மாக் டொனால்டின் மகன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 30, 2019
பார்வையிட்டோர்: 10,913 
 
 

லண்டன்-11.9.19

துளசி என்னும் மனநல வைத்தியர்,மகாதேவன் என்னும் மனித உரிமை வழக்கறிஞர்; என்பவர்களின்;; மேன்மை மிகு தந்தையும், கலிகாலக் கடவுளாகிய ஸ்கந்தனின் அருளில் அதி மிக பக்தியுள்ள தாட்சாயணியின் கணவருமான திருவாளர் சுந்தரலிங்கம் கடந்த சில நாட்களாக மிகவும் சோர்வாகவிருக்கிறார்.அவருக்கு உடல்நலம்; சரியாக இல்லாமற் போய்க்கொண்டிருக்கிறது என்று பயப்படும் அவரின் அன்பு மனைவி அவரின் மனநிலையைச் சீராக்க என்ன செய்வது என்று தெரியாமற் தவிக்கிறாள்.

திரு சுந்தரலிங்கம் அவர்கள் கடந்த சில நாட்களாக உண்ண மறுக்கிறார்.உறங்குவதிற் சிரமம் படுகிறாh (சரியாகச் சாப்பிடாமல் வெற்று வயிற்றுடன் துயில் கொள்ளமுடியாது).வருவோர்களிடம் முகம் கொடுத்துப் பேசத் தயங்குகிறார்(ஏதோ ஒரு அவமான உணர்ச்சியின் பிரதிபலிப்பு).அதிலும்,சமய,சாதியப் பண்பாடுகளை இறுக்கிப் பிடித்து வைத்திருக்கும் அவரது சொந்தக்காரர்கள் அவரைப் பார்க்க வந்தால் நித்திரை கொள்வதுபோல் பாசாங்கு செய்து கண்களை மூடிக் கொள்கிறார்.

எழுபதுவயதைத் தாண்டும்; தங்கள் சினேகிதன் ஏன் இப்படிச் சோர்ந்து போயிருக்கிறான் என்பதைச் சாடையாகத் தெரிந்தவர்களும், தெரிய ஆவற்படுபவர்களுமாகச் சிலர் அவரை அடிக்கடி வந்து பார்த்துச் செல்கிறார்கள்.

அவருடன் படித்த.இன்று ஓய்வுபெற்ற பல வயது போனவர்கள் (???) அவரைப் பார்க்க வந்தபோது சிலரிடம் ஏதோ முக்கி முனகிக்கொண்டு,’எங்கள் கலாச்சாரம் பண்பாடு எல்லாம் லண்டனிற் தலைகீழாகப்போகிறது’ என்று முணுமுணுக்கிறார்;.அவரின் நண்பர்கள் பலர் அவர்களின் இருபது வயதுகளில் லண்டனிற் படிக்கவும், இன்னும் பலர் முப்பது வயதுகளில் இலங்கைப் பிரச்சினையைக் காரணம்காட்டி அகதிகளாகவும் வந்து சேர்ந்தவர்கள்.

லண்டனுக்குப் படிக்க வந்தவர்கள்,படித்த படிப்புக்கு ஒரு வேலையை எடுத்துக்கொண்டு ஓரளவு பரவாயில்லாத பொருளாதார நிலையிலும் அகதிகளாக வந்தவர்கள் எப்படியோ முன்னேறவேண்டும் என்ற ஆவலில் ஒன்றுக்குப் பதில் இரண்டாம் மூன்றாம் சிறுவேலைகளையும் செய்து,பல பட்டம் பெற்ற படித்த தமிழர்களைவிட நல்ல பொருளாதார நிலையிலுமிருக்கும் மாயங்களை அறிந்தவர்கள்;. ஒருத்தரை ஒருத்தர் அவர்களின் பொருளாதார ரீதியில் கணக்கிடுபவர்கள்,சினேகிதமாகவிருப்பவர்கள்,உறவுகளைப் பிணைத்துக் கொள்பவர்கள்.

அந்தப் பாரம்பரியத்தில் வளர்ந்து,இப்போது லண்டனிலும் தமிழ் மொழியை வளர்க்கப் பல தமிழ்ப் பாடசாலைகளையும்,கலாச்சாரப் பண்பாடுகளையும் பாரம்பரியத்தையும் வளர்க்கக் (??) கோயில்களையும் பல இடங்களிலும் அமைத்துக் கொண்டிருப்பவர்கள்.அவர்களில் மிகவும் முக்கியமானவாகளில் ஒருத்தர் திருவாளர் சுந்தரலிங்கம் பிள்ளை அவர்கள்.

அவர் சில கடைகளின் சொந்தக்காரர். அவர் எண்பத்தி மூன்றாம் கலவரத்தின்பின் லண்டனுக்கு அகதியாக வந்து சேர்ந்தாh.;இலங்கையில் படித்த படிப்புக்கு லண்டனில் வேலை கிடைக்காததால் லண்டனில் ஒரு கடையை மிகவும் சிரமம்பட்டு வாங்கி அதன் வளர்ச்சிக்கு இரவு பகலாக உழைத்து இப்போது சில கடைகளின் உரிமையாளராகவிருக்கிறார். அதனால் அவர் வசதியாக வாழ்கிறார்.பணமிருந்தால் கவுரவம் தேடிவரும் என்பதால் அவர் தன்னால் முடிந்தவரை பல தமிழர் அமைப்புக்களில் முக்கிய பங்கு வகிக்கிறார்.தன் குழந்தைகளும் தமிழர்கள் மதிக்கக் கூடிய வாழ்க்கையை வாழவேண்டும் என்று இடைவிடாது சொல்லிக்கொண்டிருந்தார்.

தமிழ்ப் பண்பாட்டைக் காப்பாற்ற எதையும் செய்யத் தயங்காத பரம்பரையில் வந்த அவருக்கு அவரின் குழந்தைகளான துளசியும் மகாதேவனும்,தாங்கள் பன்முகத் தன்மையுள்ள, பல்லின மக்கள் வாழும் பிரித்தானியாவில் பிறந்த தமிழர்கள் என்றும், தாங்கள் பிறந்த ‘தாய்’நாட்டின் (பிரித்தானிய) கோட்பாடுகளான, ‘யாதும் ஊரே,யாவரும் கேளீர், எம்மதமும் சம்மதமே’ என்ற பாரம்பரியத்தை மதிப்பதாகவும் சொல்லி கடந்த சில கிழமைகளாக அவருடன் வாதாடுவது அவருக்குத் துக்கத்தைத் தருகிறது. அவர்கள் சொல்லும் சமத்துவக் கோட்பாடுகள் தமிழரின்-சைவசமயத்தின் பாரம்பரியக் கோட்பாடுகள் என்று அவர் கோபத்தில் அதிர்ந்தபோது,’அப்படி என்றால் அந்தப் பெருமையான பாரம்பரியத்தைக் கொண்டவர்கள் எங்களுக்குப் பிடித்தவர்களை நாங்கள் திருமணம் செய்வோம் என்ற எங்கள் விருப்பத்தை ஏன் மறுக்கிறீர்கள்’ என்று துயர் படிந்த குரல்களில் கோரஸ் எழுப்புகிறார்கள்.

தனது குழந்தைகளின் படிப்பில், உத்தியோக வளர்;சியில் மிகவும் பெருமை கொண்டிருந்த அவருக்கு இன்றைய குடும்ப நிலை மிகவும் அதிர்ச்சியைத் தருகிறது.

அவரின் வீட்டில் அவரின் ஒரேயொரு மகளையும் ஒரே ஒரு மகனையும்; சீரும் சிறப்புமாகத் திருமணம் செய்து வைப்பது அவரின் வாழ்க்கையின் இலட்சியமாகக்கொண்டவர். இப்போது மிகவும் நொந்து போய்ச் சோர்ந்து படுத்திருப்பதை அவரின் மனைவியாற் தாங்கமுடியதாதிருக்கிறது. குடும்பத்தில் என்ன நடந்தாலும் அவை அத்தனையும் கடவுளின் அனுக்கிரகம் என்ற நம்பிக்கையுள்ள அவர் துணைவி தாட்ஷாயணிக்குக் கணவனின் மனநிலை புரிந்தது. இப்பூவுலகிற் பிறந்து இறைவன் தன்னை அழைத்துக் கொள்ளும் இறப்பு வரும்வரை ஸ்கந்தன் விட்ட வழியில்; வாழ்வை நகர்த்தும் பிரார்த்தனையுடன் வாழும்; தாட்ஷாயணிக்கு அவர்களின் வீட்டில் தொடரும் மௌனயுத்தம் மிகவும் மனவருத்தத்தை; தருகிறது.

சுந்தரலிங்கம்- தாட்ஷாயணி தம்பதிகளுக்கு ஆசைக்கு ஒரு பெண்ணும் ஆஸ்திக்கு ஒரு ஆணும் என்று இரு குழந்தைகள் பிறந்தபோது,அவர்களைத் தன்னால் முடிந்தவரை அப்பழுக்கற்ற தமிழக்கலாச்சாரத்துடன் வளர்ப்பது அவசியம் என்றும் அந்தக் கோட்பாட்டுக்கு அவர்களின் குழந்தைகள் காலையில் கடவுள் வழிபாட்டுடன் அவர்களின் நாட்கள் ஆரம்பிப்பது தொடக்கம்,சனிக்கிழமைகளில் தமிழ்ப் பள்ளிக் கூடத்திற்குப் போவது,அங்கு தமிழ் மொழி மட்டுமல்லாது, கலைகளையும் கற்பிப்பது தங்களின் தலையாய கடமையாகக் கொண்டிருந்தார்கள்.

உலகம் தெரியாத வயதில் தாய் தந்தையர்களின் வழி நடந்த குழந்தைகள் தங்களால் புரிந்து கொள்ள முடியாதவற்றைத் தாய்தகப்பனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளச் சில கேள்விகள் கேட்கத் தொடங்கிய காலத்திருந்து தங்கள் குழந்தைகள் தாட்ஷாயணியும் சுந்தரலிங்கமும் வாழ்ந்த வாழ்க்கையைத் தொடரப் போகிறார்களா என்ற கேள்வி தாட்ஷாயணியின் மனதில் துளிர்க்க ஆரம்பித்தது. ‘எங்களின் பாரம்பரிய கலாச்சாரம் என்பதற்காக வாழ்க்கைக்குத் தேவையற்ற நம்பிக்கைகளைத் தொடர்வது தேவையில்லை’ என்று வாதம் செய்கிறார்கள்.

ஆரம்பத்தில் அவளின் மனதில் அவளின் குழந்தைகள் பற்றித் துளிர்த்த பல கேள்விகள் இன்று அந்தக் குடும்பத்தின் ஒட்டுமொத்த நிம்மதியையம் குலைத்தழிக்கும் பெரும் புயலாக உருவெடுத்திருக்கிறது.

தாட்ஷாயணி வழக்கம்போல் காலை ஆறுமணிக்கு எழுந்தாள். புரட்டாதி மாதத்தின் சாடையான குளிர் தோட்டத்துக் கதவைத் திறந்ததும் அவள் முகத்திலடித்தது. அவள் எழுந்ததும் தோட்டத்துக் கதவைத் திறந்து ஒருசில நிமிட நேரங்கள் கண்களைமூடி,மனதை இறைவனிற் பதித்து ஆழ்ந்த மூச்சுக்களை எடுத்துத் தன் சுவாசத்தைச் சுத்தப் படுத்துவாள். தோட்டத்துப் பூ மரங்கள் இன்னும் இலையுதிர் காலத்தைக் காணாததால் இன்னும் பல்வகையான மலர்களைத் தாங்கிக் காலையின் இளம் தென்றலில் மெல்லென அசைந்தாடி அற்புதமான சுகந்தத்தை அவளின் சுவாசத்துடன் இணைக்கின்றன.

அதைத் தொடர்ந்து குளித்து முழுகி விட்டுக்; கடவுளர்களுக்குப் பூசை செய்தபோது தாட்ஷாயணியின் வாயில் சீரடிபாபாவின் பாடல்கள் முணுமுணுக்கப் பட்டாலும் அவள் மனம் அவளின் இரு குழந்தைகளிலும் அவர்களின் நடத்தையால் மனமுடைந்து சோர்ந்துபோயிருக்கும் தனது கணவனின் நிலையையும் யோசித்துத் துயர் பட்டுக் கொண்டிருந்தது.

அவள் பார்வை அவளின் பூசையறையில் உள்ள கடவுளர்களின் படங்களில் நிலைத்து நின்றபோது அவள் கண்களில் பொல பொலவென்று கண்ணீர் கொட்டத் தொடங்கியது. ‘கடவுளே எனது குழந்தைகளையும் கணவரையும் ஒற்றுமையாக்கி இந்த வீட்டில் நிம்மதி தொடர உதவி செய்’அவள் வாய்விட்டு அழுதாள்.

தாட்ஷாயணி; மிகவும் கடவுள் பக்தியுள்ள குடும்பத்தில் பிறந்தவள். குழந்தைகளையம் அப்படியே வளர்க்க விரும்பினாள்.சிறுவயதிலேயே குழந்தைகளுக்குத் தேவார திருவாசகம் சொல்லிக் கொடுத்தாள்.அதிலும் ஒரே ஒரு மகளான துளசி தங்கள் கலாச்சாரத்தைப் பேணவேண்டுமென்று தாட்ஷாயணி விரும்பினாள்.

துளசி மிகவும் சிறுவயதிலியே மற்றவர்களிடம்சாதி,மத,இன,வயது வேறுபாடற்று அளப்பரிய பாசத்துடன் பழகுவாள். முக்கியமாக வயதுபோனவர்களிடம் மிகவும் கனிவாக நடந்துகொள்வாள். கடை கண்ணிக்குப் போகும்போது தெருக்களில் குந்தியிந்து உதவி கேட்கும் வறியவர்களுக்குப்,(பெரும்பாலும் வறிய வெள்ளையினத்தவர்கள்)ப பணம் கொடுக்கச் சொல்லித் தாயைக் கெஞ்சுவாள். மனிதர்களிடமட்டுமல்ல இயற்கையின் படைப்பில் உள்ள ஒவ்வொரு அம்சத்திலம் ஏதோ ஒரு அழகைக் கண்டு ரசிக்கும் தன்மை அவளின் இரசனை அவளின் சிறு வயதிலேயே தெரிந்தது. தோட்டத்திலள்ள மலர்ச் செடிகள் வாடிவிடாமல் தனது பிஞ்சுக் கரங்களால் நீர் ஊற்றுவாள்.

மிருகங்களை மிகவும் ஆச்சரியத்துடனும் ஆர்வத்துடனும் பார்ப்பாள். தனக்கு ஒரு பூனைக் குட்டி வேண்டுமென்று பிடிவாதம் பிடித்தாள். அவளின் தந்தை அவள் வேண்டுகோளை மறுத்தபோது பல நாட்கள் சோகமாகவிருந்தாள். ‘நாங்கள் விடுதலைக்கு ஊருக்குப் போகும்போது பூனையைப்பார்க்க யாருமில்லையென்றால் பூனை பாவமில்லையா’ என்று தாய் அன்புடன் விளக்கம் சொன்னதும் சமாதானமானாள்.

குழந்தைகள் சிறுவயதாக இருக்கும்போது சுந்தரலிங்கம் தம்பதிகள் கோயில் யாத்திரைக்காகக் குடும்பத்துடன் இந்தியா சென்றார்கள்.கோயிலைச் சுற்றிப் பெருமளவிலிருந்த வறிய மக்களைக் கண்டதும் துளசியின்; கண்கள் கலங்கின. அந்தத் துயருடன் கோயிலுக்குள் சென்றபோது ஐயர் கடவுளின் சிலைக்குப் பெரிய பாத்திரம் நிறைந்த பாலூற்;றிக் குளிப் பாட்டியபோது,’தயவுசெய்து அந்தப் பாலை வெளியிலிருக்கும் ஏழைகளுக்குக் கொடுக்கச் சொல்லுங்கள்’ என்று தாயின் கைகளைப்படித்துச் சிணுங்கத் தொடங்கி விட்டாள்.

அப்போது துளசிக்கு வயது ஐந்து.

அதைத் தொடர்ந்து, ஐயர் பூசை செய்யத் தொடங்கியது,’அவர்,’எனக்குத் தெரியாத ஏதோ மொழியில் பேசுவது எனக்குப் புரியவில்லை’என்று தாயிடம் முணுமுணுத்தாள்.

;’ஐயர் சொல்வது கோயிலிருக்கும் கடவுள் மொழி’ என்று தாய் சொன்னதும்,’அப்படி என்றால் தமிழ் பேசத் தெரிந்த தமிழ்க் கடவுளிடம் போவோமா’ என்று அப்பாவித்தனமாகக் கேட்டாள்.

அக்கால கட்டத்தில் லண்டனில் தமிழர்களுக்கென்று அதிக கோயில்களில்லை.அத்துடன் அவர்கள் லண்டனை விட்டுத் தூரத்திலிருந்ததால் அடிக்கடி கோயிலுக்குப் போகும் பழக்கமுமில்லை.ஆனால் வீட்டில் தாட்ஷாயணி எப்போதும் தமிழில் தேவார திருவாசகம்பாடிக் கடவுளை வணங்குவதைப் பார்த்துப் பழகிய துளசிக்கு அன்று அந்தக் கோயிலில் கண்ட விடயங்கள் மிகவும் மனத் தாக்கத்தையுண்டாக்கி விட்டது தெரிந்தது.

அவளின் மகள் துளசி ஆரம்பப் படிப்பைத் தொடங்கமுதலே கடவுளைப் பற்றிக் கேள்வி கேட்டபோது தாட்சாயணி திடுக்கிட்டு விட்டாள்.அந்த நிகழ்ச்சி தாட்ஷாயணியின் மனதில் பெரும் நெருடலை உண்டாக்கியது. லண்டனிலும் ஐரோப்பாவிலும் பல தமிழர்கள் வேறுமதங்களைத் தழுவிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மாதிரியே இப்போது கோயில்களிற் காணும் அவர்களால் புரிய முடியாத சடங்குகளைப் பார்த்துக் குழம்பிவிடுவார்களோ என்று தாட்ஷாயணி யோசித்துண்டு.

துளசி எதிலும் மனித உணர்வின் மிக முக்கியமான அன்பைக் காண்பவள். இந்தியப் பிரயாணம் அவள் மனதில் மிகவும் ஆழமாகப் பதிந்து விட்டது. கடவுள், அந்தப் பிரமாண்ட சக்தியைச் சுற்றிப் பிணைந்திருக்கும் பல்வித சமுக,வாழ்க்கைக் கோட்பாடுகளை துளசி அவள் வளர்ந்து கொண்டிருந்த காலத்தில்; படிக்கத் தொடங்கினாள்.

தாட்ஷாயணி,பழமையைத் தொடரும் பண்பாட்டில் ஊற்றி வளர்க்கப் பட்டவள். அவர்களின் அந்தஸ்துக்கு ஏற்ப, அவர்களின் பெற்றோர்களால் தெரிவு செய்யப் பட்ட திருவாளர் சுந்தரலிங்கத்தைக் கைபிடித்தபோது அவரின் முன்கோபம், பிடிவாதம்,தன்னலம் என்பவற்றைப் புரிந்து கொள்ளாதவள். புரியத் தொடங்கியபோது அந்த வாழ்க்கையைப் புரிந்துகொண்டு ஏற்றுக்கொண்டவள். ஆனால் துளசி அப்படி இருக்க மாட்டாள் என்று தாட்ஷாயணிக்கு விளங்கியது. துளசி; டாக்டராகப் படிக்கத் தொடங்கியதும் அப்பாவின் சமுகம் சார்ந்த கோட்பாடுககைக் கேள்வி கேட்கத் தொடங்கி விட்டாள். எல்லா மனிதர்களம் ஒரே மாதிரியாகத்தான் படைக்கப் பட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் பொருளாதார, படிப்பு நிலை, என்பன அவர்கள் வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வை நிர்ணயிக்கின்றன’ என்று தாய் தகப்பனுடன் வாதம் செய்வாள்.

அவர்கள் தங்கள் குழந்தைகளின் வாதங்களை எதிர்த்து வாதாடி நேரத்தை விரயமாக்க விரும்பவில்லை. தாய் தகப்பனில் மிக மிகப் பற்றுள்ள மகனும் மகளும் தங்களின் சொற்படி நடப்பார்கள் என்று கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டார்கள்.ஆனால் அவர்களின் மகள் தனக்குப் பிடித்த மாப்பிள்ளையைப் பற்றித் தாய்க்குச் சில வாரங்களுக்கு முன்; சொன்னபோதுதான் வீட்டில் பூகம்பம் வெடித்தது. துளசியின் மனதைக் வர்ந்தவன் ஒரு வெள்ளையினத்தவனாம்.மிகவும் பணக்காரனாம்.சிறு வயதிலிருந்து அவளுக்குத் தெரிந்தவனாம்.

‘வெள்ளையனா’? தாயும் தகப்பனும் மூக்கில் விரலை வைத்துத் தங்கள் வியப்பைக் காட்டிக் கொண்டார்கள்.

ஓரு இலங்கைத் தமிழனை அவள் விரும்பி இருந்தாலும் ‘எங்களைக் கேட்காமல் என்னவென்று உனக்கொரு துணையைத் தேடினாய்?’; என்று அவர்கள் சண்டை போட்டிருக்கலாம். அவளுக்கு இருபத்தி எட்டு வயதாகிறது. துளசியின் இருபத்தி நான்கு வயதில் அவளின் டாக்டர் பட்டப் படிப்பு முடிந்ததும் தாய் தகப்பன் அவளின் எதிர்காலம்,அவளின் திருமணம் என்பன பற்றிப் பேச வாய் எடுத்தபோது அவள் தனது மேற்படிப்பு முடியுமட்டும் திருமணத்தைப் பற்றி யோசிக்கப் போவதில்லை என்று சொல்லியிருந்தாள். அவள் இப்போது உயர்ந்த நிலையிலிருக்கிறாள்.தனது வாழ்க்கையில் செட்டில் பண்ண யோசிக்கிறாள். தாய் தகப்பன் தெரிவு செய்யும் வரைக்கும் பொறுத்திருக்கக் கூடாதா? அவர்கள் விரக்தியுடன் முணுமுணுத்தார்கள்.

‘ம்ம்..இப்போது இந்திய,இலங்கை இளம் தலைமுறையினர் கலப்புத் திருமணம் செய்வது பெரிய விடயமில்லை. உலகத்திலேயே மிகவும் கூடுதலான கலப்புத் திருமணங்கள்; லண்டனிற்தான் நடப்பதாகப் புள்ளி விபரங்கள் சொல்கின்றன.இலங்கையைச் சேர்ந்த ஒரு சில இளம் தலைமுறையினரும் வேறு இன மக்களைத் திருமணம் செய்கிறார்கள். பெற்றோருக்குப் பிடிக்காவிட்டாலும் வேறுவழியல்லாமல் அதை ஏற்றுக் கொள்ளவேண்டியிருக்கிறது’தாட்ஷாயணி தனக்குள் முணமுணுத்துக் கொண்டாள்..

திரு சுந்தரலிங்கம் துளசியின் எதிர்காலம் இப்படித் திசை திரும்பும் என்று நினைக்கவில்லை. கருணையுள்ளம் கொண்ட துளசி தனது தாய்தகப்பனில் மிகவும் அன்பானவள்.தங்கள் சொல்லைக் கேட்பாள் என்று எதிர்பார்த்திருந்தார்.

ஆனால் சில கிழமைகளுக்கு முன் அவள் தனது எதிர்காலத் துணையைத் தேர்ந்தெடுத்திருக்கும் விடயத்தைத் தாயிடம் சொன்னாள். இந்த விடயம் தாட்ஷாயணி மூலம் அவரின் காதில் எட்டியதும்,’நீ எங்கள் பிள்ளைகளைச் சரியாக வளர்க்கவில்லை’ என்று அவர் தாட்ஷாயணியைத் தாறுமாறகத் திட்டினார்.வழக்கம்போல் தாட்ஷாயணி மறுமொழிபேசாமல் அவர் திட்டுக்களை ஏற்றுக் கொண்டு மவுனமாக நின்றிருந்தாள்.

அப்போது அவர்களின் மகன் மகாதேவன் வந்தான்.அவன் அவனது தமக்கை துளசியில் மிகவும் அன்பாக இருப்பவன். அவள் பன்முகத் தன்மையுள்ள ஒரு நல்ல கெட்டிக்காரி என்பது அவன் அபிப்பிராயம்.

‘நான் கேள்விப்படுகிற விடயம் உண்மையா?’ அவர் உறுமினார்.

அவன் அவர் என்ன சொல்கிறார் என்று விளங்காமல் தகப்பனைப் பார்த்தான்

‘உனது அக்காவுக்கு ஒரு வெள்ளைக்கார போய்பிரண்ட் இருப்பது உண்மையா’

மகாதேவன் தகப்பனை உற்று நோக்கினான்.அவர் கண்களிற் தீ பரவிக்கொணடிருந்தது.

மகன் தனது நிதானத்தைக் கைவிடாமல் தகப்பனை அளவெடுத்தான்.

துளசியும் அப்பாவின் கடைக்கு வந்து அப்பாவுடன் பேசிப் பழகும் மிஸ்டர் மாக ;டொனால்டின் மகன் பீட்டரும்; பக்கத்திலுள்ள பாடசாலையில் ஒன்றாகப் படித்ததை அப்பா கவனிக்கவில்லையா?

கவனித்திருக்கமுடியாது அவர் தங்களின் வாழ்க்கையின் வளர்ச்சிக்காகக் கடையுடன் மாரடிப்பவர்.

இப்போது அவள் அவனைக் காதலிப்பதைக் கேள்விப்பட்டுக் குதிக்கிறார், இதனால் துளசியின் வாழ்க்கை அநியாயமாகப்போகிறதா? அதை அவன் மவுனமாகப் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா?

‘அப்பா, துளசி உங்கள் சினேகிதர் மிஸ்டர் மாக் டொனால்டின் மகன் பீட்டருடன்; பேசுவது தெரியும்தானே?’என்று கேட்டான்.

திரு சுந்தரலிங்கத்திற்து மாரடைப்பு வருவதுபோலிருந்தது.

‘மாக் டொனால்டின் மகனா?’அவர் அலறினார்.

அதைத்தொடர்ந்து பெரிய வாக்குவாதங்கள்.

குழந்தைகளை நல்ல நிலைக்குக் கொணடுவர அவர்பட்ட துயர்களை அவர் அடுக்கிக்கொண்டே போனார்.

‘ எங்களுக்காக நீங்கள் பட்ட துயர்களுக்காக வருந்துகிறேன்.அதற்காக எங்களை நீங்கள் பிளாக்மெயில் செய்யக் கூடாது.வாழ்க்கை என்பதே மிகவும் சவால்கள் நிறைந்தது’ லாயராகப் படித்த மகன் தர்க்கித்தான்

அவரின் குழந்தைகள்,தமிழ்க் கலாச்சாரத்தை அவமதித்து ஒரு ஆங்கிலேயனைச் செய்வது தங்கள் தாய்தகப்பனின் மரியாதையைக் கெடுப்பதாகக் கத்தினார்.மாக் டொனால்ட் குடும்பம்; பிணங்களைப்; பராமரித்து எரித்தோ புதைத்தோ இறுதிக் கடன்கள் செய்யும் பல ஸ்தாபனங்களுக்குச் சொந்தக்காரர். பிணத்தோடு பிழைப்பவனைத் திருமணம் செய்வது பற்றி அவர் வெளிப்படையாகத் திட்டினால் பிரித்தானிய சட்டத்தின்படி,ஒருத்தர் செய்யும் தொழிலை அவமதித்த குற்றத்திற்காக மகாதேவன் என்ற மனித உரிமை வழக்கறிஞரான அவரின் மகன் அவரைக் கோர்ட்டில் ஏற்றவும் தயங்கவும் மாட்டான் என்று தெரியும். மனித உரிமை வழக்கறிஞராக அவன் படிப்பதை அங்கிகரித்ததை எண்ணித் தன்னைத் தானே மனதுக்குள் திட்டிக் கொண்டார்.

மிஸ்டர்; மாக் டொனால்ட் அவர்களின் வீட்டுக்குச் சில தெருக்கள் தாண்டி வசிப்பவர். மிகவும் ஸ்மார்ட்டான மனிதன். மரியாதையைத் தன்பாட்டுக்கு ஈர்த்துக்கொள்ளும் ஒரு கவுரவ தோற்றம். இரவில் ‘வாக்கிங்’ போகும்போது சுந்தலிங்கத்தின் கடையைத் தாண்டி போவார். சிரித்த முகமும் சினேகிதபாவமுள்ள அவர் சிலவேளைகளில் இரவில் நீண்ட நேரம் திறந்திருக்கும் சுந்தரலிங்கம் கடையில் சிகரெட் அல்லது மதுபானம் வாங்கவருவார்.நாளடைவில் இருவரும் ஒன்றிரண்டு வார்த்தைகள்பேசிக் கொள்ளுமளவுக்கு உறவு விரிந்தது.

மாக் டொனால்ட் சில தெருக்கள் தாண்டியிருப்பதால்; அவரைத் தவிர அவர் குடும்பத்து அங்கத்தவர்கள் யாரையும் சுந்தரலிங்கத்திற்குத் தெரியாது. அவரின் குடும்ப அங்கத்தவர்கள் இந்தப் பக்கம்; வர ஒரு தேவையுமில்லை. அவர்கள் வீடு நகரின் அண்மையிலிருக்கிறது.ஒரு நாள் பேச்சுவாக்கில் திரு மாக் டொனால்ட் என்ன வேலை செய்கிறார் என்று திரு சுந்தரலிங்கம் கேட்டபோது. அவர் மனிதர்கள் இறந்தபின் அவர்களின் இறுதியாத்திரையை ஒழுங்கு செய்யும் நிர்வாகத்தின் உரிமையாளர் என்று சொன்னார். அதைக் கேட்டதும் திரு சுந்தரலிங்கம் மிகவும் தர்மசங்கடப்பட்டார்.

பிணத்துடன் தொடர்புள்ளவன் அவரைப் பொறுத்தவரையில் தாழ்த்தப்பட்ட சாதியான்.சைவ சமயத்தையும் தமிழையும் இருகண்களாகப் பார்க்கும் சுந்தரலிங்கம் சிவன் என்னும் சைவத்தின் தெய்வம்; கடவுள் சுடலையை ஸ்தலமாகக் கொண்டவன் என்ற புராணக் கதைகiளில் ஒன்றை மறந்துவிட்டார்.இன்று இந்தியாவில் சமய ரீதியாகப் பிரபலமாகவிருக்கும் பிணம் தின்னும் ‘அகோரிகள்’ என்ற சாதுக்களை மறந்து விட்டார்.

அவர் எப்போதாவது பாதாள ரெயினில் அல்லது பஸ்ஸில் பிரயாணம் செய்தால்,பக்கத்திலிருப்பவன் செத்தவீட்டுக்குப்போயிருந்தாலும் அல்லது ‘தாழ்ந்த(??’) சாதியானவன் பக்கத்தில் வந்து இருந்தான் என்ற சந்தேகத்திலும்; வீடுவந்ததும் முதல் வேலையாகத் தனது ஆடைகளைத் தோய்த்துத் தானும் குளித்து முழுகிச் சுத்தம் செய்து கொள்ளும் தூய்மை மனம் படைத்தவர்.

பிணங்களை இறுதியாத்திரைக்குத் தயார் செய்யும் நிர்வாகத்தின் உரிமையாளர் என்று மாக் டொனால்ட் சொன்னபின் திரு சுந்தரலிங்கம் அவர்கள் அவருடன் பேச்சைக் குறைத்துக் கொண்டார்.எந்தச் சவத்தைத் தொட்ட கையுடன் வந்து தன் கடைச் சாமானைத் தொட்டானோ என்று மனதுக்குள் திட்டிக் கொள்வார்.

இப்போது என்னடாவென்றால் பிணத்தை வைத்து வியாபாரம் செய்பவனுடன்; சம்பந்தம் செய்யவேண்டி வந்திருக்கிறது!.

மகளின் காதலை எக்காரணம் கொண்டும் அங்கிகரிப்பதில்லை என்ற தனக்குள் சபதம் செய்துகொண்டார்.

ஒன்றிரண்டு நாட்கள் வீட்டில் ஒரு பெரிய வாய்த்தர்க்கம் தகப்பன், மகள், மகன் மூவருக்குமிடையில் நடந்தது.’குழந்தைகஎன்பவர்கள் உங்களுக்குத் தேவையான விதத்தில் நீங்கள் பாவித்துக்கொள்ளும் உங்களின் உடமையல்ல’.மகாதேவன் தமக்கைக்காகச் சீறினான்.

துளசிக்கு தனது அப்பா இவ்வளவு உக்கிர கோபத்தில் தாண்டவாமாடுவார் என்று எதிர்பார்க்கவில்லை.

‘அப்பா என்னை ஏன் டாக்டராகப் படிக்கவைத்தீர்கள்’. அவள் விம்மலுடன் கேட்டாள்.தகப்பனைத் துக்கப்படுத்தியதற்கு அவள் வருந்துவது அப்பட்டமாகத் தெரிந்தது.

‘ மற்றவர்களுக்குச் சேவை செய்யவும் மற்றவர்களால் மதிக்கப்படுவதற்குமான உத்தியோகத்தை மிகவும் கருணையுள்ள மனமுள்ள நீ டாக்டராக வந்தால் திறமையாகச் செய்வாய் என்றுதான் நினைத்தேன் ஆனால் நீ..’ மேலே பேசமுடியாமல் திணறினார்.

‘பிணத்தைத் தொடுபவர்கள் சாதி குறைந்தவர்கள் என்று அம்மா சொன்னாள். நான் எனது தொழிலில் எத்தனையோ தடவைகள் பிணத்தைத் தொடவேண்டி வந்திருக்கிறது அதுதெரியுமா உங்களுக்கு?’ முதல் வருடத்திNலுயே பிணத்தை வெட்டி அனாட்டமி அன்ட் பிசியோலயி படித்த வைத்தியப் பெண் கடையில் காசு மெசினுடன் வேலை செய்யும் தகப்பனைக் கேட்டாள்.

‘நீ எவ்வளவோ படித்துப் பட்டம் பெற்ற டாக்டர்..’அவர் சொல்லி முடிக்கு முதல் ‘என்னை விரும்பும் பீட்டரும் எக்கனாமியில் பட்டம் பெற்றவன். அவர்களின் குடும்பத்தின்; நான்கு தலைமுறைத் தொழிலில் சேர்ந்திருக்கிறான்’ அவள் எவ்வளவோ விளங்கப் படுத்தியும் அவர் மாக் டொனால்டின் மகனைத் தன் மருமகனாக ஏற்கத் தயாராகவில்லை.

மகள் தகப்பனுடன் தர்க்கம் செய்வதைத் தவிர்த்து விட்டாள். மகன் ‘எங்களின் எதிர்காலத்தை நிர்ணயிப்பது எங்களின் ஜனநாயக உரிமை ‘என்று முழங்குகிறான்.

அவர்களைத் தன்வழிப்படுத்த திரு சுந்தரலிங்கம் உண்ணா விரதப் போராட்டமிருக்கிறார்.அதனால் தாட்ஷாயணி மிகவும் மனத்துயரால் அவதிப்படுகிறாள்.

வீடு மயான அமைதியுடனிருக்கிறது.

கடந்த சில நாட்களாக மகாதேவன் வெளியில் சாப்பிடுகிறானோ என்னவோ வீட்டில் சாப்பிடவில்லை. துளசி மவுனமாக எதையோ சாப்பிட்டுவிட்டு வேலைக்கு ஓடுகிறாள்.

அவள் மிகவும் பிசியான டாக்டர். இருபத்தெட்டு வயதாகிறது.அவர்களின் சொந்தக்காரர்களின் பெண்கள் பலர் இந்த வயதில் கல்யாணமாகிப் பிள்ளையும் பெற்றுவிட்டார்கள்.

அன்றிரவு சுந்தரலிங்கம் மிகவும் தீவிரமாக யோசித்தார். ஹொலிடேய் போவதாகக் குடும்பத்தைக் கூட்டிக் கொண்டுபோய் ஊரில் யாரும் நல்ல மாம்பிள்ளைக்குத் துளசியைச்; சட்டென்று திருமணம் செய்து கொடுத்தால் என்ன என்று யோசித்தார்.

துளசி அன்பான மகள்தான் ஆனால் அநியாயத்திற்கு இடம் கொடாதவள். தன் விருப்பத்திற்கு எதிராகத் தன்னைக் கடத்திக் கொண்டுபோய் திருமணம் செய்து கொடுத்ததாகப் போலிசுக்குச் சொன்னால் சுந்தரலிங்கத்தார் கம்பி எண்ண வேண்டி வரும். மனித உரிமை வழக்கறிஞரான மகனும் சும்மா பார்த்துக் கொண்டிருக்க மாட்டான்.

வீட்டில் தொடரும் மவுன யுத்தம் மூன்றாம் கிழமையைத் தொட்டது. மகளின் சோகமான முகம் அவரின் இதயத்தை வருத்தியது. ‘எங்கள் உரிமையைத் தடுக்க உங்களால் முடியாது’ என்று அவள் முணுமுணுத்தாலும் அவர் விரும்பாவிட்டால் அவள் திருமணம் செய்து கொள்ள மாட்டாள் என்பதும் அவருக்கு தெரியும்.

தகப்பன் என்ற உரிமையைப் பாவித்து,அவளின் எதிர்காலத்தை இருண்டு விடச் செய்ய அவருக்குத் தைரியமில்லை. ஊரிலுள்ள அவரின் திமிர் பிடித்த சகோதரிகள் அவரின் ஞாபகத்திற்கு வருகிறார்கள். கவுரத்திற்காகவும் உயர்ந்த இடத்து டாக்டர்,எஞ்சினியர் மாப்பிள்ளைக்காகவும் காத்திருக்கும், ஐம்பது வயதைக் கடந்து பெருமூச்சுடன் வாழ்க்கையைக் கடத்தும் அவரது இரு முது கன்னித் தங்கைகளும் அவர் மனக் கண்ணில் வந்து போனார்கள்.

அவள் விரும்புவனைத் திருமணம் செய்ய முடியாவிட்டால் துளசியும் வாழ்க்கை முழுதும் கன்னியாக இருக்கத் தயங்கமாட்டாள். அந்த உண்மை அவர் மனதில் உறைத்ததும் அழுதுவிட்டார்.

துளசி அருமையான மகள்.அவளுக்குத் திருமணமாகிக் குழந்தைகுட்டிகள் பெறவேண்டும் என்று அவர் எப்போதும் பிரார்த்தனை செய்பவர்

‘துளசி உங்களின் அருமையான மகள். திறமையான டாக்டர். கனிவான தாயாகத் தன் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வாள். காதலுடன் தன் கணவனைப் பராமரிப்பாள்’ என்று மகாதேவன் தமக்கையைப் புகழ்வான்.

என்ன வழி தேடுவது?

அவரது வியாபார மூளை பலமாக வேலை செய்தது.

பிணக்கடை வைத்திருப்பவர்களுடன் சம்பந்தம் வைத்துக்கொள்வது அவருக்குத்; தாங்கமுடியாத அவமானத்தைக் கொடுத்தது.

அவரின் தமிழ்ச் சினேகிதர்கள் அதைக் கேட்டால் சிரிக்க மாட்டார்களா?

முhக் டொனால்ட் என்ற பெயர் ஸ்காட்டிஷ் நாட்டுப் பெயர் உலகப் பிரசித்தமானது.அமெரிக்காவிலுள்ள ஸ்காட்டிஷ் பரம்பரையினர் கண்ட இடமெல்லாம் பீவ் பேர்க்கர் விற்பனைக்கு மக்டொனால்ட் கடைகள் திறக்கிறார்கள். எனது மகளும் அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த கோடிஸ்வரன் ஒருத்தனைத் திருமணம் செய்யவிருக்கிறாள் என்று பொய் சொல்லலாமா?

‘(மாக்) டொனால்ட் ட்ரம்பும் அவரின் தாய் வழியான ஸ்காட்டிஷ் மாக் டொனால்ட் பரம்பரையைச்சேர்ந்தவர்.அவர்களின் பரம்பரையில் நான் சம்பந்தம் செய்யப்போகிறேன் என்று கோயிலுக்குப் போகும்போது சாடையாகச் சொல்லி இந்த விடயத்தைத் தமிழ்ச் சமுதாயத்தில் நழுவ விடலாமா? ‘

பணக்காரத் தமிழர்கள்; எதைச்சொன்னாலும் பெரும்பாலான சாதாரண தமிழர்கள் அதை நம்பத் தயாரானவர்கள் என்பது அவருக்குத் தெரியும். சுந்தரலிங்கம் பணக்காரர்.பலருக்குப் பல உதவிகள் செய்பவர்.தமிழர்கள் வீட்டு இறப்பு பிறப்பு விடயங்களுக்குத் தவறாமற் போகிறவர். மிகவும் ‘பக்தி’யானவர். தமிழ்க் கடவுள் முருகக் கடவுளின் பெயரை முணுமுணுத்தபடி வாழ்க்கையைத் தொடர்பவர்.வெள்ளிக் கிழமைகளில்த் தவறாமல்க் கோயிலுக்குப் போகிறவர். லண்டனிலுள்ள பணக்காரர்கள் தங்கள் செல்வத்தை விருத்தி செய்ய ஒரு கோயிலையும் கட்டிக் கொள்ள ஆசைப்படுவார்கள். லண்டனில் கோயில் வர்த்தகம் மிக மிக பிரமாண்டமானது. அவர்களைப்போல் சுந்தரலிங்கம் விரைவில் ஒரு கோயில் கட்டவிருக்கிறார். ‘எல்லாம் அவன் விட்டவழி,அதுவும் கடவுள் அனுக்கிரகம்’ என்று சொல்லி நண்பர்கள் அவரை ஒரு மகானாகப் பார்க்குமளவுக்கு உயர்ந்து கொண்டிருக்கிறார்.

அந்த வளர்ச்சிக்கு திருஷ்டி பட்டமாதிரி மகள் பிணத்தைப் பராமரித்து இறுதிக் கடமைகள் செய்யம் குடும்பத்தில் தொடர்பு வைத்திருக்கும் விடயம் வந்திருக்கிறது. அவரைப் போலவே அவரின் குழந்தைகளும் பிடிவாதமானவர்கள்.அவர்களின் ஆசைக்கு விட்டுக் கொடுத்தால் தமிழ்ச் சமுதாயம் அவரை மதிக்குமா?அவர் சிந்தனை பல விதத்திலும் மகளின் காதலைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தது.

மாக் டொனால்டின் குடும்பத்தைப் பற்றித் தமிழர்கள் கேட்டால் ஏதோ ஒரு வழியில் மாக் டொனால்ட் குடும்பத்தை உயர்த்திப் பேசினால் தமிழர்கள் அவரை மதிக்கலாம்.எப்படி அதைச் செய்வது? அவர் பெருமூச்சு விட்டபடி தீவிர யோசனையிலாழ்ந்தார்.

அவரின் மனதில் எத்தனையோ சிந்தனைகள் குதித்துக் கொண்டிருந்தன.

‘எனது கனவில் தமிழ்க் கடவுள் முருகன் வந்து உனது குடும்பத்தில் நான் இணைய கோடிஸ்வரன் மாக் டொல்டின் மகனாக அவதாரம் எடுத்து பீட்டர் என்ற பெயரில் உன் மகளைத் திருமணம் செய்வேன். இரண்டு கோடிஸ்வரர்கள் சேர்ந்தால் இன்னும் எத்தனையோ கோயில்கள் கட்டலாம்’ என்று முருகன் தனது கனவில் வந்து சொன்னதாக அவர் சொன்னாலும் சுந்தரலிங்கத்தின் தமிழ் நண்பர்கள் நம்பக் கூடியவர்கள்.எங்கள் புராணங்கள் எத்தனை தரம் கடவுள் பக்தர்கள் கனவில் வந்து தனக்குத் தேவையானதை பக்தர்கள் செய்ய வேண்டும் என்று பல தடவைகள் பணித்திருக்கிறார்கள என்பதும் அவர்களுக்குத் தெரியும்.

வியாபாரியான சுந்தரலிங்கம் பலதையும் பத்தையும் சிந்தித்தபின் எப்படிக் காய் நகர்த்தவேண்டும் என்ற திட்டத்தை யோசித்துக் கொண்டிருந்தார்.எக்கானமியில் படடப்படித்து முடித்து விட்டு மூன்று தலைமுறை பிணங்களின் இறுதிச் சடங்கு வியாபார நிர்வாகத்தைக் கையேந்தியிருக்கும் பீட்டரை, அவரது மகளின் மனதைக் கவர்ந்தவனைக் காணவேண்டும் போலிருந்தது. துளசி அன்பும் பண்பும் உள்ள ஒரு மகள் என்பதை விட மிகவும் எளிமையாக வாழும் பெண். மேக் அப் அதிகம் போடாத அழகான பெண். பீட்டர் என்னும் வெள்ளையன் அவளுக்கு ஏற்றவனாக இருப்பானா?

பல சிந்தனைகள் அவரைக் குழப்பின. பீட்டரைப் பார்க்க அவர் உள்மனம் ஆணையிட்டது.அந்த உந்துதலால் அவருக்கு நித்திரை வரவில்லை. ‘அவனை என்னிடம் அழைத்துக்கொணடுவா’ என்ற மகளுக்கச் சொல்ல அவரின் தன்மானம் தடைபோட்டது. தனது குடும்பத்தின் நிம்மதிக்காகப் பெருமூச்சுடன் அருகில் படுத்திருக்கும் தாட்ஷாயணியில் பரிதாபம் வந்தது. தாட்ஷாயணி அதிகம் படித்திருந்தால் அவரைத் திருமணம் செய்திருக்கமாட்டாள் என்று அவருக்குத் தெரியும். அவளின் வாழ்க்கை முழுதும் தனக்காக வாழாமல் மற்றவர்களுக்காக வாழும் அன்பான.பண்பான மனைவியை அணைத்துக் கொள்ள வேண்டும்போலிருந்தது.ஆனால் ஆனால் அவர் செயற்படுத்துவதில்லை (அணைத்துக் கொள்வதை!)

‘என்னுடைய திமிரால் எத்தனைபேர் துயர் படுகிறார்கள்?’ தனக்குள் மனம் கனிந்து யோசித்துக் கொண்டார்.

அடுத்த நாள் காலையில் ஒரு ‘வாக்கிங்’ போவதுபோல் இரண்டு மூன்று தெருக்கள் தாண்டி நடந்து சென்றார்.அதிகாலையில் வேலைக்குப் ;போவோர்கள் தங்கள் வீடுகளிலிருந்து வந்து கொண்டிருந்தார்கள். மாக் டொனால்டின் வீடு எது? அவர் மகன் எப்படியிருப்பான்?

மூன்று கிழமைகள் அவர் சாதாரண வாழ்க்கைக்கப்பால் மிகவும் மன உளைவோடு திண்டாடியதால் உடம்பு களைத்தது. அவர் தனது ‘வாக்கிங்’ வேகத்தைக் குறைத்தார். தெருவின் கடைசியிலிருந்த பிரமாண்டான பெரிய வீட்டிலிருந்து ஒரு இளைஞன் வெளியில் வந்து கொண்டிருந்தான். பக்கத்திலிருக்கும் பாதாள ட்ரெயினுக்குப் போகிறான் போலும். தூரத்திலிரந்து பார்த்தபோது அவனின் தோற்றம் இவரின் கடைக்கு வரும் திரு மாக் டொனால்டின் தோற்றத்தை அச்செடுத்தமாதிரியான சாயல். வாட்டசாட்டமான, உயர்ந்த நிமிர்ந்த கம்பீரமான தோற்றம் அவரைத் திக்குமுக்காடப் பண்ணியது. ஓரு இளவரசன் அவரின் முன் வருவது போலிருந்தது. முகத்தைப் பார்க்க வேண்டும்போலிந்தது.

பல நாட்கள் சரியாகச் சாப்பிடாததாலும் கொஞ்ச தூரம் நடந்ததாலும் சுந்தலிங்கத்திற்குத் தலை சுற்றியது. அவரின் நடை தடுமாறியது. பார்வை மங்கலானது. பல வெளிச்சங்கள் கண்களிற் தெரிந்தன. தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்ற கிரகிக்க முதல் சுந்தரலிங்கம் மயக்க நிலக்குத் தள்ளப் பட்டுச் சட்டென்று தடுமாறி விழப்போனார்.

அதன்பின் என்ன நடந்தது என்று அவருக்குத் தெரியவில்லை. அவருக்கு முன்னால் வந்து கொண்டிருந்த வெள்ளை இன இளைஞன் அவரைக்; காப்பாற்ற ஆம்புலன்சை அழைத்ததோ,அவரின் ஓவர்கோர்ட்டுக்கள் கிடந்த பென்சனர்ஸ் பிரயாண அட்டை மூலம் அவர் யார் என்ற அடையாளம் கண்டு அவரின் வீட்டுக்கு அறிவித்ததோ அவருக்குத் தெரியாது.

கண்விழித்தபோது அவரால் எதையும் சட்டென்று அடையாளம் தெரியவில்லை. எங்கிருக்கிறார் என்று புரியவில்லை.அவருக்கு முன்னாலிருப்பவன் ஆறுபடை வீடுடையானின் அற்புத புன்னகையைத் தாங்கியபடி அவனை உற்று நோக்கினான். ‘கந்தனே வந்தானா என் கட்டிலருகில் எனை ஆட்கொள்ள’ அவர் பக்தி நிலையில் முனகினார்.

அரைகுறை மயக்கத்தில் கண்களைத் திறந்தவர் அந்த இளைஞனை நேரே உற்றுப் பார்த்தார்.

அவர் கண்விழித்ததும் உடனடியாக. மகளின் அன்புக்குரல் அவரை யதார்த்த உலகுக்குக் கொண்டு வந்தது ‘அப்பா’துளசி அழைத்தாள்,அவள் குரலில் சோகம்.

அவரின் கண்கள்; தன்னைச் சுற்றியிருக்கும் அத்தனை பேரையும் மெல்லமாக வலம் வந்தன. மகள் ஒரு பக்கம்,அவரைக் காப்பாற்றிய கம்பீரமான இளைஞன் அடுத்த பக்கம் அவரின் கைகளை வருடியபடியிருந்தார்கள்.

இவனா என் மகளின் மனதைக் கவர்ந்தவன்?

அவர் கண்கள் குளமாயின.மகளின் மனதைக் கவர்ந்தவன் வழியில் வந்திருக்கா விட்டால் அவர் நிலை என்னவாயிருக்கும்? நான் வணங்கும் கந்தனே அவனுருவில் வந்து எனக்குப் பாடம் படிப்பித்தானா? அவர் கண்களில் நீர் சுரந்தது.தன் மகளின் அன்பனைப் பார்த்தார். அவன் முகத்தில் இவர் கண்விழித்ததைப் பார்த்த நிம்மதியில் ஒரு மெல்லிய மகிழ்ச்சி பாவம் தெரிந்தது. பிணத்தை வைத்து வியாபாரம் செய்யும் பரம்பரையின் உண்மையான மனதாபிமானம் அவனின் முகத்திற் பிரதி பலித்தது. கட்டிலைச் சுற்றி அவர் குடும்பம் துயரத்துடன் நின்றிருந்தது. தாட்ஷாயணியின் கண்கள் குளமாயிருந்தன. மகாதேவன் வெளிறிய முகத்துடன் தகப்பனருகில் நின்றிருந்தான்.

இரக்கமும் பாசமும் நிறைந்த துளசிக்கு ஏற்ற சரியான துணை மாக் டொனாட்டின் என்று அவர் மனம் சொல்லியது. ஏனென்றால் யாரும் முதியவர்கள் தெருவில் விழுந்தால் ஏனோ தானோ என்று தன்பாட்டைப் பார்த்துக் கொண்டுபோகும் இந்த உலகில், அவர் யார் என்று தெரியாமலே அவரைத் தாங்கிப் பிடித்தவன் அவரின் மகளையும் காதலுடன் தாங்கிப் பிடிப்பான் என்ற அவர் மனம் சொல்லியது.

அவன் யாராயிருந்தாலும் இனி அவன் அவரது மருமகன்.அவரின் குழந்தைகளின்; மகிழ்ச்சிதான் அவரின் எதிர்காலம் என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டார். அன்பே சிவம்.

– Gnanam magazine October 2019

இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம் - கிழக்கு இலங்கையில் பிறந்து லண்டனில் கடந்த 45 வருடங்களாக வாழ்கிறேன். -கல்வி: மானுட மருத்துவ வரலாற்றில் முதமாமணிப்பட்டம்(எம்.ஏ) திரைப்படத்துறையில்பி.ஏ ஹானர்ஸ் பட்டம்.இன்னும் பல பட்டங்களும் தகுதிகளும் -எழுத்துக்கள்: 7 நாவல்கள்,6 சிறுகதைத்தொகுப்புக்கள்,2 மருத்தவ நூல்கள, 1 முரகக் கடவுள் வழிபாடு பற்றிய ஆராய்ச்சி. -இலங்கையிலும் இந்தியாவிலும் பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. -கோவை ஞானி ஐயாவின் உதவியுடன் பதினொருவருடங்கள் பெண்கள் சிறுகதைப்போட்டி நடத்திப் பல பெண்களை எழுதப்பண்ணியிருக்கிறேன்.அவற்றில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *