கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 5, 2022
பார்வையிட்டோர்: 4,122 
 
 

பேருந்தை விட்டிறங்கிய செல்வியால் வேகமாக நடக்க முடியவில்லை . குழந்தை லல்லிக் குட்டி காத்திருப்பாளே என்று மனம் தவித்தாலும், சற்று வேகமாக நடந்தால், முதல் நாள் வாங்கிய உதையில் நெறிகட்டிக் கொண்டாற் போல், தொடை வலித்தது.

தொடையில் மட்டுமா மிதித்தான்…? இடுப்பு, வயிறு, முகம் என்று கண்ணு மண்ணு தெரியாமல் போட்டு மிதித்ததில், செல்விக்கு காலோடு சிறுநீரே வெளியேறி விட்டது!

அப்படியும் மாரிமுத்துவின் ஆவேசம் அடங்கவில்லை. “மூஞ்சி, முகறையெல்லாம் பேத்துடுவேண்டி…. நாயே! வாடா போடான்னா பேசறே?”

நச்சென்று மூக்கைப் பார்த்து குத்தியதில் மூக்குடைப்பட்டு ரத்தம் வழியத் தொடங்கி விட்டது. நினைவு வந்த போது, நாலுவயசு லல்லிக்குட்டி, கை உடைந்த ‘தன்னுடைய பொம்மையை மடியில் போட்டுக்கொண்டு, தானே பேசிக்கொண்டிருந்தாள். செல்வி கண்விழித்துக் கொண்டாள் என்று தெரிந்ததும், லல்லிக்குட்டி ஓட்டமாய் ஓடி வந்து, ‘அம்மா’ என்று, அருகே அமர்ந்து கொண்டாள்.

செல்விக்கு அழுகையும், ஆற்றாமையும் பீரிட்டுக் கொண்டு வந்தது. ‘நீ போய் விளையாடு கண்ணு!’ என்றவாறே எழுந்து நின்ற போது, வீடே தட்டாமாலை ஆடியது.

வீட்டின் நிசப்தத்திலிருந்து மாரிமுத்து வெளியே போய்விட்டான் என்பதை யூகிக்க முடிந்தது.

கரண்டு பில், தொலைபேசிக் கட்டணம் என்று எதையுமே கட்ட முடியவில்லை. சிவப்பு எச்சரிக்கைக் கடிதம் இன்றும் வந்து கிடந்தது. செல்வியின் சம்பளத்தில், வீட்டுச் செலவுகளை சமாளிக்கவும், குழந்தையின் பால்மாவுக்குமே சிரமம்தான். இந்த மாதம் மின்சாரக்கட்டணம் கட்டினால், அடுத்த மாதம் தொலைபேசிக் கட்டணம் கட்டுவாள். உன்னைப்பிடி, என்னைப்பிடி என்று போராடுவதே வாழ்க்கையாய்ப் போய்விட்டது.

இதில் தண்டச்சோறு தின்று கொண்டு, வெட்டி அதிகாரமும், நொட்டைச் சொல்லுமாய் வளைய வரும் மாரிமுத்துவிடம் என்றாவது இப்படித் தாங்கமாட்டாமல் வெடித்துவிட்டால், இதுதான் கதி! அடித்து, துவைத்து, துவம்சம் செய்து விடுவான். மாரிமுத்து சம்பாதிப்பது அவனுடைய குடிக்கும், அவ்வப்போது அவன் படுக்கப் போகும் ‘பிலிப்பினோக்காரி’க்கும் கொடுக்கவுமே சரியாக இருந்தது. நாலாவது மாடி குடியிருப்பில் உள்ள ‘அசோ கிழவி’யிடம் லல்லிக்குட்டி சமத்தாகக் காத்திருந்தாள். குழந்தையைக் கூட்டிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தபோது, வாயைத் திறந்து வைத்துக்கொண்டு ஒரு சினைப்பன்றியைப் போல் மல்லாந்து, படுத்துக் கிடந்தான் மாரிமுத்து.

கட்டில் கிடந்த கோலத்திலும், மட்டரக செண்டின் வாடையிலிருந்தும், இன்றும் ‘பிலிப்பினோக்காரி’ வந்து போயிருக்கிறாள் என்று தெரிகிறது. முதன்முதலாகத் தெரிய வந்தபோது, கொதித்துப்போய் சண்டை போட்டதில், ஒரு பல் உடைந்தது தான் மிச்சம். ஒரு பக்க செவிப்பறையே கிழிந்து போய் விட்டதோ என்பதுபோல், ஒரு வாரத்துக்கு செல்விக்குக் காது வலித்தது. புழுத்த வார்த்தைகளால் மாரிமுத்து அவளைத் திட்டினான். உன்னாலே ‘அது’ முடியுமா? ‘இது’ முடியுமாடி? என்றெல்லாம் அவளோடு ஒப்பீடு செய்து அவன் கேட்ட நாராசத்தில், அக்கணமே உயிரையே விட்டு விடலாமா என்று ஒரு கணம் தோன்றி விட்டது. ஆனால் லல்லிக்குட்டியை நினைத்தபோது சாவதொன்றும் அப்படி சுலபமாக இல்லை.

இத்தனைக்கும் மாரிமுத்து ஒன்றும் கட்டிக் கொண்டவனல்ல. செல்விக்குத் தாலி கட்டிய புருஷன், சங்கையா, கப்பல் பட்டறையில் நடந்த தீ விபத்தில் செத்துப் போனான். நாதியற்ற மரமாய் அவள் நின்றபோது, அவளது மூவறை வீட்டில், வாடகைக்குத் தங்க வந்தவன் தான் மாரிமுத்து. இருட்டுக்குக் கிட்டிய குருட்டுக் காமமாய் மாரிமுத்துவுக்கு அவலாகிப் போனாள் செல்வி. சின்ன வயசு. அவளுக்கும் தான் அப்போது வேண்டியிருந்தது. ஆனால் அந்த பலவீனத்தாலேயே, அவளை புரட்டி எடுப்பான் என்பது அன்று தெரியவில்லை . அவனது அடி, உதையி லிருந்து எப்படி தப்பிப்பது என்பதே இப்போதெல்லாம் நித்ய கர்மமாகி விட்டது.

இந்த நேரத்தில் தான் செல்வி வேலை செய்து வந்த பேக்டரியில் ஆட்குறைப்பு செய்ததில், வேலை போய் விட்டது. வேறு வழியில்லாமல், கிடைத்த வீட்டுவேலைக்கே போகத் தொடங்கினாள்.

வீட்டு ஜன்னல் கம்பிகளை எல்லாம் துடைத்து, குசினி அலமாரிகளையெல்லாம் துடைத்து, கழிவறைகளைக் கழுவி, வாசனை தெளித்து, வீடு முழுக்க துடைத்து சுத்தப்படுத்தி விட்டு, தேவையாயின் துணிகளுக்கும் இஸ்திரி போட்டுக் கொடுத்து விட்டு, வீட்டுக்கார அம்மாவிடம் நாற்பதோ, ஐம்பதோ வாங்கிக் கொண்டு, வீடு திரும்புவாள், ஆனால் இதுவும் தினசரி கிடைப்பதில்லை. வாரத்தில் மூன்று நாட்கள் கிடைப்பதே அரிது.

இந்த நேரத்தில் தான் இவளது கஷ்டம் அறிந்து, எலிசபத் அம்மா தன்னுடைய தம்பி விக்டரின் வீட்டுக்கு வேலைக்கு அனுப்பினாள். விக்டருக்கு வாசலில் வந்து நின்ற பெண்ணைப் பார்த்ததும் வந்த எரிச்சல் இம்மட்டு அம்மட்டல்ல. அதுவும் எலிசபெத் அனுப்பியிருக்கிறாள் என்ற போது, இன்னும் கூடக் கோபம்தான் வந்தது.

காலையிலிருந்தே நல்ல பசி. போன வாரம் தான் இனிப்பு நீர் வேறு தொடங்கியிருந்தது. சாப்பாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கணும் என்பதற்காக, டயட் எடுக்கிறேன் பேர்வழி என்று, தானே எதையோ செய்து சாப்பிடப்போய், அது வேறு வயிற்றுக்கடுப்பைக் கொடுத்தது. அப்போது தான் எலிசபத் கேட்கிறாள், ‘காலாகாலத்தில் கல்யாணம் செய்திருந்தால், இப்படிக் கிடந்து கஷ்டப் படணுமா?’

கல்யாணமா? அந்த கருமத்தை நினைத்தாலே அவருக்கு எரிச்சலாயிருந்தது. 60 வயசில் இன்றும் அவரால் யார் தயவுமின்றி தனித்தியங்க முடிந்தது. இந்த எழவெடுத்த இனிப்பு நீர் பற்றிச் சொல்லப் போகத்தானே, சட்டி பானைக்குள் உழலும் அக்காவெல்லாம் புத்திமதி சொல்லப் போயிற்று? | -உர்ரென்று முறைத்துக் கொண்டு ஹாலில் உட்கார்ந் திருக்கும் விக்டர் அய்யாவைப் பார்க்கவே பயமாக இருந்தது. நல்ல படிப்பு, நல்ல உத்தியோகத்திலிருந்து இப்பதான் விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு ஹாயாக வாழ்கிறார். ஆனால் ‘கொஞ்சம் முன்கோபி. மற்றபடி அவன் தங்கம்தான்’ என்று எலிசபத் அம்மா சொன்னதை நம்ப முடியவில்லை.

பார்க்க அவ்வளவு இளமையாக இருந்தார், விக்டர் அய்யா. ஆனால் அந்த சிடுசிடுத்த மூஞ்சி தான் கொஞ்சம் பயமாக இருந்தது. வீடெல்லாம் சுத்தப்படுத்திவிட்டு, துணிகளையும் இஸ்திரி போட்டுக் கொடுத்துவிட்டு, வந்த போது, வரட்டு வரட்டென்று வெறும் ரொட்டித் துண்டு களை, எதிலோ முக்கி சாப்பிட்டுக்கொண்டிருந்த விக்டரைப் பார்க்க செல்விக்கு என்னமோ போலாகிவிட்டது.

– “அய்யா ! நான் வேணும்னா சின்னதா ஒரு குழம்பு வச்சிட்டுப் போகட்டுங்களா?” விக்டர் பேசாமல் அவளைப் பார்ப்பதையே சம்மதமாய் எடுத்துக் கொண்டாள். பிரிட்ஜைத் திறந்து பார்த்த போது, மீனும், கோழியும்,

சைவமும் எல்லாமே இருந்தது. மீனைக் கழுவி சுத்தப் படுத்திவிட்டு, வெங்காயம், இஞ்சியோடு மற்ற மசாலாவும் சேர்த்து அரைத்து தாளிப்பும், தக்காளியும், கறிவேப்பிலையும் கொஞ்சம் புளிக் கரைசலுமாய் மீன் துண்டங்கள் போட்டு தளதளவென்று, கறி கொதித்து வரும்போது துளி கொழுப் பற்ற பால் கலந்து இறக்கியபோது, மீன்குழம்பு வாசம் விக்டரின் நாவில் எச்சிலைக் கொண்டு வந்தது.

‘அட, கச்சாங் பாஞ்சாங் பயித்தங்காய் பெரட்டல்’ கூட இருக்கிறதா?’ நாக்கு சொட்டச் சொட்ட ரசித்து உண்டார்.

விக்டர் சாப்பிடுவதைப் பார்த்தபோது செல்விக்கு கண்ணில் நீர் நிறைந்து விட்டது. இந்த சாதாரணக்கறியையா இப்படி ருசிச்சு சாப்பிடுறார்? மறுநாளிலிருந்து, அய்யாவுக்கு ‘டைபட்டிக்’ என்பதால் சோறுக்குப் பதிலாக ‘ஆட்டா’ மாவோடு கனிந்த பூவம்பழத்தையும் சேர்த்துப் பிசைந்து, மெத்து மெத்தென்ற சப்பாத்தியும், விதம் விதமாய் குழம்பில், உப்பு, புளி, மிளகாய், எண்ணெய் என எல்லாமே பார்த்துப் பார்த்து பக்குவமாய் செல்வி சமைத்துப்போட, விக்டர் அய்யாவின் இனிப்புநீர் கூட மட்டுப்பட்டு விட்டது. வீடே கண்ணாடிப் பெட்டிபோல் அவ்வளவு துப்புரவாக இருந்தது.

வாரத்தில் மூணு நாளைக்கு மட்டுமே போய்க் கொண்டிருந்த செல்வி, இப்பொழுது தினமும் போகிறாள். மாரிமுத்துவை போலீசை அழைத்து, வீட்டை விட்டே விரட்டிவிட்டாள். எல்லாமே விக்டர் அய்யாவின் உதவியால் தான்.

‘ஹ்ம்ம், என்ன இருந்தாலும் படிச்சவுங்க படிச்சவுங்க தான்! அவுங்க பக்குவமே வேறதான்!’

அடுத்தவாரமே செல்வியின் மனசைத் தொட்ட சம்பவம் வேறொன்று நடந்தது. அன்று ‘லல்லிக் குட்டிக்கு சரியான காய்ச்சல். குழந்தையை ‘அசோ’விடம் விட்டுவிட்டு எப்படி வருவது என்று அவள் தவிக்க, ‘ஏன் விட்டுட்டு வரணும்? குழந்தையை உடனே இங்கேயே கூட்டிட்டு வா?’ என்றதோடல்லாமல், மருத்துவரிடம் தானே கொண்டு போய்க் காட்டிவிட்டு, மருந்தை தானே குழந்தைக்கு புகட்டினார்.

செல்வி வீட்டுவேலை முடித்து வரும் வரை, அய்யா, குழந்தையை மடியில் இருத்தி, விளையாட்டுக் காட்டினார். ‘பாபா பிளேக்ஷிப்’ பாடலை திருத்தமாய் லல்லிக்குட்டிக்கு சொல்லிக் கொடுத்தார். செல்வி அப்படியே உருகி நின்றாள். இந்தப் பிள்ளைக்கு அப்பனான சங்கையாவாகட்டும், இடையில் வந்த மாரிமுத்துவாகட்டும், ஒருநாளாவது இப்படி அருமையாய் இந்த குழந்தையை மடியில் இருத்தி கொஞ்சியதாக சரித்திரம் உண்டா ?

லல்லிக்குட்டி அன்று விக்டர் அய்யாவை விட்டு வரவே மறுத்தாள். விக்டருக்கு இந்த குழந்தையின் வரவு ஒரு நூதன அனுபவமாக இருந்தது. எங்கோ பட்டுத் துளிர்த்த, செடியின் பசுமையால் அவரும் மருகி, மருகி நின்றார்.

இரண்டே நாட்களில் அய்யாவுக்கும் காய்ச்சல் வந்து விட்டது. கட்டிலில் காய்ச்சலாகப் படுத்துக் கிடந்த அய்யாவைப் பார்த்த செல்விக்கு துணுக்கென்றாகி விட்டது. ‘என்ன இது? லல்லியின் காய்ச்சல் அய்யாவுக்கும் ஒட்டிக் கிடுச்சா?’ சூடாய்க் கஞ்சி காய்ச்சினாள். ‘தவ்’வும், மற்ற காய்கறிகளும் சேர்த்து சுவையான ஒரு ‘கோரேங்’ செய்தாள். மாங்காய் ஊறுகாய் எடுத்து வைத்தாள். அப்பளம் சுட்டு, சின்ன கருவாட்டுத்துண்டு ஒன்றும் பொரித்துக் கொண்டு போனபோது, சாப்பிடவே மறுத்தார் விக்டர்.

சிங்கப்பூரியர்களுக்கு எங்காவது கஞ்சி பிடிக்குமா? சூடான ‘சைனீஸ் சூப்புக்கும், ‘ஹாவ்க்கியன் மீ’க்கும் நாவு ஏங்கியது. ஆனால் செல்வி விடவில்லை. வலுக்கட்டாயமாய் அவருக்கு கஞ்சி புகட்டினாள். அவருக்கே வெட்கமாகிப் போனது. ஒரு பெண்ணின் அருகாமை; அவள் ஸ்பரிஸம்; இதெல்லாம் அவருக்குப் புதுமை. அவரால் இந்த பரிவைத் தாங்க முடியவில்லை. வாயோரம் ஒழுகிய கஞ்சி சாறை கனிவோடு அவள் துடைத்துவிட்டாள்.

கருவாடைக் கடித்துக்கொண்டு, சைவ ‘கோரேங்’ கையும், ஊறுகாயையும், தொட்டுக்கொண்டு சாப்பிட்ட போது, சுவையாகவே இருப்பதாகக் கூடத்தோன்றியது. சாப்பிட்டு முடித்தவுடன் அவருக்கு வியர்த்துக்கொட்டியது, வெந்நீரால் மார்பெல்லாம் துண்டால் இதமாய் துடைத்து, நெற்றிப்பொட்டை பதமாய் பிடித்துவிட்டாள். அப்படியே முகமெல்லாம் நீவி நீவி, தாடியையும் வழித்து விட்டு, அன்பு கனியக் கனிய அவள் திரும்பிய அடுத்த கணம், அது நிகழ்ந்தது!

ஆனால், அப்புறமாக, வெற்று மார்புடன் தலை குனிந்திருந்த விக்டர் குலுங்கி குலுங்கி அழுதார்.

தலைவழியே டீஷர்ட்டையும், தரையில் கிடந்த ஜீன்சையும் எடுத்து அணிந்து கொண்டு நிமிர்ந்த செல்வி பதறிப் போனாள்.

“அய்யா! என் ராஜா ! அழலாமா இப்படி? என் உடம்பை செருப்பா தச்சுப் போட்டாக்கூட உங்க தர்மத்துக்கு ஈடாகாதே? எப்படி என் நன்னிக்கடனை திருப்பித் தரப் போறேன்னு நான் தவியாய்த் தவிச்சேனே அய்யா! விட்டுருங்கய்யா !” என்று செல்வி தழுழுத்தபோதே, விக்டர் உறுதியான ஒரு முடிவோடு எழுந்து நின்றார்.

அ த ஆண்மையின் கம்பீரம் புரியாமல் செல்வி திகைத்துப்போய் நின்றாள்.

– தமிழ்முரசு மீள்பிரசுரம்: உயிரோசை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *