மனசே மனசே…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 8, 2022
பார்வையிட்டோர்: 3,362 
 
 

எத்தினை தரம் நான் உங்களுக்கு ஃபோன் பண்ணிறது? லேற்றாகும் எண்டால் சொல்லுறேல்லையே…? மற்றவையைப் பற்றின யோசினை இருந்தால் தானே?”

கொதி எண்ணெயில் கடுகு வெடித்தது போல் பொருமி வெடித்தவள், அதே வேகத்தில் என் கையில் இருந்த கார்த் திறப்பைப் பிடுங்கிக் கொண்டு போய்விட்டாள்.

‘என்ன நடந்தது எண்டு என்டை கஷ்டத்தைக் கேட்டியாடி …..?’ கன்னத்தைப் பொத்தி அறைய வந்த ஆவேசத்துக்கு வடிகால் இல்லாமல் போக, ‘வரட்டும்…’ என மனம் முறுகிக்கொண்டது.

’லேற்றாகுது எண்டு சொல்லியிருந்தால் கிழிச்சிருப்பாள். அவளின்ரை அரிச்சனை வேண்டாம் எண்டு தானே போனை எடுக்காமல் இருந்தனான். உழைக்கிறன் எண்ட திமிர், அவளுக்கு …’ மனம் வெறுப்புடன் திட்டிக்கொண்டது.

வயிறு வேறு பசியிலை குடைந்தது. ஏதாவது சாப்பாடு சமைத்திருப்பாள் மாதிரித் தெரியவில்லை. ஃபிறிட்ஜை மூன்று தரம் திறந்து பார்த்திட்டன், அங்கும் சாப்பிடவோ சமைக்கக் கூடியதாகவோ எதுவும் இல்லை. வந்த கோபத்தை வெறுமன ஃபிறிட்ஜ் கதவில் தான் என்னால் காட்ட முடிந்தது.

வெளியில் இடி இடிக்கும் சத்தம் மேலும் பலமாகக் கேட்டது. காற்றும் மழையும் ஒன்றுடன் ஒன்று யார் பலசாலி என்று பார்த்துவிடலாம் என்பது போல் போட்டி போட்டுக் கொண்டிருந்தன.

பீற்சாவுக்கு ஓடர் பண்ணிப் போட்டு, விஸ்கியுடன் சோபாவில் சாய, தொலைபேசி கீச்சீட்டது.

“நான் கேசவன் கதைக்கிறன். என்ரை வைஃப், உங்கடை காரின்ரை பின்னாலை இடிச்சுப் போட்டாவாம் … அதைப் பற்றிக் கதைக்கிறதுக்காகத் தான் எடுத்தனான்.”

“அண்ணை, இந்தப் பொம்பிளையளுக்கு கார் ஓடவும் தெரியாது, ஒரு மண்ணாங்கட்டியும்…………”

“சரி, உங்கடை காரை நாங்கள் திருத்தித் தாறம். அல்லது திருத்துறதுக்கு காசு தாறம். எங்கை வந்தால் நான் உங்கடை காரைப் பாக்கலாம்?”

“காலமை 7 மணிக்கு ஃபின்ஞ் அண்ட் கீல் இலை இருக்கிற க்காஸ் ஸ்ரேஷனுக்கு வந்தியள் எண்டால் பாக்கலாம்? எப்படியும் அதைத் திருத்த ஒரு 400 ரூபா மட்டிலை வரும்…”

“சரி, சந்திக்கேக்கை அதைப் பற்றிக் கதைப்பமே, அப்ப வைக்கிறன்.”

ஃபோனை வைத்ததும், அந்த விபத்து என் கண்ணுக்குள் வந்தது.

“என்ன… பாத்து ஓடுறேல்லையே? என்ரை புதுக்கார், இது! ஒரு சின்ன அடையாளம் கூட இருக்கேல்லை… எங்கை, உங்கடை லைசன்ஸ், இன்சூரன்ஸ், போன் நம்பர் எல்லாத்தையும் தாங்கோ பாப்பம்.” தமிழ் பெண் என்று தெரிந்ததும் இறங்கின வேகத்தில் முழங்கிறன், நான்.

அவற்றை எடுத்து என்னிடம் நீட்டியபடி, “ ஸொறி,” என்றவள், தனது செல்ஃபோனில் “சரி, ஓகே.” என்று சொல்லி விட்டு, “என்ரை ஹஸ்பண்ட் உங்களோடை கதைக்கிறாராம், ஓகேயா…” என்கிறாள்.

“இப்ப, நான் நினைச்சால் பொலிசைக் கூப்பிடலாம்…, தெரியும் தானே! நம்பி, உங்களை விடுறன். என்னைப் பேய்க்காட்டலாம் எண்டு மட்டும் நினைக்காதையுங்கோ! பிறகு வந்து உங்கடை வீட்டிலை தான் நிற்பன், சரியோ?” எண்டு நான் சொன்னதன் தொடர்ச்சியாகத்தான் இந்தக் கோல் வந்திருக்கிறது.

‘வீட்டிலை போய் சாயம் கொட்டி அழுதிருப்பாளாக்கும், அல்லது அவன் அவளை எப்படி இறுக்கினானோ ஆருக்குத் தெரியும்?’ மனசுக்குள் நினைத்துக் கொள்கிறேன்.

பீசா வருவதற்கான நேரம் போகப்போக, மனிசியிலை எனக்கு எரிச்சல் எரிச்சலாய் வந்தது. “சனியன்….. புருஷன் பசியிலை வருவானே, சாப்பாட்டுக்கு என்ன செய்வான் எண்டு நினைச்சுதே… காரைக் குடுத்திருக்கக் கூடாது. எக்கேடாவது கெட்டுப்போகட்டும் எண்டு விட்டிருக்க வேணும். பசியோடை அவசரமாய் வந்து நான் காரைக் குடுக்கிறன், அந்த நன்றியில்லாத நாய், என்னோடை கத்திப்போட்டுப் போகுது… எல்லாம் நான் குடுத்த இடம். வைக்கிற மாதிரி வைச்சிருக்க வேணும்.” எனக்கு நானே சொல்லிக் கொள்கிறன்.

காலமை வேலையால் வந்து அவள் கதவு திறக்கும் சத்தம், என்னை இவ்வுலகுக்குக் கொண்டு வந்தபோது தான் பீற்சாவையும் சாப்பிடாமல் போதையின் உச்சத்தில் , சோபாவிலையே சயனித்திருக்கிறேன் என்பது புரிகிறது. அத்துடன் கேசவனின் 7 மணிச் சந்திப்பும் நினைவுக்கு வருகிறது.

எழும்பி அவசரம் அவசரமாக உடுப்பு மாத்திக் கொண்டு ஓடின போது மனதில் ஒரே எரிச்சலாகவும் ஆத்திரமாகவும் இருந்தது. போதாதற்கு வயிறு வேறு புகைந்து கொண்டிருந்தது.

ஃபின்ஞ் அண்ட் கீல் க்காஸ் ஸ்ரேஷனை நோக்கிக் காரைத் திருப்பிய போது, என் காரை இடித்த அந்தச் சிவப்பு நிறக் ஹொண்டா எனக்காகக் காவல் நிற்பது தெரிந்தது. எனது சில்வர் கலர்பிஎம்டபிள்யூ ஐக் கொண்டு போய் அந்தக் ஹொண்டாவுக்குப் பக்கத்தில் நிறுத்துகிறேன். அந்தக் காருக்குள் அவளுடன் இருந்து கதைத்துக் கொண்டிருந்த அவன், என்னைப் பார்த்து விட்டு காரை விட்டிறங்கி வெளியே வருகின்றான்.

என் மனதில் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் பறந்தன, பல மின்மினிப் பூச்சிகள் வட்டமடித்தன. என்னால் நம்பவே முடியவில்லை. “ஓ, நீங்கள்…. எழுத்தாளர் ஆதித்தன் தானே?” ஆச்சரியத்துடன் கேட்ட நான் தொடர்கிறேன். “எப்படியிருக்கிறியள்? வாங்கோவன், ஒரு கோப்பி குடித்துக் கொண்டு கதைப்பம்.”

பதிலுக்கு மென்மையாகச் சிரிக்கின்றான் அவன். பிறகு என் காரின் பின்பக்கத்தை என் அனுமதியுடன் போட்டோ எடுத்துக் கொள்கிறான். அவள் தான் கோப்பி குடிப்பதில்லை எனக் காரிலேயே இருந்து கொள்கிறாள்.

அந்தக் கோப்பிக் கடை மிக அமைதியாகவும் வெகு துப்பரவாகவும் இருக்கின்றது. இரண்டு கோப்பியை வாங்கிக் கொண்டு இருந்த கையோடை நான் ஆரம்பிக்கிறேன்.

“உங்கடை எழுத்திலை, பேச்சிலை எனக்கு ஒரு பைத்தியம். என்ன மாதிரி எழுதிறியள்! எவ்வளவு தெளிவாய்ப் பேசுறியள்! அப்படியே ஆட்களின்ரை மனசுக்கை போய்ப் பாத்த மாதிரி! மனிச மனங்களையும் அதிலை ஏற்படுற தாக்கங்களையும் நீங்கள் விளங்கிக் கொண்ட மாதிரி எல்லாராலும் விளங்கிக் கொள்ள முடிந்தால் எங்கடை பாதிப் பிரச்சனை குறைஞ்சிடும்… ம்… உங்கடை மனிசி கொடுத்து வைச்சவ.”

“தாங்ஸ், ஆனால் நீங்கள் என்னை அதிகமாய்ப் புகழுறியள். அப்படி ஒன்றும் நான் பெரிய ஆள் இல்லை… சரி, விஷயத்துக்கு வருவம். உங்கடை காரின்ரை பின்பக்கத்தைப் பாத்தனான். நீங்கள் சொன்னது ….. 400 டொலர் அதிகம் எண்டு நான் நினைக்கிறன்.”

“அதை விடுங்கோ, அதைப் பற்றி பிறகு யோசிப்பம். உங்களை இப்படித் தனியச் சந்திக்கக் கிடைக்கும் எண்டு நான் கனவிலும் நினைக்கேல்லை….”

“எகேன், யூ ஆர் கிவ்விங் மீ ரூ மச் கிறடிற்ஸ்.”

“நீங்கள் தன்னடக்கமாகக் கதைக்கிறியள். சரி, ஸ்காபரோவிலை தானே இருக்கிறியள். வீட்டை வந்து ஆறுதலாய்ச் சந்திக்கலாமோ?”

“இல்லை, நான் இருக்கிறது மாக்கத்திலை….”

“என்ன…? அப்ப அவவின்ரை லைசன்ஸிலை ஸ்காபரோ எண்டு …”

“இப்ப அவ என்னோடை இல்லை, வீ ஆர் டிவோர்ஸ்ட்.”

“வட்… ரியலி?” ஒருவகைக் கவலையுடனும் ஏமாற்றத்துடனும் சொல்கிறேன் நான்.

“வெல், தி ஸ் லைவ்! எங்களுக்குள்ளை ஒத்துப் போகேல்லை… அதாலை நாங்கள் புருஷன் பெண்சாதியாக வாழ முடியாமல் போச்சுது. இப்ப நாங்கள் வெறும் நண்பர்களாக இருக்கிறம். அதாலை போராட்டமில்லை. பிரச்சனைகளுமில்லை. ஆளுக்கு ஆள் உதவியாக இருக்கப் பாக்கிறம்.”

“ ஓ மை கோட்! உங்களை விட்டிட்டுப் போன ஒரு பொம்பிளைக்கு உதவுற உங்கடை நல்ல மனசைப் பாத்து என்ன சொல்றது எண்டே எனக்குத் தெரியேல்லை! இப்படியான பொம்பிளையைளைக் கோவிக்காமல், அவதூறு சொல்லாமல் இருக்கிறவையளைக் காணுறதே அருமை. அப்படியிருகேக்கை, நீங்கள் —- உங்களிலை எனக்கு இருந்த மரியாதை இப்ப இன்னும் அதிகமாயிட்டுது. யூ ஆர் றியலி கிறேற்!”

“வில்லங்கமாக இழுத்து வைச்சுக் கொண்டு ஆளை ஆள் வருத்துறது பெரிய பாவம் இல்லையோ? எதையும் சமாளிச்சு வாழலாம் எண்டது யதார்த்தமில்லை எண்டு நான் நினைக்கிறன். பிள்ளைகளுக்காக, சமுதாயத்துக்காக எண்டெல்லாம் காரணம் தேடிக் கொண்டு பலர் பொய்யுக்கு வாழினம். உண்மையாக வாழவேணும் எண்டு நாங்கள் நினைச்சம்… அவ்வளவுதான்!”

“எனக்கும் இது ஒரு படிப்பினை தான்.” என் மனசுக்குள் சொல்லிக் கொள்கிறேன்.

“ரண்டு பேற்ரையும் வாழ்க்கைப் பெறுமானங்கள் முற்றிலும் வேறாய் இருந்தால் எவ்வளவுக்கு எண்டு தான் விட்டுக்கொடுக்க முடியும்? ஒருத்தருடைய தனித்துவத்தை இழந்து வாழுறதுக்கு அன்பு, காதல், தியாகம் எண்டெல்லாம் பெயரிடுறது சுத்த அபத்தம். பிடிச்ச விதத்திலை வாழவேணும். பரஸ்பரம் இருவரும் மனமொத்து ஏற்றுக்கொள்ளும் நிலைமை இல்லையெண்டால் காதல் வாழாது. காதல் இல்லாட்டி வாழ்க்கை சுவைக்காது…. சரி, நிறையக் கதைச்சிட்டம்…. வந்த விஷயத்துக்கு வருவம். உங்கடை காரை இடிச்சது அவ, உங்கடை காரைத் திருத்த வேண்டியது எங்கடை பொறுப்பு, எங்காவது கொண்டு போய் மதிப்பீடு செய்து போட்டுச் சொல்லுங்கோ. மீண்டும் பேசிக் கொள்ளுவம்.” சொல்லிவிட்டு எழுந்து நின்று எனக்கு கைகொடுக்கிறான் கேசவன்.

இரண்டு பேருமாக வந்து எங்கள் எங்கள் கார்களுக்குள் ஏறிக் கொள்கிறோம். வேலையிடத்தை நோக்கி என் காரைத் திருப்புகிறேன், நான். ஆனால் கை வீட்டுக்குப் ஃபோன் பண்ணுகிறது.

“என்ன செய்கிறாய்? படுத்திட்டியா?”

“இப்பத் தான் படுத்தனான், சொல்லுங்கோ.”

“உன்னோடை கதைக்க வேணும் போலிருந்தது, அது தான் எடுத்தனான்…. ஸொறி…, நேற்று நான் வீட்டுக்கு வர நேரம் போகும் எண்டதை ஃப்போன் பண்ணிச் சொல்லியிருந்திருக்கலாம்…”

“நானும் தான் ஸொறி சொல்லோணும். பீற்சா வாங்கியிருக்கிறியள். ஆனால் சாப்பிடேல்லை. பாக்கக் கவலையாக இருந்தது. நேற்று எனக்குச் சரியான வயித்துக்குத்து. அதுதான் ஒண்டும் செய்ய முடியேல்லை. ஏதாவது வாங்கித் தந்துபோட்டு போகத்தான் நினைச்சனான். பிறகு …… காத்திருந்து, காத்திருந்து களைச்சதிலை கோவம் வந்திட்டுது. இரவைக்கு வடிவாச் சமைச்சு வைக்கிறன். என்ன?”

“சரி, ஒரு நேரம் சாப்பிடாட்டில் என்ன, செத்தா போகப் போறன்? நீ படு. 3 மணி மட்டிலை நான் சாப்பாடு வாங்கிக் கொண்டு வாறன். சேர்ந்து சாப்பிடுவம்.”

“ஓ !… ஒரு நாளைக்கு நல்லாய் இருப்பியள்…. பிறகு, இன்னொரு நாளைக்கு நாய் மாதிரி நிற்பியள்…என்ன செய்கிறது… சண்டை பிடிக்கிறியள் எண்டு விட்டிட்டேலுமோ….”

“ஏய், என்ன… என்னடி சொன்னாய்?…. சரிதான் … விட்டிட்டுப் போடி..!” செல்லமாய்க் கடிந்து கொள்கிறேன்…. அவள் அதை ரசித்துச் சிரிப்பது காதில் கேட்கிறது. ஃபோனை வைக்கிறேன்.

எங்கிருந்தோ வந்த ஒரு அமைதியில், மனம் சாந்தமடைந்துகொண்டது.

நன்றி: ஜீவநதி கனடாச் சிறப்பிதழ் Sept 2012

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *