மன்னித்தோம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 3, 2024
பார்வையிட்டோர்: 2,047 
 
 

அவள் மனம் இரண்டாகப் பிளந்து விட்டது போல் உணர்ச்சியில் கொந்தளித்தது.

சுதா விம்மி விம்மி அழுதாள்.

“ஏன் சுதா அழறே? என்ன ஆச்சு? உடம்பு சரியில்லையா?” என்று அன்புடன் வினவினாள் நித்யா.

அவர்கள் இருப்பது சென்னையில் சைதாப்பேட்டையிலுள்ள ஒரு லேடிஸ் ஆஸ்டல். இருவரும் ஓர் அறையைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். சுதாவுக்கு தந்தை இல்லை. தாயார் சிவகாமி அம்மாள் வேலூரில் பூ வியபாரம் செய்து கொண்டிருக்கிறாள்.. சுதா பி.ஏ படித்திருக்கிறாள். மாநிறமாக இருந்தாலும், உடல் வனப்புடன் கவர்ச்சியாக இருக்கும். தி நகரில் உள்ள பெரிய சூப்பர் மார்கெட்டில் வேலை செய்து கொண்டிருக்கிறாள். அவளுக்கு மாப்பிள்ளைப் பார்த்து கல்யாணத்துக்குத் தேதியும் குறிச்சாச்சு. அடுத்த மாதம் பதினெட்டாம் தேதி வேலூரில் கல்யாணம்.

நித்யாவுக்குச் சொந்த ஊர் கும்பகோணம். பி. காம் படித்து விட்டு நுங்கம்பாக்கத்தில் ஒரு புத்தகக் கடையில் வேலைச் செய்கிறாள்.

அவளுடைய வினாவுக்குப் பதில் அளிக்காமல் சுதா கேவி கேவி அழுதாள்.

”உனக்கு என்ன பிரச்சனை சுதா? வரும்போதே உன் முகம் சரியாக இல்லை. என்ன நடந்தது? சொல்.”

”நான் எப்படிச் சொல்வேன் நித்யா? நான் கெட்டுப் போயிட்டேன். ஒருவன் என்னை….. நான் கறைபட்டவளாகிவிட்டேன்.” சுதா விம்மி விம்மி அழுதாள்.

அந்தச் செய்தியைக் கேட்டு நித்யா அதிர்ந்து போய் விட்டாள்..

”என்னடிச் சொல்றே? என்ன நடந்தது சொல்?” என்றாள் படபடப்புடன்

”நான் வேலை செய்யும் டிபார்ட்மெண்ட் ஸ்டோரின் முதலாளி லதா அம்மாவுக்கு நேற்று பிறந்த நாள். அதற்காக அவங்க ஒரு பார்டி கொடுத்தாங்க. அதுக்கு என்னை இன்வைட் பண்ணியிருந்தாங்க. நான் போயிருந்தேன். இரவு ஏழு மணி ஆகிவிட்டது.. நான் கிளம்ப முயன்றேன். அப்போது இரண்டு பேர் என்னிடம் கூல் டிரிங்ஸ் கொடுத்தார்கள். அதைப் பருகினேன். எனக்கு மயக்கம் வருகிற மாதிரி இருந்தது. அப்போது கூல் டிரிங்ஸ் கொடுத்த இருவரும் என்னைப் பக்கத்து அறைக்கு இழுத்து போகப் பார்த்தார்கள்..அந்தப் பார்ட்டிக்கு வந்திருந்த பாஸ்கர் என்னும் இளைஞன் அந்த இருவரிடமிருந்து என்னைக் காப்பாற்றி அவருடைய காரில் லிப்ட் கொடுத்தார். அவர் வீட்டருகில் வந்ததும் ஒரு நிமிடம் வீட்டுக்குள் போயிட்டு வந்துடலாம் என்று வீட்டுக்குள் நுழைந்தார். என்னை ஒரு அறையில் உட்கார வைத்துவிட்டு ”ரிலாக்ஸ் பண்ணிக்கோங்க. நான் இதோ போய் காபி எடுத்துட்டு வரேன்னு” போனார். உடனே கையில் ஒரு தம்பளர் தண்ணீருடன் திரும்பி வந்து சமையல்காரன் வெளியே போயிருக்கான் என்று தம்பளரை என்னிடம் கொடுத்தார். அப்போ அவருக்கு மொபைலில் அழைப்பு வந்தது. அம்மா சீரியஸ் ஆக ஆஸ்பிட்டலில் இருக்காங்க. சாரி, நான் உடனே போகணும். நீங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வீட்டுக்குப் போங்கன்னு சொல்லி விட்டுப் போய் விட்டார்.. எனக்கு மயக்கம் வருவது போல் இருந்ததால். அங்கிருந்து சோபாவில் படுத்தேன். அப்போது யாரோ.. முகம் சரியாக தெரியலை. என் அருகில் வந்து என் மேல் படர்ந்து………. அப்புறம் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. சிறிது நேரம் கழித்துக் கண் விழிக்கும்போது ஆடையெலாம் கலைந்து அலங்கோல நிலையில். நான் பதறிப் போய் வீட்டை விட்டு வெளியே வந்து ஓர் ஆட்டோவைப் பிடித்து ஆஸ்டலை வந்தடைந்தேன். ஒரு பெண் எதை உயிரினும் மேலாகக் காப்பாற்ற வேண்டுமோ அதை நான் பறிக் கொடுத்துவிட்டேன், என் கற்புக்குக் களங்கம் உண்டான பிறகு இனிமேல் நான் வாழ்ந்து என்ன பயன்?” கதறி கதறி அழுதாள்.

”உனக்கு இந்த மாதிரி ஆகியிருக்க வேண்டாம். உனக்குக் கல்யாணம் ஆகப்போகிற நேரத்திலே… கஷ்டம்தான். இந்தக் கொடுமையை உங்க அம்மாகிட்டே எப்படிச் சொல்றது. நடக்கக் கூடாதது நடந்து போச்சு. முதல்லே போலீஸிலே புகார் செய்யலாம். இப்போ மணி ஒன்பது.. இருந்தாலும். லதா மேடத்துக்கிட்டே நடந்ததைச் சொல்லி அவங்க ஆலோசனையைக் கேளு”

அழுகையைச் சட்டென்று நிறுத்திய சுதா, ”போலீசா, வேண்டவே வேண்டாம். நிறையக் கேள்வி கேட்பார்கள். அதோடு எனக்குக் கல்யாணம் வேறே பிக்ஸ் ஆகியிருக்கு இல்லையா? இந்தச் சமயத்தில் போலீஸ் ஸ்டேஷன் அலைய முடியாது. மேலும் போலீஸ் என்றாலே எனக்குப் பயம். நான் மேடத்துக்கிட்டே போனிலே பேசறேன்.”

உடனே லதாவிடம் அலைபேசியில் பேசினாள்.

விசயத்தைக் கேள்விப்பட்ட லதா திகைத்துப் போனாள்..

”எனக்குத் தெரிந்தவரை பாஸ்கர் நல்லவன்.. பெண்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுப்பவன். அவன் தான் பண்ணியிருப்பான்னு நான் நம்பலை. எதுக்கும் நீ உடனே போலீசில் புகார் கொடு” என்று சொன்னார்.

”லதா மேடம் சொன்னாலும் எனக்குத்தான் போலீசிடம் போக வேண்டாம் என்று தோன்றுகிறது”என்றாள் சுதா

“அப்படிச் சொல்லாதே. தப்புச் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். நீ எழுந்து அடுத்துச் செய்ய வேண்டியதைக் கவனி.”என்றாள் நித்யா.

உடனே இருவரும் கிளம்பிப் புகார்க் கொடுக்க அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேசன் போனார்கள். இன்ஸ்பெக்டர் வருகிற நேரம். உட்காருங்க என்று ஒரு போலீஸ்காரிச் சொன்னதால் அவர்கள் இருக்கையில் அமர்ந்து இன்ஸ்பெக்டரின் வருகையை எதிர்பார்த்திருந்தனர். அரை மணி நேரம் கழித்து ஒரு போலீஸ் வேன் வந்து நின்றது. அதிலிருந்து லேடி இன்ஸ்பெக்டர் தேன்மொழி இறங்கி ஸ்டேஷனுக்குள் வந்தார்.

இன்ஸ்பெக்டர். தன் இருக்கையில் அமர்ந்ததும், ”என்ன விஷயம்?” என்று கேட்டார் அவர்களைப் பார்த்து.

சுதா மெல்லிய குரலில் நடந்ததை அவரிடம் சொன்னாள். தேன்மொழி, சுதாவை மருத்துவமனைக்கு அனுப்பிப் பரிசோதனைச் செய்து வந்த பிறகு புகாரை ஏற்றுக் கொண்டார்..

அன்று இரவு அவர்கள் இருவரும் உறங்கவே இல்லை. நடந்து போன அசாம்பாவிதத்தைப் பற்றிப் பேசியே பொழுது புலர்ந்து விட்டது.

போலீஸ் பாஸ்கரைக் கைது செய்து விசாரணை நடத்தியது. எத்தனை முறை கேட்டாலும் அந்தக் குற்றத்தைச் செய்யவில்லை என்று பாஸ்கர் சொன்னதையே திரும்பித் திரும்பிச் சொல்லிக் கொண்டிருந்தான். ஆஸ்பத்திரியில் அவனுடைய அம்மா உயிருடன் போராடிக் கொண்டிருந்தபோது அங்கு இருந்தான்.. டாக்டர்கள் எவ்வளவு முயன்றும் அவன் அம்மாவைக் காப்பாற்ற முடியலை. அவள் இவ்வுலகிலிருந்து விடுதலை அடைந்து விட்டாள். கொலை நடந்த சமயத்தில் பாஸ்கர் ஆஸ்பத்திரியில் இருந்ததற்கு சாட்சி இருப்பதால் அவன் குற்றவாளி அல்ல.

லதாவிடம் விசாரணைச் செய்ததில் பாஸ்கர் லதாவின் கஸின் என்பது தெரிந்தது. ”பெரிய டெக்ஸ்டைல் ஷோ ரூம் வைத்திருக்கிறான். பெண்களைக் கண்ணியமாக மதிப்பவன். கண்டிப்பாக அவன் குற்றம் செய்திருக்க மாட்டான்” என்று லதா உறுதியாகச் சொன்னாள்.

அடுத்த நாள் சமையல்காரன் சாமாவை விசாரித்ததில் அவன் கறிகாய் வாங்க கடைக்குப் போய் விட்டான் என்று சொன்னான். கறிகாய் கடையில் வாங்கியிருந்த பில்லையும் அவன் காண்பித்தான்.

இந்தக் கொலையில் துப்புக் கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறியது. கிரைம் பிரான்ஞ் இன்ஸ்பெக்டர் கலைவாணியிடம் கேஸ்

ஒப்படைக்கப்பட்டது. குற்றவாளியை எப்படியும் கண்டு பிடித்துவிட வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டு கலைவாணி விசாரணையை ஆரம்பித்தாள்.

சுதாவிடம் பல கேள்விகளைக் கேட்டு குற்றம் எப்படி நடந்தது என்று உறுதிப் படுத்திக் கொண்டாள்.

அடுத்துக் குற்றம் நடந்த இடத்துக்குப் போய்ப் பார்த்தாள்.. சமையல்காரன் சாமாவிடம் கேள்விகளைத் தொடுத்தாள்.

”நீங்கள் எவ்வளவு நாளாக இந்த வீட்டில் வேலைச் செய்கிறீர்கள்?”

நான் இரண்டு மாதமாக இந்த வீட்டில் வேலைச் செய்கிறேன்.

“உங்கள் சொந்த ஊர் …?”

“ராமநாதபுரம் என்னுடைய சொந்த ஊர்.”

“இங்கு வருவதற்கு முன் எங்கு வேலைச் செய்து கொண்டிருந்தீங்க?”

“கோயம்பத்தூரில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தேன். வேறு வேலை தேடலாமென்று இந்த ஊருக்கு வந்தேன். மெஸ்ஸில் சாப்பிடப் போனேன். எனக்குச் சமையல் செய்யத் தெரியும். அங்கு வந்த பாஸ்கருடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. அவங்க அம்மாவுக்குச் சித்த பிரமை பிடித்து வீட்டோட இருப்பதாலே சமையலுக்கு ஆள் தேடிக் கொண்டிருக்கேன்.” என்றார். நான் ஒரு சமையல்காரன். எங்காவது ஒரு வீட்டிலே சமையல் வேலை தேடிக் கொண்டிருக்கேன் என்றேன். நல்லதாப் போச்சு. நீ என் வீட்டுக்கு வந்துடறீயா? என்று கேட்டார். நானும் சரி என்று வந்து விட்டேன்.”

“உங்களுக்கு என்ன சம்பளம்?”

“ முன்பு வேலை செய்து கொண்டிருந்த மெஸ்ஸில் எனக்கு மாதம் ஐந்தாயிரம் சம்பளம். இங்கே எனக்கு இருக்க இடம் கொடுத்து மாதம் எட்டாயிரம் சம்பளம்.”

“உங்களுக்குத் திருமணம் ஆகி விட்டதா?”

“நான் ஓண்டி கட்டை. இந்தப் பங்களாவிலே இருக்கும் அவுட் அவுசில் வசிக்கிறேன்.”

சமையல் அறை மிகவும் விசாலமாக இருந்தது. அவள் அறையின் எல்லா பக்கங்களையும் நோக்கினாள். சாமா படபடப்புடன் நின்றிருந்தான்.

சாமா ஒரு குவளையில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான்.

”அன்றைக்கு என்ன நடந்தது சாமா. யோசிச்சு சொல்லுங்க?”

”அவர் அன்று வந்திருந்த போது நான் மார்கெட்டுக்குப் போய் விட்டேன்.”

”எப்போது வீட்டுக்குத் திரும்பனீர்கள்?”

”ஆறு மணிக்குத் திரும்பி வந்தேன். இல்லை எட்டு மணிக்குத் திரும்பினேன்.”

”இரண்டு மணி நேரம் மார்க்கெட்டில் இருந்தீர்களா? என்ன பண்ணிக்கொண்டு இருந்தீங்க?”

”ஆமாம்., இல்லை, இல்லை நான் அப்படியே கொஞ்ச நேரம் காலார நடந்துட்டு வந்தேன்.”

அவனுடைய பதில்கள் ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்கவே கலைவாணிக்கு அவன் மேல் சந்தேகம் வந்தது.

” உங்க மொபைலை கொடுங்க”. கையை நீட்டினாள்..

சாமாவுக்குக் கொடுக்க மனசு இல்லை.

”அது எதுக்கு ?”

”சும்மாதான் கொடுங்க. ஒரு போன் பண்ணணும். என் போனில் சார்ஜ் இல்லை,”

பாதி மனசுடன் தன் மொபைலைக் கொடுத்தான்.

”எனக்கு ஒரு கப் காபிக் கிடைக்குமா சாமா?”

”இதோ போய்ப் கொண்டு வர்றேன்” காஸ் அடுப்பின் அருகே போனான் சாமா..

கலைவாணி சமையலறைக்கு வெளியே வந்து போனை ஒரு முறை நன்றாக ஆராய்ந்தாள்..அதிலிருந்த புகைப்படங்களைப் பார்த்ததும் அவள் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன. உடனே ஸ்டேசனுக்குப் போன் செய்து தேன்மொழியிடம் இரண்டு கான்ஸ்டபிளை அவள் இருக்கும் இடத்துக்கு அனுப்பும்படி சொன்னாள்.

சாமா காபியைக் கொண்டு வந்து கொடுத்தான்.

காபியைப் பருகினாள். அவள் போனை அவனிடம் கொடுக்கவில்லை. ”

“சாமா,. இப்போ நீங்க என் கூட ஸ்டேசனுக்கு வாங்க. ஒரு ஸ்டேட்மெண்டில் கையெழுத்துப் போடணும்.” இருவரும் போலீஸ் ஜீப்பில் கிளம்பினார்கள்.

தன் பெண் சுதாவுக்கு நடந்த துர்சம்பவத்தைக் கேள்விப் பட்ட சிவகாமி தலையில் இடி விழுந்தது போல் கலங்கி அலறி அடித்துக் கொண்டு சென்னை வந்தாள்.

”ஏண்டி இந்த மாதிரி நடந்துச்சு. அந்தகப் பாவி நாசாமப் போக. உன் கல்யாணம் கூட நின்னு போச்சு. மாப்பிள்ளை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டார். வா போலீஸ் ஸ்டேசன் போய் நியாயம் கேட்போம்.” என்று சிவகாமி, சுதா, இருவரும் கிளம்பினார்கள்.

லதா பாஸ்கரை ஜாமினில் விடுவிக்க விடுவிடுவிக்க அட்வகேட் ஆராவமுத்துடன் போலீஸ் ஸ்டேசனுக்குப் புறப்பட்டாள்.

கலைவாணி அமர்ந்து வந்த போலீஸ் ஜீப் முதலில் ஸ்டேசனை அடைந்தது.. அவளும் சாமாவும் வண்டியிலிருந்து இறங்கினார்கள்.

இன்ஸ்பெக்டர் தேன்மொழி எதிரே இருந்த நாற்காலியில் சாமா அமர்ந்தான்.

”குற்றவாளியை உங்க முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டேன். குற்றத்தை எப்படிச் செய்தான் என்பதை அவன் வாயாலே சொல்லுவான். கேளுங்கள்.” என்றாள் கலைவாணி.

சாமாவுக்குத் தூக்கி வாரிப் போட்டது. “நான் குற்றம் செய்யவில்லை எனக்கு எதுவும் தெரியாது” என்றான் அப்பாவியைப் போல.

”இவன் பொய்ச் சொல்றான்” என்றாள் கலைவாணி.

”நான் உண்மையைத் தான் சொல்கிறேன்” என்றான் சாமா.

கலைவாணி அவன் பிடறியில் ஓர் அறை விட்டு, ”நீ பொய்ச் சொல்லித் தப்பிக்க முடியாது. நீ வசமா மாட்டிக்கிட்டே. எப்படி இந்தப் போட்டோ உன் மொபைலில் வந்தது?” என்று அலங்கோல நிலையிலிருந்த இருந்த சுதாவின் போட்டோவைக் காண்பித்தாள்.

சாமா மெளனமாக இருந்தான்.

பிறகு, “நான் தான் அவளை …..” தயங்கிக் கொண்டே ஒப்புக் கொண்டான்.

“என்ன நடந்தது என்பதை விவரமாக சொல்.”

“நான் காய்கறி வாங்கிவிட்டு வீட்டுக்குத் திரும்பினேன். சுதா சோபாவில் படுத்திருந்தது என் கண்ணில் பட்டது. ஆடை நெகிழ்ந்திருந்த அவளைக் கண்டு உணர்ச்சி வசப்பட்டு மனம் சபலித்துத் தவறு செய்து விட்டேன். நான் வேண்டுமென்று செய்யவில்லை. என்னைக் கட்டுப் படுத்த முடியலை.. அதனால் என்னை மன்னித்து விட்டு விடுங்கள்” என்றான்.

”ராஸ்கல் தப்பு செஞ்சுட்டு, மன்னிப்பு கேட்கிறாயே. உனக்கு ஆயுள் தண்டனைதான் சரியான தண்டனை. அவளை எதுக்குப் போட்டோ எடுத்தே?”

”பின்னால் அவளை பயமுறுத்தி பணம் பறிக்கலாமென்றுதான்.”

“நீ பண்ணியது மன்னிக்க முடியாத கிரிமினல் குற்றம். அதுவும் கற்பழிப்புக் கேஸ். கோர்ட் உனக்குத் தக்க தண்டனைத் தரும் .” என்றாள் தேன்மொழி.

”சாமா போலீசால் தேடப்படும் குற்றவாளி” என்ற அறிவித்த கலைவாணி தொடர்ந்து, ”இவன் யார் தெரியுமா? கோயம்பத்தூரில் ஒரு பணக்காரப் பெண்ணைக் கல்யாணம் செஞ்சுண்டு இரண்டு மாசத்திலே பணம் நகைகளை ஏமாத்தி வாங்கிட்டு ஊரை விட்டு ஓடிப்போன கேசவன். தன் பேரைச் சாமான்னு மாத்தி வைச்சுண்டு இந்த ஊரிலே சமையல்காரன் வேஷத்திலே தலைமறைவா இருக்கான் ” என்றாள்.

சாமாவை ஜெயிலில் போட்டு, பாஸ்கரை விடுதலைச் செய்தாள் தேன்மொழி…

சாமா செய்தத் தில்லுமுல்லை பாஸ்கரிடம் கூறி, “நீங்க நிரபராதி. உங்க சமையல்காரன் குற்றத்தை ஒப்புக் கொண்டு விட்டான்.. நீங்க போகலாம்.” என்றாள்.

அப்போது சொல்லி வைத்தாற்போல் லதா, சிவகாமி, சுதா, அட்வகேட் ஆராவமுதம் எல்லாரும் போலீஸ் ஸ்டேசனுக்குள் நுழைந்தனர்..

அட்வகேட் ஆராவமுதம், ”நான் பாஸ்கரை ஜாமினில் வெளியே எடுக்க வந்திருக்கேன்” என்றார்.

”நீங்கள் ரொம்ப லேட்டா வந்திருக்கீங்க. பாஸ்கரை விடுதலை செய்துவிட்டோம் சமையல்காரன் சாமா தான் குற்றவாளி”, என்றாள் தேன்மொழி.

எல்லாருக்கும் திகைப்பாக இருந்தது.

”சாமா இப்படி என்னை மாட்டி விடுவான் என்று நான் நினைக்கவேயில்லை. அவனை நம்பினேன். படுபாவி நல்லவன் போல் நடிச்சு என்னை ஏமாத்திட்டானே.” என்றான் பாஸ்கர்.

ஆராவமுதம் போலீஸ் ஸ்டேஷனில்,”சாமாவுக்கு எத்தனை ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும்” என்பதைப் பற்றித் தேன்மொழியிடம் பேசிக் கொண்டிருந்தார். .

மற்றவர்கள் அனைவரும் வெளியே வந்து போலீஸ் ஸ்டேசனுக்குப் பக்கத்தில் இருந்த அரச மரத்தடிக்கு வந்தார்கள். சுதா நடைப்பிணம் போல் நடந்து வந்தாள். உள்ளத்தை வருத்தும் வேதனையால் கேவி கேவி அழுதாள்..

பாஸ்கர் சுதாவைப் பரிவுடன் நோக்கினான்.

சிவகாமி பாஸ்கரை நோக்கி ”உன் மேலே இருந்த பழிப் போய் விட்டது. கறை படிந்த இவளை யார் கல்யாணம் செய்து கொள்வார்கள்?. ஏற்கனவே நிச்சயம் ஆகியிருக்கும் பையன் இவளைக் கல்யாணம் செய்ய மாட்டேன்னு சொல்லி விட்டான். இவளுடைய வாழ்க்கையே பாழாகி விட்டதே. என் பெண்ணுக்கு ஒரு வழி சொல்” என்று கோபத்துடன் கத்தினாள்..

அவன் தொண்டையைச் செருமிக் கொண்டு, “கோபப்படாதீங்க அம்மா. உங்க கவலை எனக்குப் புரியுது. என்னுடைய சமையல்காரன் செய்த தவறுக்கு நான் மன்னிப்புக் கேட்கிறேன். அவனை நல்லவன் என்று நினைத்து வேலைக்கு வைத்தேன். என் பேரைக் கெடுத்துட்டான். அவன் செய்த குற்றத்துக்கு நான் தார்மீகப் பொறுப்பு எடுத்துக் கொள்கிறேன். சுதாவின் மேல் தப்பிதம் இல்லை. என்னால்தான் அவளுக்குக் களங்கம் ஏற்பட்டது. அவளுக்கு ஏற்பட்ட இழப்புக்கு ஈடு செய்ய முடியாது. அதுக்குப் பிராயச்சித்தமா நான் சுதாவுக்கு வாழ்வு கொடுக்கிறேன். அவள் களங்கத்தைப் போக்க என்னால் செய்ய முடிந்தது அது ஒன்று தான் என்று கூறியவாறு அவள் இருந்த பக்கம் திரும்பி, “என்னை மணக்க உனக்குச் சம்மதம்தானே?” என்று கேட்டான்.

அப்பாடா !, தன் பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைத்தது என்னும் திருப்தியுடன் சிவகாமி தன் மகளை நோக்கினாள்.

சுதா, தன் மனசுக்குள், இவன் என்ன ரொம்ப நல்லவனா இருக்கானே. இவன் தவறே செய்யலை. ஆனால் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறான். இந்தக் காலத்தில் இப்படி ஒரு மனுஷனா ! என்று நம்பமுடியாமல் . வியப்புடன் அவனை நோக்கினாள்.

கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் ஒருவனுக்குச் சிறு மரக்கட்டை கிடைத்த மனோநிலையிலிருந்த சுதா, அவனை நோக்கி, உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு, ஆனால் நான் …..” என்று சொல்லும்போது பாஸ்கர் குறுக்கிட்டு,

”களங்கம் என்பது நாம் பார்க்கும் பார்வையில் இருக்கிறது. நான் உன்னை ஏற்றுக் கொள்கிறேன். எல்லாம் நேராகிவிடும்.” என்றான்

“ஒருவேளை அவள் கர்ப்பமாயிட்டா…” என்று இழுத்தாள் லதா.

”ஒரு தடவை இணைந்திருந்தாலே கர்ப்பம் ஆகிவிடுமென்று எண்ணுவது அபத்தம்.. கடவுளின் விருப்பம். என்ன என்பது யாருக்கும் தெரியாது. அப்படி ஒருக்கால் கர்ப்பம் உண்டாகி விட்டால் கலைத்து விடலாம்” என்றான் பாஸ்கர்.

கண்களில் நன்றி சுரக்கச் சுதாவின் அம்மா அவனைப் பார்த்துத் தலை மேல் இரு கைகூப்பி வணங்கினாள்.. ”ரொம்ப நன்றியப்பா” என்றாள் தழுதழுத்த குரலில்.

”நான் ஒரு சாதாரண மனிதன். என்னைத் தெய்வமாக்கி விடாதீங்க. சுதா. உன்னிடமிருந்து இதுவரை சம்மதம் வரலை. என்னை மன்னித்து ஏற்றுக் கொள்வாயா ” என்று கேட்டான் பாஸ்கர் .

”மன்னித்தோம்” என்றாள் சுதா வெட்கத்துடன் சிரித்துக் கொண்டே

அங்கிருந்த அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி பொங்கியது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *