மாறனும்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 1, 2018
பார்வையிட்டோர்: 5,480 
 

குழந்தைகள் இரண்டையும் டியூசனுக்கு அனுப்பிவிட்டு ஒரு முடிவுடன் கணவன் வருகைக்காக காத்திருந்தாள் சகுந்தலா.

கதிர் அலுவலகம் விட்டு ஆறுமணிக்கு சரியாக வந்தான். உடை மாற்றி கைகால் முகம் கழுவி வந்தவனுக்கு டிபன் காபி கொடுத்து உபசரித்தவள் ‘‘என்னங்க ஒரு விசயம்!‘‘ நெருங்கி அமர்ந்தாள்.

‘‘சொல்லு ?‘‘ காபியை உறிஞ்சினான்.

‘‘நாம அதிரடியாய் இடம் மாறனும். வேற வாடகைக்கு வீடு புடிக்கனும்.‘‘

கேட்டவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. குடித்த காபி புரை ஏறியது. காரணம் இந்த வீட்டிற்குக் குடி வந்து ஆறு மாதங்கள்தான் ஆகிறது. மேலும் குறைந்த வாடகைக்கு இந்த அளவிற்கு வசதியாய் வீடு கிடைப்பது கடினம். அது மட்டுமில்லாமல் மாடியை வாடகைக்கு விட்டு விட்டு கீழே இருக்கும் வீட்டுச் சொந்தக்காரர்களும் கல்லூரியில் படிக்கும் அவர்கள் பிள்ளைகளும் பழக்க வழக்கத்திற்கு அருமையாக இருக்கிறார்கள். அடுத்து ஆரவாரமில்லாமல் அமைதியான இடம். அப்புறம் என்ன குறை ?என்று நினைத்தவனுக்குள் சட்டென்று வேறொரு நினைப்பு.

‘‘ வீட்டுக்காரங்களுக்கும் உனக்கும் சண்டையா இல்லை அக்கம் பக்கம் வம்பா ?‘‘ கேட்டான்.

‘‘அதெல்லாம் ஒன்னுமில்லே. கீழ் வீட்டுல பொட்டைப் புள்ளைங்க இல்லாத ஏக்கம் எல் கே ஜீ யு கே ஜி நம்ம கீதா சீதா மேல ரொம்ப ஆசை பசங்களும் கல்லூரி விட்டு வந்ததும்; தூக்கி வைச்சிக் கொஞ்சறாங்க. அதிக செல்லம்ங்குறதுனால நம்ம புள்ளைங்க கீழ்வீடே கதியாய்க் கிடக்கிறாங்க. படின்னு அதட்டினாலும் தப்பு செய்யாதேன்னு முகம் தூக்கினாலும்.அங்கே ஓடிர்றாங்க. அவுங்களும் புள்ளைங்களை அடிக்காதீங்கன்னு அடைக்கலம்; கொடுக்கிறாங்க. இது சரி வராதுங்க. புள்ளைங்க படிக்காது நம்ம சொல் பேச்சு கேட்காது. அதுக்காக கண்டிப்பாய் நாம வீடு மாறனும்.‘‘ முடித்தாள்.

எல்லாவற்றையும் கவனமாக கேட்ட கதிர் ‘‘நீ நெனைக்கிறது சரி. ஆனா அதுவே சரியான சரி கெடையாது. அன்பு எல்லாத்தையும் வலைக்கும் நிமிர்க்கும் சகுந்த். உன் கஷ்டத்தை அவுங்ககிட்ட சொல்லு. தப்பு செய்தா கண்டிங்க. படிக்காம வந்தா மேலே அனுப்புங்க.. சொல்லு. செய்வாங்க. யாரும் புள்ளைங்க கெட்டுப்போகனும்ன்னு நெனைக்க மாட்டாங்க. அடுத்து எங்கேயும் நல்லது கெட்டது இருக்கும். கெட்டது கண்டு ஒதுங்குறது ஓடுறது கோழைத்தனம். நின்னு போராடுறதுதான் போர்க்குணம். அது எனக்கு உனக்கு எல்லாருக்கும் வேணும். நாம இங்கே இருக்கிறதுதான் சரி. வீட்டுக்காரங்க ஏக்கம் தீர்க்கிறதுக்கும் வழி.‘‘ நிறுத்தினான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *