தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 7,934 
 
 

மியாவ் மியாவ் பூனைக் குட்டியோடு விளையாடிக்கொண்டிருந்தான் விக்னேஷ்.

“”டேய் விக்னேஷ் இப்பவே சொல்லிட்டேன், நாம புதுசா பார்க்குற வீட்டுக்கு, உன்னோடு பூனை குட்டி வரக்கூடாது. என்ன புரிஞ்சதா?”

கணேஷின் கேள்விக்கு மௌனத்தைப் பதிலாக்கினான் விக்னேஷ்.

“”கஸ்தூரி உன் புள்ளை கிட்ட இப்பவே சொல்லி வை”

மியாவ்“”ஆமாம் நான் சொன்னா அப்படியே அப்பாவும் புள்ளையும் கேட்டுடுவீங்க” முணுமுணுத்த கஸ்தூரி, “”என்னங்க வாடகைக்கு வீடு பார்க்க, புரோக்கரோட இன்னிக்குத்தானே போறீங்க?” என்றாள் சப்தமாக.

* * *

“”சார் அம்சமான வீடு சார்… இதை விட்ராதீங்க பக்கத்துலயே கோயில், பையனோட ஸ்கூல், இதோ இங்க இருந்து ரெண்டு கிலோ மீட்டரில உங்க ஆபிஸ். பட்டுனு அட்வான்ஸைக் கொடுத்து அமுக்கி போடுங்க சார், யோசிக்காதீங்க”

புரோக்கர் வேதாச்சலம், பிள்ளை பிடிக்கும் ஆசாமி போல் பேசினான். வெற்றிலை, பாக்கைக் குதப்பிக் கொண்டிருந்தான். கணேசுக்கும் நல்ல வீடாகத்தான் பட்டது.

“”எதுக்கும் வீட்டுல ஒரு வார்த்தை”

“”அதெல்லாம் வேலைக்காகாது சார்… நம்மளே பார்த்தோமா, முடிச்சமான்னு போகணும்”.

கஸ்தூரி பற்றி பாவம், ஒன்றும் தெரியாதவன் இவன்.

“”எதைத்தான் என்கிட்ட சொல்லியிருக்கீங்க, இதைச் சொல்றதுக்கு?” சொல்லாமல் விட்டால் இப்படி பேசுவாள்.

போய் சொன்னாலோ, “”இப்ப எதுக்கு என்கிட்ட சொல்றீங்க? நீங்க பண்றதைத்தான் பண்ணப் போறீங்க” என்று அலுத்துக் கொள்வாள்.

“”சார் என்ன பேசாம இருக்கீங்க, முடிச்சிடலாமா?” புரோக்கர் வேதாச்சலத்திற்கு கமிஷன் வந்தால் போதும், கட்டண கழிப்பிடத்தை கூட யாரும் இல்லாத சமயத்தில் வாடகைக்கு பேசிவிடும் பலே ஆசாமி அவன்.

கணேஷ் “”பார்க்கலாம்” என்றான்.

“”நேத்து கூட ஒருத்தர் பார்த்துட்டு போயிருக்காரு சார்… விட்டா கிடைக்காது அவ்வளவுதான் நான் சொல்லுவேன்”.

“”சரி முடிச்சிடலாம்” என்றான் கணேஷ்.

இப்பொழுது இருக்கும் வீட்டில் தண்ணீர் பிரச்னை. கணேஷின் ஆபிஸ் மற்றும் விக்னேஷின் பள்ளிக்கூடம் இரண்டும் வெகு தொலைவில் உள்ளன. அது மட்டுமின்றி, வீட்டின் சொந்தக்காரர்கள் மாடியிலேயே இருக்கிறார்கள். அது போதாதா? தினமும் ஒரு நொட்டனை சொல்வார்கள்.

“”விடிய விடிய லைட் எரியுது சார்… கூடாதுன்னு முன்னாடியே சொல்லியிருக்கோம்ல”

“”விக்னேஷுக்கு பரீட்சை, அதான்”

“”அஞ்சாவதுதான படிக்கிறான், ஐ.ஏ.எஸ்- ஸô படிக்கிறான்?”

“”என் புள்ள என்ன படிச்சா உனக்கென்ன?” வெளியில் கேட்க முடியுமா, மனசுக்குள்ளேயே திட்டுவான் கணேஷ்.

இப்படி ஏதோ ஒரு பிரச்சினை சின்ன விஷயம் தொட்டு பெரிய விஷயம் வரை. இரண்டு பேருக்கு மேல் விருந்தாளிகள் வந்தால், “”ஏன் சார் வீடு முழுக்க ஒரே கும்பலை சேர்த்து வச்சிருக்கீங்க” என்பார்கள்.

சினிமாவுக்கு புறப்பட்டால், “”படம் முடியுதோ இல்லையோ ஒன்பது மணிக்குள்ள வந்திடுங்க” என்பார் வீட்டுக்காரர். எல்லாம் கணேசுக்குள் கோபமாய் திரண்டு இருந்தது.

சில நாட்களுக்கு முன்பு பூனைக்குட்டியால் வந்த பிரச்சினையால், பூனைக்குட்டி மீதும் வீட்டுகாரர் மீதும் சம பங்கு கோபத்தில் இருந்தான் கணேஷ்.

* * *

சில நாட்களுக்கு முன்பு:

“”என்னங்க, கொஞ்சம் விக்னேஷை என்னன்னு கேளுங்க” ஆபிஸிலிருந்து வந்து வீட்டிற்குள் நுழைந்ததும் நுழையாததுமாய் கணேஷிடம் கஸ்தூரி வத்தி வைத்தாள்.

கணேசுக்கு பிரச்னை புரிந்து விட்டது.

“”விக்னேஷ் இங்க வா” அதட்டலாய் கூப்பிட்டான்.

“மியாவ் மியாவ்’ என்று குதூகலமாய் குதித்தபடியே வந்தான் விக்னேஷ்.

“”என்னப்பா?”

“”அந்தப் பூனைக் குட்டியை எங்கயாவது கொண்டு போய் விட்டுட்டு வான்னு சொன்னேன்ல”

“”இல்லப்பா அது ரொம்ப நல்ல குட்டிப்பா நம்மளே வளர்க்கலாம்ப்பா”

“”சொன்னா புரிஞ்சுக்க மாட்டியா, உனக்கும் எனக்கும் பூனை வளர்க்கறதை பத்தி என்னடா தெரியும்?”

“”என் ப்ரெண்ட்ஸ் ரெண்டு மூணு பேர் வீட்ல வளக்குறாங்கப்பா”

“”ஓ அவங்கதான் உன்னை தூண்டிவிட்டதா, அவங்களை உதைச்சா சரியாப் போயிடும்” கோபமானான் கணேஷ்.

பேசாமல் இருந்தான் விக்னேஷ்.

“மியாவ் மியாவ்’ என்ற சப்தம் விக்னேஷ் அறையிலிருந்து வந்தது.

“”இந்தாடா நீ கேட்ட பால்” டங்கென்று ஓங்கி பால் டம்ளரை வைத்தாள் கஸ்தூரி.

கணேஷ் அவளையும் முறைத்தான்.

“”இந்தட்சணம் பூனை குட்டிக்கு பால் கொடுக்கணுங்கறான், நான் என்ன பண்றது” கஸ்தூரி.

இதையெல்லாம் பொருட்படுத்தாத விக்னேஷ், தனது மேஜையிலிருந்த இங்க் ஃபில்லரில் பாலை நிரப்பி, பூனைகுட்டிக்கு புகட்டிக் கொண்டிருந்தான். மிகவும் சிறிய குட்டி அது.

கொஞ்ச நாட்களுக்கு முன்பு, விக்னேஷ் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட போன போது, மைதான ஓரத்திலிருந்து கண்டெடுத்தான் இந்தக் குட்டியை. அங்கேயே விட்டுவிட்டு வர மனமில்லாமல் தூக்கி வந்தான்.

கணேஷ் எவ்வளவு சொல்லியும், விக்னேஷ் அதனுடனேயே இருப்பதும், அதைக் குளிப்பாட்டுவதும், விளையாடுவதுமாய் நேரங்கழித்தான். சதா அவன் அறையிலிருந்து “மியாவ் மியாவ்’ என்ற சப்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். எங்கு சென்றாலும் பூனைக்குட்டியையும் அழைத்துச் செல்வதும், அதனுடனேயே பேசிச் சிரிப்பதும், தூங்குவதும் என பூனை பைத்தியம் ஆகிவிட்டான் விக்னேஷ். பல நாள் பள்ளிக்கூடத்திற்கும் மட்டம் போட்டு விட்டு பூனையோடு கொஞ்சிக் குலாவுவான். பொறுமையிழந்தாள் கஸ்தூரி.

“”ஹலோ புளு க்ராஸ்” – கணேஷ் போன் செய்து வரவழைத்தான்.

அவ்வளவுதான் அன்று முழுவதும் ஒன்றும் சாப்பிடாமல் ரகளையே செய்து விட்டான் விக்னேஷ். விக்னேஷ் செய்த லூட்டியில் தெருவே கூடிவிட்டது.

வேறுவழியின்றி புளு க்ராஸிலிருந்து, பூனைக் குட்டியை எடுத்துச் செல்ல வந்த நபர்களை திருப்பி அனுப்ப வேண்டியதாயிற்று. இது எதையும் அறியாத பூனைக் குட்டியோ கூட்டத்தைப் பார்த்து “மியாவ்’ என்றது.

“”நோ, நோ… நோ… மிஸ்டர் கணேஷ் முன்னாடியே சொல்லியிருக்கேன், நாய், பூனை, புலிக்குட்டி இதெல்லாம் இங்க வளர்க்கக் கூடாதுன்னு. ஓங்கி ஒரு அறை விட்டு பூனையை அவன் கிட்டயிருந்து பிடுங்கறதை விட்டுட்டு, பையன் சொல்றானாம், இவரு கேக்குறாராம்” என்று கோபமும், கிண்டலும் நக்கலுமாக சிரித்தார் வீட்டுக்காரர்.

“”இப்ப என்ன பண்ணனுங்கிறீங்க?” கோபமானான் கணேஷ்.

“”பூனைக்குட்டி மண்ணாங்கட்டி இதெல்லாம் இங்க இருக்கக் கூடாது”

“”கவலைப்படாதீங்க நாங்களே இங்க இருக்க மாட்டோம்”

* * *

தற்பொழுது:

“”சார் அம்சமான வீடு சார் இதை விட்ராதீங்க” புரோக்கர் வேதாச்சலம் சொன்ன அந்த அம்சமான வீட்டில் குடியேறி, கணேஷ், கஸ்தூரி, விக்னேஷ் மூவரும் ஒரு வழியாக செட்டில் ஆனார்கள்.

வெளிநாட்டில் இருக்கும் தொல்லை தராத வீட்டுச் சொந்தக்காரர். úக்ஷமமாய் அங்கேயே இருக்கட்டும் என்று வாழ்த்தினான் கணேஷ்.

ஆனால் இந்த வீட்டில் ஒரு புதுப் பிரச்சினை காத்திருந்தது மூவருக்கும்.

மாட்டினால் தொலைந்தான் புரோக்கர் வேதாச்சலம்.

சொல்லி வைத்தாற் போல் அடுத்த ஓரிரு நாட்களில் வந்து வசமாய் கணேஷிடம் மாட்டிக் கொண்டான், புரோக்கர் வேதாச்சலம்.

“”ஏன்ய்யா நீ கேட்ட புரோக்கரேஜை கரெக்டா கொடுத்தேனா… இல்லையா? அப்பறம் ஏன் இப்படி ஒரு வீட்டை தலையில கட்டிட்ட?” என்று கோபமானான் கணேஷ்.

“”அப்படி என்ன சார் அதுல பிரச்சினை?”

“”எங்களுக்கு முன்னாடி ஒரு எலி குடும்பமே அங்க வந்து குடியேறியிருக்குய்யா… எங்க பார்த்தாலும் எலியா ஓடுதுய்யா”

“”இது ஒரு பிரச்சினையா சார், ஒரு பூனையை வாங்கி வளர்த்தா போச்சு, பூனை வாசனை பட்டாலே எலி வராது” என்று சிரித்தான் புரோக்கர் வேதாச்சலம்.

“”பூனை ஏற்கெனவே இருக்கு” என்றான் கணேஷ்.

– ப்ரணா (செப்டம்பர் 2013)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *