மென்கொலை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 16, 2023
பார்வையிட்டோர்: 1,294 
 
 

ஒரு நுண்கிரகம்போல தன்னிலை கெடாச் சுழற்சியில் தன்னைச் சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருந்த அந்த ஒற்றை உயிர் அவன் பார்வையிலிருந்தும், உணர்கையிலிருந்தும் நீண்டநேரமாக மறைந்திருந்தது. அதனுடைய இன்மையை நிச்சயமாக அவன் உணர்ந்திருந்தான். ஆனாலும் அது எப்படிச் சாத்தியமாயிற்று என்பது தெரியாத புதிர் அந்த நிஜத்தை முற்றாக அங்கீகரிக்க முடியாமல் அவனைச் செய்துகொண்டிருந்தது.

கடந்த பல நாள்களின் இரவுகளை, பகல்களையும்தான், ஒரு பயங்கரத்தில் நிறைத்;திருந்த அந்த ஜீவராசி, எத்தனையோ அவன் கொலை முயற்சிகளிலும் தப்பிப் பிழைத்தது மட்டுமல்ல, ‘எங்கு போனாலும் உன்னை விடமாட்டேன்’ என்பதுபோல் தேசம்விட்டு தேசம் வந்துகூட அவனைத் தொல்லைப் படுத்திக்கொண்டிருந்தது. கடித்துக் குதறிக்கொண்டிருந்தது.
சொல்லப்போனால் இழுத்து மூடிக்கொண்டு பெரிய நிம்மதியோடு இப்போது அவன் தூங்கியபடி இருந்திருக்கலாம். கடந்த ஒரு மாதத்தக்கும் சற்று மேலாக அவனது தூக்கத்தில் விழுந்திருந்த விரிசல்களை நிரப்பக் கிடைத்திருக்கிற நல்ல தருணம் இது.

ஆனால் நள்ளிரவு கடந்த அந்தநேரத்தில், அந்த மெல்லிய ஒளித்தெறிப்பு நீண்டநேரப் பரிச்சயத்தில் போதுமான வெளிச்சமாகி புத்தகங்களும், மேசையும், மேசைமேலிருந்த கணினியும், பக்கத்துச் சுவரிலிருந்த நயாகரா நீர்வீழ்ச்சிப் படமும், ஜன்னலும் என்று எல்லாமும் தீட்சண்யமாய்ப் பார்வையில்பட அவனோ படுக்கையில் சாய்ந்தமர்ந்து அதற்கு என்ன ஆயிற்றென்ற யோசனையில் ஆழ்ந்திருக்கிறான்.

அவனுக்கு ஏற்பட்டது அசாதாரணமான அனுபவமென்பதில் ஐயம் கிடையாது. யாருக்காவது சொல்லலாமென்றால் அதற்;கான சமயத்தின் அமைவின்றி அது சாத்தியம் பட்டுவிடாது. மேலும் நுளம்புக் கடியைப்பற்றிச் சொல்லிவிட அப்படி என்னதான் விஷேசமாக இருந்துவிடப் போகிறது? அப்படியே ஒரு விN~சத்தைப் புனைய முடியுமாயிருந்தாலும் கதைசொல்;லல் ஒரு கலையாக அவனிடத்தில் வளர்ந்திருக்;கவுமில்லை. முடிந்ததெல்லாம் அதை மீள்நினைவாக்கிப் பார்ப்பதுதான்.

அம்மாவின் குரல் அவன் நெஞ்சுக்குள் திடீரென ஒரு வசனத்தை ஒலித்துப் போகிறது. ‘தட்டினால் வாறன், தடவினால் போறன்.’ உண்மையில் அது ஒரு கதையின் தலைப்பெனினும் எல்லாவற்றையும் புரிந்துகொள்ளும் சூட்சுமம் அதிலிருந்தது. குரலின் எதிரொலியில் அவளது உள்வளைந்த உடம்பும், கட்டை உருவமும், சிரித்த முகமும் அவனது மனக்கண்ணில் நிழலாடின. அந்தக் கோலத்திலேயே அவள் வேலைகள் முடிந்து ஆறுதலாய் இருக்கிற சமயங்களிலெல்லாம் தோன்றியிருக்கிறாள்.

அவன் அம்மாவுக்கு கதை சொல்ல நன்றாக வரும். பெரும்பாலும் அவள் கதைசொன்னதெல்;லாம் மாரியில் அவர்களின் இரவுச் சாப்பாட்டு நேரமாகவும், கோடையில் முற்றத்து மணலில் சாப்பாட்டுக்குப் பின்னான அரட்டைப் பொழுதாகவுமே இருந்திருக்கிறது.

அவர்கள் என்பது பெரிய தொகையினாலல்ல, அவன், அவனது இரண்டு தங்கச்சிகள், அம்மா ஆகிய நான்குபேரால் மட்டுமேயானது.
இந்தக் கதையை அவனது அம்மா எந்தப் பருவகாலத்தில் சொன்னாளென்பது அவனுக்கு ஞாபகமில்லை. சாப்பாட்டுக்குப் பின் முற்றத்திலோ, சாப்பாட்டு நேரத்தில் அடுப்படியிலிருந்தோ சொல்லிருக்கலாம். எதுவாக இருந்தாலும் அது நுளம்புத் தொல்லை அதிகமாகவிருந்த ஒரு காலப்பகுதி என்பது மட்டும் அவனுக்கு நிச்சயம்.

அவள் சொன்ன கதையில் ஆண்-பெண் நுளம்புகளின் இயங்கு தன்மைகளே மாறியிருந்தன. அப்போது அவைபற்றிய பூரண அறிவு இல்லாத நிலையில்போலவே, இப்போதும் நினைவில் பீறிட்டெழும் அந்தக் கதையை அவனால் ரசிக்க முடிந்திருந்தது. அதுதான் அவள் கதைகூறலின் சாமர்த்தியமென்பதை அவன் அறிந்தேயிருந்தான்.

அம்மாவுக்கு இந்தக் கதையை யார் சொல்லியிருக்கக்கூடும்? அவளது அம்மாவா? இருக்கலாம். அம்மாக்களிலிருந்துதானே பெரும்பெரும் கதைகள் கிளைவிட்டு, கொடிவிட்டு பத்திப்படர்ந்து வந்திருக்கின்றன.

அம்மா ஐந்தாம் வகுப்புவரை படித்தவள். அவளது அம்மா பள்ளியே போனதில்லை. அம்மா படித்த சைவப் பள்ளிக்கூடத்திலும் பூமிசாத்திரம், சுகாதாரம் போன்ற விஷயங்களின் போதத்துக்கு வாய்ப்பு அதிகமிருந்திருக்க முடியாது. அவனது ஆச்சி சொன்ன கதையில் அவனது அம்மா பரவசப்பட்டிருக்கிறாள். அதையே காலும் கையும் வைத்துத்தான் சொல்லியிருப்பாள் அவர்களுக்கும். ஐந்தாம் வகுப்பு படித்த அம்மாவின் கதையை பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த அவன் ரசித்திருக்கிறான். கதைக்கு, சொல்லும் திறன் முக்கியமேதவிர அதன் தர்க்க, தத்துவ புலமில்லை.

தண்ணீர்க் குட்டையிலோ, சதுப்பு நிலத்திலோ வீடு கட்டியிருந்த ஒரு நுளம்பு, மாலையானதும் மனைவி பிள்ளைகளிடம் சொல்லிக்கொண்டு வேலைக்குப் புறப்படுகிறதாம்.

நுளம்பின் வேலை என்ன? ரத்தம் உறிஞ்சுவதுதானே! ரத்தத்தை மனிதரில் உறிஞ்சிக் குடித்துவிட்டுச் செல்லும் நுளம்பு, பின் எவ்வாறு தன் பிள்ளைகளுக்கோ மனைவிக்கோ ஊட்டமாய் அதைக் கொடுக்க முடியுமென்று பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த அவனுக்குக்கூட தோன்றாமலே இருந்திருக்கிறது. நுளம்பினால் பரவும் தைபாயிட்டு, மலேரியா பற்றியெல்லாம் பாடப் புத்தகத்தில் ஏற்கனவே அவன் படித்திருக்கிறான். ஆண் நுளம்பு பெரும்பாலும் செடிகளின் இலைச் சாற்றை உறிஞ்சி உயிர் வாழ்கையில், பெண் நுளம்பே இனப்பெருக்கத்துக்கான தொழிலாற்ற அதிகளவு சக்திவேண்டி மனிதரைக் கடித்து ரத்தம் குடிக்கிறது என்பது தெரிந்திருந்தும், தினசரி பெண் நுளம்பை வீட்டில் விட்டுவிட்டு ஆண் நுளம்பு எவ்வாறு வேலைக்குச் சென்றிருக்க முடியும் என்ற கேள்வி அவனிடத்தில் அப்போது எழுந்திருக்கவேயில்லை. அவனது தங்கைகளைப்பற்றி சொல்லவேண்டியதில்லை.

புரு~ன் வேலைக்குப் புறப்படுகிற சமயத்தில் பெண் நுளம்பு சொல்லுகிறதாம், ‘கவனமாய்ப் போட்டு வாருங்கோ. நேற்றும் ஆரையோ கடிச்ச நேரத்தில, அந்தாள் பாத்துப்பாக்காமல் கையை விசுக்கி அடிச்ச அடியிலயிருந்து தப்பிவந்தது பெரிய புண்ணியமெண்டு சொன்னியள். ஏனுங்கோ, சொக்கு மூக்கு நெத்தி எண்டில்லாமல், கை எட்டாத இடமாய் கால் முதுகெண்டு கடியுங்கோவன்’ என்று.

அதற்கு ஆண் நுளம்பு, ‘உதையெல்லாம் பாத்தா நாங்காள் வாழேலுமே? எங்க வசதியோ அங்க கடிக்கவேண்டியதுதான். தட்டினா வாறன், தடவினாப் போறன்’ என்று கூறிவிட்டுப் புறப்படுகிறதாம்.

அப்போது அவனது தங்கச்சி கேட்கிறாள் ஏதோ ஒரு சோகம்; கவிந்தவளாக, ‘புருஷன் நுளம்பு திரும்பி வந்துதாம்மா அண்டைக்கு?’ என்று. அதற்கு அம்மா என்ன பதில் சொன்னாளென்று அவனுக்கு இப்போது ஞாபகமில்லை. ஆனால் அவன் கேட்ட, தட்டுதலும் தடவுதலும் பற்றிய விஷயத்துக்கு அவள் சொன்ன பதில் ஞாபகமாயிருந்தது.

தட்டுகிறபோது கையின் விசையில் கிளரும் காற்றின் அதிர்வில் உணர்திறன் கூடிய நுளம்பால் தப்பிப் பறந்துவிட முடியும். அவ்வாறு காற்றசைவு ஏற்படாமல் கடித்த இடத்தில் மெல்லத் தடவினால் நசுங்கிச் சாவதைத் தவிர அதற்கு வேறுவழி இருக்காதென்று விளக்கியிருந்தாள்.

நன்றாகத்தானிருந்தது அவனுக்கு அப்போது கதையும் விளக்கமும்.
அந்த வயதில் ரசிக்கக்கூடியதாய் இருந்த கதையை இப்போது அந்தளவு ரசனையற்றிருந்தாலும் இனிமையாக ஞாபகம் கொள்வதற்கு அவனுக்கு வேறொரு காரணம் இருந்தது.

இதை விளக்கவேண்டுமானால் ஆரம்பத்திலிருந்து கதையைத் தொடக்கவேண்டும்.

சுமார் ஒரு மாதத்துக்கு முன்னால் இந்தக் கதை இவ்வாறு ஆரம்பித்தது.

தமிழ்நாட்டில் தங்கியிருந்த உறவினர் வீட்டுத் திருமணமொன்றுக்கு அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய பல நாடுகளிலும் வசித்த சொந்தங்களுக்கு அழைப்பு அனுப்பியிருந்தார்கள். திருமணத்துக்குப் போகிறதில் அது லீவு எடுப்பதில் மிகுந்த சிரமமாயிருந்த கோடை விடுமுறைக்குச் சற்று முந்திய சமயமானதால் பலருக்கும் விருப்பமின்மையே அதிகமாகவிருந்தது. நீண்ட நாட்கள் சந்தித்திராத உறவினர் என்பதால் திருமணத்துக்கு சிலநாட்கள் முன்கூட்டியே செல்ல முடிவெடுத்து, அதற்கான ஆயத்த வேலைகளில் அவன் ஈடுபட்டுவிட்டான்.
அற்ப காரணங்களால் ஏற்பட்ட உள்முரண்களில் உழன்றுகொண்டிருந்த அந்த உறவுகளுக்கிடையில் போக்குவரத்து மட்டுமல்ல, தொலைபேசி அழைப்புகள்கூட அற்றிருந்த நிலையில், அந்தத் திருமணத்தை தமது பகைமைகளை, வெறுப்புகளை நீக்குவதற்கான சந்தர்ப்பமாக ஏன் எடுக்கக்கூடாதென்ற அவனது அபிப்பிராயத்தை உறவுகளால் தவிர்க்க முடியாதுபோக, ஒரு வாரமேனும் விடுப்பு எடுத்துக்கொண்டு வர இறுதியில் சம்மதித்தனர்.

ஜுன் மாதம் 12ஆம் திகதி, திருமணத்துக்கு வருகைதரும் முதல் வெளிநாட்டு விருந்தினனாக அவன் தமிழகத்தில் காலடி வைத்தான். விமான நிலையத்துக்கே வந்து உறவினர்கள் அவனை அழைத்துச் சென்றார்கள்.

தமிழ்நாட்டின் அனல் பறக்கும் வேனிற்காலம்பற்றிய அச்சத்தில் இருந்த அவன், வீடு சென்றதும் அதிசயமாகிப்போகுமளவிற்கு, அறைகள் குளீரூட்டும் வசதி செய்யப்பட்டிருந்தது கண்டான். அவர்கள் வருவதையொட்டித்தான் முந்திய மாத இறுதியில் அந்த வசதி செய்யப்பட்டதாக உறவினர் பெருமையாகச் சொல்லிக்கொண்டார்.

அவனது அவசம் தணிந்தது. ஒரு அறையில் அவன் தங்கவைக்கப்பட்டான்.

திருமணத்துக்கு வந்திருந்த முதல் நாள் கருக்கடிக்கும் நேரத்தில் தெருவில் நின்று பேசிக்கொண்டிருந்த ஒரு சில நிமிடங்களிலேயே, கொடுவேனில் காலம் மட்டுமல்ல, அவன் அஞ்சவேண்டிய இன்னொரு அம்சமும் அங்கே இருக்கிறதென்பது தெரிந்தது அவனுக்கு. கணுக்கால்களைச் சுற்றி தசைத் துண்டங்களே பிய்த்தெடுக்கப்பட்ட வலி. கழிவுநீரோடும் கால்வாய்களைச் சீராக்கி மூடிபோடும் மாநகர சபையின் திட்டப் பணிகள் முடிகிற சமயத்திலேயே இவ்வளவு படைபடையான நுளம்புகள் எங்கிருந்து கிளம்பின என்ற திகைப்போடு அவன் வீட்டுக்குள் திரும்பிவிட்டான்.

கணுக்கால்களை மாறிமாறி உரஞ்சிக்கொண்டு அவன் கூடத்தில் அமர்ந்து தொலைக்காட்சியின் ஏதோ ஒரு சனலைப் பார்க்கத் தொடங்கினான்.

மேலே மின்விசிறிகள் இரண்டு பயங்கர வேகத்தில் சுற்றிக்கொண்டிருந்தன. இருந்தும் நுளம்பின் பறப்பையும் கடிப்பையும் அவற்றினால் தடுக்கமுடியவில்லை. அந்தக் கடுப்பு ஒரு விஷக்கடியின் வலியைச் செய்தது. அவன் அவசரமாக இரவுச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு தனது அறைக்குப் போய்விட்டான்.

குளிரூட்டப்பட்ட அறை பாதுகாப்பாகத்தான் தோன்றியது ஏறக்குறைய அதிகாலை இரண்டு மணிவரை. குளிரை ஒரே சீரில் வைத்திருக்கும் பொறிச் செயற்பாடு காரணமாக நள்ளிரவுக்கு மேல் ஏ.சி. நின்றிருக்க அவனும் பயண அலுப்பில் தூங்கிக்கொண்டிருந்த வேளையில், நுளம்பின் தொல்லை ஏற்பட்டுவிட்டது. மூடிய அறைக்குள் எப்படிப் புகுந்தன அவை? ஒருவேளை ஏற்கனவே அறைக்குள் புகுந்துவிட்ட நுளம்புகளோ? ஆயினும் தொல்லை மோசமானதாக இருக்கவில்லை. களைத்துப் போயிருந்த உடம்பானதால் நித்திரைக் கலைப்பையும் அது பெரிதாக அவனில் செய்யவில்லை.
காலையில் மட்டும் அதன் வலியுணர்கை ஒரு ஞாபகமாயிருந்து ஒரு எரிச்சலை எஞ்ச வைத்திருந்தது அவனில்.

இதற்கு மேல்கீழான அனுபவங்களின்றி நாட்கள் சில கடந்திருந்த நிலையில், வெளிநாட்டு உறவினர்கள் வரத் தொடங்கினார்கள். முதலில் வந்த ஒரு குடும்பத்துக்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டது. அடுத்ததாய் வந்த ஒரு குடும்பமும் ஆண்கள் அற்றிருந்ததால் அந்த அறைக்குள் சென்றுவிட்டது. தங்கள் சில்லு வைத்த பெட்டிகளோடு குழந்தைகள் உட்பட ஆறேழு பேர் அதனுள் ஆரவாரமாய் அடங்கியிருந்தனர்.

மேலும் இரண்டொரு தினங்களில் மேலும் சில விருந்தினர்கள் வர சாமான் அறையாக இருந்ததை ஒதுக்கி, ஒரு புதிய எயார் கூலரையும் வாங்கி உடனடியாகப் பொருத்தி வீட்டுக்காரர் கொடுத்தார்.

இனிமேலேதான் முக்கியமான பிரச்சினை ஆரம்பிக்கப்பட இருந்ததென்பது தெரியாமல் அவனும் உறவினர்களோடு கதைத்தும், பிள்ளைகளோடு சிரித்து விளையாடியும் பொழுதைப் போக்கிக்கொண்டிருந்தான்.

அடுத்த நாள் அவனது தங்கையும், இரண்டு பிள்ளைகளும் வந்தார்கள்.

ஆளுக்கொரு சூட்கோஸை இழுத்துக்கொண்டு அந்த மூவரும் விமானநிலையத்தைவிட்டு வெளியே வந்தபோது அவனது மனது எப்படித் துடித்தது? சொந்தத் தங்கை. நேரிலே கண்டு பன்னிரண்டு வரு~ங்கள். அவளது பிள்ளைகளை நேரில் பார்த்ததேயில்லை. அவர்களைக் கட்டியணைத்து சுகம் விசாரித்து, சரி வீட்டிலே போய் மற்றவற்றையெல்லாம் கதைப்போமென்று புறப்பட்டு வந்தால், வீட்டுக்குள் நுழைந்த தங்கையும் பிள்ளைகளும் நேரே அவனது அறைக்குள் புகுந்தார்கள்.

அவன் சொல்ல எதுவுமிருக்கவில்லை.

திருமண விழாவுக்கு இரண்டு நாட்கள் முந்தி திடீரென்று பெண்களுக்கிடையே பேச்சாகியது, அவனது மனைவியின் தங்கை சாந்தி குடும்பத்தினர் பிரான்ஸிலிருந்து அன்று மாலை சென்னை வருவதாக.

பெரிய ஈடுபாடெதையும் அவன் காட்டவில்லை. பொதுவாகவே அவர்களோடு அவனது குடும்பத்துக்கு நெருக்கமான தொடர்பிருக்கவில்லை இலங்கையில் இருக்கும்போதே. சின்னன் சின்னனாக வெடித்துக் கிளம்பி பெரிதாக உருவெடுத்த பிரச்னைகளால்தான் எல்;லாம். பிரச்னைகளின் பாதி தன் தங்கை சாந்தியின் வாயினால் வந்ததென்று அவனது மனைவி உயிரோடு இருந்தபோதே சொல்லியிருக்கிறாள். ‘வந்தால் வரட்டுமன், என்ன கதைச்சாலும் வாய் திறக்காமலிருந்திட்டா பிரச்சினையொண்டும் வராது’ என்ற நினைப்பு அவனிடத்தில்.

அவர்கள் வந்த விமானம் சென்னை அண்ணா விமானநிலையத்தில் எட்டு மணிக்கு இறங்குவதாக இருந்தது. ஒன்பது மணிக்குள் அவர்கள் வந்த வாடகைக் கார் வீட்டு வாசலில் வந்து நின்றது. அவன் தொலைக்காட்சியில் அலைகளை மாற்றி மாற்றி கவனத்தை திசைதிருப்பிக் கொண்டிருந்தான்.
அப்போது அவனது தங்கை, ‘அந்தப் பெட்டியைக் கொஞ்சம் எடுத்து வாருங்கோவன், அண்ணை. தூக்கேலாமல் வாசல்ல நிண்டு சாந்தி க~;ரப்படுறா’ என்று கூற அவன் எழுந்துபோனான்.

அந்த சுமார் முப்பது கிலோ பெட்டியைத் தூக்கிக்கொண்டு வந்து அவன் கூடத்துள் நுழையும் முன்னமே சாந்தியும் மகளும் அவனிருந்த முதலாவது அறைக்குள் சிறிய பெட்டிகளைக் கொண்டுபோய் வைத்துவிட்டு கட்டிலில் ஏறிக் குந்திக்கொண்டார்கள்.

வேறு அறை இல்;லாததோடு, பெண்களாகவும் இருந்ததால் தானே பெருந்தன்மையோடு நடந்துகொள்வதுபோல தனது பெட்டியை எடுத்துக்கொண்டு சமையலறைக்கு முன்னாலிருந்த ஒதுக்கமான இடத்துக்கு அவன் வந்துவிட்டான். அவனது பெருந்தன்மையில் வீட்டுக்காரரின் முகம் மலர்ந்துபோயிற்று.

வந்திருந்த பெண்களெல்லாம் கதைத்துக்கொண்டிருந்துவிட்டு அன்று படுக்கப்போக பன்னிரண்டு மணிக்கு மேலே. அதற்கும் மேலேதான் அவன் பாயைப் போட்டுக்கொண்டு படுத்தான். முன்னமே படுத்திருந்தால் அவர்கள் எல்லாம் பாத்ரூம் போய்வர கஷ்ரமாயிருந்திருக்கும்.

நேரம் போய்விட்டிருந்ததில் படுத்தவுடனேயே அவனுக்குத் தூக்கம் பிடித்துவிட்டது. ஒரு மணி நேரம் தூங்கியிருப்பான். அதற்கு மேலே தொடங்கிவிட்டது நுளம்புப் படையின் தாக்குதல். அவ்வளவு விசையாக அந்தப் பகுதியிலும் இரண்டு மின்விசிறிகள் சுற்றிக்கொண்டிருந்தும், பறத்தலின் சிரமமெதுவும் படாமலே நுளம்புகள் அவனை மொய்க்கத் தொடங்கிவிட்டன. கால்களையோ போர்வையால் இழுத்துமூட முடியவில்லை. கோடையின் கொடுமை வேர்வையாய் வழியவைத்தது. வியர்த்த மேனி பிசுபிசுத்து ஒட்டியது.

சமாளித்தபடி இங்குமங்குமாய் உருண்டு புரண்டுகொண்டு நான்கு மணிவரைதான் சமாளிக்க முடிந்தது. நுளம்பு கொடுத்தது பெருந்தொல்லையெனில், அதற்குச் சற்றும் குறையாததாயிருந்தது புழுக்கத்தின் கொடுமை. அவன் எழுந்து கதவைத் திறந்துகொண்டு வீட்டுக்கு வெளியே வந்தான்.

ஐந்து மணிக்குத்தான் மெயின்ரோட்டிலிருந்த ரீக்கடை திறக்கும். அவனுக்கு வேறு வழியிருக்கவில்லை. ஐந்து மணியாகும்வரை கணுக்காலை மொய்த்துப் பிடுங்கும் நுளம்புத் தொல்லையைத் தவிர்க்க கேற்றுக்கும் வீட்டு வாசலுக்குமாய் மாறிமாறி நடந்தபடியிருந்தான்.

அன்று மாலையே கல்யாண மண்டபத்துக்கு அவர்கள் போய்விட்டார்கள். மறுநாள் அதிகாலைச் சுபமுகூர்த்தத்தில் திருமணம்.

திருமணம் முடிந்து மதியச் சாப்பாட்டக்கு மேல் உள்@ர் நண்பர்களும் உறவினர்களும் புறப்படத் தொடங்கினார்கள். அவர்களும் மாலை மூன்று மணியளவில் வீடு திரும்பினார்கள்.

அன்றிரவும் அதே கதைதான். பொறுக்கமுடியாமல், நுளம்புத் தொல்லையைப்பற்றி இரவுச் சாப்பாட்டு நேரத்தில் அவன் வீட்டுக்காரரிடமே கூறிவிட்டான். உடனடியாகவே கடைக்குப் போய் நுளம்புத் திரியும், ‘கறுப்பு ஹிற்’றும் வாங்கிவந்தார் அவர். மறுநாள் நான்கு பேர் ஊருக்குக் கிளம்புகிறார்கள், அதற்கும் மறுநாள் இன்னும் இரண்டு பேர், எப்படியும் இரண்டு நாளில் ஏசியுள்ள ஒரு தனி அறை அவனுக்குக் கிடைத்துவிடும் என்று அவனை அமைதிப்படுத்தினார் அவர்.

அவனும் கிளம்ப நாளாகிறதுதானே என்று அவரது மனம் ஆறும்படி ‘பறவாயில்ல, சமாளிப்பம்’ எனச் சொல்லிவைத்தான்.

மூன்றாம் நாள் தனியறையில் படுத்துக்கிடந்தான் அவன்.

வெக்கை குறைந்தது. ஆனால் நுளம்புத் தொல்லை குறையவில்லை. முன்பிருந்த தனியறையில் மூன்று நான்கு நுளம்புகளே இருந்திருக்கலாம். அந்த அறையிலோ ஒரு படையே வந்து குடிகொண்டிருந்தது. ‘கறுப்பு ஹிற்’றை நன்றாக ஸ்பிறே செய்துவிட்டு மறுபடி உள்ளே சென்று படுத்தான். கூடியபட்சமாக ஒரு மணிநேரம்தான் தொல்லையில்லாமல் இருந்தது. மேலே அவற்றின் கொடுமை தொடங்கிவிட்டது. என்ன செய்தென்ன? அவற்றின் வன்மத்தை அவனால் அடக்கவோ, தாங்கவோ முடியவில்லை.

மறுநாள் காலையில் சாப்பாட்டு நேரத்தில் தன் மனைவியின் தங்கை சாந்தியைக் கேட்டான், இரவிலே அவளுக்கு அந்த நுளம்புத் தொல்லைக்குள் நித்திரை நன்றாக வருகிறதா என்று. ‘ஏன், நல்;லாய்த்தான் வருகுது’ என்றாள் அவள்.

அவனது தேகத்தின் கந்தம் அவற்றுக்குப் பிடித்திருக்கிறதா என்ன? அவனுக்கு மட்டும் ஏன் இந்த வதை? வீட்டுக்காரரிடமே சொன்னான்: ‘எப்பிடி இவ்வளவு நுளம்புத் தொல்லைக்குள்ள இருக்கிறியள்? கறுப்பு ஹிற்றுக்குக்கூட அடங்குதில்லையே.’

‘ஜன்னலுக்கெல்லாம் வலை அடிச்சிருக்கு. என்னமாதிரியோ வந்திடுதுகள். வலையில ஓட்டை எதாச்சும் விழுந்திட்டுதோ தெரியேல்ல, பாக்கவேணும்’ என்றார் அவர்.

மத்தியான நேரத்தில் வீடு முழுக்கச் சுற்றிப் பார்த்தான். இரண்டு இடங்களில் வலை கிழிந்து கிடந்தது. நுளம்புகள் வீட்டுக்குள் நுழைவதற்கான பாதையை மட்டுமில்லை, அவை அம்பாரமாக உற்பத்தியாகும் இடத்தையும் கண்டுபிடித்தான்.

முன்புறமாய் வளர்ந்திருந்த மரங்கள் பக்கத்துக் காணியின் வீடற்ற வெறுமையை மறைத்திருந்தன. பின்புறத்திலிருந்து பார்த்தபோதுதான் அதன் வெறுமை தெரிந்தது. காணி முழுக்க புதர் மண்டி வளர்ந்திருந்தது. நிறைய பேணிகள், போத்தல்கள், பழைய வாளிகள் வீசப்பட்டிருந்தன. அவையெல்லாம் நுளம்புகளுக்கு அருமையான வாழிடமும் உற்பத்திஸ்தலமும்.

மாலைக்குள் வலையில் கிழிந்திருந்த இடங்களில் பசை பூசிய துணியொட்டி அவற்றை அடைத்தான். ஓரளவு அன்றைக்கு நிம்மதியாகத் தூங்கலாம் என்ற நம்பிக்கை வந்தது.

அவன் எதிர்பார்த்ததுபோல் நுளம்புத் தொல்லை கூடத்துக்குள்கூட அன்றைய இரவில் குறைவாகவே இருந்தது.

மறுநாள் படுக்கைக்குச் செல்வதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பாகவே ‘கறுப்பு ஹிற்’ அடித்துவிட்டு படுக்கப் போனான் முந்திய நாளின் நிலைமையை மேலும் உறுதிப்படுத்துவதற்காக. அன்றைக்கு நுளம்புத் தொல்லையே இல்லாத நாளாக இருக்கப்போகிறதென்று அவனது மனம் முழுக்க ஒரு நிம்மதி தெளித்திருந்தது.

இரண்டு மணிக்கு மேலேதான் தூக்கத்தைக் கலைத்து அவனுக்குத் தெரியவைத்தன ஓரிரு நுளம்புகள், அன்றைக்கு அவன் ஏமாந்துபோனதாக.

பாத்றூம் போய்விட்டு வந்து கட்டிலில் அமர்ந்து குனிந்து கணுக்காலைச் சொறிந்துகொண்டு நீண்டநேரமாய் இருந்தான். நுளம்பு கடித்த விரல் மொழிகளெல்லாம் கடுக்கிக்கொண்டிருந்தன. அன்றைக்கு நுளம்பு கடித்த இடத்தோடு கடிக்காத இடத்திலும்கூட கடுப்பு ஏற்பட்டுக்கொண்டிருந்ததாய்ப் பட்டது.

புறப்பட இன்னும் இரண்டு நாட்கள்தானே இருக்கின்றன எண்ணத்தோடு, தூக்கம் வரும்வரை ஏதாவது சஞ்சிகையை எடுத்துப் புரட்டலாமென ஒரு எண்ணம் எழுந்தது.

அகப்பட்ட சஞ்சிகையையொன்றினை எடுத்தான்.

படங்கள் நிறைந்து புரட்டிப் பார்ப்பதற்கான சஞ்சிகைதான் அது. சில இடங்களில் வாசிக்கவும் ஏதாவது இருந்தது. அவ்வாறு கண் பதிந்த ஒரு செய்தித் துணுக்கை வாசித்துக்கொண்டிருக்கையில் சஞ்சிகையின் பின்புறமாக வந்து அதைப் பிடித்திருந்த அவன் கைவிரல் மொழியில் ஊசியால் குத்தியது ஒரு நுளம்பு. படீரென கையை உதறிக்கொண்டு விரித்துப் பிடித்திருந்த சஞ்சிகையினால் எட்டி எட்டி அது பறந்த திசையில் விசுக்கினான்.

நுளம்புக்கு அடி பட்டிருக்குமா?

இல்லை, அது எட்டத்தில் பறந்து போய்க்கொண்டிருந்தது.

ஒரு மனிதனைவிட ஒரு நுளம்பைக் கொல்வது எவ்வளவு கடினமானது என்பது அன்றைக்குத்தான் அவனுக்குத் தெரிந்தது.

அவன் சஞ்சிகையை எட்டி மேசைமேல் போட்டுவிட்டு போர்வையால் இழுத்து மூடிக்கொண்டு படுக்க நினைத்தான். லைற்றை எட்டி அணைக்க உன்னுகிற சமயம் அவன் முகத்தருகே பறந்து போனது நுளம்பு ஒன்று. கடித்த அந்த நுளம்புதானா? அல்லது இன்னும் ஒன்றிரண்டு அறைக்குள் இருக்கின்றனவா? அவனுக்குத் தெரியாது. சந்தன நிறப் போர்வையின் பின்னணியில் அதன் பறப்பு அவ்வளவு துல்லியமாய்த் தெரிந்தது அவனுக்கு.
மிக்க அடர் கறுப்பு நுளம்பாய் இருந்தது அது. விரிந்த இறக்கைகள். நுளம்புக்கு எத்தனை கால்கள்? ஆறுதானே? மூன்று நான்கு கால்களையும் பார்த்ததாகத் தோன்றியது.

அவன் லைற்றை அணைக்கவில்லை. அதைக் கொல்ல மீண்டும் ஒரு தருணத்தை எதிர்பார்த்து அசைவறுத்துக் கிடந்தான். எயார் கூலரின் விர்…இரைச்சல் நின்றிருந்தது. ஒரு மௌன இறுக்கம் எங்கும். பக்கத்தில் யாராவது படுத்திருந்தால் அவர் மூச்சிழையும் சத்தத்தையும் கேட்டிருக்கக்கூடிய நிசப்தம் அது.

அப்போது அவன் கேட்டான் விர்ரென்ற ஓர் இரைச்சலை. அவன் தாக்குதலுக்குத் தயாராக மூச்சுக் காற்றையும் மெல்லியதாய் இழையவிட்டபடி. ஒரு துளியளவு சலனமில்லை அவனது மேனியில்.
சட்டென ஒரு உறுத்தல் இடது காதுச் சோணையில். சடாரென கையால் அடித்தான். அவனது காதோடு கன்னமும் வலித்தது வலிதான அந்த அறையால்.

நுளம்பு நசிந்த எந்த உணர்வும் கையில் இல்லை. சில நுளம்புகள் கசங்குப்படும்போது துளி ரத்தமே சிதறி கையில் ஒட்டும். திரவக் கசிவை உணர முடிந்திருக்கும். நுளம்பு தப்பிவிட்டதுதான் என்பது திண்ணப்பட்டது.

சோர்ந்துபோனான். தோல்வியில் ஒரு மூர்க்கம் முன்பு இருந்தது. அப்போது சோர்வுதான் மிஞ்சியது.

இனி போர்வையால் தலையையும் காலையும் இழுத்து மூடிக்கொண்டு அவன் படுக்கலாம். செய்வதற்கு ஒன்றுமில்லை.
என்ன அது? போர்வைக்கு மேலே அவனது முழங்காலடியில் தெரிகிற கறுப்பு என்ன?

அந்த ஜந்துவேதான். நேர்நேராக அவனைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தது. நுளம்புக்கு கண் உண்டா? அவனுக்குப் பார்த்ததுபோலவே இருந்தது. அதன் கூர்ங்கொடுக்குக்கூட அவனது கண்ணுக்குத் தெரிந்ததே.

காதிலும், கை விரலிலுமாக அப்போதுமிருந்த கடுப்பு விண்டெழுந்து ஒரு தாக்குதல் முயற்சியைச் செய்ய உந்தியதுதான். ஆனாலும் கைவிட்டான். வேண்டாம்.

அன்றைக்கு அவனது பயணம்.

சில சாமான்கள் வாங்கவேண்டியிருந்தது. தி.நகர் போய் வந்ததும் மாலையில் புறப்படத் தயாராக சாமான்களை அடுக்கி பெட்டிகளை மூடிவிட்டு ஹோலுக்கு வந்தான்.

முதலில் வந்து கடைசியாகப் புறப்படும் விருந்தாளியை அனுப்ப எல்லாரும் சந்தோ~த் தயாரில் இருந்தார்கள்.

தொலைக்காட்சியில் விஜயகாந்த் படமொன்று போய்க்கொண்டிருக்கவே சிறிதுநேரம் பார்க்கலாமென ஒரு சோபாவில் அமர்ந்தான்.

கால்விரல் மொழியில் சுள்ளென்றது. காலை உதறி நீட்டினான். பின் சாரத்தால் காலை மூடிக்கொண்டு படம் பார்ப்பதைத் தொடர்ந்தான். பார்த்து எதைச் செய்யமுடியும்? அந்த நுளம்பாகவேதான் இருக்கவேண்டும். அவனது முற்பிறப்பின் சாபம் அது. பரம்பரை வைரி. கடுப்பில் அதன் உக்கிரம் தெரிந்தான். நுளம்புகள் கடித்து ரத்தத்தை உறிஞ்சும் சரி, விஷத்தையுமா ஏற்றும்? ஆயினும் அதன் விஷமெனில் மிகமிகக் கடுமையானது.

அவன் கனடா வந்துசேர்ந்தான்.

தொல்லை தொலைந்ததென நீட்டிநிமிர்ந்து கட்டிலில் படுத்த அன்றைய இரவில் அவனுக்கு நுளம்பு கடித்தது.

கனடாவிலும் நுளம்பு உண்டு. வெள்ளை நைல் காய்ச்சல் என்ற ஒரு நோயையும் கொஞ்சநாட்களாகப் பரப்பிக்கொண்டுமிருந்தது. ஆனாலும் அவற்றின் கடி அவ்வளவு வலியைச் செய்வதில்லையென்று தோன்றியது. வீட்டுக்குள் அத்துமீறிப் புகுந்து தாக்குதல் செய்யுமளவும் அவை தீவிரமாய் இருப்பதில்லை. பின்னால் புல்வெளிக்குப் போனால் மட்டும் தொல்லை தருகிற வகை.

குழந்தைகளுக்கு கடித்த இடம் சிவந்து, வீக்கம்கூட சிலவேளை கண்டுவிடும். ஆனாலும் எந்தக் குழந்தையும் துடித்து விழுந்து கதறுவதில்லை நுளம்புக் கடியால்.

கடிபட்ட இடத்தில் கிளர்ந்த கடுப்பிலேயே அவனுக்குத் தெரிந்துவிட்டது, வந்துவிட்டது அந்தப் பெரிய கறுப்பு நுளம்பு என்பது. ஆனால் எப்படி? விமானத்திலேயா? ஏன் முடியாது? புறப்படும்வரை அவன் பூட்டாமல் விட்டிருந்த பெட்டிக்குள் போய்விட்டால் இலவசப் பயணம் கிடைப்பதோடு, தவறாமல் அவனது வீட்டையும் அதனால் வந்து சேர்ந்துவிட முடியுமே.

பூழல் நுளம்பு என்று மறுபடியும் திட்டினான். அவ்வளவுதான். முடிந்தால் எங்காவது தேடி ஒரு ‘கறுப்பு ஹிற்’ மறுநாளைக்கு வாங்கவேண்டுமென்று மட்டும் நினைத்துக்கொண்டான், அதனால் பெரிதாக எதுவும் அதற்கு நிகழாதென்று தெரிந்திருந்தபோதும்.

மறுநாள் ‘கறுப்பு ஹிற்’றை வாங்கி மூலைமுடுக்குகள், கட்டில் இடுக்குகள், அலுமாரிப் பின்புறங்களெல்லாம் அடித்தான். பாதி நம்பிக்கையோடுதான் அன்று படுக்கவும் போனான். அவனது நம்பிக்கை வீணாகவில்லை. நுளம்பு சாகாமல் தப்பியிருந்து அன்றிரவும் அவனைக் கடித்தது.

அதற்கு தனது ரத்தம்தான் வேண்டுமென்றால் ஒவ்வொரு இரவும் ஒன்றோ இரண்டோ துளி ரத்தத்;தை மேசையில் ஒரு பிளாஸ்ரிக் அட்டையில் சொட்டவைத்துவிடலாமேயென ஒரு மனநோயாளியிடத்தில்போல் ஒருசமயம் அவனில் யோசனை ஓடியது.

அவனது ‘கறுப்பு ஹிற்’ ஸ்பிறேயில் அது மேலும் மூர்க்கம் கொண்டுவிட்டதுபோல்தான் அன்றைய நள்ளிரவு வரை இருந்தது. போர்வை விலகிய உள்ளங்காலில் வந்தும் குத்தியது. எந்த நுளம்பாவது உள்ளங்காலிலும் வந்து குத்துமா? கூடத்துச் சோபாவில் போய் படுத்தாலென்னவென ஒருபோது எண்ணினான். எங்கே ஓடியும் அதனிடமிருந்து தப்பிவிட முடியாதென்ற நிச்சயத்தில் படுக்கையிலேயே தூங்க முயன்றான்.

ஒருவகை நுளம்புகள் அவ்வகையான மூர்க்கமும், தமக்கு விருப்பமான வகை ரத்தத்துக்காக விரதத்தோடு காத்திருக்கும் தன்மையும் கொண்டவையென்று அவன் கேள்விப்பட்டிருக்கிறான்.

அதற்கு மேலே கொஞ்சம் நிம்மதியாகத் தூங்கினான் என்றுதான் மறுநாள் தோன்றியது.

இப்போது அவனில் பிரக்ஞையாகிறது விழித்திருக்கும் இந்த வேளைவரை ஒரு குத்தல் இல்லை, ஒரு கடுப்பு இல்லை, கைக்கெட்டும் தூரத்தில் விர்ரென்ற அதன் பறப்பும் இல்லையென்பது. அதிசயம்தான். ஆனாலும் அது நிஜமாய் நடந்திருக்கிறது.

அந்த வேளையிலேதான் அவனுக்கு தனது அம்மாவின் அந்தக் கதை ஞாபகம் வந்தது.

என்ன நினைத்தானோ திடீரென எழுந்து அறை விளக்கைப் போட்டுக்கொண்டு போர்வையைப் புரட்டிப் பார்த்தான். படுக்கை விரிப்பைப் பார்த்தேன். ம்ஹு ம்! பின் தலையணையைத் திருப்பினான்.

ஆகா….அங்கே இருந்தது அவனது ஒரு துளி ரத்தத்ததினது அழுந்திக் காய்ந்த கறையும், ஒரு சின்ன கறுப்பு உருண்டையும்.

அம்மாவின் குரல் மீண்டும் ஒலித்தது.

அவன் குழப்பம் நீங்கினான்.

(ஞானம், மே 2015)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *