நயினார் தன்னுடைய 25 வருடப் பழைய ரேடியோவைத் தட்டிப் பார்த்தார். தலை கீழாக கவிழ்த்துப் பார்த்தார். ம்ஹூம்! எதற்கும் மசியவில்லை அந்த கருவி. கம்மென்றிருந்தது. அவருக்கு தன்னைச் சுற்றிய உலகமே மௌனமாகி விட்டாற் போலத் தோன்ற திகைத்துப் போனார்.
நயினார், நெல்லை மாவட்ட விவசாயி. வயது எழுபதும் இருக்கலாம் அதற்கு மேலும் இருக்கலாம். உழைத்து உழைத்து உரமேறிய உடலமைப்பு. அரையில் ஒரு வேட்டி , மேலே நைந்து பழசாகிப் போன சிவப்புத் துண்டு. ஊருக்கோ , இல்லே வேறு விசேஷங்களுக்கோ போகும் போது போட்டுக்கொள்ள இரண்டே இரண்டு சட்டை. அவருடைய ஒரே கெட்ட பழக்கம் ரேடியோ கேட்பது தான். இது ஒரு கேட்ட பழக்கமா என்று உங்களுக்குத் தோன்றலாம் . ஆனாலும் 24 மணி நேரமும் கூடவே வைத்திருந்து அதனுடனே உண்டு உறங்கி வந்தால் அது கெட்ட பழக்கத்தோடு சேர்த்தி என்பது நயினாரின் மனைவி இசக்கியம்மாளின் நினைப்பு.
நயினாருக்கு எது இருக்கோ இல்லையோ ரேடியோச் சத்தம் கண்டிப்பாக வேண்டும். அது நேயர் விருப்பமாக இருக்கட்டும் , விவசாய நிகழ்ச்சியாக இருக்கட்டும் , இல்லை உடல் ஆரோக்கியம் சம்பந்தமான நிகழ்ச்சியாக இருக்கட்டும் , சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். அது பாட்டுக்கு அது மனிதர் பாட்டுக்கு தன் வேலையைப் பார்த்துக் கோண்டிருப்பார் என்றால் அதுவும் இல்லை.
“கல்யாண வளையோசை கொண்டு……” என்று அது பாடும் போது கூடவே அனுபவித்துப் பாடுவார். ஆனால் பாவம் குரல் ஒத்துழைக்காது. அது மட்டுமல்ல அவருக்குப் பாடவும் வராது. அதனால் அவருடைய இந்த நேயர் விருப்ப நேரத்திற்கு வீட்டில் எப்போதும் ஆட்சேபணை . அதனால் சினிமாப் பாட்டு வரும் நேரம் குளக்கரைக்கோ , தோப்புக்கோ சென்று ஆனந்தமாகப் பாடுவார்.
“எண்டோ சல்ஃபான் 200மில்லி , டிரை குளோரோ பாஸ்பேட் 200 மில்லி என்று விவசாய நிகழ்ச்சிகளின் போது கூடவே சொல்லி தன்னுடைய ஞானத்தை வெளிப்படுத்துவார்.
“ஆமா! எல்லாம் தெரிஞ்ச மனுஷன் , அப்படியே பயிர் செஞ்சு அஞ்சு ஏக்கரை 500 ஏக்கரா ஆக்கிட்டாரு. ” என்று இசக்கியம்மாள் சொல்வது காதில் விழாதது போல இருந்து விடுவார். அவளுக்கும்தான் என்ன? பொழுதன்னிக்கும் ரேடியோவோடு குப்பை கொட்ட வேண்டுமானால்? எரிச்சல் வராமல் போகுமா?
இப்படி நயினாரின் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருந்த ரேடியோ தான் திடீரென்று ரிப்பேரானது.
“இத்தனை வருசத்துல ஒரு தடவை கூட ஒரு கரகரப்பு , குரல் கம்முறதுன்னு ஆனதில்ல” என்றார். என்னவோ “இது வரைக்கும் ஒரு தலைவலி காய்ச்சல்னு மனுஷன் படுத்ததில்ல “என்ற அதே தோரணையில்.
அவர் மகனுக்கு எரிச்சலான எரிச்சல்.
“சவத்தைத் தள்ளுங்கப்பா! எந்நேரமும் பாட்டு படிச்சுக்கிட்டு , வீட்டுல மனுஷன் பேசுததுக்கு நேரம் வேண்டாமா? ரிப்பேரானதே நல்லது. போங்க போயி சோலியப் பாருங்க” என்று சொல்லிவிட்டான். அவனுக்கு வியாபாரத்துக்குப் போக வேண்டும்.
பொறவன் வரவனிடம் எல்லாம் “ஏலே! லேடியோப் பெட்டி ரிப்பேர் பண்ற கடை எங்கருக்கு தெரியுமால?” என்று கேட்டு துளைத்து எடுத்து விட்டார். ஒருவன் மட்டும் “நம்ம தெக்குத்தெரு பக்கத்துல செண்பக நாடார் கடைக்குப் பக்கத்துக்கடை” என்று சொல்லி விட்டுப் போனான்.
கிழவர் ரேடியோவைத் தூக்கிக் கொண்டு அங்கே போனார்.
“ஏல , ஐயா என் லேடியோ பாட மாட்டேங்கு கொஞ்சம் ரிப்பேர் பண்ணிக் குடுல”
“தாத்தா பேட்டரி மாத்திப் பாத்தீங்களா?”
“ஒரு வாரத்துக்கு முன்னுக்க தான் புது பேட்ரி போட்டேன் தம்பி”
“எங்க ரேடியோவைக் கொண்டாங்க பாப்போம்” என்றவன் இவர் தன்னுடைய ஃபிலிப்ஸ் செட்டைக் கொடுத்ததும் என்னவோ ஒரு நூதன வஸ்துவைப் பார்ப்பது போலப் பார்த்தான்.
“தாத்தா இப்பம்லாம் இந்த மாரி ரேடியோ யாரு கேக்கா? இது பழைய மாடல். எனக்கு ரிப்பேர் பண்ணத் தெரியாது”
கிழவருக்கு சப்பென்றாகி விட்டது.
“என்னடே! இப்படிச் சொல்லுத? நீ ரொம்பக் கெட்டிக்காரன்னு ஊருக்குள்ள பேசிக்கிடுதாங்களே! நீ என்ன இப்படிச் சொல்லுத?”
“அதுக்கில்ல தாத்தா இது எனக்கு பழக்கமில்லாத செட்டு. ஆனா சூப்பர் செட்டு. நான் எதுனா கையை வெச்சி ரொம்ப மோசமாயிடிச்சினா? அதான் சொல்லுதேன். கடயத்துல பஸ் ஸ்டேண்ட் பக்கத்துல ரமேஷ் ரிப்பேர்க்கடைன்னு ஒண்ணு இருக்கு. என் மச்சான் தான். அவனுக்கு ஒரு வேளை தெரிஞ்சிருக்கலாம். நீங்க அங்க கொண்டு போங்க” என்று சொல்லி விட்டான்.
“இப்பம் நான் இந்த லேடியோப் பொட்டியத் தூக்கிக்கிட்டு கடயம் போகணுமாங்கும்” என்று அலுத்துக் கொண்டாலும் அதையும் செய்தார். அங்குள்ளவனுக்கும் அந்த பழைய ரேடியோவை ரிப்பேர் செய்யத் தெரியவில்லை.
நயினார் சொல்வது போல
“எதையோ களட்டுனான் , இந்தப் பக்கம் ரெண்டு திருப்பு , அந்தப் பக்கம் ரெண்டு திருப்பு. வாயால நாலு மட்டம் ஊதுனான். அம்புட்டுத்தான். திரும்பி மூடிட்டு எங்கிட்ட 20 ரூவா வாங்கிட்டான் அந்தப் பய. எளவு காசு போகுது ஆனா லேடியோ பாடலியே?ன்னு கேட்டா இதுக்கு நான் பொறுப்பில்ல என்னால ஆனதைச் செஞ்சு பாத்தாச்சுங்கான். அவன் தொறந்து பாத்ததுக்கு சர்வீசு சார்சுங்கான்.” என்று பேரனிடம் சொல்லி சலித்துக் கொண்டார்.
ரேடியோவை ரிப்பேருக்குக் கொடுப்பதே நயினாருக்கு முழு நேரத் தொழிலானது.
ஆழ்வார்குறிச்சி , சிவசைலம் , ஏன் தெங்காசி வரை சென்று பார்த்தாயிற்று யாருக்கும் அந்த லேடியோப் பெட்டியை ரிப்பேர் செய்யத் தெரியவில்லை.
“தாத்தா இப்படி ரேடியோ ரேடியோன்னு பறக்கியே , நம்ம ஊருக்கு அது வரதுக்கு முன்ன எப்படி இருந்த?”
நயினார் யோசித்தார். ரேடியோவுக்கு முந்தைய தன் வாழ்க்கைகையை அவரால் நினைத்துக்கூடப் பார்க்கத் தெரியவில்லை. ரேடியோ வந்த அந்த தினம் தான் ஞாபகத்திலிருந்தது.
“1950கள்லயேலியே நம்ம ஊருக்கு லேடியோ வந்திட்டு…” என்றார் எங்கோ வெறித்த பார்வையுடன். கை அன்னிச்சையாக முள் முள்ளாக வளர்ந்திருந்த தாடியைத் தடவிக் கொடுத்தது. முகத்தில் ஒளி. அப்படியென்றால் ஏதோ ஒரு பழைய கதை வரப் போகிறது என்று அர்த்தம். அவற்றை கேட்பதில் மிகுந்த விருப்பமுள்ளவனான பேரன். சம்மணமிட்டு அவர் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டான்.
“நம்ம ஊரு பண்ணையாரு மகன் ராசாமணி தான் முத முதல்ல நம்ம ஊருக்கு லேடியோவைக் கொண்டு வந்தான். அவன் என் சேக்காளி. அஞ்சாப்பு வரைக்கும் நான் அவன் கூடத்தான் படிச்சேன். லேடியோ கொண்டு வரையில அவன் மதுரையில காலேசுல படிச்சிக்கிட்டு இருந்தான். லீவுக்கு வாரப்ப கொண்டு வந்தான். எங்கிட்ட இருக்கே இந்த மாரி குட்டி லேடியோ அப்பம் கிடையாது. கரண்டுல தான் படிக்கும் , பெருசா இருக்கும்….” நினைவுகளில் தொலைந்தார் நயினார்.
ஊரு முழுக்க கூடியிருந்தது பண்ணையார் வீட்டின் முன் .
“ஏல தெரியுமா? நம்ம ராசாமணி பாட்டுப் படிக்கற பெட்டி வாங்கிட்டு வந்திருக்கானாம்ல”
“பாட்டுப் படிக்கற பெட்டியா? அப்டீன்னா?”
“நீ ஒரு வெவரங்கெட்டவன் , ஒரு பொட்டி மாரி இருக்குமாம் , அதுல கரண்டு குடுத்துருவாங்களாம். அது பாட்டுக்கு சினிமாப் பாட்டெல்லாம் படிக்குமாம். பாகவதர் பாட்டு , சாமி பாட்டு எல்லாம் வருமாம்”
“அது எப்படி? சும்மாச் சொல்லுதாவோ . அப்படி எல்லாம் இருக்கவே முடியாது”
“ஏன் பலவேசம்? ஏதாவது மாய மந்திரமா இருக்குமோ? நாம அதைக் கேட்டா நமக்கு எதாவது கெட்டது நடக்குமோ?”
“சீ சீ! பேசுத பேச்சைப் பாரு. ராசாமணி எங்கிட்ட எல்லாம் சொன்னான்ல! காத்துல பாட்டு கலந்து வருமாம். அதை இழுத்து வெச்சுக்கிட்டு இந்தப் பெட்டி பாடுமாம்”
“நயினாரு நீ தான் ராசாமணிக்கு சேக்காளி! நீ சொன்னா சரியாத்தான் இருக்கும். பெட்டி எப்ப வருதாம்?”
“இன்னைக்கு மதுரையில இருந்து கொண்டு வரப் போறேன்னு சொன்னான். நாம பஸ் ஸ்டேண்டு போயிட்டோம்னா சரியாயிருக்கும்.”
அப்போதைய இளவட்டங்கள் எல்லாம் பஸ் ஸ்டேண்டில் ஆஜர்.
வந்ததையா ரேடியோ. அரை மூடை சைசில் ஒரு பெட்டி , அதில் கட்ட செப்புக் கம்பி என்று என்னென்னவோ சாதனங்கள் பண்ணையார் வீட்டில் இறங்க திறந்த வாய் மூடவில்லை கூட்டம். அவற்றைப் பொருத்த ஆட்கள் என்று ஊர் திமிலோகப் பட்டது.
“ஏல நயினாரு? பாட்டுப் படறவுஹ இந்த இத்துனூண்டு பொட்டிக்குள்ளயா உக்காந்து பாடுவாஹ? என்னன்னு தான் கேளேன்?”
“நீ ஒரு பட்டிக்காடு! நான் தான் அப்பமே சொன்னேனே! காத்துல வருதாம் பாட்டு , அதை இந்த செப்புக் கம்பி மூலமா பிடிச்சு லேடியோக்குள்ள போயி பாட வைப்பாஹ”
அப்போது பண்ணையார் மகன் ராஜாமணி அங்கு வர ,
“ஏல ராசாமணி! இதை எவம்ல கண்டு பிடிச்சான் , மன்னன் தான். என்ன மூளை பாரேன்”
ராஜாமணி ஏதோ பதில் சொன்னார். அது நயினார் காதுகளில்” மரக்கோணி” என்று விழுந்தது.
“பாரேன் எவனோ மரக்கோணின்னு ஒரு வெள்ளைக் காரன் கண்டு பிடிச்சிருக்கான். ” நயினார் பேசிக் கொண்டே போக அமைதியாக இருக்குமாறு எல்லாருக்கும் பொதுவாக சைகை செய்யப் பட்டது. சட்டென்று அமைதியானது அந்த இடம்.
ரேடியோவை ஆன் செய்தார் பண்ணையார். மெதுவாக ஐந்து நிமிடம் கழித்து பாட ஆரம்பித்தது.
“காற்றினிலே வரும் கீதம்…” என்று பாடியது ஒரு குரல் . அந்தக் குரல் இனிமையில் சொக்கிப் போனான் நயினார்.
“அன்னிக்கு நினைச்சுக்கிட்டேன் நாமளும் சொந்தமா ஒரு லேடியோப் பொட்டி வாங்கணும்னு , கொஞ்சம் கொஞ்சமா துட்டு சேத்து கொஞ்ச வருசம் களிச்சு ராசாமணியையே கூட்டிக்கிட்டுப் போயி இந்த சின்ன லேடியோவை வாங்குனேன்.அது என்னடான்னா இப்பம் சதி பண்ணுது” என்று அங்கலாய்த்துக் கொண்டார்.
நாளாக நாளாக எல்லாம் சரியாகி விடும். தாத்தா டிவிக்கு மாறி விடுவார் என்று பேரன் நினைத்தது பொய்க் கணக்கானது. அவருக்கு ரேடியோ இல்லாமல் சோறு தண்ணீர் இறங்கவில்லை. தானே வாய்க்குள் பாடல்களைப் பாடியபடி , வசனங்களைப் பேசியபடி ரேடியோவையே பார்த்துக் கோண்டிருந்தார். பேசுவதும் குறைந்து போயிற்று. பேரன் பயந்து போனான். “தாத்தாவுக்கு பைத்தியம் பிடிச்சுட்டுதோ” என்று நினைத்தவன் , கைக்கடக்கமாக ஒரு எஃப் எம் ரேடியோ வாங்கினான்.
“தாத்தா நீ வாங்குனதை விட இது சின்னது. இப்ப வந்திருக்கு , சைனா ரேடியோ. இதுக்கு சின்ன பேட்டரி போட்டா போதும். இந்தா விருப்பம் போல பாட்டுக் கேளு” என்று கொடுத்ததை ஆசையோடு வாங்கிக் கொண்டார் கிழவர். அது பாட்டு என்னவோ பாடியது. ஆனால் அவருக்கு ஒன்றும் புரியவில்லை. மாக்காயெல்லா , மாக்காயெலா என்று இழைந்தது.
“ஏல! தமிழ்ப்பாட்டு படிக்கற லேடியோ வாங்குடான்னா சைனா லேடியோவ வாங்கி , அது பாரு சைனா பாசையில பாட்டுப் படிக்கி.”
“ஐயோ தாத்தா இது தமிழ் பாட்டுதான். கவனமாக் கேளு. ”
என்ன கேட்டும் அது தமிழ்ப் பாட்டு மாதிரி இல்லை. .
நயினாருக்கு பிடிப்பு விட்டுப்போய் விட்டது.
“ஏந்நேரமும் பொம்பளைப் பிள்ளைங்க பேசிக்கிட்டே இருக்காஹ! அது இல்லேன்னா வெளம்பரம் போடுதான் , பாட்டு எங்க போடுதான்? அப்படியே போட்டாலும் நமக்கு வெளங்காத பாசையில போடுதான்.பாட்டுன்னா கணீர்னு வரிகள் மனசுல பதியண்டாமா? இது என்ன பாட்டு செத்த பாட்டு?” என்று சொல்லி அதைத் தள்ளி வைத்து விட்டார்.
மீண்டும் தனிமை தான் வெறுமை தான்.
அன்று பேரன் வரும் போதே சந்தோஷமாக வந்தான்.
“தாத்தா எழுந்துரு , உனக்கு ஒரு குட் நியூஸ்!”
“அது என்னது?”
“பக்கத்துல கருத்தப் பிள்ளையூருல ஒரு ரேடியோ மெக்கானிக் இருக்காராம். அவருக்கு இந்த ரேடியோவை ரிப்பேர் செய்யத் தெரியுமாம். வா தாத்தா போயிட்டு வந்திடுவோம்” என்றான்.
கண்களில் ஒளி வீசியது பெரியவருக்கு. நிஜமாவா? சந்தேகம் வந்தது.
“ஏண்டா ! கருத்தப் பிள்ளையூர் நம்ம ஊரை விடச் சின்னதாச்சே! அங்ஙன எப்படி..?”
“அவரு வயசாளியாம் தாத்தா! அந்தக் காலத்துல எல்லாம் அவரு தான் ரேடியோ ரிப்பேர் பண்ணுவாராம். அம்பாசமுத்திரத்துல கடை வெச்சிருந்தாராம். வயசான பிறகு கடையைக் கட்டிட்டு மகனோட இருக்காரு. அவரு பேரன் எங்கூடத்தான் படிக்கான். அவன் தான் சொன்னான். கெளம்பு தாத்தா”
வாயெல்லாம் பல்லாகக் கிளம்பினார் தாத்தா!
அந்த மெக்கானிக் மிகவும் கெட்டிக்காரர். கால் மணி நேரத்தில் ரேடியோவை சரி செய்து விட்டார்.
“இந்தாங்க ஐயா! உங்க ரேடியோ! நல்லாப் பாடும் போட்டுப் பாத்துக்கிடுங்க” என்றார்.
உடம்பெல்லாம் காதாக தன்னுடைய கருவியை மெதுவாக இயக்கினார்.
“நினைத்தேன் வந்தாய் நூறு வயது….” என்று பாடியது கணீரென்ற குரலில். நயினாருக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. மெக்கானிக்கின் கையைப் ப்டித்துக் கொண்டு “நீரு தான் வேய் உண்மையான வேலை தெரிஞ்சவரு. இத்தனை நாள் உம்மட்ட வராம வெறும் பயக்க கிட்டப் போயி மனசு கெட்டேனே. உமக்கு எவ்வளவு வேணும் சொல்லும். எவ்வளவு குடுத்தாலும் தகும். ஆனா என்னால ஏண்டது ? ” என்று நூறு ரூபாய்த்தாளை நீட்டினார் பெரியவர்.
“எனக்கு ஒண்ணும் வேண்டாம்யா! பளய செட்டைக் கொண்டு வந்து குடுத்தீரே! அதைத் தொட்டுப் பாத்தேனே அதே போதும்யா எனக்கு. நீரு சந்தோசமாப் பாட்டுக் கேளும்” என்றார்.
“உம்ம பேரையாவது சொல்லும் ஒமக்கு என் வம்சத்துல எல்லாரையும் விட்டு நன்றி சொல்லச் சொல்லுதேன்” என்றார் நயினார்.
அவர் “மார்க்கோனி” என்றது நயினாருக்கு “மரக்கோணி” என்று கேட்டது.
– பெப்ரவரி 2013
அருமையான கதை!