முதல் கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 6, 2022
பார்வையிட்டோர்: 3,002 
 

(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பழைய ஞாபகங்கள் எப்போதும் மனிதனாகப் பிறந்தவனுக்கு இன்பம் பயப்பதாகவே இருக்கின்றன. அந்த ஞாபகம் எவ்வளவு துக்ககரமான சம்பவத்தைப் பற்றியதாக இருந்தாலும் அது ஞாபகம் என்பதனால் ஓர் இன்ப சாதனமாகவே ஆகிவிடுகிறது. அப்படி எழும் இன்பத்துக்கு ஈடானது உலகிலே வேறில்லை. நமது முந்திய ஜன்மத்தது என்று சொல்லும்படியாகப் பழமை வாய்ந்ததாக நமக்கு = ஒரு ஞாபகம் இருந்துவிடுமானால், அது நமது வாழ்க்கைக்கே ஓர் உரைகல்லாகப் போய்விடும். நமது மற்ற அனுபவங்களை எல்லாம் அந்த உரைகல்லில் தேய்த்துத் தேய்த்து மாற்றுப் பார்க்க ஆரம்பித்து விடுவோம்.

நமது குழந்தைப் பருவமும் இப்போதுள்ள ஆண் பருவமும் கிட்டத்தட்ட வேறு வேறு ஜன்மங்கள் என்பதனால் தானோ என்னவோ, நம்மில் அநேகமாக எல்லோருக்கும் குழந்தைப் பருவத்து ஞாபகங்கள் அளவில் அடங்காத மகிழ்ச்சி தருவனவாக அமைந்திருக்கின்றன. மிகவும் சிரமப்பட்ட குடும்பத்தில் பிறந்து, அடியும் உதையும் தின்று, சரியான வேளையில் சோறு தண்ணீரில்லாது சிரமப்பட்ட குழந்தைகூடப் பெரியவனான பின், அதைப்பற்றி ஞாபகப்படுத்திக் கொள்ளச் சக்தியும் சித்தமும் உள்ளவனாகி விட்டால், அந்தக் கஷ்டங்களிலும் ஞாபகத்திலும் ஓர் இன்பம் இருக்கிறது என்று தானாகவே அறிந்து கொள்ளுகிறான்.

இந்தக் கதையை நான் இப்போது எழுதுவதற்கு ஆதி காலத்திய ஞாபகங்களில் ஓர் இன்பம் இருக்கிறது என்பது மட்டும் காரணமல்ல. எவ்வளவோ தூர காலத்தில் அன்று ஒருநாள் நடந்த ஒரு சம்பவத்தில் நான் என் வாழ்க்கையின் போக்கு முழுவதையும் காண்கிறோம். இந்தச் சம்பவத்தின் ஞாபகத்தால் எனக்கு அப்பொழுதே இலக்கியகர்த்தா ஆகிவிடவேண்டுமென்ற பேராவல் தோன்றிவிட்டதையும், அப்படி நடக்க அனுமதிப்பதில்லை என்று உலகு அப்பொழுதே தீர்மானித்து விட்டது என்பதையும் நான் அறிகிறேன்.

எனக்கு அப்போது வயசு பத்து. பள்ளிக்கூடத்தில் ஐந்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். மேன்மை தங்கிய ஐந்தாம் ஜார்ஜ் சக்கரவர்த்தியின் வெள்ளி விழாக் கொண்டாட்டத்திற்கு இன்னும் பதினாலு வருஷங்கள் இருந்தன. பள்ளிக்கூடத்தில் சின்ன வகுப்புக்களிலெல்லாம் எனக்கு நல்ல பெயர்தான். நூற்றுக்கு அறுபது எழுபது என்று மார்க்கு வரும். அதற்குக் காரணம் என் மாமா அந்தப் பள்ளிக்கூடத்தில் உதவித் தலைமை உபாத்தியாயராக இருந்ததுதானோ என்னவோ எனக்குத் தெரியாது. இப்பொழுது யோசிக்கும்போது அப்படித்தான் இருக்கவேணும் என்று தோன்றுகிறது. ஏனென்றால் நான் வேறு பள்ளிக்கூடத்துக்குப் போனபின், மேல் வகுப்புக்களில் நல்ல மார்க் வாங்கியதும் இல்லை; நல்ல பையன் என்று பெயரெடுத்ததும் இல்லை.

எனக்குப் பத்து வயசு நடக்கும்போது என்னைப் பற்றிய வரையில் எனக்கே நல்ல அபிப்பிராயந்தான். வீட்டில் ஒரே பிள்ளை. பள்ளிக்கூடத்தில் மார்க்கும் நன்றாகவே வந்து கொண்டிருந்தது. விஷமம் பண்ணி வம்புதும்புகளில் மாட்டிக் கொள்ள உடம்பில் தெம்பு கிடையாது. உண்மையில், படித்தாலும் படிக்காவிட்டாலும் சதா கையில் புஸ்தகத்துடன் இருப்பது நல்ல பெயரெடுக்க ஒரு சுலபமான வழி என்று நான் அப்பொழுதே கண்டுகொண்டு விட்டேன். அந்தக் குடும்பத்தில் நான் ஒரே பிள்ளை என்பதனால் வந்து விட்டுப் போகும் பாட்டிகளுக்கும் பெண்மணிகளுக்கும் என்னிடம் அலாதிப் பிரேமை உண்டு. அவர்கள், ‘சமத்து! சமத்து’ என்று என்னைப் புகழ்வதில் எனக்குப் பரம திருப்தி. அவர்களிடம் சதா வம்பளந்து கதைத்துக் கொண்டிருப்பதில் தனியான இன்பம் இருந்தது. இந்த மாதிரி பாட்டிகளுடன் நான் கதை பேசிக் கொண்டிருப்பது என் தகப்பனாருக்கு அவ்வளவாகப் பிடிக்காது. அவர் பல தடவை கண்டித்துக் கண்டித்துப் பார்த்துவிட்டுப் பிரயோஜனம் இல்லை என்று விட்டுவிடுவார்.

நான் பேச ஆரம்பித்த நாட்கள் முதல் கொண்டே கதை கேட்பதிலும் கதை சொல்லுவதிலும் அதிக ஆர்வம் காட்டினேன் என்று என் பாட்டி பிற்காலத்தில் சொல்லுவது வழக்கம். எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது; எனக்கு ஆறு வயசு ஆவதற்கு முன்னரே அந்தப் பாட்டி இறந்துவிட்டாள். எனினும் அவள் அந்தக் காலத்தில் சொன்ன கதைகள் இன்னும் என் மனத்தைவிட்டு அகன்றபாடில்லை. ஒவ்வொரு வேளையும் சாதம் போடும்போது அவள் ஏதாவது கதை சொல்லிக் கொண்டே இருப்பாள். சாப்பாட்டை ரசிக்க வைத்தது அவள் கதைதான் என்று சொல்லுவதில் தவறில்லை. இந்த மாதிரி விக்கிரமாதித்தன் கதை, மதனகாமராஜன் கதை, நாலு மந்திரி கதை, அல்லி அரசாணி கதை, பாகவதம், ராமாயணம், பாரதம், பெரிய புராணம் முதலியவைகளிலிருந்து கதைகள், அவள் தன்னுடைய ஒப்பற்ற பாணியில் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். பிற்காலத்தில் நான் எவ்வளவோ சிறுகதை ஆசிரியர்களைப் பார்த்து விட்டேன். ஆனால் அவளைப் போலச் சுவாரசியமான கதைகளைச் சுவாரசியமாகச் சொல்லக்கூடியவர்களை நான் இனிமேல் தான் காணவேணும். அவளுக்குப் பழங்கதைகளைத் திருப்பிச் சொல்லும் திறமை மட்டுந்தான் உண்டு என்று இல்லை. லாகூரில் தன் சின்னப் பிள்ளை வேலையாயிருந்தபோது தான் அங்கே போனதையும், காசி, ஹரித்துவாரம் என்று க்ஷேத்திராடனம் செய்தபோது தனக்கு நேர்ந்த அனுபவங்களையும் பற்றி வெகு சுவாரசியமாகச் சொல்லுவாள். குழந்தை மனத்தில் தான் அவை பதிய முடியும் என்று சொல்லுவது அவர் சாமர்த்தியத்திற்கு இழுக்காகி விடாது. ஏனென்றால் கதை எழுத முயன்று பார்த்தவர்களெல்லாம் குழந்தைகளுக்குக் கதை எழுதுவதுதான் சிரமம் என்பதை ஒப்புக் கொள்ளுவார்கள்.

நான் இப்படி வீட்டுக்கு வரும் பலரிடமும் கதைகள் கேட்பது மட்டுமன்றிக் கேட்ட கதைகளைச் சரியான முறையில் சொல்லவும் பழகிக் கொண்டேன். யாராவது வந்திருப்பவர்களிடம், “ராஜாவுக்கு ‘கத்திரிக்காய் தின்ன வயிறே வெடி!’ கதை தெரியுமே; அழகாகச் சொல்லுவானே” என்பாள் அம்மா. உடனே விருந்தாளிகள் என்னைக் கதை சொல்லச் சொல்ல வேண்டியதும் நான் சொல்ல வேண்டியதுந்தான் பாக்கி. பள்ளிக்கூட விடுமுறை நாட்களில் நான் கும்பகோணத்திலிருந்து என் தாத்தா வீட்டுக்குப் போவேன். அங்கும் கதை சொல்லுவதில் எனக்கு நல்ல பயிற்சி கிடைக்கும். ஒவ்வொரு நாளும் மத்தியான்னம் சாப்பிட உட்காரும்போது தாத்தா, ”ராஜா வந்திருக்கான். நல்ல கதையாகச் சொல்லுவான்” என்று சொல்லிக் கொண்டே உட்காருவார். நானும் தினம் ஒன்று புதிசு புதிசாகப் பழங்கதைகளைப் பல கைச்சரக்குகளுடன் சேர்த்துச் சொல்லுவேன். விடுமுறைகளில் இது நாள் தவறாத நிகழ்ச்சி.

குழந்தைகளும் பெரியவர்களும் – முக்கியமாக அத்தைப் பாட்டிகளும் கிழவர்களும் – புகழ் வளர்ந்த என் கதை சொல்லும் ஆற்றல், என்னுடைய பத்தாவது வயசில் உச்சத்தை எட்டியது. நான் கதை சொல்லுவதோடு நில்லாமல் என் புஸ்தகங்களில் இருந்ததுபோலக் கதை எழுதி விட வேண்டுமென்றும் ஆவல் கொண்டேன். ஆனால் இந்த ஆவல் எளிதில் பூர்த்தி ஆகக்கூடியதாக இல்லை. நான் அதுவரையில் கேட்காத ஒரு கதையைச் சொந்தமாகக் கற்பனை செய்ய எனக்குப் போதிய அனுபவமோ கற்பனையோ இல்லை. பழங்கதைகளை, எல்லோருக்கும் தெரிந்த கதைகளை, திருப்பி எழுதுவதில் பயனில்லை என்று நான் எண்ணினேன். புதுக்கதை எழுதும் முயற்சியில் நான் வீணாக்கிய காகிதத்தையும் பொழுதையும் கண்டு விஷயம் இன்னதென்று அறியாமல் என் தகப்பனார் என்னைக் கோபித்துக் கொண்டார். என்னுடைய இளைய உள்ளத்து ஆர்வம் இந்த மாதிரிக் கோபத்தினால் எல்லாம் அடங்கி விடுவதாக இல்லை. முன்பெல்லாம் புஸ்தகமும் கையுமாக அலைந்த நான் இப்பொழுது நோட்டுப் புஸ்தகமும் பேனாவும் கையுமாக இருந்தேன். கை எல்லாம், சில சமயம் மூக்கும் மோரையுங்கூட மசி ஆகிவிடும். கையெழுத்துச் சரியாகப் படியாததால் நான் எழுதியதை நானே படிப்பது கூடச் சில சமயம் சிரமமாகி விடும். கதை எழுதி முடிக்கும் ஆர்வத்தில் நான் கால் வாங்கவேண்டிய இடங்களில் கால் வாங்காமல் விட்டிருப்பேன். சின்ன எழுத்தாக எழுதத் தெரியாத தோஷம் பக்கத்தில் ஏழெட்டு வரிகளே இருக்கும். அதிலும் ஒவ்வொரு வரியிலும் மசியைக் கொட்டி எழுத்தின் உருத் தெரியாமல் மெழுகி இருப்பேன். ஆனால் இதெல்லாம் இலக்கிய ஆசிரியனைச் சோர்வு அடையச் செய்யக்கூடிய விஷயமா, என்ன?

இப்படிப் பல நாள் நான் கதை எழுத முயன்றுவிட்டு ஒரு நாள் என் உத்ஸாக வேகத்தில் ஒரு கதை பூராவையும் எழுதி முடித்து விட்டேன். அதைத் திருப்பிப் படித்துப் பார்க்கும்போது அது சற்று மட்டமான சரக்குப் போலத்தான் தோன்றிற்று. ‘கத்தரிக்காய் தின்ன வயிறு’ கதையின் சற்று மாறிய ரூபந்தான் என் கதை. அதில் வரும் பாத்திரங்களுக்கெல்லாம் நான் விசித்திர விசித்திரமாகப் பெயர் கொடுத்திருந்தேன். அதன் கதாநாயகிக்கு நான் சுபாஷிணி என்று பெயரிட்டிருந்தேன். ஏனென்று எனக்கே இப்போது தெரியவில்லை. அந்த நாட்களிலும் வங்காளி நாவல்களைப் போற்றிப் படிக்கும் வழக்கம் இருந்ததா என்று எனக்கு நிச்சயமாகத் தெரியாது. ஆனால் நான் சுபாஷிணி என்ற பெயரை எங்கேயோ கேட்டுவிட்டுத்தான் அதை என் கதாநாயகிக்கு வைத்திருக்க வேணும். கதா நாயகிக்கு ஏற்றபடி கதா நாயகனின் பெயர் அமையவில்லை . அவனுக்கு நான் பொன்னுசாமி என்று சாதாரணமாகத்தான் பெயர் வைத்திருந்தேன். அந்தக் கதையில் பல அசம்பாவிதமான, நம்பத்தகாத சம்பவங்கள் காரியங்கள் இருந்திருக்கலாம். ஆனால் அவை இப்போது எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை.

நான் இந்தக் கதையை எழுதி முடித்தபோது காலை பத்து மணி இருக்கும். அன்று சனிக்கிழமை போலிருக்கிறது; விடுமுறை. நான் எழுதிய கதையைக் கையில் எடுத்துக் கொண்டு, “அம்மா! அம்மா!” என்று அடக்க முடியாத ஆர்வத்துடன் கத்திக் கொண்டு சமயலறைப் பக்கம் ஓடினேன். அம்மா சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தாள். சாதம் வடிக்கும் சமயம். நான் பதற்றத்துடன் உள்ளே வந்ததைக் கண்டதும், ஏதோ சில்லறை விஷமமாக்கும் என்று எண்ணிக் கொண்டு, “என்னடா அது?” என்று சற்று அதட்டியே கேட்டாள்.

என் கையில் இருந்த காகிதங்களை அவள் முன் நீட்டினேன். “நான் ஒரு கதை எழுதியிருக்கிறேன், அம்மா” என்றேன்.

“ரொம்ப சரி; போ!” என்று மெதுவாக என் தோளைப் பிடித்துக் கதவுப் பக்கம் திருப்பி என்னைத் தள்ளினாள் என் தாய்.

“படிக்கிறேன்; கேளம்மா நீ” என்றேன். அம்மாவுக்கு சமையல் வேலைத் தொந்தரவு அதிகம். பதினொரு மணிக்குள் சமையல் ஆகாவிட்டால், அப்பா கோபித்துக் கொள்ளுவார். “அப்புறம் படிக்கலாண்டா , போ” என்றாள்.

நான் எழுதிய கதையை அவள் அப்படி அலக்ஷ்யம் செய்தது எனக்குப் பிடிக்கவில்லை. “இப்பவே படி” என்று அவள் முன் மறுபடியும் காகிதங்களை நீட்டினேன். ஆனால் அம்மா என் கையில் இருந்த காகிதத்தை வாங்கிக் கொள்ளாமலே ஒரு கையால் புரட்டிப் பார்த்துவிட்டு, “ரொம்ப நன்னாயிருக்கு. கூடத்துக்குப் போய் உன் பாடங்களைப் படி, போ!” என்றாள்.

எனக்குக் கோபம் வந்துவிட்டது. அவள் அதை உடனே படித்தால்தான் அங்கிருந்து நகருவேன் என்று நான் பிடிவாதம் பிடித்தேன். காரியத் தொந்தரவால் அம்மாவுக்கும் கோபம் வந்துவிட்டது. சற்று ஓங்கியே என் முதுகில் ஓர் அறை வைத்து, “போடா கூடத்துக்கு, உன் கதையும் நீயும். முளைக்கிறதுக்குள் பிடிவாதத்தைப் பார்க்கலை!” என்றாள்.

நான் கதை எழுதி முதல் முதலாகப் பெற்ற சம்மானம் முதுகில் அந்த அறைதான். எனக்கு அழுகை அழுகையாக வந்தது. ஆத்திரத்துடன் கையில் இருந்த காகிதங்களையெல்லாம் கிழித்து, அடுப்பில் எறிந்து விட்டுச் சமையல் அறையிலிருந்து வெளியேறினேன்.

அப்போதைக்கு இப்போது நான் கெட்டிக்காரனாகிவிட்டேன். நான் எழுதும் கதைகளை யாரும் படிப்பார்கள், புகழ்வார்கள் என்று நான் இப்போது எதிர்பார்ப்பதில்லை!

– 1944

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *