விடியல் வேலையில் புழக்கடைக்கு போவதற்காக கதவை திறந்த மாரியம்மாள்
எதிரில் ஒரு உருவம் தாடியுடன் வாசலில் நின்று கொண்டிருந்த்தை பார்த்தவள் ஒரு நிமிடம் திக்கென்று நின்று விட்டாள். அடுத்த நொடி நின்று கொண்டிருப்பவன் தன் மகன் தியாகராசந்தான் என்பதை கண்டு கொண்டவுடன் ஐயோ மகனே என்று ஓடி வந்து கட்டிக்கொண்டு கண்ணீர் விட்டாள். அவனை தடவி தடவி பார்த்து தலையில் அடித்து அழுதாள். உன் வாழ்க்கையை நானே கெடுத்துட்டேனே. இப்படி அநியாயமா உருக்குலைஞ்சு போயிருக்கையேடா, மார்பில் அடித்து அழுக ஆரம்பித்தாள்.
அம்மா அழுகாதே அதுதான் வந்துட்டணுல்லே, அப்புறம் ஏன் இப்படி அழுகறே, மகன் மெல்ல தன் அம்மாவை தள்ளிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான். அதற்குள் இவர்களின் அழுகை சத்தம் கேட்டு அக்கம் பக்கத்துக்காரர்கள் வந்து விட்டனர். அவர்கள் தியாகுவை பார்த்தவுடன் என்ன பேசுவது என்று திகைத்தனர். இவனுக்கு ஆறுதலாய் நாலு வார்த்தை பேசலாமா ? இல்லை மாரியம்மளிடம் மட்டும் பேசலாமா ? திகைப்புடன் நின்று கொண்டிருந்தனர்.
அதற்குள் அம்மாவும் பிள்ளையும் யாரை பற்றியும் இலட்சியம் செய்யாமல் வீட்டிற்குள் நுழைந்து விட்டனர். பக்கத்து வீட்டு பெண்கள் ஓரிருவர் மெல்ல அவர்களை தொடர்ந்து உள்ளே வந்தனர். மாரியம்மா போய் புள்ளைக்கு குடிக்கறதுக்கு காப்பி வை, எதிர்த்த வீட்டு உலகாத்தா முன் வந்து மாரியம்மாளை சமையலறைக்கு அனுப்ப முயற்சித்தாள்.
அவள் மகனிடம் மற்ற பெண்கள் மனம் நோகும்படி கேட்டு விடுவார்களோ என்று பயந்து உள்ளே செல்ல தயங்கினாள். உலகாத்தா தன்னுடைய குரலை உயர்த்தி மாரியம்மா உன் பையங்கிட்ட யாரும் பேச விடமாட்டேன், அவன் பாத்ரூம் போய் கை கால் கழுவிட்டு வரட்டும், அதுக்குள்ள காப்பி போட்டுட்டு வந்துடு.
இந்த யோசனை இவளுக்கு சரியென்று படவே சமையலைறைக்குள் நுழைந்தாள்.
தியாகராசனுக்கும் இவர்களை விட்டு சென்றால் போதும் என்ற மன நிலையில் இருந்ததால் அவசர அவசரமாய் பாத்ரூமை நோக்கி சென்றான்.
மற்ற பெண்கள் இப்போதைக்கு இவர்கள் வரமாட்டார்கள், பிறகு வரலாம் என்று மெல்ல வெளியே நடையை கட்டினார்கள். உலகாத்தாள் மட்டும் இவர்களுக்காக காத்திருந்தாள்.
மாரியம்மாளுக்கு தியாகராசனும், அவனுக்கு பத்து வயது மூத்த ஒரு அக்காளும் உண்டு. அவளை கரட்டு மடைக்கு கூலி வேலைக்கு போகும் விவசாய குடும்பத்திற்கு கட்டி கொடுத்திருந்தாள். தியாகராசனுக்கு பதினைந்து வயசாகும்போது அப்பா தவறி போய் விட்டார். இவனுக்கும் படிப்பு ஒன்றும் ஏறாமல் ஊர் சுற்றிக்கொண்டு இருந்தான். அவ்வப்பொழுது சந்தைக்கு வரும் காய்கறி மூட்டைகளை ஏற்றி அனுப்பி வைக்கும் வேலைகளை பார்த்துக்கொண்டிருந்தான். மாரியம்மாள் அக்கம் பக்கம் ஏதாவது வேலைக்கு போய் இவனுக்கு ஆக்கி போட்டுக்கொண்டிருந்தாள்.
இவர்கள் குடியிருந்த இடம் புறம்போக்கு நிலம். இவன் அப்பா அந்த காலத்திலயே அதை வளைத்து வீட்டை எழுப்பி இருந்தார். இதே போல் நிறைய பேர் வீடுகளை கட்டி இருபது வருடங்களுக்கு மேல் அங்கு குடியிருக்கின்றனர்.
தியாகராசன் எதை பற்றியும் கவலைப்படாமல் மாரியம்மாளின் ஜீவனத்தில் சந்தோசமாகத்தான் இருந்தான். அவனை சிக்கலில் மாட்ட வைத்தது மாரியம்மாள்தான்.
மாரியம்மாளையும் குறை சொல்ல முடியாது. அவளுக்கு தன் மகன் இன்னும் கல்யாணம் ஆகாமல் இருக்கிறானே, அவனுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வைத்து விட்டால் கருத்தா பொழைச்சுக்குவான் என்று எதிர்பார்த்தவள் அதை செயல் படுத்தவும் முயற்சித்தாள்.
தன் மகள் வடிவை கரட்டு மடைக்கு சென்று சந்தித்தவள் கண்ணில்பனிரெண்டாவது படித்துக்கொண்டிருக்கும் வடிவின் மகள் கண்ணில் பட பேசாமல் இவளையே நம்ம தியாகுவுக்கு கட்டி கொடுத்துடலாம் என்று கணக்கு போட்டாள். மகளிடம் இதை பற்றி பேசவும் செய்தாள். முதலில் தயங்கிய வடிவு அம்மா கையில் வைத்திருந்த கொஞ்சம் ரொக்கப்பணம், பத்து பவுன் நகைகள் கவனத்தில் கொண்டு சம்மதித்து விட்டாள்.
அதுவரை அக்கா மகளை பற்றி நினைத்து கூட பார்க்காத தியாகராசனிடம் வந்து உனக்கு கல்யாணம் என்று சொன்னவுடன் அவன் இது என்னடா வம்பாய் போச்சு என்றுதான் நினைத்தான், ஆனால் அக்காவின் மகளையே பார்த்து வந்திருக்கிறேன், சொன்னது மட்டுமில்லாமல் என் பேத்தி அப்படி படிச்சிருக்கா, இப்படி படிச்சிருக்கா, சும்மா சொக்க தங்கம் மாதிரி இருப்பா என்று சொல்ல,சொல்ல இவனுக்கு அக்காள் மகள் மேல் அவனையும் அறியாமல் ஈடுபாடு வந்து விட்டது. இதுவரை அவள் முகம் கூட இவனுக்கு பரிச்சயமில்லாமல்தான் இருந்தான். இப்பொழுது அவள் முகத்தை ஞாபகத்துக்கு கொண்டு வர படாத பாடுபட்டான்.
சம்பிரதாயமாக நிச்சயம் செய்ய சென்றபோது கூட அக்காளின் மகளை பார்க்க முடியவில்லை. ஏமாற்றத்துடனே திரும்பினான். சரி இன்னும் பத்து நாள்ல கல்யாணமே வரப்போவுது அப்புறம் ஏன் அவசரப்பட்டுக்கணும்? மனதை சமாதானப்படுத்திக்கொண்டான்.
இருந்தாலும் மனதுக்குள் இனம்புரியாத பயம் இருந்து கொண்டே இருந்தது, அவன் அக்காளிடம் அவ்வளவு ஒட்டுதல் இல்லை. என்னடா தன்னோட பொண்ணை கல்யாணம் பண்ணிக்கபோறது தம்பி ஆச்சேன்னு அவள் வந்து பார்க்காதது இவனுக்கு உறுத்தலாகவே இருந்தது.கல்யாணம் ஆகட்டும் அக்காவா இருந்தா என்ன? மாப்பிள்ளை முறுக்கை காண்பிக்கவேண்டியதுதான் மனதுக்குள் தீர்மானித்துக்கொண்டான்.
விடிந்தால் கல்யாணம், இரவு பக்கத்தில் உள்ள சத்திரத்தில் மாரியம்மாளும், தியாகராசனும், கொஞ்சம் அக்கம் பக்கத்து காரர்களும், கொஞ்சம் சொந்தமும் தங்கிகொண்டனர்.
இரவு பத்து மணி இருக்கும், திடீரென்று நான்கைந்து போலீஸ் உள்ளே வந்தது, யாருய்யா மாப்பிள்ளை ? கேட்ட தோனியே பயமுறுத்துவதாய் இருக்க தியாகராசன், நாந்தானுங்க என்று முன்னே வந்தான்.
ஏய்யா மைனர் பொண்ணை கல்யாணம் பண்ணிக்க போறியாமா? ஐயா அப்படீன்னா?
புரியாமல் கேட்டவனை ஸ்டேசனுக்கு வா விளக்கமா சொல்றோம், என்று அழைத்து சென்று விட்டனர். மாரியம்மாள் குய்யோ முய்யோ என்று கூப்பாடு போட்டு சத்திரத்துக்கும் ஸ்டேசனுக்கும் அலைந்தாள்.,கல்யாணம் நின்று இரண்டு நாள் கழித்து வடிவின் பொண்ணும் காணாமல் போய் விட்டாள். அவ்வளவுதான் மாரியம்மாளின் மகள் வடிவு வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு, அழ ஆரம்பித்தாள். உன் பையனாலதான் என் பொண்ணு காணாம போயிட்டா என்று அம்மாவை பார்த்து கத்த ஆரம்பிக்க, மாரியம்மாள் திகைத்து தன் பேத்தி ஓடிப்போனதுக்கு அழுவாளா? மகனை போலீஸ் பிடிச்சுகிட்டு போனதுக்கு அழுவாளா? மனசு நொந்து ஊர் வந்து சேர்ந்தாள்.
இரண்டு நாட்கள் கழித்து மகன் வந்து சேர்ந்திருக்கிறான், எல்லாம் தன்னால்தான், அவன் பாட்டுக்கு ஊர் சுற்றிக்கொண்டுவீட்டுக்கு வந்து கொண்டிருந்தான். இவன் வேலைக்கு போகாவிட்டாலும் பரவாயில்லை,தன் கண்ணெதிரே நடமாடிக்கொண்டிருந்தால் போதும் என்று நினைக்க ஆரம்பித்து விட்டாள்.ஆனால் தியாகராசன் மறுபடியும் காணாமல் போய்விட்டான்.
வாழ்க்கையின் எல்லா இன்ப ருசிகளையும் அனுபவித்து கொண்டிருந்தனர், வடிவின் பெண்ணும்,அவளை கூட்டிக்கொண்டு வந்தவனும்.
திடீரென்று இவளுக்கு அம்மா ஞாபகம் வந்து இவனிடம் கேட்கும்போது இவன் இரண்டு மூணு நாள்ல எல்லாம் சரியாயிடும், உன் மாமனை போலீஸ் பிடிச்சுகிட்டு போயிடுச்சு இவன் சொல்லி முடிக்குபோது, “ஐயோ” என்றாள்.
என்ன “ஐயோ”ங்கறே, நீ மைனர் பொண்ணு, உன்னை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணிக்கபோறான் உன் மாமன் அப்படீன்னு போலீசுக்கு தகவல் கொடுத்துட்டேன். பெருமையாய் சொன்னான்.
அப்ப நாம மட்டும் கல்யாணம் பண்ணிகிட்டா போலீஸ் பிடிச்சுக்காதா?
எதுக்கு போலீசு பிடிக்கும். நாமதான் ஓடி வந்து கல்யாணம் பண்ணிக்கபோறோமுன்னு பிளான் போட்டுட்டமில்லை.
அவள் வருத்தத்துடன் கேட்டாள், அப்ப மாமன விட மாட்டாங்களா?
இவன் முறைத்துக்கொண்டான். என்ன நீ உன் மாமனுக்கு வருத்தப்படறியா? நீ அழகா இருக்கறே அப்படீங்கறதுக்காக உன் மாமன் உன்னைய கல்யாணம் பண்ணிக்க விட்டுடுவனா?
நீ எப்பவும் எனக்குத்தான்? இந்த கொஞ்சல் பேச்சில அப்படியே மயங்கினாள்.
அடுத்த வாரம் கோயில்ல நம்ம கல்யாணத்துக்கு புக் பண்ணிட்டேன். அதுவரைக்கும் இந்த லாட்ஜுலதான் இருந்தாகணும். அதை நம்பி அவனுடன் உல்லாசமாய் இருந்தாள்
ஒரு வாரம் ஓடியிருந்தது.. அவள் கொண்டு வந்திருந்த நகைகள் விற்ற கையிருப்பு கரைந்து போய் கொஞ்சம் பணம் மட்டுமே பாக்கி இருந்தது. இருவரும் அந்த லாட்ஜை விட்டு அதிகமாக வெளியே செல்வதில்லை
லாட்ஜ் வாழ்க்கை இரவை விட பகலில் இருக்கும்போதுதான் பயமாய் இருந்தது. யார் யாரோ அவள் அறையை தாண்டி செல்வதும், ஒரு சிலர் கதவு திறந்திருந்தால் இவளை வெறிப்பதும், இவளுக்கு பயம் உடம்பு முழுக்க ஊறல் எடுத்தது. சில நேரங்களில் இவனும் வெளியே போய் விடுகிறான், இவளுக்கு உள்ளே இருப்பதற்கே பயமாக இருந்தது.
இதோ வந்துவிடுகிறேன் காலையில் கிளம்பி போனவன் மதியம் இரண்டு மணி வரை வரவேயில்லை.
கதவு திடீரென தட்டப்பட்டது திறந்தால் யாரோ ஒரு ஆள் பல்லை காண்பித்துக்கொண்டு நின்றான்.
இவள் தடாரென கதவை சாத்த முயற்சிக்க அவன் சட்டென கை வைத்து தடுத்தவன், அவளையும் உள்ளே தள்ளி கதவை சாத்த முயன்றான்.
இவளிடம் கொஞ்சம் பலம் இருந்ததால், அவனை உள்ளே இழுத்துவிட்டு கதவை திறந்து வெளியே ஓடி வந்தாள்.
தட தடவென கீழே வந்தவள் லாட்ஜ்ரிசப்சனில் நான்கைந்து ஆண்கள் நின்று பேசிக்கொண்டிருந்தனர். இவள் ஓடி வருவதை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் ஒவ்வொருவர் முகத்திலும், புலியின் பார்வைதான் இருந்தது.
என்ன செய்வது என்று ஒரு கணம் திகைத்தவள் சட்டென அவர்களை தாண்டி வெளியே ஓடி வந்தாள், அந்த இடத்தை விட்டு தலை தெறிக்க ஓட ஆரம்பித்தாள்.
சாரை சாரையாய் கார்களும், இரு சக்கர வாகனங்களும் அவளை கடந்து செல்ல அடுத்து என்ன செய்ய? கையில் ஒரு நயா பைசா இல்லை, இப்பொழுது அவள் செய்த தவறுகள் ஒவ்வொன்றாய் மனதில் ஓட ஆரம்பித்தன.
பேருந்து நிலையம் செல்ல அவள் மனம் அறிவுறுத்தியது. மெல்ல எதிரில் வந்தவரிடம் விசாரித்தாள்.அரை பர்லாங் நடக்க வேண்டும் என்று சொன்னார், வேகமாக நடக்க ஆரம்பித்தாள். அவ்வப்பொழுது திரும்பி திரும்பி பார்த்தாள், யாராவது விரட்டி வருகிறார்களா என்று.
அப்பொழுது இவள் பெயரை சொல்லி அழைப்பது கேட்டது. திடுக்கிட்டு பார்க்க
இந்த பக்கம் பாரு என்று ரோட்டின் எதிர்புறம் தாடியுடன் யாரோ நின்று கொண்டு இவளை அழைப்பது தெரிந்தது. நிற்கலாமா வேண்டாமா?
வேண்டாம் மறுபடி ஏமாறுவதற்கு தயாராய் இல்லை. வேகமாக நடக்க எத்தனித்தாள்.
போகாத, நான் உன் மாமா, சட்டென நின்றாள். மாமாவா அது? போலீசிடம் மாட்டிவிட்ட மாமாவா? அழுகை எட்டி பார்க்க அப்படியே நின்றாள்.
அதற்குள், சர் சர்ரென பாதையில் கடந்து கொண்டிருந்த வாகனங்களிடமிருந்து தப்பித்து அவள் அருகே வந்திருந்தான் தியாகராசன்.
இப்பொழுது அவளுக்கு அம்மாவின் சாயல் கொண்ட இவனின் முகம் பரிச்சயமானது. உடன் அழுகை எட்டி பார்க்க, இவன் அழுகாதே, அழுகாதே, வா போலாம் அன்புடன் சொல்லி அதே பாதையில் நடக்க ஆரம்பித்தனர்.
மாமா என்னை மன்னிச்சுக்க? இவளின் அழுகை எதிரில் வருவோர் போவோர் இவர்களை வித்தியாசமாய் பார்க்க வைத்தது.
இவன் அழுகாம வா ஊர் போய் சேரலாம், அவள் கையை பிடித்துக்கொண்டு நடந்தான்.
கதவு தட்டும் சத்தம் கேட்டு கதவை திறந்தவள், அப்படியே சிலையாக நின்றாள்.
தன் மகன் பேத்தியுடன் நின்று கொண்டிருந்தான். இவள் ஏதோ பேச வாய் திறந்தவளை சட்டென வாயை பொத்தி இவர்களையும் உள்ளே நுழைத்துக்கொண்டான்.
இரண்டு நாட்கள் ஓடியிருந்தன. வடிவும் அவள் புருசனும் அம்மா வீடு வந்திருந்தார்கள்.
வடிவு ஆரம்பத்தில் தன் மகளை அடித்து ஆரவாரம் செய்தாள். கொஞ்சம் கொஞ்சமாக அமைதியாகி மெல்ல பேச்சு கொடுத்தாள், அம்மா நம்ம தியாகுவுக்கே கட்டி வச்சுடலாமா?
கேட்ட மகளை உறுத்து பார்த்தாள் மாரியம்மா.
கரட்டு மடத்துக்கு சென்றிருந்த மாரியம்மாளும், தியாகராசனும், வடிவின் பெண்ணை மீண்டும் பள்ளியில் படிப்பை தொடர ஏற்பாடு செய்து விட்டு ஊர் திரும்ப ஆயத்தாமாகினர்.
வடிவு மெல்ல அம்மாவின் அருகில் வந்து அம்மா நம்ம தியாகுவுக்கு இவளை கட்டி கொடுக்க்கறதை பத்தி பேச மாட்டேங்கறயே.
வேண்டாம் பளிச்சென்று சொன்ன மாரியம்மா, இங்க பாரு அவள் ஓடி போனவ அப்படீங்கறதுக்காக நான் சொல்லலை. அவ என்னோட பேத்தி, பச்சபுள்ளைய என் பையனுக்கு கட்டி வக்க நினைச்சது என் தப்பு. சொந்தம் அப்படீங்கறதுனால வயசு வித்தியாசத்தை கவனிக்காம விட்டதும் என் தப்பு. நீ எதுக்கும் கவலைப்பாடாதே, உன் பொண்ணை படிக்க வைக்கலாம். நடந்ததை நீயும் உன் புருசனும் அவளுக்கு சொல்லி காட்டாம இருந்தீங்கன்னா போதும். அவ நல்லா படிக்கட்டும். மறுபடி மறுபடி இந்த வயசுல கல்யாண பேச்சை எடுத்து அவளை சங்கடப்படுத்தாம இருந்தா போதும். அதுக்குன்னு வயசு வரட்டும். அப்ப பாத்துக்கலாம்.நான் வரட்டா, தன் மகனுடன் கிளம்பினாள்.