ஆறிய தழும்பு

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 23, 2023
பார்வையிட்டோர்: 2,229 
 

“ஏன் ஸார்! ஏது இந்தத் தழும்பு? ஏதோ பெரிய தீக்காயத்தினாலே ஏற்பட்டது போலிருக்கிறதே?”

வலது கையைப் பிடித்துப் பார்த்துக் கொண்டே முழங்கைக்குச் சற்றே தள்ளியும் மணிக்கட்டுக்கு முன்பாகவும் இருந்த அந்தத் தழும்பு திருஷ்டியில் படவே, டாக்டர் என்னிடம் கேட்டு வைத்தார்.

“ஆமாம்! தீக்காயம் தான் ஸார்! பத்து வருஷங்களுக்கு முன் பட்ட காயம்…. அதன் தழும்புதான் இது…”

நான் சொன்ன பதிலில் தொனித்த சோக உணர்வை அவர் புரிந்து கொண்டாரோ என்னவோ, எனக்குத் தெரியாது. அவர் காரியத்தை முடித்துக் கொண்டு போய்விட்டார். ஆனால்… ஆனால்… உள்ளக் காய்ச்சலையும் கிளப்பிவிட்டுப் போய்விட்டார்.

மறக்க முடியாத இன்ப நிகழ்ச்சிகளை நினைவூட்டும் சின்னமாக அந்தத் தழும்பு இருந்திருந்தால் நான் கவலைப்பட வேண்டியதில்லை – கவலைப் பட்டிருக்கவும் மாட்டேன்! முழங்கைக்குக் கீழே கையையே வெட்டிக் கொண்டுவிட்டால் என்ன? என்று எண்ணுகிற அளவுக்கு அது என்னைப் பித்தனாக்கி விட்டது.

அது மட்டுமல்ல; அனலாகக் கொதிக்கும் இந்தக் காய்ச்சல் என் வாழ்க்கையின் முடிவுரையாக அமைந்து விடுமானால் எவ்வளவோ நன்றாக இருக்குமே என்று கூட எண்ணச் செய்தது.

ஊர் ஊராக மாற்றிக் கொண்டு நாடோடியாகச் சுற்றி ‘அவளை ‘ மறக்க முயன்று பார்த்தேன். வேறுபட்ட இடங்களோடும் வேறுபட்ட புது மனிதர்களோடும் மாறி மாறிப் பழகிக் கொண்டே வந்தால் அவளை மறந்து விடலாம் என்று எண்ணினேன். ஆனால் மறக்க முடியாமல் செய்து வந்தது அந்தத் தழும்பு.

கால விருக்ஷத்தில் பத்து ஆண்டு மலர்கள் மலர்ந்து வரிசையாய் வாடி உதிர்ந்து போயின. ஆனால்… என்னில் மலர்ந்த அவளைப் பற்றிய நினைவு மலர் நித்தியமாக நிலைத்து விட்டதே! காய்ந்துபோன கடல் நுரையைப் போன்ற வறட்டு ரொட்டியையும் கோப்பை நிறையப் பாலையும் எடுத்துக் கொண்டு ஆஸ்பத்திரி நர்ஸ் உள்ளே நுழைந்தாள்.

அவள் வைத்துப்போன பால் கோப்பையைக் கையில் எடுத்து உதட்டுக்குச் சரியாகக் கொண்டு சென்ற பொழுது வலது கையில் வெள்ளை வெளேரென்றிருந்த

அந்தத் தழும்பு என் திருஷ்டியில் முழுமையாக விழுந்தது.

“ஏன் ஸார்? ஏது இந்தத் தழும்பு? ஏதோ பெரிய தீக்காயத்தினாலே ஏற்பட்டது போலிருக்கிறதே?” – கால் மணி நேரத்துக்கு முன் டாக்டர் கேட்ட அதே கேள்வி மீண்டும் நெஞ்சில் சுருண்டு சுருண்டு நினைவு அலைகளாகப் புரளத் தொடங்கியது.

சிறு வயதிலேயே தாய் தந்தையரை இழந்துவிட்ட என்னைப் பரிவாக ஆதரித்துப் பேணித் தம்முடைய கஷ்ட நஷ்டங்களையெல்லாம் சிறிதும் பொருட்படுத்தாமல் என் மாமா எஸ்.எஸ்.எல்.சி. வரை என்னைப் படிக்க வைத்திருந்தார். அதற்குப் பிறகும் அவருக்குப் பாரமாக இருப்பது கூடாது என்ற உணர்ச்சி என்னை வேலை தேடும் முயற்சியில் ஈடுபடுத்தி அலைய வைத்தது. மாதக் கணக்கில் கால் கடுக்க எத்தனையோ இடங்களுக்கு அலைந்து படியேறி இறங்கியதைத் தவிரக் கண்ட பயன் ஒன்றுமில்லை. கடைசியில் எனக்குப் புகலிடம் அளித்தது ஆசிரியப் பயிற்சிப் பள்ளிதான்.

இங்கே தான் எனக்கு வாழ்க்கையில் அவளது தொடர்பும் ஏற்பட்டது. இதோ, என்னில் இருந்தவாறே என்னை வாட்டும் இந்தத் தழும்பின் தோற்றத்துக்குக் காரணமான நிகழ்ச்சியும் நடந்தது. எண்ணத் தொலையாத கற்பனைக் கனவுகளை உண்டாக்கிய அவள் சந்திப்பு இறுதியில் இப்படி ஒரே ஒரு துயரத் தழும்பாக மட்டும் நின்று நம்மை வருத்தும் என்று அப்போது நான் சிந்தித்திருக்க நியாயம் ஏது? கடைசியாக நாங்கள் பிரிந்தபோது கண்ணீர் சிந்த வைத்த அந்த நிகழ்ச்சியினால் என் மனம் அவள் காதலைக் கைவிட்டுவிடவில்லை. ஆனால் அவள்தான் என் வாழ்வு வீணாகக் கூடாது என்று தன் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டிருக்க வேண்டும்.

நான் அவளைச் சந்திக்க நேர்ந்தது, அவளோடு பழக நேர்ந்தது, அனைத்துமே இப்போது நினைத்தாலும் விசித்திரமாக இருக்கிறது. ஆனால் இந்த விசித்திரம் அன்று கண்ட அதே தனிப்பட்ட விசித்திரமல்ல! இது, வேதனை முழுக்க முழுக்கக் கலந்த விசித்திரம். அழ வைக்கும் விசித்திரம். துன்பத்தில் ஆழ்த்திவிடக் கூடிய விசித்திரம்.

அன்று, என்னவோ பள்ளி முடிவதற்குள் காலையிலே இலேசாக இருந்த மண்டைக் கனம் பொறுக்க முடியாத தலைவலியாக உருவெடுத்து வாட்டியது. வகுப்பில் உட்கார முடியவில்லை. சக மாணவர்களிடம் சொல்லிவிட்டு என் அறைக்குப் புறப்பட்டேன்.

அறைக்கு வந்து படுத்த எனக்கு அப்புறம் என் நினைவே இல்லை. நான் காலையில் சமையல் செய்துவிட்டுப் போட்டிருந்த பாத்திரங்களெல்லாம் போட்டது போட்டபடியே கிடந்தன.

“தம்பீ! உடம்பு சுகமில்லையா, தம்பீ! சுருண்டு படுத்து விட்டாயே! ராத்திரிக்குச் சமையல் கூடச் செய்யவில்லையே!” என்று கேட்ட பக்கத்து வீட்டுக் கிழவியின் குரல் என்னை நிமிர்ந்து கண் விழித்துப் பார்க்கச் செய்தது.

“ஆமாம் பாட்டி பள்ளிக் கூடத்திலேயே ஏதோ தலைவலி மாதிரி இருந்தது. நாலு மணிக்கு இங்கே வந்து படுத்தவன் தான். குளிர்க் காய்ச்சல் வேறே சேர்ந்து கொண்டது. எழுந்திருக்கவே முடியவில்லை” என்று நான் பதில் கூறினேன்.

“அப்படியானால் நீ பேசாமல் படுத்திரு, தம்பீ! இதோ நான் கஞ்சி போட்டுக் கொண்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டுக் கிழவி கிளம்பினார்.

மறுபடியும் எனக்கு நினைவு வந்து நான் கண் விழித்தபோது, “பாட்டி! அவரை எழுப்பேன் பாட்டி! பாவம்… எப்போ சாப்பிட்டு விட்டுப் போனதோ?” – குயிற் குரல் காதுகளில் விழவே, இரண்டு தடுக்காகப் பிரித்திருந்த எனது அறையின் சமையற்கட்டுப் பக்கமாகப் பார்வையை ஓட்டினேன்.

அந்த மங்கிய சிமினி விளக்கின் ஒளியில் சமையற்கட்டு வாசலில் அவள் நின்று கொண்டிருந்த தோற்றம் இப்போதும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அதுதான் இந்தத் தழும்பைப் போலவே ஒரு அழியாத சித்திரக் காவியமாக என் நெஞ்சில் எழுதப்பட்டு விட்டதே! நினைவு மறக்குமா?

தழையத் தழையக் கட்டிக் கொண்டிருந்த நீலச் சிற்றாடை பருவத்துக்குத் தகுந்த உயரம். மலர்ந்த முகம். குறுகுறுவென்று சிரிப்பது போலவே பார்க்கும் கண்கள். அடுப்பில் காரியம் செய்திருந்ததனால் கலைந்து ஓரங்களில் சுருண்டு சுருண்டு காதுக் குண்டலங்களோடு சுழலும் சுரி குழல் . கடைந்தெடுத்தது போன்ற நாசி. அதில் மகிழம் பூவைப் பதித்தது போல ஒரு மூக்குத்தி. ரோஜா இதழ்கள் மூடித் திறக்கும் போதே சிறுநகை புரிவது போன்ற நளினம் செறிந்த இதழ்கள். தலையில் தாழம்பூவை அடுக்கிப் பின்னிக் கொண்டிருந்தாள்.

‘நல்லவன், ஒரு வம்பு தும்புக்குப் போகமாட்டான்’ என்ற நம்பிக்கையினாலோ என்னவோ, முத்துப்பாட்டி தன் பேத்தியின் பணிவிடையைத் தொடர்ந்து அந்த ஐந்து நாட்களும் எனக்கு அளித்திருந்தாள். முதலில் இரண்டொருநாள் பாட்டியும் கூடவே வந்தாள். பின் அவளே தனியாக வந்து போகத் தலைப்பட்டாள்.

ஜுரம் விட்டு நான் எழுந்த பிறகும் கூட எங்கள் தொடர்பு நீடித்தது. இறுதியில் எங்களது அந்தத் தொடர்பு இதயத்தின் தொடர்பாகப் பரிணமித்தது.

வெள்ளை நெஞ்சம் படைத்த முத்துப்பாட்டியும் எங்கள் பழக்கத்தைப் பற்றி எந்த விதமான குறையும் பட்டுக்கொள்ளவில்லை. காரணம், எங்களது இதயத்தில் மலர்ந்த காதல் அப்படிக் குறைப்பட்டுக் கொள்ளும்படியான எந்தக் களங்கத்துக்கும் இடம் கொடுக்கும்படியானதாக இல்லாமல் இருந்ததுதான்.

அந்த ஊரில் நல்ல நிலபுலன்களும் மதிப்பிடத்தக்க சொத்தும் உள்ளவள் முத்துப்பாட்டி. அவளது ஒரே மகள் தலைப் பிரசவத்தில் கோமதியை அவளிடம் ஒப்படைத்துவிட்டுக் கண்களை மூடிவிட்டாள். கோமதியின் தந்தையும் அதிக நாள் – அவள் மழலையைக் கேட்கும் வயசு வரை கூட இருக்கவில்லையாம் – இவ்வளவு விவரங்களையும் அவள் வாயைக் கிண்டியே கேட்டு அறிந்து கொண்டிருந்தேன் நான். “நமக்கும் கோமதிக்கும் பிறப்பு வளர்ப்பில் அதிக வித்தியாசமில்லை. நம்முடைய மாமா அவ்வளவாகச் சொத்துக்காரர் இல்லை. கோமதியின் பாட்டி கொஞ்சம் சொத்துக்காரி இவ்வளவுதான் வித்தியாசம்” என்று எண்ணிக் கொள்வேன்.

இரண்டாவது வருஷப் படிப்புக்காக லீவு முடிந்து நான் திரும்பிய பிறகு எங்கள் அன்பு புதிய வேகம் பெற்றது. ஆனால் அப்போதுதான் அந்த எங்கள் அன்பு மரத்தின் ஒரு பகுதி பாழடையும்படியான அந்த இடியும் விழுந்தது. அந்த நாள் தான் என் வாழ்வை வறண்டு போகச் செய்ததற்கு மூல காரணமாக இருந்த நாள்!

வழக்கம் போலத்தான் அன்று காலையும் கோமதி வந்தாள். பாட்டியிடம் சொல்லிவிட்டு வந்த பொய்யைக் கொஞ்சமாவது உண்மையாக்க எண்ணிக் கணக்குப் பாடத்தில் இரண்டொரு சந்தேகங்களையும் கேட்டாள். நான் சொன்னேன். பின் ஏதேதோ சிரிப்பு, கேலி, கும்மாளம் இப்படிக் கொஞ்ச நேரம் கழிந்தது. வழக்கம் போல் அடுப்பில் உலை வைத்துச் சமையலை ஆரம்பித்தேன் அன்றும்.

என்னிடம் விடைபெற்றுக் கொண்டு போகப் புறப்பட்ட கோமதி என்ன நினைத்துக் கொண்டாளோ? “ஆமாம்! நீங்கள் இன்னும் சமையலை முடிக்கவில்லை போலிருக்கிறதே? அடடா! மணி ஆகிவிட்டதே . நீங்கள் பள்ளிக்கூடத்துக்குப் போவதற்குள் சமையல் ஆகாது போல் இருக்கிறதே…. ம்ம்…. நேரத்தை வீணாக்கி விட்டேன். நீங்கள் போய் குளித்துவிட்டு வாருங்கள். அதற்குள் நானே அடுப்புக் காரியத்தை முடித்துவிட்டு அப்புறம் வீட்டுக்குப் போகிறேன்” என்றாள்.

இப்படிச் சொல்லிவிட்டு அவள் அடுப்பினருகே சென்றபோது என்னால் மறுக்க முடியவில்லை .

குளித்துக் கொண்டிருந்த என்னைத் தூக்கிவாரிப் போடச் செய்தது கோமதியின் அலறல். ஓடி வந்தேன், அரைத் துண்டுடன். அங்கே நான் கண்ட காட்சி என்னைத் திடுக்கிடச் செய்தது. கொதிக்கும் சோற்றை முழங்கையில் கொட்டிக் கொண்டு உட்கார்ந்தவாறே துடித்துக் கொண்டிருந்தாள். புடவை நுனியில் தீப்பற்றத் தொடங்கியிருந்தது. அதை அவள் உணரவில்லை. ஒரு கணம் நான் அப்படியே பித்துப் பிடித்தவன் போல் நின்று விட்டேன். அடுத்த வினாடி ஓடிப்போய் அவள் புடவைப் பக்கமாக இருந்த எரியும் விறகைப் பிடித்துத் தள்ளினேன். தள்ளின வேகத்தில் அது எகிறித் துள்ளி வந்து என் வலது முழங்கைக்கும் மணிக்கட்டுக்கும் நடுவே எரியும் கொள்ளியோடு அழுத்தியடித்தது. கையில் அடித்து மோதி அதன் மேலேயே நின்றுவிட்ட கொள்ளிக் கட்டையை ஒதுக்கிவிட்டு, அவளை நெருப்பிலிருந்து காப்பாற்றுவதற்குள் என் உயிர் போய் மீண்டது. கோமதியின் அலறலைக் கேட்டோ , தற்செயலாகவோ அங்கே வந்த முத்துப் பாட்டி எங்கள் நிலையைக் கண்டு ஒரேடியாக அழுது விட்டாள். என் வலது கையில் அழுத்தமான நெருப்புக் காயம்.

என் கையில் பட்ட நெருப்புக் காயம் பத்து இருபது நாட்களில் ஆறி இதோ இருக்கும் இந்தத் தழும்பாக ஆறி விட்டது. ஆனால் கோமதியின் காயம்…?

ரணமேறிப் புரையோடி விட்டது, அவள் கை. “விரலோடு கூடிய முன் கை முழுவதையும் உடனே ஆபரேஷன் செய்து எடுக்கவில்லையானால் கைக்கு முழுவதுமே ஆபத்து” என்று நெருக்கினார் டாக்டர். என் நெஞ்சு துடித்து விழுந்தது. பாட்டி அழுது கதறினாள். டாக்டர் சொன்னபடி காரியத்தை முடித்துவிட்டார்.

கைமுடப்பட்டு வீடு வந்த பின்னும் அந்த அழகுச் செல்வத்தை நான் புறக்கணிக்கக் கனவிலும் கருதவில்லை. ஆனால் அவள் தான் என் நன்மைக்காக’ என்று கண்டிப்பாக என்னைப் புறக்கணித்து விட்டாள். “நான் கன்னியாகவே வாழ்ந்து கழிப்பேன். கை முடமாக உங்களை எனக்கு உரியவராக உரிமை கொண்டாட என் மனம் துணியவில்லை. என்னை மறந்து விடுங்கள்!” என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டாள். நான் எதிர்த்துப் பேசி அவள் பிடிவாதத்தை அதிகரிக்க விட விரும்பவில்லை. காலப் போக்கில் அவள் மனம் மாறும், நம் காதலையும் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று நினைத்து மௌனம் சாதித்தேன். அதே சமயம் மாமாவுக்கு உடல் நலமில்லை என்று கடிதம் வரவே, நான் ஊருக்குப் புறப்படும் படியாகிவிட்டது.

ஊருக்குச் சென்றவன் ஏறக்குறைய ஒன்றரை மாதம் அங்கிருந்து புறப்பட முடியாதபடி செய்துவிட்டது மாமாவின் உடல்நிலை.

மாமாவின் உடல்நிலையைப் பற்றி இனிமேல் கவலையில்லை என்ற சந்தர்ப்பம் ஏற்பட்டபின், நான் அங்கே சென்றேன். சென்ற எனக்கு வீடு நிலங்கரைகளை ரொக்கமாக்கிக் கொண்டு பாட்டியும் கோமதியும் ஊரைவிட்டே சென்று விட்டார்கள் என்ற பேரிடி காத்திருந்தது. அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் அவர்கள் எங்கே போயிருப்பார்கள் என்பது யாருக்குமே சரியாகத் தெரியவில்லை. கோமதி எனக்காகத் ‘தியாகம்’ செய்வதாக நினைத்துக் கொண்டு எவ்வளவு பைத்தியக்காரத்தனமாக நடந்துவிட்டாள்? என்று எண்ணும் போது எனக்கே அழுகையாய் வந்தது . டிரெயினிங் சர்டிபிகேட்டுடன் அன்று ஆரம்பித்த நாடோடி வாழ்க்கை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. என்னால் அவளை மறக்க முடியவில்லை. வருடங்கள் கழிந்தாலென்ன? அவள் நினைவு தழும்பாக நிலைத்து நின்று விட்டதே?

உடம்பு தேறிப் பள்ளிக்கூடத்துக்குப் போய் வரலாம் என்ற அளவுக்கு உடம்பில் தெம்பு வந்ததும் நான் ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேறினேன்.

அன்று சாயங்காலம் பள்ளிக்கூடம் முடிந்ததும் அருவிக்கரைப் பக்கமாக உலாவச் சென்ற நான் பாறையொன்றில் உட்கார்ந்து பொங்கிவிழும் அருவி நீரின் பொலிவை ரசித்துக் கொண்டிருந்தேன் . எவ்வளவு நேரம் நான் அப்படியே என்னை மறந்து உட்கார்ந்து கொண்டிருந்தேனோ, எனக்கே தெரியாது!

ஆ ஐயோ!… இந்த அலறலை அடுத்து யாரோ பக்கத்தில் அருவி நீர்ப் பரப்பில் விழும் சத்தம் என்னைத் தூக்கி வாரிப் போடச் செய்தது. அலறிய குரல் ஒரு பெண்ணினுடையது என்பதும் ஒலியால் தெரிந்தது. நான் திடுக்கிட்டுப் பக்கத்தில் விரைந்தேன்.

தடித்து விழுந்து கொண்டிருந்த நீர் புரட்டிப் புரட்டித் தள்ளிட ஒரு இளம்பெண் முங்கி முழுகி நீரோடு போராடிக் கொண்டிருந்தாள். அருவியின் அசுர வேகத்தையும் மறந்து தண்ணீரிலே விழுந்து, அவளைக் காப்பாற்றிவிடலாம் என்ற அசாதரணமான நம்பிக்கையுடன் தண்ணீரில் குதித்து விட்டேன்.

நீண்ட கூந்தலைப் பிடித்து இழுத்து மேலே தூக்கிய அந்தப் பெண்ணின் முகத்தைக் கண்டு கண்ட நான் வாய்விட்டு, ‘ஆ! கோமதி! நீயா?’ என்று அலறியே விட்டேன். அவளுக்குக் கொஞ்சம் நினைவு இருந்தது. கண்ணைத் திறந்து என்னைப் பார்த்த அவளது வெளிறிய முகத்தில் ஆச்சரியம் நிழலிட்டது. ‘நீங்களா? இங்கே…. எப்படி வந்தீர்கள்?’ என்று கேட்காமல் பார்வையின் சக்தியினால் கேட்டாள்.

நம் கண்களுக்குப் புலனாகாத சக்தி நம்மை ஆட்டி வைக்கிறது என்பது எவ்வளவு உண்மை! இல்லாவிட்டால் யானை வாயில் சென்ற கரும்பு போல் அருவி வாயில் சிக்கிய நாங்கள் இப்படி உயிர் பெற்றுப் பிழைத்து வந்திருப்போமா? ஆறிய தழும்பு தான் ஆனந்தத் தழும்பாக உருப் பெற்றிருக்குமா?

(கல்கி – மே 8, 1955)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *