கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 28, 2020
பார்வையிட்டோர்: 10,740 
 
 

காளியம்மாள் காலை ஐந்து மணிக்கு எழுந்திருந்து அவசர அவசரமாகக் குளித்து விட்டு, ஒட்டுப் போட்ட பாவாடை தாவணியை எடுத்து உடுத்திக் கொண்டாள். பானையில் கிடந்த பழைய சோற்றை அவக்கு அவக்கென்று அள்ளி விழுங்கி விட்டு, மீதம் இருந்த சோற்றை தூக்குச் சட்டியில் கொட்டிக் கொண்டாள் .

“அம்மா நான் கம்பெனிக்கு போயிட்டு வர்ரேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் கம்பெனி பஸ் வந்துரும்மா” என்று பொன்னுத்தாயிடம் கூறிக்கொண்டே வாசலில் வந்து நின்றாள்.

பொன்னுத்தாய் புடவைத் தலைப்பில் முடிந்து வைத்திருந்த இரண்டு ரூபாயை எடுத்து மகள் காளியம்மாளிடம் கொடுத்து “இந்தா காளியம்மா இன்னிக்கி சோத்துக்கு தொட்டுக்கிட ஒண்ணுமில்ல, ரெண்டு ரூபாய்க்கு மத்தியான சோத்துக்கு வடை வாங்கிக்கோ” என்றாள்.

பொன்னுத்தாய் குடிசைக்குள் வந்து சோற்றுப் பானையை திறந்து கையைத் துளாவிப் பார்த்தாள். பானை காலியாக இருந்தது. ‘சரி இன்னிக்கு காலையிலே காப்பித் தண்ணியை மட்டும் போற வழியில் சாப்பிடுக்கிட வேண்டியதுதான்’ என்று மனசுக்குள் கூறிக்கொண்டே வீட்டு வேலைக்கு கிளம்பினாள். அவளது குடிகாரக் கணவன் கோவிந்தன் காலை எழுந்தவுடன் கூலி வேலைக்கு சென்று விட்டான்.

பொன்னுத்தாய் வசிக்கும் குடிசை ஆலமரத்து பிள்ளையார் கோவில் அருகில் இருந்தது. அவள் கணவன் கோவிந்தன் கிடைக்கும் கூலியை வீட்டிற்கு கொடுக்காமல் பாதி நாட்கள் குடித்தே காலி செய்து விடுவான். பொன்னுத்தாய் அவனிடம் வீட்டுச் செலவுக்காக காசு கேட்டால், அவன் குடித்தது போக மீதி இருந்தால் கொடுப்பான். “நம்ம மக காளியம்மா தெனமும் பட்டாசுக் கம்பெனிக்கு வேல செய்யப் போறாளே அவ கொடுக்கும் பணம் உனக்கு பத்தாதா எதற்கெடுத்தாலும் என்னையே உயிர வாங்கு” என்று அவன் கத்திக் கொண்டே கொடுப்பான்.

கோவிந்தனை நம்பி பொன்னுத்தாய் குடும்பம் நடத்தவில்லை. அவள் தினமும் நாலைந்து வீடுகளுக்கு சென்று, பத்து பாத்திரங்கள் தேய்த்து அவர்கள் வீட்டில் கொடுக்கும் சம்பளத்தில் குடும்பத்தை நடத்தி வந்தாள். வேலை செய்யும் இடத்தில் கொடுக்கும் மீதம் ஆகும் சோறு, குழம்பு, கொண்டு வந்து தன்னோட மகளுக்கு கொடுத்து சாப்பிடச் சொல்வாள். மீதம் இருந்தால் தான் சாப்பிடாமல் கணவனுக்கு என்று வைத்து விடுவாள்.

மகள் காளியம்மாளை அந்த ஊர் தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படிக்க வைத்தாள். பள்ளிக்கூடத்தில் அவள் மதியம் சத்துணவு சாப்பிட்டு விடுவாள். மகளாவது ஒரு வேளை பசியாமல் சாப்பிடட்டும் என்று மகளை கட்டாயப்படுத்தி பள்ளிக்கு அனுப்பி வைத்தாள்.

கோவிந்தன், கல்யாணம் ஆன புதிதில் மனைவி பொன்னுத்தாயிடம் கிடைக்கும் கூலியை பாதியை கொடுத்து விட்டு மீதியை டாஸ்மாக் கடைக்கு கொடுத்து விட்டு வருவான். மோகம் முப்பதுநாள் ஆசை அறுபதுநாள் என்பதற்கேற்ப, நாள் நாளாக பொன்னுத்தாயிடம் தனக்கு கிடைக்கும் கூலியை கொடுப்பதைக்கூட நிறுத்தி விட்டான். அவனிடம் பொன்னுத்தாய் செலவுக்கு பணம் ஏதும் கேட்டால், அவன் குடித்தது போக மீதம் இருந்தால் கொடுப்பான்.

காளியம்மாள் வயதுக்கு வந்தபிறகு வீட்டில் வைத்து சாப்பாடு போடுவதற்கு பொன்னுத்தாயால் முடியவில்லை. அப்போது காளியம்மாளுக்கு வயது பதிமூன்றுதான் இருக்கும். குடும்ப சூழ்நிலையின் காரணமாக காளியம்மாளை பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு அனுப்புவதற்கு பொன்னுத்தாய் முடிவு செய்தாள். அவள் வேலை செய்யும் வீட்டில் உள்ள அதிகாரியுடைய மனைவியின் சிபாரிசில் பக்கத்து ஊரில் இயங்கும் ரோஜா பட்டாசு கம்பெனிக்கு காளியம்மாளை வேலைக்கு அனுப்பினாள். தன்போன்ற பெண்பிள்ளை களோடு வேலைக்கு கம்பெனி பஸ்ஸில் தினமும் போய் வருவதற்கு காளியம்மாளுக்கு விருப்பம்தான். அம்மா பொன்னுத்தாய் வேலைக்குச் செல்லும்படி கூறியவுடன் அவள் குதித்துக்கொண்டு பட்டாசு கம்பெனி வேலைக்கு கம்பெனி பஸ்ஸில் சென்று வந்தாள். அங்கு அவளுக்கு வெடிமருந்து சுற்றுகிற வேலைதான்.

காளியம்மாள் காலை எட்டு மணிக்கு பட்டாசு கம்பெனி வேலைக்கு சென்றால், வீட்டிற்கு வருவதற்கு இரவு எட்டு மணியாகி விடும் . அவள் வீட்டுக்கு வரும்போது ஆறு வயதான தன் தம்பிக்கு கடையில் மிட்டாய் ஏதாவது வாங்கி வந்து ஆசையுடன் கொடுப்பாள். அக்கா மிட்டாய் கொடுக்க மறந்து விட்டாலும், அவள் பாவாடையை பிடித்துக் கொண்டு அவன் மிட்டாய் கேட்டு கையை நீட்டிக் கொண்டே அக்கா பின்னாடியே செல்வான்.

அன்று ஒருநாள்… பொன்னுத்தாய் வழக்கம்போல பக்கத்து தெருவில் உள்ள மாமி வீட்டில் பத்து பாத்திரங்களை தேய்த்து விட்டு, மாமி கொடுத்த மீதமுள்ள குழம்பு, சோற்றை பாத்திரத்தில் வாங்கிக் கொண்டு கிளம்பினாள். அப்போது மாமி ” ஏண்டீ பொன்னுதாயி கொஞ்சம் இருடீ ” என்று கூறி விட்டு வீட்டிற்குள் சென்றாள். பொன்னுத்தாய் அங்குள்ள வாசல் திண்டிலே வேலை செய்த களைப்பினால் நிற்க முடியாமல் உட்கார்ந்து விட்டாள்.

மாமி ஒரு சிறு கிண்ணத்துடன் திரும்பி வந்து ” ஏண்டீ உனக்கு ஒரு பொண்ணு இருக்கான்னு சொன்னயே . இந்த மருதாணியை அதன் கையில் வெச்சு விடுடீ பொண்ணுக மருதாணி வெச்சுக்கிட ரொம்ப ஆசைப்படுவாங்கடீ. நான் மருதாணி மிக்சியில் அரச்சேன் மீதம் இருந்தது. இதை கொண்டு போய் அவளுக்கு கொடு ” என்று மருதாணியை கிண்ணத்துடன் கொடுத்தாள்.

காளியம்மாள் மருதாணி வைப்பதற்கு அன்று ஆசைபட்டு தன்னிடம் பயந்து கொண்டு கேட்டது நிழலாக அவள் கண்முன்னே அப்போது ஓடியது.

அன்று ஒருநாள்…காளியம்மாள் கம்பெனி வேலை முடிந்து தன் குடிசைவீட்டுக்கு வேகமாக மகிழ்ச்சியுடன் ஓடி வந்தாள். அப்போது பொன்னுத்தாய் மடியில் இருந்த தம்பியைப் பார்த்தவுடன், தான் கொண்டு வந்த தூக்குசட்டியிலிருந்து, இரண்டு சூஸ்பொரி உருண்டைகளை எடுத்து தம்பியிடம் கொடுத்து விட்டு, அம்மாவின் முகத்தையே பயத்துடன் பார்த்து கொண்டிருந்தாள்.

“என்னடீ என் முகத்தையே பார்க்கிற. கம்பெனியில யாரும் திட்டினாங்களா ” என்று பொன்னுத்தாய் கேட்டாள்.

“இல்லே ” என்பதுபோல் தலையாட்டினாள்.

“பணத்தை ஏதும் கீழே போட்டுட்டு வந்துட்டாயா”

“இல்லே “என்று மறுபடியும் தலையாட்டினாள்

“பிறகு எதுக்குடீ திருட்டு முழி முழிக்கற. ” என்று சற்று உயர்த்தி கத்தினாள்.

“அம்மா நான் வேலை செய்யற இடத்தில் எனக்கு பக்கத்தில் இருக்கிற அக்காவோட கையைப் பாத்தேன். அந்த அக்கா மருதாணி வெச்சு உள்ளங்கையெல்லாம் நல்லா செவப்பாக இருந்துச்சு ”

“அதுக்கு என்னடி இப்ப… மருதாணி வெச்சாக்க உள்ளங்கையெல்லாம் செவப்பாத்தான் இருக்கும். அதுகென்ன உனக்கு ”

“எனக்கும் அந்த அக்காபோல் மருதாணி வைக்கணும்போல் ஆசையாயிருக்கு அம்மா ”

“ஏண்டீ உனக்கு மருதாணியெல்லாம் வெச்சுக்க எங்க நேரமிருக்கு. நீ விடிந்து வேலைக்கு போனால் பொழுது அடஞ்ச பிறகுதான் வீட்டுக்கே வர்ரே, சரி நான் இப்ப எங்கடீ மருதாணிக்கு போறது. பேசாமல் வாயை மூடிட்டு இருக்கிற வேலையை பார். நமக்கு இந்த ஆசையெல்லாம் வரக்கூடாது தெரிஞ்சதா ” என்று மகள் ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்தாள். அன்று காளியம்மாள் கோபத்துடன் சாப்பிடாமலே படுத்து விட்டாள்.

“ஏண்டீ பொன்னுத்தாயி என்ன யோசனையில் இப்ப இருக்கே. நான் மருதாணி கொடுத்து எவ்வளவு நாழியாகி விட்டது. ” என்று மாமியின் குரல் கேட்டு, பொன்னுத்தாய் மகள் நினைவிலிருந்து மீண்டும் தன்னிலைக்கு வந்தாள். ஒண்ணுமில்ல அம்மா இந்தா வீட்டுக்கு… நான் கிளம்பிட்டேன். “ என்று மருதாணிக் கிண்ணத்துடன் சந்தோஷமாக கிளம்பினாள்.

பொன்னுத்தாய் ஆலமரத்து பிள்ளையார் கோவிலை கடந்து குடிசைவீட்டுக்குள் சென்றவுடன், மாமி கொடுத்த மருதாணிக் கிண்ணத்தினை பத்திரமாக ஓரிடத்தில் வைத்தாள். மகள் காளியம்மாள் வருவதை அன்று ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தாள். இரவு எட்டு மணிக்கு மேலாகியும் தன் மகள் வராததை நினைத்து கவலைப்பட ஆரம்பித்தாள். தன்னோட மகனை இடுப்பில் வைத்துக் கொண்டு, ஆலமரத்து பிள்ளையார் அருகில் இருந்த ஒரு திண்டில் போய் உட்கார்ந்து கொண்டாள். “பிள்ளையாரப்பா வேலைக்குப் போன என் மகளை இன்னும் காணலயே நீதான் அவளுக்கு துணையாய் இருக்கணும்பா‘ என்று வேண்டிக்கொண்டாள்

காளியம்மாள் தூரத்தில் வரும்போதே பிள்ளையார்கோவில் திண்டில் தம்பியுடன் உட்கார்ந்து இருந்த அம்மாவைப் பார்த்து விட்டாள். அவள் அருகில் வந்து “என்னம்மா இங்க வந்து உட்கார்ந்திட்டே. சோறெல்லாம் ஆக்கிட்டாயா” என்று கேட்டாள்.

”இவ்வளவு நேரமாயிட்டதே இன்னும் வரக்காணலேன்னு உன்னத்தான் பாத்துக்கிட்டிருக்கேன். ஏண்டீ வேல விட்டு வரதற்கு இன்னிக்கி உனக்கு இவ்வளவு நேரம்“ என்று கவலையுடன் கேட்டாள்.

”அம்மா இனிமேல நான் வீட்டுக்கு லேட்டாத்தான் வருவேன். கம்பெனிலே தீபாவளிக்கு வேலை அதிகமாக இருக்கு. இன்னையிலிருந்து அதிகநேரம் எங்களையெல்லாம் வேலை பார்க்கணும்னு சொல்லியிருக்காங்க. கூலியும் அதிகமா எனக்கு கொடுப்பாங்கம்மா” என்று விளக்கினாள்.

“நீ கொஞ்ச நேரம் லேட்டானா எனக்கு பதட்டமாக இருக்குடீ. உன் அப்பன்காரன் எதைப்பத்தியும் கவலைப்படாம குடித்திட்டு விழுந்து கிடக்கான்“ என்று பொன்னுத்தாய் தன் ஆதங்கத்தை மகளிடம் கொட்டினாள்.

“சரிம்மா. நான் மட்டுமா வேலைக்குப் போறேன். நம்ம பக்கத்து ஊருக்குத்தான் மத்த என்னப்போல பெண்பிள்ளைகளோடதான் போயிட்டு வர்றேன். நீ ஏம்மா பயப்படறே” என்று அம்மாவுக்கு ஆறுதல் கூறினாள்.

பொன்னுத்தாய் மகளுடன் குடிசைக்குள் நுழைந்தவுடன் தான் மாமியிடம் வாங்கி வந்த மருதாணிக் கிண்ணத்தைஎடுத்து மகள் எதிரில் வைத்தாள். காளியம்மாள் அதைப் பார்த்தவுடன் கண்கள் விரிய முகம் மலர ‘”ஹை மருதாணி” என்று கூறிக்கொண்டு தன் அம்மாவின் தோளைப் கட்டிப்பிடித்து\க் கொண்டு “ஏதம்மா மருதாணி” என்று கேட்டாள். பொன்னுத்தாய் தான் வேலை பார்க்கும் வீட்டு மாமி கொடுத்தது பற்றிக் கூறினாள்.

காளியம்மாள் சாப்பிடுவதைக்கூட மறந்து கிண்ணத்தில் இருந்த மருதாணியை எடுத்து ஆசையாக தன்னோட உள்ளங்கையில் வட்டமாக அப்புவதற்கு ஆரம்பித்தாள். “ஏண்டீ நீ சாப்பிட வேண்டாமா என்ன அவசரம். சாப்பிட்ட பெறகு மருதாணி வெச்சுக்க வேண்டியது தானே” என்றாள்.

“இல்லம்மா நான் முதலே மருதாணி வெச்சுக்கறேன். இன்னிக்கி ஒருநாள் மட்டும் எனக்கு சோறை ஊட்டி விடம்மா” என்று கெஞ்சலுடன் கொஞ்சலாகக் கேட்டுக் கொண்டாள்.

காளியம்மாள் தன்னோட இடது கையில் உள்ளங்கையில் மருதாணியை வட்டமாக வைத்து விட்டு, கை விரல்களில் மருதாணியை தொப்பிபோல் வைத்துக் கொண்டிருந்தாள். பொன்னுத்தாய் அவளுக்கு சோற்றை ஊட்டினாள். காளியம்மாள் மருதாணி வைப்பதிலேயே கண்ணுங்கருத்துமாக இருந்தாள்.” அம்மா நீ எனக்கு மருதாணியை இன்னொரு கையில் வெச்சு விடம்மா “ என்றாள்.

“ஏண்டீ, ஒரு கையில் வச்சா போதாதா” என்று கேட்டு விட்டு, மகளுக்கு இன்னொரு கையில் மருதாணியை வைத்து சந்தோஷப்படுத்தினாள். கைகளில் வைத்துள்ள மருதாணி காய்வதற்காக, குடிசை வாசலில் வந்து அம்மாவும் மகளும் உட்கார்ந்தார்கள். அப்போது காளியம்மாள் “அம்மா ,கம்பெனியில் தீபாவளிக்கு எனக்கு கூலி மட்டும் இல்ல, கூடவே எனக்குப் போனசும் கொடுப்பாங்களாம்” என்று தான் வேலை பார்க்கும் பட்டாசு கம்பெனி பற்றி கூறிக் கொண்டேயிருந்தாள். பொன்னுத்தாய் மகள் பேசுவதைக் கேட்டு மகிழ்ந்தாள்.

காளியம்மாள் மறுநாள் காலை எழுந்தவுடன் இரு கைகளையும் நீரில் கழுவிக்கொண்டு, மருதாணி வைத்து சிவப்பான தன் இரு உள்ளங்கை விரல்களையும் விரித்து அம்மாவிடம் காட்டினாள். பொன்னுத்தாய் மகளின் கைகளில் மருதாணி நன்கு சிவப்பாக பிடித்திருப்பதைப் பார்த்து மனசுக்குள் மகிழ்ந்தாள். “ஏண்டீ காளி உன் கையில் மருதாணி நல்லா சிவப்பா பிடிச்சிருக்கு என்னோட கண்ணே பட்டுடும் போலிருக்கு” என்று மகளிடம் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள்

“அம்மா கம்பெனிக்கு நேரமாச்சு நான் ராத்திரி வந்து என் மருதாணி வெச்ச கை ரெண்டையும் காட்டுறேன். நீ நல்லா ஆசை தீர பாத்துக்கோ” என்று கூறி விட்டு, அவசரமாக குளித்து விட்டு ஒட்டுப்போட்ட பாவாடை தாவாணியை உடுத்திக் கொண்டாள். வழக்கம்போல் பழைய சோறை தூக்குச்சட்டியில் வைத்துக் கொண்டு கம்பெனி பஸ்சை நோக்கி காளியம்மாள் ஓடினாள் . தன் மகள் என்றைக்கும் இல்லாத மகிழ்ச்சியுடன் வேலைக்குச் சிரித்துக்கொண்டே செல்வதைப் பார்த்து பொன்னுத்தாய் மனசுக்குள் மகிழ்ந்தாள்.

அன்று …பொன்னுத்தாய் வழக்கம்போல் மாமி வீட்டில் பத்து பாத்திரங்களைத் தேய்த்துக் கொண்டு இருந்தாள். மாலை நான்கு மணி இருக்கும். அப்போது மாமி பொன்னுத்தாயிடம் “ஏண்டீ பொன்னுத்தாயி உன் மகள் ரோஜா பட்டாசுக் கம்பெனியிலதான் வேலை பார்க்கிறாள். அந்தக் கம்பெனியில் இன்னிக்கி பட்டாஸ் வெடித்து பத்துப்பேர் செத்துப் போயிட்டாங்கன்னு டி.வி.யில் நியூஸ் சொல்றாண்டீ” என்று கூறினாள். பொன்னுத்தாய் மாமியிடம் விபரம் கேட்டுக் கொண்டு பதட்டத்துடன் அரசு மருத்துவமனைக்கு ஓடினாள்.

அரசு மருத்துவமனையில் இறந்தவர்களை வரிசையாக வெள்ளைத்துணி கொண்டு போர்த்தி வைத்திருந்தார்கள். அதைப் பார்த்த பொன்னுத்தாய் தன் முகத்திலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அங்கு இருந்த அதிகாரிகளிடம் “என் மகளுக்கு என்னாச்சு. என் மக காளியம்மா எங்க“ என்று அழுதுகொண்டே கேட்டாள்.

அங்கிருந்த அதிகாரி ஒருவர் “உன் மகளும் இந்தக் கம்பெனியிலதான் வேலை பார்க்கிறாளா? எல்லாருமே கருகி கரிகட்டையாகி விட்டார்கள். இதில உன் மகளை எப்படி அடையாளம் பார்க்கப் போரே போய்ப் பாரும்மா” என்று பொறுமையாக பதில் கூறினார்.

பொன்னுத்தாய் எல்லாப் பிணங்களையும் ஒவ்வொன்றாக துணியை விலக்கிப் பார்த்தாள். தன் மகளை அவளுக்கு அடையாளம் தெரியவில்லை. எல்லாமே கரிக்கட்டைகளாக கிடந்தார்கள். “ஐயோ என் மகளை எனக்கு அடையாளம் தெரியலயே எல்லாமே கரிகட்டையாக தெரியுதே” என்று ஓவென்று பொன்னுத்தாய் அழுது புலம்பினாள்.

அப்போது அங்கு வந்த காவலர் “ஐயா விபத்து நடந்த இடத்திலே சுற்றிப் பார்க்கும்போது முள்செடிகள் நிறைந்த புதருக்குள் இந்த துண்டான கை மட்டும் கிடந்தது. “ என்று கூறி காவல் ஆய்வாளரிடம் கொடுத்தார்.

“ஆமா ஒரு பிணத்துக்கு, கை மட்டும் இல்லாமல் இருந்தது. அந்த பிணத்தோட கையாகத்தான் இருக்கும் “ என்று கூறுவதைக் கேட்டு தற்செயலாக அந்தக் கையைப் பார்த்து விட்ட பொன்னுத்தாய் மருத்துவமனை என்பதையும் மறந்து கத்த ஆரம்பித்தாள்.

“ஐயா இது என்னோட மகளோட கைதான் “ என்று உரக்க கத்தியதைக் கேட்ட காவல் ஆய்வாளர் பொன்னுத்தாயிடம் விபரம் கேட்டார்.

“ஐயா அந்த உள்ளங்கையி, வெரல்களையும் பாருங்க செவப்பா மருதாணி பிடிச்சிருக்கு. நேத்துதான் நான் என் மகளுக்கு ஆசையா மருதாணி வெச்சு விட்டேன் அது என் மகளோட கைதாங்க..ஐயா .” என்று கண்ணீர் மல்க கூறினாள்.

“சரி எந்த பிணத்தில் கையில்லாமல் இருக்கோ அதான் உன்னோட மகளாக இருக்கும் போய்ப் பாரு” என்று பொன்னுத்தாய்க்கு அனுமதி அளித்தார்.

கை இல்லாத பிணத்தை காவலர் துணியை விலக்கி பொன்னுத்தாய்க்கு காட்டியவுடன் அவள் “‘காளியம்மா உன் கையிலே மருதாணி செவப்பா பிடிச்சதைப் பாத்து ஏண்டீ என் கண்ணே பட்டுடும் போலிருக்குன்னு காலையிலதான் சொன்னேன். இந்த பாவி கண்ணு பட்டுத்தான் நீ இப்படி ஆயிட்டே மகளே “ என்று பொன்னுத்தாய் ஒப்பாரி வைத்தாள்

காவல் ஆய்வாளர் தன்னோட மேலதிகாரியிடம் “சார் துண்டான கை பொன்னுத்தாய் மகளோடதுதான் என்று அடையாளம் இப்போது ‘கன்பார்மா’ தெரிந்து விட்டது.” என்று கூறினார்.

பொன்னுத்தாய் கருகிப்போன தன்னோட மகள் காளியம்மாள் முகத்தைப் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது ‘அம்மா கம்பெனிக்கு நேரமாச்சு நான் ராத்திரி வந்து என் மருதாணி வெச்ச கை ரெண்டையும் காட்டுறேன். நீ நல்லா ஆசை தீர பாத்துக்கோ”‘ என்று மகள் சிரித்துக்கொண்டே கூறியது அவள் காதில் அப்போது ஒலித்தது.

– கல்கி வார இதழில் 4.10.2020ந்தேதி பிரசுரம் செய்யப்பட்டுள்ளது

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *