(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இன்னும் ஒரு குழந்தைக்குக்கூடத் தாயாகவில்லை அவள்; அதற்குள் அவன் போய்விட்டான்!
‘போய்விட்டான்’ என்றால் அவனா போய்விட்டான்? ‘தர்மராஜன்’ என்ற பெயருக்கு முன்னால், நகைச்சுவைக்காகத்தானோ என்னவோ, ‘எம’ என்ற இரண்டு எழுத்தையும் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறானோ, அந்தப் புண்ணியவான் அவளுடைய கணவனைக் கொண்டு போய் விட்டான்!
அவன் போனாலும் அவளுக்காக அவன் வைத்து விட்டுப் போன சொத்து சுதந்திரங்களெல்லாம் இருக்கத்தான் இருந்தன. அது தெரிந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள்; ‘அவளுக்கென்ன குறை?’ என்று தங்களைத் தாங்களே கேட்டு, ‘ஒரு குறையும் கிடையாது’ என்று தங்களுக்குத் தாங்களே பதிலும் சொல்லிக்கொண்டு இருக்கத்தான் இருந்தார்கள். ஆனாலும் ஒரு குறை, ஒரே ஒரு குறை அவளுக்கு இருக்கத்தான் இருந்தது. அதுதான் தனிமை; அந்தத் தனிமைதான் அவளைப் பிடித்து ‘வாட்டு வாட்டு’ என்று வாட்டிக்கொண்டிருந்தது.
அதற்கேற்றாற்போல் இந்த உலகத்தில் எந்த ஜீவன் தான் தனிமையில் வாடுகிறது?
அதோ போகிறதே பெட்டைக் கோழி, அதுகூட ஒரு சேவல் இல்லாவிட்டால் இன்னொரு சேவலுடன் கூடிக் குலாவுகிறது; இதோ வந்து ஜன்னல் கம்பியின்மேல் உட்காருகிறதே சிட்டுக்குருவி, இதுகூட ஓர் இணை இல்லா விட்டால் இன்னோர் இணையுடன் சேர்ந்து கொள்கிறது!
அப்படியிருக்கும்போது நான் மட்டும் ஏன் தனியாக இருக்கவேண்டுமாம்? நான் மட்டும் ஏன் தனியாக வாழ வேண்டுமாம்?
இப்படி எண்ணிக்கொண்டே கூடத்தில் மாட்டியிருந்த தன் கணவனின் நிழற் படத்தைப் பார்த்தாள் அவள்; அந்த நிலையில் அது தன்னைப் பார்த்துச் சிரிப்பது போலிருந்தது அவளுக்கு!
இவருக்கென்ன சிரிக்காமல்? இவர் மட்டும் என்னை விட்டுப் பிரிந்திருந்தால் எனக்காகத் தனியாக இருந்திருப்பாரா? ஊஹும், இன்னொருத்தியைக் கல்யாணம் செய்து
கொண்டு……….
ம், இப்போது மட்டும் என்ன? இவரைப்போல் நானும் மறுமணம் செய்துகொண்டால் இவர் வேண்டாமென்றா சொல்லப் போகிறார்?
இப்படி அவள் மருகிக் கொண்டிருந்தபோது, யாரோ வந்து கதவைத் ‘தடதட’ வென்று தட்ட, “யார் அது?” என்று கேட்டுக்கொண்டே சென்று அவள் கதவைத் திறக்க, “ஸ்ரீமதி ஹேமா சீனிவாசன் நீங்கள்தானே?” என்று கேட்டான், அந்த வட்டத்துக்குப் புதிதாக வந்திருந்த தபாற்காரன்.
‘இன்னும் சீனிவாசன் என்ன வேண்டி யிருக்கிறது, சீனிவாசன்! ஸ்ரீமதி ஹேமா என்று மட்டும் சொன்னால் போதாதோ?’ என்று தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டு, “ஆமாம், என்ன விஷயம்?” என்றாள் அவள், எரிச்சலுடன்.
“ஒன்றுமில்லை. உங்களுக்கு இருநூறு ரூபாய் மணியார்டர் வந்திருக்கிறது; இங்கே கையெழுத்து போடுங்கள்” என்று மணியார்டர் பாரத்தை நீட்டி, அதற்கென்று அந்தப் பாரத்தில் விட்டு வைத்திருந்த இடத்தைக் காட்டினான் அவன்.
“சரிதான், நான் சொன்னபடி வீட்டைக் காலி செய்ய விரும்பாத எவனோ வாடகைப் பணத்தை மணியார்டரில் அனுப்பி வைத்திருக்கிறான் போலிருக்கிறது? இருக்கட்டும், இருக்கட்டும்!” என்று கருவிக்கொண்டே அவன் காட்டிய இடத்தில் கையெழுத்தைப் போட்டுப் பணத்தை வாங்கிக் கொண்டு அவள் திரும்பினாள்.
“இந்தாருங்கள், உங்கள் பெயருக்கு ஏதோ ஒரு கடிதம்கூட வந்திருக்கிறது!” என்றான் தபாற்காரன், ஒரு கவரை எடுத்து நீட்டி,
“சரி, கொடு!” என்று அதையும் வாங்கிக்கொண்டு உள்ளே வந்து உட்கார்ந்தாள் அவள்.
நல்ல வேளையாக அந்தக் கடிதத்தின் முகவரி, ‘ஸ்ரீமதி ஹேமா சீனிவாசன்’ என்று ஆரம்பமாகவில்லை; ‘ஸ்ரீமதி ஹேமா’ என்று மட்டுமே ஆரம்பமாகியிருந்தது. அதில் ஒரு திருப்தியுடன் கடிதத்தைப் பிரித்துப் படித்தாள் அவள்;
“அடி, ஹேமா!…..
எடுக்கும்போதே ‘டி’ போட்டுக் கடிதம் எழுதும் இவள் யாராயிருக்கும்? கடைசி வரியைப் பார்த்தாள்; ‘கலா’ என்று போட்டிருந்தது. ‘ஓ, இவளா! அந்த நாள் பள்ளிக்கூடத்து ‘டி’யை இவள் இன்னும் விடவில்லை போலிருக்கிறது!’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு மேலே பார்த்தாள்:
……எப்படியடி இருக்கிறாய்? எப்பொழுதோ இறந்து போன அகமுடையானுக்காக மாதம் தவறாமல் அமாவாசை விரதம் இருந்து கொண்டு, வருடம் தவறாமல் திதி கொடுத்துக் கொண்டு இருக்கிறாயா? இரு இரு, இருக்கிற வழிக்கு ஒன்றும் கிடைக்காவிட்டாலும் போகிற வழிக்குப் புண்ணியமாவது கிடைக்கும். இருடியம்மா, இரு! இந்தக் கடிதத்தை இப்போது நான் உனக்கு எழுதுவதாகவே இல்லை; திடீரென்று வந்து உன்னைத் திகைக்க வைக்கவேண்டும் என்றுதான் இருந்தேன். ஆனால் அப்போதிருந்த ‘ஏழைச் சிறுமி ஹேமா வா நீ, எப்போது வந்தாலும் வீட்டில் இருக்க? நீதான் இப்போது ‘சீமாட்டி ஹேமா’வாகிவிட்டாயே! நான் வரும்போது எங்கே போய் விடுவாயோ என்னமோ என்றுதான் இதை எழுதுகிறேன்: ஆமாம், நாளை மறுநாள் அடியாள் சென்னை விஜயம்; அங்கிருந்து டெல்லி பயணம்; இடையே உள்ள நேரத்தை உன்னுடன் கழிக்க விருப்பம். என்ன, இருக்கிறாயா வீட்டில்?
மற்றவை நேரில்…….
உன் அன்புத் தோழி,
கலா.”
கடிதத்தைப் படித்து முடித்ததும், ‘ஏக ஜாலியாக எழுதியிருக்கிறாளே, கடிதத்தை! அப்படி என்ன சந்தோஷம் வந்துவிட்டிருக்கும் இவளுக்கு? பார்க்கப்போனால் இவளும் என்னைப் போன்ற ஒரு விதவைதானே! என்னை வாட்டும் தனிமை இவளை மட்டும் வாட்டாமலா விட்டிருக்கும்? என்று நினைத்த ஹேமா, ‘நடுவில் நாளை ஒரு நாள்தானே? மறு நாள் வந்தால் எல்லாம் தெரிந்து விடுகிறது!’ என்று எண்ணிக்கொண்டே கையிலிருந்த கடிதத்தை மடித்து ஒரு புத்தகத்துக்குள் வைத்துவிட்டு எழுந்தாள்.
ஏழெட்டு வருட கால இடைவெளிக்குப் பிறகு அன்று கலாவைச் சந்தித்த ஹேமா, அவள் எழுதியிருந்தபடியே திகைத்துத்தான் போனாள். காரணம், அவள் எதிர்பார்த்தபடி கலா அமங்கலியாக வரவில்லை; சுமங்கலியாக வந்திருத்தாள்!
“மறுபடியும் நீ……”
“ஆமாம், மறுமணம் செய்து கொண்டேன். இவர் என் கணவர்; இவன் எங்கள் செல்வம்!” என்று தனக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்த தன் கணவரையும், அவருக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த தன் மகனையும் அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தாள் கலா.
“எனக்குக்கூடச் சொல்லாமலா?” என்றாள் ஹேமா, வியப்புடன்.
“சொன்னால் நீ வந்திருக்கவா போகிறாய்? மற்றவர்களோடு சேர்ந்து நீயும் சிரித்திருக்கப் போகிறாய்!”
“இப்போது மட்டும்……?”
“நீ சிரிக்கமாட்டாய்; அதற்குப் பதிலாக அழுவாய் என்று எனக்குத் தெரியும்!”
“ஏன் அழுகிறேனாம்?”
“தனிமை அப்படிப்பட்டதடி, தனிமை அப்படிப் பட்டது! அதனால்தான் காலேஜில் நம்மோடு படித்துக் கொண்டிருந்த வாசு, ‘கலைக்கும் இலக்கியத்துக்கும் மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் காதலை விட்டால் வேறு கதி கிடையாது!” என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தான். அதன் உண்மையை இப்போதாவது உணருகிறாயா, நீ?”
“உணர்ந்தேன், உணர்ந்துதான் இருக்கிறேன்!” என்ற ஹேமா, அதற்குள் தன் கண்களில் துளிர்க்க ஆரம்பித்து விட்ட நீரைத் துடைத்துக்கொண்டே வந்தவர்களை உபசரித்து வழி அனுப்பிவைத்தாள்.
அவர்கள் சென்றதும் கதவைத் தாளிட்டு விட்டு வந்து உள்ளே படுத்த அவளுக்கு என்னவோபோலிருந்தது. ‘கலா இப்போது மாதம் தவறாமல் அமாவாசை விரதம் இருக்க மாட்டாள்; வருடம் தவறாமல் திதி கொடுக்க மாட்டாள்’ என்று தனக்குத் தானே முணுமுணுத்துக் கொண்டாள்.
அந்தச் சமயத்தில் கதவை யாரோ தட்டுவது போலிருக்கவே, “இதில் ஒன்றும் குறைச்சல் இல்லை!” என்று அலுத்துக்கொண்டே சென்று கதவைத் திறந்தாள் ஹேமா; வாசலில் நின்றுகொண்டிருந்த வாசு, “இப்போதாவது நான் உள்ளே வரலாமா?” என்றான் அவளை ஏற இறங்கப் பார்த்தபடி.
‘அவனை அப்போது அங்கே கொஞ்சமும் எதிர்பார்க்காத ஹேமா, ‘வா!’ என்றும் சொல்லவில்லை, ‘வரவேண்டாம்!’ என்றும் சொல்லவில்லை; திறந்த கதவைத் திறந்தபடி விட்டுவிட்டு உள்ளே வந்தாள்.
அவளைத் தொடர்ந்து வந்த வாசு, “நல்ல வேளை இன்றாவது என்னைக் கண்டதும் கதவை அடைக்காமல் விட்டாயே? ரொம்ப சந்தோஷம்/” என்றான் தன் பேச்சையும் மேலே தொடர்ந்து.
ஆம்; ஏற்கெனவே சூடு கண்ட பூனைதான் அவன். ஆனாலும் அப்போதிருந்த நிலையில் அந்தப் பூனையை ஏனோ’ விரட்ட விரும்பாத ஹேமா, அதற்கும் மெளனமாக இருக்கவே, “இன்று உன் வீட்டுக் கதவு திறந்தது போல் நாளை உன் மனக் கதவும் திறந்தால்?” என்று தன் பேச்சைமேலும் தொடர்ந்த வாசு, ‘அதற்கு மேல் வார்த்தை என்னத்துக்கு?’ என்று எண்ணித்தானோ என்னமோ, தன்னுடைய நீண்டகால வேட்கையை ஒரு நீண்ட பெருமூச்சின் மூலம் வெளிப்படுத்தினான்.
தன் பிடரியைத் தொட்டுச் சென்ற அந்த வெதவெதப்பான மூச்சுக் காற்றிலே ஏதோ ஓர் இதத்தைக் கண்ட ஹேமா சற்றே திரும்பி, “அன்றுபோல் இன்று நான் கன்னி அல்ல வாசு, கைம்பெண்!” என்றாள் மெல்ல.
“இருக்கலாம்; வாழ்க்கை என்றால் என்னவென்றே தெரியாத வறட்டுச் சித்தாந்தவாதிகளுக்கு, அன்று நீ கன்னியாகவும், இன்று நீ கைம்பெண்ணாகவும் இருக்கலாம். ஆனால் எனக்கு? அன்றும் நீ கன்னிதான்; இன்றும் நீ கன்னிதான்; என்றும் நீகன்னிதான்!” என்றான் அவன், தனக்கே உரித்தான சவடால், தனத்துடன்.
“நிஜமாகவா சொல்கிறாய்?”
“சத்தியமாக!”
“அப்படியானால்……..?”
அவள் முடிக்கவில்லை; அதற்குள், “நீ ‘ம்’ என்று சொல்ல வேண்டியதுதான் பாக்கி; நாளைக் காலை நான் டாக்ஸியுடன் வந்து உன் வீட்டுக் கதவைத் தட்டுவேன்!” என்றான் வாசு.
“எதற்கு?” என்று ஒன்றும் புரியாமல் கேட்டாள் ஹேமா.
“இப்படியும் ஒரு பெண் கேட்பாளா, இந்தக் காலத்தில்? வேறெதற்கு, பதிவாளர் அலுவலகத்துக்குப் போய்ப் ‘பதிவுத் திருமணம்’ செய்து கொள்ள!” என்றான் அவன், சிரித்துக்கொண்டே.
அவள் சிரிக்கவில்லை; அதற்குப் பதிலாக, “அவ்வளவு அவசரம் வேண்டாம், வாசு! எதற்கும் நீ இன்னும் கொஞ்ச நாள் பொறு: அதற்குள் நான் யோசித்து ஒரு முடிவுக்கு வருகிறேன்!” என்றாள் அவள், தன் கண்களில் ஏதோ ஓர் இனம் தெரியாத பீதி தேங்க.
“சரி, யோசி! நீ யோசித்து ஒரு முடிவுக்கு வருவதற்குள் உனக்கும் எனக்கும் ஒரு முடிவு வராமல் இருந்தால் சரி!” என்றான் அவன், சலிப்புடன்.
இம்முறை மட்டுமல்ல; இதற்கு முன் எத்தனையோ முறை ஹேமாவின் காதல் விவகாரத்தில் ஈடுபட்டு அலுப்பும் சலிப்பும் அடைந்திருக்கிறான் வாசு. ஆயினும் அவள் மேல் கொண்ட காதலை அவளுக்குக் கல்யாணமான பிறகும் கூட அவனால் கைவிட முடியவில்லை. காரணம், அவளிடமிருந்த பணமா, குணமா, கவர்ச்சியா?-எதுவென்றும் அவனுக்குத் தெரியவில்லை!
இந்த நிலையில்தான் அவனுடைய அதிர்ஷ்டமோ, அல்லது ஹேமாவின் துரதிர்ஷ்டமோ, அவளுடைய கணவன் சீனிவாசன் கண்ணை மூடினான். அதுதான் சமயமென்று தன் காதலுக்குப் புத்துயிர் அளிக்க வந்தான் வாசு. வந்தவனை ‘வா!’ என்றுகூட அழைக்காமல், “எங்கே வந்தாய்?” என்று கேட்டாள் அவள்.
“உன்னுடைய துன்பத்தில் பங்கு கொள்ள வந்தேன், ஹேமா!” என்றான் அவன்.
“துன்பத்தில் பங்கா!” ஆமாம்.”
“அப்படியானால் நீயும் என் தோழிகளைப் போல என்னைக் கட்டிக்கொண்டு அழப்போகிறாயா, என்ன?” என்றாள் அவள் எகத்தாளமாக.
அதற்கும் சளைக்கவில்லை அவன்; “அதற்கு நீ தயாராயிருந்தால் நானும் தயார்தான்!” என்றான்.
“இப்படிச் சொல்ல வெட்கமாயில்லை உனக்கு? போ, போ! இன்னொரு முறை இப்படியெல்லாம் பேசிக்கொண்டு நீ இங்கே வராதே! போ, போ!” என்று அன்று அவனை விரட்டிக் கதவை அடைத்தவள் இன்று…….
சரித்திரப் பிரசித்தி பெற்ற மும்தாஜ்கூட ஏற்கெனவே ஒருவனின் மனைவியாக இருந்தவள்தான்! அவள் ஷாஜஹானைக் காதலிக்கவில்லை? அந்தக் காதலுக்காக உலகத்தின் எட்டாவது அதிசயமான தாஜ்மஹாலை அவன் எழுப்பவில்லையா?……..
இப்படி எண்ணிக்கொண்டே கூடத்தில் மாட்டியிருந்த தன் கணவனின் நிழற் படத்தை மீண்டும் ஒரு முறை பார்த்தாள் அவள்; அப்போதும் அது தன்னைப் பார்த்துச் சிரிப்பது போலிருந்தது அவளுக்கு!
‘இங்கே இருந்தால் இவர் இப்படித்தான் என்னைப் பார்த்துப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருப்பார்’ என்று தனக்குத் தானே முணுமுணுத்த வண்ணம் அந்தப் படத்தைக் கழற்றி எடுத்துக்கொண்டு போய்ப் பரண்மேல் வைத்துவிட்டு, “அன்பில் இவருக்கு ஒன்றும் குறைந்தவனல்ல, அந்த வாசு! அன்று அவன் என் இன்பத்தில் பங்கு கொள்ள வந்தான்; நான் மறுத்தேன்; அப்போதும் அவன் என்மேல் கொண்ட அன்பு மாறவில்லை. இன்று அவன் என் துன்பத்தில் பங்கு கொள்ள வந்தான்; நான் மறுத்தேன்; இப்போதும் அவன் என்மேல்… சொல்லிக்கொண்டே தன் அறைக்குச் சென்று பீரோவின் கண்ணாடிக்கு முன்னால் நின்றாள். நின்று, “ஸ்ரீமதி ஹேமா வாசுதேவன் நீங்கள் தானே?” என்று தன்னைப் பார்த்துத் தானே தன் பெயரை மாற்றிக் கேட்டாள்; “ஆமாம், நான்தான்!” என்று அதற்குப் பதிலையும் தனக்குத் தானே தயங்காமல் சொல்லிக்கொண்டு வெளியே வந்தாள்.
“டாக்ஸி கொண்டு வரட்டுமா, நாளைக்கு?”
நூறாவது நாள், நூறாவது தடவையாக இந்தக் கேள்வியைக் கேட்டு வைத்தான்-அப்போது சொல்லி வைத்தாற்போல் அங்கே வந்து நின்ற வாசு.
இப்போது, “ஏன்?” என்று கேட்கவில்லை அவள்; “எதற்கு?” என்றும் கேட்கவில்லை அவள், “கொண்டு வா!” என்று சொல்லிவிட்டாள்; ஆம், சொல்லியே விட்டாள்!
அவ்வளவுதான்; வானத்துக்கும் பூமிக்குமாகத் துள்ளித் துள்ளிக் குதித்துக்கொண்டே சென்றான் அவன்!
மறுநாள் காலை; மணமகள் போல் தன்னைத்தானே அலங்கரித்துக் கொண்ட ஹேமா, டாக்ஸி வந்து வாசலில் நிற்கும் சத்தத்தையும், அதிலிருந்து வாசு இறங்கிக் கதவைத் தட்டும் சத்தத்தையும் எதிர்பார்த்தபடி, கூடத்தில் நடை போட்டுக் கொண்டிருந்தாள்.
அவளுக்குள்ள வேகம் அவனுக்கும் இருக்காதா? எதிர் பார்த்தது எதிர்பார்த்தபடி டாக்ஸி வந்து வாசலில் நின்றது; அதிலிருந்து இறங்கிய வாசு, கதவைத் தட்டும் சத்தமும் கேட்டது.
அவ்வளவுதான்; பறந்து போய்க் கதவைத் திறந்தாள் ஹேமா. என்ன ஆச்சரியம்! வந்தது வாசு அல்ல; கலா!
கலா என்றால் சுமங்கலி கலா அல்ல; அமங்கலி கலா!
“மறுபடியும்……..”
அதற்குமேல் கேட்க நா எழவில்லை ஹேமாவுக்கு; விழித்தது விழித்தபடி நின்றாள்.
“ஆமாம், மறுபடியும் நான் அமங்கலியாகிவிட்டேன்!” என்றாள் அவள், கண்களில் நீர் மல்க.
“மகன் செல்வம்?”
“அதை ஏன் கேட்கிறாய்? என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத சோக நிகழ்ச்சி அது!”
“எது?”
“அந்தச் சின்னஞ் சிறுசு தன்னைத் தானே மாய்த்துக் கொண்டது!”
“காரணம்!”
“நான்தான்!”
“நீயா?”
“ஆமாம்; அவனுடன் படித்த சிறுவர்களில் சிலர் அவனைப் பார்க்கும்போதெல்லாம், ‘இவன் யார் தெரியுமா? இவனுக்கு அம்மா ஒன்றாம்; அப்பா இரண்டாம்!” என்று சொல்லிச் சொல்லிக் கை கொட்டிச் சிரித்துக்கொண்டிருந்தார்களாம். அந்த அவமானம் தாங்காமல் ஒரு நாள் குழந்தை பள்ளிக்கூடத்துத் தோட்டத்திலிருந்த பாழுங்கிணற்றில் விழுந்து……..”
அவள் முடிக்கவில்லை; அதற்குள் அங்கே வந்து நின்ற இன்னொரு டாக்ஸியிலிருந்து கீழே இறங்கிய வாசு, “எல்லாம் தயார், ஹேமா! நீ ஏற வேண்டியதுதான் பாக்கி!” என்றான் பரபரப்புடன்.
அவனையும் அவன் கொண்டு வந்திருந்த டாக்ஸியையும் ஒரு கணம் மாறி மாறிப் பார்த்த ஹேமா, மறுகணம் என்ன நினைத்தாளோ என்னமோ, அவன் கொஞ்சமும் எதிர்பாராத விதமாகக் கதவைப் படாரென்று அடித்துச் சாத்தித் தாளிட்டுவிட்டு உள்ளே வந்தாள். பரண்மேலிருந்த தன் கணவனின் படத்தை எடுத்துப் பழையபடி கூடத்தில் மாட்டிவிட்டுக் ‘கோ’ வென்று அழுதாள்!
அப்போதும் அந்தப் படம் தன்னைப் பார்த்துச் சிரிப்பது போல்தான் இருந்தது அவளுக்கு!
– விந்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, கலைஞன் பதிப்பகம், சென்னை.