முற்றுப்புள்ளியில் ஆரம்பம்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 28, 2018
பார்வையிட்டோர்: 8,875 
 
 

கார் ஆக்சிடென்டில் அம்மா வசுந்தராவையும் அப்பா சுகுமாறனையும் இழந்ததில் பரணி மிகுந்த துயரத்தில் திக்பிரமை பிடித்தது போன்றிருந்தான். ராணுவத்தில் விடுப்பு எடுத்துக்கொண்டு சென்னை வந்து காரியமெல்லாம் முடிந்த நிலையில் தான் யாருமற்ற ஒரு அனாதை போல் உணர்ந்தான். பணிக்குத் திரும்பவும் மனமில்லாமல் அமைதியின்றி செய்வதறியாமல் தவித்துக்கொண்டிருந்தான்.

அம்மா வழியில் விழுப்புரத்தில் அவனுக்குச் சொந்தமாக வீடும் கொஞ்சம் நிலபுலன்களும் இருந்தது. அதிலிருந்து அவ்வப்போது வாடகையாக பணமும் நிலத்திலிருந்து அரிசியும் வந்துகொண்டிருந்தது.

அப்பாவுக்குச் சென்னையில் அரசாங்க வேலை. அப்பாவுக்கென்றிருந்த ஒரே சொத்து சென்னையிலிருந்த வீடு மட்டுமே.

விழுப்புரத்திலிருந்த வீட்டையும் நில புலன்களையும் விற்றுவிட்டு, ஏதேனும் சுலபமான வேலையில் சேர்ந்து, சென்னையிலேயே செட்டில் ஆகிவிடவேண்டுமென்று முடிவு செய்து ஊரிலிருந்த புரோக்கரிடம் விசாரித்தபோது, “சார் நம்ம ஏரியாலையே உங்க வீடும் உங்க பக்கத்து வீடும் தான் கொஞ்சம் பெரிசு, உங்க வீட்டை தனியா விக்கிறதுக்கு பதிலா பக்கத்து வீட்டில ஒரு மிலிட்டிரிக்காரர், ஹேன்டிகேப்டு – ராம்னாத்னு பேரு சின்னதா ஸ்கூல் வச்சிருக்கார், பேசி அவரைச் சம்மதிக்க வெச்சீங்கன்னா ரெண்டு நிலத்தையும் சேர்த்து ப்ளாட் ப்ரமோட்டர் கிட்ட ஈசியா வித்திடலாம், கொஞ்சம் பேசிப்பாக்கறிங்களா எனக்கும் நல்ல கமிஷன் கிடைக்கும்” என்று கோரிக்கை வைத்தார்.

“எனக்கொண்ணும் ஆட்சேபனை இல்லைங்க, அப்புறம் அவரோட சொந்தக்காரங்க, வாரிசுங்கன்னு யாராவது வந்து தகராறு பண்ணப்போறாங்க?” என்று பரணி தன் நியாயமான சந்தேகத்தை வெளிப்படுத்தினான்.

“சொந்தம்னு சொல்லிக்க அவருக்கு யாரும் கிடையாது சார் அவரு அவர் சம்சாரம் அவ்வளவுதான் புள்ள குட்டிங்க கூட கிடையாது, அதனால தான் சொல்றேன்”

“சரி அப்படின்னா பேசிப்பாக்கறேன்” சிறு வயதில் விடுமுறைக்குச் செல்லும்போது பார்த்தது. இப்போது அவர் முகம் கூட நினைவில் இல்லை. ஒருவேளை அவர்கள் விரும்பினால் தன்னுடன் அழைத்து வந்து விடலாம், தனக்கும் யாருமில்லை அவர்களுக்கும் உதவியாக இருக்கலாம் என்று நினைத்து விழுப்புரத்திற்குப் புறப்பட்டான்.

அடுத்த நாள் விழுப்புரத்திலிருந்த வீட்டை அடைந்தபோது மதியம் மணி ஒன்று. அந்த வீட்டில் குடியிருந்தவர்கள் அவன் வீட்டின் உரிமையாளர் என்பதால் ஒரு அரையை அவனுக்குச் சுத்தம் செய்து ஒதுக்கியிருந்தார்கள். அவனுக்கு அந்த இடமும், சூழலும் மிகவும் பிடித்திருந்தது. வெயில் தாழ மாலை ராம்நாத்திடம் சென்று பேசலாம் என்று முடிவு செய்தான்.

மாலை மணி ஐந்து.

அந்த வீட்டின் காம்பவுண்ட் கேட்டை ஒட்டியிருந்த ப்ளே க்ரவுண்ட், சிறிய ஊஞ்சல், சறுக்கு மரம், சுற்றி மரங்கள் வண்ண வண்ண பூக்கள் என ஒவ்வொன்றாக ரசித்துக்கொண்டே கடந்து சென்றான் வீட்டின் அருகிலிருந்த ‘பாரத மாதா கான்வென்ட்’ சிறியதாக இருந்தாலும் அவனை வெகுவாகக் கவர்ந்தது .

வரவேற்பறையில் ஒரு கண்ணாடியிட்ட அலமாரியில், ராணுவத்தில் தனக்கு கிடைத்த பரிசுகளையும், பதக்கஙளையும் அடுக்கி வைத்திருந்தார், அதில், மரத்தின் எக்ஸ் போல் சொருகப்பட்டிருந்த இரண்டு கத்திகள் பார்க்க அழகாக இருந்தது..

தன் நண்பர்களுடன் அவர் சேர்ந்து எடுத்துக்கொண்ட ஒன்றிரண்டு புகைப்படஙளும் நடுவில் வைக்கப்பட்டிருந்தது. அழகாக இஸ்திரி செய்யப்பட்ட ராணுவ உடை ஒரு ஓரத்தில் மாட்டப்பட்டிருந்தது. அவற்றை ரசித்தவாறே அங்கிருந்த காலிங் பெல்லை அழுத்தினான்.

‘யாராயிருப்பாங்க’ என்ற முனகலுடன் கதவைத் திறந்தவர் “யார் வேணும்” என்றார். அப்போது தான் கவனித்தான் அவர் வலது கையை ஒரு டவல் போட்டு மூடியிருந்தார்.

“சார் இங்க மிஸ்டர் ராம்நாத்னு”

“நான் தான் உள்ளே வாங்க“ என்று கதவைத் திறந்து உள்ளே அனுமதித்தவர், அவனை அனிருந்த சோபாவில் அமரவைத்தர். அப்போது, வீட்டிற்குள்ளிருந்து ஒரு வயதான பெண்மணி “வாங்க” என்று அவனை வரவேற்றார்.

“இவங்க என் மனைவி ‘விசாலாட்சி’, என்று அவர்களை அறிமுகம் செய்துவைத்தவர், “சொல்லுங்க என்ன விஷயமா என்னைப் பாக்க வந்தீங்க?” என்றார். பரணி தான் வந்திருந்த விஷயத்தையும் தன் நிலையையும் அவருக்கு விளக்கினான்.

அவர் முகத்தில் அதிர்ச்சி காட்டி “ஓ வசுந்தரா இறந்துட்டாங்களா?” என்றவர் சுதாரித்து “எனக்கே ஸ்கூல் நடத்தறது கொஞ்சம் சிறமமாத்தான் இருக்கு, நல்ல டீச்சர்ஸும் கிடைக்கிறதில்லை, அப்படி கிடைச்சாலும் அவங்களுக்கு என்னால நல்ல சம்பளம் தற முடியறதில்லை, நீங்க சொல்றதும் நல்லாத்தான் இருக்கு, அதனால சொல்லுங்க என்ன பண்ணலாம், நீங்க எது சொன்னாலும் சரி” என்றார்.

“சார் அக்சுவலா நான் உங்களை என் கூட சென்னைக்கு கூட்டிட்டு போகலாம்னு இருந்தேன், இந்த ஸ்கூலையும் உங்களையும் பாத்தவுடனே எனக்கு ரொம்ப பிடிச்சிப்போச்சு, ப்ளானையே சேஞ்ச் பண்ணிட்டேன், அதனால நீங்க அனுமதிச்சா, இந்த ஸ்கூலிலேயே ஒரு டீச்சரா உங்க கூடவே இங்கேயே தங்கிடலாம்னு முடிவுசெஞ்சிட்டேன்” என்றான் மிகுந்த சந்தோஷத்துடன் அவர் பதிலை எதிர்ப்பார்த்து.

“எனக்கொண்ணும் ஆட்சேபனையில்லை,” என்றார் தோள்களைக் குலுக்கி பின்பு அவர், “ஆமா நாளைக்கே உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சின்னா? என்று கேள்வியெழுப்பினார்”

“நம்ம ஸ்கூலுக்கு இன்னொரு டீச்சர் கிடைச்சதா நினச்சுக்கலாம்” என்றான் விட்டுக்கொடுக்காமல்.

“தங்கமான குணம், இதோ காஃபி எடுத்துட்டு வறேன்” என்று அவர் மனைவி உள்ளே சென்றார்.

பரணி, “ஆமா சார் நீங்க டிவி கூட பாக்கமாட்டீங்க போலிருக்கு, வேற உங்களுக்கு பொழுதுபோக்கு?” என்றான் மிகுந்த ஆச்சரியத்துடன்.

“கார்த்தாலை நாலு மணிக்கு எழுந்துடுவேன். நானே டீ போட்டுக் குடிப்பேன்., அப்புறம் ஒரு ஆறு கிலோமீட்டர் வாக். வீட்டிற்கு வந்து ப்ரேக் ஃபஸ்ட், கொஞ்ச நேரம் லைப்ரரி, சாய்ங்காலம் வரைக்கும் ஸ்கூல் சமயம் கிடைக்கும் போதெல்லாம் படம் வரைவேன்” என்று தன் அன்றாட வேலைகளை அடுக்கினார்.

“ட்ராயிங்க்ஸா!” என்றான் ஆச்சரியத்துடன்.

“ம், பாக்கறீங்களா மாடியில இருக்கு” என்று அவனை மாடியில் பெயின்டிங்க்ஸ் இருந்த அறைக்கு அழைத்துசென்றார். அங்கே.. ..

அந்தச் சிறிய அறையின் ஈரச் சுவர்களில், சூரியன் மறையும்போது தண்ணீரில் தெரிவது, மரங்கொத்தி பறவை, அழகான குழந்தையை தூக்கிக்கொண்டு – தலையில் பானைகளுடன் ஒரு பெண், துப்பாக்கியுடன் குறி பார்க்கும் ஒரு சிப்பாய் என ஓவியங்கள் சுவரில் மாட்டப்பட்டும், ஒன்றிரண்டு ஓவியங்கள் காய்ந்துகொண்டும் இருந்தன.

அலமாரியிலிருந்த புகைப்படத்திலிருந்த தன் நண்பர் ஒருவரைக் காட்டி அவருடன் தான் ஒருமுறை பனிபடர்ந்த மலைப்பிரதேசத்தில் பயணம் செய்ததையும், அப்போது நண்பரின் கால்கள் பனிக்கட்டிகளில் சிக்கிக்கொண்டதையும் நீண்ட நேரம் முயற்சித்தும் அவரை மீட்க முடியாமல், பனிக்கட்டிகளில் அவர் புதைந்துபோனதையும், கண்ணீருடன் நினைவு கூர்ந்தார். அவ்வாறு செல்லும்போது ஒருமுறை தன் நண்பர்களை விட்டு விலகியதால் வழி தெரியாமல் தவித்ததையும் இடைப்பட்ட காலங்களில் அங்கிருந்த இயற்கை காட்சிகளில் மனதை பறிகொடுத்து அதனால் தனக்கு ஓவியம் வரைவதில் ஏற்பட்ட ஆர்வத்தையும் ஒரு அழகான கதை போல் விவரித்தார்.

கடைசியாக அவர் பங்கேற்ற கார்கில் போரின் போது தனக்கேற்பட்ட பாதிப்பையும் அதனால் தொடர்ந்து ஒரு மூன்று மாதம் படுத்த படுக்கையாகவே இருந்ததையும் பின்பு உடல் நலம் தேறியவுடன் முதலில் தான் சென்னையில்தான் செட்டிலாக நினைத்ததாகவும் அங்கே ராணுவத்தினருக்காக ஒதுக்கப்பட்டிருந்த நிலத்தில் பட்டா மாற்றித்தர லஞ்சம் கேட்டார்களென்றும் அதனால் வெறுத்துப்போய் சொந்த ஊரான விழுப்புரத்தில் செட்டில் ஆனதை வேதனையுடன் குறிப்பிட்டார்.

“இந்த விசாலாட்சி இருக்கிறாளே, அவ ஒரு விதத்தில எனக்குச் சொந்தம், சின்ன வயசிலேர்ந்தே சமூக சேவையில ஆர்வம். கல்யாணம் செஞ்சிகிட்டா ஒரு ஊனமுற்றவரைத்தான் கல்யாணம் செஞ்சிப்பேன்னு ஒரே பிடிவாதமா இருந்தாளா, அந்த சமயத்தில எனக்கும் இப்படி ஆயிப்போச்சா, சொந்தக்காரங்க அவளை எனக்குக் கட்டி வச்சிட்டாங்க” இது அந்தக் கல்யாண ஆல்பத்திலிருந்த போட்டோவை மாடலா வெச்சி வரைஞ்ச ட்ராயிங் என்று அவனுக்குக் காட்டினார்.

“கேக்குறேன்னு தப்பா நினச்சுக்காதீங்ங்க உங்களுக்கு பசங்க?” என்றான் தயங்கியபடி.

“பொறக்கலை, நாங்களும் அதைப் பெரிசா எடுத்துக்கலை, ஸ்கூல்ல இருக்கிற எல்லா பசங்களுமே எங்க பசங்க மாதிரிதானேன்னு சமாதானமாயிட்டோம்” என்றார்.

தொடர்ந்து ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டே வந்த பரணி அங்கே ராணுவத்தினருக்கே உரிய பெரிய ட்ரங்க் பெட்டியைக் காட்டி “சார் அதிலும் ட்ராயிங்ஸ்தான் இருக்கா?” என்றான்

“இருக்கு ஆனா இப்ப வேண்டாமே என்றார் தர்ம சங்கடமாக”

“ஸார் ப்ளீஸ்” என்று அவர் அனுமதிக்குக் கூட காத்திருக்காமல் அந்த பெட்டியைத் திறந்து ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தான். அதில் முதல் ட்ராயிங்கில் மரங்களினூடே சிறிய பாலத்தினடியில் அழகான நதி ஓடிக்கொண்டிருந்தது அடுத்த ட்ராயிங்கில் விடியற்காலை பறவைகள் பறந்து செல்வது போன்ற ஓவியம் அவன் மனதைக் கவர்ந்தது அடுத்து இருந்த ஃப்ரேம் போட்ட கடிதம் அவனை வியப்பிலாழ்த்தியது. அப்போது அவர்,

“நான் எழுதிய லெட்டெர் தான் ரெண்டு காபி எடுத்தேன், ஒண்ணை போஸ்ட் செஞ்சிட்டு இன்னொண்ணை இப்படி ஃப்ரேம் போட்டுட்டேன், இதுக்காகத்தான் வேணாம்னேன்” என்றார் லேசான வருத்தத்துடன். அதில் ஏதோ இருக்கவேண்டுமென்று ஆர்வத்துடன் படிக்கத் துவங்கினான் பரணி.

“ப்ரிய வசுந்தரா,

உன் காதலனாக இந்தக் கடிதத்தை நான் எழுதவில்லை!

இந்தக் கடிதத்தை நீ படிக்கும்போது, என் உடல் கார்கில் மண்ணை முத்தமிட்டுக்கொண்டிருக்கும். இது ஒரு போர் வீரனுக்குக் கிடைக்கும் உயர்ந்தபட்ச சந்தோஷம். நிற்க.

இந்தக் கடிதத்தின் நோக்கம் அதுவல்ல. என் ஆசை உனக்கு நினைவிருக்கலாம். போரில் ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனை போற்றிப் பாடுவது பரணி. எனவே என் மகனுக்குப் பரணி எனப் பெயர் சூட்டி, ராணுவத்தில் சேர்க்க நினைத்தேன். அது நிறைவேற இனி சாத்தியமில்லை.

உன்னிடம் மேலும் ஒரு வேண்டுகோள்.ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு என்ஜினியர்களும் டாக்டர்களும் மட்டும் போதாது. பாதுகாக்க வீரமும் விவேகமுள்ள எண்ணற்ற போர்வீரர்களும் தேவை. எனவே திருமணம் செய்துகொள். உன் மகனை ஒரு சிறந்த போர்வீரனாகவே தயார் செய். என் வேண்டுகோளை நிறைவேற்றுவாய் என நம்புகிறேன்.

வாய்ப்பிருந்தால் பாரதத்தாயின் மடியில் மீண்டும் ஓர் போர்வீரனாகவே பிறக்க விரும்புகிறேன்.

நீங்காத நினைவுகளுடன்

ராம்நாத்”

என்றிருந்த அந்த கடிதத்தை பார்க்கும்போது, அம்மா வசுந்தராவை நினைத்து பெருமையாகவும் வாழ்வின் புதிர்கள் ஒவ்வொன்றாக அவிழ்வது போலவும் இருந்தது பரணிக்கு.

Print Friendly, PDF & Email

1 thought on “முற்றுப்புள்ளியில் ஆரம்பம்

  1. அருமையான கதை பாலாஜி தொடர்ந்து எழுத என்னுடைய வாழ்த்துக்கள். கூடிய சீக்கிரம் சந்திக்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *