முத்தமீந்த மிடறுகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 10,558 
 

“வுங்கம்மா ஒழுங்கா இருந்தாதானே நீ ஒழுங்கா இருப்ப?”. வார்த்தைகளின் அமிலம் தன்னை தாண்டி செல்வதை, வலி வுணரமுடியா எல்லையில் நிற்பதை, ‘விஷ்ணுவா சொன்னான்?’ என்று தான் கல்லை போல் ஆகிவிட்டதை வுதறி எழுந்தாள் கிருஷ்ணா. மனம் நிறைந்த கூடலில், தன்னை அமிழ்த்திகொண்டு போகும்போது, எதையாவது பிடித்துக் கொள்ள வேண்டும்போன்ற, எடையற்று மிதக்கும், தாங்கமுடியா வெடித்தலில், அவனை கெட்ட வார்த்தை சொல்லி அழைக்கவேண்டும் போல இருந்தது. அந்த வார்த்தை அவனை காயப்படுத்தி இருக்கவேண்டும். கிருஷ்ணா ஆடைகளை நிதானமாக அணிந்து கொண்டாள். விஷ்ணு தலையை பிடித்து கொண்டு வுட்கார்ந்திருந்தான்.

அவள் வெளியில் வரும்போது, “ப்ளீஸ், இந்த நேரத்தில் தனியா போகாதே, ப்ளீஸ்”, என்று அரற்றினான். கிருஷ்ணா மாதவி மில் தாண்டி வண்டியை முடுக்கினாள். இந்த கீர் வண்டியை அம்மாதான் கற்று கொடுத்தாள். இப்போதே அவளை பார்க்க வேண்டும் போல இருந்தது.

“தொண்ணுத்தி ஏழு நாள்தான் நான் வுங்கப்பாவோட வாழ்ந்தேன், ஒவ்வொரு நாளும் அவர் புது புது மனக்கதவுகளை என் வுடம்பிலும் ,மனசிலும் திறந்து கிட்டு இருந்தார் ஒவ்வொரு வினாடியும் அற்புதமா இருந்தது. ஜென்ம ஜென்மமா ஒன்றா இருந்த வுணர்வை அடைந்தோம். நீ ஆணா, பெண்ணான்னு தெரியாததால் இந்த பேரை அவர்தான் வைத்தார். புரிதல் நிறைந்த வுறவு. ஒரு அன்னியோன்னியத்தை ஒரு மன நிறைவை, ஒரு அந்தரங்கத்தை சொல்ல வார்த்தைகள் போதாது. அது ஒரு வுணர்வு”. அம்மாவின் குரல் மனசில் இழைந்தது. அம்மாவுக்கு அதன்பின் கதிரவனுடன் ஏற்பட்ட நெருக்கத்தில் ரகசியம் எதுவுமில்லை.

“ஒரு இளவரசி போல பிறந்து, வளர்ந்து, வுங்கப்பாவுக்கு வாழ்க்கை பட்டதும் மகாராணியாக ஆனேன். வூர் வியந்த கல்யாணம். நூறு பொருத்தம் பார்த்தது. பக்கத்து தெரு, கார், பங்களா, வசதி, தோட்டம், துரவு. பொருத்தமா ஜோடின்னு, பார்க்கிறவங்கல்லாம் சந்தோஷப்பட்டாங்க.” அப்பாவுக்கு நடந்தது ஒரு விபத்து. சேற்றில் இருந்து ட்ராக்டரை கிளப்ப முடியவில்லை என்று ஆள் வந்த போது, “வுங்கப்பா என் மேல படுத்து தூங்கிகிட்டு இருந்தாங்க. வசதியா இல்லை இப்படி தூங்க ன்னு கோவிச்சுப்பார். எனக்கு பிடிக்கும். அப்படி முழு கனமும் மேலே இருக்கும்போதுதான் நீங்க என்கிட்ட இருக்கமாதிரி இருக்கு, என்பாளாம் அம்மா.

அதே போல் அறையை விட்டு வெளியில் போகும்போது அழுத்தமாக கட்டிக் கொள்ள வேண்டும், ஒரு வினாடி மனம் சாந்தமடையும் வரை அவர் அசையாமல் நிற்கவேண்டும். “என்னடி இது தொல்லை ?’ என்று அவர் கோபித்து கொண்டாலும், அம்மா சமனப்படும் வரை ஒப்புகொடுத்து நிற்பார். அன்று வேலையாய் வெளியில் போகும் அவசரத்தில் சட்டையை மாட்டிக் கொண்டு அறையை தாண்டும்போது திரும்பி, பிதுங்கி அழபோகும் அம்மாவின் முகம் கண்டு போட ஆரம்பித்த சட்டையை கழற்றி ,அவள் மீது வீசிவிட்டு, “இதை வச்சிக்கோ, என்ன” இரண்டு தாண்டாக பனியனுடன் வெளியில் போய்விட்டார். அம்மா அந்த சட்டையை அணிந்து கொண்டாள்.அரைமணி நேரத்தில் பெரிய மாமனார் அலறி கூப்பிட்டார். ட்ராக்டரை அதிக விசையில் சேற்றில் இருந்து கிளப்பியதில் எதிரில் இருந்த கிணற்று சுவரில் மோதி, அப்பா வீசி எறியப்பட்டு விட்டார். தலை பைப்பில் மோதி விட்டது. ஆறடி வுயரம். ஆஜானுபாகுவான தோற்றம். அம்மா அப்பாவின் சட்டையுடன் அலறிக்கொண்டு ஓடினாள். வுள்ளே பாய்ந்த ஆட்கள் அங்கிருந்தே நெஞ்சில் அறைந்து கொண்டு சேதி சொல்லி விட்டார்கள். கட்டிலை இறக்கி, கயிறில் கட்டி, ஒவ்வொரு அடியாக அப்பா மேலே வந்த காட்சியை இன்று நினைத்தாலும் அம்மா அழுவாள்.

“தொட்டு தொட்டு பார்த்தேன், கட்டிகிட்டேன், அப்படியே கொஞ்ச நேரம் விட்டுடுங்கன்னு பெரிய மாமனார் சொல்லிட்டார் ,என்னையும் வீட்டுக்கு தூகிக்கிட்டுதான் வந்தாங்க” இந்த வாழ்க்கையை, அதன் முடிவை அம்மா கணக்கற்ற தடவை தோட்டத்து வாசல்படியில் வுட்கார்ந்து சொல்ல கிருஷ்ணா கேட்டிருக்கிறாள். கதிர் அந்த கிராதியில் அமர்ந்திருப்பார்.

அப்பாவின் சட்டையை போட்டுகொண்டு நாள்கணக்கில் நினைவின்றி கிடந்தவளை பெரிய மாமனார்தான் இடமாறுதலுக்காக தாய் வீட்டில் கொண்டுவந்து விட்டது. “ஒரு நிறைவை எப்படி சொல்லிவிடமுடியாதோ அப்படிதான் தனிமையையும். வாந்தி ,மயக்கம், வுடல் மாறுதல்கள் எல்லாத்தையும் தாண்டி வுங்கப்பாவோட இழப்பு என்னை வுன்மத்தமாக்கிகிட்டு இருந்தது.கதிர் என்னைவிட இருபது வயது மூத்தவர், தூக்கி வளர்த்தவர்,நிலம் பார்த்துகிட்டு வீட்டிலேயே இருந்தார். என்மீது அவர் கொண்ட பிரியம் அப்போ எனக்கு பாதுகாப்பா இருந்தது. இந்த தோட்டத்து வராண்டாவில்தால் அவர் இருப்பிடம். நிறைமாதத்தில் ஒருநாள் தாங்க முடியாமல் அவர் பக்கத்தில் போய் அழுதுகிட்டே படுத்துகிட்டேன். ரொம்ப பாதுகாப்பா வுணர்ந்தேன். நீ பிறந்து நீண்ட நாள் கழித்துதான் சேர்ந்தோம். விஷயம் தெரிஞ்சு வுன் பாட்டி, தாத்தா அவரை போட்டு அடிச்சாங்க. போன் பண்ணி பெரிய மாமனாரை வரச்சொல்லி அழுதேன். அவர் பெரியவங்ககிட்ட பேசினார்.சமாதானம் பண்ணார். கல்யாணமா பண்ணி வச்சிடலாம்னு முடிவு பண்ணி கேட்டார். நான் மறுத்துட்டேன், ஒரு கல்யாணம் போதும், எல்லா வுறவுக்கும் பெயரும் அங்கீகாரமும் இருக்கணும் நு என்ன இருக்கு ?” என்பாள் அம்மா. விடியலில் கிருஷ்ணா அந்த பெரிய மரக்கதவை தட்டியபோது அம்மாதான் திறந்தாள்.

“என்ன இந்த நேரத்தில் ?” என்று கேட்க மாட்டாள். “காபி போடவா?, தூங்க போறயா?” என்றாள். நாகலிங்க பூவின் மணம் மயக்கியது. மாடி ஜன்னலில் நின்று கொண்டிருந்தபோது விஷ்ணுவின் கார் சீறிக்கொண்டு கீழே நின்றது. பத்து நிமிடத்தில் அம்மா மேலே வந்தாள். அவன் ஒரு வார்த்தையில் நடந்ததை சொன்னால் போதும் அம்மா புரிந்து கொள்ள. “கிருஷ்ணா, இன்னைக்கி வரை என் வாழ்க்கை எனக்கு வுருத்தியதில்லை, அது வுருத்தரமாதிரி பண்ணிட மாட்டேன்னு நினைக்கிறேன்”. “விஷ்ணு சொல்லலாமா அம்மா ?” அம்மா கை தூக்கி அவளை நிறுத்தினாள்.

“அவனை மேலே இருந்து பார்த்தியே, அப்பா வுனக்கு எப்படி இருந்தது?” அவனை பாய்ந்து கட்டிகொள்ளவேண்டுமாய் இருந்தது என்று சொல்லாமல் மொவ்னமாக நின்றாள். “கிருஷ்ணா,நம்மால் எங்க ஆற்றுப்பட முடிகிறதோ, அங்கே எதுவும் ஒரு பிரச்சனை இல்லை. புற வுலகம், புற வாழ்க்கை இதுக்கெல்லாம் மேல் நம் இடம்னு ஒன்னு இருக்கு. வுனக்கு நான் சொல்லனுமா? “அம்மா கீழே இறங்கி போய்விட்டாள்.

கிருஷ்ணா விஷ்ணுவை நினைத்தபோது, தன்னைவிட அவன் துடித்து போயிருப்பான் என்று தோன்றியது.அவள் கீழே வந்தபோது விஷ்ணு காலை நீட்டி நீண்ட திண்ணையில் வுட்கார்ந்திருந்தான். அம்மா திண்ணையின் சாய் மணையிலும், கதிர் எதிர் திண்ணையிலும் வுட்கார்ந்திருந்தார்கள். விஷ்ணுவின் கண்கள் அழுது சிவந்திருந்தது.

அவள் தயங்கி வாசலில் நின்றபோது, கதிர், ஒரு குழந்தையை பார்ப்பது போல அவளை பார்த்து சிரித்தார். கதிர் என்னை பார்த்து சிரிக்கிறார், சிரிக்கவேணாம்னு சொல்லு விஷ்ணு ” “கதிர், குழந்தையை பார்த்து ஏன் சிரிக்கிறீங்க ?’ என்றவன், வுடலை நேராக்கி, அவளை அணைத்துக்கொள்ள துடிப்பவனாய் நோக்கினான். ஓடி வந்து இறுக்கமாக அவனை கட்டிகொண்டாள் கிருஷ்ணா.

அம்மா சிரித்துக்கொண்டே காபி டம்பளருடன் வுள்ளே போனாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *