மாயமான்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 19, 2012
பார்வையிட்டோர்: 11,123 
 
 

அக்கா! நீ வெளிநாட்டிலே. அம்மா இப்பவும் கிடுகு பின்னப் போறவ.

அதற்கு மேலும் ரேணுவால் அந்தக் கடிதத்தை வாசிக்க முடியவில்லை. கண்கள் கலங்கி எழுத்துக்கள் இரண்டு மூன்றாகத் தெரிந்தன. எத்தனை சுருக்கமான வரிகள். அதன் பொருள் எவ்வளவு விரிவானது என்று அவளுக்குத் தெரியும்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்புவரை அவளும் கிடுகு பின்னப் போனவள் தான். அம்மாவும் தானும் சேர்ந்து உழைத்தே சமாளிக்க முடியாமல் இருந்த வீட்டுப் பிரச்சனைகள். அதுவும் நாடு அவ்வளவு குழப்பம் இன்றி இருந்த நேரம். இன்று தம்பி தங்கச்சி ஆட்களை வைத்துக் கொண்டு அம்மா என்ன பாடுபடும்? ஐயா செத்த காலம் தொடங்கி அதுக்கு ஓய்வில்லை.

மாதம் ஒரு இருபத்தைந்து டொலர் அனுப்பினாலே அது சமாளித்துக் கொள்ளும். ஆனால் இந்த மனுசன் கருணை காட்டினால் தானே! கனடா மாப்பிள்ளை. அதுவும் சீதனமில்லாமல் கேட்கினம் என்றதும் யோசிக்காமல் கழுத்தை நீட்டி விட்டேனே! வுடிவான பொம்பிளையாக இருந்தால் சரி சீதனம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்ற கதை வந்த போதே எங்கள் குடும்பத்தொடு ஒத்துப் போகக் கூடியவரா என்று நான் நினைச்சிருக்க வேணும்.

எனக்கு இங்கே கழுத்து நிறைய நகையும் விதம்விதமான உடுப்பும் வாங்கிப் போட்டு கல்யாணவீடு பாட்டிகள் என்று கொண்டுபோயக் காட்டிக்கொண்டு வந்து என்ன பலன்? அதுகளின்ரை வயிறு காயாமல் ஏதாவது ஒரு வழி பண்ணினால் தானே இந்தாளுக்குப் புண்ணியம்?

எத்தனை தடவை கெஞ்சியாகி விட்டது. இரக்கமில்லாத கல்லு மனமாகப் போட்டுது இந்த மனுசனுக்கு. அம்மா எவ்வளவு சந்தோசமாக எங்களை வழியனுப்பி விட்டது. அதுக்கு என்னவெல்லாம் சொல்லிப்போட்டு வந்தேன். ரேணுவின் நினைவுகள்அந்த நாட்களை எண்ணிப் பார்க்கின்றன.

அன்று அவளுக்கு வேலை இல்லை. பொழுது இருட்டும் நேரம். முற்றம் கூட்டி முடித்து பூக்கன்றுகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள் ரேணு. இனி ஆடுகளுக்கு குழையும் கட்டி விளக்கும் வைத்தால் சரி.

சீனு மாமா ஓடிவந்தார். தங்கச்சி கொம்மா எங்கே புள்ளை?
அம்மா பின் வளவுக்குள்ளே விறகு பொறுக்குகிறா மாமா!

சீனு மாமா அம்மாவுடன் கதைத்த கொஞ்ச நேரத்தில் அவளும் பரபரப்பாக ஓடி வந்தாள். ரேணுகா! இங்கே ஒருக்கால் வா பிள்ளை. எனக்கு கையும் ஓடுதில்லை. காலும் ஓடுதில்லை!

அவள் பாவி ஊர்க் கோவில் எல்லாம் விரதம் பிடித்து அலைஞ்சது ஒன்றும் வீண் போகவில்லை. பிள்ளையாரைக் கும்பிட்டுக் கொண்டு சீலையை உடு பிள்ளை. நான் போறதும் வாறதுமாய் வாறன். நடந்து நடந்து சொல்லிக் கொண்டு போனார் சீனு மாமா.
ரேணுவுக்குப் புரிந்து விட்டது என்றாலும் ஒன்றும் சொல்லாமல் திடீரென்று வெளிக்கிடு என்று அவசரப்படுத்தினால் என்ன செய்யிறது? என்று கேட்டு வைத்தாள்.

ஓன்றுமில்லைப் பிள்ளை. யாரோ சீனு மாமாவுக்குத் தெரிந்த ஆட்களாம். அவையின்ரை பொடியன் கனடாவிலே இருந்து வந்து நிக்குதாம். கல்யாணம் கட்டிக் கொண்டு போக. சீதனம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. நல்ல வடிவான பொம்பிளை வேணும் என்று கதைச்சவர்களாம். அதுதான் உன்னை ஒருக்கால் காட்டிப் பார்ப்போம் என்று சீனு மாமா சொல்லுது.

ஏதோ நீ தலை எடுத்தால் தான் பிள்ளை இதுகளுக்கு உதவி. கொய்யா மாதிரி நானும் திடீரென்று கண்ணை மூடினால் எல்லாம் அந்தரிச்சுப் போகுங்கள் பிள்ளை. நான் ஒருக்கால் அழகு மாமியிட்டைப் போய் ஒரு சோடி காப்பும் சங்கிலியும் வாங்கிக் கொண்டு வாறன். நீ தலையை இழு.

ரேணுவின் பதிலுக்குக் காத்திராமல் வேலிப் பொட்டுக்கால் நுளைந்து விட்டாள் அம்மா. ரேணு தனக்குள்ளே சிரித்துக் கொண்டாள். படிக்கிற காலம் தொட்டு எத்தனையோ பேருக்குள்ளாலே தப்பி விதி இன்று இப்படிப் போகின்றது. பக்கத்து வீட்டு வாத்தியார் மாமாவின் பாலு கூடக் கிட்டடியில் கேட்டவன். அவள் சம்மதிக்கவில்லை. நடப்பது ஏதோ நல்லதாக நடக்கட்டும்.

மாப்பிள்ளைக்கு இவள் பிள்ளையை நல்லாகப் பிடித்துக் கொண்டுது. அவருக்கும் அப்பா இல்லை. அம்மாவும் இரண்டு அக்காமாரும் தான். இரண்டு பேருமே முடிச்சிட்டுதுகள். சின்னத் தமக்கை கனடாவிலே. அதின்ரை புத்தகத்தோடை தான் மாப்பிள்ளை வந்திருக்கிறார். தெய்வாதீனமாக இவள் பிள்ளையின்ரை முகமும் அச்சொட்டாய் பொருந்துது. எனவே போறதிலே பிரச்சனை இருக்காது என்று சொன்னார்.இந்த விசயங்களை வெளியாலே கதைச்சு எல்லாத்தையும் குழப்பிப் கொட்டிப்போடாதையுங்கோ

மற்றது தாயின்ரை விருப்பம் போல ஊருக்கு வந்து கல்யாணம் கட்டுறார் என்ற அளவோடை நாங்கள் குணத்தைப் பற்றி யோசித்துக் கவலைப்பட ஒன்றுமில்லை. கல்யாண வீட்டுக்கு நாள் வைக்கச் சொல்லிப் போட்டினம். செலவை மாப்பிள்ளை பார்த்துக் கொள்வார். முடிச்சு ஒரு மாதத்துக்குள்ளே கனடா போகினம். சரியோ! நான் எதுக்கும் போட்டு நாளைக்கு வாறன்.

சீனு மாமாவை வழி அனுப்பும் போது இரவு ஒன்பது மணி.

அம்மா! நீ இன்னும் படுக்கலையா? என்ன யோசித்துக் கொண்டு இருக்கிறாய்?

இல்லை மோனை இன்னும் ஒரு மாதத்திலே நீ போய்விடுவாய் என்ன?

நீதானே அம்மா சீனுமாமாவோடை சேர்ந்து என்னைத் தள்ளி விடுகிறாய்! 

ஏன் பிள்ளை இந்தக் கல்யாணத்திலே உனக்கு விருப்பம் இல்லையா?

அப்படியென்று இல்லை. உங்களை எல்லாம் விட்டுப் போற கவலையிலே சொல்கிறேன்.

ஏன் பிள்ளை எங்களுக்க கவலையில்லையே. நீ கனடா போகப் போறாய் என்ற உடனே நீ இல்லாத இந்த வீட்டை நினைச்சு மலர் தனியப் போயிருந்து அழுகுது. சுதாவுக்கும் அந்தரமாயத்தான் இருக்குது. அவள் வெளியாலே மலர் மாதிரி அழமாட்டாள். இவன் குணம் தான் சின்னப் பொடியன். சந்தோசத்திலே திரியுறான்.

கொய்யா செய்த புண்ணியம் தான் புள்ளை இப்படி வீடு தேடி வந்திருக்குது. பாவி மனுசன் இன்னும் கொஞ்சக் காலம் உயிரோடு இருந்து சீரும் சிறப்புமாக உன்னைப் பார்த்து விட்டுப் போயிருக்கக் கூடாதா? இருக்கும் வரைக்கும் ரேணு நல்லாக இருப்பாள் என்று சொல்லிச் சொல்லியே மாயமாய்ப் போட்டார்!

இனி நீ அழுது இருக்கிற கவலையையும் கூட்டாதே அம்மா. காப்புக் கேக்கப் போன இடத்திலே அழகுமாமி ஒன்றும் விடுப்புக் கேட்கலையே?

ஏன் கேக்கேல்லை. நான் உள்ளதைச் சொன்னனான்!

கனடாப் பொடியள் வந்து எழுதிச் சீதனத்தை வாங்கிக் கொண்டு கூட மாட்டேன் என்று சொல்லியிருக்கிறான்கள். எதுக்கும் யோசித்துச் செய்யுங்கோ என்று சொன்னவ.

அப்படித்தான் சொல்லுவா என்றுதான் நானும் நினைச்சனான். அவவின்ரை தேவிக்கு முதல் நான் கட்டுறன் என்ற எரிச்சல். பொறு கனடாவுக்கு போய் அவவுக்கு எரியக் கூடியதாகப் படம் எடுத்து அனுப்பி விடுகிறேன். கொண்டுபோய்க் காட்டு!

நீ உதைச் சொல்லுறாய் பிள்ளை. எனக்கு அவர் விசுவலிங்கத்தாரிலே தான் பயம். ஏதாவது கல்லுக்குத்தி விடுகிறாரோ தெரியாது.

அதுக்குத்தானம்மா என்ரை கல்யாணம் முடியும்வரை சீனுமாமாவோடை விசுவலிங்கத்தாரையோ அழகு மாமியையோ கதைக்க விட்டிடாதே!

மற்றது பிள்ளை எல்லாம் மாப்பிளை பார்ப்பார் என்று சீனு மாமா சொல்லுது. என்றாலும் நாங்கள் பேசாமல் இருக்கப்படாது தானே. ஒரு சோடி சங்கிலி காப்பாவது உனக்குப் போட்டுவிட வேணும் என்று நினைக்கிறேன். கையிலே காசும் இல்லை. இப்படித் திடீரென்று எல்லாம் அரங்கேறும் என்று யார் கண்டது?

அம்மா எங்கன்ரை காணியை ஈடு வைத்து கொஞ்சக் காசு எடுத்துத் தரச்சொல்லிச் சீனு மாமாவிட்டைக் கேட்பம். அவர் செய்வாரம்மா! பிறகு நான் அவரிட்டைச் சொல்லி மீண்டு தாறன். என்னட்டையும் நல்ல உடுப்புகள் இல்லை. மலர் சுதா ஆட்களுக்கும் ஏதாவது வாங்க வேணும். நான் உடுத்துப் படுத்து நிக்க அதுகள் வெறுங்கழுத்தோடை நிக்கிறதே. இதுக்கெல்லாம் தொட்டுத்தொட்டு நிறையக் காசு தேவையம்மா.

அதுதான் பிள்ளை சொல்லுறது. பொம்பிளைப் பிள்ளையைப் பெற்றால் ஆறி இராமல் ஒவ்வொன்றாகத் தேடி வைக்க வேணும் என்று! சரி போவுது. ஒரு மணிக்கு அம்மன் கோவில் மணியும் கேட்டு விட்டுது. நீ படு விடிய யோசிப்பம்.

பாயின் ஒரு மூலையில் தாவணிச் சேலையை விரித்துவிட்டுப் படுக்கும் அம்மாவையும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் தம்பி தங்கைகளையும் சோகமாகப் பார்த்துவிட்டு தானும் சரிந்தாள் ரேணு. தூக்கம் வரவில்லை. மனம் திக்கென்று அடித்துக் கொண்டது.

இரவு கொண்டு போக வேண்டிய உடைகளை பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்தாள் ரேணு கணவன் வீட்டில்! இரவு கொழும்புப் பயணம். பின்பு கனடா.

நேற்று இரவு தான் கணவன் கனடாவில் இருந்து கொண்டுவந்த படங்களை நிதானமாகப் பார்த்து தெரியாத படங்களுக்கு அவனிடம் விளக்கம் கேட்டிருந்தாள். தன்னை அணைத்த படியே கனடா போய் வசிக்கப் போகும் இடம் தனது கார் நண்பர்கள் கோவில்கள் என்று ஒவ்வொரு படமாகக் காட்டிக் கணவன் விளக்கிய போது மனம் துள்ளியது.

திருமணமாகி இரு வாரங்களக்குள் கைநிறையக் காப்பும் பலவிதமான சேலைகளையும் பார்த்து அதிசயிக்கும் அயல் வீட்டுச் சனங்களை நினைக்கும் போது இவர்கள் எல்லாம் அம்மாவை எவ்வளவு இழிவாக நடத்தியவர்கள் என்ற எண்ணமே அவள் மனதில் அலை மோதும்.

கோயில் குளம் என்று கணவனோடு போய்வரும் போதெல்லாம் எடி பிள்ளை முடிச்ச கையோடை நீ கனடா போறியாம். பெற்றவள் அவள் பாவியை மறந்து போகாதே என்று பரிந்து மாயங் கொட்டுபவர்களைக் காணும் போது சிரமப்பட்டு வாயை அடக்கிக் கொள்வாள். இவர்களுக்கெல்லாம் அம்மா கூப்பன் சீனி விற்று எவ்வளவு துன்பப் பட்டவ என்று தான் மனம் நினைக்கும்!

எல்லா வேலைகளையும் முடித்துக் கொண்டு அம்மாவின் அருகே வந்து அமர்ந்தாள் ரேணு. கவனம் தம்பி தங்கைகள் மீது விழுந்தது.

டேய்! குணம் விளையாடாமல் அம்மாவுக்கு வதவி செய்து கொடு. அக்கா ஆட்களுடன் சண்டைப் பிடிக்காமல் கவனமாகப் படி! படிப்பு முடிய அத்தானிட்டைச் சொல்லிக் கனடாவுக்குக் கூப்பிடுகிறேன்.
மற்றது மலர் சுதா ஆட்கள்! அக்கா இல்லை என்று ஊரெல்லாம் அளக்கிறது இல்லை. அம்மா நீ வேலைக்குப் போக வேண்டாம். நான் போய்க் காசு அனுப்புவேன் தானே! ஒன்றுக்கம் யோசிக்காதே! நேரத்துக்கு சாப்பிடு. சீனு மாமாவை இரவிலே வந்து படுக்கச் சொல்லு. துணையாக இருக்கட்டும்.

காணியைப் பற்றி அவரோடு இன்னும் நான் கதைக்கவில்லை. போய் அவருக்குச் சொல்லி மீண்டு தாறன். இதிலே ஆயிரம் ரூபாய் இருக்கு. வைச்சுக்கொள். வேறு என்னம்மா. இருட்ட முதல் வீட்டுக்குப் போங்கோ. கன தூரமல்லோ. நாங்களும் இன்னும் இரண்டு மணித்தியாலத்திலே போய்விடுவோம். போனதும் கடிதம் போடுகிறேன்.

பிள்ளை எங்களுடைய அம்மாள் ஆச்சியை மனதிலே நினைத்துக் கொண்டு சந்தோசமாகப் போட்டு வா. அவர் சொல்லுறதைக் கேட்டு நட. நீ போகும் வரைக்கும் நிக்க விருப்பம் தான். பிறகு பஸ் இல்லையம்மா. போட்டு வாறம்.

கட்டிப்பிடித்துக் கொஞ்சி விட்டு சேலைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டு புறப்படும் அம்மாவையும் அக்கா போட்டு வாறம் என்றபடி புறப்படும் தம்பி தங்கைகளையும் கடைசியாக ஒருமுறை பார்த்துக் கொண்டாள் ரேணு. மனம் கனத்தது.

ஊரின் நினைப்பிலிருந்து விடுபட்ட ரேணுவுக்கு உடம்பெல்லாம் குளிர்வது போல இருந்தது. கீற்றரைச் சற்றுக் கூட்டி விட்டவள் கடிதத்தை மடித்து மேசையில் போட்டாள். அம்மா ரேரடியாகக் கடிதம் எழுதுவதில்லை. ஒரு முறை ஒரே ஒரு முறை கடிதம் எழுதினாள். அது அவளின் முதலும் கடைசியுமான கடிதம்.

ரேணுகா! நீ அனுப்பிய ஐம்பது டொலரும் கிடைத்தது. காசு சிடைத்தால் எடு. ஆனால் கிடைத்தது பற்றி இங்கே ஒன்றும் எழுத வேண்டாம் என்று இன்றைக்கு நீ எழுதிய கடிதத்தில் இருந்து மட்டுமல்ல நீ போன நாட்களில் இருந்து எழுதிய எல்லாக் கடிதங்களில் இருந்துமே நீ நல்லாக இருக்கிறியோ என்று சந்தேகப்பட்டுக் கொண்டுதான் நான் இருக்கிறேன்.

என்னுடைய ரேணு என்வயிற்றிலே பிறந்த பிள்ளை என்னை இப்படிக் கஸ்டப்பட விடாது என்று எனக்குத் தெரியும். ஆனால் எது எப்படியோ எல்லாம் அவரவர் தலையில் எழுதிய  விதிப்படிதான் நடக்கும். இந்தக் காசு அவருக்குத் தெரியாமல் அனுப்பி இருக்கிறாய் என்று நினைக்கிறேன்.

அவருக்குத் தெரியாமல் காசு அனுப்பி வறுமைப்பட்ட எங்களை வஞ்சித்து வறுகுகிற ஆட்கள் என்று ஆக்கிவிடாதே! இனிமேல் பட்டு இங்கு காசு அனுப்ப வேண்டாம். நீ சந்தோசமாக இருந்தால் சரி. இப்படிக்கு அம்மா.

உம்மையும் ஒன்றுமில்லாமல் கட்டி உம்முடைய வீட்டுக்காரரையும் நான் பார்க்க வேணும் என்று எதிர்பார்க்கிறீரே ரேணுகா. என்னிடம் அந்த அளவுக்கு காசில்லை என்று முடிவாகக் கணவன் சொல்லிவிட்ட பின்பு பரிசோதனை முயற்சியாக அவனுக்குத் தெரியாமல் அவள் அனுப்பிய மை;பது டொலர் ஏற்படுத்திய பூகம்பம் அம்மாவின் அந்தக் கடிதமாக வந்து சேர்ந்தது.

இனி அம்மா தனது உதவியை எதிர்பார்க்க மாட்டாள் என்று அவளுக்குத் தெரியும். ஆனால் அப்படி நினைத்துக் கொண்டு மௌனமாக இருந்துவிட முடியமா? ஈடுவைத்த காணி விலைப்பட்டால் அதுகள் நடுத் தெருவுக்குப் போய்விடுங்களே!

இங்கேயப்பா! இரண்டு பிள்ளைகளும் தான் டே கெயருக்கு போகுதுகளே. நான் வேலைக்குப் போகட்டுமா?

ஏன் உமக்கு வீட்டிலே இருக்க என்ன செய்யுது?

இல்லையுங்கோ! நான் வேலைக்குப் போனால் உங்களுக்கும் உதவியாக இருக்கும். அம்மாவுக்கும் ஏதாவது அனுப்பலாம்.

ரேணுவுக்கு அன்று சம்பளம். முதன் முதலாக அவள் உழைத்து எடுத்த சம்பளம். இருநூற்றிநாற்பது டொலர். கடவுளே இந்த மனுசன் எவ்வளவு காலத்துக்கு என்னை வேலைக்கு விடுகுதோ தெரியாது. அவன் உன்னைப் பார்க்கிறான். இவன் பார்க்கிறான் என்று சொல்லி நிற்பாட்டிப் போடும்.

இந்த மனுசன் மனம் இரங்கி விட்டாலும் வேலை செய்யும் இடத்திலே எப்ப நிற்பாட்டுவான்களோ தெரியாது. இங்கிலீ~; பாi~யும் எனக்கு எpளங்குதில்லை. கடவுளே! மாதம் ஒரு நூறுடொலர் அனுப்பிக் காணியையாவது மீண்டு கொடுத்து விட்டால் அதுகள் ஏதாவது வேலைக்குப் போயாவது பிழைத்துக் கொள்ளுங்கள்.

இன்று அவள் வாழ்க்கையில் பெரிய நிம்மதியான நாள். ஏதோ தவறு செய்துவிட்டு வந்து விட்டோமே என்ற ஏக்கத்துக்கு மாற்றுவழி தெரிகிறது. சம்பளச் செக்கை மாற்றி இன்றைக்கே நூறு டொலர் அனுப்ப வேண்டும்.

அறைக்குள் நுழைந்தாள் ரேணு. டெலிபோன் பதிவில் உள்ள சிவப்பு லைட் மின்னிக்கொண்டு இருந்தது. யாரோ ஏதோ செய்தி பதிந்து விட்டிருக்கிறார்கள். டேப்பைப் போட்டுக் கேட்டாள். அவர் தான் கதைத்திருக்கிறார்.

ரேணுகா கார் ஏதோ சத்தம் போடுது. விடியக் கொண்டுபோய்க் காட்ட வேண்டும். குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு வரும்போது உம்முடைய சம்பளச் செக்கை மாற்றிக் கொண்டு வந்து வையும். மறந்து போகாதையும்.

பெருமூச்சு விட்டாள் ரேணு. இப்படிக் கல்யாணம் கட்டி வாழ்வதை விட கல்யாணம் கட்டாமல் காணியை விற்றாவது நான் ஏதாவது ஒரு நாட்டுக்குப் போயிரக்கலாம்.. தனிய வந்திருந்தால் இப்போது எப்படியெல்லாம் உழைத்து வீடும் கட்டி மலர் சுதா ஆட்களுக்கும் ஒரு வழி செய்து இருக்கலாம்.

இன்னொருவன் சொத்தாக வந்து எவ்வளவு முட்டாள் தனம் செய்துவிட்டேன். சீதை மாய மானைக் கண்டதும் யோசிக்காமல் ஆசைப்பட்டது போல கனடா மாப்பிள்ளை என்றதும் கனடாவுக்கு வர ஆசைப்பட்டு எங்கள் குடும்பத்தையே நடுத்தெருவுக்குக் கொண்டுவந்து விட்டேனே!

தங்களைத் தாங்களே பார்க்க முடியாத இந்தக் கனடா வாசிகள் கிரடிக் காட்டுகளிலே டிக்கட் செய்துகொண்டு ஊருக்கு வந்து எப்படி அல்பங்களையும் படங்களையும் காட்டி நடிக்கிறார்கள். எத்தனை பெண்கள் இந்த மாயமான்களின் பின்னே கனடா வந்து தவிக்கிறோம்!

எத்தனை பெண்கள் மாடாய் உழைத்து இவர்கள் மனுசன்களாக வாழப் பாடுபடுகிறோம். எத்தனை ஒன்றும் தெரியாத பெண்கள் முன்பின் தெரியாத இவர்களுக்கு வாழ்க்கைப்பட்டு இவர்களின் கடன்களை அடைக்கிறோம். எத்தனை கலெ~;சன் ஏச்சன்சிக்குப் பதில் சொல்கிறோம்!

அட கடவுளே! இந்த மாயமான்களின் பின்னே ஓடிவர எத்தனை சீதைகள் தவம் கிடக்கிறார்கள் ஊரிலே! பாவங்கள்!

துன்பத்தை மறந்து வாய்விட்டுச் சிரித்தாள் ரேணுகா!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *