“எழுந்திருங்க அப்பா…”
இனிப்பு வகைகளை உள்ளடக்கிய பொன் நிற அட்டைப் பேழையை, அருகேயுள்ள தொலைக்காட்சிப் பெட்டிமேல் வைத்துவிட்டு, கிதா, ஏதோ ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருந்த தந்தை அருணாசலத்தை, அதட்டல் பாவலாவில் கூவி, கையை பிடித்திழுத்தாள். வாசிப்பைக் கலைக்கும் எவரையும் கடுகடுப்பாய் பார்ப்பவர் அப்பாக்காரர். இப்போது, அந்தக் கலைப்பை ஏற்படுத்தியவள், அந்த வாசிப்பைவிடச் சுவையான மகள் என்பதால், முகத்தைச் சுருக்க வைத்து, உதடுகளை துடிக்க விட்ட அந்தக் கடுகடுப்பு, வாய் கொள்ளாச் சிரிப்பாய், மாறியது. அந்தச் சமயம் பார்த்து, கிதாவின் அம்மா பூரணி, யதேச்சையாக உள்ளறையில் இருந்து வெளிப்பட்டாள். கீதா, அம்மாவையும் கையைப் பிடித்திழுத்து, அப்பாவிற்கு இணையாக நிற்க வைத்துவிட்டு –
அவர்கள் முன்னால், நெடுஞ்சாண் கிடையாக விழுந்து, நான்கு பாதங்களையும், இரண்டு கரங்களால் தொட்டபடியே, “என்னை ஆசிர்வதியுங்கள்” என்றாள்.
அருணாசலம், கிதாவை குழந்தைபோல் தூக்கி, சிறுமிபோல் வளைத்து, இளம்பெண்ணாய் நிறுத்தினார். அலுவலகத்தில் நடக்கும் சின்னச்சின்ன பாராட்டுதல்களை, பெற்றவர்கள் இருவரையும், மாறி மாறிப் பார்த்தபடி, ஒப்பிக்கும் மகள், ஏதோ நல்ல செய்தி சொல்லப் போகிறாள் என்ற பூரிப்பில் பூரித்துப் போனார். மகளின் முகம் வழியாய் கண்களை ஊடுருவவிட்டு, கடந்து வந்த காலத்தை, நிகழ்காலத்தில் நிறுத்தி அசைபோட்டார்.
இவள் முப்பாட்டி காதுகள் இரண்டும், ஊஞ்சல் சதைக்கோடுகளாகி, அதில பாம்படங்கள் தொங்கி, அவள் நடைக்கேற்ப ஆடிக் குலுங்க, கணவனோடு கழனிகளிலும், கம்மாக்களிலும் விவசாயக் கூலியாக இருந்தவள். இவள் பாட்டி, இதே சென்னை நகரில், ஒரு மாளிகைக்கார முறைமாப்பிள்ளைக்கு வாழ்க்கைப்பட்டு, தொள்ளக்காது… தொள்ளக்காது…’ என்று வர்ணித்தபடியே, வேடிக்கை பார்த்த கூட்ட மொய்ப்பை தாங்க முடியாமல், கணவனின் சம்மதத்தோடு, தொங்கிய சதைக்கோடுகளை அறுத்து, இருபக்கத்து ஒட்டைகளையும் இணைத்து, கம்மல் போட்டுக் கொண்டவள். ஆனாலும், அந்தக் காதுகள் அறுவைச் சிகிச்சை தடயங்களோடு தோன்றின. இதோ நிற்கிற இவள் அம்மாவோ, காதுகளில் எந்த வில்லங்கமும் இல்லாமல், கம்மல்களை போட்டிருப்பவள். இந்தக் கிதாவோ, வளையங்களை போட்டிருக்கிறாள். மூக்கில் ஒட்டைபோட்டு, அதை தங்கத்தாலோ வைரத்தாலோ அடைக்க வேண்டிய அவசியம் இல்லாதவள். அதுவும், சின்ன வயதிலேயே காது குத்தியதால், இந்த வளையங்கள் உள்ளன. இவள் பள்ளிக்கூடக் காலத்தில் பேசிய பேச்சை வைத்து அனுமானித்தால், அப்போது இணங்கி இருக்கமாட்டாள். இந்தக் காதுகளும் மூக்கைப்போல் இருந்திருக்கும். மாதம் நாற்பதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கினாலும், கைகளில் வளையல்களோ, உதட்டில் செயற்கை செஞ்சிவப்போ இல்லாதவள். அம்மாவின் வற்புறுத்தலால் கழுத்தில் மட்டும், மெல்லிய செயின் அணிந்திருக்கிறாள். இந்த “இழப்புகளுக்கு ஈடு செய்வதுபோன்ற முக லட்சணம்.
அருணாசலம், ஏறுமுகமான சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, மகளை பெருமிதமாகப் பார்த்தபடியே கேட்டார்.
‘ஏதோ நல்ல செய்தி கொண்டு வந்திருக்கேன்னு நினைக்கேன். சிக்கிரமா சொல்லம்மா! நல்லதை உடனடியாகவும், கெட்டதை மெள்ள மெள்ளவும் சொல்லணும்.”
கிதா, எழுந்து அந்தப் பேழையைப் பிரித்து, ஒரு லட்டை அப்பாவின் வாயிலும், இன்னொரு மைசூர் பாக்கை அம்மாவின் வாயிலும் திணித்தபடியே சிரித்தாள். அந்தச் சிரிப்பு, அப்பாவை தொற்றிக் கொண்டபோது, அம்மாவை துடிக்க வைத்தது. மனதிற்குள் பேச வைத்தது.
‘அடுத்த சாதிக்காரன், எவனையும் காதலித்து, அந்தச் செய்தியை சொல்லப்போகிறாளா… பதிவுக் கல்யாணம் செய்துவிட்டு, மாப்பிள்ளைப் பயலை வீட்டுக்கு வெளியே நிறுத்திவிட்டு, இங்கே ஆழம் பார்ப்பதற்காக, இப்படி காலில் விழுகிறாளோ… எந்தப் சாதிக்காரப் பயலாய் இருப்பான்? இவளோடு காரில் வந்து, வீட்டில் நொறுக்குத் திணி சாப்பிட்டுவிட்டுப் போகிறானே தேவர் பையன் நரேந்திரன்… அவனா? அல்லது இவளோடு சேர்ந்து லண்டனுக்கு போனானே வன்னியப் பையன் சேகரன்… அவனா? அல்லது டை கட்டிக்கொண்டு வருவானே அய்யரோ அய்யங்காரோ… பாலாஜி… அந்தப் பயலா? ஒருவேளை, இளம் வயதிலேயே எடுத்த எடுப்பிலேயே ஆராய்ச்சி டைரக்டராய் இருக்கானே அரிஜனப் பையன் மனோகரன். அவனா இருக்குமோ?
இவன்களுல எவனாவும் இருக்கப்படாது. சொந்தச் சாதியை சேர்ந்தவனாய் இருக்கணும். அப்படியே இல்லாட்டியும், இவன்களுல அந்த அரிஜனப் பையனா மட்டும் இருக்கப்படாது.’
அம்மாக்காரி படபடப்பாய், மகளைப் பார்த்துவிட்டு, வெளியே எட்டிப் பார்த்தாள். எவனும் காம்பவுண்டு கேட்டுப் பக்கம் பதுங்கி நிற்பதுபோல் தெரியவில்லை. ஒருவேளை, நட்சத்திர ஹோட்டலுல எதுலயும் ரூம் போட்டு, தங்கியிருப்பாங்களோ? வீட்ல ஒப்புக்கு சொல்லிட்டு, அந்த ஹோட்டலுக்கு திரும்பப் போறாளோ? இந்த துக்கச் சேதியைத்தான், நல்ல சேதியா சொல்லப் போறாளோ…’
கிதாவும், தன்னை அறியாமலே, அம்மாவின் வயிற்றெரிச்சல், வாயெறிச்சல் ஆகும்படி பீடிகையோடு பேசினாள்.
“எங்க கம்பெனி டைரக்டர் மனோகரன் இருக்காரே, அவர் இன்றைக்கு ஒரு நல்ல செய்தி சொன்னார். என் உள்ளுணர்வு எதிர்பார்த்த செய்திதான்.”
அருணாசலம், அமைதியான ஆவலுடன் மகளைப் பார்த்தபோது, பூரணி, துள்ளிக் குதிக்காத குறையாக, “என்னடி சொன்னான்… என்னடி சொன்னான்…” என்று மாறி மாறிச் கேட்டாள். அவன், இவளை காதலிப்பதாகச் சொல்லி, இவள் அதை ஏற்றுக் கொண்டிருப்பாள் என்ற அனுமானம்.
எளிமையான அம்மா, இப்படி, காட்டுமிராண்டித் தனமாய் கத்துவதைப் பார்த்ததும், கீதா, அவளை புதிராய் பார்த்தாள். தாய்க்காரி மீண்டும் கத்தினாள்.
“அந்தப் பயல் என்னடி சொன்னான்? என்ன இழவச் சொன்னான்? சொல்லுடி…”
“எவரையும் நாகரீகக் குறைவாய் பேசாதம்மா. அதுலயும் மனோகரன் பத்தரை மாத்துத் தங்கம். சே… பாதி சந்தோஷத்தை கெடுத்திட்டியே…”
“அவள் கிடக்காள். நீ சொல்லம்மா…”
ஆனாலும், அருணாசலத்திற்கு, மனைவி , கேட்பதன் பொருள் புரிந்தது. அதனால் அவரது கம்பீரமான குரல், லேசாய் நடுங்கத்தான் செய்தது. பெற்றெடுத்த மகளையே, தன்னைப் பிறப்பித்த தாயாக்கி, அவளைக் கெஞ்சாக் குறையாய் பார்த்தார். பல திரைப்படக் காட்சிகள், மனத்திரையில் ஒலியும் ஒளியுமாய், அவர் குரலை நடுங்க வைத்து, மனதை பாதி இருளில் மூழ்க வைத்தது.
கிதா விளக்கினாள்.
“எங்க கம்பெனிக்கும், லண்டனில் உள்ள ஒரு சர்வதேச கம்பெனிக்கும் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பதை, ஏற்கெனவே உங்ககிட்ட சொல்லி இருக்கேன். ஆண் பெண் ஒவ்வொரு வருக்கும் கருமுட்டையிலயும், விந்திலும் இருக்கக்கூடிய நாற்பத்தாறு குரோமோசோம்களில், நாலு கோடியே பத்து லட்சம் கேரக்டர்கள், அதாவது இயல்புகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டிருக்கு. இந்த குரோமோசோம்களைப் பிளந்து, உயிர் என்பது என்ன? அதுவும், ஆன்மாவும் ஒன்றா? என்று கண்டறியும் ஆராய்ச்சி ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கு.”
கிதா, தான் சொல்வது பெற்றோருக்கு புரிகிறதா என்பதுபோல், பேச்சுக்கு தாற்காலிக இடைவெளி கொடுத்து அவர்களை ஆசிரியதனமாகப் பார்த்தாள். அவர்களுக்கு புரிகிறது என்று அனுமானித்து, அதே குரல் வேகத்தில் பேசினாள்.
“இன்னொரு பக்கம், இந்த குரோமோசோம்களில் எந்த வகையான ஜீன், இன்சுலின் உற்பத்தியை ஒரு கட்டத்தில் நிறுத்தி விடுது… அதுக்கு மாற்று வேறு குரோமோசோம்களில் இருக்குமா? என்பதை கண்டறிவதற்கும் ஒரு முயற்சி நடக்கிறது. செயற்கை இன்சுலின் தயாரிக்கும் எங்க கம்பெனி, அந்த சர்வதேச நிறுவனத்தோட ஒரு கொலாபரஷேன், அதாவது கூட்டுத் தயாரிப்பு செய்வதற்கு ஒரு ஒப்பந்தம் போட்டது. இதுக்காக, எங்க கம்பெனியில் அகில இந்திய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து பேரில் நானும் ஒருத்தி. அதுவும் ஒரே பெண். லண்டனில் மூன்று வருட ஆராய்ச்சி செய்யணும்.”
தந்தை பிரமிப்பாயும், தாய், தவிப்பாயும் மகளைப் பார்த்தபோது, கிதா தொடர்ந்தாள்.
“எந்த உயிருமே, ஆரம்பத்தில் ஒரே ஒரு செல்லுலதான் துவங்குது. அப்புறந்தான் படிப்படியாய் கோடிக்கணக்காக மாறுது. ஆனால், அந்த ஒரே செல்லுக்குள்ளே, கம்யூட்டர் புரோக்கிராம் மாதிரி, இன்னின்ன காலத்தில், இன்னின்ன மாறுதல் அல்லது வளர்ச்சி தளர்ச்சி ஏற்படணுமுன்னு இருக்குது. ஒரே செல்லாய் இருக்கும்போது, பார்க்கிறதுக்கு ஒரே ஜீனாய் தோன்றுகிற ஆலமரம் வேறு விதமாகவும், குழந்தைக்கரு, வேறு விதமாகவும் மாறுது. மானுடத்தைப் பொறுத்த அளவில், ஒவ்வொருத்தர் குரோமோசோம்களில் உள்ள ஜீன்களில், மூன்று கோடி ஆண்டுகால நமது முன்னோர்களின், மனவோட்டங்கள் பதிவாகியுள்ளன. இதை வைத்து, மானுட வரலாற்றையும் கண்டுபிடிக்கலாம். எங்க கம்பெனிய பொறுத்த அளவில், இன்சுலின் சம்பந்தப்பட்ட குரோமோசோமின் ஜீனே முக்கியம். இதன் மூலம் நீரழிவுக்கு நிரந்தர தீர்வு காணும் குரோமோசோமை கண்டுபிடிப்பதே எங்கள் ஆராய்ச்சி. ஆனாலும், நான் கேட்டுக் கொண்டபடி, எய்ட்ஸ் கிருமிகளை எதிர்த்துப் போராடுற இயல்பு எந்த குரோமோசோமிலாவது இருக்குதா என்கிறதையும் ஆய்வில் சேர்க்கணுமுன்னு, மனோகரன் சார்கிட்ட சொல்லியிருக்கேன். அவரும், கம்பெனி நிர்வாகத்துக்கு எழுதுவதா ஒப்புக் கொண்டிருக்கிறார். இன்னும் நாலு நாளையில் விசா கிடைச்சுடும். அநேகமாய் அடுத்த வாரம் புறப்படணுமாம்.”
அருணாசலம், மகளை அலுங்காமல், குலுங்காமல் அசைவற்றுப் பார்த்தார். அவளை மேல்நோக்காய் பார்த்தபடியே அதிசயித்து நின்றார். ஆனால், அம்மாக்காரிக்கு, உடனடியாய் ஒன்று தட்டுப்பட்டது. மனதிற்குள் பம்பரமாய், வட்ட வட்டமாய் சுற்றிய அந்தச் சுற்று, அவள் நாக்கையும் சுழல வைத்தது. ஒரு அபாய எச்சரிக்கையை கணவருக்கு எடுத்துரைத்தது.
“ஏங்க… அவளுக்குத்தான் அறிவில்லன்னா… உங்களுக்குமா இல்ல? இப்பவே இவளுக்கு இருபத்தொன்பது முடியப்போகுது. திரும்பி வரும்போது முப்பத்திரண்டு முடிஞ்சுடும். எவன் கட்டிக்க வருவான்? இப்பவே வயசாயிட்டுதுன்னு பல பயல்களும், அவன் அப்பன்மாரும், அம்மாமாரும் இங்க வந்து நொறுக்குத்தினி தின்னுட்டு, அப்புறம் கிணத்துல விழுந்த கல்லா கிடக்காங்க… இவள் சொன்னது நல்ல செய்தியாக்கும்…”
அம்மாவை நெருங்கி, கோபமாக பேசப்போன மகளுக்கும், வாய் துடிக்க நின்ற மனைவிக்கும் இடையே, வலது கையை எல்லைக்கோடாய் நீட்டியபடியே, அருணாசலம், கண்களை மூடினார். மகளின் மகிழ்ச்சியை அதிகப்படியாய் பகிர்ந்து கொண்ட அவருக்கு, இப்போது அது ஒரு துக்கப் பகிர்வாகத் தோன்றியது. மனைவி சொல்வதில், நியாயம் இருப்பதுபோலவும் தோன்றியது.
அருணாசலமும், ஒரு முடிவுக்கு வந்தார். அதைக் காட்டும் வகையில், மகளின் இரண்டு கரங்களையும் தனது இரண்டு கரங்களில் ஏந்தியபடியே, அவளை சோபா செட்டில் உட்கார வைத்தார். எதிர்முனை ஒற்றைச் சோபாவில் அமர்ந்து, அதன் சக்கர நாற்காலிகளை நகர்த்தியபடியே, மகளுக்கு நெருக்கமாக வந்தார். ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு, எப்படி பாடம் நடத்துவாரோ, அப்படி, ஏற்ற இறக்கமாய், அவ்வப்போது தன் பேச்சு எடுபடுகிறதா என்று மாணவர்களைப் பார்த்ததுபோலவே, மகளையும் பார்த்தபடியே, முன்னுரையும், பொருளுரையும், முடிவுரையுமாய் பேசத் துவங்கினார்.
“வட சென்னையில், பினவாடை கொண்ட கல்லறைச் சாலையில், ஒற்றை அறையில், ஒண்டிக் குடித்தனமாய் வாழ்ந்தோம். வேலைக்காரி வைக்க முடியாத நிலைமையில், உன் அம்மா, முறைவாசல் என்ற பெயரில் வாரம் ஒருமுறை சாக்கடை “காவாயை’ கழுவிவிட்டு, கழிவறையையும் சுத்தம் செய்தவள். உள்ளே படுத்தால், மூட்டைப் பூச்சி கடிக்கும். வெளியே படுத்தால் கொசு கடிக்கும். இந்த ரெண்டுக்கும் ரத்தம் கொடுத்து வாழ்ந்தோம்.”
“என்னப்பா நீங்க… நானும், அதே இடத்தில் பிறந்து வாழ்ந்தவள்தானே… இப்போ அதுக்கென்ன?”
“நீ அங்கே வளர்ந்தே. ஆனால், வாழல. இப்படி வறுமைக் குப்பை வீட்டுல வாழ்ந்த எங்கள இந்த பங்களாவுல வாழ வைக்கிற… பஸ்ஸுக்கு கால் கடுக்க நின்ற எங்களை, ஏ.சி. கார்ல போக வைக்கிறே… தெருவுல சுக்குக் காபி குடித்த எங்களை, இப்போ பழரசம் குடிக்க வைக்கிறே… வாத்தியார்தானே என்று என்னையும், இவளையும் ஏளனமாய்ப் பார்த்த, உறவுக்காரங்கள பிரமிப்பாய் பார்க்க வைத்திருக்கே…. இதெல்லாம் நீ போட்ட பிச்சை…”
கீதா, இருக்கையை விட்டு எழுந்த வேகத்தில், அருணாசலம் அமர்ந்திருந்த சக்கர நாற்காலி ஒற்றைச்சோபா இருக்கை, பின்னோக்கி நகர்ந்தது. கிட்டத்தட்ட அவர் கிழே விழப்போனார். எப்படியோ சமாளித்து உட்கார்ந்தார். தந்தை தடுமாறியதோடு, குரலும் தழுதழுத்தபோது, கிதா, தனது தோளில் கிடந்த துப்பட்டாவை எடுத்து, தரையில் வீசியபடியே கத்தினாள்.
‘என்னை ஏன் அந்நியப்படுத்துlங்க? நீங்க பெற்ற மகள் நான். பிச்சை கிச்சைன்னு ஏன் பெரிய பெரிய வார்த்தையா பேகறீங்க… நீங்க ரெண்டு பேரும், என்ன படிக்க வைக்கிறதுக்கு பட்டபாட்டை மறக்கிற பாவி இல்ல நான். அம்மா, என்னை காலையில நாலு மணிக்கே எழுப்பிவிட்டு, காபி கொடுக்கிறதுக்காக, அந்தச் சமயத்துல எங்கே துங்கி விடுவோமோன்னு… ராத்திரி முழுதும் தூங்காம இருந்தது எனக்குத் தெரியும்பா… அப்படித் தப்பித்தவறி அம்மா தூங்கினால், நீங்க அம்மாவை திட்டுன திட்டும் இன்னும் காதுல ஒலிக்குது… இப்படி பேசுவீங்கன்னு தெரிந்தால், எம்.எஸ்.சி. பயோ டெக்னாலஜி முடிச்சுட்டு, உயிரியலில் டாக்டர் பட்டமும் வாங்கியிருக்க மாட்டேன்… இப்படிப்பட்ட சம்பளத்தையும், சகல வசதிகளையும் தருகிற இந்த கம்பெனியில சேர்ந்திருக்கவே மாட்டேன். என்னப்பா நீங்க… பெத்த கடன்னு ஒண்ணு உண்டுன்னா, பிறந்த கடன்னு ஒண்ணு கிடையாதா? உங்க மகளைப் போய் பிச்சை போடுறதாய்…”
கிதா, அழுகையை மறைப்பதற்காக, அப்பாவிற்கு முதுகு காட்டியபோது, அம்மா, அவளை, தன்மீது சரித்துக் கொண்டாள். தந்தையும் கிதாவின் முதுகைத் தட்டிக் கொடுத்தபடியே, தனது முன்னுரையையே முத்தாய்ப்பாய் முடித்தார்.
“நீ, இன்னொரு பிச்சையும், எங்களுக்கு போடணும் என்கிறதுக்குத்தான் அப்படிச் சொன்னேன் கிதா…”
கிதா, அம்மாவை கிழே விழ வைக்காத குறையாய், சட்டென நிமிர்ந்து, தந்தையை நேருக்கு நேராய்ப் பார்த்தாள். அவரோ, அவள் அப்படிப் பார்க்கப் பார்க்க, கண்களைத் தாழ்த்தித் தாழ்த்திப் பேசினார்.
“அடுத்தடுத்துப் பிறந்த குழந்தைகள், அதே மாதிரியே செத்தபோது அல்லது கார்ப்பரேஷன் கவனிக்காத சுற்றுப்புறச் சூழலில் கொலை செய்யப்பட்டபோது, கோவில் குளம்போய் தவமிருந்து பெற்றது மாதிரி பிறந்த மகள் நீ. ஒரே மகள். எனக்கோ, இவளுக்கோ, இந்த பங்களா பெரிசில்ல… இந்த காரும் முக்கியமில்ல. நீ ஐவரில் ஒருவராய் தேர்ந்தெடுக்கப்பட்டதும் முக்கியமில்ல.”
அருணாசலம், மேற்கொண்டு பேசமுடியாமல் திண்டாடியபோது, கிதா, அடி எடுத்துக் கொடுத்தாள்.
“அப்போ உங்களுக்கு எதுதான் முக்கியம்? சொல்லுங்கப்பா… கொஞ்சம் நேரத்துக்கு முன்னே, நல்ல செய்தியை உடனடியாய் சொல்லணுமுன்னு நீங்கதானே சொன்னிங்க… உங்களவில் எது நல்ல செய்தியோ அதைச் சொல்லுங்க?”
“நீ எதுவும் குறுக்கேகப் பேசாதே பூரணி. கிதா! அம்மா சொன்னதுமாதிரி, நீ இங்கேயே கல்யாணம் செய்து எங்களை தாத்தா பாட்டியாக்கணும். இதுதாம்மா எங்களுக்கு பெரிசு… இதுதாம்மா நான் ஒங்கிட்ட கேட்கிற பிச்சை…”
கிதாவுக்கு, அழுவதா சிரிப்பதா என்று புரியவில்லை. “தந்தையும் தாயும் ஈன்ற பொழுதிலும் பெரிதும் உவக்கும் பெற்றோர்களாய், மகிழ்ச்சியில் திக்கு முக்காடி திணறிப் போவார்கள் என்ற எதிர்பார்ப்பு, ஒரு உருவமாகி, எதிர்முனையில் தனியாய் நின்று, அவளைப் பார்த்து கைகொட்டிச் சிரிப்பதுபோல். தோன்றியது. அவளுள் இருந்த ஒரு விஞ்ஞானப்பெண், கண் முன்னால், பேயாய், பிசாசாய், பிள்ளைக் குட்டி பெற்ற எலும்புக் கூடாய் உருவம் காட்டியது. முதல் தடவையாக பெற்றோரிடமிருந்து அந்நியப்பட்டது போலவும் ஒரு உணர்வு ஏற்பட்டது. அப்படி ஏற்பட ஏற்பட, ஆத்திரமும் அழுகையும் மாறி மாறியும், ஒரே சமயத்திலும், வரத் துவங்கின.
சிறிது நேரம் வாசல் பக்கம் நடந்தாள். தேக்கு மரக்கதவின் குமிழ்களைப் பிடித்தபடியே, அசைவற்று நின்றாள். ஆராய்ச்சியில், குறிப்பாக மார்க்ஸும், ஏங்கெல்ஸும், திஸிஸ் – ஆன்டி திஸிஸ். அதாவது வாதம், எதிர்வாதம் என்கிற முறையில், எதிரும் புதிருமாய் வாதித்தார்களே அப்படி, தன் தரப்பிலும், பெற்றோர்கள் தரப்பிலும் திருமண விவகாரத்தை அலசிப் பார்த்தாள். இதனால், ஆத்திரம் அடங்கவில்லை என்றாலும், அது அழுகையை நிறுத்தியது. அதேசமயம், அசைக்க முடியாத ஒரு உறுதியைக் கொடுத்தது. ஆரம்பத்தில் அணையப் போவதுபோல் தோன்றும் திக்குச்சி நெருப்பை, குவிந்து பிடித்தால் சுடர் விடுவதுபோல், அவள் ஆசாபாசங்கள் கொண்ட மகளாகவும், அவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு விஞ்ஞானியாகவும் மாறி மாறிப் பேசினாள். முதல் கட்டமாக, ஒரு கேள்வி கேட்டாள்.
“நீங்க எடுத்துக்கிட்ட கல்யாண முயற்சிக்கு நான் எப்போதாவது தடையாய் இருந்திருக்கேனா அப்பா? உங்களால் முடியாவிட்டால், நான் என்னப்பா செய்ய முடியும்?”
சின்னச் சின்ன மாணவர்களிடம், பிரம்பும் கையுமாய் கேள்வி கேட்டே பழகிய தந்தையின், தலையும் இப்போது தாழ்ந்தது. ஆனால், பூரணி, அவர் தலைக்குமேல், தனது தலையை தூக்கியபடியே, புலம்பினாள். மகளுக்கு தெரிந்த சங்கதிதான்.
“உன் படிப்பே உனக்கு எதிரியாய் போயிட்டுதேடி… ஒரு பொண்ணு படிக்காட்டாலும் தப்பு… படித்தாலும் தப்பு… என்கிற மாதிரி ஆகிப்போன காலமாச்சே, நாங்களும், எத்தனை பத்திரிகை உண்டோ, அத்தனை பத்திரிகையிலும், விஞ்ஞானியாய் இருப்பவள், நாற்பதாயிரம் ரூபாய் சம்பளத்தோடு சகல வசதியோடயும் வாழ்கிறவள்… வயது இருபத்தெட்டுன்னு கொடுத்துத்தான் பார்த்தோம். வயசைப் பார்த்த உடனே, வயசைப் போட்டா வரமாட்டாங்கன்னு ஒரு பத்திரிகை விளம்பர மேனேஜர் சொன்னது சரியாப் போச்சே. இந்தக் காலத்துல _ இந்தக் காலத்துல என்ன இந்தக் காலத்துல… எந்தக் காலத்திலயும், பெண்டாட்டி என்கிறவள், தன் படிப்புக்கும், சம்பளத்துக்கும் கிழே இருக்கிறவளாகத்தான் இருக்கணுமுன்னு, எல்லா ஆண்களும் நினைக்கிறாங்க… நீ ஒரு பி.எஸ்ஸி., பையனைக்கூட கட்டிக்கத் தயாருன்னு சொன்னது எங்களுக்கு புரியுதும்மா. ஆனால், அது அந்தப் பயல்களுக்குப் புரியலி யே… நாங்க என்னதாம்மா செய்வோம்? வார பயல்களே கொஞ்சம். அப்படி வாராவனும்…”
அம்மாக்காரி, தடுமாறினாள். அவளைப் பெற்றபோது ஏற்பட்ட பிரசவ வலியைவிட, இப்போது அவள் வாயும் வயிறும் அதிகமாய் வலித்தது. கையறு நிலையில், கைகளை விரித்தாள். அவளால் பேசமுடியவில்லை. கிதா தனக்கும், அம்மாவுக்கும் சேர்த்துப் பேசினாள்.
“ஏம்மா… வார்த்தைய விழுங்குறே… நான் நாற்பதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குறதைப் பார்த்துட்டு, முப்பதாயிரம் ரூபாய் பயல் ஒடுறான்… நான் அஞ்சரை அடி இருக்கிறதைப் பார்த்துட்டு, அதுல ஒரு அங்குலம் குறைஞ்ச பய உதாசினப்படுத்தினான். என்னோடத் தகுதிகளை கவனமாய்க் கேட்ட, ஒரு எம்.எஸ்ஸி., பயலும், அவன் அப்பனும், நான், அடிக்கடி சர்வதேச மகாநாடுகளுல கலந்து கொள்வதற்கு லண்டன், நியூயார்க், பிரான்சு, டோக்கியோன்னு ஆகாயத்தில் பறந்து போவதை, அங்குமிங்கும் அலையுற பெண்ணாய் நினைத்து, டிபன் சாப்பிடாமலே, அரண்டு மிரண்டு ஒடுறான். முப்பது வயசுப் பயல்கூட, இருபத்திநாலு வயசுப் பெண்ணைத்தான் கேட்கிறான். எனக்கு இருபத்தெட்டு இருக்கப்படாது என்கிறான். பதினைந்தாயிரம் சம்பளம் வாங்குகிற ஒரு மக்குப் பையன், தான் வாங்குற சம்பளமே குடும்பம் நடத்த போதுமுன்னும், நான், பதவியை ராஜினாமா செய்தால், கட்டிக்கத் தயாராய் இருப்பதாகவும், அம்மா மூலம் தூது விடுறான். நீங்க ரெண்டு பேரும் வாய்மூடி இருந்ததால்… நானே அவங்களை கெட்-அவுட்டுன்னு சொல்ல வேண்டியதாயிட்டுது. என்னம்மா நியாயம் இது? மணமகனைவிட, மணமகள் வயசுல, படிப்புல, சம்பளத்துல, குடும்பத் தகுதியில கீழே இருக்கணுமுன்னு, அந்தப் பயல்களும், அவன் பெற்றோரும் நினைத்தால், அதுக்கு நான் என்னம்மா செய்வேன்?”
தந்தையின் தலை, இன்னும் நிமிரவில்லை. தாய்க்காரி, சிறிது ஆடிப்போனாள். மனதில், திருப்பதி ஆண்டவனை நினைத்துக் கொண்டாள். உடனே, அவளுள் ஒரு ஜோதிடர் சொன்னது நினைவுக்கு வந்தது. திருப்பதி சாமிக்கு மனதுக்குள் நன்றி சொன்னபடியே, மகளுக்கு ஆறுதல் சொன்னாள்.
“உன் ஜாதகத்துல சர்ப்ப தோஷமாம். நானும், ஒரு மாத காலமா பாம்பு புற்றுல முட்டையும் பாலும் வச்சுட்டு வாறேன். திருப்பதி ஆண்டவனுக்கு தலையை மொட்டை அடிக்கிறதாய்….”
“என் தலையையா? உன் தலையையா?”
“ஏடாகோடமாய் பேசாதேடி. சொல்றத கேளுடி. உனக்கு கல்யாணம் ஆகணுமுன்னு திருப்பதியில மொட்டை போடப்போறேன். தாயாருக்கு பட்டுப்புடவை சாத்தப்போறேன். காளஹஸ்தியில நாகதோஷ நிவர்த்திக்காக ரெண்டாயிரம் ரூபாய் செலவில, பரிகாரம் நடத்தப்போறேன். பழனியில அங்கப் பிரதட்சண்யம் செய்யப்போறேன். எல்லாம் நல்லபடியா நடக்கும் பாரு…”
“நீ அப்படி செய்யுறதுக்கு, என்னால ஆதரவு கொடுக்க முடியாட்டாலும், ஆட்சேபிக்க மாட்டேம்மா. ஆனால், அத்தனை நேர்த்திக் கடன்களையும், நான் லண்டனிலிருந்து, ஒரு நல்ல விஞ்ஞானியாய், நம்ம நாட்டுக்கு பேர் வாங்கிக் கொடுக்கிற பெண்ணாய் வரணுமுன்னு, உன் நேர்த்திக் கடன் நோக்கத்த மாத்திக்கோ… எனக்கு சர்ப்ப தோஷத்தைப் பற்றி கவலை இல்லை. அது, ஊர்கிற பிராணியாய் மாறுகிறதுக்கு அதன் முட்டையில எந்த குரோமோசோம் காரணமுன்னு கண்டுபிடிக்கிறதுதான் எனக்கு முக்கியம்.”
“பார்த்திங்களா… ஒங்க மகள் பேசுற பேச்சை. கல்யாணம் கட்டிக்க மாட்டாளாம்.”
“கட்டிக்க மாட்டேன்னு, நான் எப்பவும் சொல்லல. சாதி தடையில்லைன்னு விளம்பரத்துல சேர்க்கச் சொன்னேன். உங்களால, அந்த வட்டத்தை தாண்ட முடியல. இப்போ டுலேட். நான், இப்போதைக்கு மணமேடையில உட்காரப் போற பெண்ணாய் இருக்கப்போறதில்லை. லண்டனில், சோதனைக் கூடத்துல, ஒரு விஞ்ஞானியாய் நிற்கப்போகிற பெண். காலம் கடந்துட்டு. இனிமேல், கல்யாணம் பேச்சை எடுக்காதிங்க… ஒரு வகையில என்னைப் பார்த்து அரண்டு மிரண்ட பயல்களுக்கு நான் நன்றி சொல்லணும். ஏன்னா… அவங்களுடைய உதாசீனத்துலதான், எனக்கு ஒரு உறுதி ஏற்பட்டது. நீங்க, தாத்தா பாட்டி கனவை விட்டுட்டு, புகழ் பெறப்போகிற… புகழ் கிடக்கட்டும் புகழ். அது இந்த காலத்துல ஒரு தாதாவுக்கு கூட இருக்குது… மனித குலத்தை கொல்லாமல் கொல்லும் நீரழிவு நோய்க்கு ஒருவேளை எய்ட்சுக்கும் நிரந்தரமான மருந்து கண்டு பிடிக்கப்போகிற மகளோட பெற்றோருன்னு பெருமைப்படுங்க. இதுக்காக வேணுமுன்னா நேர்த்திக் கடன் செய்யுங்க. நான் சொல்றது சரிதானே அப்பா?”
அருணாசலத்தின் தலை, மெள்ள மெள்ள நிமிர்ந்தது. கலங்கிய கண்கள், வறண்டன. துடித்த புருவங்கள், நிலை கொண்டன. உதடுகளை கடித்த பற்கள், உள்ளே போயின. அவளைப் பொருள்பட பார்த்தார். பிறகு, அவரது கரங்களில் ஒன்று, மகளின் வலது தோளில் தொங்கியது. இடது கரம், அவள் தலையை கோதிவிட்டது. உடனே, சிறிது விலகி நின்று, மகளையே பார்த்தார். பள்ளியிலும், கல்லூரியிலும் பல்கலைக்கழகத்திலும், காகிதச் சான்றிதழ்களையும், வெள்ளி மெடலையும், தங்க மெடலையும் பெற்றவள். பல்கலைக்கழக நேர்காணலிலேயே, பிரபல கம்பெனிக்கு, விஞ்ஞான ஆராய்ச்சியாளராய் தேர்ந்தெடுக்கப்பட்டவள். அவள் சொல்வதும், அவள் வகையில் சரிதான். ஆனாலும்
அப்பா தயங்கிப் பார்த்தபோது, கிதா தயங்காமல் சொன்னாள்.
“எனக்கும், உங்களை சந்தோஷப் படுத்துறதுக்கும், தாய்மை அடைவதற்கும் ஆசைதான். ஆனால், அதுக்கு என் ஆராய்ச்சியை விலையாய் கொடுக்க முடியாது. அத்தனை வறுமையிலும் பிளஸ் டுவிலேயே நிறுத்தாமல், எம்.எஸ்ஸி., படிக்க வைத்து, வேலைக்கு போன்னு ஒரு வார்த்தைகூட சொல்லாமல், ஆராய்ச்சியும் செய்ய வைத்த ஒரு வித்தியாசமான பெற்றோரின் வித்தியாசமான மகள் நான். அந்தக் காலத்துல, கோபியர்கள், கண்ணனை தங்களுடைய மானசீக அகக் கணவனாகவும், கை பிடித்தவனை புறக் கணவனாகவும் நினைப்பார்களாம். இந்தக் காலத்தில்கூட, தன்னல மறுப்பு கிறிஸ்தவக் கன்னிமார்கள், லேசான ஆசா பாசங்கள் குறுக்கிடும்போது, தங்களை ஏசு ஒருவருக்கே வாழ்க்கை பட்டதாக நினைப்பார்களாம். இதுபோல, என்னோட அகக் கணவன், விஞ்ஞான ரீதியான உயிரியல் மருத்துவ ஆராய்ச்சிதான். நான், ஒருத்தனுக்கு பயன்படுவதைவிட, நான் படித்த உயிரியல் பொறியியல் ஆராய்ச்சி. இந்த உலகத்துக்கே பயன்படனும் என்று நினைக்கிறவள். புறக்கணவன் கிடைத்தால் கிடைக்கட்டும்… கிடைக்காவிட்டால் போகட்டும். அப்பா! நான் சொல்றது சரியா?”
தந்தை, புன்னகைக்கப் போனபோது, அவர் ஏடாகோடமாய்
மகளுக்கு பச்சைக்கொடி காட்டிவிடுவார் என்று பயந்ததுபோல், அம்மாக்காரி தலையிட்டாள்.
“மெத்த படிச்சா சுத்த பைத்தியமாம். அதிகமாய் படிச்சுட்டமுன்னு அடாவடியாய் பேசாதடி… நாக தோஷம் கழியத்தான் போகுது… நம்ம சாதியிலலேயே உனக்கு, உன்னைவிட ஒசத்தியாய் ஒரு பையன் கிடைக்கத்தான் போறான்.”
“பார்த்தியா… பார்த்தியா… உனக்குக்கூட மருமகனா வரப்போகிறவன், மகளைவிட ஒசத்தியாவும், ஒரே சாதியாய் சேர்ந்தவனாய் இருக்கணும் என்கிற ஒரு நினைப்பு, உன்னை விட்டுப் போகலை பாரு… உன்னை சொல்லிக் குற்றமில்லை. எல்லாம் சோசியல் கண்டிஷனிங்… அதாவது, காலங்காலமாய் ஏற்பட்டு வரும் சமூக நிர்ப்பந்தம். நம்ம நாட்டுல… ஒவ்வொரு சாதியும், ஆரம்ப காலத்துல ஒரு செல் உயிரினம்போல, ஒற்றை மனிதனில் இருந்து, அண்ணன்-தம்பியாய், அக்காள்-தங்கையாய், பங்காளியாய், பிறகு ஒரு கூட்டமாய் பரந்து விரிந்து மாறியதுதான் சாதி. ஒரு சாதியில் உள்ளவர்கள் எல்லாரும், ஒரு தாய் மக்கள். அதாவது, அண்ணன்-தங்கைகள் அல்லது அக்காள்தம்பிகள். ஆக மொத்தத்துல, ஒரு சாதிக்குள்ளேயே கல்யாணம் செய்யுறது, சொந்த சகோதரனை கட்டிக்கிறது மாதிரிதான்.”
“எம்மாடி… எப்படி வாய் பேசுறாள் பாருங்க.. ஏங்க!
குத்துக்கல்லு மாதிரி நிற்கிறீங்க.. அவள ரெண்டு அதட்டு அதட்டுங்க…”
கீதா, தந்தையின் தலையை நிமிர்த்தியபடியே, கெஞ்சாக் குறையாய் பேசினாள். தந்தையுடன், தத்துவார்த்தமாக பேசுகிறவள். அன்று அது பொழுதுபோக்கு. இன்றோ, ஒரு அவசர அவசியம்.
“நான் சொல்றதை கேட்டுட்டு, அப்புறமாய் வேணுமுன்னால், அதட்டுங்கப்பா… ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் வலுவுள்ளவைகளே வாழ்கின்றன என்பது பார்வின் தத்துவம் என்பது உங்களுக்குத் தெரியும். புறமே அகத்தை தீர்மானிக்கிறது என்பது மார்க்சியத் தத்துவம். இதுவும் உங்களுக்குத் தெரியும். இந்த இரண்டிற்கும் முரண்பாடு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. டார்வின் சொன்ன ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் என்பதை, அப்போதைய தாவர சங்கமச் சூழல் என்று சரியாக புரிந்து கொள்கிறவர்களுக்கு குழப்பம் வராது.”
“வயதுக்கு வந்த ஒரு பெண்ணின் கருமுட்டையிலும், ஆண் விந்திலும் உள்ள, தலா நாற்பத்தாறு குரோமோசோம்களில் கோடிக்கணக்கான கேரக்டர்கள் உள்ளன. இவை முக்கியம் என்றாலும், சுற்றுப்புறச் சூழலும் அதற்கு இணையான முக்கியத்துவம் பெறுகிறது.
உதாரணமாய், ஒரு ஆல விதையில் அகண்ட மரமும், விரிந்த கிளைகளும், காய்களும், கனிகளும் குறிப்பிட்ட சமயத்தில் வெளிப்படுவதற்கான இயல்புகள் உள்ளன. ஆனால், அந்த ஆல விதையை, நட்டு, செடியாக்கி, ஆடு மாடுகளிடமிருந்து பாதுகாக்க வேலி போட்டு, அடிக்கடி உரம் போட்டு வளர்த்தால்தான் அந்த விதை செடியாகி, நிழல் கொடுக்கும் மரமாகும்.’
‘இப்படிப்பட்ட சுற்றுப்புறச்சூழல் இல்லை என்றால், அந்த விதைக்குள் இருக்கும், இயல்புகளுக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.’
‘இதுபோல், உங்கள் தாயாதிகளின் குரோமோசோம்கள், அம்மாவின் வம்சாவழி குரோமோசோம்கள் வழியாய் வந்த, எனது குரோமோசோம்களில், ஏதோ ஒன்றில், நான், ஆய்வு செய்யும் விஞ்ஞானியாய் ஆகக்கூடிய இயல்புகள் இருக்கின்றன. இவற்றை கருமுட்டையில் விதையாக்கி, குழந்தையாய் பிறப்பெடுக்க வைத்து,
செடியான நான், ஒரு விஞ்ஞான ஆலாய், பல்கிப் படர, நீங்கள் எனக்கு உதவி செய்யவேண்டும். காரணம், உங்களை மீறியோ, அம்மாவை மீறியோ எதையும் செய்ய, என் மனம் இடம் தரவில்லை. நம் முன்னோர்களுடைய பதிவுகளையும், நீங்கள் ஏற்படுத்திக் கொடுத்த சுற்றுப்புறச் சூழலையும் வைத்துத்தான், நான், ஒரு மேரி கியூரியாய், ஒரு லேடி லவ்லாக்காய், ஒரு இந்திய கல்பனாவாய் மாறப்போகிறேன். இதில் மகத்தான பங்கு, உங்கள் இருவருக்கும், நம் மூதாதையர்களுக்கும் உண்டு. தயவு செய்து இந்தச் செடியானவள், ஆலாய்ப் படருவதற்கு, ஆசிர்வதியுங்கள்.”
கிதா, வேகவேகமாய் பேசிவிட்டு, மெள்ள மெள்ள மூச்சு விட்டாள். தாயையும், தந்தையையும் மாறி மாறிப் பார்த்தாள். அன்னையானவள், அசையாச் சிலையாய் நின்றாள். மகள் தரப்பு நியாயத்தை புரிந்துகொண்ட பக்குவம், அவள் முகத்தில், லேசாய் படர்ந்தது. அதேசமயம் –
அருணாசலம், மார் தட்டாக்குறையாய் எழுந்து, மகளின் கரங்களை எடுத்து தனது தோள்களில் போட்டுக் கொண்டார்.
அவரும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டதுபோல், முகம் இறுகியும் இளகியும், போனது . சுயமிழந்த, அதேசமயம், அதைவிட சிறந்தத்தோர் கூட்டுப்பொருளான இயல்பு அந்த முகத்தில் மின்னியது. மகளை நெருங்கினார். அவள் இரண்டு தோள்களிலும், தனது கரங்களை, தொங்கப் போடாமல், மடித்துப் போட்டபடியே அறிவுறுத்தினார்.
“ஒனக்குன்னு, இன்னொருத்தன், இனிமேல் பிறக்கப் போறதில்லை. அப்படி பிறந்தவன், இறந்துட்டாலும், நான் கவலைப்படப் போறதும் இல்லை. உன்னோட ஆராய்ச்சியை எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தொடரும்மா. உன்னைப் பிடித்து, உன் அறிவையும் பிடித்து எவன் வந்தாலும், அவன், உனக்குப் பிடித்தால், எங்களுக்குப் பிடித்தது மாதிரிதான். இந்த நிகழ்வு உன் ஆய்வுக் காலத்துலயே நடக்கணுமுன்னு வாழ்த்துகிறேன். உனக்கு இது சம்பந்தமான கவலை, வரக்கூடாதுன்னு ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.”
கிதா, மென்மையாக உறுதி அளித்தாள்.
“வேலை வெட்டி இல்லாதவளுக்குத்தான் இந்த மாதிரி கவலைகள் பூதாகரமாய் வரும். எனக்கு, ஒருவேளை அந்தக் கவலை சின்னதாய் வந்தாலும், என் ஆராய்ச்சியே, அதை விழுங்கிடும். உங்களோட ஆசையை நிறைவேற்ற முடியலன்னுதான்…”
கிதாவின், குரல் நெகிழ்ந்தபோது, அப்பாக்காரர், அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தார்.
“நான் ஒரு விஞ்ஞானியோட தந்தையம்மா. இந்த மகிழ்ச்சி அந்தக் கவலையை தோற்கடிச்சுட்டுமா. ஆனால், ஒரே ஒரு வேண்டுகோள். இனிமேல் உன்னை எப்போ பார்ப்போமோ.. ஒரு மூன்று நாள் லீவு போட்டுட்டு எங்க கூடயே இரும்மா.”
தாய்க்காரி, பிரமித்து நின்றபோது, தந்தை, மகள்மேல் ஒரு குழந்தையாய் சரிந்தார்.
மகளோ, ஒரு தாயாய், அவர் முதுகைத் தட்டிக் கொடுத்தாள்.
– ஆனந்த விகடன் – 2001- சமுத்திரக் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர், 2001, ஏகலைவன் பதிப்பகம், சென்னை – 600 041