மாமியின் அட்வைஸ்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 4, 2020
பார்வையிட்டோர்: 6,939 
 
 

ஜன சந்தடியற்ற அந்த நெடுஞ்சாலையில் வேகமாக ஸ்கூட்டரில் போவது பரசுராமனுக்கு சுலபமாக இருந்தது. மாலதிக்கும் அந்த சுத்தமான காற்று சுகமாக இருந்திருக்க வேண்டும்.

பரசுராமன் ஏதோ சொல்ல, காற்றின் வேகத்தில் அவள் காதில் எதுவும் விழவில்லை. அவனை இன்னும் நெருங்கி, ”என்னங்க” என கத்தினாள். ஆமாம், கத்தினால்தான் என்ன? யார் காதில் விழப் போகிறது? இது என்ன அவர்கள் குடியிருக்கும் ஒண்டுக் குடித்தனமா, குரலைத் தாழ்த்திப் பேச! இப்பப் பார்க்கப் போகிற வீடு, ஆயிரம் சதுர அடியாமே! இரண்டு ரூம்.. ஒரு பூஜை அறை…

பரசுராமன் ஸ்கூட்டரின் வேகத்தை குறைத்தான்.

”என்னது! வழி சரிதானா? இருபது நிமிஷத்துல வந்துரும்னானே புரோக்கர். போகப்போக அனுமார் வால் மாதிரி நீண்டு கொண்டே போகிறதே!”

“ யாரையாச்சும் கேளுங்களேன்”

”ரெண்டு பக்கமும் மரம்தான் இருக்கு. அதை போயா கேட்க முடியும்?

“அதோ ஒருத்தன் சைக்கிள்ள..”

ஸ்கூட்டர் சைக்கிள்காரனை நெருங்க, “ஏம்பா.. மாருதி நகர் இங்கே எங்கப்பா இருக்கு?”

”நே…ரா… போங்க சார் ”

அவன் சொன்ன ’நேரா’ வின் நீட்டல் இன்னும் தூரம் அதிகம் என்று உணர்த்த, கியர் மாற்றினான்.

இருவரும் பேசவில்லை. இவ்வளவு தூரமா என்று பேசி, புதுவீடு யோசனை கெட்டுவிடக் கூடாது என இருவருமே நினைத்தார்கள்.

பரசுராமன் கண்களுக்கு தூரத்து குடியிருப்புகள் தென்பட்டதும் மகிழ்ச்சி.

”அதோ பார்தியா, சாயங்கால வெயில்ல எப்படி இருக்குன்னு… அதோ அதுதான் மாருதி நகர்.”

தார் சாலையில் இருந்து வண்டி வலப்புறம் திரும்ப, ’மாருதி நகர் உங்களை வரவேற்கிறது’ என்ற போர்டை சந்தோஷத்துடன் பார்த்தபடி நகர்ந்தார்கள்.

”எவ்வளவு தள்ளித் தள்ளி ஒவ்வொரு வீடும்..! இப்ப என்னடான்னா ரஞ்சிதம் மாமி வெங்கு மாமா இருமல் பாட்டி எல்லோரையும் நம்ம மடியில் கட்டிக் கொண்ட மாதிரி..”

”இப்ப ஏன் நம்ம குடித்தனத்தை நினைத்துக் கொண்டு? நமக்கு அவன் என்ன நம்பர் சொன்னான்??

”வீட்டு நம்பர் பதினாறுன்னான். அதோ போர்டு இருக்கே”

மொத்தம் முப்பது வீடுகள் இருந்தால் அதிகம். பதினாறாம் நம்பர் வீடு, மாடியும் கீழேயுமாக இருக்க, கீழ் வீட்டிலிருந்து ஒரு நடுத்தர வயது மனிதர் இவர்களை வரவேற்றார்.

உள்ளே நுழைகையில் வாசலில் இருந்த சின்ன ரோஜா செடிகளை மாலதிக்கு கண்களால் ஜாடை காட்டினான் பரசுராமன். அவனுக்கு தோட்டக்கலையில் ஆர்வம் உண்டு.

பரஸ்பரம் அறிமுகம் முடிந்தது. வீட்டைப் பார்த்துவிட்டு பரசுராமன் அங்கு குடிவரலாம் என்று இருந்தான். இப்போது இருக்கிற வீடு மிகவும் சிறியது. பல குடுத்தனங்கள் உள்ள நெருக்கடியான இடம்.

மாலதிக்கு ஹாலில் இருந்த சாமான்கள் மிக சொற்பம் எனப்பட்டது. நாம இப்ப இருக்கிற மொத்த அளவில இந்த ஹால் இருக்கே. மாடியில் எத்தனை ரூமோ. சமையலறை, பூஜய் அறை எல்லாம் எப்படி இருக்குமோ! மனது அலை பாய்ந்தது.

”புரோக்கர், மாடிவீட்டு சாவி உங்ககிட்ட இருக்கினாரே. இருக்கா?”

கேட்டே விட்டாள்.

”பேஷா எடுத்திண்டு வரேன். மாடிக்கே போயிடலாம்.ஒரு வாய் காபி சாப்பிட்டுவிட்டு காண்பிக்கலாம் என்றுதான்”

பரசுராமனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. சுதாரித்துக் கொண்டு,

”மெதுவா போகலாம். ஒண்ணும் அவசரம் இல்லை. மலதியை கண்ணால் கண்டித்தபடி, “தூரம்தான் கொஞ்சம் அதிகம் என்று தோணுது..”

பஞ்சாபகேசனுக்குக் கோபம் வந்துவிட்டது. “ என்ன, இதப்போய் தூரம்முன்னுட்டேள்!. அவனவன் ஜோலார்பேட்டையிலிருந்தும் அரக்கோணத்திலிருந்தும் டெய்லி மெட்ராஸ் வர்றான் சார். ஸ்கூட்டர் உங்களதுதானே!”

மாமா சத்தம் கேட்டு, மாமி அடுப்பங்கரையிலிருந்து வெளியே முகம் காட்டினார்கள். பயந்த சுபாபம் மாதிரி தெரிந்தார்கள்.

“ஸ்கூட்டர் என்னுதுதான் சார்” பரசுராமனுக்கு குரல் உயரவில்லை.

“பின்ன என்ன! எத்தனை மணிக்கு ஆபீஸ்?”

“பத்துக்கு”

“ஹா ஹா ஹா என மாமா சத்தமாக சிரிக்க, மாலதியும் பரசுராமனும் விழித்தார்கள்.

”இங்கே இருபத்து இரண்டில ’டி.வி.எஸ். வெங்கு மாமா இருக்கார். எட்டு மணிக்கு ஃபேக்டரி. இங்கிருந்து பஸ் ஸ்டாண்டுக்கு சைக்கிளிலேயே போயிடுறார். பத்து மணி ஆபீஸுக்கு நீங்க என்னடான்னா யோசிக்கிறேள்! அதுவும் ஸ்கூட்டர் வச்சிண்டு!!” மீண்டும் சிரிப்பு.

“நமக்கு பரவாயில்லை சார். குழந்தைகள் ஸ்கூலுக்கு..”

“டெய்லி வேன் போறது. அரேஞ்ச் பண்ணியிருக்கோம். எட்டுக்கு வந்துடுவான். மெயின் பஸ் ஸ்டாண்டுல வேணாலும் இறங்கிக்கலாம். இல்ல”

”பஸ் இங்க வராதா?” மாலதிதான்..ஆனால் கேள்வியை ஹாலுக்கும் சமையலறைக்கும் இடையே நின்ற மாமியைப் பார்த்து கேட்க..

“என்னை கேளுங்கோ. பஸ் காந்திநகர் போறது. அந்தப் பாலத்தணை நிற்கிறான். அவன் உள்ளே வந்து போகனுமின்னு எம்.எல்.ஏ.யண்ட மனு கொடுத்துருக்கு”

“அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் இருக்குமே!”

“பயப்படாதீங்க சார். சீக்கிரமே வந்துவிடும்.”

“கேஸ் சிலிண்டருக்கு?” மாலதிக்கு அவள் கவலை.

“நாம்தான் எடுத்துண்டு வரணும். பக்கத்தில வெட்டுபுரத்தில ‘இண்டேன்’ இருக்கு. வந்திடும். கூடிய சீக்கிரம் இங்கேயே”

”காய்கறி எல்லாம்….?” மாலதி மாமியை பார்க்க…

“வர்றான். நமக்கு மாம்பலத்தில் கிடைக்கிறதைவிட சீப்பா… பச்சை தண்ணியா.. கௌரி அந்த வெண்டைக்காயக் கொண்டாடி. பச்சையாகவே சாப்பிடலாம். எவ்வளவு நல்லா இருக்கும்”- பஞ்சாபகேசன்.

மாமி கொண்டு வர, மொரக் மொரக் என கடித்து தின்றார். பரசுராமனும் மாலதிலும் திகைத்துப் போய் பார்க்க,

” அப்புறம் வேற என்ன டவுட்டு? எல்லாத்தையும் கேட்டுங்கோ..அங்க மெட்ராஸ்ல இந்த மாதிரி வீட்டுக்கு என்ன வாடகை தெரியுமா? மூவாயிரம் கொடுத்தாலும் கிடைக்குமா? குழந்தைகள் ஓடியாட முடியுமா? ஒரு காய்கனி செடி போட முடியுமா நம்மள மாதிரி மிடில் கிளாசால? இடிச்சிண்டு நசுங்கிண்டு… நான் தான் ஃபர்ஸ்ட் இங்க குடுத்தனம் வந்தது. ஒரு வருஷம் ஆச்சு. என்னடி வாயில என்ன கொழுக்கட்டையா? சொல்லேண்டி கௌரி.

மாலதி விடுவதாய் இல்லை.

“எனக்கு பிரதோஷம் பார்க்கணுமே! பக்கத்துல சிவன் கோயில் ஏதாவது..?”

“மனசுலதான்மா சாமி. சாமி எல்லாம் ஒண்ணுதான். இங்க ஒரு அம்மன் கோயில் இருக்கேடி. கௌரி சொல்லேன்.”

அந்த மாமி தலையாட்ட…, அவர்கள் முகமே மங்களகரமாய் இருந்தது. பின்பு காபி வந்தது. பாலின் பெருமையை மாமா சொல்ல, மாடி வீட்டை பார்க்க படியேறினார்கள்.

மாடி வீடு சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருந்தது. மாலதிக்கு மிகவும் பிடித்து போய்விட்டது. பரசுராமன் கேள்விகளும் மாமா பதில்களும் தொடர்ந்தன.

”யோசித்து கொண்டே இருந்தால் முடியாது. நாங்களெல்லாம் இல்லையா? வந்துடுங்கோ. பதினாறு நல்ல நாள். பால் காய்ச்சிடுங்கோ. வாடகை அடுத்த ஒண்ணில் இருந்து பார்த்துக்கலாம். நான் வீட்டு ஓனர் கிட்ட சொல்லிடுறேன்.”

பரசுராமன் தலையாட்டிக் கொண்டே இருக்க, மாலதி ஜன்னல் வழியே கீழ் வீட்டைப் பார்த்தாள். மாமி நிற்பது தெரிந்தது. கீழே வருமாறு ஜாடை செய்வது போலிருக்க, மாலதி கீழே இறங்கினாள்.

விரு விருவென்று உள்ளே போக, மாமி தாழ்ந்த குரலில் மாலதியிடம்,

“அவர் சொல்கிறாருன்னு வந்திடாதீங்கோ. அவர் ஆம்பிளை, காலையில ஓடிட்டா இராத்தான் வருவார். பகலெல்லாம் பயமா இருக்கு. ஒரு விஷயமும் எட்டேறல. எல்லாத்துக்கும் தூரமாயியிடுத்து. வேண்டாம்… வந்திடாதீங்கோ.. மகா சிரமம். தெரியாமல் வந்து மாட்டிண்டோம்.

(பிப்ரவரி 1995ல் எழுதியது)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *