நேரம் காலை பத்து மணியை நெருங்கிக்கொண்டிருந்தது. காலை வேலைகள் எல்லாம் ஒவ்வொன்றாக முடித்து தனது இரண்டாவது பணியாகிய மதிய உணவுக்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்தாள் சரசு. இன்றைக்கு மதியம் கத்தரிக்காய் பிரட்டலும் பருப்பும் அப்பளப் பொரியலும் செய்தால் போதும் என்று மனதில் ஒரு திட்டத்தைப் போட்டுக்கொண்டு பொதியில் இருந்த சிவப்பு புளுங்கல் அரிசியில் மூன்று சுண்டு அரிசியை அரிக்கன் சட்டியில் போட்டு நீர் விட்டு கல் அரித்து அப்படியே நன்றாக கழுவி முற்கூட்டியே கழுவி வைத்திருந்த பானையில் போட்டு அடுப்பில் வைத்தாள்.
அப்படியே கத்தரிக்காய், வெங்காயம், பச்சை மிளகாய் உள்ளி என்று வெட்டுவதற்கு தேவையானவற்றை எடுத்து ஒரு தட்டில் போட்டுக்கொண்டு அந்த சிறிய வரவேற்பறைக்குள் நுளைந்தாள். ஒரு அளவான சிறிய வீடுதான் அரசாங்கம் கொடுத்த மானியத்தில் அரையும் குறையுமாக கட்டி முடிக்கப்பட்டது. மேலதிகமாக அந்த வீட்டை மெருகூட்ட வசதி போதாததால் அப்படியே விட்டுவிட்டார்கள். கத்தரிக்காயை பொரித்து ஒரு பிரட்டல் கொஞ்சம் கடலையும் போட்டு செய்தால் அதுவே போதும் புழுங்கல் அரிசி சோறுக்கு நல்ல சுவையாக இருக்கும். அது அடிக்கடி செய்கிற ஒரு கறிதான் அதனால் அது அவளுக்கு அத்துப்படி. அந்த வரவேற்பறையில் ஒரு பக்கத்தில் நிலத்தில் இருந்து கத்தரிக்காயை பிரட்டலுக்கு வசதியாக கீலங்களாக வெட்டத்தொடங்கினாள்.
பிள்ளைகள் கிராமத்தின் சனசமூக நிலையத்தில் அவ்வூர் யுவதி ஒருவர் இலவசமாக நடாத்தும் தமிழ் பாட வகுப்புக்கு சென்றிருந்தார்கள். அது ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை காலை ஒன்பது மணியிலிருந்து பதினொரு மணிவரை நடக்கும். மூத்தவள் பெண் இரண்டாவது ஆண் முறையே ஆறாம் ஐந்தாம் ஆண்டுகளில் படிக்கிறார்கள்.
பிள்ளைகள் வாறதுக்கிடையில ஓரளவு சமையல் வேலையை முடிச்சுப்போடலாம். சரசு தனக்குள் கூறியவாறே வெட்டி முடித்த கத்தரிக்காயை ஒரு பக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு வெங்காயத்தை வெட்டத் தொடங்கினாள்.
குமரன் அவள் கணவன் சில காலமாக ஆட்டோ ஓட்டுகிறான். அதற்கு முன் அவர்களது காணியில் தான் தோட்டம் செய்து கொண்டிருந்தான். தோட்டத்தில் கிடைக்கும் வருமானம் போதுமானதாக இல்லை. அவ்வப்போது பெரிய நட்டத்தையும் சந்தித்திருக்கிறான் ஆனாலும் காலாகாலமாக தோட்டம் செய்துதான் சமாளித்து வந்தார்கள். தொடர்ந்து இப்படியே இருக்க முடியாது ஏதாவது நல்ல வருமானம் கிடைக்கக்கூடிய வியாபாரம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்று மனதில் இருந்த ஆர்வம் காரணமாக அந்த முயற்சியில் இருந்தவன் இறுதியாக சரசுவின் தொடர்ச்சியான வேண்டுதல் காரணமாக முச்சக்கர வண்டிக்கு மாறியிருந்தான்.
இன்று அதிகாலையே புறப்பட்டு எங்கோ சென்றுவிட்டு சற்று நேரத்திற்கு முன்பு தான் வீடு வந்து குளித்துவிட்டு காலையுணவை அரையும் குறையுமாக சாப்பிட்டு முடித்துவிட்டு யாருடனோ தொலைபேசியில் கதைத்துக்கொண்டிருந்தான். வழக்கத்துக்கு மாறாக கடந்த சிலநாட்களாகவே மாறிமாறி யாரோ சிலருடன் தொலைபேசியில் கதைத்துக்கொண்டு இருந்தான். அவனது முகத்தில் ஒரு சோர்வும் வாட்டமும் சில நாட்களாக இருந்துகொண்டேதான் இருந்தது. ஆனால் என்ன விடயம் என்று எதையும் யாருடனும் இதுவரை அவன் கதைக்கவில்லை.
சரசுவுக்கு அவனிடம் கதைகொடுத்து என்ன விடயம் என்று கேட்டுவிடவேண்டும் என்றுதான் விருப்பம் ஆனால் அவன் முன்கோபக்காரன் சட்டென்று கோபப்பட்டு பேசிவிடுவான் என்பதால் பேசாமலே இருந்தாள். ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது என்று மட்டும் விளங்குகிறது. தொடர்ந்து மௌனம் காத்து வந்தாள்.
மிளகாயை நறுக்க எடுத்தவளுக்கு யாரோ முன் படலையடியில் நடமாடுவது தெரிந்தது. ஒரு வாகனம் வீட்டு வாசலில் இருந்து சற்று தள்ளி நிற்பாட்டப்பட்டிருந்தது. உன்னிப்பாக மீண்டும் வாசலை நோக்கி உற்றுப் பார்த்தாள் சரசு. அவர்களது வீட்டு வாசலில் தான் அவர்கள் வந்து நின்றார்கள்.
படலை கதவில் தட்டிக்கொண்டே குமரன்…. குமரன்…. வீட்டில யாரு…. நாங்கள் கூப்பிடுறது கேக்குதா? யாராவது வந்து கேட்டை திறவுங்கோ. குமரன்… குமரன்… என்று வந்தவர்களில் ஒருவர் அழைக்கிறார்.
என்னங்க யாரோ வந்திருக்கிறீனம். வெளியில படலையடியில நின்டு கூப்பிடுகினம். உங்களத்தான் கூப்பிடுகினம் போல கிடக்குது…
நான் இவருக்கு சொன்னது கேக்கேல்லையோ.. சட்டென்று எழுந்து பின்பக்கமாக போனாள். குமரன் இன்னும் தொலைபேசியில் யாருடனோ கதைத்துக்கொண்டிருந்தான். என்னங்க உங்களத்தான் யாரோ வந்திருக்கினம். உங்களத்தான் கூப்பிடுகினம். போய் பாத்திட்டு வந்து கதையுங்கோவன்.
யாரெண்டு தெரியுதோ? மெதுவான குரலில் கேட்டான் தொலைபேசியை ஒரு கையால் பொத்தியவாறு. இல்லயுங்கோ. வாகனத்தில வந்திருக்கனம் போல. அங்கலா கொஞ்சம் தள்ளி வாகனம் நிக்குது. ஒரு நாலஞ்சு பேர் நிக்கினம்.
குமரன் சற்று தடுமாறியவனாக தன்னை சற்று சுதாகரித்துக்கொண்டு. டக்கெண்டு வெளிய போயிடாதயும், கொஞ்சம் மெதுவா எட்டிப் பாருமன்.. பாத்திட்டு தொடந்து கூப்பிட்டாங்கள் எண்டால் நான் இல்லையெண்டு சொல்லும். வெளியில போய்டன் வர நேரமாகும் எண்டு சொல்லும். அவங்கள் போயிடுவாங்கள். என்று கூறி அவளை அனுப்பினான். குமரனின் மனதுக்குள் இருந்த ஒரு சிறிய சந்தேகம் காரணமாக முற்கூட்டியே உசாராக இப்படி கூறி அவளை அனுப்பினான்.
சரசு மெதுவாக ஜன்னல் இடைவெளியூடாக கூர்ந்து வெளியே பார்த்தாள். அவர்கள் போகவில்லை. இன்னமும் அழைத்துக்கொண்டே இருந்தார்கள். குமரன்…. குமரன்…. வீட்டில யாரு? குமரன் இருக்கிறாரோ. ஒருக்கா வரச் சொல்லுங்கோ.. அவர்கள் தொடர்ந்து அழைத்துக்கொண்டே இருந்தார்கள்.
பின் பக்கம் இருந்த குமரன் ஒரு பக்கமாக வந்து வெளியே தெரியாதபடி எட்டிப் பார்த்தான். அவனது ஊகம் ஓரளவு சரியானது போலத்தான் தெரிந்தது. அப்படியே மீண்டும் பின்னால் சென்றான்.
சரசு மீண்டும் பின்பக்கம் வந்து என்னங்க செய்யிறது கூப்பிட்டுக்கொண்டே இருக்கிறீனம்… என்று கேட்டாள். நீர் இங்கால வராதயும் நான் இல்லையெண்டு சொல்லும். வர நேரம் செல்லும் எண்டு சொல்லி ஏன் வந்தவை என்று காரணத்த கேளும் சரியா..? அவர் வந்ததும் வருவார் வந்து உங்களை சந்திப்பார் எண்டு சொல்லும். என்று சொல்லி அவளை திருப்பி அனுப்பி வைத்தவனின் மனம் சற்று குழப்பமடைந்து சில காலம் பின்நோக்கி செல்லத் தொடங்கியது.
அவனுடைய நினைவுகளுக்குள் முன்பு நடந்து முடிந்த சில சம்பவங்கள் ஓடத் தொடங்கியது…
நானும் எத்தின நாளா சொல்லுறன் இந்த மனுசனுக்கு கொஞ்சம் கூட காதில ஏற மாட்டங்குது. அவன் சங்கர பார் இப்ப எப்பிடி இருக்கிறான். அவனும் முந்தி தோட்டம் தான் செய்தவன். அதவிட்டுப்போட்டு ஆட்டோ வாங்கினான். நல்ல வருமானம். வீட்டுக்கு தேவையான எல்லாம் வாங்கி நல்லா இருக்கிறான். அதப்போல சுரேஸ் அவனும் ஆட்டோ வாங்கினான் நல்லா உழைக்கிறான் அதோட எங்கயும் போறதென்டா குடும்பமா ஆட்டோவிலதான் போய் வாறான். பொஞ்சாதிக்கும் நகையெல்லாம் வாங்கி குடுத்து நல்லா இருக்கிறான். அங்கால சின்ராசு அவனும் ஆட்டோ வாங்கிட்டான்… கொஞ்ச காலத்தில உழைச்சு முன்னுக்கு வந்திட்டான். இந்த மனுசனுக்கு சொல்லி சொல்லி நானும் களைச்சுப் போனன். குமரனின் மனக்கண்ணில் ஒடிய சில காலத்துக்கு முந்திய சரசுவின் ஆதங்கம்
அவர்கள் ஆட்டோ வருமானத்தை தவிர வேற என்னவெல்லாம் செய்து வருமானம் தேடுகிறார்கள் என்பது சரசுக்கு எங்கே தெரியப்போகிறது. அவளது பார்வையில் அவர்களுடைய ஆட்டோ மட்டும் தான் எப்போதும் தெரியும். அதனால் அதன் மூலம் தான் அவர்களுடைய வருமானம் என்பது அவளது நினைப்பு.
என்னங்க நானும் சொல்லிச் சொல்லி களைச்சு போனன். எப்பதான் நான் சொல்லிறத கேக்கப்போறீங்க.
சரசு நானும் யோசிச்சுக்கொண்டு தான் இருக்கிறன் பாப்பம். ஏதாவது ஒரு வியாபாரம் தொடங்கினா தான் சரியா வரும் எண்டு எனக்கு விளங்குது. தோட்டம் செய்து சமாளிக்க ஏலாது எண்டும் எனக்கு நல்லா விளங்குது. பொறு பாப்பம் ஏதாவது நல்ல வியாபாரம் ஒண்டு தொடங்குவம்.
ஏதாவது என்ன நல்ல வியாபாரம்? அது தான் நான் எத்தின நாள் எத்தின தடவ சொல்றது. ஒரு ஆட்டோ வாங்கினா அதில நல்ல வருமானம் வரும். சங்கர், சுரேசு அடுத்தது சின்ராசு இப்பிடி எத்தின பேர் ஆட்டோ வாங்கி ஓடிக்கொண்டு இருக்கிறாங்கள். நீங்களும் ஆட்டோ வாங்கினா அவங்கள போல நாங்களும் இருக்கலாம் தானே சரசு தன் பங்கிற்கு இப்படி கொட்டினாள்.
ஏய் நீ சொல்லிற மாதிரி அப்பிடி இப்ப செய்யிறது சரியா வராது. நான் சங்கர் அண்ணனிட்டையும் சுரேசிட்டையும் இதப்பற்றி கதச்சனான். அவங்கள் ஆட்டோ வாங்க வேண்டாம் எண்டு சொல்லுறாங்கள். இப்ப வருமானம் குறைவாம். இப்ப ஆட்டோ ஸ்ரான்டில மொத்தம் ஏழு ஆட்டோ நிக்குதாம். எல்லாரும் ஓட்டம் இல்லாம என்ன செய்யிறதெண்டு தெரியாம குளப்பத்தில இருக்கிறாங்களாம். இதுக்குள்ள நானும் ஆட்டோ வாங்கி அவஸ்தப்படவா சொல்லுறாய்?
நீங்க ஒண்டு. அவங்கள் அப்பிடித்தான் சொல்லுவாங்க. எல்லாரும் பொறாமபட்டவங்கள்தானே. நாங்கள் ஆட்டோ வாங்கினா நல்லா வந்திடுவம் எண்டு அவங்களுக்கு பொறாமை. அது தான் அப்பிடிச் சொல்லுறாங்கள்.
இல்லையடி அவங்கள் மட்டுமில்ல நான் வேற சிலரோடயும் கதச்சனான் எல்லாரும் ஆட்டோ வேணாம் வேற ஏதாவது நல்ல வியாபாரமா தொடங்கு எண்டுதான் சொல்லுறீனம். குமரன் ஏற்கனவே வேறு சிலருடனும் கதைத்ததை இப்படி கூறினான்.
நீங்கள் ஏன் அவன் இவனின்ர கதயெல்லாம் கேட்டுக்கொண்டு குளம்பிறியள். நான் சொல்லுறத மட்டும் கேளுங்கோ போதும். இன்னும் பாத்துக்கொண்டு இருக்காம கெதியா வாங்கிற அலுவல பாருங்கோ… என்று பதிலுக்கு சரசு சற்று அதட்டலான குரலில் கூறினாள்.
குமரனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. மனதைப்போட்டு குழப்பியபடி மீண்டும் அவளிடம் இல்ல சரசு அவன் இவன் எண்டு யார் சொன்னாலும் நான் சும்மா முடிவெடுக்க முடியுமே. நாலு பேரிட்டையும் கேட்டு அலசி ஆராஞ்சுதானே ஒரு காரியத்த செய்ய வேணும். சும்மா எடுத்த எடுப்பில திடீரெண்டு முடிவெடுக்க ஏலுமே. அண்டைக்கு எனக்கு தெரிஞ்ச வியாபரம் சம்மந்தமா ஆலோசனை குடுக்கிற அண்ணை ஒருத்தர சந்திச்சனான். அவரிட்டையும் கதச்சனான் அவரும் ஆட்டோ வாங்கி ஓடுறதெண்டால் அத அவர் சிபாரிசு செய்ய மாட்டாராம். அப்பிடி ஆட்டோ, டிப்பர் அதோட வான் வாங்கினவயெல்லாம் இப்ப ஓட்டமில்லாமல் நிறைய க~;டப்படுகினமாம். எதுக்கும் நல்லா யோசிச்சு முடிவெடுக்கட்டாம் எண்டு சொன்னவர். அதுதான் நானும் நிறைய யோசிக்கிறன்… என்று தனது விளக்கத்தை கூறினான்.
சரசுக்கு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எப்படியாவது ஒரு ஆட்டோவை வாங்கி வீட்டிற்கு கொண்டுவந்து முன் முற்றத்தில் விடவேண்டும் அதை தான் பார்த்து ரசிக்க வேண்டும். எல்லோரும் பார்க்க குடும்பத்தோடு அதில் பல இடங்களுக்கும் சென்று வரவேண்டும் என்ற பல நாள் கனவு. அது பாழாகிப் போய்விடுமோ என்ற பயமும் ஒட்டிக்கொண்டிருந்தது. அந்த குழப்பம் மேலும் அதிகரிக்கவே தொடர்ந்தாள்.
இஞ்ச பாருங்கோ எல்லாரும் கதை சொல்லுறதில வீரர்கள் தான். அவனவன் அப்பிடி இப்பிடியெண்டு பலதயும் சொல்லுவான். நாங்கள் எங்கட முடிவில உறுதியா இருந்தா சரி. அப்ப ஏற்கனவே வாங்கி ஓட்டிக்கொண்டிருக்கிற சங்கர்.. சுரேஸ் எல்லாம் இப்ப தொழில் சரியில்லயெண்டு ஆட்டோவ வித்தா போட்டாங்கள். இன்னும் ஓடி ஓடி உழச்சுக்கொண்டுதானே இருக்கிறாங்கள்.
அவங்கட மனுசிமார் எல்லாம் அதில உழச்ச காசில வாங்கின நகைகளையெல்லாம் போட்டு சிலுப்பிக்கொண்டு வருவாளுகள். நீங்களும் காணுறனீங்கதானே. நான் மட்டும் இந்த கவரிங் பூசினத மட்டும் நெடுக மாட்டிக்கொண்டு திரியிறன். ஒரு கதயும் வேணாம் காலத்த கடத்திக்கொண்டு இருக்காம கெதியா போய் அலுவல பாருங்கோ.
நான் உமக்கு எவ்வளவு சொன்னாலும் மண்டயில் ஏறப்போறதில்ல… நீர் ஒரு முடிவோட இருக்கிறீர் அத மாத்த இனி ஆண்டவனாலயும் முடியாது. வாங்கிப்போட்டு பிறகு சங்கடப்படேக்க நான் தான் தலையக் குடுக்கவேணும். என்று குமரன் கொஞ்சம் கடுமையான தொனியில் தன் பங்கிற்கு கொட்டித் தீர்த்தான்.
என்னெண்டாலும் செய்யுங்கோ… நான் சொல்லுறத எப்ப கேக்கப்போறீங்களோ. எல்லாம் நீங்க நினச்சததானே செய்யிறீங்க. நான் செய்த வினை இங்க வந்து மாட்டிக்கொண்டு க~;டப்பட வேண்டிக் கிடக்கு.. வாய்க்கு ருசியா சமச்சு கொட்டுறதுக்கு மட்டும் தானே நான்… சொல்லிக்கொண்டே கண்களில் வழிந்த நீரை கைகளால் துடைத்துக்கொண்டாள்… அவளது முனகல் ஒலியும்… அதே நேரம் குசினியில் சில பாத்திரங்கள் தடால் புடால் என்று வைக்கும் சத்தமும் குமரனின் காதில் துளைத்தது.
சரி… சரி… இப்ப என்ன? ஆட்டோ வாங்க வேணும் அவ்வளவுதானே… சரி நீர் அழுகிறத நிறுத்தும். இந்தக் கிழமையே இந்த அலுவல முடிச்சிடலாம்.. என்று கூறி அவளது அழுகையை நிறுத்தினான்.
வெங்காயச் செய்கையில் இந்த முறை கிடைத்த கொஞ்ச பணத்தை அடுத்த போகம் மிளகாய் செய்யவேண்டும் என்று வைத்திருந்தான் குமரன். ஒரு மாதத்திற்குள் அந்த பணத்தை அப்படியே கையில் கொடுத்து மிகுதி பணத்தை இரண்டு வருடங்களில் கட்டி முடிக்கும் ஒப்பந்தத்தில் ஆட்டோ ஒன்றை வாங்கினான். வாங்கிய பின்னர் பல்வேறு தடைகளையும் தாண்டி ஆட்டோ தரிப்பிடத்தில் தனக்கும் ஒரு இடத்தை ஒதுக்கி பெற்றுக்கொண்டான்.
ஆட்டோ ஓடத் தொடங்கியது. ஆனால் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கவில்லை. முடிந்த அளவு முயற்சி செய்து இரவு பகல் பாராது நேரத்தை செலவு செய்தான். அப்படியும் அவனுக்கான வருமானம் போதாமல் இருந்தது. மாதாந்தம் கட்டுப்பணம் செலுத்த வேண்டும். குடும்ப செலவுகளையும் சமாளிக்க வேண்டும். அவனது அயராத முயற்சியால் கிடைத்த பணமெல்லாம் கட்டுப்பணம் கட்டுவதற்கே போதாமல் இருந்தது. ஒருவாறு பதினைந்து மாதங்கள் கட்டி முடித்தான். ஆனாலும் கடந்த மூன்று மாதங்களாக கட்டுப்பணத்தை செலுத்த முடியவில்லை.
எப்படியாவது கட்டுப்பணத்தை கட்டி முடித்துவிட வேண்டும் என்று தான் தனது நண்பர்கள் உறவினர்கள் என்று பலரிடமும் முயற்சித்துப் பார்த்தான் எதுவுமே கைகூடவில்லை. கடந்த சில நாட்களாக இந்த முயற்சியில் தான் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறான். காலையும் இவ்விடயம் சம்பந்தமாகதான் வேறும் சிலருடன் பேசிக்கொண்டிருந்தான். இந்த பிரச்சனையால்தான் சில நாட்களாக அவன் சோர்ந்துபோய் மிகவும் யோசனையோடும் மன உழைச்சலோடும் காணப்பட்டான்.
ஏதோ வழியாக படலையை திறந்து உள்ளே வரும் அவர்களை கண்ட சரசு என்னங்க அவங்க உள்ள வாறாங்க… அவனது யோசனையை குளப்பியது சரசுவின் குரல்.
சரி… சரி… நான் இல்லையெண்டு சொல்லி எப்படியாவது அவங்கள அனுப்பி விடும் குமரன் அதட்டலாக கூறி அனுப்பினான். அவளும் ஆ… சரி.. என்று கூறிக்கொண்டு முன்னே சென்றாள்.
உள்ளே நான்கு பேர் வந்திருந்தார்கள். எங்க குமரன்… இல்லையோ… ஒருவன் கேட்டான்.
இல்லை அவர் வெளிய போய்டார்… நேரமாகும் வர… சரசு பதிலளித்தாள்
நாங்கள் இவ்வளவு நேரம் கத்திக் கத்தி கூப்பிட்டுக்கொண்டு இருக்கிறம்.. உங்களுக்கு கேக்கேல்லையே… நாங்கள் ஆட்டோ லீஸ் குடுத்த கம்பனியால் வாறம்… மூண்டு மாதம் கட்டுப்பணம் கட்டேல்ல… இப்ப கட்டினீங்களெண்டா சரி. மற்றொருவன் சற்று கராரான தொனியில் கூறினான்.
இப்ப எங்கயுங்கோ காசு… அது விசயமாதான் போயிருக்கிறேர்.. வந்ததும் வருவேர் வந்து கட்டுவேர் சரசு பதுமையாக கூறினாள்.
வாங்கேக்குள்ள உசாரா கனக்க கதையெல்லாம் சொல்லி வாங்க தெரியுது… காசு கட்டணும் எண்டு வரேக்கதான் உங்களுக்கு சங்கடமா இருக்குது என்ன……. தொடர்ந்து நிறையவே கொட்டித் தீர்த்தான் மற்றொருவன். அவன் தொடர்ந்து பேசிய விடயங்களும் தொனியும் அவளுக்கு மிகுந்த சங்கடமாக இருந்தது.
என்ன நான் சொல்லிக்கொண்டு இருக்கிறன் ஒரு பதிலுமில்லாமல் நீங்க பாட்டுக்கு இருக்கிறீங்க.. முழுக்காசையும் இப்ப கட்டுங்கோ. இல்லாட்டி ஆட்டோ சாவியத் தாங்கோ. வந்து காச கட்டிப்போட்டு திருப்பிக்கொண்டு வரச்சொல்லுங்கோ…. மீண்டும் அதட்டினான்…
சரசு முகம் கறுத்து பேதலித்துபோனாள். அவளது வாயில் வார்த்தைகள் வரவில்லை. ஒருவாறு சுதாகரித்துக்கொண்டு நாங்கள் தான் எல்லா காசையும் ஒழுங்கா கட்டிட்டம் தானே… ஒரு மூண்டு மாசம் தானே கட்ட வேணும். அது இண்டைக்கு நாளைக்கு கட்டிடுவம்…
ஒமோம் நீங்க கட்டுவீங்கதான்.. கட்டுற லச்சணம் தான் தெரியுதே.. ஒருமாதம் பிந்தினாலே நாங்கள் ஆட்டோவ கொண்டு போயிடுவம் இது மூண்டு மாதமா போயிட்டுது… இனி சரிப்பட்டுவராது.. எங்க ஆட்டோ… என்று பேசிகெ;கொண்டே அவன் சுற்று முற்றும் நோட்டமிட்டான். ஒரு இடத்தில் நீண்ட தகர மறைப்பு இருந்தது சந்தேகத்தை ஏற்படுத்த அந்தப்பக்கம் போனான்.
ஆ… இங்க.. இங்க.. நிக்குது ஆட்டோ வாங்கோ வந்து தூக்குங்கோ… அவர் பிறகு வந்து காச கட்டட்டும்… என்று வந்தவர்களை அழைத்தான்.
இந்தா… எதுவா இருந்தாலும் அவர் வந்த பிறகு வந்து கதையுங்கோ.. ஆட்டோவ தொட வேண்டாம்.. ஐயோ… இது என்ன இது இவ்வளவு சொல்லுறன் நீங்க அப்பயும் ஆட்டோவ எடுக்கப்பாக்கிறீங்க.. உங்கட காசெல்லாம் கட்டினனாங்கள் தானே.. மிச்சமும் தந்திடுவம்.. பிறகு அவர் வருவார்… வேண்டாம்… எடுக்க வேண்டாம்… வேண்டாம்… தொடர்ந்து அவள் கத்துவது ஒப்பாரி வைத்ததுபோல் இருந்தது….
மற்றொருவன் கொண்டுவந்த மாற்று சாவியை போட்டு ஆட்டோவை இயங்க வைத்து எடுத்துக்கொண்டு முன்னால் சென்றான். அவனைத் தொடர்ந்து இன்னொருவன் நீங்கள் அவர மிச்ச காசு எல்லாத்தையும் இண்டைக்கு பின்னேரத்துக்கிடையில கொண்டு வந்து கட்டச்சொல்லுங்கோ.. கட்டிப்போட்டு ஆட்டோவ எடுத்துக்கொண்டு வரச்சொல்லுங்கோ… என்று கூறிக்கொண்டே சென்று ஆட்டோவில் ஏறினான்.
ஐயோ … கொண்டு போறாங்கள்… ஆட்டோவ கொண்டு போறாங்கள்… அரை வயிறு கால் வயிறு இருந்து இவ்வளவு நாளும் கட்டின காசெல்லாம் வீணாப் போச்சே… இவங்கள் நல்லா இருப்பாங்களா… ஐயோ… ஐயோ… ஐயோ… கொண்டு போய்டாங்கள் எல்லாம் போச்சு… எல்லாம் போச்சு.. இனி என்ன செய்யப்போறமோ… எல்லாம் போச்சு… சரசு தொடர்ந்து ஒப்பாரி வைத்தாள்.
மற்றவர்கள் தாங்கள் வந்த வாகனத்தில் ஏற அந்த வாகனமும் ஆட்டோவும் நொடிப்பொழுதில் மறைந்துபோனது.
இவளது சத்தத்தில் அக்கம் பக்கத்தில் இருந்த சிலர் ஓட்டமாக ஓடி வளவுக்குள் வந்தார்கள். ஏற்கனவே கட்டுப்பணம் கட்டுவதற்காய் பலருடனும் கதைத்து, கேட்டு கிடைக்காமல் மன உழைச்சலுக்கு உள்ளாகியிருந்த குமரன் ஆட்டோவை அவர்கள் எடுத்துச் செல்வதை தூரத்தில் இருந்து கவனித்தவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
ஐயோ… எல்லாம் போச்சே… இனி என்ன செய்யிறது. காசும் சரிவரேல்ல… அவங்கள் இண்டைக்குள்ள கட்டாட்டி வாகனத்தையும் தர மாட்டாங்கள்… கட்டின காசும் போச்சு…. என்ர ஆட்டோவும் போச்சு… ஐயோ இனி என்ன செய்யிறது…. போச்சே… போச்சே… எல்லாம் போச்சே… எல்லாரும் சொன்னாங்களே… ஆட்டோ வாங்காத.. வாங்காத… வருமானம் சரியா வராதெண்டு நான் அத கேக்கேல்லயே.. இப்ப போச்சு … எல்லாம் போச்சு… என்று கத்திக்கொண்டே கிணற்றடியில் கிடந்த தேடா கயிற்றை தூக்கிக்கொண்டு அறை ஒன்றுக்குள் ஓட்டமாய் ஓடிப்போய் கதவை தாள்பாள்போட்டு மூடிக்கொண்டான்.
இதை அவதானித்த சரசு என்னங்க நீங்க என்ன செய்யிறீங்க… ஐயோ… இந்த மனுசன் என்ன பண்ணப்போறானோ.. என்று கத்திக்கொண்டு அந்த அறையை நோக்கி ஓட வந்திருந்தவர்களும் அந்த அறையை நோக்கி ஓடினார்கள்.
அயல் வீட்டில் இருந்து வந்திருந்த மற்ற இருவரும் அவர்கள் இவர்களது உறவினர்கள்தான். தங்கள் கையில் அகப்பட்ட மண்வெட்டியையும் அலவாங்கையும் எடுத்துக்கொண்டு அந்த அறையை நோக்கி விரைவாக ஓடினார்கள். அதில் ஒருவர் குமரன் கேட்டிருந்த பணத்தில் முக்கால் பகுதியை தான் வரும்போதே எடுத்து வந்திருந்தான்.