ஆராவமுது தன் டி.வி. சேனலின் வருமானத்தைப் பெருக்க வழி தேடிக்கொண்டிருந்தபோதுதான் செந்தில் அந்த யோசனையைச் சொன்னான்.
“அப்பா! எத்தனையோ பேருக்கு வெளியூருக்குப் போய் சுத்திப்பாக்க ஆசை. ஆனா வசதி கிடையாது. ஒவ்வொரு மாநிலத்திலும் ரெண்டு மூணு இடத்திலே பந்தயம் வெச்சு இழுத்தடிக்கலாம்!”
மலை ஏறி, பிறகு ஒரு கம்பியில் படுத்த நிலையில் ஆற்றைக் கடந்து, மற்றும் பிடிப்பிடியாக நெல்லை அள்ளி, (வழியில் இரு `பூதங்கள்’ அவர்களை மறித்து, பிடித்துத் தள்ள) சேற்றில் ஓடி, அதற்கென வைக்கப்பட்டிருந்த கூடையில் நெல்லை நிரப்பி – இப்படி மனிதர்களின் உடல்பலம் மனோபலம் இரண்டையும் ஒருங்கே பரிசோதிக்கும் போட்டி அது. அமெரிக்காவில் பார்த்த நிகழ்ச்சியின் அப்பட்டமான காப்பி.
பந்தயத்தில் ஜெயித்தால் பத்து லட்சம்!
பல கிலோமீட்டர் நீளத்திற்கு வரிசை பிடித்து நின்றார்கள் எதிர்கால லட்சாதிபதிகள்.
“பத்து வருடங்களாகியும் எங்களுக்குப் பிள்ளைப்பாக்கியம் இல்லை. அதற்கான சிகிச்சைக்குப் பணம் கிடைக்கும் என்ற ஆசையில்தான் இப்போட்டியில் சேர்ந்திருக்கிறோம்!” என்றாள் பூரணி.
பருமனாக இருந்தாள். கணவர் புஜபராக்கிரமத்துடன் இருந்தார். வயது நாற்பதுக்குள்தான் இருக்கும் என்றாலும், அவர்களால் ஒன்றாக ஓடமுடியுமா? இல்லை, விரைவாக நடக்கத்தான் முடியுமா?
`பாக்கிறவங்களுக்கு எல்லாரும் ஒரேமாதிரியாக இருந்தா அலுப்பு தட்டும்!’ என்ற செந்திலின் யோசனை அவர்களுக்குத் தெரியாது.
“நம்பளை போட்டியிலே சேர்த்துக்கிட்டாங்க!” அப்போதே குழந்தையைப் பெற்றெடுத்துவிட்டதுபோல் பூரணி குதித்தாள்.
அழகுப்போட்டியில் வென்ற இரு பெண்கள், விளையாட்டு வீரர்களான இரு இளைஞர்கள், குண்டும் ஒல்லியுமாக இரு ஆப்த நண்பர்கள் என்று பத்து ஜோடிகளும் வெவ்வேறு விதமாக இருந்தார்கள்.
“இரண்டு வயதான என் மகனுடைய இருதயச் சிகிச்சைக்கு வேண்டிய வசதி என்னிடம் இல்லை. அதற்காகத்தான் பெயர் கொடுத்தேன். என் உயிர்த்தோழி வந்தனாவும் என்னுடன் பங்குபெற வந்திருக்கிறாள்!” என்ற கல்பனா வேறு மாநிலத்திலிருந்து வந்திருந்தாள். கணினித்துறையில் பட்டம் பெற்றிருந்தாள். பூரணியைவிட பத்து வயதாவது இளையவளாக இருப்பாள்.
போட்டி துவங்கியது. பல கேமராக்கள் ஒவ்வொருவரையும் தொடர்ந்து ஓடியபடி இருந்தன. வார இறுதியில் ஒரு மாநிலத்திலிருந்து வேறொன்றிற்குப் போகவேண்டும்.
`கல்பனாவையும், வந்தனாவையும்பற்றி நாம் தவறாக முடிவெடுத்துவிட்டோம்!’ என்று பிற போட்டியாளர்கள் பொறாமையுடன் முணுமுணுக்கும் வகையில் ஆறில் நான்கு இடங்களில் அக்குழு முதலாவது இடத்தைப் பிடித்திருந்தனர்.
பூரணிக்கோ, அவள் எண்ணியதுபோல, இலவச சுற்றுலாப் பயணம்போல் இருக்கவில்லை அந்த அனுபவம். மூச்சு வாங்கியது. காலை விந்தித்தான் நடக்க முடிந்தது.
“அவங்களுக்கெல்லாம் வயசாகலே! குரங்குமாதிரி ஏறிக் குதிக்க முடியுது!” என்று பொருமினாள்.
“திரும்பப் போயிடலாமா?” என்று மனைவியைக் கேட்டார் பரசுராமன், அனுதாபத்துடன்.
“அதெல்லாம் முடியாது!” அவள் குரல் தீர்மானமாக ஒலித்தது.
ஏழாவது மாநிலத்தில், `இந்த இரண்டு விளையாட்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்!’ என்ற அறிவிப்பு இருந்தது.
அது மட்டுமா!
அதில் ஒன்றை முடித்ததும், அடுத்ததற்குப் போகமுடியாது, ஆங்கில எழுத்தான `U’ ஒரு கரும்பலகையில் வரையப்பட்டு இருந்தது. முதலில் போகும் குழு வேறு ஒரு குழு உறுப்பினரின் பெயர்களை மேலே எழுதி, தம் பெயரையும் பகிரங்கப்படுத்திவிட வேண்டும். அப்படிச் செய்தால், மேலே இருப்பவர்கள் இரண்டையும் முடித்தாகவேண்டும்.
(`இதெல்லாம் அவசியமாடா? துரோகமில்ல?’ என்று ஆராவமுது தயங்கியபோது, ` இந்தமாதிரி ஏதாவது ஸ்டண்ட் செஞ்சாத்தான் எல்லாரும் இதைப்பத்தியே பேசுவாங்கப்பா. நம்ப ரேடிங்க் மேலே போகும்,’ என்று அவரைச் சம்மதிக்க வைத்திருந்தான் மகன்).
`இது அசிங்கம்!’ என்று வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டு, ஒருவரும் கரும்பலகையில் மற்றவர் பெயரை எழுதவில்லை.
இறுதிச்சுற்று நான்கே குழுக்களுடன் ஆரம்பித்தது. உடலில் அடி, மிகவும் தாமதமாக வந்தார்கள் என்று மற்றவர்கள் விலக்கப்பட்டு இருந்தார்கள்.
“கால் விரல்லே உணர்ச்சியே இல்லை!” என்று முனகியபடி பூரணி மலைமேல் ஏறமுடியாது உட்கார்ந்தாள்.
இவ்வளவு தூரம் கடந்ததே அதிசயம் என்று தோன்றியது பரசுராமனுக்கு. “எதுக்கும்மா இந்த விபரீத விளையாட்டு? போதும்னு போயிடலாமே!” என்றார். அலைச்சலில் பூரணியின் இடுப்பில் சதை அவ்வளவாகத் தொங்கவில்லை என்பது மட்டும்தான் திருப்திகரமாக இருந்தது.
“அதெல்லாம் முடியாது!” அவள் குரல் மீண்டும் தீர்மானமாக ஒலித்தது. “அது ரெண்டும் எங்கே காணோம்?”
“யாரைக் கேக்கறே?”
“கல்பனா, வந்தானாவைத்தான்!”
“பாவம்! நாம்ப வந்த பஸ்ஸிலே அவங்களுக்கு இடம் கிடைக்கலே. வந்து சேர இன்னும் அரைமணியாவது ஆகும்”.
“அப்பாடா! இப்பத்தான் எனக்கு நிம்மதியாச்சு. கிளம்புங்க. ஓய்வா இருக்கவா இங்கே வந்திருக்கோம்?” என்று அவரை விரட்டியபடி, புதிய உற்சாகத்துடன் எழுந்தாள் பூரணி. கால்வலி போன இடம் தெரியவில்லை.
வழியில் ஒரு U!
வழக்கம்போல் அதைக் கடந்துபோன கணவரை, “கொஞ்சம் இருங்க,” என்று தடுத்தாள் பூரணி.
அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்து, “எதுக்கு பூரணி?” என்று தடுக்கப்பார்த்தவரிடம், “இது பந்தயம். இங்கே உணர்ச்சிங்களுக்கு இடம் குடுக்கக் கூடாது!” என்று மிரட்டலாகக் கூறியபடி, கல்பனா, வந்தனா என்று எழுதினாள்.
பஸ் நிறுத்தத்தில் கியூவில் தங்களுக்கு இருபது இடங்களுக்கு முன்னால் நின்றிருந்த கல்பனாவிடம், `என் மனைவிக்கு நிக்கவே முடியவில்லை. ஒங்க இடத்தைக் கொடுத்தா நல்லாயிருக்கும்,’ என்று அவர் கெஞ்சியபோது, சற்றும் யோசியாது, `அதுக்கென்ன!’ என்று பெருந்தன்மையுடன் பின்னால் போன இளம்பெண் பரசுராமனின் நினைவில் எழுந்தாள்.
வழக்கம்போல், அசுரவேகத்தில் பல தடைகளைக் கடந்துவந்த கல்பனா தன் குழுவின் பெயர் அங்கே எழுதப்பட்டிருப்பதைக் கண்டு அலறினாள்.
“ஐயோ! இப்படி எங்கள் முதுகில் குத்த அவர்களுக்கு எப்படி மனம் வந்தது!” என்று கதற ஆரம்பித்தாள்.
“திரு, திருமதி பரசுராமன்! வாழ்த்துகள்! நீங்கள் போட்டியில் முதலாவதாக வந்திருக்கிறீர்கள்!” என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் முகமெல்லாம் சிரிப்பாகக் கூறினார்.
`இந்த மனிதர் சொன்னதைக் கேட்டு அவங்க பேரை எழுதாம இருந்திருந்தா?’ என்று எழுந்த எண்ணத்தை ஒதுக்கினாள் பூரணி. பொது இடம் என்றுகூடப் பாராது, கணவரைக் கட்டி அணைத்துக்கொண்டு, முத்தமாரி பொழிந்தாள்.
அவரால் அவளுடைய மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள முடியவில்லை. குற்ற உணர்ச்சி மிகுந்தது.
அதற்கடுத்த வாரம் பரிசளிப்பு விழா. பத்து குழுக்களுக்கும் அழைப்பு அனுப்பி இருந்தார்கள். வந்தனாவின் வற்புறுத்தலால் கல்பனாவும் வேண்டாவெறுப்பாக வந்திருந்தாள். பூரணியைப் பார்க்கவே பிடிக்காது, தலையை அதீதமாகக் குனிந்துகொண்டாள்.
“பரிசுத்தொகையான பத்து லட்சம்..,” அறிவிப்பாளர் சற்று நிறுத்தி, ஒவ்வொரு குழுவினரையும் ஒரு பார்வை பார்த்தார்.
வாய் கொள்ளாத சிரிப்புடன், பூரணி எழுந்திருந்தாள்.
“அத்தொகை கல்பனா-வந்தனா குழுவிற்கு அளிக்கப்படுகிறது!”
மேடையில் அமர்ந்திருந்த ஆராவமுது தலையை ஆட்டினார், அதை அங்கீகரிக்கும் வகையில்.
“இதென்ன அநியாயம்! நாம்பதானே ஃபர்ஸ்ட் வந்தோம்!” என்று கணவரிடம் உரக்க முறையிட்டவளை “ஷ்!” என்று அடக்கினார் அவர்.
(`அநீதிக்கும் ஏமாற்றத்துக்கும் துணைபோகும் உங்கள் சேனலுக்கு இனி சந்தா கட்டமாட்டோம்’ என்று போட்டி முடிவை ஒருங்கே எதிர்த்த தொலைகாட்சி நேயர்களின் சீற்றத்துக்குப் பயந்து முடிவை மாற்றியதற்காக சேனலின் சொந்தக்காரரான ஆராவமுது தன்னைத்தானே பாராட்டிக்கொண்டார்.
`நம்ப நாட்டு ஜனங்க இன்னும் தர்மம், நியாயம்னு கெட்டியா பிடிச்சுக்கிட்டு இருக்காங்கப்பா. நான் அதை யோசிக்காம போயிட்டேன்!’ – செந்தில் தன் தோல்வியை ஒப்புக்கொண்டிருந்தான்).
“இப்போட்டியின் நோக்கம் உடல் வலிமை, மனவலிமை இரண்டை மட்டும் பரீட்சை செய்வதில்லை. மனிதத்தன்மை என்றும் ஒன்றிருக்கிறது! பிறருக்கு உதவி செய்யாவிட்டாலும், அவர்கள் காலை வாருவது என்ன தர்மம்?” யாரோ எழுதிக்கொடுத்ததை உணர்ச்சியுடன் பேசினார் ஆராவமுது . “சராசரி என்று எடுத்துக்கொண்டால், பத்து இடங்களில் ஏழு இடங்களில் முதல் இடம் பிடித்திருக்கிறது கல்பனாவின் குழு. திட்டமிடும் திறனாலும், எந்த நிலையிலும் நிதானத்தை இழக்காத குணத்தாலும் இறுதிச்சுற்றிலும் அவர்கள் வென்றிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால்..,” வெளிப்படையாகக் குற்றம் சாட்ட விரும்பாது, குறிப்பாக பூரணியைப் பார்த்தார்.
அவளுக்கு அவமானமாக இருந்தது. உதடுகளை இறுக்கிக்கொண்டு, கடைக்கண்ணால் கணவரை நோக்கினாள்.
ஒரு பெருமூச்சு எழுந்தது அவரிடமிருந்து. அது நிம்மதியை வெளிப்படுத்திய பெருமூச்சு!
குறுக்கு வழியில், நல்லவர் மனதை நோகடித்து… அப்படியாவது ஒரு குழந்தை பெற வேண்டுமா? பிறக்கும் குழந்தை ஏதாவது குறையுடன் பிறக்காது என்பது என்ன நிச்சயம்?
“போகட்டும், விடுங்க! இந்த ஒலகத்திலே எல்லாருமே ஏமாத்துக்காரங்களா இருக்காங்க, ” என்று அவரைச் சமாதானப்படுத்துவதில் இறங்கினாள் பூரணி.