கச்சான் ஆச்சி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 3, 2021
பார்வையிட்டோர்: 4,670 
 

கனடாவில் இருந்துவரும் MI 316 போயிங் 777 விமானம் இன்னும் ஐந்து நிமிடங்களில் செக்சன் 3, ரண்வே 12B யில் தரை யிறங்கவுள்ளது.” மும்மொழிகளிலும் வசீகரமான உச்சரிப்புக் கிடையில் அந்த விமான நிலையம் தன் பரபரப்பான செயற்பாட்டை ஊழியர் தலையில் சுமத்தி அவர்களை ரோபோக்கள் ஆக்கியது.

ஈழநாட்டுக்கு இருபது வருஷத்துக்குப் பின் வரும் சுரேஸ் மண்ணில் காலடிபடாமலே கட்டுநாயக்காவைக் கடந்து கரவன் வானில் கல்கிசை நோக்கி போய்க்கொண்டிருந்தான். தோளில் சாய்ந்த நிமியின் சூடான சுவாசக்காற்று அவன் நெஞ்சில் சுகம் கூட்ட நிமியின் மடியில் துஷான் தூங்கிக் கொண்டிருந்தான். அருகில் ஜனா வானின் கண்ணாடி வெளியால் இலங்கை அழகையும், அழுக்கையும் இரசித்தும், வியந்தும் ஆச்சரியத்தில் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்க சுரேஸின் அன்பான கட்டளை அவனுக்குக் கடிவாளம் போட்டது.

கேயாபுல்….ஜனா….துள்ளக்கூடாது. துஷான் தூங்கிறான். டிஎப்ரப் பண்ணக் கூடாது, பிளீஸ்… டாட்…ஐ லைக்…ரூ…சி பிளீஸ்….டாட்…பிளீஸ்…

ஜனாவின் இந்த இரங்கல் வார்த்தைகள் சுரேஸை சுதுமலைக் கிராமத்திற்குள் கொண்டு வந்தது. குழந்தைத்தனமான சிறு விருப்பங்கள், ஆசைகள், விளையாட்டுக்களைக் கூட வெளிக்காட்ட முடியாத இறுக்கமான குடும்ப வளர்ப்பும் கல்வியை முன்னிலைப் படுத்தும் கலாச்சார அமைப்பும் யாழ்ப்பாணத்திற்குரிய கௌரவமும் அவனுக்கு அப்போது கசந்ததில் வியப்பில்லை. ஆசைகளை விருப்பங்களை இலட்சியங்களை நிறைவேற்ற முடியாத மனித வாழ்வில் பிரயோசனமில்லை. ஆயினும் தடம் புரளாத தண்டவாளத்து தமிழ் கலாச்சார வாழ்வு தரணியில் தம்மைத் தலை நிமிர்த்தும் என்பதைப் பலர் நினைத்துப் பார்ப்பதில்லை. சாரதியின் சடுதியான பிறேக்கில் சுரேஸின் சிந்தை சிதற அவன் கண்கள் ‘கல்கிசை வரவேற்கின்றது’ என்ற போட்டில் நிலைகுத்தின.

“தம்பி அந்த பொலித்தீனை வடிவா இளுத்து விடு ராசா…”

பூரணம் ஆச்சியின் தழுதழுத்த குரல் மழையின் வரவைக் கட்டியம் கூறியது. குந்தியிருக்கும் பூரணத்தின் முன் வட்டச் சுளகில் சுடசுட கச்சானும், சோளனும் குவிந்து கிடக்க அருகில் போத்தலில் மஞ்சளக்கடலையும் பல்லிமுட்டை இனிப்பும், புல்டோ ரொபியும், சூப்புத்தடியும், வானவில்லின் வர்ணங்கள் தோய்த்து வடிவாய் அடுக்கிக் கிடந்தன. அவையருகில் சுவையான பீடாவும், வெற்றிலைச் சுருள்களும், கோடாச்சுருட்டும், 1 ரூபா, 5 ரூபா கச்சான் அளக்கும் குட்டன்களும் பசைபூசி ஒட்டிய கடதாசிப் பைகளும் வாடிக்கையாளர் வரவைப் பார்த்துக் கிடக்க பூரணம் ஆச்சி கதுமலையைச் சுற்றி எட்டுப்பட்டிக் கிராமமும் அறிந்த பெரும் தரகு (புறோக்கர்) மனுசி.

எடுத்த காரியத்தை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல கச்சிதமாய் சாதிக்கும் தன்மை, அவளின் வெற்றிலை சப்பும் வாயிலிருந்து வரும் வார்த்தை ஜாலத்தில் இரு சாராரையும் சம்மதிக்க வைத்து சம்பந்தப்பட்ட விடயத்தை ஒப்பேற்றிக் கொடுத்து அதில் வரும் வருமானம் (புறோக்கர் பீஸ்) அவளுக்குப் போனஸ்தான். மற்றப்படி அவள் கச்சான் கடையே அவள் குடும்பத்தைக் கட்டியிழுக்கும். சுடச் சுடக் கச்சான் விற்பது போல் அவள் விடயங்களையும் இழுத்தடிக்காமல் உடனுக்குடன் ஒப்பேற்றும் தன்மையால் எட்டுப்பட்டிக் கிராமத்திற்கும் அவள் முடிசூடா ராணியாக விளங்கினாள்.

நாலு பூவரசம் தடியும், இழுத்துக் கட்டிய தளப்பாளும் நீள் வாங்கும் கொண்ட அவள் கச்சான் கடைக்கு நிழல் கொடுப்பது என்னவோ அம்பாளின் தல விருட்சமான அரச மரம்தான்.

அதிகாலை 5.30 மணிக்கே கோவிலுக்குச் சென்று கூட்டிப்பெருக்கி பூச்சாத்தி சூடம் ஏற்றி தன் பாணியில் அம்பாளுடன் கதைபேசி அதன்பின் கடை பரப்புவதே அவளின் நெடுநாள் செயற்பாடு. அம்பாள் குலதெய்வம் என்பதனால் குறுக்கு விசாரணை செய்வது போல அவளுக்கு ஓர் உரிமை. அதேபோல் கஷ்டம் எண்டாலும் கொட்டித்தீர்க்க என்ர அம்பாள் என்ற தோழி உணர்வு.

ஆச்சி! நகைக்கடைக்காரன் என்னவாம், மடிவானோ!! இண்டைக்கி மதியமில்லே வரச் சொன்னனான்? என சொல்லண! நீ கூட மடக்கிறத்துக்கு யோசிக்கிறா போல.

அட…அட…இல்லராசா..அதுகள் அக்கம்பக்கம் நல்ல சனமோ எண்டும், போக்குவரத்து வசதியோ எண்டும்தான் யோசிக்குதுகள். மற்றப்படி விலை எல்லாம் சரி. நான் கூடவும் சொல்லேல்ல குறையவும் சொல்லேல்ல. ரண்டுபரப்புக் காணி நாச்சார் கல்வீடு தனிக்கிணறு, பன்னெண்டு முழப்பாதை, இதுக்கு அதுகள் முப்பத்தைஞ்சு தரச் சம்மதம். அம்மாளாச்சி இண்டைக்கி எல்லாம் சரிவரும் சொல்லிட்டுது. நீ போய் மதியம்வா. அட்வான்சை நான் வாங்கித்தாறன். பிறகு மூன்றுமாதத்துக்குள்ள அதுகள் முழுக்கக் குடுத்து முடிக்குங்கள். என்ரமூத்தவன் சுரேஸும் இண்டைக்கு பொழுது சாய வந்திடுவான். மதியம் எப்படியும் முடிச்சுக் குடுப்பன். சரி…சரி…போட்டுவா….என்ர…யாவாரத்த குழப்பாத…!!!

அம்மா! உனக்கேணணை உந்தவேலை. நாங்கள் மாதம் மாதம் மூண்டு பெடியளும் காசு அனுப்புவம்தானே. உந்த கச்சான் விக்கிற யாவாரத்த விடு!

அட…போடா….எனக்கு புத்திசொல்லவோ இஞ்ச இப்ப வந்தனி…

என்னணை….நாங்கள் சொல்லுறதில…ஆசைப்படுறதில என்ன தப்பு.

ஓமடா….போ…போ….நீ இப்ப இப்படி ஆசைப்படுறா அப்ப என்ன ஆசைப்பட்டனி தெரியுமே??

என்ர பல்லிமுட்டை இனிப்பு வேண்டாம் சொக்கிலட்டு வேணுமெண்டா, திருவிழாவுக்குள்ள ஒவ்வொருநாளும் ஐஸ்கிறீமும் வேணுமிண்டா, நல்ல செருப்பு வேணும் எண்டா, பிறகு கொஞ்சம் வளர றலிசைக்கிள்தான் வேணும் எண்டா, பிறகு ரூர் போக காசுதா எண்டா, (B)பாங்கு உத்தியோகம் எடுக்க அம்பதாயிரம் குடுக்க வேணுமெண்டு அதையும் துலைச்சா, பிறகு நான்தானே 83டில வெளியால அனுப்பின்னான். அடே……… அடே எல்லாம் இந்தக் கச்சான் பிளைப்பாலதான் கிடைச்சது. அப்ப உனக்கு எல்லாம் வேணும். இப்ப நான் கச்சான் விக்கக்கூடாதோ!!!

சரியணை…சும்மா கத்தாத…வசதியிருக்கேக்க ஏண்ணை கஷ்டப்படுவான்.

மகனின் மயக்கும் ஆதங்க வார்த்தைகள் எல்லாம் அவளின் பெரிய தொங்கும் தோட்டுத் துவாரத்தோடு சரி, காதில் ஏறவில்லை.

அப்பாவும், ஆச்சியும் பேசிக்கொள்வதை என்னவோ அமெரிக்கன் W.W.W.F மல்யுத்தம் போல துஷானும், ஜனாவும் வினோதமாக ரசித்தார்கள். அப்பா இவ்வளவு சத்தமாகவும், சந்தோஷமாகவும் கதைத்ததை அவர்கள் இன்றுதான் கண்டார்கள். எவ்வளவு நல்ல விலேஜ், கொஞ்சம் டஸ்ட்தான். ஆனாலும் நல்லம். அங்க ஸ்கூல், ரியூசன், கேம் எண்டு……….!! இஞ்ச பிறீயா போகலாம்…….. வரலாம்….. விளையாடலாம். மம்மி நாங்க ஆச்சியோடதான் நைட் படுப்பம். சின்னச்சிறிசுகளின் ஆசையை பூரணத்தின் முகத்தலைப்பு நிறைவேற்றியது.

நகைக்கடைக்காரன் கச்சான் ஆச்சியின் வாதப்பிரதி வாதங்களில் பட்டுத்தெளிந்து 35க்குச் சரிஎண்டான். அட்வான்ஸ் கைமாறியது. அத்தோடு தரகுப் பணமும் இரண்டுசாராரும் ஆச்சிக்குக் கொடுத்தார்கள்.

பூரணம் ஆச்சியின் கணவர் 72ல போனபிறகுதான் ஆச்சி புறோக்கர் வேலைக்கு இறங்கி இப்ப எட்டுப்பட்டிக் கிராமத்தில எந்த மூலை முடுக்கிலும் என்ன நடந்தாலும் ஆச்சிக்குத் தெரியும்.

அடே…தம்பி சுரேஸு…நித்திர வராட்டி உந்த ஏ.சி.ய தட்டிவிடு…

ஆச்சியின் உழைப்பின் சேமிப்பின் தேற்றம் அவள் வீட்டில் பிரகாசித்தது.

பளிங்குக்கற்கள் பளபளக்க, முதிரைக் கதவுகள் முகப்பை அலங்கரிக்க, ஓட்டுநிரையின் அழகும், உயர்ந்த தண்ணீர்த் தொட்டியும், ஒளிரும் மின்விளக்குகளுமாக அது ஓர் வசந்த மாளிகைதான். மாளிகையில் அவள் எப்போதும் தனிக்கட்டைதான்.

ஆனால் இப்போதுதான் வசந்தம் வீசுகிறது.

இண்டைக்கு தயாளனும் இத்தாலியால வந்திடுவான். அவன்ர மனுசி மயிலிட்டி தானே. எப்ப அந்தப் பக்கம் சனங்களை விடப்போறாங்களோ தெரியாது. பேத்தி சுஸ்மிதாவை படத்தில் பாத்ததுதான். இருந்தாலும் மழலை மொழியையும், குறும்பையும், குதூகலத்தையும் நேரில் பார்க்க ஆச்சிக்கு ஆசைதான்.

சட்டாம்பியார், ஏன் காணும் கச்சான் ஆச்சிய இந்தப் பக்கம் காணேல்ல? இண்டைக்கு ஆடிச் செவ்வாய். நல்ல சனம்! மனுசிக்கும் நல்ல யாவாரம் நடக்கும். சனங்களும் செருப்பு வைக்க இடமில்லாமல்

அந்தரப்படுகுதுகள்.

கந்தப்பு உனக்கு விசயம் தெரியாது போல!! ஆச்சீன்ர பெட்டைக்கு ஆவணியில கலியாணமாம். அதுதான் ஆச்சீன்ர மக்களெல்லாம் வெளியால இருந்து வந்திட்டாங்கள், அதுதான் மனுசி வரேல்ல.

மூன்றாவது மகன் சேயோனும், மச்சாளும், கலியாணப் பெம்பிளை தாராவும் யு.கே. யால கொழும்பு வந்திட்டினமாம், இரவு பலூன்பஸ்ஸில் புக் பண்ணியாச்சாம். விடிய வந்திடுவினம் என்டு

இப்பதான் போன் பண்ணினவை.

மருமகள் சுமதி சொல்ல பூரணம் ஆச்சியின் உள்ளப் பூரிப்பில் பொக்குவாய் மலர்ந்தது. ஆம். ஆச்சியின் கடைக்குட்டிதான் தாரா மூன்று பெடியளுக்கும் ஆச்சிக்கும் அவள்தான் செல்லப் பிள்ளை. 95இலதான் யு.கே சின்ணண்னேற்ற போனவள். இப்பதான் வாறாள். அவளின் கலியாணத்திற்குத்தான் சொந்தங்கள் பந்தங்கள் எல்லாம் சுதுமலைக்குப் படையெடுக்குதுகள்.

மகன் வந்ததும் வராததுமாக கண்டறியாத உந்த யாவாரத்தை விடண. என்னோட லண்டன் வாண. நான் உன்னைப் பாப்பன் தானே. உனக்கேணணை உந்த வயசில உந்த வேலை.

அடே ராசா! நீ சொல்லுறா! நல்லது. சந்தோஷமடா. ஆனாலொண்டு கட்டேல போறவரை நான் உழைப்பன். கொப்பர் உங்களை ஒப்படச்சிட்டு கெதியில் போட்டார். அந்தப் பொறுப்பிலயே கிடந்து பழகியாச்சு. உந்த யாவாரம் தான்ரா என்ர ஜீவன், உயிர் எல்லாம். வெற்றிலை பாக்கை குட்டானிலிட்டு இடித்தபடி அவள் கூறிய பதிலுக்கு மறுபேச்சுப் பேச முடியாமல் உணர்ச்சியின் விளிம்பில் சேயோன்.

அடே ராசா! விவசாயி, கொல்லர், சலவைத் தொழிலாளி, சிகை அலங்கரிப்பாளர், புரோஹிதர், தச்சர், பத்தர், மேசன் எண்டு இவயின்ர பிள்ளைகள் எல்லாம் அந்தந்தத் தொழில்களை இழிவா நினைச்சால் பெத்து வளத்ததுகளின்ர மனம் எவ்வளவு கவலைப் படும் தெரியுமே.

அடே! செய்யும் தொழிலே தெய்வமடா. உன்ர உணர்ச்சி யெல்லாம் லண்டன் குளிர்ல உறைஞ்சு போச்சுப் போல? இது ஈழமடா. இஞ்ச இப்படித்தான் பிழைப்பு,

வெற்றிலை பாக்கை வாயிலிட்டு மென்று கொண்டு அவளின் கற்றக் (Cataract) பார்வை சேயோனையும் மருமகள் கோசலாவை யும் மொய்க்க அவள் மனதில் எண்ணங்கள் எகிறிக் குதித்தன.

ச்ச்சா…! அதுகளும் கலியாணம் முடிச்சு மூண்டு வரியமாச்சு. கோசலான்ர வயித்தில ஒரு பூச்சி புழுவையும் காணேல்ல. நல்லதம்பிச் சாத்திரி வசியப் பொருத்தம், சந்தானப் பலன் எல்லாம் திறமெண்டு சொன்னவர். அம்மாளாச்சிதான் சோதிக்கிறாள் போல. அவளுக்கு ஒரு 1008 சங்காபிஷேகமும், சந்தனக் காப்பும், மடையும் போடவேணும்.

அடே! ராசா! நீங்களெல்லோரும் எல்லா இடமும் சுத்திப்பாக்க ரவீன்ர வானுக்குச் சொல்லியிருக்கிறன். நான் யாவாரத்தையும் பாத்து கலியாண ஆயத்தங்களையும் செய்வன். பிள்ளையள் கவனம். சின்னன் சிறிசுகள். இஞ்சத்த வெய்யில் ஒத்துவருமோ தெரியாது…என்று கூறியவள் தன் வியாபார ஆயத்தத்துடன் நடையைக் கட்டினாள். அவளின் நடைக்கு முன் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன.

டொக்ரரம்மா நல்ல மாருதி பாக்கச் சொன்னவா, பெரியதம்பி வயல் குத்தகை எடுத்துத் தர சொன்னவர், மோகன் மாஸ்ரர் தன்ர லைட் இஞ்சினக் குடுத்துத்தரச் சொன்னவர், குருக்களையாவும் நல்ல பசுமாடு நிண்டா சொல்லச் சொன்னவர், ராபீக்குக்கும் பழைய இரும்புச்சாமான் தீர்க்க வேணும்….பி.ஏ. வைத்து கணனியில் ஒழுங்குப்படுத்த வேண்டிய அவள் புரேகிராம் எல்லாம் அவளின்

சொந்தபந்தங்களோடு பூரணமாச்சியின் வாடிக்கையாளரெண்டு தாராவின் கல்யாணம் ஊர் வியக்கும்படி நடந்து முடிந்தது. குடும்பங் களெல்லாம் தங்கள் கூட்டுக்குத் திரும்ப இப்போ பூரணம் ஆச்சி மட்டும் தனிமையில். வியாபாரம், தரகு வேலை எண்டு அவளின் வாழ்க்கை கிராமத்தோடு கலந்து லயிக்க அம்மாளாச்சியின் திருவிழாவும் வந்தது. ஆச்சியின் கடைமுன்தான் குடும்பப் புதினம், ஊர்ப் புதினம், உலகத்துப் புதினம் எல்லாம் பேசப்படும்.

திருவிழா என்றால் அவளுக்கும் வேலை கூடத்தான். ஒட்டுசுட்டானிலிருந்து வரும் கச்சானைத் துப்பரவு செய்து வறுத்து வியாபாரம் செய்ய வேணும். பாதிவேளை அடுப்போடுதான். அதனால் அவள் காச்சல் கண்டு பத்துநாள் இருக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி எண்டு மருந்துக்கும் வேலையில்லாமல் இனி இந்த உலகில் உனக்கு வேலையில்லை எண்டு அவளை அம்மாளாச்சி தன்னோடு கூப்பிட்டாள்.

அவளின் இழப்பை ஊர் ஏற்கவில்லையோ என்னவோ, சிறுகாற்று மழை எனத் துவங்கி மூன்று நாள் பெருமழையோடு நிஷாப் புயலும் வீசி ஓய்ந்தது. அவள் மடிந்த சோகமோ, உறவை இழந்த உணர்வோ 200 வருஷ பழமையான அம்பாளின் தல விருட்சமும் பூமியின் மடியில் சாய்ந்தது. ஊர் மக்கள் எல்லோருக்குமே அதிர்ச்சி.

பெண் விடுதலை, சம உரிமை எனப் பேசியவர்கள் மத்தியில் அவள் சர்வ சாதாரணமாக ஆளுமையுள்ள ஓர் ஆச்சியாக வாழ்ந்து காட்டியவள்.

தலைகீழ் தோரணமும், சந்தி எங்கும் வாழை மரமும், வீடுகள் கடைகள் எங்கும் கறுப்புக் கொடிகள் என்று ஊர் சோகத்தில் மூழ்க, துஷானும், ஜனாவும், சுஸ்மிதாவும், பூரணம் ஆச்சியின் நேர்த்தியால் கிடைத்த சேயோனின் 3 வயதுக் குழந்தை ஆத்மஜனும் தீப்பந்தம் பிடிக்க பூரணம் ஆச்சியின் இறுதிப் பயணம் ஆரம்பமானது.

இம்முறை திருவிழாவில் பூரணம் ஆச்சியின் கடையிருந்த இடம் வெறுமையாகவே இருக்க எதிரே புதிய கடையில் பக்கட்டில் பொதிசெய்து இறக்குமதி செய்யப்பட்ட கச்சான் இனிவரும் சந்ததிக்காக! சந்ததிகள் தொடர்கின்றதுதான். ஆயினும் இனிவரும் தலைமுறையின் கௌரவச் சின்னமாக சில்லி மக்ஸ்ட் பியூநட் உறைகள் கோவில் வீதியெங்கும் வீசிக் கிடக்கும்.

– என் மாதாந்திர ஓய்வூதியம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2012, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *