(1986 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அந்த இரவு ………. இதயப் பரப்பில் துயரக் கருமுகில் கவிந்து மூடியது! கண் விழித்தேன்!
துக்கம் வரண்ட துயர் இரவு!
நேரம் சென்று உதித்த நிலவு முக்கால் வட்டத்திலிருந்து அழுது கொண்டிருப்பது யன்னலுாடே தெரிந்தது. கனவின் பயங்கரம் இன்னும் மனதை விட்டகலவில்லை.
அந்தச் சிவப்பு நிறக் ஹெலிகாப்டர் இன்னும் எங்கள் வீட்டைச் சுற்றிச் சுற்றிப் பறப்பதும் திடீரெனத் தாழ்ந்து குண்டு போட்டு நிமிர்வதும் போல……….. அது கனவுதான் என்று அமைதியடைய இதயம் அடம்பிடித்து மறுக்க, அதனுடன் அறிவு போராடிக் கொண்டிருந்தது.
எழுந்து முன் கதவைத் திறந்து வெளியே வந்தேன். கதவுகளைத் திறந்த போது, பந்தாகக் காற்று நுழைந்து என்னில் குளிர்ந்தது. வானத்தில் கரு முகில்கள் இடை இடை தொங்கி இருந்தன. உதிர்தலும் தளிர்தலும் காட்டும் முற்றத்து வேப்பமரம், நிலாவெளிச்சத்தில் கிளையும் இலையுமாக நிலத்தில் நிழலைப் பின்னியிருப்பதைப் பார்த்துக் கொண்டு சிறிது நின்றேன்.
தம்பி எழுந்து ஆட்டுக்கொட்டில்’ பக்கம் சென்றான். நான் கதவு திறந்த ஓசை அவனை எழுப்பியிருக்கலாம். யார்தான் ‘ஆழ்ந்த உறக்கம்’ கொள்ள முடிகிறது இப்போது?
வாடை பட்டு மீண்டும் உடல் குளிர்ந்தது. கனவின் நினைவு மனதில் மறையவில்லை .
‘எஞ்சினியர்’ ஒருவர் தான் கட்டிய ஒரு வீடு இடிந்து விழுந்து விட்டது போல் கனவு கண்டார். கனவு கண்ட ஒரு மாதத்தில் அவர் மாரடைப்புக்கு ஆளானார். இன்னொருவர் தன் கால்கல் ஆகிவிட்டது போல் கனவு கண்டார். சில மாதம் கழித்து அவரது கால் பக்கவாதத்தால் செயலற்றுப் போய்விட்டது.
நோய் வெளிப்படும் முன்பே அதை ஒருவரின் நரம்புத்தொகுதி உணர்ந்து மூளைக்குத் தெரிவிக்கிறது. மூளைக்கு வரும் இந்தச் செய்தியே எமக்குக் கனவாகத் தோன்றுகிறது.
பிரபல ரஷ்ய டாக்டர் வாசிலி கசட்சின் அவர்களின் இந்தக் கருத்து மனதின் முன்னால் வந்து நின்றது.
அப்படியானால் எனக்கும் ஏதோ நோய் வரப்போவதை என் நரம்புத் தொகுதி எனக்கு அறிவிக்கிறதா? இல்லை … எமது சூழலில் நடைபெறும் நிகழ்வுகளால் மனதில் ஏற்பட்டிருக்கும் பய உணர்வே இந்தக் கனவாக வெளிப்பட்டதா?
சிந்தனையில் தெளிவு ஏற்படாமலே உள்ளே சென்று சுவர் மணிக்கூட்டில் நேரம் பார்த்தேன்.
பன்னிரண்டு ஐம்பத்திரண்டு!
நடுச்சாமம்!
இரவு பன்னிரண்டு மணிக்கும் ஒரு மணிக்கும் இடைப்பட்ட நேரம் மனிதனின் உயர் இயக்க நேரங்களில் ஒன்றென ஒரு சோவியத் ஆராய்ச்சியாளரின் முடிவும் நினைவில் வந்தது.
‘ஹோலின்’ நீளமும் நடந்து திரும்பிப் படுக்கச் செல்ல ஆயத்தமான போது தம்பியின் குரல் கேட்டது.
“அக்கா….. இஞ்சை வந்து பார் ஆட்டை , கெதியா வா……”.
“ஏன்? என்னடா ?”
ஆட்டின் மெல்லிய அழு குரலும் கேட்கவே விரைந்து சென்றேன்.
சிருஷ்டிக்கான வதை முடித்து பிரசவம் நிகழ்ந்திருந்தது. கறுப்புக் குட்டி ஒன்று தாயின் பக்கத்தில் கிடந்து, அதன் ‘நக்குதலைப் பெற்றுக் கொண்டிருந்தது. மற்றொரு வெள்ளைக்குட்டி சற்றுத் தொலைவில், இன்னும் முகத்தை நீர்ப்பை மூடிய நிலையில், நீரும், சேறும், குருதியுமாய் அசைவற்றுக் கிடந்தது. எனக்குத் தெரிந்த முதலுதவி அறிவைப் பயன்படுத்தி வெள்ளைக் குட்டியை மூச்சுத் திணறலில் இருந்து மீட்டுத் தாய்க்கு அருகே வைக்கோல், பரப்பி படுக்கவிட்டு நான் படுக்கைக்கு மீண்ட போது இரவு இரண்டு மணிக்கு மேல்!
யன்னலின் வழியாக மறுபடியும் வேப்பமரம் அசைந்தது. விடியற் காலையில் ஏதோ கனவு கண்டு அழுதபடியே எழுந்து வந்த மகனுக்கு
“எங்கடை ‘ஜே’ 6ால்லே ராத்திரி இரண்டு குட்டி போட்டு நிக்குது, போய்ப் பாருங்கோ …..” என்று நான் சொல்ல, அவனது அழுகை முகத்திலிருந்து விலகி இலேசான விடியல் தெரிந்தது. திடீரெனச் சிரித்துக் கொண்டு அவன் ‘ஜே’ யிடம் ஓடிய போது, முகத்தில் பாலே பொழிந்தது.
“ஐயோ…… பட்டுப்போலை சின்னக் குட்டி….” என்று அவன் அவற்றை ஓடி அணைத்த போது, அவன் கன்னத்தில் இன் கனிகள் கனிந்தன.
“என்ன பேர் வைக்கப் போறீங்கள் குட்டியளுக்கு?” மகனைத் தக்கி அணைத்தபடி கேட்டேன். அவன் விரல்களால் என் கழுத்தைக் கட்டிக்கொண்டான். அந்த விரல்களின் அன்புப் பிரவகிப்பு உடலெல்லாம் வர்ஷித்தது.
“ஒண்டுக்குச் ‘சீனா’ மற்றதுக்குத் ‘தானா’!”
அறையில் இருந்து தம்பி குரல் கொடுத்தான்.
“மாமா சொல்றது நல்ல பேர்! கறுப்புக்குட்டி ‘சீனா’ வெள்ளைக்குட்டி ‘தானா’!”
மகன் இணக்கமாக ஒத்துக் கொண்டதில் எனக்கும் மகிழ்வுதான்.
இரவு நேரத்தில் சடுதியாக இந்தப் பிரசவங்கள் எப்படி நிகழ்ந்தன என்று மகன் கேட்ட நீட்டுக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல நான் திணறிக் கொண்டிருந்தபோது, கறுப்புக் குட்டி எழுந்து விழுந்து, பின் எழுந்து சென்று தாயின் முலையைத் தேடிப் பிடித்து
“சீனா பாப்பா குடிக்குது… தானா பாவம் என்னம்மா…..?” என்று சொல்லிக் கொண்டே என் அணைப்பிலிருந்து விடுபட்ட மகன் வெள்ளைக் குட்டியைத் தாக்கித் தாயின் அருகில் விட்டான்.
நீளமாய் முன்னே துருத்திக் கொண்டு நுனியில் மட்டும் வளைந்திருந்த தன் கொம்பினால் வெள்ளைக் குட்டியைத் தள்ளி விழுத்திவிட்டுக் கறுப்புக் குட்டிக்கு மட்டும் தாய் பால் கொடுத்த அதிசயத்தை நான் விழிகள் விரிய நோக்கி வியந்து நின்றேன்.
“ஏன் தள்ளுது இதை? ஏன் பால் குடாதாம் ?” என்று கேட்ட படி மீண்டும் மகன் அதைத் தூக்கி விட்டான். ‘ஜெ’ மீண்டும் அதை இடித்து விழுத்தித் தன் பின்னங்காலைத் தூக்கி இடறிக் கொண்டு தான் கட்டி நின்ற மரத்தைச் சுற்றிச் சுற்றி வந்தது.
“நாங்கள் போனாப் பிறகு சில வேளை தனிய வைச்சுக் குடுக்கும்” என்று அந்த விடயத்தை இலேசாய் முடித்துக் கொண்டு நான் உள்ளே திரும்பினேன்.
அன்று மாலை………. !
சாயங்காலத்தின் குமிழிகள் உள்ளே இருக்க நான் வேலையில் இருந்து திரும்பிய போது மகன் பொதுமிப் பொதுமி கண்கள் சிவக்க அழுது கொண்டிருந்தான். என்னைக் கண்டவுடன் அடிவயிற்றிலிருந்து மிகுந்த உரக்கவும் திடீரென்று உடைந்தும் வந்தது அழுகை.
என்னவென்று விசாரித்ததில், “‘ஜெ’ வெள்ளைக் குட்டிக்குப் பால் குடாதாம், குட்டி அழுது பாவம்,” என்று முறையிட்டான்.
அவன் அன்று பகல் முழுவதும் அவ்விடத்திலேயே அமர்ந்து வெள்ளைக் குட்டியைப் பால் குடிக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுத் தோற்றுப் போனதாய் அம்மா சொன்னாள். .
நான் உடைமாற்றிக் கொண்டு வந்து “ஒருக்கா இந்த ‘ஜே’ யைப் பிடியுங்கோ ……. வெள்ளைக் குட்டியை ஊட்ட விடுவம்,” என்று கணவரையும் அழைத்து, நான் முன் காலைப் பிடிக்க, கணவர் கொம்பைப் பிடிக்க, அம்மா குட்டியைப் பிடித்து முலையடியில் விட்டார். அப்போதும் ‘ஜே’ திமிறிப் பின்னங்காலைத் தூக்கிக் குட்டியை எட்டி உதைத்தது. எவ்வளவோ முயன்றும் அது தன் குட்டிக்குப் பால் கொடுக்க மறுத்துவிட்டது,
“………சனியன்…….”
கருணையின் காற்று இதற்குள் எப்படி உயிர்க்கும்?
“ஏனம்மா, இது…… தானே பெத்த குட்டிக்குப் பால் குடா தாம்? அதுகும் ஆம்பிளைப் பிள்ளைக்கு…..?”
நான் முதன் முறையாய் ஒரு ஆய்வுக்கு ஆரம்பித்தேன்.
‘இப்பத்தையர் பொம்பிளையள் சில பேர் தங்கடை பிள்ளையளுக்குப் பால் குடுக்கிறேல்லை. தங்கடை. வடிவு குறைஞ்சு போமெண்டு. அது மாதிரித்தான் இதுகும் நினைக்குதோ?’ ,
ஒரு சில பெண்களின் குற்றங்களைப் பொதுமைப்படுத்தி என்னைச் சீண்டி ரசிக்கும் தன் வழமையான இயல்புக்கு வந்தார் கணவர்.
“பெட்டைக் குட்டி தன்ரை இனம். அதைக் கவனிக்குது. கிடாய்க் குட்டி வேறை இனம் எண்டு இன அழிப்பு நடத்தப்பாக்குது.”
அறையில் படித்துக் கொண்டிருந்த தம்பி தன் பங்கிற்கு நியாயம் கூறினான்.
இருமியபடி வெளியே வந்த அம்மா, “அது உப்பிடித்தான் பிள்ளை சில ஆடுகள். ஒரு குட்டிக்குப் பால் குடாது. அண்டைக்குப் பிறந்த உடனையும் இந்தக் குட்டியை அது காணேல்லைப் போலை. இது தன்ரை குட்டி இல்லை எண்டு நினைக்குது போலை” என்றார்.
இந்த ஆய்வில் மிகத் தீவிரமாக நாங்கள் ஈடுபட்டிருந்த போது, ‘ஹெலிகாப்டர்’ ஒன்று பறந்து வரும் சத்தம் கேட்டது.
“அம்மா…… ஹெலி வருது, அம்மா” என்று மகன் கூற முன்னரே, ‘ர்………….டும்….டும்’ என்று ஆகாயத்திலிருந்து சுடும் சத்தம் கேட்டது. –
“அம்மா…… சுடுறாங்கள் அம்மா” என்று கத்தியபடியே குசினுக்குள் பயந்து ஓடிய மகன், வழமை போல் புகைக்கூண்டின் ‘பிளாற்’ றுக்குக் கீழே படுத்துக் கொண்டான்.
வானத் தாக்குதல் தொடர்ந்து கொண்டே இருந்தது.
காது செவிடுபடும் சத்தம்! அலுமாரியில் ஆயத்தமாக இருந்த பஞ்சுத் துணிகளை எடுத்து மகனின் காதில் வைத்தேன். ஒவ்வொரு சூடும் எங்கள் தலை மேலேயே விழுவது போன்ற உணர்வு!
பிளாற்றின் கீழே படுத்துக் கிடந்த எல்லார் முகத்திலும் இறுக்கமாக ஒரு பயம் அப்பிக் கிடந்தது. வீட்டின் மொத்தத்திலும் ஒரு நிச்சயமற்ற இருட்டு இருந்தது.
“ஏன் அம்மா சுடுறாங்கள்” மகன் என் காதில் மெதுவாகக் கேட்டான்.
“தெரியேலை ராசா…
“வான் ஏதும் றோட்டிலை போறதைக் கண்டிருப்பாங்கள்” என்றான் தம்பி.
“மாடுகள் நடந்து போற சரசரப்புச் சத்தம் கேட்டிருக்கும்” இது கணவர்.
“எங்கடை வீட்டையும் சுடுவாங்களோ அம்மா?”
“சொல்ல ஏலாது ராசா….”
என் மடியில் கண்களை மூடிக் கொண்டு படுத்திருந்த மகன் திடீரென்று எழுந்தான்.
“வெளியாலை போகப்பிடாது ஐயா, இதிலை படுங்கோ ….”
“வாறன் அம்மா….” என்று வேகமாக ஓடியவன், வெள்ளை ஆட்டுக் குட்டியைச் சிரமத்துடன் தூக்கிக் கொண்டு ஓடிவந்தான்.
“பாவம் அம்மா அது. ‘ஜே’ இடிக்கும். அவங்கள் மேலே இருந்து கண்டிட்டுச் சுட்டாச் செத்துப்போம்” என்று கூறி அதைத் தன் மடியில் வைத்துக் கொண்டே பிளாற்றின் கீழ் இருந்தான்.
‘ர்……………….டும்….’
தாக்குதல் நாலு மணி நேரம் தொடர்ந்த பின், சந்தர்ப்ப வசமாய் எங்கள் வீட்டில் சன்னங்கள் ஏதும் படாத நிலையில் ஹெலி பறந்து சென்று மறைந்தது. பறந்த உயிர்கள் திரும்பி வந்த நிலையில் நாங்கள் மீண்டும் உயிர்ப்படைந்தோம். வலியை உணர முடியாது அவ்வளவு நிறையவே வலித்தது மனதினுள்.
“பால் குடிக்காமல் ‘தானா’ சாகப்போகுது, பாவம்.” இரவு மீண்டும் மகன் நச்சரிக்கத் தொடங்கி விட்டான்.
மகன் பாவித்த பழைய ‘போச்சி’ ஒன்றில் குளுக்கோசு நீர் விட்டுப் பருக்கியதில் சிறிது பருகிய ‘தானா’ படுத்து நித்திரையாகி விட்டது.
அடுத்து இரண்டு நாள் இப்படியே அடிக்கடி குளுக்கோசு கொடுத்ததில், இப்போது நாங்கள் போய், ‘தானாக்குட்டி’ என்று கூப்பிட்டால், உடனே எங்கள் பின் ஓடிவந்து மடியில் படுத்து, குளுக்கோசு குடிக்கும் நிலைக்கு வெள்ளைக் குட்டி மாறியிருந்தது.
அது அவ்வாறு குடிக்கும் போது, மகனின் முகத்தில் தோன்றும் சிரிப்பு! அவனது முரண்டு, பிடிவாதம், அழுகை எல்லாவற்றையும் இந்தச் சிரிப்பு கழுவிக் கொண்டு போய்விடும்.
குளுக்கோசு கொடுப்பதிற் தாமதித்தால் ‘அம்மா’ என்று கூப்பிட்டுத் தன்னை நினைவூட்டும், ‘தானா.’
நாலு நாள் நிறைந்த ஒரு காலை! வானத்திரையில் சூரியன் ஒளித்தடம் தலங்கத் தொடங்கிவிட்டது.
கறுப்புக்குட்டி துள்ளித் துள்ளி ஓடி, சுவர்ப் பத்திரிப்புக்களில் ஏறித் திரிய வெள்ளைக் குட்டி நாலு காலும் ஒட்டி, முதுகை ஒட்டகம்போல் வளைத்து மயிர்கள் சிலிர்த்திருக்கக் குளிர்ந்து நடுங்கிப் பெரும் பரிதாபமாய் நின்று கொண்டிருந்தது.
“அம்மா, ‘தானா’ செத்துப் போமோ அம்மா? ‘தானா’க்கு வருத்தமோ அம்மா?”
மகன் என்னைப் பிராண்டினான்.
“இல்லை ராசா…. அதுக்குச் சாப்பாடு காணாது. சத்து ஒண்டும் இல்லை. ஏதும் பால்தான் வாங்கிக் குடுக்க வேணும்”
அன்று மாலையே அதற்குப் பால்மா வாங்கப்பட்டது.
பாலைக் குடித்துவிட்டு அது மஞ்சள் திரவமாய் மலங்கழித்த போது தன் சிரிப்பை எல்லாம் கழற்றி வைத்துவிட்டவன் போல் வெற்று முகத்துடன் திரிந்தான் மகன்.
அன்று அந்திப் பொழுதில் ஒரு மெல்லிய முனகல் கேட்டு நாங்கள் எல்லோரும் ஓடிப்போய் பார்த்தபோது, ‘தானா’ ஒரு மூலையில் பதுங்கிக் கிடக்க, அதன் மேல் அது அசைய முடியாதபடி தன் கால்களைப் பரப்பிக் கிடந்தது ‘ஜெ’.
திடீரெனப் பயந்து ஒரு அமனிதமான குரலில் கூக்குரலிட்டு விட்டான் மகன்.
“செத்துப் போச்சோ அம்மா?”
“இல்லை இல்லை….. அது சாகேல்லை” என்று அவனைத் தேற்றிக் குட்டியை இழுத்துத் தூரத்தில் விட்டேன். ஆயினும் அது நிற்க முடியாமல் சோர்ந்து விழுந்தது.
மிருக வைத்தியர் ஒருவரை மிக அவசரமாய்ச் சென்று அழைத்து வந்தான் தம்பி.
தாயை நிறுத்தி அதன் பாலைக் கறந்து அதையே போச்சியில் விட்டு ஒவ்வொரு நாளும் பருக்கச் சொன்னார்.
தாய்ப்பால் அந்தக் குட்டிக்குத் தேவையான உணவுக் கூறுகள் யாவும் சரியான செறிவிலும் விகிதத்திலும் சரியான வெப்ப நிலையிலும் வழங்கப்படும் என்றும், அதைப் பருகும்போதே குட்டி போதிய நோய் எதிர்ப்புச் சக்தியைத் தன் உடலில் பெறும் என்றும், நோய்க் கிருமிகள் உள்ளே சென்றுவிடும் சந்தர்ப்பமும் தாய்ப்பால் குடிக்கும் போதே அரிதாக இருக்கிறதென்றும் பெரியதோர் விளக்கம் தந்தார்.
அவரது ஆலோசனைகள் தவறாமல் செயல்படுத்தப் பட்டன.
குட்டி சற்றுச் சுறுசுறுப்பு அடைந்து மெதுவாக ஓடித்திரிய ஆரம்பித்த போது, சந்தோஷத்தின் சிறகுகள் மகனுக்குள் முளைத்திருந்தன. குட்டி எந்த நேரமும் அவனுக்கு அருகிலேயே படுத்து உறங்கும். அவன் குளிக்கச் சென்றாலும் பின்னே செல்லும், சாப்பிட வந்தாலும் பின்னாலே வரும். பறவை சிறகைச் சிலுப்பினது மாதிரிக் கைகளைத் தூக்கி அதை அணைத்துக் கொண்டு அவன்!
இப்போது ‘தானா’ வுக்குக் கொம்புகள் முளைத்து விட்டன! ‘ஜே’ கட்டி நின்ற மரத்துக்கு அருகே முருக்கங் குழையைக் கொண்டு வந்து போட்டான் தம்பி. அதனைச் சாப்பிட விரைந்து ஓடி வந்தது “ஜெ’. அருகில் விளையாடிக் கொண்டிருந்த ‘தானா’ வும், ‘சீனா’வும் ஓடிவந்து, தமது சிறிய கொம்புகளால் ‘ஜே’ யை இடித்துத் தள்ளின. முருக்கங் குழையைத் தூக்கிக் கொண்டு தரத்தே ஓடி. இரண்டும் உண்டன. மகனுடைய முகத்தில் பிரபை கொள்ளும் பிரகாசம்!
பப்பாசிக் குழாய் ஒன்றில் கயிறு கட்டித் தோளில் தொங்கப் போட்டிருந்தான் அவன்.
“உதென்ன ராசா?” என்ற என் கேள்விக்கு அவன் தந்த பதில்,
“இனி ஹெலி வரட்டும் அம்மா, பாப்பம்….” என்று!
சித்திரைக்கே உரித்தான வாசனை மூச்சை வேப்பமரம் வெளியிட ஆரம்பித்திருந்தது. அதில் படர்ந்திருந்த ‘ஆட்டுப்பூ’ மரத்தில் நீலம் நீலமான பூக்கள். குப்பென்று மகிழ்ச்சி பரவியது என் நெஞ்சில்.
‘காலை ஒன்று கிழக்கில் விடிந்தது’ என்று தொடங்கும் மகாகவியின் காவியத்தை வாசிக்கத் தொடங்கினேன்.
– மல்லிகை – ஆனி ’86
– வாழ்வு வலைப்பந்தாட்டம் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: ஜூலை 1997, கலை இலக்கியக்களம், தெல்லிப்பழை
– சுதந்திர இலங்கையின் தமிழ்ச் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 1998, இலங்கைக் கலைக்கழகம், பத்தரமுல்ல