மனைவிக்கு ஒரு கவிதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 25, 2023
பார்வையிட்டோர்: 2,937 
 
 

முத்து, தனது பிரியமான மனைவிக்காக ஒரு கவிதை எழுத ஆசைப்பட்டு…

அன்று காலையிலிருந்து மாலை வரை, பொழுது சாயும் வரை…

அவனுடைய மூளையை மட்டுமல்ல… நிறைய காகிதங்களையும் கசக்கி, கசக்கி எழுதிய கவிதைகள் எதுவும்…

அவன் மனதிற்கு திருப்தியாக வரவில்லை.

பக்கம் பக்கமா பேப்பர் வேஸ்ட் பண்ணி…. சோர்ந்து போனான்

அப்போது பார்த்து சன் மீயூசிக் சேனலில் ..

வெண்ணிலவே! வெண்ணிலவே!

விண்ணை தாண்டி வருவாயா.. என்று

அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் ஒளிபரப்பானது.

அவன் பிரிய மனைவியின் பெயரும் “வெண்ணிலா” என்பதால் அந்த பாடல் அவனுக்கு மிகவும் பிடிக்கும் =.
அவன் திருமணம் …பெற்றோர் பார்த்து நடத்தியது என்றாலும்….

அவள் அழகு மட்டுமல்ல…அவனை அனுசரித்து போகும் விதமும்…முத்துவுக்கு மிகவும் பிடித்து விட்டது.

அவ்வளவு எளிதில் யாரையும் பாராட்டாத, அவனுடைய அம்மாவும் கூட, அவளை பாராட்டிக்கொண்டே இருப்பதும்… ஆச்சர்யமான விஷயம்!.

அவளுடைய சமையல் ருசி… அதை விட சிறப்பு.! அதுவும் அவள் வைக்கும் புளிக்குழம்பு… அடடா செம..!

அப்படிப்பட்ட மனைவி…..அவளாகவே அவனிடம் வந்து,

“ஏங்க, என்னை பத்தி ஒரு கவிதை எழுத மாட்டிங்களா!?” என்று நேற்று கேட்க… முத்துவுக்கு காலையில் எழுந்தது முதலே … தலை கால் புரியவில்லை.

மனைவியே மெய்சிலிர்த்து பாராட்டும் வகையில் ஒரு கவிதை எழுத முடிவு செய்து…படாதபாடு பட்டுக் கொண்டிருந்தான்.

அவனுக்கு … சட்டென்று ஒரு யோசனை பளிச்சிட்டது..

உடனே மனதில் தோன்றிய சிந்தனையை செயல்படுத்தினான்.

அவனுக்கே அவன் மீது மிகவும் பெருமையாக இருந்தது.

‘இந்த யோசனை வராமல்…இவ்வளவு நேரம் வேஸ்ட் பண்ணிட்டமே?!’ என்று நினைத்துக்கொண்டே, ஒரு பேப்பர் எடுத்து எழுத தொடங்கினான்.

எழுதிய பின் அதை…ஒன்றுக்கு இரண்டு முறை படித்துப்பார்த்தான்.

‘இந்த கவிதை அவளுக்கு கண்டிப்பா பிடிக்கும்’ என்று நினைத்து சந்தோஷப்பட்டான்.

அன்று இரவு இருவரும் தனிமையில் இருக்கும் போது, அவன் கவிதையை, மெல்ல மனைவியிடம் கொடுத்தான்.

அவன் நான்காக மடித்து கொடுத்த காகிதத்தை, மனைவி வெண்ணிலா ஆர்வதோடு பிரித்துப் பார்த்தாள்.

அவள் முகத்தில் ஒரு அதிர்ச்சி தெரிந்தது.

அவன் கொடுத்த காகிதத்தில் கவிதை எதுவும் எழுதப்படவில்லை!?..

“வெண்ணிலா” என்று மட்டுமே எழுதியிருந்தது.!?.

அவள் குழப்பத்துடன் முத்துவை ஏறிட்டு பார்த்தாள்.

பதிலுக்கு முத்து ஒரு புன்சிரிப்புடன் பேசினான்.

“நீ உன்னைப்பற்றி கவிதை எழுத சொன்னாய்…
என்ன கவிதை எழுதுவது என்று யோசித்துப் பார்த்தேன்!

“நீயே ஒரு கவிதை…உன் பெயரே ஒரு கவிதை..
அதனால் தான் இப்படி “வெண்ணிலா ” என்று மட்டும் எழுதினேன்”

கவிஞர் வைரமுத்து போல, முத்து குரலை ஏற்றி இறக்கி பேசியதும்…

அவள் முகம் வெட்கத்தில் சிவந்து.. புன்னகை மலர்ந்தது.

அவள் முத்துவைப் பார்த்து சிரித்தாள்.

முத்துவுக்கோ…மனைவியின் மகிழ்ச்சியை கண்டு, மிகவும் சந்தோசமாக இருந்தது.

அப்போது சட்டென அறையில் டியூப் லைட் அணைந்து… இருட்டானது.

“கரண்ட் போயிடுச்சோ!? இன்வெர்டர் இருக்கே…என்னஆச்சு?!” என்று பதட்டமாக அவன் சொல்லி முடிக்கவும் ‘பளிச்’ என்று டியூப் லைட் எரிந்தது.

அறையில் மீண்டும் வெளிச்சம் வந்தது.

அவன் மனைவி வெண்ணிலாவை பார்த்தான்.

உடனே திக்கென்று அதிர்ந்தான்.

‘அங்கே அவன் மனைவி இல்லை!?’

அவன் அதிர்ச்சியோடு “வெண்ணிலா ” “வெண்ணிலா ” என்று கூப்பிட்டான்.

“எங்கே போனாள்!?…”

படுக்கையறையில்… சமையலறையில்… முற்றத்தில்…புழக்கடையில்..என வீட்டுக்கு உள்ளேயும், வெளியேயும்.. சுற்றி சுற்றி தேடினான்.

“வெண்ணிலா” என்று அவன் மீண்டும் சத்தமாக கத்தி அழைத்ததும்..

“என்னடா முத்து…. என்னாச்சு?!” என்று முத்துவின் அம்மா கேட்டாள்.

அம்மாவின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அவன் தடுமாறினான்.

“அம்மா… அது வந்து… வெண்… வெண்ணிலா..” என்றான்.

அவன் அம்மா மீண்டும்….

“ஏ முத்து என்னடா ஆச்சு…யாரு வெண்ணிலா?!… டேய்… கண்ணை முழிச்சு பார்ரா..!. ஏதாவது கெட்ட கனவா!?” என்றபடியே அவனை உலுக்கினாள்.

“என்னது… கெட்ட கனவா?!”

முத்து படுக்கையில் இருந்து சட்ரென்று எழுந்து உட்க்கார்ந்தான்.

‘நான் இதுவரை கண்டது… கனவா !? கவிதை எழுதியது… என் மனைவி வெண்ணிலா?!… எல்லாமே கனவா?’ அவனக்கு குழப்பத்துடன் வெட்கமாக இருந்தது.

“இதுக்குதான் விடிஞ்சி வெகு நேரமாகியும் தூங்கிகிட்டு இருக்கக்கூடாதுன்னு சொல்றது” என்று கத்திக் கொண்டே…அம்மா சமையல் அறைக்கு போனாள்.

அப்போது தான் அவனுக்கு தெரிந்தது..

விடியற்காலையில்…துக்கத்தில் அவன், கனவு கண்டிருக்கிறான்.

வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று அவன் கற்பனை செய்து கொண்டே தூங்கியதால்…

இந்த கனவு வந்திருக்கும் என்று நினைத்து கொண்டான்.

“ஏம்மா விடியற்காலையில கனவு கண்டா பலிக்கும் தானே…!?” என்று உரக்க அவன் அம்மாவிடம்….90 கிட்ஸ் முத்து அப்பாவியாக கேட்டான்.

“ம்ம்… ஆமா.. நீ முதல்ல எழுந்திருச்சு பல்ல விளக்கிட்டு வா…காலை டிபன் ரெடியாயிடுச்சு!” என்று அவன் அம்மாவும் சத்தமா பதில் சொல்லி விட்டு…

“கடவுளே…என் மகனுக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகணும்” என்று இஷ்ட தெய்வத்தை மனசுக்குள் வேண்டிக்கொண்டாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *