்தையை அள்ளி அணைத்து முத்தமிடத் தோன்றியது.

முதல் கேள்விக்குச் சரியாக பதில் சொன்னதும், தமிழ்ச்செல்வி முகத்தில் மலர்ச்சி!

அடுத்த கேள்வியை டீச்சரம்மா வீசினாள்… ”சாக்லெட் சாப்பிட்ட பேப்பரை எங்கே போடுவே?”

இந்தக் கேள்விக்கும் சிறிது நேர மௌனம். பிறகு, அதே தலையாட்டல், முகச்சாய்வு அழகு அபிநயத்தோடு பதில் வந்தது… ”தஸ்த் பின்ல!”

”ஸ்மார்ட்! குட்!” டீச்சரம்மா குழந்தையின் கன்னத்தில் தட்டினாள்.

”எங்கே, ரைம்ஸ் ஒண்ணு சொல்லு, பார்க்கலாம்!”

”குள்ள குள்ள பாத்து… குவ்வா குவ்வா பாத்து..!” தலையை ஆட்டியபடி ஆனந்தி மழலையில் கொஞ்சித் தீர்த்தாள். எனக்கு மனசு நிறைந்தது.

ஆனந்தத்தில் தமிழ்ச்செல்விக்கு கண்கள் கலங்கிவிட்டன.

”நீங்க கொஞ்சம் வெளில இருங்க… கூப்பிடறேன்” என்றார் டீச்சரம்மா.

குழந்தையை அழைத்துக் கொண்டு, வெளியே வந்தோம்.

”மானத்தைக் காப்பாத்திட் டாங்க. இப்பதாங்க எனக்கு உசிரே வந்துச்சு. பெரிய கவலை விட்டுச்சுங்க! ஏங்க, அந்த டீச்சர் யாரு தெரியுமில்ல?”

”எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு. சொல்லத் தெரியலை!”

”பாடகி ரஞ்சிதாங்க! சங்கீத கலாநிதின்னு பட்டம் வாங்கி இருக்காங்க. நிறைய கச்சேரிகள் பண்ணியிருக்காங்க. இந்த சீசன்ல கூடப் பாடினாங்களே!”

இப்போது பியூன் வேகமாக எங்களை நோக்கி வந்தான்.

”சார், மேடம் உங்களைக் கூப்பிடறாங்க!”

தமிழ்ச்செல்வி திடுக்கிட்டாள். இன்டர்வியூ வெற்றிகரமாக முடிந்து, பணம் கட்டும் நேரத்தில் ஏன் கூப்பிடுகிறார் என்கிற கேள்வி அவள் முகத்தில்.

நான் அறைக்குள் நுழைந்தேன்.

”உட்காருங்க!”

உட்கார்ந்தேன்.

”பேபிக்கு மூணு வயசு கம்ப்ளீட் ஆயிடுச்சுல்ல?”

”ஆயிடுச்சு மேடம்!”

”ஆனா, பேச்சுல இன்னும் மழலை மாறலையே? கொச்சையா பேசறாளே! அதை முதல்ல மாத் துங்க. நேரம் கிடைக்கிறப்ப எல் லாம் பேபிகூட டைம் ஸ்பெண்ட் பண்ணுங்க. சொல்லிக் கொடுத்து பேச்சை மாத்துங்க. கிளாஸ் ஆரம் பிக்கிறதுக்கு இன்னும் நாலு மாசம் இருக்கு. மழலை கம்ப்ளீட்டா மாறினாதான் சரியா இருக்கும். இப்ப பணம் கட்டுங்க, ஜூன் மாசம் பேபி பேச்சை வெச்சு என்னன்னு முடிவெடுப்போம்!” என்றாள் கறாராக.

நான் தயக்கமாக எழுந்து கொண்டேன். எனக்குள் ஆயாசம் படர்ந்தது.

சங்கீத கலாநிதி பேசியதன் தாக்கம் மனதுக்குள் பாய்ந்தது. மழலை எத்தனை அழகு! எவ்வளவு இனிமை! மனது வலிக்கும் சந்தர்ப்பங்களில் ஆனந்தியின் மழலைக்குரல்தானே மருந்தாகியிருக்கிறது! மழலைக் குரலில் அவள் பாடும் ‘குவா குவா வாத்து’ என்னை எத்தனை ஈர்த்திருக்கிறது! கன்றின் குரல் கேட்டு பசுவின் மடி சுரப்பது போல, மழலைச் சொல் மனசுக்குள் எத்தனை சந்தோஷத்தை உண்டாக்கியிருக்கிறது! ஆயிரம் சங்கீத கலாநிதிகள் அற்புதமாகக் கச்சேரி செய்தாலும், குழந்தையின் மழலைக்கு நிகராகுமா?

‘குழலினிது யாழினிது என்பர்தம் மக்கள்

மழலைச் சொல் கேளாதார்’

அய்யன் திருவள்ளுவர் எத் தனை அருமையாகச் சொல்லி இருக்கிறார்!

டைம் ஸ்பெண்ட் பண்ண வேண்டுமாம்; மழலையை மாற்ற வேண்டுமாம்!

ஒரு வேளை, இந்தச் சங்கீத மேதைக்குக் குழந்தைகள் இல் லையோ! மழலைச் சொல்லின் இனிமையை இவர் அறிந்ததே இல்லையோ? மழலையை ரசிக்கத் தெரியாத மண்டூகம் எப்படிச் சங்கீத கலாநிதியானாள்?

மனதின் ஓரத்தில் மெல்லிய கோபம் ஏற்பட்டது.

அவள் முகத்தில் அறைந்தாற் போல் அங்கேயே ‘உன் சங்கீதக் குரலைவிட என் குழந்தையின் பேச்சு இனிமை’ என்று சொல்லி இருக்கலாமோ?

மனசுக்குள் வரிசை அமைத்த கேள்விகளுக்கிடையே தீர்மானமான அந்த முடிவுக்கு வந்தேன்.

வேண்டாம்… ஆனந்தியின் மழலை மொழி தானாக மாறட்டும். வலுக்கட்டாயமாகப் பயிற்சி கொடுத்து அதை மாற்றப்போவது இல்லை நான். இயல்பாக குழந்தை யின் மழலை மாறினால், பள்ளிப் பாடம் பயிலட்டும். இல்லையேல் அடுத்த வருடம் பார்த்துக்கொள் ளலாம். ஒன்றும் குடிமுழுகிப்போய் விடாது. குழந்தை ஏற்படுத்தும் சந்தோஷ விநாடிகளில் ஒன்றைக் கூட இழக்க விரும்பவில்லை நான்.

ஆனால், என் முடிவை தமிழ்ச்செல்வியிடம் சொல்லப்போவது இல்லை நான். பதறுவாள். மழலை நீக்கும் பயிற்சியில் இறங்கிவிடு வாள். மெதுவாகப் பேசிக்கொள்ள லாம்.

பதற்றமாக என்னை நோக்கி வந்த தமிழ்ச்செல்வியிடம் நானே முந்திக்கொண்டு, ”நல்லா பதில் சொன்னாள்னு பாராட்டினாங்க.. பணம் கட்டச் சொன்னாங்க” என்றேன்.

தமிழ்ச்செல்வி மகிழ்ச்சியும் திருப்தியுமாகக் குழந்தையை அணைத்துக்கொண்டாள்.

– 09th ஜூலை 2008

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *