மூன்று பொம்மைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 4, 2021
பார்வையிட்டோர்: 2,736 
 
 

(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“டேய், உன் அப்பாடா!” என்று தன் சகாக்களில் ஒருவன் தன்னை எச்சரித்ததுதான் தாமதம், அதுவரை கோலி விளையாடிக் கொண்டிருந்த குமார், தன் கையிலிருந்த குண்டைக் கீழே விட்டெறிந்துவிட்டு, விட்டான் சவாரி, வீட்டை நோக்கி.

வந்த வேகத்தோடு வேகமாகக் கை கால் முகத்தைக் கழுவிக் கொண்டு, நெற்றியில் மூன்று பட்டை. வீபூதியையும் மறக்காமல் அடித்துக் கொண்டு, புத்தகமும் கையுமாக விளக்கடியில் உட்கார்ந்துவிட்டான், படிக்க!

“காலை எழுந்தவுடன் படிப்பு…..மாலை முழுதும் விளையாட்டு!” என்றுதான் பாரதியார் கூடப் பாடியிருக்கிறார்; இந்த அப்பாவுக்கு என்னடா வென்றால், எப்போது பார்த்தாலும் படிப்பு, படிப்பு, படிப்புத்தான்!

இத்தனை மகிழ்ச்சியோடு தொடங்கியதிலிருந்து, தன் கணவர் ஆலாலசுந்தரம் தெரு முனையில் வந்து கொண்டிருக்கிறார் என்பதை ஒருவாறு ஊகித்துக் கொண்ட அஞ்சுகம், அடுத்த வீட்டுக்காரியுடன் அளந்து கொண்டிருந்த வம்பை அத்துடன் நிறுத்திக்கொண்டு, அவசரம் அவசரமாக அடுக்களைக்குச் சென்றாள், காபியைப் போட!

இவையனைத்தும் தமக்குத் தெரிந்தும் தெரியாதவர் போல உள்ளே நுழைந்த ஆலாலசுந்தரத்தைப் பார்த்தும் பார்க்காதவன் போல் தன் பாடத்தைப் படிக்கத் தொடங்கினான் பையன்:

“தீயாரைக் காண்பதும் தீதே – திருவற்ற
தீயார் சொல் கேட்பதும் தீதே!
தீயார் குணங்கள் உரைப்பதும் தீதே
அவரோடு இணங்கி இருப்பதும் தீது!”

இந்தப் பாட்டைக் கேட்டதுதான் தாமதம், “பலேடா பையா, பலே! நான் இந்தப் பொம்மைகளை வாங்கிக் கொண்டு வந்ததற்கும், நீ அந்தப் பாட்டைப் பாடுவதற்கும் என்ன பொருத்தம், என்ன பொருத்தம்!” என்று சொல்லிக் கொண்டே தம் கையிலிருந்த மூன்று பொம்மைகளை மேசையின் மேல் வரிசையாக வைத்துவிட்டு, “பாரடா, பார்! நீ பாடிய பாட்டுக்கும் நான் வாங்கிக்கொண்டு வந்துள்ள பொம்மைகளுக்கும் என்ன பொருத்தம் என்பதை நீயே பார்!” என்றார் அப்பா.

பையன் பார்த்தான் – நகைச்சுவையோடு செய்யப்பட்டிருந்த அந்த மூன்று பொம்மைகளும் குரங்குப் பொம்மைகள் – முதல் குரங்கு கண்ணைப் பொத்திக் கொண்டு இருந்தது; இரண்டாவது குரங்கு காதைப் பொத்திக் கொண்டு இருந்தது; மூன்றாவது குரங்கு வாயைப் பொத்திக் கொண்டு இருந்தது!

“சரி, இப்போது நான் என்ன செய்யட்டும்?” என்று கேட்டான் பையன் ஒன்றும் புரியாமல்.

“ஒன்றும் செய்ய வேண்டாம்; நீ அவற்றைப் பின்பற்றி நடந்தால் போதும்!” என்றார் அப்பா.

பையன் ஒருகணம் யோசித்தான்; மறுகணம் “முடியாது அப்பா, முடியாது; அவற்றைப் பின்பற்றி நடக்க என்னால் முடியாது!” என்றான் தலையை அப்படியும் இப்படியுமாக ஆட்டிக் கொண்டே.

“ஏண்டா , முடியாது?”

“மொத்தம் ஆறு கைகள் அல்லவா அதற்கு வேண்டி யிருக்கின்றன? எனக்கு இருப்பதே இரண்டே இரண்டு கைகள்தானே, அப்பா? – வேண்டுமானால் என்னுடைய கைகளால் நான் கண்ணைப் பொத்திக் கொண்டு விடுகிறேன்; உங்களுடைய கைகளால் என் காதைப் பொத்துங்கள்; அம்மா தன்னுடைய கைகளால் என் வாயைப் பொத்தட்டும்!”

“பொத்துவேண்டா, பொத்துவேன்! அதைவிட வேறு என்ன வேலை, எனக்கு?” என்று சொல்லிக் கொண்டே அந்தச் சமயத்தில் அங்கே வந்த அஞ்சுகம், கையிலிருந்த காபியை மேசையின்மேல் வைத்துவிட்டுத் திரும்பினாள்.

“அவள் வாயைப் பொத்திக் கொள்வதற்கே அவளுடைய கைகள் போதாதேடா! உன் வாயைப் பொத்த அவள் கைகளுக்கு எங்கே போவாள்?” என்றார் ஆலாலசுந்தரம்.

“அப்படியானால் முடியாது, அப்பா! என்னால் அந்தப் பொம்மைகளைப் பின்பற்ற முடியவே முடியாது!” என்றான்பையன், அழுத்தந்திருத்தமாக.

“போடா முட்டாள்! அந்தப் பொம்மைகளைப் பின்பற்ற ஆறு கைகள் என்னத்துக்கு, அறிவிருந்தால் போதாதா? – இப்போது நான் கேட்பதற்கு பதில் சொல், முதல் பொம்மை என்ன சொல்கிறது?” என்று கேட்டார் அவர்.

“கண்ணைப் பொத்திக்கொள்ளச் சொல்கிறது!” என்றான் அவன்.

“நாசமாய்ப் போச்சு! இப்போது நீ படித்தாயே, ‘தீயாரைக் காண்பதும் தீதே!’ என்று – அதைச் சொல்லாமல் சொல்லவில்லையா, அந்த பொம்மை?”

“ஆமாம்ப்பா, அதைத்தான் சொல்கிறது போலிருக்கிறது!”

“சரி, இரண்டாவது பொம்மை என்ன சொல்கிறது?”

“காதைப் பொத்திக் கொண்டு இருக்கிறதே, அந்தப் பொம்மைதானே? ‘தீயார் சொல் கேட்பதும் தீதே!’ என்று சொல்கிறது!”

“மூன்றாவது பொம்மை?”

“வாயைப் பொத்திக் கொண்டு இருப்பதுதானே? ‘தீயார் குணங்கள் உரைப்பதும் தீதே!’ என்று சொல்கிறது!”

“பலேடா, பையா, பலே! இந்த மூன்று தத்துவங்களை மட்டும் நீ வாழ்நாள் முழுதும் கடைப்பிடித்தால் போதும் – அவற்றால் உனக்கும் நல்லது; இந்த உலகத்துக்கும் நல்லது! – என்ன புரிந்ததா?” என்றார் தகப்பனார், அவன் முதுகில் தட்டிக் கொடுத்துக் கொண்டே.

“புரிந்தது அப்பா!” என்றான் மகன்.

மறுநாள் காலை; செலவுக்குப் பணம் எடுப்பதற்காக அலமாரியைத் திறக்கப் போன அஞ்சுகம், “ஐயோ!” என்று அலறினாள்.

“என்ன, என்ன நடந்தது!” என்று பதட்டத்துடன் கேட்டுக் கொண்டே வந்தார், ஆலாலசுந்தரம்.

“போச்சு, எல்லாம் போச்சு!” என்றாள் அவள்.

“என்ன போச்சு, எது போச்சு? சொல்லித் தொலையேன்!” என்றார் அவர்.

“நீங்கள் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்த இந்த மாதச் சம்பளம், என்னுடைய தங்கச் சங்கிலி, வெள்ளிப் பாத்திரங்கள் எல்லாமே போச்சு யாரோ ஒரு திருடன் ராத்திரி வந்து பூட்டை உடைத்து எல்லாவற்றையும் அள்ளிக் கொண்டு போயிருக்கிறான்!”

“அட., பாவி! வீட்டில் இத்தனை பேர் இருந்தும் அவன் வரும்போது ஒருவர் கூடவா விழித்துக் கொள்ளவில்லை?”

“ஏன் விழித்துக் கொள்ளவில்லை, நான் விழித்துக் கொண்டேனே!” என்றான் பையன்.

“உண்மையாகவா?” என்றார் அப்பா.

“ஆமாம்ப்பா ! திருடனும் தீயோன்தானே, அவனைக் கண்டதும் நான் கண்ணை மூடிக் கொண்டு விட்டேன்!”

“அப்புறம்?”

“அவன், ‘கத்தினால் கழுத்தை நெரித்துவிடுவேன்!’ என்றான்; தீயோன் சொல்லைக் கேட்கலாமா? கேட்டவரை போதுமென்று காதைப் பொத்திக் கொண்டு விட்டேன்!”

“அட, கடவுளே! இதையெல்லாம் ராத்திரியே நீ ஏண்டா என்னிடம் சொல்லவில்லை?”

“சொல்லலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் ‘தீயார் குணங்கள் உரைப்பதும் தீதே!’ என்று மூன்றாவது பொம்மை சொன்னதால் வாயையும் பொத்திக் கொண்டு விட்டேன், அப்பா! என்றான் பையன்!

– விந்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, கலைஞன் பதிப்பகம், சென்னை.

விந்தன் என்று அறியப்படும் கோவிந்தன் (செப்டம்பர் 22, 1916 - ஜூன் 30, 1975) புதின எழுத்தாளரும், இதழாசிரியரும் ஆவார். கோவிந்தன் காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூரில் வேதாசலம், ஜானகி ஆகியோருக்குப் பிறந்தார். சென்னை சூளைப் பகுதியில் கோவிந்தன் ஆரம்பக் கல்வி கற்றார். சிறு வயதிலேயே தந்தையோடு கருமான் (ஆசாரி) வேலை செய்து வந்தார். இரவுப் பள்ளியில் சேர்ந்து மீண்டும் கல்வியைத் தொடர்ந்தார். தொடர்ந்து படிக்க இயலவில்லை. ஓவியக் கல்லூரியில் சேர்ந்து…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *