மனோதத்துவம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 24, 2014
பார்வையிட்டோர்: 10,546 
 
 

(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு மாதமாக அவர் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டு, ‘சரி டாக்டர் அப்பிடியே செய்யறேன். எனக்கு என் மகன் குணமானா போதும்’னு சொல்லிக் கொண்டே, அதே போல அவர் சொல்வதையெல்லாம் செய்துவிட்டு அதன் விளைவுகள் என்ன என்று ஒவ்வொரு வாரமும் மிகச் சரியாகக் குறிப்பிட்ட நேரத்துக்கு வந்து எதிரே உட்கார்ந்து மிகப் பவ்வியமாக சரி டாக்டர், சரி டாக்டர் என்று பொறுமையாக கேட்டுக்கொள்ளும் பெரியவர் ராமநாதனைப் பார்த்து மனோதத்துவ நிபுணர் சரபேஸ்வரன் நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க. உங்க மகன் குமரேசனைக் குணப்படுத்த வேண்டியது என் பொறுப்பு. என் வாழ்க்கையிலே இவ்வளவு பொறுப்பா இருக்கற அப்பாவை இப்போதான் பாக்கறேன். நீங்க செய்யிற ஒவ்வொரு செயலுக்கும் நிச்சயமா நல்ல விளைவுகள் இருக்கும். கூடிய சீக்கிறம் உங்க மகன் குமரேசன் குணமாயிடுவார். உங்களுக்கு இருக்கற சின்சியாரிட்டி உங்க மகன் குணமாகணும்னு இருக்கற தீவிரம் நீங்க காட்ற உண்மையான ஈடுபாடு இதெல்லாம் பாக்கும் போது எனக்கு ஒரு பக்கம் ரொம்ப மகிழ்ச்சியாவும் ஆச்சரியமாவும் இருக்கு. இந்த அளவுக்கு புரிஞ்சிகிட்டு நடந்துக்கறவங்க ரொம்பக் குறைவு அதுனாலே, இன்னும் ஒரே வாரம் நான் சொல்லிக் குடுத்த மாதிரியே உங்க வீட்டுலே இருக்கறவங்க எல்லாரும் நடந்துக்கணும். நிச்சயமா உங்க மகன் குமரேசன் ஒரு நார்மலான, மனுஷனா வாழ ஆரம்பிச்சிடுவாரு. 

அந்தப் பொறுப்பை நீங்க எடுத்துக்கணும் என்றார் மிருதுவான குரலில் சார் நீங்க என்ன சொல்றீங்களோ அதே மாதிரி நாங்க நடந்துக்கறோம் எங்க பையன் குணமான போதும் என்றார் ராமநாதன்.

இதோ பாருங்க நாங்க பலவிதமான மனுஷங்களோட மனசை ஆராயறோம். ஒவ்வொரு முறை ஒவ்வொரு மனதை ஆராய்ச்சி செய்யும் போதும் ரொம்ப ஆச்சரியமா இருக்கு. இறைவனோட சக்தி ரொம்பப் பெரிசுங்கிற எண்ணம் வலுப்பட்டுக்கிட்டே வருது. 

மனுஷனோட மனம் ரொம்ப விசித்திரமானது. இந்த உலகத்திலே பொறக்கற ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமான மன நிலையில் இருக்கு. வளர வளர ஒவ்வொரு குழந்தையும் பலவிதமான சிக்கல்களுக்கு உள்ளாகி, அதிலேருந்து நாம் குடுக்கற அறிவுரைகளினாலோ, இல்லே அந்தக் குழந்தைக்கு அமையற நட்பு வட்டத்தோட செயல் பாட்டினாலோ, அதுக்கு ஏத்தா மாதிரி மாறிகிட்டே வருது, பெத்தவங்களாலேயே பல நேரத்திலே இந்த மாற்றங்களைத் துல்லியமா கணிக்க முடியாது. 

அப்பிடி இருக்கும் போது உங்க மகனை ஒரு மாசமாதான் நான் பாக்கறேன், ஆனா அவரோட நடவடிக்கைகளை நான் கவனிச்சுப் பாக்கும்போது, நிச்சயமா ஒண்ணு புரியுது. உங்க மகனுக்கு ரொம்ப தன்னிரக்கம் அதிகம். சுய பச்சாதாபம் மாதிரி கொடிய நோய் வேற எதுவுமே கிடையாது. அது மட்டுமில்லே…. அவர் மனசுலே எப்பவும் எல்லாரும் அவரைக் குறை சொல்றாங்க, அவர் சொல்றதை யாரும் ஏத்துக்கறதில்லே, அப்பிடீங்கற உணர்வு ஆழமா பதிஞ்சிருக்கு. அதையும் தவிர தன்னாலே யாரும் பாதிக்கப் படக் கூடாது. 

அடுத்தவங்க யாரையும் கடுமையாப் பேசக் கூடாது அப்பிடீன்னு நினைக்கிறாரு. அதுனாலே உங்க மேலே எந்த தவறும் இல்லேன்னாலும், அவர் செய்கையாலே நீங்க யாராவது பாதிக்கப்பட்டுட்டீங்கன்னு அவர் நினைச்சாலே அவருக்கு அவர் மேலேயே கோவம் வருது. அந்த சுய இரக்கத்தாலே அவர் என்ன செய்யிறோம்னே தெரியாம உங்ககிட்ட கடுமையா நடந்துக்கிறாரு, அதுனாலே எப்பவுமே அவர் என்ன சொல்றாரோ அதை மறுக்காம சரின்னு சொல்லுங்க முதல்லே. 

பிறகு அவருக்கு புரியறாமாதிரி எடுத்து சொல்லாம். எடுத்த உடனே அது அப்பிடி இல்லே, நான் சொல்றதைக் கேளு, பெரியவங்க சொன்னாக் கேட்டுக்கணும். உனக்கு அனுபவம் போறாது இது மாதிரியான சொற்களை இனிமே அவர்கிட்ட யாரும் சொல்லக் கூடாது புரியுதா? என்றார். 

ராமநாதன் சரி டாக்டர் அப்பிடியே செய்யறோம் என்றார். அதே மாதிரி நான் குடுக்கற மாத்திரையெல்லாம் கவனமா, வேளை தப்பாம அவருக்குக் குடுங்க. குறிப்பா அவர் தூங்கும் போது அவரை எந்தக் காரணத்தைக் கொண்டும் எழுப்பாதீங்க. 

அவரா எப்போ எழுந்துக்கறாரோ அப்போ எழுந்துக்கட்டும். அவருக்கு பசிக்குமே அப்பிடீன்னு கூட நீங்க கவலைப்பட வேணாம். நான் குடுத்திருக்கிற மாத்திரை அவரைக் கொஞ்சம் கொஞ்சமா குணப்படுத்தும். கவலைப்படாதீங்க” என்றார் சரபேஸ்வரன். ராமநாதன் சரி சார் மறுபடியும் நான் எப்போ இவனை அழைச்சுகிட்டு வரணும் என்றார். சரியா இன்னீலேருந்து ஒரு வாரம் நான் சொல்லிக் குடுத்த மாதிரியே நடந்துக்கோங்க. அடுத்த புதன் கிழமை நீங்க இவரை அழைச்சுகிட்டு வாங்க என்றார் சரபேஸ்வரன். 

அடுத்த புதன்கிழமை, மனோதத்துவ நிபுணர் சரபேஸ்வரன் தன் எதிரே உட்கார்ந்திருந்த குமரேசனைப் பார்த்தார். 

அவருக்கு தன்னுடைய மனோதத்துவ மருத்துவத்தின் மீது மரியாதை அதிகமாயிற்று. “மிஸ்டர் குமரேசன் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு நீங்க எதுக்கும் இனிமே கவலைப்படாதீங்க. எப்போ வேணும்னாலும் நீங்க என்னை வந்து பாக்கலாம் என்றார் மகிழ்ச்சியாக. 

ரொம்ப நன்றி டாக்டர். ஆனா, கவலைப்படாம இருக்க முடியலை. டாக்டர் சார், எங்க அப்பா இவ்வளவு நாளா இப்பிடி இல்லே. கடந்த ஒரு வாரமாதான் இப்பிடி நடந்துக்கிறாரு எதுக்கெடுத்தாலும் கத்தறாரு… அதிர்ந்து கூட பேசமாட்டாரு எங்க அப்பா. எனக்கு ரொம்பக் கவலையா இருக்கு என்றான் குமரேசன்! 

மனோ தத்துவ நிபுணர் சரபேஸ்வரன், குமரேசனிடம் சொல்லிக் கொண்டிருந்தார். 

நீங்க செய்யிற ஒவ்வொரு செயலுக்கும் நிச்சயமா நல்ல விளைவுகள் இருக்கும். கூடிய சீக்கிரம் உங்க அப்பா மிஸ்டர் ராமநாதன் சீக்கிரமே குணமாயிடுவார். உங்களுக்கு இருக்கற சின்சியாரிட்டி உங்க அப்பா குணமாகணும்னு இருக்கற தீவிரம், நீங்க காட்ற உண்மையான ஈடுபாடு இதெல்லாம் பாக்கும் போது எனக்கு ஒரு பக்கம் ரொம்ப மகிழ்ச்சியாவும் ஆச்சரியமாவும் இருக்கு. இந்த அளவுக்குப் புரிஞ்சிகிட்டு நடந்துக்கறவங்க ரொம்பக் குறைவு. 

அதுனாலே, நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க, உங்க அப்பாவைக் குணப்படுத்தறது என் பொறுப்பு. உங்களுக்கு உங்க அப்பா மிஸ்டர் ராமநாதன் குணமாகணும்னு உண்மையிலேயே எண்ணம் இருந்தா நான் சொல்றா மாதிரியே உங்க வீட்டுலே இருக்கறவங்க எல்லாரும் நடக்கணும். அதைப் பொறுப்பை நீங்க எடுத்துக்கணும். முடியுமா?” என்றார் மிருதுவான குரலில்! 

சரி டாக்டர் என்றான் குமரேசன், பவ்வியமாக.

– வெற்றிச் சக்கரம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: அக்டோபர் 2012, தமிழ்க் கமலம் பதிப்பகம்.

Print Friendly, PDF & Email
முன்னுரை - வெற்றிச் சக்கரம் (சிறுகதைகள்), தமிழ்க் கமலம் பதிப்பகம். வாசகப் பெருமக்களே நான் ஒரு நடிகன், கவிஞன், எழுத்தாளன், ஆம் உங்கள் இல்லத்துக்கு உங்கள் அனுமதியோடு உலா வருகின்ற நக்க்ஷத்திரம், உங்கள் தொலைக் காட்சியில், உங்கள் கணிணியில், உங்கள் அனுமதியோடு உங்கள் இல்லத்துக்கு வரும் உங்கள் சகோதரன், தமிழ்த்தேனீ (Thamizh Thenee) அதுவும் உங்கள் மேல் அன்பும்,அக்கறையும்,பாசமும், நேசமும், கொண்ட உங்கள் சகோதரன் தமிழ்த்தேனீ. நான் ஒரு திரைப்பட நடிகன்,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *