மிருக உத்தி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 4, 2021
பார்வையிட்டோர்: 2,202 
 
 

(2003 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

குளிரில் விடிகாலை உறைந்திருந்தது. சோர்வும் உறக்கக் கலக்கமுமாக உற்சாகம் பிறக்கவில்லை. வாசல் திண்ணையில் அமர்ந்தவாறு, சூழ்ந்திருந்த மரம், செடிகளை அர்த்தமின்றி வெறித்தேன். எங்கும் புகை கவிந்த பனிமூட்டம். மாமரத்தி லிருந்து முத்துத் துளிகள், சொட்டுச் சொட்டாய் தரையை நனைத்தன.

கூ…..வ்!, கூ………வ்!, எங்கோ கிளையொன்றில், லதா மங்கேஷ்கார், தொனியில் குயில் கூவத் தொடங்கியது. சுருதியிசை, குருதிநாளங்களை தொட்டுலுப்புவது, ஒரு ஆனந்த லாகிரிதான்! குயிலிசைதான் எத்தனை இன்னிசை! சூட்சும, ராகபாவ, குழைவு. இந்தத் தேனாமிர்த இசை லயத்திலே, மயங்கிச் சிலிர்த்து, மனதைப் பறிகொடுக்காதோர், யார் உளர்?

நமது கவி பாரதிக்குக் கூட குயில்பாட்டு ஆன்மாவின் கூவலாக உள்ளுணர்த்தியிருக்கிறதே! “குக்குக்கூ, என குயில் பாடும் பாட்டினிலே, தொக்க பொருளெல்லாம் தோன்றியதென் சிந்தைக்கே கன்னிக் குயில் அன்று காவிடத்தே பாடியதோர் இன்னிசைப் பாட்டினிலே, யாதும் பரவசமாய்…..!” என தன் குயில் பாட்டினிலே பாரதி, பரவசமடைந்துள்ளான்.

ஒவ்வொரு காலைக் கருக்கலிலும் குயிலிசை இயல்பாய் தொடங்கி, ஆற்று நீரோசையாக, பிரவாகம் கொள்ளும். ஒற்றைக் குயிலின், சோக ஆலாபனை உயிரணுக்களை சுண்டியிழுக்கும், சில பொழுதுகளில் அவை போட்டிக்கு கூவி தமது ஆளுமையை பறைசாற்றிக் கொள்ளும். கிராமத்து விடியலை அர்த்தமுள்ள தாக்குவதில், குயில் கூவுகை, பிரதான பங்கு வகிக்கும்.

என்னுள் ஒரு கேள்வி தீவிரமாய் எழும். குயிலின் நெக்குருக வைக்கும் இனிய சுருதி சோகமயமானதா? இன்பமயமானதா? இது பற்றித் தீர்க்கமான ஒரு முடிவிற்கு வர இயலாத ஒரு மயக்கநிலை, எனக்கெப்போதும் உண்டு. அதன் பாடுபொருளில், இனம் புரியாத சோக நெருடல் உள்ளழுந்திக் கிடக்கிறது, என்பது மறுக்கவியலாத உண்மை தான்.

சோகம் என்பது ஒரு கை ஓசை மட்டுமல்லவே. அதன் மறுபக்கம் இன்பம் என்று ஒன்றிருக்கிறதே! அதையெப்படியது வெளிப்படுத்துகிறது எனது குயிலாய்வு இன்னும் முற்றுப்பெற வில்லை. ஆவி பறக்கும் தேனீரைக் கொண்டுவந்து பிரியமுடன் நீட்டினாள் மனைவி.

இது ஒரு உற்சாகமான சமாச்சாரம்தான், இந்த விடிகாலை வேளையில் ……..? (நான் தேனீரைச் சொன்னேன்). இசைக்குயில், ஜானகியின் பழைய பாடலொன்று நெஞ்சில் இனித்தது.

குயிலே! குயிலே, உந்தன் கீதங்கள் கேட்காதோ? உயிரே! உறவே, அந்தக் காலங்கள் வாராதோ…….?

வாஞ்சையோடு ஏறிட்டுப் பார்த்தேன், மனைவியை. குயிலே! என்று இவளை அழைக்கலாமா? ஒரு இருபது வருடங்களுக்கு முன், தெரியாத்தனமாக அப்படியெல்லாம் அழைத்திருக்கிறேன். இப்போது கூடாது! நெற்றிப்பரப்பின் இரு முனையிலும் நரை படர்ந்திருக்கிறது. என்பதற்காக அல்ல! இவளது குரல் பல சந்தர்ப்பங்களில் வீட்டுக்குள்ளிருந்து தெரு முனை வரை கேட்கும். கர்ண கடூரமாய், அபஸ்வரமாய் கூட, அது ஒலிக்கும். இவளை அப்படி அழைத்து குயிலைக் கொச்சைப்படுத்துவது, அநியாயம்.

ஒவ்வொரு காலைப் பொழுதிலும் ஏதாவது ஒரு விண்ணப்பம், அல்லது வேண்டுகோள், இவளிடமிருந்து திடீரென கெசட் அறிவித்தல் போன்று வரும். அவை அதிகார தொனியிலோ, நளின பாவனையிலோ வரலாம். அது சூழலைப் பொறுத்தது. அரசியல்வாதிகளைப் போன்று, “பார்க்கலாம்!” என்று முத்தாய்ப்பு வைப்பேன்.

இந்த வைகறைப் பொழுது இருக்கிறதே, அது வயதான தம்பதியினருக்கு கொஞ்சம் நெருக்கமான தருணம் தான். நிறைய மனம் விட்டுப் பேசிக் கொள்ளலாம். ஏனைய பொழுதுகளில், இளசுகளின் மேலாதிக்கம் ஓங்கி நிற்கும். இது தவிர இளைய தலைமுறையினரின் உறக்கம் களைய, சூரியன், சுள்ளென்று உறைக்க வேண்டும்.

“எங்கட ஆடு, ராவெல்லாம் தொண்ட கிழியக் கத்துற, தீன் திண்ணாறோமில்ல! ஒரு கிடாயக் கொணாந்து பட்டிக்குப் போடோணுமப்பா. நீங்க கவனமில்லை”. விண்ணப்பம் கையளிக்கப்பட்டதை, உறுதி செய்யுமாப் போல கொட்டிலில் இருந்து காட்டுத்தனமாகக் கத்தியது, எங்கள் பெண் ஆடு.

“நாளைக்கு ஒரு கிடாய் கொணாந்து, பட்டிபோட்டிட்டு திருப்பிக் கொடுக்கோணும்!”

எனது பதிலில் தெரிந்த உறுதிப்பாட்டில் அவளது முகத்தில் திருப்தி பரவுகிறது. நண்பன் ரஸாக்கின் வீட்டில் நிறைய ஆடுகள் உள்ளன. அதற்கும் மூன்று மைல்களைத் தாண்டிப் போக வேண்டும். இது விடயமாக ஒரு நாள் ரஸாக்கிடம் கதைத்தேன்.

“இது ஒரு சின்னப் பிரச்சினை மச்சான்! என் கிட்ட வாட்டசாட்டமான ஒரு பங்காளிக்கிடா இருக்கி, குதிரை மாதிரி. நீ அதைக் கொண்டு போய், காரியத்தை முடிச்சுப் போட்டு, திருப்பி கொண்டுவந்துதா! அத நான் கிட்டடியில் ஐயாயிரம் ரூபாய்க்கு வாங்கினேன்” என்றான்.

ஓரிரண்டு சிறிய ஆட்டுக்குட்டிகள் எங்கள் தோட்டத்திலும் துள்ளிக் குதித்து விளையாடுவதைப் பார்க்க, எனக்கு மட்டும் ஆசையில்லாமல் போய்விடுமா? ஒரு நேரத்தை ஒதுக்கி, அங்கு போய் வருவதில் உள்ள சிரமமே இந்தத் தாமதத்திற்குக் காரணம். இனியும் காலம் தாழ்த்த க் கூடாது. எப்படியும் காரியத்தில் இறங்க வேண்டும்.

இன்று ரஸாக்கை சந்தித்ததில் பரம திருப்தி. அவன் ஒரு பெரிய ஆட்டுப்பண்ணையையே வைத்திருந்தான். பென்னம் பெரிய அழகான பங்காளிக் கிடாய் ஒன்றினைத் தெரிவு செய்து தந்தான். கொஞ்சம் முரண்டு பிடித்த போதும், ஒருவாறு சமாளித்து, கயிற்றைக் கெட்டியாகப் பிடித்தவாறே நடையிலேயே வீடு வந்து சேர்ந்தேன். மனைவி புதிய நிபந்தனை ஒன்றை விதித்தாள்.

“வயசுக்கு வந்த கொமருப்புள்ளைகள் ரண்டு வூட்டுக்குள்ள இருக்கிற, அதுகள்ட கண்ணுக்குப் படாம, ஆடுகள் ரண்டையும் தோட்டத்துக்குள்ள கொண்டு பெயித்திருங்க.”

நான் அவளை எரிச்சலோடு முறைத்துவிட்டு, தோட்டத்தின் நடுப்பகுதிக்குச் சென்றேன். இப்போது உள்ள வயதுப் பிள்ளைகளுக்கு எதுதான் தெரியாது. கால மாற்றமும், சூழலும் அவர்களை மனரீதியாக முதுமைக்குள் தள்ளிவிட்டன.

இதுதவிர, சும்மா சொல்லக்கூடாது. நமது தொலைக்காட்சி சேவைகள் குறித்து, பெருமைப்பட்டுக் கொள்ளலாம். இளமனது களில் பாலியல் உணர்வுகளைத் தூண்டிவிட, இருபத்தி நான்கு மணித்தியாலங்களும், அவற்றின் பங்கு அழுத்தமானது. தமிழ் சினிமா மோசமான பாலியலைப் புகுத்தி இளையவர்களின் மனதை அசுத்தப்படுத்தி, காசு சம்பாதிக்கிறது.

கலாசார சீரழிவுகளும், நெறிபிறழும் சுற்றுச் சூழல்களும், அவற்றினால் எழும் மன அழுத்தங்களும் வியாபித்த வண்ண மிருக்கின்றன. சமூக மாற்றங்கள் இப்படித் தலைகீழாகிப் போவதை, எப்படித் தடுத்து நிறுத்துவது? இவை குறித்த அலட்டல்கள் மனதைக் குடைந்தன. கிடாயைத் திடீரெனக் கண்ட ஆடு, அச்சத்தினால் பின் வாங்கித் தடுமாறுகிறது கிடாய் தாபத்தில் தும்முவதும், சிலிர்ப்பதுமாக கணங்கள் நீள்கிறது. ஆடுகள் இரண்டும், வேட்கை தணிப்பதில் உற்சாகமாகத் துள்ளிக் குதிக்கின்றன. கிடாயின் மன்மத அலறல் ஓங்கி, தோட்டத்து மரங்களை கிலி கொள்ளச் செய்தன.

இருட்டத் துவங்கியதும், ஆடுகளிரண்டையும், கொட்டிலில், கட்டிவிட்டு, களைப்போடு உறக்கத்தில் ஆழ்ந்து போனேன். பாதி ராத்திரி ஒரு மணியிருக்கும். ஆடுகளின் கத்தல் ஓங்கியொலித்தன. கழுத்திறுகி சாகப் போவதைப் போன்ற கோரமான கூக்குரல். டோர்ச் ஒளியைப் பாய்ச்சியவாறு கொட்டிலிற்கு விரைகிறேன். மனைவியும் பின்னால் ஓடி வருகிறாள். ஆடுகளின் கழுத்தில் கட்டியிருந்த கயிறு மாட்டுப் பட்டுச் சிக்கி, சுவாசம் விட முடியாதவாறு, மூச்சடைத்து சங்கடப் பட்டன.

கயிற்றுப் பிணையலின் சிக்கல் நீக்கி, ஒவ்வொன்றையும் வேறு வேறாக மரங்களில் கட்டினேன். “கிடாய, கட்டாம, சும்மா அவிழ்த்துவுடுங்கோ, ஆட்ட மட்டும் கட்டுங்கோ! பெண்ணை வுட்டுட்டு ஆண் எங்கயும் பெயித்திரப் போவதில்லை.”

அவள் ஆட்டுக்குச் சொன்னாளோ? அன்றி முழு ஆண் சமுதாயத்திற்கும் சேர்த்துத்தான் சொன்னாளோ, தெரியவில்லை. அவளது ஆலோசனையை அமுல்படுத்தினேன். பொழுது புலர்ந்தது. எந்த ஓசைகளுமில்லை. நேற்றுப் போட்ட களியாட்டத்தில் அவை களைத்துப் போய் ஓய்வெடுப்பதாக எண்ணிக்கொண்டேன். ஆறுதலாக வெளியே வந்து கொட்டிலை எட்டிப் பார்த்தேன். தலை கிறுகிறுத்து மூச்சு நின்று விடும் போலிருந்தது. பேரதிர்ச்சி! கிடாயைக் காணவில்லை. சுற்றுமுற்றும் தேடிப் பார்த்தேன். பெண் ஆடு மட்டும் சாவகாசமாக அசை போட்டுக் கொண்டிருந்தது. மூத்திர நெடி மூக்கைத் துளைத்தது.

மனைவியைத் திட்டித் தீர்த்தேன். கிடாயை கட்ட வேண்டாம் என்று ஆலோசனை சொன்னவளே அவள்தானே. எல்லாம் நாசமாகிவிட்டது. பெண்ணின் சொல்லைக் கேட்டதால் தான் இப்படியாகிவிட்டது. ரசாக்குக்கு என்ன பதில் சொல்வேன்? கிடாய் காணாமல் போய்விட்டது, என்று சொன்னால் அவன் நம்புவானா? அதன் பெறுமதியான ஐயாயிரம் ரூபாயைத் தண்டமாகச் செலுத்த என்னிடம் ஏது பணம்?

பித்துப் பிடித்தவனைப் போல் நின்று பலவாறு சிந்தித்தேன்.

கிடாய்க்கு என்ன நடந்திருக்கும்? திருடர்கள் யாரும் கடத்திக் கொண்டு போய், கசாப்புக் கடைக்கு கொடுத்து, இரவிரவாக காசாக்கியிருப்பார்களா? அது ரஸாக்கின் வீட்டைத் தேடிக் கொண்டு போயிருக்குமா? அதெப்படிச் சாத்தியம்? இப்பகுதி அதற்கு புதிய இடம். வழிதெரியாது, எங்காவது பாதையில் தறிகெட்டு சுற்றித் திரிகிறதா?

இது ஒரு தேவையில்லாத வேலை. இவளது பேச்சைக் கேட்டு இப்படிச் சிக்கலில் மாட்டிக் கொண்டேனே. நண்பனுக்கு என்ன பதில் கூறுவேன்?

“இஞ்ச எங்கேயெண்டாலும் மேஞ்சி கொண்டீக்கும். தேடிப் பார்த்து இழுத்து கொண்டு வாங்க.”

ஒரு காட்டமான பார்வையினால் அவளை முறைத்தேன். இப்படியான சந்தர்ப்பங்களில் மனைவி என்பவள், வாயை மூடிக்கொண்டு, மௌனமாய் இருப்பது மேலான செயல், என்பதினை இவள் எப்போது உணரப் போகிறாள்? மொத்தமான வேலித்தடி ஒன்றனை முறித்து கையில் எடுத்தேன்.

மனைவியை அடிப்பதற்காக அல்ல! கிடாய் எங்காவது நின்றிருந்தால், நாலு விளாசி, அதை இழுத்து வரத்தான். சுற்றுப் பகுதிகளில், தேடுதல், விசாரணை என்று எல்லாம் ஆயிற்று. ஆட்டைப் பற்றிய எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. பொலிஸில் ஒரு முறைப்பாடு கொடுக்கலாம் தான். எதற்கும் ரஸாக்கைக் கண்டு நடந்ததை சொல்ல வேண்டும்.

ரஸாக் பத்திரிகை படித்துக் கொண்டிருந்தான். என்னைக் கண்டதும் உற்சாகமாக வரவேற்றான். என் முகத்தில் மலேரியா பிடித்தவனின் சோர்வு. தயங்கித் தயங்கி நிலைமையை எடுத்துச் சொன்னேன். அவன் என் மீது ஒரு சந்தேகப் பார்வையினை உதிர்ப்பது போன்று நான் உணர்ந்தேன். ஆட்டின் விலை ஐயாயிரத்தை தந்தாலும் சரி, அதேபோல ஒன்றை வாங்கித் தந்தாலும் சரி எனக் கேட்பான் என்று எதிர்பார்த்தேன்.

“வா! என் கூட”, என்றவாறு என்னையழைத்துக் கொண்டு பின்புறம் சென்றான். ஆச்சரியம் நீங்கச் சில கணங்கள் எடுத்தன எனக்கு. காணாமல் போன கிடாய், அங்கு நிம்மதியாக அசை போட்டுக் கொண்டிருந்தது. சாம்பலும், மஞ்சளும், கலந்த அதன் விழிகளைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனேன்.

“மச்சான்! இதக் காட்டுவழியாகத்தான் கூட்டிச் சென்றேன். இது சரியாக இலக்கைக் கண்டு பிடித்து, எப்படி இங்கு வந்து சேர்ந்தது?”

ரஸாக் குழந்தைச் சிரிப்பொன்றை, உதிர்த்து விட்டுக் கூறினான்.

“மச்சான், மனிதனை விட விலங்குகளுக்கு சமயோசித புத்தியும், மோப்பம் பிடிக்கும் சக்தியும் அதிகம். அது புதிய இடங்கஞ்குப் போகும் போது, இடத்திற்கிடம், சிறுநீரைக் கழித்தவாறு செல்லும். திரும்பி வரும் போது அந்த மூத்திர நெடியை இனங்கண்டு முகர்ந்தவாறே இருப்பிடத்தை அடைந்து விடும். விஷயம் அவ்வளவுதான்.”

எனக்கு இது புதிய தகவலாகவும், அதிர்ச்சி தருவதாகவும், இருந்தது. அவன் மீண்டும் விபரித்தான்.

“மச்சான், விலங்குகளின் அனுபவ உலகம், மிக விசித்திர மானது. மோப்பம் பிடித்து சூட்சுமாக உணர்தலில் கூர்மை யுள்ளவை அவை. நன்றாக நாம் இவற்றை அனுமானித்தால் எளிதில் புரிந்து கொள்ளலாம். தமிழ்பட கதாநாயகர்களைப் போல, பல பேரோடு சண்டையிட்டு வீரத்தை நிலைநாட்டும், மிருகத்தைத் தான் பெண் மிருகம் சடுதியில் இணை சேர்த்துக் கொள்ளும். நாய்களைப் பொறுத்தமட்டில் பல கூட்டாகப் பின்னால் போனாலும், அவற்றையெல்லாம் கடித்துக் குதறி, வெற்றி கொள்ளுமே ஒன்று அதுதான் கதாநாயகன் அந்தஸ்த்துக்கு வரமுடியும்.”

இவ்வளவு விடயங்களையும் அறிந்து வைத்திருக்கிறானே. இவன் ஆடுகளை வளர்க்கிறானா? நாய்ப் பண்ணை வைத்திருக்கிறானா? என்ற சந்தேகமும் எனக்கெழத்தான் செய்தது. இந்த விலங்கினங்களின் ஹீரோ இஸத்தை கருத்தில் கொண்டு தான் தமிழ் திரைப்படங்களின் தலைவிதியை நிர்ணயித்தார்களோ, தயாரிப்பாளர்கள்? யார் கண்டார்கள். ஏதோ பெரிய சங்கடமொன்றிலிருந்து மீண்டுவிட்டேன். அதுவே பெரிய ஆசுவதம்.

வீட்டை அடைந்த போதும், மனைவியின் பரபரப்பு இன்னும் அடங்கவில்லை. கிடாய் அதன் இருப்பிடத்திற்கே போய்விட்ட விபரத்தை சொன்னேன் .

அவள் பற்கள் எல்லாம் வெளியே தெரிய உடல் குலுங்கிச் சிரித்தாள். எந்தப் பெண் வாய்விட்டுச் சிரித்தாலும், ஒரு அபாரக கவர்ச்சி வந்து விடுகிறது. இது அவர்களுக்கு கிடைத்த தனித்துவக் கொடை. என் மனைவியின் சிரிப்பில், ஒரு பத்து வயது குறைந்து இளமைத் தோற்றம் பெற்றுவிட்டதாய் நான் உணர்ந்தேன்.

– மல்லிகை ஜனவரி 2003 ஆண்டு மலர் – நிஜங்களின் வலி – சிறுகதைத் தொகுப்பு , மீரா பதிப்பகம், முதற்பதிப்பு: 23.05.2005

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *