ரமா இன்றைக்கு மிக சந்தோஷமாக இருந்தாள்.ஒரு மாதத்திற்குள் 5 கிலோ வெயிட் இறங்கி இருப்பது பெரிய சாதனைதான்.
கல்யாணத்தின் போது 42 கிலோ வெயிட் இருந்தாள். ஒடிந்து விழக் கூடிய இடுப்பு . பட்டு சேலை இடுப்பில் நிற்கவே இல்லை. எல்லாம் கனவா போயிடுச்சு.
கல்யாணமான நாலாவது மாசமே கணவரோட அமெரிக்கா பயணம் . மகிழ்ச்சிக்குக் கேட்கவா வேண்டும். எப்பவும் ஜாலிதான்.
வெளியில சாப்பாடு. ஊர் சுற்றல்.
சரண் வேலை நேரம் போக மற்ற நேரமெல்லாம் ரமாவோடு தான். வீக் எண்ட் எல்லாம் பக்கத்தில் இருக்கக்கூடிய இடங்களுக்கு சைட் சீயிங் போயிட்டு வருவது வழக்கம் ஆயிடுச்சு. கட்டுப்படுத்த பெரியவங்க இல்லை. இஷ்டத்துக்குத் தூங்கி எழுந்து பொழுது போனதே தெரியல.
ஒரு வருடம் கழித்து இந்தியாவுக்குத் திரும்பிய ரமாவைப் பார்த்து அவளோட அம்மாவே வியந்து போயிட்டாங்க. 42 கிலோ எடையில் போன பொண்ணு, 75 கிலோவில் வந்து நிற்கிறாள்.
கணவரோட இருந்த ஜாலி மூட்ல அவளுக்கு எடை பற்றி எல்லாம் அக்கறை இல்லை. அதை பற்றி நினைக்க நேரமில்லை.
அம்மாதான் தொன தொனக்க ஆரம்பிச்சிட்டாள். வெயிட்டைக் குறைக்க சொல்லி. “ரமா, நீ குழந்தை பெத்துக்கணும். ஓடி ஆடி அந்தக் குழந்தையை வளர்க்கணும். இன்னும் எவ்வளவு வேலை இருக்கு. உனக்கு இப்பவே இவ்வளவு சதை போட்டால் என்ன ஆகிறது?” என்று அம்மா புலம்பித் தீர்த்தாள்.
தோழிகளும் கிண்டல் செய்யத் தொடங்கினார்கள். “என்னடி ஆச்சு உன்னோட பியூட்டி கான்ஷப்ட்ஸ். பார்த்து பார்த்து உன் உடம்பைப் பேணிக் கொள் வாயே. எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் அவ்வளவுதானா” என்று தொலைத் தெடுத்தனர்
ரமாவுக்கு இப்பதான் மண்டையில் உறைக்க ஆரம்பித்தது .எடை குறைக்கும் வழிமுறைகளைப் பற்றித் தீவிரமாக ஆராய்ச்சியில் ஈடுபடலானாள்.
பேலியோ டயட் , கீட்டோ டயட் என்பது பற்றி எல்லாம் படித்தறிந்தாள். கடைசியா பேலியோ டயட் எடுக்கலாம் என்று முடிவு செய்தாள். பேலியோ டயட் எடுக்கத் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மாசம் ஆகுது.
சரண் அவளை சென்னையில் விட்டுவிட்டு அமெரிக்கா சென்று விட்டான். ” நீ டயட் எடுத்துட்டு , அடுத்த மாசம் வந்து சேரு” என்று அன்பான அழைப்புடன் கிளம்பிவிட்டான்.
சுத்த வெஜிடேரியனா இருந்த ரமா அமெரிக்கா போய் மாறிவிட்டாள். நான்வெஜ் எடுத்துக் கொள்ள தொடங்கினாள். அது இப்ப நல்லதா போச்சு . பேலியோ டயட்டில் வெஜிடேரியன் எடுத்துக்கிட்டுக் காலம் தள்ளுவது ரொம்ப கஷ்டம் . அதனால் நான்வெஜ் எடுக்கத் தொடங்கினாள். அரிசி, பருப்பு, கோதுமை, தானியம் போன்ற மரபார்ந்த உணவுமுறைகள் எல்லாத்தையும் விட்டுட்டு, வெறும் மாமிசம் முட்டை என்று எடுக்கத் தொடங்கினாள். முள்ளை முள்ளால் எடுக்கிற மாதிரி, உடல் குறைப்பை மாமிசம் சாப்பிட்டு கரைக்கிற சூழல் வந்தாச்சு. இது ஏதோ ஆதிகால மனிதனுடைய உணவு முறையாம். ஆதிகால மனிதன் விவசாயத்தில் ஈடுபடுவதற்கு முன்னால் மாமிசமே முழு நேர உணவாகச் சாப்பிட்டு வாழ்ந்த காலத்தை இது நினைவுபடுத்துகிறது.
காலையில் பாலில்லாத வெண்ணை போட்ட காப்பி. அப்புறம் மூணு முட்டை ஆம்லெட். மதியம் கொஞ்சம் சிக்கன்.
4 மணிக்கு மேல் ஊறவைத்த பாதாம் பருப்பு . இரவு கொஞ்சம் கொத்துக்கறி.
அம்மாவுக்கு கோபம் கோபமாக வந்தது. “ஏண்டி , அறிவு இல்லாமல் தின்னுட்டு இப்படி அவதிப்பட்டுக் கிடக்கிறாய்” . இப்படி, அவள் அம்மாவின் புலம்பல் ஒருபுறம்.
அமெரிக்காவில் கண்டதையும் தின்னுட்டு, அம்மாவோட கைச் சாப்பாட்டை ருசிக்க ஓடோடி வந்த ரமாவிற்கு, இங்க டயட் என்ற பெயரில் அவதி. ஒரு மாதத்தில் 5 கிலோ எடை குறைந்தது ஒன்றுதான் ரமாவுக்குக் கொஞ்சம் நிம்மதியைத் தந்தது.
“மூணு மாசம் ஆச்சு. நீ எப்ப அமெரிக்கா வரேன்னு” ரமாவிடம் கேட்டு உயிரை எடுக்கிறான் சரண். அவளுக்கு 15 கிலோ எடை குறைந்து இருக்கிறது . இன்னும் 10 கிலோ குறைய வேண்டும்.
அவள் அம்மா சொல்கிறாள். “ஏண்டி , நீ எப்ப தான் நம்ம சாப்பாடு சாப்பிடப் போகிறாய். ஊருக்குப் போய், மாசமா ஆனா இந்த டயட் கன்றாவி எல்லாம் சாப்பிட முடியுமா?என்ன? போதும் இதெல்லாம் நிறுத்து. பத்து நாளாவது என் சமையலைச் சாப்பிட்டு போ” என்று கூற ஆரம்பித்தாள். ரமா மனசுக்குள் அழத் தொடங்கினாள். பெருசா அரிசி சாப்பாடு சாப்பிடணும் என்ற ஆசை இல்லை என்றாலும், இந்த பேலியோ டயட் மீதும் அவளுக்குப் பெரிதும் ஆர்வம் இல்லை . இதை எவ்வளவு நாளைக்குக் கட்டி அழனும் தெரியல. சரணைப் பார்க்கனும் . அவனைக் கட்டிப் பிடிச்சு அழனும் போல இருக்கு அவளுக்கு.
இந்த முறை அத்தை அவளைப் பார்க்க வந்த பொழுது அவர் தன் தோழியோடு வந்தார். அத்தோழி ஒரு மருத்துவர் . கொஞ்ச நேரம் ரமாவுடன் பேசிக்கொண்டிருந்த அத்தை, “ரமா நீ இவளிடம் உன் உடலை பரிசோதனை செய்து கொள்’ என்றாள். வேறு வழியில்லாது ரமாவும் ஒத்துக்கொண்டாள். அவளைப் பரிசோதித்த டாக்டர் அவள் வீக்காக இருப்பதாகச் சொன்னார். அவளின் பேலியோ டயட் பற்றி ரமாவின் அம்மா டாக்டரிடம் சொன்னாள்.
‘அம்மா இந்தக் காலத்துப் பிள்ளைகள் சொன்னபடி எங்க கேக்குறாங்க. இப்ப பாருங்க டயட்ன்னு உடம்பைக் கெடுத்துக் கொண்டு இருக்கிறாள். அழகு என்கிற மாயை இவர்கள் கண்ணை மறைக்குது என்றார்.
பின் ரமாவிடம்,”நான் சொல்றதைக் கொஞ்சம் கவனமா கேட்டுக்கோ. டயட் எடுப்பதற்கு முன் டாக்டரை நீ சந்தித்தாயா?
அவரது ஆலோசனையின் பேரில் தான் டயட் இருக்கிறாயா? நீ இப்பொழுது தான் திருமணம் முடிந்த பெண். இன்னும் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை. ஒரு குழந்தையாவது நல்லபடியாகப் பெற்றெடுத்து விட்டு, இந்த மாதிரியான டயட் விஷயங்களில் எல்லாம் கவனம் செலுத்தி இருக்கலாம். இன்றைக்கு நிறைய இளம் பெண்கள் இப்படித்தான் நடந்துக்கிறாங்க. நம்ம மரபு வழியிலேயே டயட் பண்ண முடியும். அதற்குப் பக்க விளைவுகள் குறைவு. முறையாக, ஒரு மருத்துவரின் கண்காணிப்பில் தான் , இந்த மாதிரியான டயட் முறைகள் எல்லாம் செய்யணும் . இன்றைக்கு உலகமெங்கும் இருக்கக்கூடிய இளம் வயது பெண்கள் , இந்த மாதிரியான உடல் குறைப்பை மேற்கொண்டு, அழகு என்கின்ற கான்செப்ட்குள் ஆழ்ந்து போய் , டிப்ரஷன்க்கு ஆளாகியிருக்கிறார்கள் . அப்புறம் சிறுநீரக பாதிப்பு , இதய நோய் என்று அவதிப்படுகிறார்கள். நீ இந்த டயட் முறை எல்லாம் விட்டுடு. ஆனாலும் உன் உடம்பை நார்மலுக்குக் கொண்டுவர இன்னொரு ஆறு மாதம் ஆகும் . அப்பதான் உங்க அம்மா ஆசைப்படுகிற மாதிரி பேரனோ பேத்தியோ பெற்றுக் கொடுக்க முடியும் . நீ கர்ப்பமானால் நார்மல் டயட் எடுத்துக் கொள்வது தான் நல்லது. கார்போஹைட்ரேட் உணவை வேண்டுமானால் கொஞ்சம் குறைத்துக் கொள். பேலியோ டயட் எல்லாம் எவ்வளவு நாளைக்கு எடுத்துக் கொள்ள முடியும் . புரிந்து கொள் ” என்று கூறி விட்டுக் கிளம்பினார். அவரை வாசல் வரை சென்று வழியனுப்பி விட்டு வந்த அத்தை , ரமாவிடம் போட்ட சண்டைக்கு அளவே இல்லை. அவளுடன் அம்மாவும் கூடச் சேர்ந்து கத்தினாள்.
“அப்பா இல்லைன்னு இவளைச் செல்லமா வளர்த்துட்டேன். இவ என்னன்னா இப்படிப் பண்ணிக்கிட்டு இருக்கா ” என்று கண்ணில் நீர் வர அவள் அம்மா அத்தையிடம் புலம்பினாள்.
ரமாவுக்கு சரண் நினைவு வந்தது.
ஊருக்குப் போகும் போது, “டார்லிங்… சீக்கிரம் வந்து சேர். உன்னை மாதிரி அழகான அருமையான பெண்ணைப் பெற்றுக் கொடு. பத்தே மாதம் தான் டைம். ஓகே” என்று கலாய்த்து விட்டுச் சென்றான்.
ரமாவின் மனது, தான் எடுத்துக் கொண்ட பேலியோ டயட்டால், இப்போதைக்கு சரண் ஆசை எல்லாம் கனவாய் முடிந்து விடுமோ என்று பதறியது . அவள் எல்லாவற்றையும் சரணிடம் கொட்டித் தீர்த்துவிடத் துடித்தாள்.
சென்னையில் பகல் 3 மணி . சிகாகோ டைம் இரவு 1. 30. பத்தரை மணி நேரம் வித்தியாசம். அங்கு பொழுது விடியும் வரை அவள் காத்திருந்தாள் .அவன் நேரம் காலை 6 மணிக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டாள்.
” ஹாய்! ரமா எப்ப வருகின்றாய். . டிக்கெட் புக் பண்ணிட்டியா. ஐ அம் வெயிட்டிங் ஃபார் யூ . என்ன என் ஏக்கம் புரிஞ்சுதா?”
மறுமுனையில் இருந்து சத்தம் வராதது கண்டு விழித்தான். என்னமா? என்ன ஆச்சு? பேசுமா”என்றான்.
ரமாவின் விம்மல் கேட்டுத் திடுக்கிட்ட அவன் ” ப்ளீஸ். என்னாச்சும்மா” என்று பதறினான்.
ரமா ரொம்ப நேரம் அவனைச் சோதிக்கவில்லை. “நான் குழந்தை பெற்றுக் கொள்ள ஒரு வருடமாவது ஆகுமாம் . நான் ரொம்ப வீக்கா இருக்கேனாம். எல்லாம் இந்த டயட்டால் வந்த வினை சரண். என்னை மன்னித்துவிடு. உன்னை நான் ஏமாற்றி விட்டேன். நீ குழந்தைக்காக ஒரு வருஷம் காத்திருப்பாயா”? என்று கதறினாள்.
“ஏய்! ரமா வெயிட்… வெயிட்… என் ஆசையைக் கிடப்பில் போடு. நம்ம பேபியை ஒரு வருஷம் கழிச்சு கூட பெற்றுக் கொள்ளலாம். பயப்படாதே. இங்கு நல்ல டாக்டரிடம் உன்னைக் கூட்டிக் கொண்டு போகிறேன். உன் உடம்பு பலவீனத்தைச் சரி செய்து விடலாம். எல்லாவற்றுக்கும் பயந்து கொள்ளாதே. எல்லாம் நல்லபடியாக நடக்கும். காத்திருப்போம். உன் டயட் காலம் முடிகிறதல்லவா… உடனே கிளம்பி வா.. கவலைப்படாதே…
டிக்கெட்டைச் சீக்கிரம் புக் பண்ணு.. ஓகே… சந்திப்போம் விரைவில்” என்று கூறி போனை வைத்தான்.
அப்பாடா! ரமாவின் மனது குளிர்ந்தது. “சென்னையில் இனி இருக்கப் போகும் காலத்தில் அம்மா விருப்பப்படி இருக்க வேண்டும். இந்த டயட் எல்லாம் நிறுத்திவிட்டு அம்மா சமையலைச் சாப்பிட்டு, நானும் மனம் மகிழ்ந்து, அவளையும் சந்தோஷபடுத்தனும்” என்று நினைத்துக்கொண்டே ரமா விமான டிக்கெட் பார்ப்பதற்காக கணினியைத் திறந்தாள்.