முரண்களுக்கு இடையே…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 3, 2023
பார்வையிட்டோர்: 2,568 
 
 

”பாரதி.. கொஞ்சம் தள்ளி உக்காரு….சீட்டு முழுசும் காலியாத்தானே இருக்கு…”

”ஏன்…கிட்ட உக்காந்தா என்னவாம்?“

பாரதி வேண்டுமென்றே இன்னும் நெருக்கினாள்..கைவிரல்களைக் கோத்துக் கொண்டாள்..

”வெளிய வந்தாலே புத்தி கொஞ்சம் எளகித்தான் போவுது…இன்னும் நாலு பேரு வருவாங்க…தெரியுமில்ல….”

”நாலு பேரு என்ன? நாப்பது பேரு வேணாலும் வரட்டுமே….! வீட்டுலதான் பக்கத்துல உக்கார முடியல.. படுக்க முடியல..தொப்புன்னு நடுவுல வந்து குதிப்பான் உதயன்..”

”அம்மா..அப்பா.. என்ன ரகசியம் பேசுறீங்கன்னு? இரண்டு பேர் மேலையும் காலத்தூக்கிப்போட்டான்னா அத்தோட காலி..

உடனே உங்க பொண்ணு உமாவுக்கு மூக்குல வேர்த்துடுமே…

”டேய். நகருடா.. நான்தான் அம்மாகிட்ட…”

“இரண்டுக்கும் பத்து , பன்னிரண்டு வயசாச்சுன்னு கொஞ்மாச்சும் புத்தி வேண்டாம்….நீங்களாச்சும் வாயத் தொறந்து சொல்வீங்கன்னு பாத்தா…அதுகளோட சேந்து கிட்டு ராத்திரியெல்லாம் கொட்டம்…”

”அதுக்காக…பகல்ல பழி தீத்துக்கலாம்னு ஐடியா பண்றயா…?”

”கல்யாணம் ஆன புதுசுல…’இன்னும் கிட்ட வா..பக்கத்துல வந்து உக்காரு..’ன்னு மடியில தூக்கி வைக்காத கொறையா, கொஞ்சுன ஆளுதானே நீங்க…இப்போ கிட்ட வந்தாலே வெரட்றீங்களே….”

பாரதி சொல்வது நூத்துக்கு நூறு சத்தியம்..

பாரதி அவன் மனைவியாகி பதினைந்து வருடங்கள் முடிந்து விட்டது.. இருவரும் ஐ.டி.கம்பெனியில் கை நிறைய சம்பளம் வாங்கும் இளம் தம்பதிகள்… ஆண் ஒன்று.. பெண் ஒன்று…

கூட்டுக் குடும்பம் என்று சொல்ல முடியாவிட்டாலும் , பக்கத்திலேயே இருவரின் பெற்றோரும்..

ஆரம்பத்தில் அவளது அருகாமைக்காக நிறையவே ஏங்கியதுண்டு..

வீட்டில் மாறி மாறி அப்பா..அம்மா..! மாமனார்.. மாமியார்… மைத்துனர்கள்.. நாத்தனார்கள்..!

தனியாக இருக்கும் நேரம் அபூர்வம்…

அவளுக்கு அது இவ்வளவு நாளும் பெரிய குறையாக இருந்திருக்கிறது என்பது இப்போதுதான் புரிகிறது..

சாதாரணமாக குழந்தைகள் பிறந்தபின் தாயின் முழு கவனிப்பும் குழந்தைகளிடம் போய்விடுகிறது என்பதுதான் கணவனின் ஆதங்கம்..

ஆனால் பாரதியோ நேர் எதிர்..நாளாக, ஆக , அருளின் மேல் அவள் வைத்திருக்கும் காதல் கூடிக் கொண்டுதான் போனது..

‘என்னோட முதல் குழந்த நீங்கதான்‘ என்று கிடைத்த நேரத்தில் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்திருக்கிறாள்..

‘அருள்..நீ குடுத்து வச்சவண்டா…’ தனக்குள் சொல்லி சொல்லி மகிழ்வான்…

ஆனாலும் பொது இடங்களில் அதை வெளிக்காட்டிக் கொள்வதில் அத்தனை விருப்பம் கிடையாது..

”பாரதி…இதோ யாரோ வந்திட்டாங்க பாரு…. கொஞ்சம் தள்ளி உக்காரு….”

வந்தவர்கள் கொஞ்சம் வயதான தம்பதியர்… அந்தப் பெண்மணியின் கையைப் பிடித்து எதிர் சீட்டில் உட்கார வைத்தார் முதியவர்…

பெட்டியை சுமந்து வந்த போர்ட்டரிடம் பணம் கொடுத்து அனுப்பியவர் பெருமூச்சு விட்டபடி அருளையும் பாரதியையும் பார்த்து சிரித்தார்…

”வண்டி கெளம்ப எவ்வளவு நேரம் இருக்கு தம்பி….?”

“கால்மணியில கெளம்பணும் ஐயா “

”இன்னும் இரண்டு பேரு வரணும் போலியே….”

”ஆமாங்க. வருவாங்க….! இப்பவெல்லாம் வண்டி கெளம்பும்போது ஓடி வந்து ஏறிக்கறவுங்க நிறையவே இருக்காங்க…. அவ்வளவு பிஸியா போயிருச்சு வாழ்க்கை….”

அவன் சொல்லி முடிப்பதற்குள் ஒரு டிப்டாப் இளைஞன் சீட் நம்பரைப் பார்த்துக் கொண்டே அவர்களது பெட்டியருகே வந்தவன், “எஸ்…திஸ் இஸ் இட். ” என்று முணங்கியபடி தனது விலையுயர்ந்த சூட்கேஸை முகம் சுளித்தபடி அடியில் நகர்த்தினான்….

‘டர்ட்டி ஃபெல்லோஸ்’ யாரையோ திட்டிக் கொண்டே கையில் வைத்திருந்த சிறிய பெட்டியை சீட்டில் வைத்துவிட்டு பொதுவாக எல்லோரையும் பார்த்து ஒரு ஹலோ சொல்லிவிட்டு முதியவர் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டான்…

ஏதோ நினைத்துக் கொண்டவனாய் சீட்டிலிருந்த பெட்டியிலிருந்து மொபைல் சார்ஜரை எடுத்து, ”எக்ஸ்யூஸ்மீ.. நான் கொஞ்சம் மொபைலை சார்ஜ் பண்ணனும் “. என்றபடி ப்ளக்கில் சார்ஜரை சொருகிவிட்டு மொபைலை அருளின் அருகிலிருந்த டேபிள் மேல் வைத்துவிட்டு , திரும்பவும் பெரியவர் அருகில் அமர்ந்து கொண்டான்…

எதிர் சீட்டு பெண்மணி இந்த வயதிலும் நல்ல திடகாத்திரமாயிருந்தார். சராசரிக்கும் கூடுதல் உயரம்.முகம் முழுவதும் மஞ்சள் குளித்திருந்தது… முதியவர்தான் கொஞ்சம் படபடப்பாகத் தெரிந்தார்…. கையிலிருந்த பையில் ஏதோ குடைந்து கொண்டிருந்தார்..

”என்னங்க…சித்த உக்காருங்களேன்…. என்னத்த தொழாவிட்டு கெடக்கீங்க…? “

”இல்ல அம்மிணி… வாழப்பழத்த எடுக்கலாமுன்னுதான்…மாத்திரை போட்டு படுக்கணுமே..உனக்கு கிறுகிறுன்னு வருமேன்னுதான்..”

”ஆமா.. விடுங்க…வண்டி கெளம்பட்டும்.. அதான் பிள்ள நல்லா சாப்பிட வச்சுத்தானே அனுப்பியிருக்கு…. ஒரு கிறுகிறுப்புமில்ல.. நீங்க ஒழுக்கமா ஒரு எடத்துல உக்காருங்க….விழுந்து கிழுந்து வச்சா?“

அவள் செல்லமாக கோபித்துக் கொண்டது ரசிக்கும்படி இருந்தது…

ஆனாலும் பெரியவர் விடுவதாயில்லை.

வாழைப்பழத்தைத் தேடிக் கண்டுபிடித்து விட்டார்…

ஒரு பழத்தை பாதி உரித்து அவள் கையில் கொடுத்தார்… தண்ணீர் பாட்டிலின் மூடியைத் திறந்து அவளிடம் நீட்டினார்…

அம்மணி அவர் கையிலிருந்த பாட்டிலை செல்லமாகப் பிடுங்கி , மூடிவிட்டு பையை வாங்கி அதில் வைத்து , தன் பக்கத்தில் வைத்துக் கொண்டார்…. அவர் பொறுமையாக வாழைப்பழத் தோலை அவளிடமிருந்து வாங்கிக் கொண்டு குப்பைத் தொட்டியில் போடுவதற்கு எழுந்தார்..

”குடுங்க..நானு பாத்ரூம் போகணும். அப்பிடியே போட்டுப் புட்டு வாரேன்…”

எதையுமே பிடித்துக் கொள்ளாமல் லகுவாக நடந்தாள்…

”பாத்து..அம்மணி… பிடிச்சுகிட்டு போவியாம்…நானு கூட வரட்டா…?”

அவள் எதையுமே காதில் வாங்கிக் கொள்ளவில்லை…. அவள் திரும்ப வரும் வரையில் அவருக்கு இருப்பு கொள்ளவில்லை…

வண்டி நகரத் தொடங்கியது…

”என்ன அருள்..அஞ்சு பேர் தானே இருக்கோம்…இன்னொருத்தர் பாக்கி…”

”அடுத்த ஸ்டேஷன் எதிலயாச்சும் ஏறுவாங்க…உனக்கெதுக்கு அந்த கவலை…?”

சொல்லிக் கொண்டே இருக்கும் போதே ஒரு பெண்… சுமார் முப்பது வயது..ஒட்ட வெட்டிய முடி….அப்போதே ஏறியிருப்பாளாயிருக்கும்…

”யெஸ்.. திஸ் இஸ் மை சீட் “

ஏதோ கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்ததுபோல் உற்சாகத்துடன் அந்த இளைஞனை நோக்கி கையை நீட்டினாள்….

எழ இருந்தவனை கையமர்த்தி,

“இட்ஸ் ஓகே.. நான் இங்க உக்காந்துக்கிறேன்…..”

என்று கூறிவிட்டு பாரதியின் பக்கத்தில் உட்கார்ந்தாள்…

வண்டி வேகம் எடுத்தது…..

அருள் பாரதியின் கையை இலேசாக அழுத்தினான்…

”இப்போ உனக்கு திருப்த்தியா…?” என்பதுபோல… அவள் அவன் மேல் சாய்ந்து கொண்டாள்….


அந்த யுவதி எழுந்திருந்தாள்.. கையில் சார்ஜர்…

“யாரோட மொபைல்…கேன் ஐ சார்ஜ் மைன்…? சுத்தமா சார்ஜ் தீர்ந்து போச்சு..”

”இன்னொரு ப்ளக் இருக்கே…” என்றாள் பாரதி…

”அது ஒடஞ்சிருக்கு போல தெரியுது…”

அதற்குள் அந்த இளைஞன் குறிக்கிட்டான்…

“என்னோடதுதான்.. இன்னும் பத்து நிமிஷம் ஆகும்….”

‘அதுக்குள்ள என்ன அவசரம்?’ என்று ஏதோ முணுமுணுத்தான்…

அவளும் பதிலுக்கு ஏதோ முணுமுணுத்தபடி. மறுபடி இருக்கையில் அமர்ந்தாள்….

”நீங்க இரண்டு பேரும் கீழ் பெர்த்தாயிருக்கும்…”

அவள் அந்த வயதான தம்பதியினரிடம் பொதுவாக வினவினாள்…

”ஆமாம்மா….என்னமோ கிடச்சிடிச்சு…இல்லைனா ஏற முடியுமா…?”

”உங்களுக்கு நடு பெர்த்தா…? எனக்கு அப்பர்தான் கெடச்சுது..வேற வழியில்லைனா ஏற வேண்டியதுதான்..நடுவுல இரண்டு மூணு தடவ இறங்கணும்…அதான் போர்…”

”நான் மேல் போறேன்..நோ ப்ராப்ளம்ஸ்..ஏறிப்படுத்தால் அவ்வளவுதான்…”

அருள் முந்திக் கொண்டு பதில் சொன்னதும், “தாங்யூ சோ மச் ” என்றாள் அந்தப் பெண்…

எதிர் சீட்டு இளைஞன் அவளைப்பார்த்து முறைத்தது பாரதிக்கு என்னவோபோல் இருந்தது.. அருளின் காதில் ஏதோ கிசுகிசுத்தாள். அருள் அதை ஆமோதிப்பதுபோல முறுவலித்தான்.

சரியாக சொன்னபடி பத்து நிமிடத்தில் மொபைலை எடுத்துவிட்டான்…

திடீரென்று இரண்டு மூன்று பேச்சுக்குரல்கள்..தடதடவென்ற ஷுக்களின் சத்தம்…

அந்த இளைஞன் எழுந்து நின்று எட்டிப் பார்த்தான்…

“இரண்டு போலீஸ் .. பின்னாடி நாலஞ்சு பேர்…என்ன நடக்குது…?”

“வெயிட், வெயிட்…எல்லோரும் சீட்ல உக்காருங்க..நாங்களே உங்க கிட்ட பேசத்தான் போறோம்….

கொஞ்சம் பலத்த குரலில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் அவர்களைப் பார்த்து…

“இங்க பள்ளிக் கூட யூனிஃபார்ம் போட்டுகிட்டு ஒரு பையனும் பொண்ணும் போறத யாராச்சும் பாத்தீங்களா…?”

எல்லோருமே ‘இல்லை’ யென் பலமாகத் தலையாட்டினார் கள்..

”பள்ளிக்கூடத்தில இருந்து நேர வீட்ட விட்டு ஓடி வந்திருக்காங்க..இந்த வண்டிலதான் தான் ஏறினதா தகவல்….”

”சார்.. இந்நேரம் யூனிஃபார்ம மாத்திட்டு கூட்டத்துல மறஞ்சிருப்பாங்க சார்…”

”யூ ஆர் வெரி கரெக்ட்…வயசு பசங்களையும் என்கொயரி பண்ணனும்..ப்ளீஸ் கோவாப்பரேட்“

கொஞ்ச நேரம் அந்த கம்பார்ட்மென்ட் மௌனமாகியது…


இளைஞன் ஆரம்பத்திலிருந்தே அந்த யுவதிக்கு பதிலடி கொடுத்த வண்ணம் இருந்தான்..

”காதல்ல இன்னொரு வகையிருக்கு…மறந்துட்டீங்களே…”

அருள் என்ன சொல்லப் போகிறான் என்று பாரதிக்கு புரிந்து விட்டது…

”கல்யாணத்துக்கு அப்புறம் வரும் காதல்…! அப்பா அம்மா பாத்து வச்ச பொண்ணு நிச்சயம் நல்ல பொருத்தமாதான் இருக்கும்னு மனசார ஏத்துகிட்டு அவளையே காதலிக்க ஆரம்பிச்சா அதைவிட சுகமான காதல் எதுவுமே இல்லைனு நான் அனுபவிச்சு உணர்ந்துகிட்டேன்..எல்லோரோட முழு ஆதரவும் இருக்கும்போது என்ன கவல…?”

அதற்குள் ஒரு பொதுநல விரும்பி பொதுவாக எல்லோரிடமும் ஒரு தகவலை பகிர்ந்துவிட்டுப் போனார்..

பள்ளிக்கூட சிறுவனும் சிறுமியும் பிடிபட்டுவிட்டார்களாம்… ஓடும் ரயிலிலிருந்து குதிக்கத் தயாராக இருந்தவர்களை போலீஸ் மடக்கி பிடித்துவிட்டதாம்…

”பாருங்க தம்பி…!!! இதுதான் காதலா…? இரண்டு பேரும் என்ன சாதிச்சிபுட்டாங்க..? ஒண்ணும் வெளங்கல…”

அம்மணி வருத்தப்பட்டார்…

”சரி..எனக்கு தூக்கம் வருது…நேர ஏர்போர்ட்லேயிருந்து வரேன்..நேத்து ராத்திரியும் தூங்கல..!”

யுவதியின் கோரிக்கை உடனே ஏற்றுக்கொள்ளப் பட்டது…

பத்து நிமிடத்தில் எல்லோரும் ஆழ்ந்த நித்திரையில்…

கிழவருக்கு சீக்கிரமே முழிப்பு வந்து விட்டதுபோலிருக்கிறது…. ஐந்து மணிக்கு இருட்டில் ஏதோ குடைந்து கொண்டிருந்தார்…

”ஏனுங்க.. இன்னும் ஒரு மணி நேரம் இருக்குதே…ஆடிக்கிட்டே என்ன செய்யுறீங்க…?”

”நீ ஒறங்கு அம்மணி…நானு எல்லா சாமானையும் எடுத்து வைக்கலாமின்னு…முழிப்பு வந்திருச்சு…”

ஆறு மணிக்குள் எல்லோரும் முழித்து விட்டார்கள்..

முதியவர் எல்லோருக்கும் முன்னால் எழுந்து நின்றார்…

”என்ன அவசரம்..வண்டி நிக்கட்டுமே…”

முதியவர் கேட்பதாயில்லை…

”இருங்க வாரேன்…கையப் பிடிங்க.. பெட்டிய நான் தூக்கியாரேன்…”

வண்டி ஒரு வழியாக ஸ்டேஷனில் நின்றது…

”இருங்க..மொத நா எறங்கிட்டு , உங்க கையைப் பிடிச்சு எறங்கி விடுதேன்…”

அதற்குள் அருள் கீழே குதித்தான்…

”பெட்டியைக் குடுங்க..நானே இரண்டு பேரேயும் எறங்கி விடறேன்..”

”பாரதி அவுங்க சாமான எடுத்துக் கொடு..போர்ட்டர கூப்பிடவா…?“

”வேண்டாம் தம்பி..பெட்டிய நானே தூக்கிக்குவேன்…வாங்க என் கையைப் பிடிச்சுக்கோங்க…”

இருவரும் ஒருவரையொருவர் பிடித்துக் கொண்டு செல்லும் காட்சியைப் பார்த்துக் கொண்டே நின்றான் அருள்..

”பாரதி… எல்லாம் எடுத்துகிட்டியா…? கெளம்பலாமா…?”

”உஷ்.. ஒரு நிமிஷம் வாயத் தொறக்காம நில்லுங்க…அங்க பாருங்க…”

கடைசியாக அந்த இளைஞனும் யுவதியும் இறங்கினார்கள்…

”ஹாய் அண்ணா…நிவேத் அண்ணி !! நீங்களும் ஒரு வழியா வண்டியைப் பிடிச்சிட்டீங்களே….கடைசி வரைக்கும் வருவீங்களா மாட்டீங்களான்னு அண்ணனுக்கு கவல….”

”ஆமா.. அவ என்னிக்கு சொன்னபடி வந்திருக்கா..? எத்தனை தடவ இவள நம்பி புக் பண்ணி கேன்சல் பண்ணியிருக்கேன்…”

”சின்னு…உங்கண்ணன் கெடக்கான்…ட்ரெயின மிஸ் பண்ணக்கூடாதுன்னு தலைதெறிக்க ஏர்போர்ட்டிலேர்ந்து ஓடிவந்து ஏறின என்ன சொல்லணும்…”

”அண்ணி! உங்க பஞ்சாயத்து தீரவே தீராதா….? அம்மா உங்களுக்காக ஆசையா காத்துகிட்டு இருப்பாங்க..போகலாம் வாங்க…”

அருள் பிரமித்துப் போய் நின்று விட்டான்…

“எனக்கு அப்பவே சந்தேகம்…”

”ம்ம்ம்…நீதான் பயங்கர கில்லாடியாச்சே…”

செல்லமாக பாரதியின் கன்னத்தைக் கிள்ளினாள் அருள்…

இருவரும் கைகோர்த்தபடி நடக்க ஆரம்பித்தார்கள்…

முரண்களுக்கு இடையே வாழ்க்கைப் பயணம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது…!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *