மனிதம் மதலைகளிடம் மட்டும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 6, 2021
பார்வையிட்டோர்: 4,309 
 
 

(1988ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மரணத்தின் நிறமாய்க் கனக்கும் இருளில் சொட்டச் சொட்ட நனைந்தவாறு படுத்துக் கிடந்தது அந்தக் கட்டை.

தன்மீது தனக்கே ஏற்பட்டிருக்கும் சுயவெறுப்பைச் சுய மோகமாய் மாற்ற எவ்வளவோ முயன்றும் முடியாமற் போன தோல்வி மரணக் களையாய் முகத்தில் அப்பிக் கிடந்தது.

எவ்வளவோ கஷ்டப்பட்டுப் படிப்பித்து நல்ல நிலைக்கு ஆளாக்கிய பிள்ளைகள் ஒருவரும் அருகில் இல்லாததால் தகிக்கும் தனிமை, தனிமையால் ஏற்பட்ட மூன்று வருடகால வெறுமை, வெறுமையில் வெதும்பி வந்த சுயவெறுப்பு !

காற்று, வெயில், மழை, குளிர் எதுவும் பாராமல் வாழ் நாள் முழுவதும் உழைத்து உழைத்துச் சேர்த்த வலுவான உடல்! இப்படி ஆலவிருட்சம் விழுந்தது போல் திடீரெனப் படுக்கையில் விழும் என யார்தான் எதிர்பார்த்தார்கள்?

மூன்று வருட காலம் ஒரு தனிப் பிரமச்சாரி போல் வாழ்ந்த பெரிய வீட்டின் மேற்குப்புற அறையில் வடக்குப் பக்கமாய் ஒரு கட்டில்!

கட்டிலின் மையப் பகுதி வெட்டப்பட்டு இருக்கிறது. சிறுநீரும், மலமும் அதனூடாகக் கீழே வைக்கப்பட்டிருக்கும் மண்கூடையில் விழுவதற்கு வசதியாய்!

துப்பல் பேணி ஒன்று தலைக்குப் பக்கத்தில் இருக்கிறது. ஆனால் கிழவன் தலையை நிமிர்த்தித் துப்பக் கூடிய நிலையில் இருப்பதாகத் தெரியவில்லை .

வாய் மெதுவாகத் திறந்திருக்கிறது!

ஒரு கோப்பை சூடான தேநீருக்கோ அல்லது ஒரு வாய் பாலுக்கோ அந்த இருளின் ஆழத்தில் அது காத்திருப்பதாய்த் தெரிகிறது.

முள்ளை முள்ளே எடுப்பது போல கிழவன் எதிர்பார்க்கும் தேநீரின் சூடு கிழவனின் உள்ளச் சூட்டைக் குறைக்குமோ ஒருவேளை?

திறந்த வாயினூடே இலையான்கள் போய் வருவது பார்க்க அருவருப்பை யூட்டுகிறது.

சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு வரை பார்க்க அதிக மகிழ்வு தரும் பட்டாடையும், வெள்ளிப்பூண் பிரம்பும், கண்ணாடியும், மலேய வாசனைத் திரவியமுமாய்த் திரிந்த உடல்!

மாலையிலிருந்து கை, கால் ஆட்டம் கூட இல்லை. கட்டிலுக்கு மேலே தெரியும் சூனிய வெளியில் கண்கள் நிலைகுத்தி நிற்கின்றன. அந்தக் கண்களில் மெதுவாக நீர் கசிகிறது.

உயிர் பிரியும்வரை மன உணர்வுகளும் பொசுங்குவ தில்லையோ? மனதில் என்னென்ன நினைவுகளோ?

பல வருடங்களுக்கு முன்னமே இறந்து போன மனைவியை நினைத்திருக்கலாம். அவள் இருந்திருந்தால் இப்போது தலைமாட்டில் உட்கார்ந்து அழுது கொண்டிருக்க மாட்டாளா?

வெளிநாட்டில் மிக வசதியாய் வாழுகிற பிள்ளைகளை நினைத்திருக்கலாம். கனடாவில், ஜேர்மனியில், சவூதியில், லண்ட னில் ……. !

சீ…! அது மனதார எரித்துச் சாம்பராக்கிய நினைவுகளாக இருக்கும். இவர் படுக்கையில் விழுந்த முதல் நாள், பாதர் சிக்….’ என்று எல்லாருக்கும் கேபிள்’ கொடுத்த போதும், ‘சிறீலங்காவின்ரை இண்டைய சூழ்நிலையில் நாங்கள் வர ஏலாது. பிளீஸ் டூ த நீட்ஃபுல் ……. எங்களுக்காக எதற்கும் காவலிருக்க வேண்டாம்…… என்று தான் அவர்கள் எல்லாரும் சிவநாயகத்திற்குப் பதில் அனுப்பியிருந்தார்கள். அந்தப் பதில் வந்தது கிழவனுக்கும் தெரியும்!

இங்கே ஒன்று நடந்து விட்டால் கூட அவர்கள் யாரும் வரப் போவதில்லை. அப்படியானால் இந்த மரணச் சடங்குகளை யார் நடத்துவது?

இந்தக் கடவுள் இருக்கிறாரே அவர் ‘ரியலி கிறேற்’. எப்படியோ எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஒரு வழி கண்டுபிடித்துத் தீர்த்து விடுவார்!

ஆம்! மிஸ்டர் சிவநாயகம் குடும்பம்தான் மரணச் சடங்கை நடத்தப் போகிறது!

ஆ…… இப்போதுதான் நினைவு வருகிறது.

கடந்த வாரம் வரையில் ஓடி ஓடிக் கவனித்து விட்டு வீட்டை சிவநாயகத்துக்கு எழுதிப் போட்டார் எண்டாப் பிறகு…..’

அந்தப் பக்கமே எட்டிப் பார்க்காது போன உறவினர் பலரையும் கூடக் கிழவர் நினைத்திருக்கலாம்.

அவரின் ‘ல’ சுரங்களுக்காகவே ஓடிவந்த உறவினர்கள் மிஸ்டர் சிவநாயகம் குடும்பத்தையும் சேர்த்துத் தான்!

ஏன்? வீடு எழுதும் வரை வில்லங்கமாய் வந்து சேர்ந்து வேலைகள் எல்லாம் செய்து விட்டு, வீட்டை எழுதி வாங்கிக் கொண்ட பிறகு , ‘இது கெதியாய் அங்காலை போட்டால் எங்களுக்குக் கரைச்சல் இல்லை …’ என்று விவேகமாய் விலகி நிற்கின்ற சிவநாயகம் குடும்பத்தைக் கூட இந்த இறுதி நேரத்தில் நினைத்திருக்கலாம்.

கடந்த இரண்டு மூன்று தினங்களாய் தேநீரோ, பாண் துண்டோ கொண்டு வருகிற சிவநாயகம் வீட்டு வேலைக்காரச் சிறுவன் முனுசாமி, தெருவிளக்கின் மங்கிய ஒளியில் எங்காவது தென்படுகிறானா என்று பார்த்துப் பார்த்துப் பூத்துப் போன கண்களில் அந்த எதிர்பார்ப்பின் ஒரு வெளியீடாய் நீர் வந்தும் இருக்கலாம்.

போராளிகளைத் தேடும் போர்வையில் சீருடைகள் அந்தக் கிராமத்துள் நுழைந்த போது ….. உறவினர்கள், அயலவர்கள் அனைவரும் கிராமத்தை விட்டு வெளியேறிவிட்டனர். இந்தக் கிழவனை, படுக்கையில் பாரிச வாதமாய் விழுந்து விட்ட கிழவனை, அழைத்துப் போக வேண்டுமென்று யாரும் நினைத்துப் பார்க்கவில்லை.

அந்த மூன்று நாளும் தலைமாட்டில் இருந்த சோடாவை எடுத்துச் சொட்டுச் சொட்டாய்க் குடித்து ……. உள்ளே நுழைந்த சீருடைகளின் பல்வேறுபட்ட கேள்விகளுக்குப் பதில் கூற முடியாமல் திணறி……. அவமானத்தால் சினந்து … சிறுத்து…….!

அந்த மூன்று நாளின் பின் தான் நிலை மோசமாயிற்று! இயற்கை மரணத்தின் முன் ‘அதிரடி மரணம்’ ஏற்பட்டு விடுமோ என்ற பயமும் இந்த நிலை வர ஒரு காரணம்.

சிவநாயகம் வீட்டு வேலைக்காரனின் நிழல் தெரிந்த மாதிரி இருந்தது. ஆம்… அது அவன் தான்!

அவன் கிட்ட வந்து பார்த்தான். கிழவனின் வாய் ஏதோ முணு முணுத்தது. அவனுக்குத் தெளிவாகப் புரியவில்லை. கண்களில் இருந்து வடிந்திருந்த நீர் கிழவனின் வாயில் உப்பாகக் கசந்து கரைந்தது.

வீட்டில் பொழுது போகவில்லை என்று முனுசாமிக்குப் பின்னாலேயே வந்திருந்த மிஸ்டர் சிவநாயகத்தின் கடைக்குட்டி மகன் அமுதனைக் கைதட்டி அழைத்தான் முனுசாமி.

“அமுது இங்கிட்டு வாங்க…. வந்து பாருங்க….. கிழவன்ரை ஒடம்பு குளிருது. ஏதோ சொல்லுது …. ஒண்ணும் புரியலை. சாவப்போவுது”. ஆறு வயது அமுது அருகில் வந்தான்.

கடந்த சில தினங்களாக இந்த வீட்டிற்கு வருவதற்கோ, தாத்தாவைப் பார்ப்பதற்கோ , அம்மா அமுதனை அனுமதிப்பதில்லை.

இன்று அம்மாவிற்குத் தெரியாமலே முனுசாமியுடன் வந்து விட்டான் அமுதன்.

அமுதனுடன் அன்பாக நடந்து கொள்கிற தாத்தா. இடையிடையே ‘சொக்கலேட்டும்’, பிஸ்கட்டும்’, மாம்பழங்களும் கூடத் தருகிற தாத்தா!

“கெட்டிக்காரனாப் படிச்சு, டொக்டரா வந்து …. றொயின் சித்தப்பா போலை கனடாவில் வேலை பாக்க வேணும்…”

என்று சொல்லி அவன் கன்னத்தில் கிள்ளுகிற தாத்தா!

அமுதன் அருகில் வந்து உன்னிப்பாகக் கவனித்தான்.

“தே………………..” அவனுக்குப் புரிந்து விட்டது.

மாநிற மேனியில் பட படத்த அமுதனின் கனவுக் கண்களில் பயமும், பரிதாபமும், அவசரமும் தெரிந்தன.

வேகமாய் வீட்டுக்கு விரைந்தான்.

” அம்மா…. தாத்தா சாகப் போறார். அம்மா… பாவம் … தேத்தண்ணி கேட்டார்….”

“உன்னை ஆர் அங்கை போகச் சொன்னது? சாகிற ஆக்களைக் குழந்தைப்பிள்ளையள் பாக்கப்பிடாது …. பேய் முனுசாமி… விசரா…. அமுதுவை ஏனடா அங்கை கூட்டிக்கொண்டு போன்ன?”

அம்மாவுக்கு ஏன் இப்படிக் கோபம் வருகிறதென்று அமுதனுக்குப் புரியவில்லை. அவனது ஆர்வம் பொசுக்கென அணைந்து விட்டது.

அம்மா அப்பாவிடம் சென்றாள்.

“மெய்யேங்கோ …… கிழவன் எல்லே சாகப் போதாம்”

மிஸ்டர் சிவநாயகம் ‘ஓகோ….’ என்று சிரித்தார்!

“சாகிறவரைப் பிடிக்கப் போறீரோ….. கெதியாப் போம்…. நானும் வாறன் ….” அப்பா ஏன் சிரிக்கிறார் என்பதும் அமுதனுக்குப் புரியவில்லை .

மிஸிஸ் சிவநாயகம் ‘நதியா சாறி ஒன்று எடுத்து உடுத்துக் கொண்டு புறப்பட்டாள். கையில் சுடுநீர்ப் போத்தலும், படுக்கை விரிப்புகளும், தலையணைகளும்:

“இரவைக்கு அங்கைதான் படுக்க வேணும்…….. என்னப்பா…”

மிஸ்டர் சிவநாயகத்திடம் கூறிவிட்டு அமுதனையும், முனுசாமியையும் கூட்டிக் கொண்டு புறப்பட்டாள்.

“அம்மா……. கெதியாப் போவம்…… அவர் தேத்தண்ணி கேட்டுக் கன நேரமாச்சு …..” அமுது ஓட்டமாய் ஓடினான்.

ஓடிச் சென்று முகத்தைப் பார்த்தான். மீண்டும் அதே அசைவு.

“தே……….” “அம்மா ……. வாத்துக் குடுங்களன் ….”

குழந்தைத் தனமும், கற்பனையும் மிதக்கும் கண்களில் அவசரம்!

“அது …… மோல்ரோவா எங்களுக்கெல்லோ கொணந்தனான். அவருக்கு உயிர்போய்க் கொண்டிருக்கு ….. இப்ப ஒண்டும் குடுக்கப்பிடாது …… தொண்டைக்கு அங்காலை போகாது ….. நீ குழந்தைப்பிள்ளை. உனக்கு விளங்காது… இஞ்சாலை வா…”

அம்மா கதவைச் சாத்திவிட்டு வெளியே வந்தாள். அமுதனின் ஆர்வமும், எதிர்பார்ப்பும் மீண்டும் குண்டூசியால் குத்தப்பட்ட பலுான் போல் சுருங்கி விட்டன.

அங்கு வந்து சேர்ந்த மிஸ்டர் சிவநாயகம் அந்த வீட்டின் ‘ஹாலை’ அளவெடுப்பது போல் குறுக்கும், மறுக்கும் நடந்தார்.

செத்த வீட்டை எப்பிடிச் சிறப்பாச் செய்யலாமெண்டு யோசிக்கிறான்…’ என்றார்.

வீட்டின் முன்புறத்தைத் துப்பரவாய்க் கூட்டுமாறு முனுசாமிக்கு உத்தரவிட்ட மிஸிஸ் சிவநாயகம், வீட்டின் உட்புறத்தை ஒழுங்குபடுத்துவதில் ஈடுபட்டாள்.

இவர்கள் இந்த நேரத்தில் வந்து அமர்க்களப்படுவதை அவதானித்து எட்டிப் பார்த்த முன் வீட்டு முத்தையாவிடம்,

“அந்தக் காலத்திலை அந்தாள் என்ன மாதிரி உடம்பு! சும்மா சுண்டினால் ரத்தம் வாற நிறம்…” என்றார் சிவநாயகம்.

“இரும்புப் பெட்டிக்கை பூட்டினது மாதிரித்தான் மனமும். நல்ல மனுசன் பாவம்…. பிள்ளையளைக் காண முடியேல்லை. ஆனால் நாங்கதான் பிள்ளைக்குப் பிள்ளையாய் ஒரு குறையுமில்லாமல் பாக்கிறம்…”

இது மிஸிஸ் சிவநாயகம்!

தான் இடையிடை தேநீர் கொடுத்தும் கிழவன் தனக்கு ஒரு சதமும் தரவில்லை என்பது நினைவு வர முத்தையா மெல்ல நழுவி விட்டார்.

தாத்தா கேட்ட ‘தேத்தண்ணி என்ற சொல் அமுதனின் மனதை ஆயிரம் ஆணிகளாய் அழுத்துகிறது.

“செத்த வீட்டை வலு திறமா நடத்த வேணும். என்னங்கோ?”

“நல்ல காலம். நாங்கள் ஊருக்கு வந்தாப் பிறகு கடுமைப்படுத்தினது. இல்லாட்டி ஆர் செத்த வீடு நடத்தறது என்னப்பா?”

“ஒரு நானூறு கதிரைக்கு ஓடர் குடுங்கோவன் ….”

இந்த நேரத்தில் உள்ளே வந்த பக்கத்து வீட்டுப் பாக்கியக்காவிடம்,

“நாங்கள்தான் தன்னை நல்லாப் பாப்பம் எண்ட நம்பிக்கையிலை போன வெள்ளி அந்திக் கருக்கல் நேரத்திலைதான் வீட்டை எங்களுக்கெழுதி விட்டவர்”

அம்மா சொல்வது கேட்கிறது.

“உந்தாளுக்கு உயிர் கெதியாப் போகாது. நான் உதிலை இருந்து எத்தினை நாள் சாப்பாடு குடுத்தனான். எனக்கு ஒரு பரப்புக் காணி எண்டாலும் எழுதேல்லை. உந்தளவு காணியும் ஆள இனிப் பிள்ளையள் வரப் போயினமே? எக்கணம் ஆரும் கொண்டு போற சொத்துத்தானே….. ஆ…”

வாய் நிறைந்த வெற்றிலைக் காவியை எட்டிக் குரோதத்துடன் சேர்த்துத் துப்பினாள் பாக்கியக்கா.

புழுதியாய் இருந்த முற்றத்தைக் குளிர்மைப்படுத்த வாய்க்காலில் ஓடி வந்த நீர் இந்தத் துப்பலினால் ஒரு விநாடி சிவந்து பரவிப் பின் சாயை தெரியாமல் கலந்து மறைந்தது.

படை

அமுதன் மீண்டும் தாத்தாவுக்கு அருகில் போய்ப் பார்க்கிறான். அதே அசைவு… ‘தே……..’

ஆயிரம் ஊசிகள் ஒரே கணத்தில் அவன் இதயத்தைத் துளையிடுகின்றன. பக்கத்து அறைக்குச் சென்றான். சுடுநீர் போத்தல் ‘மோல்ரோவா’ வுடன் அப்படியே இருக்கிறது. வெளி முற்றத்துக்கு வருகிறான்.

நிலவு வெண்மையாய் பூக்கக் தொடங்கி விட்டாலும் இருள் மேகங்கள் நிலவை மறைத்திருக்கின்றன.

“டே… முனுசாமி… தாத்தா மருந்து கேட்கிறாரடா”

“அம்மா….. அம்மோய் …. தாத்தாவுக்கு மருந்து வாத்துக் குடுக்கட்டுனுங்களா ?”

அம்மா முனுசாமியின் காதில் குறுக்கிய படியே அடிக் குரலில் கூறுகிறாள், “மடையா… இனி மருந்து குடுக்கப் படாது. குடுத்தா உயிர் நடு வழியில் நிண்டிடும்…”

தெருவில் சீருடைகளின் நடமாட்டத்தை அவதானித்த நாய் ஒன்று பெரிதாகக் குரைக்கிறது.

“நாயும் குலைக்குது. உயிர் போய்க் கொண்டிருக்கு…”

வேறு வேலை செய்யுமாறு அம்மா உத்தரவிடுவதற்கிடையில் முனுசாமி வெளியே ஓடி விட்டான்.

“எட்டுச் செலவுக்கு அவர் விரும்பிச் சாப்பிட்டதெல்லாம் படைக்க வேணும்….”

“அந்திரட்டி மேளம் பிடிக்க வேணும்…”

”அவற்றை படம் போட்டுப் புத்தகம் அடிச்சு வெளியிலை இருக்கிற எல்லாருக்கும் அனுப்ப வேணும்…”

“கண்ணீர் அஞ்சலி அடிக்க வேணும். நான் ஒருக்கா நடராஜா மாஸ்டர் வீட்டை போய் அஞ்சலிக் கவிதை ஒண்டு எழுதுவிச்சுக் கொண்டு வாறன்…”

அப்பா சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளியே போக ஆயத்தமாகிறார்.

“பேப்பருக்குக் குடுக்க வேணும். றேடியோக்கும் குடுக்க வேணும்.”

“அதுகளையும் பாருங்கோ … பேந்து நேரம் போடும்….”

அம்மா அவசரமாய்க் கூறுகிறாள்.

அமுதன் தாத்தாவின் கட்டிலுக்கு அருகில் . அவர் முகத்தில் கண் பதித்து, அவர் சொற்களில் மனம் செலுத்தி ……

தெளிந்த நீரோடை போன்ற அவன் முகத்தில் சிந்தனை ரேகைகள்!

சிந்தனை பாடசாலைக்கு ….!

இரண்டு வாரமாய் பாடசாலை மூடிக் கிடந்தது. இன்னும் பலர் வந்து சேரவில்லை. அதனால் நேற்று ஆசிரியையும் தமிழும் கணக்குமாய் அதிகம் கற்பிக்காமல் இவர்களோடு கதைத்துக் கொண்டிருந்தார். அமுதனுக்கு அது சந்தோஷம்.

“நீங்கள் பிள்ளையள் எப்பவும் உதவி தேவைப்படுகிற இடத்திலை அதைச் செய்ய வேணும். நாங்கள் செய்யிறதை எல்லாம் கடவுள் பாத்துக் கொண்டிருக்கிறார்.”

ஆசிரியையின் வசனங்கள் எண்ணங்களாய் அவன் மனதில் சுழலிடுகின்றன.

“ரீச்சர் சொல்றது ஒரு நாளும் பிழையாய் இருக்கிறேல்லை” நரம்பில்லாத நாக்கின் சுழற்சியால் வெளிப்படும் கருத்தற்ற சத்தங்கள் பலவற்றைப் போட்டுப் போட்டு களைத்துப் போன ஊர்ப் பெண்கள் விறாந்தையில் ஆங்காங்கே உறங்கிவிட்டனர்.

“அமுதா…. ஏன் ….. நீ இன்னும் படுக்கேல்லை ? உள்ளுக்கு வந்து கட்டில்லை படு …. மெத்தை கிடக்கு….”

“நான் இதிலை படுக்கிறான் அம்மா …”

கிழவன் படுத்திருந்த அறைக்கு முன்னால் ஒரு பாயை இழுத்துப் போட்டுக் கொண்டான் அவன்.

“மோல்டோவா குடிச்சிட்டு படு” அம்மா கோப்பையில் கொண்டு வந்தார். அதை வாங்கி வைத்துக் கொண்டு அம்மா அந்த இடத்தை விட்டு அகலும் வரை காத்திருந்தான் அமுதன்.

அம்மா போன பின்னர் கோப்பையுடன் தாத்தாவின் அறையுள் நுழைந்தான். வெளியே யாரோ வருவது போல் இருந்தது. கொண்டு போன கோப்பையைத் தாத்தாவின் தலைமாட்டில் இருந்த அலுமாரியில் மறைத்து விட்டு வந்து படுத்துக் கொண்டான்.

“அமுதா மோல்ரோவா குடிச்சிட்டியா…”

“ஓம்…. அம்மா “

அப்பாவும் அம்மாவும் ‘மோல்டோவா’ குடிப்பது தெரிந்தது. அமுது தன்னை மறந்து கண்ணயர்ந்த வேளையில் பூமி பாளமாய் வெடித்துத் தன்னை விழுங்குவது போல ஒரு கனவு.

திடீரென்று விழித்துக் கொண்டான். மெதுவாக எழுந்து தாத்தாவுக்கு அருகில் வந்தான். உதடுகள் இன்னும் அசைந்தன. ‘தே….’ என்ன சொல் என்பது புரியாதவர்களுக்குப் புரியாது.

அலுமாரியில் வைத்த மோல்ரோவாவை எடுத்தான் அமுது. கரண்டியும் எடுத்துக் கொண்டான். ஆசிரியையின் சொற்கள் மீண்டும் அழுத்தமாய் மனதில் ….!

ஒரு கரண்டி பாலைக் கிழவனின் வாயில் விட்டான் . கிழவன் விழுங்கிக் கொண்டார். இன்னும் ஒரு கரண்டி…. மீண்டும் ஒரு கரண்டி .

தாத்தா சிரிப்பது போல அமுதுவுக்குள் ஒரு கற்பனை.

“தாத்தா நீங்கள் கேட்டதை நான் தந்திட்டன் தாத்தா…..”

மோல்ரோவா கோப்பையைக் கீழே வைத்து விட்டு, மருந்துப் போத்தலை எடுத்தான்.

கட்டிலோடு சாய்ந்திருந்த அமுதனின் உடலைத் தாத்தாவின் கைகள் மெதுவாகத் தடவுவது போல் ஓர் உணர்வு.

உண்மையாகத் தடவினாரா? அல்லது கற்பனைதானா? தனக்கு இனிப் போதும் என்று மகிழ்வுடன் சொல்கிறாரா?

வானுக்கு உச்சி எல்லாம் பூப்பூத்த மகிழ்வு அமுதனுக்குள்…..! நிறைவும் பூரிப்புமே தானாக அவ்விடத்தை விட்டகன்றவன் மீண்டும் சென்று படுத்துக் கொண்டான்.

மறுநாள் காலை அந்த வீடு பரபரப்புடன் விடிந்தது. வெள்ளை வேட்டிகள், திருநீற்றுப் பூச்சுகள், ஊத்தை படாத உருப்படிகள் சகிதம் வந்த பலர் கட்டிலைச் சுத்தி அமர்ந்து தேவாரம் பாடுகின்றனர்.

மிஸ்டர் சிவநாயகமும் மனைவியும் பம்பரமாய்ச் சுழன்று பல வேலைகளில் ஈடுபடுகின்றனர்.

இலங்கை வானொலி தனது காலை அறிவித்தலில்,

முன்னாள் பிரபல வழக்கறிஞர் நமசிவாயம் காலமானார். அன்னார் காலம் சென்ற ஞானமணியின் அன்புக் கணவரும், றொபின் (கனடா), லோஜி (ஜேர்மனி) பாமா (லண்டன்), நிக்ஷன் (சவுதி) ஆகியோரின் அன்புத் தந்தையும் சிவநாயகம் (நீர்ப்பாசனத் திணைக்களம்) அவர்களின் சிறிய தகப்பனாரும் திருமதி கலாவல்லி சிவநாயகம் அவர்களின் பேரன்புக்குரிய மாமனாரும் ஆவார். அன்னாரின் தகனக் கிரியைகள் இன்று பிற்பகல் நாலு மணியளவில் அவர்களின் குடும்ப மயானத்தில் நடைபெறும். இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி திரு. சிவநாயகம் குடும்பத்தினர் அன்புடன் கேட்டுக் கொள்கின்றனர்….’ என்று அறிவித்தது.

அமுதன் இன்னும் அமைதியாய் உறங்கிக் கொண்டிருந்தான். அவன் கனவில், ‘அமுதா….. அண்ணாந்து நீ சிரித்தால் நிலவுக்குக் கேட்குமடா…….’ என்று தாத்தா சொல்லிக் கொண்டிருக்கிறார்.

– வீரகேசரி – 17.07. 88

– வாழ்வு வலைப்பந்தாட்டம் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: ஜூலை 1997, கலை இலக்கியக்களம், தெல்லிப்பழை

கோகிலா மகேந்திரன் (நவம்பர் 17, 1950 ,தெல்லிப்பளை, விழிசிட்டி, இலங்கை) ஈழத்து எழுத்தாளர். கலைத் திறானாய்வாளர், நாடகக் கலைஞர், சமூகசிந்தனையாளர், உளவள ஆலோசகர். இவர் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள், விமர்சனம், நாடகம்.. என பன்முகப் பரிணாமம் கொண்ட பல விடயங்களை எழுதியுள்ள பன்முகக் கலைஞர். இவரின் எழுத்துக்கள் இலங்கையின் புகழ் பெற்ற பத்திரிகைகளில் எல்லாம் இடம் பிடித்திருக்கின்றன. இவரின் தந்தை செல்லையா சிவசுப்பிரமணியம் சமய எழுத்துக்காக சாகித்திய விருது…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *