கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 6, 2017
பார்வையிட்டோர்: 6,693 
 
 

ஞாயிற்றுக்கிழமை, காலை பதினோருமணி.

அம்மாவும் அக்காவும் மாங்காடு கோவிலுக்கு போயிருந்தார்கள். அக்காவுக்கு அடுத்த இரண்டு மாதத்தில் கல்யாணம். அப்பாவும் காயத்ரியும் மட்டும் வீட்டில் இருந்தார்கள். அப்பா ஹாலில் பேப்பர் படித்தபடி ஈஸிச்சேரில் அமர்ந்திருந்தார். வீடு அமைதியாக இருந்தது.

காயத்ரி, அப்பாவிடம் எப்படியும் ஷண்முகவடிவேலுடனான தன் காதலைப்பற்றி இன்று சொல்லிவிடுவது என்று முடிவுசெய்து, அவரிடம் சென்றாள்.

“அப்பா, உங்களிடம் நான் பேசணும்.”

அப்பா தலையை நிமிர்த்தி அவளைப் பார்த்தார். பேப்பரை நான்காக மடித்து ஸ்டூலின் மீது வைத்துவிட்டு, “சொல்லு காயத்ரி” என்றார்.

காயத்ரி அப்பாவுக்கு எதிரில் இருந்த ஒரு பழைய நாற்காலியில் கவனமாக உட்கார்ந்தாள். அதன் பின்பக்கத்தின் ஒரு கால் ஆடும். அதைப்பற்றி தெரிந்தவர்கள்தான் அதில் வாகாக அமர முடியும்.

“அப்பா நீங்க ரொம்ப மாடர்ன். என்னைப் புரிஞ்சுப்பீங்கன்னு நம்பறேன். நான் என்னுடன் பேங்க்ல வேலை செய்யற ஷண்முகவடிவேலை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன். அவர் இப்ப சீனியர் மேனேஜர். என்னைவிட மூன்று வயது பெரியவர். நாங்க ரெண்டு வருஷமா லவ் பண்றோம்.”

இதைச்சொல்லிவிட்டு, காயத்ரி அப்பாவைக் கூர்ந்து பார்த்தாள். அப்பா அமைதியாக இருந்தார். அவரின் முக பாவனையில் இருந்து அந்தநிமிட அவரின் மன இயல்பை அவளால் கணிக்க முடியவில்லை.

“அவன் என்ன ஜாதின்னு நான் தெரிஞ்சுக்கலாமா?”

“அவசியமா சொல்லணுமா?”

“அதைத் தெரிஞ்சுக்க வேண்டியது எனக்கு ரொம்ப அவசியம்.”

“அவர் இந்து. ஆனா நம்ம ஜாதியில்லைப்பா.”

“அப்ப இதுபத்தி மேற்கொண்டு எதுவும் பேசவேண்டிய தேவையில்லை காயத்ரி.”

“அவர் வேற ஜாதிக்காரர் என்கிறதுதான் காரணமாப்பா?”

“அதுமட்டுமே காரணமல்ல….ஆனா அதுதான் முதல் காரணம்.”

“நாங்க ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சுகிட்டு இருக்கோம். அவரை நான் ரொம்ப மதிக்கிறேன். அக்கா கல்யாணத்துக்கு அப்புறம் நீங்கதாம்பா எங்க ரெண்டுபேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும்.”

“என்னைப் பொறுத்தவரைக்கும் எனக்கு இது பிடிக்கல காயத்ரி. ப்ளீஸ் புரிஞ்சுக்க. நீ எனக்கு ஒரு நல்ல மகளா இருப்பேன்னு நான் நம்புறேன்.”

“அவர் நம்ம ஜாதி இல்லைங்கறது மட்டும்தானப்பா உங்க பிரச்னை?”

“அதுவும் ஒரு ப்ரச்னைதான்…நீ என் மகள். நான் வளர்த்து படிக்கவைத்து ஆளாக்கிய பெண். உன்னோட வாழ்க்கையின் ஒவ்வொரு நாளிலும் என் பங்கு இருக்கு. உன்னோட கிராஜுவேஷன், ஸி.ஏ படிப்பு, பேங்க் வேலை எல்லாவற்றிலும் நான் உனக்கு வழிகாட்டியா இருந்திருக்கேன். உன்னோட கல்வியையும், இந்த வேலயையும்விட ரொம்ப பெரிய விஷயம் உன்னோட கல்யாணம். இதுல மட்டும் உனக்கே நீ வழிகாட்டியா இருக்க நெனச்சா தாங்க முடியுமா என்னால? உன்னோட கல்யாணமும் என் தீர்மானப்படி நடக்கறதுதான் நம்ம எல்லாருக்கும் சந்தோஷம் தரும்.”

“…………………”

“நம்ம இந்து கலாச்சாரத்துல ஒரு பெண் பிறந்த அன்னிக்கே அவளோட கல்யாணம் பத்தி பெற்றோர்கள் மனசுல திட்டமிடுதலும், எதிர்பார்ப்பும் ஆரம்பிக்குது காயத்ரி. மகளின் கல்யாணம் என்பது எல்லா பெற்றோர்களுக்கும் அவரவர் ஜாதி வழக்கப்படி, அந்தஸ்து, ஆசைக்குத் தக்கபடி ஒவ்வொரு செங்கல்லா எடுத்து வைத்து ஒரு பெரிய மண்டபம் அவர்களின் மனசுக்குக்குள் கட்டப்படுவது… அத திடீர்ன்னு நீ இப்ப வந்து இடிச்சுத் தள்ளுங்கன்னு என்னிடம் வந்து சொன்னா, அது நம்மோட பூர்வீக வீட்டையே இடிக்கச் சொல்ற மாதிரி காயத்ரி.”

“அப்பா இதெல்லாம்விட எனக்கு என் ரொம்ப காதல் முக்கியம். நான் இதுக்கு ஒத்துக்காட்டா என்ன பண்ணுவீங்க?”

“நான் என்ன பண்ண முடியும்? நானும் உன் அம்மாவும் எங்கள் ஏமாற்றத்தையும், மனவேதனையையும் அனுபவிச்சுத்தான் தீரணும். தான் அன்பா வளர்த்த ஒரு மகளோட கணவனை, ஒரு தகப்பன் தேர்ந்தெடுக்க முடியாமல் போவது என்பது எனக்கு மிகப் பெரிய அவமானம். தவிர என் குடும்பம், என் குழந்தைகள் என்று பாசத்துடன் நம்பிய என் ஈகோவுக்கு இது ஒரு பெரிய மரண அடி.”

கண்களில் நீர்மல்க அவர் குரல் உடைந்தது.

காயத்ரி பதில் சொல்லாமல் அப்பாவையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவரும் மெளனமாக சில நிமிஷங்கள் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்.

“நம்ம குடும்ப நிம்மதியை இப்ப நீ கெடுத்திட்ட. இந்த வயசுல இப்படிப்பட்ட காதல் ஆர்வங்கள் வர்றது சகஜம்தான் காயத்ரி. ஆனாலும் நாங்க தேடித்தேடி செலக்ட் பண்ற வரனுக்கு, நீயே சம்மதம் சொல்லி வாழ்க்கைப் படறதுதான் உன்னோட தர்மம். அதுதான் எங்களையும் கெளரவப் படுத்த முடியும். தயவுசெய்து அந்த ஷண்முகவடிவேலுக்கு ஒரு குட்பை சொல்லிடு. அவனை சுத்தமா மறந்துடு காயத்ரி ப்ளீஸ்.”

“அப்பா ப்ளீஸ், நான் ஒண்ணும் இப்பவே அவரைக் கல்யாணம் பண்ணிகிட்டு ஓடணும்னு துடிக்கலை. அக்கா கல்யாணம் முடிஞ்சதும் மறுபடியும் நாம் இதப்பத்தி பேசலாம். எந்த ஒரு பெண்ணாலும் காதலிச்சவனை மறக்க முடியாதுப்பா. இப்போதைக்கு நாம இந்தப் பேச்சை நிறுத்திக்கலாம். அம்மாவும், அக்காவும் திரும்பி வர்ற டைம் ஆச்சு.”

“சரி காயத்ரி. ஆனா ஒரு கண்டிஷன். அக்கா கல்யாணம் முடியறவரை இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம். நீ இந்த டாபிக்கை எவரிடமும் பேசக்கூடாது.”

“கண்டிப்பா உங்க கண்டிஷனுக்கு ஒத்துக்கறேம்பா. அவருக்கு போன வருஷம் நவம்பர்ல டெல்லிக்குப் பக்கத்துல பிராஞ்ச் மானேஜரா ப்ரோமோஷன் கிடைச்சு போயிருக்காருப்பா. இப்ப தனியாத்தான் இருக்காரு. எங்க கல்யாணத்துக்கு அப்புறம்தான் வீடு பார்த்து குடித்தனம் வைக்கணும். நடுல என்னோட டிரான்ஸ்பர்க்கு வேற அப்ளை பண்ணனும்.”

அப்பா காதில் போட்டுக் கொள்ளாத மாதிரி எழுந்து சென்றார்.

அடுத்த இரண்டு மாதங்களில் அக்காவின் கல்யாணம் மிகச் சிறப்பாக நடந்தது. புதிய உறவினர்களின் வருகையால் வீடு எப்போதும் சுறுசுறுப்பாக இருந்தது. ஆனால் காயத்ரிதான் எதிலும் ஒட்டாது எதையோ இழந்துவிட்ட மாதிரி இருந்தாள்.

அன்று அக்காவின் கணவர் லேப்டாப்பில் ஒரு புதிய தமிழ் படத்துக்கு அனைவருக்கும் புக் பண்ணப் போவதாகச் சொன்னார். அப்பா சினிமா பார்ப்பதில்லை. காயத்ரி வரவில்லை என்று சொல்லிவிட்டாள்.

காலைக்காட்சி சினிமாவுக்கு அவர்கள் சென்றனர். அப்பாவும் காயத்ரியும் மட்டும் வீட்டில் தனித்து விடப்பட்டனர்.

அப்பாவின் அடுத்த கடமை காயத்ரியின் திருமணம்தான். ஆனால் அவள் அவரிடம் அதுபற்றி எதுவும் பேசாமல் சமையல் செய்து கொண்டிருந்தாள்.

முருங்கைக்காய் சாம்பார் வாசனை வீட்டைத் தூக்கியது.

அப்பா மிகவும் யோசித்தார்.

‘வேறு வழியில்லை எனில் அவள் விருப்பப்படி அவனையே கல்யாணம் செய்து கொள்ளட்டும். அவள் போக்கிலேயே விட்டுவிடுவதுதான் பெருந்தன்மை. இதை பெரிது படுத்தி தன்னையே அசிங்கப் படுத்திக்கொள்ள வேண்டாம்.’ என்று முடிவு செய்தார்.

எழுந்து சமையலறைக்குச் சென்றார்.

நேராக விஷயத்துக்கு வந்தார்.

“காயத்ரி, அடுத்தது உன் கல்யாணம்தான். நான் ஏற்கனவே என்னோட விருப்பத்தை உன்னிடம் சொல்லிட்டேம்மா…ஆனா இப்ப நீ என்ன சொல்றயோ அதுமாதிரி நான் நடத்தி வைக்கிறேன்.”

“எனக்கும் நல்ல ஜாதகம் பார்த்து நீங்களே கல்யாணம் பண்ணி வைங்கப்பா.”

அப்பா அதிர்ந்தார். “என்னம்மா சொல்றே? என்ன ஆச்சு உன் காதலுக்கு?”

“பிரதமர் மோடியோட அதிரடி பணமதிப்பு குறைப்பு திட்டத்துல அவர் கல்கத்தாவின் லோதாவுக்கும், சென்னையின் சேகர் ரெட்டிக்கும் கோடிக்கணக்கான புதிய ரெண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை கட்டுகட்டா மாற்றிக் கொடுத்து, போன டிசம்பர்லயே அது ப்ரூப் ஆகி இப்ப டெல்லி ஜெயில்ல கம்பி எண்ணிக்கிட்டு இருக்கார்ப்பா…லட்சக் கணக்குல கமிஷன் வாங்கினாருன்னு பேங்க்ல இருந்து அவர இப்ப நீக்கிட்டாங்க. பேப்பர்லயும், டிவிலயும் இவரால எங்க பேங்க் சந்தி சிரிச்சு ரொம்ப கேவலமாயிருச்சுப்பா…”

“………………………..”

“காதல் என்பது ஒரு இன்பமான சிலிர்ப்பு. அந்த சிலிர்ப்பு கல்யாணத்தில் முடிந்தால் அது இன்பத்தின் ஏகாந்தம். பொய்யர்களும், திருடர்களும் காதலிக்கவே கூடாதுப்பா… காதல் தோல்வியின் வேதனையும், வலியும் கொடுமையானதுப்பா. நல்லவேளையாக திருமணத்திற்கு முன்பே அவரைப்பற்றி எனக்குத் தெரிய வந்தது. நான் அவரிடமிருந்து மீண்டுவிட்டேன். என்னை நன்றாக வளர்த்து கல்வி புகட்டிய நீங்களே எனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுங்கப்பா.”

காயத்ரி அப்பாவின் மார்பில் சாய்ந்துகொண்டு குலுங்கி அழுதாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *