தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 30, 2013
பார்வையிட்டோர்: 8,201 
 
 

பொன்னுசாமியைப் பார்க்கிறபோதெல்லாம் அவரை மண்ணுசாமியென்று திட்டி விடலாமா? என்று மனதுக்குள் நினைத்துக் கொள்வான் அன்த்துவான். ஆனால் அது அவனால் முடியாத காரியமாய் இருந்தது. பொன்னுசாமி வயதில் பெரியவர். அன்த்துவான் கூட படித்த பாஸ்கரனின் அப்பா. பாஸ்கரனைப் பார்க்க அவன் வீட்டுக்குப் போகிறபோதெல்லாம் பொன்னுசாமி ஏதாவது எடக்கு மடக்காக சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பேசுவது அன்த்துவானுக்கு எரிச்சலாக இருக்கும். இத்தனைக்கும் பொன்னுசாமி நன்கு படித்த நல்ல பொறுப்பான அந்தஸ்துள்ள பதவியில் இருக்கிறவர். மாவட்டக் கல்வி அதிகாரி. அதாவது டி.இ.ஓ. பிள்ளைத் தோட்டத்திற்கு அடுத்துள்ள சாரத்தில்தான் பொன்னுசாமி குடியிருந்தார். பாரதிதாசனுக்கு இலக்கண, இலக்கியங்கள் சொல்லிக் கொடுத்த பெரும்புலவர் பு.அ. பெரியசாமி பிள்ளை இருந்த இடம் அது. அப்படிப்பட்ட ஊரில் இருந்தும்கூட மனுஷன் இப்படி இருக்கிறாரே என்று பொன்னுசாமியைப் பற்றி ஆச்சரியமாக இருக்கும் அன்த்துவானுக்கு.

மொழிபாஸ்கரனைப் பார்க்கப் போயிருந்தான் அன்த்துவான். அவன் வீட்டில் இல்லை. பொன்னுசாமிதான் வெளியே வந்தார்.

“”என்னப்பா அன்த்துவான், எப்படி இருக்கற?” என்று இயல்பாகக் கேட்டபடியே பேச ஆரம்பித்தார்.

“”நான் நல்லா இருக்கிறேன் மிúஸ. நீங்க எப்படி இருக்குறீங்க?”

பதிலுக்கு அவரை நலம் விசாரித்தான் அன்த்துவான். பொன்னுசாமி, தான் நன்றாக இருப்பதாகத் தலையசைத்துவிட்டுத் தொடர்ந்தார்.

“”ஏன் அன்த்துவான்… இன்னைக்கி வேலைக்குப் போகலையா?”

“”ரெண்டாவது முறை மிúஸ… மத்தியானத்துக்கு மேலதான் போகணும்”

“”அப்படியா… வா வந்து இப்படி உட்காரு”

வீட்டின் வெளியே கட்டியிருந்த சிமெண்ட் கட்டையின்மீது பொன்னுசாமி உட்கார்ந்துகொண்டு அன்த்துவானை அழைத்தார். அவன் அவர் பக்கத்தில்போய் அமர்ந்தபடி அவரை ஏறிட்டுப் பார்த்தான். முன் தலை ஏறிய வழுக்கை. நல்ல புஷ்டியான முகம். தடித்த சோடா பாட்டில் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு மலங்க மலங்க விழித்தார். புதருக்குள் இருந்து ஓர் ஆந்தை எட்டிப் பார்ப்பதுபோல் இருந்தது.

பொன்னுசாமி தனக்குத் தெரிந்ததையெல்லாம் எதிராளியிடம் சொல்லிவிட வேண்டுமென்று நினைக்கிறவர். அதற்குத் தோதாக அப்போது அவருக்குப் பிரெஞ்சு மொழி கிடைத்துவிட்டது.

“”அன்த்துவான்.. சொற்களைத் தேய்த்து தேய்த்து சன்னக் கம்பிகளாய் இழுத்து அருமையான நகாசு வேலை செய்யப்பட்ட மொழியப்பா பிரெஞ்சு”

அன்த்துவானுக்கும் அது தெரியும். அவன் ரோடியர் மில்லில் வேலை செய்கிற ஒரு சாதாரண ஆலைத் தொழிலாளியாக இருந்தாலும் கூட, அந்தக் காலத்தில் பிரெஞ்சு செர்த்திபிகா வகுப்பில் படித்தவன். ஓரளவுக்கு உலக விவரங்களும் தெரிந்தவன். அதனால் பொன்னுசாமி சொன்னதைக் கேட்டு பேசாமல் இருந்தான்.

“”அந்தக் காலத்துப் பிரெஞ்சு மொழியில் காதலை தீ என்று சொல்வார்கள். பெண்களின் கன்னத்தை நாணத்தின் அரியணை என்பார்கள். அதேபோன்று நிலவை அமைதியின் விளக்கு என்றெல்லாம் அழகுபடச் சொன்னது உலகத்தில் வேறு எந்த மொழியிலாவது இருக்கிறதா அன்த்துவான்?”

பொன்னுசாமி இவ்விதம் பிரெஞ்சு மொழியை உயர்த்திச் சொன்னதன் உள்ளர்த்தம் உடனே புரிந்துவிட்டது அன்த்துவானுக்கு. அவர் எங்கே வரப்போகிறார் என்பதும் தெரிந்துவிட்டது. அதனால் அவரைக் கையும் மெய்யுமாகப் பிடிக்கிறவனைப்போல அமைதியாக இருந்தவனுக்கு முன்பு ஒரு முறை இதே பொன்னுசாமி, தன் மகளுக்குத் தமிழ் மகள் என்று தான் வைத்திருந்த பெயரைக் குறிப்பிட்டு, “”ஏம்பா உனக்கு வேற நல்ல பேரே கிடைக்கலையா?” என்று கேலி செய்ததும் நினைவுக்கு வந்தது.

“”நீங்க சொல்றது நூத்துக்கு நூறு வாஸ்தவமான பேச்சுங்க. பிரெஞ்சு மொழியில நம்ம தமிழோட “ழ’ வுக்கு நிகரான ஒப்புமை உடைய ஒலியெல்லாம் கூட இருக்குது. ஆனா ட், ச் மாதிரியான சத்தம் வரக்கூடிய ஒலியமைப்புகள் இல்ல. உதாரணமா பட்டம்மாள் என்கிற நல்ல தமிழ்ப்பேரை பிரெஞ்சு மொழியில பத்தம்மாள் என்றுதான் சொல்ல முடியும். அதே மாதிரி பச்சையப்பன் என்கிற பேரை பத்ஷேயப்பன் என்றுதான் உச்சரிக்க முடியும். இப்படிப்பட்ட நிலைமையும் நீங்க சொல்ற பிரெஞ்சு மொழியில இருக்குது இல்லைங்களா?”

அன்த்துவான் இதனை ஒருவிதமான கிண்டலோடு சொன்னது பொன்னுசாமியை என்னவோ செய்ததுபோல் இருந்தது. அவர் மேற்கொண்டு பேச முடியாதவராய் அன்த்துவானை ஏற இறங்கப் பார்த்தபடி தன் சோடா பாட்டில் மூக்குக் கண்ணாடியைக் கழற்றி சட்டை நுனியால் துடைத்துக் கொண்டார்.

தீப்பிடிக்காத அட்டையால் வேய்ந்த கூரை. மேலெல்லாம் பாதரசத்தை ஊற்றி மெழுகியதுபோல் இருந்தது. வாசலில் மலர்ந்து மணம்வீசும் மல்லிகைப் பூச்செடி. பக்கத்தில் ரத்தச் சிவப்பில் செம்பருத்திப் பூக்கள். குனிந்து உள்ளே நுழையும்படியான தோற்றத்துடன் அழகாகத் தெரிந்தது வீடு.

உள்ளே “கா விளக்கை’ ஏற்றி வைத்துக்கொண்டு வீட்டுப் பாடங்கள் படித்துக் கொண்டிருந்தாள் தமிழ்மகள். “”அம்மா இங்கே வா! வா! ஆசை முத்தம் தா! தா!” என்று அவள் மே. வீ. வேணுகோபால பிள்ளையின் அருமையான பாடலைத் தன் மழலைக் குரலில் பாடியதைக் கேட்க மிகவும் இனிமையாக இருந்தது.

தமிழ்மகள் பாடியதைக் கேட்டுக் கொண்டே அருகில் வந்தாள் கவிதா. அவள் இந்து மதத்தைச் சேர்ந்தவள். அன்த்துவான் கிறிஸ்தவன். இருவரும் காதலித்து கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள்.

கவிதாவுக்குத் தன் மகள் அழகா, இல்லை அவள் பாடிய “அம்மா இங்கே வா! வா! “பாடல்’ எழுதியிருக்கிற விதம் அழகா என்று பெரும் வியப்பாக இருந்தது.

கவிதா தமிழ்மகளை அன்பு மீதூற பார்த்தாள். தமிழ்மகள் அப்போதுதான் வரைந்த சித்திரம்போல அவ்வளவு அழகுடன் இருந்தாள். குண்டான முகம். எரியும் நெருப்பின் சுடர்போல சிவந்த நிறம். துறு துறு கண்கள். மாதுளையைப் பிளந்து வைத்த உதடுகள். ரோஜாப் பூவுக்குக் கை கால்கள் முளைத்ததுபோன்று பாவாடை சட்டையுடன் தமிழ்மகள் வீட்டுக்குள் வளைய வரும்போது கவிதாவுக்கு அளவிட முடியாத சந்தோஷமாக இருக்கும். வாய்க்கும் வயித்துக்கும் பத்தாத சராசரி வருமானமுடைய நம் குடும்பத்திற்கு கடவுள் ஒரு தேவதையைக் குழந்தையென்று சொல்லிக் கொண்டுவந்து கொடுத்திருக்கிறாரே என்று கவிதா தன் மனதுக்குள்ளாகப் பேசிக்கொண்டு மகிழ்ச்சியடையாத நாளே இல்லை. எப்பாடுபட்டாவது தமிழ்மகளை நன்றாகப் படிக்கவைத்து நல்ல நிலைமைக்குக் கொண்டுவந்துவிட வேண்டும் என்பது கவிதாவின் உயிர்மூச்சாக இருந்தது.

மாலைநேரம். குளுமையான காற்று வீசிக்கொண்டிருந்தது. அன்த்துவான் வீட்டுக்குள்ளிருந்த கவிதாவிடம் கேட்டான்.

“”கவிதா என்ன இன்னும் நம்ம தமிழம்மாவக் காணோம்?”

அன்த்துவானுக்குத் தமிழ்மகள்மீது கொள்ளைப் பிரியம். அவனுக்கு அவள் ஒரே மகள். செல்லப் பிள்ளை. இறந்துபோன தன் அம்மாவே மறுபடியும் தனக்கு மகளாகப் பிறந்திருக்கிறாள் என்று அன்த்துவான் கவிதாவிடம் சொல்லிச் சொல்லி நெகிழ்ந்து போவான். அவன் ஒரு நாளும் தமிழ்மகள் என்ற பெயரை முழுமையாகச் சொல்லி அழைத்ததில்லை. அம்மாவின்பேரில் அளவிட முடியாத பாசம் வைத்திருந்த அன்த்துவானுக்கு எப்போதுமே தமிழ்மகள், தமிழம்மாதான்.

கவிதா பதில் சொல்ல வாயெடுக்கும் முன்பே தமிழ்மகள் வருவது தெரிந்தது. அவள் மிகவும் சோர்ந்துபோய்க் காணப்பட்டாள். முகம் வாடியிருந்தது. தமிழ்மகள் வீட்டுக்குள் நுழைந்ததும் அன்த்துவானும், கவிதாவும் போட்டி போட்டுக்கொண்டு ஓடிப்போய்த் தூக்குவார்கள். தமிழ்மகளும் ஒரு பூவைப்போல அவர்கள் கைகளில் தம்மை ஒப்படைப்பாள். முகத்தில் எல்லையில்லாத மகிழ்ச்சி பொங்கும். அன்த்துவானும், கவிதாவும் பூரித்துப் போவார்கள். அந்தச் சமயம் அவர்கள் வீடே புன்னகை மத்தாப்பு கொளுத்திய வெளிச்சமாய்க் குதூகலிக்கும். ஆனால் இன்றைக்குத் தமிழ்மகள் முகத்தை “உம்’மென்று வைத்துக்கொண்டு வீட்டுக்குள் வந்ததும் வராததுமாய் புத்தகப் பையைத் தூக்கியெறிந்தாள். அது ஒரு மூலையில்போய் விழுந்தது.

அன்த்துவானுக்கும், கவிதாவுக்கும் தூக்கிவாரிப் போட்டதுபோல் இருந்தது. ஒன்றும் புரியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

அன்த்துவான்தான் முதலில் வந்து கேட்டான்.

“”தமிழம்மா ஏம்மா ஒரு மாதிரியா இருக்கிறீங்க?”

அவன் கொஞ்சிக்கொண்டே தமிழ்மகள் அருகில் வந்து கேட்டும் அவள் எந்தப் பதிலும் பேசாமல் இருந்தாள். தமிழ்மகள் கோபமாக இருக்கிறாள் என்பது கவிதாவுக்குப் புரிந்துவிட்டது.

“”எங்க செல்லக் குட்டியாம் நீங்க. அப்பா கேட்கறாங்க இல்ல, பதில் சொல்லுங்க”

கவிதா சமாதானப்படுத்தும்விதமாக ஆதரவாகக் கேட்டபோதும் ஒன்றும் சொல்லாமல் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டிருந்தாள் தமிழ்மகள்.

“”தமிழ்ச் செல்லம், என்ன ஆச்சின்னு சொல்லுங்கம்மா?”

அன்த்துவானும், கவிதாவும் ஒரே குரலில் கேட்டதும், அதற்காகவே காத்திருந்தவள்போல தமிழ்மகள் சிணுங்கிக் கொண்டே சொன்னாள்.

“”நான் இனிமே பள்ளிக்கூடத்துக்குப் போக மாட்டேன்”

கவிதாவுக்கு ஒருமாதிரியாகிவிட்டது. அவள் மிரட்சியோடு அன்த்துவானைப் பார்த்தாள். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

“”ஏன் தமிழம்மா அப்படிப் பேசறீங்க?”

“”என்னோட படிக்கிற பசங்க எல்லாம் என்னைக் கேலி பண்றாங்க”

அன்த்துவான் திடுக்கிட்டுப்போய் தமிழ்மகள் முகத்தையே பார்த்தான்.

“”ம்… உன்பேரு என்னன்னு கேட்டு நான் தமிழ்மகள்னு சொன்னா எல்லாரும் சிரிச்சிகிட்டே, “நீ தமிழ்மகள்னா நாங்க என்ன இங்கிலீஷ் மகளா? பிரெஞ்சு மகளா? இல்ல இந்தி மகளா?’ன்னு எப்பப் பாரு கிண்டல் செய்யறாங்க”

இதைச் சொல்லும்போதே தமிழ்மகள் முகம் அழுவதைப்போல மாறிவிட்டது. அவள் கண்கள் கலங்கி இருந்தன. இன்னும் கொஞ்சம் நேரம் போனால் அழுதுவிடுவாள்போல் தெரிந்தது. கவிதா தமிழ்மகளை அப்படியே வாரி அணைத்துக் கொண்டாள்.

“”என் தங்கம்… என் வைரம்… என் பப்புகுட்டி… இதுக்கா நீங்க கவலைப்படறீங்க?”

தமிழ்மகள் பேசாமல் இருந்தாள்.

கவிதா தமிழ்மகளை அணைத்தபடி அவள் முகத்தைத் தன் புடவை முந்தானையால் துடைத்து நெற்றியில் அன்பாக முத்தமிட்டாள். கொஞ்ச நேரம் போகட்டும் என்று காத்திருந்த கவிதா மீண்டும் தமிழ்மகளின் இரு கன்னங்களிலும் மாறி மாறி முத்தமிட்டு அவளை அமைதிப்படுத்தினாள்.

“”அப்பாவும் நானும் வேற வேற மதத்த சேர்ந்தவங்க. எங்க பேர்களும் தமிழ்ல இல்ல. அதனால அப்பா ஒரு மில் தொழிலாளியா இருந்தாலும் உங்களுக்காவது நல்ல தமிழ்ப் பேரா வைக்கணும்னு ஆசைப்பட்டுத்தான் இந்தப் பேர வச்சாரு. அப்பாவுக்கு நம்ம தமிழ்மொழிய ரொம்பப் பிடிக்கும். அதனால ரொம்பப் பிடிச்ச உங்களுக்கும் தமிழ்மகள்னு பேரு வச்சிட்டாரு. அடுத்தவங்க அத கேலி செஞ்சா நாம எதுக்கு கவலைப்படணும்? அதுக்காக பள்ளிக்கூடம் போகமாட்டேன்னு சொல்றதும் அடம் பிடிக்கிறதும் ரொம்ப தப்பு. இனிமே இப்படியெல்லாம் சொல்லக் கூடாது தெரியுதா?”

“”ஆமாம்.. தமிழம்மா அம்மா சொல்றதுதான் சரி. நம்ம பேரு நமக்கு மட்டும் பிடிச்சா போதும். உங்களுக்கு ஏன் தமிழ்மகள்னு அப்பா பேரு வச்சாங்கன்னு நீங்க பெருசா வளர்ந்ததுக்கு அப்புறமா சொல்றேன். இப்ப நீங்க சின்ன பிள்ளைங்களாம். அப்பாவும்,அம்மாவும் சொல்றத கேட்டு ஒழுங்கா பள்ளிக்கூடத்துக்குப் போவீங்களாம்”

அன்த்துவான், தானும் ஒரு குழந்தையைப்போல மாறி சொல்லச் சொல்ல தமிழ்மகளுக்குப் “பாவம் அப்பா’ என்பதுபோல ஆகிவிட்டது. அதனால் அந்தக் கணம் சமாதானம் அடைந்தவளாய் காணப்பட்டாலும் அன்த்துவானின் இந்தத் தந்திரத்தில் எல்லாம் அவளுக்குத் திருப்தி இல்லை என்பது முகத்திலேயே நன்றாகத் தெரிந்தது.

அன்றைய தினம் பள்ளிக்கூடம் மிகவும் பரபரப்பாய்க் காணப்பட்டது. தலைமையாசிரியர் அனைத்து ஆசிரியர்களையும் தன் அறைக்குள் அழைத்து நீண்ட நேரமாய் விவாதித்துக் கொண்டிருந்தார். அதைத் தொடர்ந்து வகுப்பாசிரியர்கள் கூடிக் கூடிப் பேசுவதும், மாணவர்களை ஒழுங்காக இருக்கச் சொல்லி உத்தரவிடுவதுமாக இருந்தார்கள். எல்லோர் மனதிலும் இனம் புரியாத பயம். எதையோ எதிர்பார்த்து முன்கூட்டியே தயாரான நிலையில் இருப்பது தெரிந்தது. யாவும் சேர்ந்து அங்கே ஒருவித தனிமையை ஏற்படுத்தி இருந்தது. எதிரே கரும்பலகையைப் பார்த்தபடி டீச்சர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

அப்போது யாரோ ஒருவர் சொல்லாமல் கொள்ளாமல் வகுப்பறைக்குள் விடுவிடென்று வந்தார். உயர் அதிகாரிக்குரிய தோரணை. டீச்சருக்குப் புரிந்துவிட்டது. வந்திருந்தவருக்கு அவர் வணக்கம் சொல்ல அதற்காகவே காத்திருந்த மாணவர்களும் உடனே எழுந்துநின்று ஒரே குரலில் வணக்கம் சொன்னார்கள். அவர் மாவட்டக் கல்வி அதிகாரி பொன்னுசாமி. மாணவர்களை உட்காரச் சொல்லிவிட்டு வருகைப் பதிவேட்டினைப் பார்வையிட்டுக் கொண்டே டீச்சரிடத்தில் ஏதோ கேட்டார். மாணவர்கள் அத்தனைபேரும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

பொன்னுசாமி, தன் சோடா பாட்டில் மூக்குக் கண்ணாடியை மேலும் கீழுமாக இறக்கியபடி ஒவ்வொருவர் பெயராகக் கேட்டுக்கொண்டே வந்தார். அம்பிகா.. ஆனந்தி என்று பெண் குழந்தைகள் தங்கள் பெயர்களைச் சொல்லிக்கொண்டே வந்ததும் பக்கத்து பெஞ்சியில் இருந்த மூன்று பேரும் ஒன்றாக எழுந்து தங்கள் பெயர்களைச் சொன்னார்கள். நிஷாந்தி கார்த்திகா… மாலினி என்று ஒவ்வொருவரும் சொல்லச் சொல்ல பொன்னுசாமி அவர்களிடம் பாடத்திலிருந்து சில கேள்விகள் கேட்டார். ஒருவருக்கும் பதில் தெரியவில்லை. திரு திருவென்று விழித்தபடி தன் டீச்சரைப் பரிதாபமாகப் பார்த்தார்கள். அவர் அவர்களை அடித்து விடுவதுபோல முறைத்துப் பார்த்தார். பொன்னுசாமிக்கு ஒரு மாதிரியாகிவிட்டது. அந்த மூன்று பேரில் நிஷாந்தி அவர் மகன் பாஸ்கரனுடைய மகள். பேத்தி. அது அந்த டீச்சருக்கும் தெரியும். டீச்சர் பொன்னுசாமியையும் நிஷாந்தியையும் மாறி மாறிப் பார்க்க பொன்னுசாமி வெளிறிப்போன தன் முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக்கொண்டு கண்டும் காணாததுபோல அடுத்த பிள்ளையிடம் போனார்.

“”எங்கே ஒரு குழந்தைப் பாடல் பாடு பார்க்கலாம்”

பொன்னுசாமி கேட்டதுதான் தாமதம். அந்தச் சிறுமி, “”ஏடு தூக்கிப் பள்ளியில் இன்று பயிலும் சிறுவரே நாடு காக்கும் தலைவராய் நாளை விளங்கப் போகிறார்” என்ற அழ.வள்ளியப்பாவின் பாடலை முழுமையாக ராகம் போட்டு இழுத்து நீட்டிப் பாடியபோது டீச்சரும் சக மாணவர்களும் ஒரு சேர கைதட்டினார்கள்.

எத்தனை முறை பாடினாலும் கேட்டாலும் எப்போதும் இனிமை மாறாத பாடல் அது. குழந்தைகளுக்கென்றே வரம் வாங்கி வந்தவர் எழுதின அந்தப் பாடலை எந்தப் பிள்ளைகள் பாடினாலும் அதற்கொரு உயிர்ப்பு வந்துவிடுகிறது. அங்கே குழந்தைகளின் மன உலகம் விரிந்து புதிய புதிய சந்தோஷங்கள் பூக்கத் தொடங்குகின்றன. பொன்னுசாமிக்கு மகிழ்ச்சி தாள முடியவில்லை. அவர் முகம் பிரகாசம் அடைந்தது.

“”சின்ன வயசில நான் பாடின பாட்டு. அதுக்கப்புறம் என் பிள்ளைங்க பாடி அதுக்கப்புறமும் தலைமுறை.. தலைமுறையா பாடற அழ.வள்ளியப்பாவோட இந்த பாட்ட நீ எத்தனை அழகா பாடற?”

பொன்னுசாமி சந்தோஷ மிகுதியால் அந்தப் பிள்ளையைப் மனதாரப் பாராட்டிவிட்டு அடுத்து கேட்டார்.

“”உன் பேரு என்னம்மா?”

“”தமிழ்மகள்”

பொன்னுசாமிக்கு பிடரியில் யாரோ லேசாகத் தட்டியதுபோல் இருந்தது. தமிழ்மகளா.. இந்தப் பெயரை எங்கோ கேட்டதுபோல் இருக்கிறதே என்று அவர் அனுமானிப்பதற்குள் சட்டென்று நினைப்பு வந்தது.

“”நீ அன்த்துவானோட பிள்ளைதான?”

“”ஆமாம் ஐயா”

“”சபாஷ்.. உன்னுடைய அப்பாவும் அம்மாவும் உன்ன ரொம்ப நல்லா வளர்த்திருக்காங்க. உண்மையிலேயே நீ தமிழுக்கு மகள்தான்…”

டி.இ.ஓ.விடமிருந்து இத்தகைய மதிப்புமிக்க வார்த்தைகள் வருமென்று தமிழ்மகள் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. அது அவளுக்குப் பெருமையாக இருந்தது. இதுநாள் வரைக்கும் எல்லோரும் தன் பெயரைக் கேலியும், கிண்டலும் செய்தபோது அடைந்த மனவேதனை மறைந்து உடனே மதிப்பும், மரியாதையும் கூடிவிட்டதுபோல் இருந்தது. அவள் நிஷாந்தி, கார்த்திகா.. மாலினி ஆகிய மூன்று பேரையும் ஒருசேர பார்த்தாள். அவர்கள்தாம் எப்போதும் தமிழ்மகளின் பெயரைச் சொல்லி கேலி செய்கிறவர்கள். அதை வைத்து புறம் பேசுகிறவர்கள். அத்தனை பேரும் வெட்கப்பட்டுப்போய் தமிழ்மகளைப் பார்க்கவும் அஞ்சி தலை குனிந்திருந்தார்கள்.

தமிழ்மகளுக்கு உடனே ஓடிப்போய்த் தன் அப்பாவைக் கட்டிப் பிடித்துக்கொண்டு அழ வேண்டும்போல் இருந்தது. தன் அம்மாவிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தோன்றியது.

– பாரதி வசந்தன் (நவம்பர் 2011)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *