விடியற்காலை.. இதமான காற்றில் நடந்து செல்வது சுகமாயிருந்தது
வெங்கடேசனுக்கு.’ ஆமாம்.. இன்னிக்கு என்ன ராமுவை
காணோம்…? யோசித்தவாறு வீட்டுக்கு திரும்புகையில் எதிரே ராமு
வந்து கொண்டிருந்தார். “வெங்கடேசன் இன்னிக்கு எழுந்ததே லேட்டுப்பா..
நான் சொல்லிட்டிருந்த மாதிரி என் பையனையும் அவன் பொண்டாட்டியையும் வெளியே அனுப்பிட்டேன்பா.. நானும் பிரேமாவும் மட்டும்தானா… அதனால நிம்மதியா ரொம்ப நேரம் பேசிட்டு தூங்கி நிதானமா எழுந்து வர்றேன்…!
ராமு ரிடையர்டு வாத்தியார்.. ஒரளவு வசதி தேடி வைத்துள்ளார்.
இரண்டும் பிள்ளைகள். பெரிய பையன் அவன் விருப்பபடி திருமணம்
செய்து கொண்டதால் தள்ளி வைத்துவிட்டார். சிறியவன் அன்பழகன்
நல்ல பண்பாளன். அப்பாவிடம் மரியாதை கொண்டிருப்பவன். ராமுவே அன்பழகனுக்கு உமாவை பார்த்து திருமணம் செய்துவைத்து
பத்து ஆண்டுகளாயிற்று..இருப்பினும் ராமுவிற்கும் , அவர்
மனைவிக்கும் எல்லாரும் தன் விருப்பபடியே நடக்க வேண்டும்..
அடங்கி போகவேண்டும்.. என்ற உணர்வே இருந்தது. மருமகளை
எப்பவும் குறை சொல்லி கொண்டே இருப்பார்கள்.
” அவ என் பொண்டாட்டியை மதிக்கறதே இல்லைப்பா.. ஒரு நாளைக்கு
காரம் கொட்டி வைக்கிறா.. ஒரு நாளைக்கு உப்பு சப்பில்லாம சமைச்சி
வைக்கிறா..”
” ஞாயிற்றுக்கிழமை ஆனா ரொம்ப மோசம்.. எம் புள்ள
அவன் பொண்டாட்டி பொண்ணோட ரூமுக்குள்ளயே
புகுந்திட்டிருக்கான்பா.. ”
இப்படி தினம்.. தினம் குறை சொல்லிக்கொண்டே இருப்பார். போன
வாரத்தில்தான்.. ‘ எம் மருமகளுக்கு சம்பாதிக்கற திமிருப்பா. அவ
இஷ்டத்துக்கு வர்றா.. போறா .. மரியாதை தராத அவங்களை வீட்டை
விட்டு அனுப்பிடலாம்னு பார்க்கிறேன்… என்றார்.
இன்று சொன்னபடி செய்துவிட்டதாக சொல்லிக்கொண்டு வந்து
நிற்பதை பார்த்ததும் பகீரென்றாகிவிட்டது.
” ராமு உங்களை எத்தனை நாள் எங்க வீட்டிற்கு கூப்பிட்டிருக்கேன்..
இப்ப கண்டிப்பா போறோம்.. ” அழைத்து சென்றார் வெங்கடேசன்.
“இவதான் என் மனைவி யமுனா…வெங்கடேசன் அறிமுகப்படுத்தினார்.
“வெங்கடேசன் வீடு பெரிசா இருக்கு.. ரொம்பஅழகா
வைச்சிருக்கிங்க…”
“இதெல்லாம் என் மருமகள் கீதா டைம் கிடைக்கும் போது அழகுபண்றது.. அங்க பாருங்க.. அந்த ஷெல்பிலே இருக்கிற கோப்பைகள் மொத்தம் என் பேரன் தீபக்கோடது.. விளையாட்டு.. படிப்பு ..
பாட்டுன்னு அவன் வாங்குகிற பரிசுக்கே தனி ரூம் வைக்கனும்
போல் இருக்கு.. பெருமை பொங்க கூறினார்.
“ஆமா.. மணி எட்டறைக்கு மேல ஆயிடுச்சே.. இன்னும் யாரும்
எழுந்திருக்கலையா.. எதுவும் கேட்க மாட்டியா வெங்கடேசா..”?
” எதுக்கு கேட்கனும்..? குடும்பம்னா எல்லாருடைய மனசும்
சேர்ந்ததுதான்.. என் பிள்ளைக்கு தனியார் கம்பெனியில வேலைப்பளு
ஜாஸ்தி.. மருமகள் கீதாவும் தனியார் கம்பெனியில டைப்பிஸ்டு..
எட்டு மணி நேரம் உட்கார்ந்தே இடுப்பொடியும். பேரன் கராத்தே..
நடனம்.. பாட்டுன்னு ஸ்கூல் நேரம் போக நிறைய க்ளாஸ்
போறான்.இந்த மெஷின் லைப்ல ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள்தான்
அவங்களுக்கு கிடைக்கிற சுகம்..!
நம்ம காலம் வேறு ராமு.. இந்த காலத்தில நிறைய எதிர்பார்ப்புகள்..
சுமைகள் இருக்கு.. நீங்க சொன்ன மாதிரி கீதாவும் சமையல்ல சின்ன..
சின்ன தப்பு பண்ணத்தான் செய்வா.. குறைகள் இருந்தாலும் பெரிது
படுத்த மாட்டோம்.. கை நிறைய பென்ஷன் வாங்குறோம்.. ஏதாவது
ஆசைன்னா.. ருசிக்காக சிலது கடையில் வாங்கி வந்து சாப்பிட
வேண்டியதுதான்…மருமகளும் மனுஷிதானே.. இந்த காலத்தில ரெண்டு பேரும் வேலைக்கு போகும்போது .. வீட்டு வேலையை புருஷனும் ஷேர பண்ணிக்கிறான்.. நாமளா ஒரு பெண்ணை பார்த்து
கட்டி வைச்சிட்டு அவளை குறை சொல்லிகிட்டே மகனோட
சந்தோஷத்தை கெடுக்கிறது தப்புப்பா..குறை. நிறைகள்
இருக்கும்.. விட்டுடணும்.. பெரியவங்க நாம எதையும் நிறைவான
கோணத்தோட எடுத்துட்டுப்போனா அதுங்களுக்கே நம்ம மேல
தானா பாசம் வரும். நமக்கு முடியாதப்ப உண்மையான அன்போடு
பார்த்துப்பாங்க.. நான் சம்பாதிச்ச வீடு.. என் இஷ்டபடி இல்லைன்னா
போங்கன்னு நீ அனுப்பினது சரியில்லை. நீங்க ரெண்டு பேர் மட்டும்
நிறைகளோடு அந்த வீட்டில் சந்தோஷமா இருக்க முடியுமா..?
அதுக்கு புள்ள குட்டி பெத்துக்காம அப்படியே நம்ம விருப்பபடியே
வாழ்ந்திருக்கலாமே…”
” என் மனசுல பட்டதை சொல்லிட்டேன். யோசிச்சு பாரு…”
இறுகிய முகத்தோடு இருந்த ராமு .. ” அப்ப நான் வரட்டுமா..”
கிளம்ப , எதிர் அறை திறந்தது. .. கலைந்த கூந்தலுடன் கீதா..
“கீதா நான் சொல்வேனே.. என் சினேகிதன் ராமு.. இவர்தான்..:
” வாங்க அங்கிள்.. நல்லாயிருக்கிங்களா..? காபி கொண்டு வர்றேன்…”
ஆச்சும்மா.. நான் இன்னொரு நாளைக்கு வர்றேன்…” கிளம்பினார்.
வெளியே போய்விட்ட நம் மகனின் மனது எவ்வளவு
புண்பட்டிருக்கும்..? நாம் மருமகள் உமாவை வெறுத்தாலும்
தண்டனை நம் மகனுக்குமல்லவா சேர்த்து கொடுத்துவிட்டோம்..?
யோசித்தவாறு வீட்டை அடைந்தார் அங்கே.. உமாவின் கொலுசு ஒலி
கேட்கவில்லை.. பேத்தி பேப்பர் படித்து கொண்டு உட்காரும் நாற்காலி
காலியாக இருந்தது.. மருமகளிடம் சண்டை போடும் பிரேமாவின்
ஓயாத வாய் மூடியிருந்தது.
“..ச்சே.. வறட்டு கவுரவம்.. மரியாதை பார்த்து இவர்கள் இல்லாததையா நாம சந்தோஷம்னு நினைச்சோம்..? குறைகளே இல்லாத வாழ்க்கை கூட வெறுமைதான். மகனையும்.. மருமகளையும் எப்படியாவது அழைத்து வந்துவிட வேண்டும்.. முடிவெடுத்தவராய் படுக்கைக்கு போனார் ராமு.
( 4-10-2009 தினத்தந்தி – ஞாயிறு மலரில் வெளிவந்தது.)