கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 14, 2020
பார்வையிட்டோர்: 6,038 
 
 

ஶ்ரீவைணவ சம்பிரதாயத்தில், ‘திருநாடு அலங்கரித்தார் ‘என்பதும், ‘வைகுண்ட பிராப்தி அடைந்தார் ‘என்பதும், ஆசார்யன் திருவடி அடைந்தார் ‘என்பதும் ஒரே அர்த்தம் தரும் பல சொற்றொடர்கள். இயற்கை எய்தினார் என்று பகுத்தறிவுவாதிகளால் சொல்லப்படும். காலமாகி விட்டார் என்றும் சொல்லப்படுவதுண்டு. இறந்து விட்டார் என்பது பொதுவான வார்த்தைப் பிரயோகம்.

முத்தா ஆசார்யன் திருவடி அடைந்தார். முதிர்ந்த வயது பேரன், பேத்திகளைப் பார்த்து விட்ட பூரண ஆயுளோடு அவர் திருநாடு அலங்கரித்தார். இனி அவர் செய்து முடிக்க இங்கு பூமியில் கடமைகளோ, பணிகளோ எதுவும் இல்லை என்பதால், அவர் வைகுண்ட பிராப்தி அடைந்தார். எண்பத்து எட்டு வயதில் முதல் தாரத்துப் பிள்ளைகள், இரண்டாம் தாரத்து ஆண் மக்கள், பெண் மக்கள் வாரிசுகளுடனும், பேரன், பேத்திகளைப் பார்த்து விட்டு, பூரண ஆத்ம திருப்தியில் இயற்கையோடு ஒன்றி விட்டார்.

மதியம் சாப்பிட்டு முடித்ததும், வீட்டு முன் திண்ணையில் வழக்கம் போல் உறங்கினார். உறக்கம் முடிந்து எழுந்து எழுந்ததும், பின்மாலை வெய்யில், வீட்டின் திண்ணையில் சதுரக்கம்பிகள் பதித்த மரச்சட்டம் வழியே சரிந்து இறங்கிக் கொண்டிருந்தது.

வெற்று உடம்பின் மேல் ஒரு அங்கவஸ்திரத்தை எடுத்துப் போட்டுக் கொண்டு, கொல்லைப்புறம் போய் முகம் அலம்பிக் கொண்டு வந்து பார்த்தவர், சமையலறையை நோக்கி ‘ரமா’ என்று ஒரு குரல் கொடுத்தார். ரமா மன்னி, ‘சொல்லுங்கோ முத்தா!’ என்று பதில் சொன்னாள்.

‘ரமா, எனக்குப் பசிக்கறது. ஏதாவது டிபன் இருந்தா பண்ணிக் கொடேன்’ என்றார்.

‘இதோ முத்தா, ரெண்டே நிமிஷம் பொறுங்கோ, சுடச்சுட தோசை வாத்துத் தர்றேன். காலைல பண்ணின வெங்காயச் சட்டினி மிச்சம் இருக்கு. அதுவே போதுமா?’

– ‘போதும்மா, இருக்கறதைப் போடு’

ரமா மன்னி சமையலறைக்குள் மீண்டும் நுழைந்தாள். மண்ணெண்ணெய் ஸ்டவ்வில் திரியை சரி செய்து, அடுப்பு பற்ற வைத்து, தட்டையான தோசைக்கல்லை ஏற்றி தோசை வார்த்தாள். முதல் தோசையை சுடச்சுட எடுத்துக் கொண்டு, ஒரு தட்டில் வைத்துக் கொண்டு வந்து முத்தாவின் முன்னால் வைத்தாள். பக்கத்தில் ஒரு சொம்பு குளிர்ந்த ஜலம் வைத்தாள். முதல் தோசையின் முதல் விள்ளலை எடுத்து வெங்காயச் சட்டினியில் தோய்த்து, வாயில் போட்டுக் கொண்டு, சில நொடிகள் கண்ணை மூடிக் கொண்டார் முத்தா.

இரண்டாம் தோசை வார்த்து எடுக்க மீண்டும் சமையலறைக்குள் நுழைந்தாள் ரமா மன்னி.

– ‘ரமா, இங்க வாம்மா. நெஞ்சு ஏதோ பிசைஞ்சு வலிக்கற மாதிரி இருக்கு’. என்று முத்தா சத்தமிட்டார்.

அடுப்பில் தோசையைப் பார்த்துக் கொண்டு நின்ற ரமா மன்னி, ஓடி வந்து பார்க்க, திண்ணையில் குத்த வைத்து உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த முத்தா, சரிந்து பக்கவாட்டில் விழுவதையும், முதல் தோசையின் பாதி மட்டும் சாப்பிடப்பட்டு, மீதி தட்டில் அப்படியே இருப்பதையும் பார்த்து விட்டு பதறிப்போனாள்.

‘முத்தா, உங்களுக்கு என்ன ஆச்சு? சொல்லுங்கோ, நெஞ்சு வலிக்கறதா? இதோ, சித்த பொறுங்கோ, அவரை வரச் சொல்றேன். டாக்டருக்கு உடனே சொல்லி அனுப்பறேன். பக்கத்துல யாருமே இல்லையே. என்ன பண்றதுன்னு எனக்கு ஒண்ணும் தோணலியே!’

– சத்தம் கேட்டு, அடுத்த போர்ஷன் இஞ்சினியர் யக்னேஷ்வரன் ஓடி வந்தார்.

‘என்னம்மா, என்ன ஆச்சு? தாத்தா உங்களுக்கு என்ன? காலைல கூட நல்லாத்தான இருந்தீங்க. இப்ப உடம்புக்கு என்ன?’ என்று பதறினார்.

முத்தா வலது கையால் இடது நெஞ்சைப் பிடித்தபடி ‘முடியலை ரமா, ரொம்ப வலியெடுக்கறது. கேசவா. நாராயணா!’ என்றார். அவ்வளவு தான். அடுத்த நிமிஷம் அந்தக் கேசவன், நாராயணனோடு போய் இரண்டறக் கலந்து விட்டார். ரமா மன்னி பதறிப்போய், நேரே வீட்டு வாசற்படி இறங்கி, ரோட்டைக் கடந்து எதிர்ப்பக்கம் இருந்த அருணாச்சல நாடார் நெல் அரவை மில்லுக்குப் போய், முன் பகுதியில் டேபிளில் வைக்கப்பட்டிருந்த தவிட்டுத் தூசி படிந்த டெலிபோனை எடுத்து தன் ஆத்துக்காரர் சம்பத்திற்குப் போன் செய்தாள்.

ஒவ்வொரு மார்கழி மாதமும், விருதுநகரில், ரெயில்வே பீடர் ரோடில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில், ஒரு வாரத்திற்கு ஶ்ரீராம உற்சவம் நடக்கும். சிறிய ஆஞ்சநேயர் கோவில் என்றாலும், பெரிய அளவில் பக்தர்கள் கூட்டம். ரயில்வே பீடர் ரோட்டில் இருந்து ராமமூர்த்தி ரோடு பிரிந்து செல்லும் முச்சந்தியில் ரோட்டை அடைத்துக் கிழக்குப் பக்கம் பார்த்தாற் போல ஒரு பெரிய பிரம்மாண்டமான மேடை போட்டு, ஏழு நாட்களும் ஏதாவது கலை நிகழ்ச்சிகள் நடக்கும். சென்னையில் உள்ள பிரபலங்களை எப்படியாவது பிடித்து வந்து அங்கு மேடையேற்றி விடுவார்கள். வைகுண்ட ஏகாதசி அன்று போக்குவரத்து சந்தடி ஓய்ந்த பின்பு, மேடையின் முன்பு பெரிய ராட்சஸத் தார்ப்பாயை விரித்து, எல்லோரும் உட்கார்ந்ததும் மேடையேறினார் சீர்காழி கோவிந்தராஜன். மைக் செட் சரி செய்து விநாயகர் துதி பாடலைப் பாடி முடித்து, அடுத்த பாடலைப் பாட சுருதி சரி பார்த்துக் கொண்டிருந்தார். இரண்டாம் வரிசையில் தார்ப்பாயில் தனது மூன்று குழந்தைகளுடன் வரிசையில் தார்ப்பாயில் தனது மூன்று குழந்தைகளுடன் ஜெயா அமர்ந்து, கச்சேரி கேட்டுக் கொண்டிருந்தாள்.

கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

– ‘அதோ, அவங்க தான் ஜெயா மாமி. அவங்களைக் கொஞ்சம் கூப்பிடுங்க. அதோ அவங்க தான்’ ‘என்ற குரல் கேட்டதும், கச்சேரி சத்தத்தையும் மீறி ஏதோ பேச்சுக்குரல் கேட்பதைக் கவனித்த ஜெயா, யதேச்சையாகத் திரும்பிப் பார்க்க, அங்கு கோபால் வந்து கொண்டிருந்தான்.

– ‘ஜெயா, கொஞ்சம் எழுந்திரிச்சி வா’.

ஜெயா எழுந்து வந்து,

– ‘என்ன கோபால். என்ன சமாச்சாரம்?’ என்றாள்.

– ‘ஜெயா, முத்தா சீரியஸா கிடக்கார். நீ உடனே புறப்பட்டு வரணும். சம்பத், உடனே உன்னை கூட்டிண்டு வரச்சொல்லி என்னை அனுப்பினான். உடனே வா!’.

ஜெயா பதறிப்போய்,

– ‘என்ன கோபால், என்ன விஷயம்? முத்தாவுக்கு ரொம்ப முடியலயா?’ என்று கேட்க,

– ‘அப்படி ஒண்ணும் மோசமில்லை. ஆனா சீரியஸ். நீ உடனே வரணும்’.

குழந்தைகளை அழைத்துக் கொண்டு, உடனே தான் குடியிருந்த பதினெட்டு ஸ்டோர் காம்பவுண்டிற்குப் போய், வீட்டைத் திறந்து, ராணாவையும், நிவந்தனையும், பக்கத்தாத்து லட்சுமி மாமியிடம் பார்த்துக் கொள்ளுமாறு சொல்லி விட்டு, உடனே பையில் பணம் எடுத்துக் கொண்டு, மூத்த பையன் கிருஷ்ணாவை மாத்திரம் கைப்பிடித்துக் கூட்டிக் கொண்டு கோபாலுடன் மதுரைக்கு பி.ஆர்.சி. பஸ்சில் அவசர அவசரமாய்ப் போய், மெஜுரா காலேஜ் ஸ்டாப்பிங்கில் இறங்கி நடந்து, ஜெய்ஹிந்த்புரம் தீனதயாள் இரண்டாம் தெருவில் வாசல்புற இரும்புக் கேட்டைத் திறந்து உள்ளே போன போது, முத்தா திண்ணையில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடத்தப்பட்டிருப்பதையும், தம்பிகள், தங்கை ரோஜி, மூத்தவன் சந்தானத்தின் குழந்தைகள் பிலாக்கணம் பாடிக் கொண்டிருப்பதையும் பார்த்து விட்டு நிலை குலைந்து போனாள் ஜெயா.

வீட்டின் முன்புறத் திண்ணையில், சிமிண்டு தரையில், நாற்பது வாட்ஸ் பல்பு வெளிச்சத்தில் கிடந்த முத்தா குச்சியாய்க் கிடந்தார். முன் நெற்றியில் திருமண் பளீரென்று இருந்தது. பாதித் தலை நரைத்துப் போன சம்பத் மாமா தலையைக் கோதிக் கோழி அழுது கொண்டிருந்தார். கும்பகோணம் சித்தி, முத்தாவின் கால்களைக் கட்டிக் கொண்டு கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள். சந்தானம், ரோஜி, ஶ்ரீதர் மாமா, சுந்தாச்சு, துவரிமான் ராஜாமணி. சீமானி இன்னும் பலரும் துக்கித்துக் கொண்டிருந்தார்கள்.

ரமா மன்னி இருதய நோயாளி என்பதால் அவளை மட்டும் அழ வேண்டாம் என ரொம்பக் கண்டிப்பாக சம்பத் மாமா சொல்லி விட்டார். இரவு முழுக்க கண்ணீரும், ஒப்பாரியும் தொடர்ந்து, விடியற்காலையிலும் அது நீடித்தது. ஒருவர் கண்களிலும் பொட்டுத்தூக்கம் கூட இல்லை. எல்லோர் கண்களும் தூக்கமின்றி ரத்தச் சிகப்பாய் இருந்தது. திகில் அடைந்த குழந்தைகள் கண் உறங்காமல் இருப்பது கண்டு, ரமணி மாமா ஒவ்வொரு குழந்தைக்கும் அரை அவில் மாத்திரையைப் பாலோடு கலந்து கொடுத்து உறங்க வைத்தார்.

சொல்லியனுப்பி விட்டதில், அதிகாலையிலேயே பிச்சை வாத்தியார் தனது நூற்றி எண்பது பவுண்டு கனத்த உடலோடு மெதுவாக அசைந்து கொண்டே வெறுங்கால்களுடன் வீட்டுக்கு வந்தார். அவர் வந்த சில நிமிஷங்களில், அவர் வாயிலிருந்து கட்டளைகள் பறந்தன. ஜெயாவின் தம்பிகள் வேலைகளைச் செய்ய சிட்டாய்ப் பறந்தனர். வீட்டுப் பெண்கள் தலைவிரி கோலமாய் அழுது கொண்டிருக்க, ருக்குமணிப் பாட்டி முண்டனம் செய்து கொள்ள மாட்டேன் என்று சொல்லி விட்டாள்.

காலை பத்து மணிக்கு வேன் வந்தது. அதில் முத்தா தன் இறுதிப் பயணத்திற்காகத் தயார் ஆனார். தத்தனேரி சுடுகாட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டு, சகலவித சம்பிரதாயச் சடங்குகளுடன், பிச்சை வாத்தியார் சரம மந்திரங்களை தெள்ளத் தெளிவான குரலில் உச்சரிக்க, மூத்த மனைவியின் மூத்த பிள்ளை ராஜாமணி முத்தாவுக்குக் கொள்ளி போட்டான்.

பெரம்பூர் ஐ.சி.எஃப்.பில் ஃபார்மஸிஸ்ட்டாக வேலை பார்த்துக் கொண்டிருந்த மூன்றாம் பிள்ளை வெங்கடரமணி செய்தி கேள்விப்பட்டு, அவசரம் அவசரமாக ஆபீசுக்கு லீவு போட்டு விட்டு, மதுரைக்கு இரவு ரயிலில் விரைந்து வந்த போது பிற்பகல் மூன்று மணி இருக்கும். அவனைக் கைத்தாங்கலாய் ஆட்டோவில் ஜெய்ஹிந்த்புரத்திற்கு கொண்டு வந்து சேர்த்தது சம்பத் மாமாவின் மச்சினன் ஆட்டோ வேணு. தத்தனேரி சுடுகாட்டில் முத்தா முழுமையாய் எரிந்து சாம்பலாய் நீர்த்துப் போனதைப் பார்த்த முத்தாவின் வாரிசுகள், வாரிசுகளின் வாரிசுகள் யாவரும், அவர் கடைசியாய் வாழ்ந்த அந்த ஜெய்ஹிந்த்புரம் வீட்டில் கூடியிருந்து, இரவுச் சாப்பாடு முடிந்ததும், முத்தாவின் வரலாற்றை அசை போட ஆரம்பித்தனர்.

பழைய காலத்து எஸ்.எஸ்.எல்.சி பரீட்கையை கோட் அடிக்காது பாஸ் செய்து விட்டு, அதே மூச்சில் இண்ட்ர்மீடியட் பரீட்சையையும் முடித்து விட்டு, பி.யூ.சி.யும் படித்து முடித்து விட்டு, வீட்டில் அவர் இருந்த போது, அவரது அப்பா, ஒரு நாள் மாலை ரங்காச்சு மாமா வீட்டுக்குக் கொண்டு போய் முத்தாவைக் காட்டி,

– ‘இவன் தான் என் ஒரே புள்ள. உங்காத்து நாச்சியாருக்கு இவனைப் பெண் கேட்டு வந்திருக்கேன் ‘என்று பேசி ஒரே வீச்சில் அனைவரையும் சதாய்த்து விட்டு, உடனே நிச்சயதார்த்தமும் நடந்தது, அதே வேகத்தில் கல்யாணமும் முடிந்து, உடனே இரண்டு ஆண் பிள்ளைகள் பிறந்தன. ராஜாமணி, சீமானி. இரண்டு பிள்ளைகளையும் பொத்திப் பொத்தி வளர்த்தார். முத்தா, நாச்சியார் மீது கொண்ட பாசம், காதலாகிக் கசிந்து, பின்பு தொடர்ச்சியாக ஏழு பிள்ளைகள். ஆனால் எந்த சுகாதார வசதியும் இல்லாத கால கட்டத்தில் வாழ்ந்ததால், அத்தனை பிள்ளைகளும், ஒவ்வொன்றாய் சீக்கு வந்து செத்துப் போகவே, நாச்சியார் பாட்டி ஒவ்வொன்றாய்க் கொண்டு போய் மதுரை துவரிமானில், வைகை ஆற்றங்கரையில் மணலில் புதைத்து விட்டு வருவாளாம்.

வெள்ளைக்காரன் காலத்தில், சப்-ரிஜிஸ்திரார் வேலைக்கு உட்கார்ந்து, உட்கார்ந்து படிக்கத்தேவையில்லை என்பதாலும், முத்தாவுக்கு பிழையில்லாமல் ‘ரென் அண்ட் மார்ட்டின் கிராமர் புக்’ ஸ்டைலில் இங்கிலீஷ் எழுதத் தெரிந்திருந்ததாலும், அவருக்கு இண்டர்வியூ வைத்த மிஸ்டர். பிரிக் ஸ்வின்பர்ன், முத்தாவின் அப்பாவி முகத்தோற்றத்தையும், அவர் பின்னந்தலையில் முடிச்சிட்டு வைத்திருந்த குடுமியையும், காதில் ஜொலித்த ப்ளு ஜாகர் டைமண்ட் கடுக்கன்களையும், நெற்றியில் பிரகாசித்த வடகலை நாமம் ஆகியவற்றையும் பார்த்து விட்டு,

– ‘மிஸ்டர் சீனிவாசன்! வாட் இஸ் திஸ்? கட் யுவர் ஹேர். ரிமூவ் தோஸ் லைன்ஸ் ஆன் திஃபோர்ஹெட்’ என்று அவரது ஶ்ரீவைணவ சின்னங்களை அழிக்கச் சொன்ன போது,.

முத்தா, ‘ஸார்! திஸ் இஸ் மை ரிலீஜன். ஐயாம் எ ஸ்டான்ச் ஶ்ரீவைஷ்ணவைட்’ என்று தெள்ளத் தெளிவாய் சுவரில் ஆணியடித்தாற் போல பதில் சொல்லி வைக்க, அந்த ஆங்கிலிக்கன் ப்ராட்டஸ்ட்டான நாட்டிங்காம் நகரைச் சேர்ந்த பிரிக் ஸ்வின்பர்ன், அவரது முகத்தை ஏறிட்டுப் பார்த்து, முத்தாவின் கண்களை ஒரு நிமிஷம் தீர்க்கமாய் உற்றப் பார்த்தான்.

– ‘யு மே கோ’ என்று அதட்டலாய்ப் பதில் சொன்னான்.

தன் ஊருக்கு திரும்பி வந்த முத்தாவுக்கு, பத்து நாட்களுக்குப் பின்பு, பழுப்பு நிறத்தில் முரட்டான பெரிய கவரில் ‘ஆன் ஐ.சி.எஸ்.ஓன்லி’ என்ற ஆங்கில வாசகத்துடன் தபால் வந்தது. அதைப் பிரித்துப் பார்த்த முத்தா, அதில் முத்து, முத்தான எழுத்துக்களில் அவருக்கு சப்-ரிஜிஸ்தரார் வேலைக்கான நியமன உத்தரவு வழங்கப்பட்டிருப்பதை படித்துப் பார்த்தார். தன் அம்மாவையும், அப்பாவையும் சேர்த்து சுவரில் தொங்கிய கூடலழகப் பெருமாள் படத்தின் பக்கத்தில் நிற்க வைத்து, அவர்கள் காலில் கவர்மெண்ட் அப்பாயிண்மென்ட் ஆர்டரை வைத்து, விழுந்து சேவித்து, இரண்டாவது நாளில், தகர டிரங்க் பெட்டி, படுக்கை சகிதம், இராஜபாளையத்திற்கு ரயில்வே ஸ்டேஷனில் போய் இறங்கினார்.

அங்கு மார்க்கெட் வீதியில், கொல்லம் ஓடுகள் வேய்ந்து, மரச்சட்டங்களால் உத்தரங்கள் பாவிய சப்-ரிஜிஸ்தரார் ஆபிசில் பதவியேற்றுக் கொண்ட போது அவரது வயது பத்தொன்பது.

கல்யாணமான புதிய தம்பதிகளைப் பிரிப்பதா என்று பதறிய முத்தாவின் அப்பா, தானே அங்கு இராஜபாளையம் வந்திருந்து, ஆபீஸ் பியூன் மூலமாக ஒரு வாடகை வீட்டைப் பிடித்து, முத்தாவை நாச்சியாருடன் சேர்த்துக் குடி வைத்து விட்டு, புதிய பண்டம் பாத்திரங்கள் வாங்கித் தந்து விட்டுப் போனார்.

அது முதல், இராஜபாளையமே கதி எனக் கிடந்தார் முத்தா. காலை ஒன்பது மணிக்கு இரட்டை மாடுகள் பூட்டிய வில் வண்டியில் ஆபீசுக்கு வந்ததும், ஓடி வந்து அவரது சிறிய கைப்பெட்டியை பவ்யமாக பையில் வாங்கிக் கொள்வான் ஆபீஸ் ப்யூன் போத்தி. உடனே, ஆபீசுக்குள் நுழைந்து உயர்ந்த மேடையில் இருந்த நாற்காலியில் அமர்ந்து விட்டாரென்றால், சாயங்காலம் வரை பங்கா போட்டுக் கொண்டிருப்பான் போத்தி. வில் வண்டி மாடுகள், ஆபீசின் முன்புறம் இருந்த புங்க மர நிழலில் வைக்கோலை அசை போட்டுக் கொண்டிருக்கும்.

காலை பத்தரை மணிக்கு, சப்-ரிஜிஸ்தரார் ஆபீசுக்கு நேர் எதிரே இருக்கும் ஶ்ரீரங்க விலாஸ் கபேயிலிருந்து அசல் நெய் விட்ட பாதாம் அல்வா, காராபூந்தி, மற்றும் பித்தளை ஃபில்டரில் வடித்த டிகிரி காபி எல்லாம் ஆபீசுக்குள்ளே வரும். டிபன் முடித்ததும், ஒரு சிட்டிகை பொடி எடுத்துப் போட்டுக் கொண்டு விட்டால், மணி ஒன்றரை வரை விடாமல் பத்திரப் பதிவு வேலை இருக்கும். நடுவில் முத்தா நாற்காலியை விட்டு இறங்குவதே இல்லை.

மதியம் நல்ல வெயிலில், மீண்டும் வில் வண்டியில் வீட்டிற்குப் போய், சாப்பிட்டு விட்டு, பிற்பகலில் ஆபீசுக்கு வந்து வைத்து விட்டுப் போன வேலைகளை முடித்து விட்டு, மீண்டும் வீடு திரும்ப மணி ஏழாகி விடும். ஆனி, பங்குனி மாதங்களில் வேலை அதிகம் இருக்காது. ஆபீஸ் காத்தாடும். மற்ற மாதங்களில் இடைவிடாத வேலை இருக்கும். பத்திர எழுத்தர்களே கருப்பு மை பேனாவைக் காகிதத்தில் ஓட்டி, ஓட்டிக் கை சோர்ந்து விடுவார்கள். முத்தாவுக்கு முதுகு வலி எடுத்து விடும். சாயங்காலம் ஆபீஸ் பூட்டப் போகும் போது, போத்தி தான் முத்தாவுக்கு கை, கால்களை நீவி, வலி தீரப் பிடித்து விடுவான். உடம்பு ஓய்வெடுக்க ஏங்கும்.

இராஜபாளையம் முழுக்க இராஜுக்கள் தான். ஆந்திராவிலிருந்து சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வந்து, அங்கு தங்கி, வியாபாரம் செய்த ராஜுக்களின் தாய் மொழி தெலுங்கு தான். அவர்கள் தமிழ் பேசுவதைக் கேட்க, கேட்க முத்தாவுக்கு ரொம்ப வேடிக்கையாக இருக்கும்.

தலையின் பின்புறம் வழிந்த குடுமியும், காதின் கடுக்கன்களும், நெற்றியில் துலங்கிய வளைந்த நாமமும், ஜிப்பா, விசிறி மடிப்பு அங்கவஸ்திரம், தார்ப்பாய்ச்சிக் கட்டு வேஷ்டி சகிதம், வில் வண்டியில் ஆபீசுக்கு வரும் முத்தாவைப் பார்த்த தெலுங்கு பேசும் ராஜுக்கள்,

‘ஸ்வாமி, ஸ்வாமி ஒஸ்தாரய்யா’ என்று பரபரப்பாய்ப் பேசிக்கொண்டே மரியாதையாய் வழி விட்டார்கள். கை கட்டி நின்று அவர் சொன்ன பத்திரப் பதிவிற்கான அறிவுரைகளைக் கேட்டார்கள்.

– ‘சாமீ… சாமீ…’ என்று வீட்டு வாசலில் நின்று ஒருவன் குரல் கொடுப்பான், போய்ப் பார்த்தால்,

– ‘நாராயண ராஜா கொடுத்தனுப்பினாரு. இன்னிக்கு அய்யா தோட்டத்துல இதெல்லாம் விளைஞ்சது’ என்று சொல்லி ஒரு கூடை நிறைய காய்கறிகளைக் கொண்டு வந்து வாசலில் வைத்து விட்டு, கையெடுத்துக் கும்பிட்டு விட்டுப் போவான்.

அரிசி, பருப்பு, உப்பு, புளி, வத்தல், நெய், பயறு வகைகள், பழங்கள், ஶ்ரீவில்லிபுத்தூர் மண்டை வெல்லம், மலைத்தேன், செக்கில் ஆட்டிய புது மணம் மாறாத நல்லெண்ணை, வாழை இலை என்று வீட்டின் எல்லாத் தேவைகளும் பார்த்து பார்த்து செய்து தந்தனர் ராஜுக்கள்.

அப்பாள் ராஜா வீதியில் பெரிய காம்பவுண்ட் சுவர் வைத்த வீட்டுக்கு மாத வாடகை ருபாய் நான்கு. அந்த வீட்டுக்கு கடைசி வரை யாரும் முத்தாவிடம் வாடகை கேட்கவில்லை. ஶ்ரீலட்சுமி விலாஸ் தியேட்டரில் புது சினிமாப்படம் போட்டால், ஒரு தியேட்டர் சிப்பந்தி, பத்து டிக்கெட்டுகளை சப்-ரிஜிஸ்திரார் ஆபீசுக்கு கொண்டு வந்து கொடுத்து விட்டுப் போவான்.

முத்தாவுக்கு சினிமா பிடிக்காது. அவர் சாயங்காலம் வில் வண்டியில் கிளப்புக்குப் போய் டென்னிஸ் ஆடுவார். கனமான பிரம்பு டென்னிஸ் மட்டையில் அவர் சர்வீஸ் போட்டாரென்றால், பந்தை எதிர் கொள்ள ராஜுக்கள் திணறுவார்கள். வேர்க்க, விறுவிறுக்க டென்னிஸ் விளையாடி விட்டு, ராஜுக்களுடன் அரட்டையடித்து விட்டு, மீண்டும் வில் வண்டியில் வீடு திரும்ப லேட்டாகி விடும். குழந்தைகள் சாப்பிட்டுத் தூங்கிய பின் தான் அவர் வருவார். அது வரை நாச்சியார் சாப்பிடாமல் அவருக்காகக் காத்துக் கொண்டிருந்து, அவர் சாப்பிட்ட பின் தான் சாப்பிடுவாள். வீட்டில் அரிசியும், பருப்பும், எண்ணையும், காய்கறிகளும், பழங்களும் குறைவு பட்டதேயில்லை. அவர் ஒரு தடவை கூட வீட்டுக்கு மளிகைச் சாமான்கள் வாங்க மார்க்கெட்டில் உள்ள செட்டியார் கடைக்குப் போனதில்லை.

எப்பொழுதாவது ஆபீசுக்கு தொடர்ச்சியான லீவு விட்டால், குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு, மதுரைக்குத் தன் அப்பா வீட்டுக்குப் போய் விடுவார். அப்போதெல்லாம் அவரது குழந்தைகள் மதுரை துவரிமானில், வைகை ஆற்றின் கரையில் உள்ள தென்னந்தோப்பில் விளையாடுவார்கள். அதைப் பார்க்க பார்க்க அவருக்கு பெருமையாக இருக்கும். வியாதியில் வீழ்ந்த நாச்சியார் படுத்த படுக்கையாய்க் கிடந்து, இருபது நாட்களுக்குப் பின் கண்ணை மூடி விட்டாள். சின்னஞ்சிறுசாய் விடலைக் குழந்தைகளை வைத்துக் கொண்டு, துக்கத்தில் தத்தளித்த முத்தாவுக்கு ஆபத்பாந்தவனாய் உதவியது மதுரை ஆர்.எஸ்.பதி மருந்து கம்பெனியில் கிளார்க் வேலை பார்த்த மாதவய்யங்கார் தான்.

முத்தாவின் அநாதரவான நிலையைப் பார்த்து, அவருக்கு ருக்குமிணியை இரண்டாம் தாரமாக கல்யாணம் பண்ணி வைத்தது மாதவய்யாங்கார் தான். ருக்குமிணி இளைய தாரமாய் வந்த பின்பு, முத்தாவுக்கு வரிசையாய்க் குழந்தைகள் தான். மூன்று பெண்கள், ஐந்து ஆண் மக்கள். மூத்த பெண் தான் கோதை நாயகி. அவளுக்கு இளையவள் ஜெயா, ஜெயாவுக்கு மூன்று பிள்ளைகள். கிருஷ்ணா, ராணா, நிவந்தன். முத்தாவின் மூத்த பையன் சந்தானம். அவன் பத்தாவது பரீட்டை பாஸ் பண்ணி, கப்பலூர் தியாகராசர் மில் ஆலையில் கேன்டீனில் ஸ்டோர் கீப்பராகப் பணியில் சேர்ந்து, பின் முத்தாவே அவனுக்குக் கல்யாணமும் பண்ணி வைத்தார். இளையவன் சம்பத் பி.டபிள்யூ.டி.யில் வேலைக்குச் சேர்ந்ததும் ரமா மன்னியைக் கல்யாணம் செய்து கொண்டான். ஶ்ரீதர் மெஜுரா காலேஜில் பி.எஸ்.சி., ரசாயனம் படித்துக் கொண்டிருந்தான். கோபால் அடிக்கடி வீட்டில் கோபித்துக் கொண்டு, வீட்டை விட்டு ஓடிப் போவதும், வருவதுமாக இருந்தான்.

வீட்டில் செல்வமில்லை. பிள்ளைச் செல்வமுண்டு. பணமில்லை. சிரிப்பும், சந்தோஷமும் உண்டு.

முத்தா வேலை பார்த்த ஆபீஸ் ஜன்னல் வழியே பார்த்தால் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் தெரியும். சாயங்காலம் சுகமான காற்று வீசும். மனம் சொக்க வைக்கும் மலைக்காற்று. முத்தாவின் மனம் அறிந்த பியூன் போத்தி, அவரது நாற்காலிக்கு நேர் மேலே இரும்பு கிர்டரில் இருந்து தொங்கிய நீள செவ்வகமான பங்காவில், கேரளாவில் தன்னுடைய சொந்த ஊரிலிருந்து கொண்டு வந்த வெட்டி வேரைச் சேர்த்துக் கட்டி வைத்தான். பெரிய அகலமான கம்பி ஜன்னல்கள் வழியே மேற்குத் தொடர்ச்சி மலையின் ஆடிக்காத்து வீசும் போது, போத்தி தன் கைப்பட நீளமான மணிலாக் கயிறால் இழுத்து விடாமலே பங்கா லேசாக ஆடும். வெட்டி வேரின் வாசம் அலுவலகம் முழுவதும் நிரம்பும்.

நீர்ச்சுமை கூடிய சுகமான காற்று. சுத்தமான குடிநீர். நல்ல பணிச்சூழல். நல்ல சுபாவம் கொண்ட ஆபீஸ் ஊழியர்கள். ஏராளமான நண்பர்கள். உதவிக்கு ஓடி வந்த உள்ளுர் ராஜீக்கள் என்று முத்தா இராஜபாளையம் நகரின் இன்பமான சூழலில் வேலை பார்த்து ஏகப்பட்ட இன்கிரிமென்ட், அவார்டுகள் வாங்கி ஒரு மன்னர் போலவே வலம் வந்தார்.

வெள்ளைக்காரர்கள் போய் காங்கிரஸ்காரர்கள் வந்தார்கள். காங்கிரஸ்காரர்கள் போய், கரை வேட்டிக்காரர்கள் வந்தார்கள். முப்பத்து ஒன்பது ஆண்டுகள் ஒரே ஓட்டமாய் உருண்டோடியது.

மூத்த மனைவியின் பிள்ளைகளுக்குப் பிள்ளைகள் பிறந்தனர். அவர் கண் பார்வைக்குக் கீழே இரண்டு தலைமுறைகள் தழைத்துக் கிடந்தன.

ரிட்டயரானதும், பெட்டி, படுக்கை, மற்றும் வீட்டில் இருந்த ஒரு வண்டிச் சாமான்கள். இரண்டாம் மனைவி ருக்குமிணி, பிள்ளைகள், பெண் பிள்ளைகள் என்று மொத்தக் குடும்பத்துடன் மதுரை ஜெய்ஹிந்த்புரம், காந்திஜி தெருவுக்குக் குடிபெயர்ந்தார் முத்தா.

இளைய பெண் ஜெயாவை கல்யாணம் பண்ணிக் கொடுக்க வசதியில்லாமல் ஒரு கோர்ட் குமாஸ்தாவிற்கு இளைய தாரமாக தாரை வார்த்துக் கொடுக்க சம்மதித்தார். ரிட்டயராகி வீட்டில் குடியிருந்தவரை ருக்குமிணி தினமும் வசை மாரி பொழிந்தாள்.

பிள்ளைகள் தலையெடுத்துக் கொண்டிருந்தார்கள். ருக்குமிணியின் மூத்த பிள்ளை சந்தானத்திற்கு மூன்று பெண்கள், இரண்டு ஆண் மக்கள் என வம்சம் கிளை படர்ந்தது. வீட்டில் எப்போதும் பணம் எனும் வஸ்து தேவைப்பட்டுக் கொண்டே இருந்தது. கும்மாளத்திற்கோ குறைவில்லை. கேலியும், கிண்டலும், சொந்தக்காரர்களின் வருகையுமாக வீட்டின் சமையலறையில் அடுப்பு அணையாமல் எரிந்து கொண்டே இருந்தது.

மூன்றாம் பிள்ளை வெங்கடரமணி அதிகாலையில் கேழ்வரகுக் கஞ்சியைக் குடித்து விட்டு, ஒரு அலுமினிய பாத்திரத்தில் நீர்த்த மோர் சாதத்தை எடுத்துக் கொண்டு. நடையாய் நடந்து மதுரை மெடிக்கல் காலேஜ் கேம்பஸில் உள்ள ஃபார்மஸி கல்லூரிக்குப் போய் விட்டு வந்தான்.

முத்தா, வீட்டின் சூழலில் ஏனோ மௌனமாகிப் போனார். வீட்டின் மூலையில் பெட்ஷீட் விரித்து உட்கார்ந்து அவரது சதுர ரோஸ்வுட் மரப்பெட்டிக்குள் முகம் புதைத்துக் கொண்டார். அவருக்கு இருந்த ஒரே சொத்து அந்த ரோஸ்வுட் மரப்பெட்டி தான். பார்க்க அழகாக வழுவழுப்பாக இழைக்கப்பட்ட அந்த ரோஸ்வுட் பெட்டிக்குள் அவரது சொந்த பென்ஷன் புத்தகம், பர்ஸ், கண்ணாடிக் கூடு, கருப்பு மை சீசா, நீள நிப்புகள், பழைய பார்க்கர் பேனா, ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழ்கள், தபால் கார்டுகள், கவர்கள், சீட்டுக்கட்டு இத்தியாதிகள்.

காலையில் குளித்து நெற்றியில் நாமம் இட்டுக் கொண்டதும், சாப்பிட்டு விட்டு, சீட்டுக் கட்டை எடுத்துக் கொண்டு, குத்த வைத்து குதியங்காலில் அமர்ந்து, தனக்குத் தானே விளையாடிக் கொண்டிருப்பார். மார்பில் சட்டை இருக்காது. இடுப்பில் நாலு முழ வேஷ்டி மட்டுமே. பிறகு நண்பர்களுக்கு கடிதம் எழுதுவார். பழைய ரிக்கார்டுகளைப் புரட்டிப் பார்த்து, ஏதோ நினைவில் மூழ்கி விடுவார். யாருடனும் எதுவும் பேசுவதில்லை. உச்சிப் பகல் வேளையில் நூறு திட்டு, வசவுகளுடன் ருக்குமிணி மதியச் சாப்பாட்டைக் கொண்டு வந்து வைப்பாள். அப்பொழுதும் உட்கார்ந்த இடத்தை விட்டு எழுந்திரிக்காமல், குத்த வைத்து உட்கார்ந்து கொண்டே சாப்பிடுவார் முத்தா. அவருக்குப் பிடித்தது ரசம் சாதமும், பருப்புத் துவையலும், மதியம் சாப்பிட்டு முடித்ததும் சிறு உறக்கம். பிற்பகலில் மூன்று மணி வாக்கில் கண் விழிப்பு தட்டி எழுந்ததும், தன் வளைந்த கம்பை எடுத்துக் கொண்டு மெயின் ரோட்டில் உள்ள ராகவேந்திர விலாஸீக்குப் போய் விடுவார்.

ராகவேந்திர விலாஸில் அனுமந்தராவ், மன்னார் ராவ், ஹரி ராவ் போன்றோர் இவரது உற்ற உயிர் நண்பர்கள்.

– ‘வாங்கோ முத்தா. இங்க உட்காருங்கோ. ஒரு அஞ்சு நிமிஷம் பொறுத்துக் கோங்கோ. டிபன் ரெடியாயிடும்’ ‘என்பார் கல்லாவில் உட்கார்ந்திருக்கும் ஓனர் அனுமந்தராவ்.

முத்தாவுக்கென்று முதல் ஏடு எடுத்த சூடான உருளைக்கிழங்கு பஜ்ஜியும், ரவா கேசரியும், நல்ல சூடான பில்டர் காபியும் தனியாகக் கொண்டு வந்து வருவார்கள். சாப்பிட்டு முடித்து, பாண்டி கடையில் மூக்குப் பொடி, வெத்திலை, பாக்கு, அங்கு விலாஸ் பன்னீர் புகையிலை வாங்கிக் கொண்டு, நண்பர்கள் வீட்டுக்குப் போய் விட்டு, வீடு திரும்ப மணி ஆறாகி விடும். பிறகு மீண்டும் சீட்டுக்கட்டை எடுத்துக் கொண்டு தானே தனியாய் விளையாடுவார். அப்பொழுதும் யாருடனும் சேர்ந்து விளையாடுவதில்லை. யாருடனும் பேசுவதில்லை. இரவு எட்டு மணி வரை மூக்குக்கண்ணாடியைக் போட்டுக் கொண்டு இந்து பேப்பர் வாசிப்பார். பிறகு இரவு பலகாரம். வாய் கொப்பளித்து விட்டு பெட்ஷீட்டை விரித்து விட்டால், காலை ஐந்து மணிக்குத்தான் எழுந்திருப்பார்.

ரிட்டயரான பிறகு, கிட்டத்தட்ட இதே ரீதியில் இறுதிக்காலம் வரை ஓட்டி விட்டார். நோய் நொடி என்று படுத்துக் கொண்டது கிடையாது. ஆனால், உடல் மெலிந்து, மெலிந்து துரும்பாய்ப் போய் விட்டார். உடலில் ஒரு இடத்திலும் கிள்ளுவதற்குக் கூட சதை இல்லை. அவருடைய குழி விழுந்த கண்களும், தொங்கிப்போன கன்னமும், அவரைப் பார்க்கும் எவருக்கும் அவர் மீது கழிவிரக்கத்தைக் தேடித் தரும். அவர் இருந்த காலம் வரை, ருக்குமிணியின் முதல் இரண்டு பிள்ளைகளுக்கு கல்யாணம் பண்ணிப் பார்த்து விட்டார். பிள்ளைகளை ஒரு போதும் அவர் கடிந்து பேசியதில்லை. அவர்களாகவே படித்து மேலே வந்து விடுவார்கள் என திடமாக நம்பினார்.

முத்தாவுக்கு இருந்த ஒரே வருத்தம், இரண்டாவது மகள் ஜெயாவுக்கு நல்ல சீதனம் கொடுத்து, முதல் தாரமாக ஒரு மாப்பிள்ளைக்குக் கைப்பிடித்துத் தரவில்லையே என்பது தான். அந்த வருத்தம் அவருக்குக் கடைசி வரை இருந்தது. சப்-ரிஜிஸ்திரார் என்ற ராஜ உத்தியோகம் பார்த்ததில் அவருக்கு மிஞ்சியது ஒரு ரோஸ்வுட் சதுரப்பெட்டி தான். தன் சட்டையில் பெரிய பை வைத்துத் தைத்துக் கொள்ளாதது அவரது தவறு தான்.

ஜெய்ஹிந்த்புரம், காந்திஜி தெரு உண்மையில் ‘பாரத விலாஸ்’ தான். சகல வருணத்தாரும் சங்கமித்த ஒருமை. எப்போதும் ஜன சந்தடி அதிகம் உள்ள தெரு. காலையில் ஐந்து மணிக்கு வெள்ளாடுகளைக் கொண்டு வந்து, அவற்றின் பாலை இளஞ்சூட்டில் கறந்து சீக்காளிகளுக்கு விற்பனை செய்வதில் இருந்து, அந்தத் தெருவில் ஒரு தினத்தின் துவக்கம் உதயமாகும். பிறகு தோட்டிகளின் துப்புரவு வேலை, பால்காரர்களின் மணியோசை, பேப்பர்காரனின் குரல்… இப்படியாக பொழுது புலரும். சதா மக்கள் ஆரவாரம். ஜெய்ஹிந்த்புரம், காந்திஜி தெரு எப்போதும் உயிர்த்துடிப்போடு இருக்கும். அந்தத் தெருவாசிகள் நெஞ்சில் விகல்பமற்றவர்கள். கல்மிஷம் இல்லாதவர்கள். வஞ்சனை இல்லாத பிறவிகள். முத்தாவைப் போலவே அந்த காந்திஜி தெருவாசிகளும்…

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அல்லது அசந்தர்ப்பத்தில், காந்திஜி தெருவை விட்டு விட்டு, அதற்கு மேற்குப் பக்கம் இருந்த தீனதயாள் இரண்டாம் தெருவில், இரட்டை வீடுகள் ஒட்டிக் கட்டப்பட்ட காம்பவுண்டு சுவர் உள்ள வீட்டிற்கு இடம் பெயர்ந்தார் முத்தா. கூடவே அவர் குடும்பமும். அங்கு புதிய வீட்டில் குடி புகுந்த சில மாதங்களுக்குள் அவர் திருநாடு அலங்கரித்தார்.

முத்தாவின் பத்து நாள் ஈமக்காரியங்கள் யாவும் வைகை நதிக்கரையோரம் உள்ள டி.வி.எஸ். தோப்பில் நடைபெற்றன. பிச்சை வாத்தியார் தான் வீட்டின் எல்லா நல்லது கெட்டது காரியங்களுக்கும். பத்தாவது நாள் அன்று நெருங்கின தாயாதி உறவினர்கள் டி.வி.எஸ்.மண்டபத்தில் பந்தியில் அமர்ந்த போது, சீமானி அங்கு வந்த கூட்டத்தைப் பார்த்துப் பிரமித்து விட்டார். முத்தாவின் நெருங்கின நண்பர்கள், உறவினர், ஒன்று விட்ட மாமா, மச்சினர் என்று ஒரு பெரும் பட்டாளமே பத்தாம் நாள் பந்தியில் சாப்பிட அமர்ந்தது. மூன்று தடவை அரிசி போட்டு அண்டாவை அடுப்பில் ஏற்ற வேண்டியிருந்தது.

இந்த பெருத்த உறவினர் கூட்டத்தில் தான் ராஜாமணியின் மூத்த பிள்ளை ராஜப்பா வேப்ப மரத்தடியில் நின்று கொண்டு எல்லோருடனும் சகஜமாகப் பேசிக் கொண்டு இருந்தான். பி.ஏ., ஆங்கிலம் நாலாவது அட்டெம்ப்டில் பாஸ் பண்ணி முடித்து விட்டு, இடைவிடாமல் சர்வீஸ் கமிஷன் பரீட்சை எழுதிக் கொண்டிருந்த பட்டதாரி கஜினி முகம்மது அவன். முத்தாவின் மூத்த தலைப் பேரன். வேலை வெட்டி இல்லாமல் சுற்றித்திரிந்து பாம்பே போய், அங்கும் சாப்பாடு கிடைக்காமல் ஒரு சர்ச் பாதிரியாரின் கருணையில் தேவாலயத்தில் நாள் தோறும் சாப்பிட்டுக் கொண்டு, வேலை தேடி, எதுவும் கிடைக்காமல், கடைசியில் சுவிசேஷ பிரச்சாரகராக மாறியவன். அவன் வாயால் முத்தாவின் புகழ் பாடக் கேட்ட சொந்தக்காரர்கள் கூட்டம், மெய் மறந்து, உணர்ச்சிவசப்பட்டு, கண்ணீர் சொரிந்த காட்சி ஏதோ நேற்று நடந்தது போல் இருக்கிறது.

பத்தாம் நாள் சரம காரியம் முடிந்தது, முத்தா விட்டுச் சென்ற பொருட்களை எல்லாம் தனியாக எடுத்து ஒதுக்கி வைத்தார் சம்பத் மாமா. முத்தா பயன்படுத்திய மங்கலான இள மஞ்சள் நிறத்தாலான எட்டு முழ வேஷ்டிகள், அங்கவஸ்திரங்கள் யாவையும் என்ன செய்யலாம் என்று பிச்சை வாத்தியாரிடம் சம்பத் மாமா கேட்டார்.

– ‘ஏண்டா சம்பத்! அதெல்லாம் முத்தா உடுத்திண்டது. அது எதையும் வீட்டுக்கு எடுத்திண்டு போகாதே. இதோ இந்த ஓடுற ஆத்துல விட்டுரு!’ என்று அறிவுறுத்தினார் பிச்சை வாத்தியார்.

முத்தாவின் எல்லாத் துணிமணிகளும் ஒரு தகர டிரங்க் பெட்டியில் இறுக்கமாக அடைக்கப்பட்டிருந்தது. அவர் எப்போது உடுத்திக் கொண்டதோ!?!

சம்பத் மாமா, தரக டிரங்க் பெட்டியைத் திறந்து, நைந்து போன அந்தப் பழைய துணிமணிகளை எல்லாம் எடுத்து, முழங்காலுக்கு மேலே ஓடிய வைகை ஆற்றின் நீரிலே விட்டார்.

அந்தத் துணிக் குவியல் மொத்தமாகத் திரண்டு, பின் பிரிந்து மெதுவாக மிதந்து சென்றது. அதன் பின்பக்கம் சிவப்பு, பச்சை ஜரிகை வைத்த சுருண்ட அங்கவஸ்திரம் மிதந்தபடி சென்றது. வைகை ஆற்றின் நீரை விட்டு, மணலில் கரையேறிய சம்பத் மாமா ஒரு கணம் திரும்பி நதியில் ஓடிய துணிக்குவியலைப் பார்த்தார்.

சுழித்து ஓடிய நதியின் நீரோட்டத்தில், ஏதோ ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் தன் நாடு, நகரத்தையெல்லாம் இழந்து விட்டு, தன் கிரீடத்துடன் தண்ணீரில் மல்லாந்து கொண்டு மிதந்தபடியே சென்றதைப் போல அவருக்குப் பிரமிப்பு தட்டியது

– 2014–ல் வெளியான அடியேனின் “முத்தா” சிறுகதைத்தொகுப்பில் இந்தச்சிறுகதை வெளியானது. “முத்தா” -சிறுகதைத்தொகுப்பு, தமிழக அரசின், தமிழ் வளர்ச்சித்துறையின் நிதி பெற்று வெளியிடப்பட்டது

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *