மனசுதான் காரணம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 23, 2024
பார்வையிட்டோர்: 981 
 
 

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

சம்பத் ஏதோ எழுதிக் கொண்டிருந்ததை கண்டு பொறுக்க முடியாமல் “என்ன எழுதறீங்க?” என்று கேட்டுக்கொண்டே நளினி அவனருகில் வந்தாள். .

“ஹி, ஹி… கதை எழுதுகிறேன்” என்று இளித்தான் சம்பத்.

குரங்கு வாழைப்பழத்தைப் பிடுங்கி ஓடுவது போல் அந்தக் காகித்தை அவனிடமிருந்து பிடுங்கி ஓடினாள். அருகிலுள்ள குப்பை தொட்டியில் சுக்கு நூறாய் கிழித்தெறிந்தாள்.. மனைவி பின்னால் ஓடி வந்த சம்பத்துக்கு ஆயிரம் தேள் கொட்டியது போல் வலித்தது கண்ணீர் மல்க நின்றான்.

நளினி எப்போதுமே அப்படிதான். அவளுக்குப் வாசிப்பு என்றாலே ஒரு வெறுப்பு. மற்றவர் படித்தாலும் பிடிக்காது. எதற்கு வெட்டியாய்ப் படிக்கிறீங்க?..என்பாள்.

அவனுக்குச் சிறு வயதிலிருந்தே புத்தகம் என்றால் உயிர் ; படிப்பது என்றால் பாயசம் குடிப்பதுபோல்.

ஒரு நாள் அவன் புத்தகம் படித்துக்கொண்டிருக்கும் போது அவள் பேசியதை அவன் காதில் போட்டுக் கொள்ளவில்லை. . ”நாசமாப் போக என்று கூவி ஆத்திரத்துடன் புத்தகத்தைத் தூக்கி கோபத்துடன் வெளியே வீசி எறிந்தாள். அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால் புத்தகம் மழையில் நனைந்தது… அவன் கண்ணில் ரத்தக் கண்ணீரே வந்து விட்டது. இரக்கமில்லாத ராட்சசியே. கலைமகளைத் தூக்கி எறியறே. அந்தத் தெய்வம்தான் உனக்குப் புத்தி புகட்ட வேண்டும் “ என்று சொல்ல நினைத்தான். ஆனால் சொல்லவில்லை. ஏனென்றால் நளினிக்கு இரத்த அழுத்தம் உண்டு. அதனால் சின்ன விசயத்துக்குக் கூட ரொம்பக் கத்துவாள். சொன்னதையே விடாமல் பலமுறை சொல்லிக் கொண்டிருப்பாள். அவள் உடல்நலம் கெடக்கூடாதென்பதற்காகத்தான் சம்பத் அவளுக்கு இணக்கமாய் அவள் சொல்வதைத் தட்டாமல் செய்துவிடுவான்.

ஒருமுறை அவன் ஒரு இலக்கியக் கூட்டத்திற்குச் சென்றான். முதன்முதலாக செல்லும் கூட்டமென்பதால் அவனுக்குப் பிரமிப்பாய் இருந்தது.

கூட்டம் முடிந்து வீட்டுக்குப் போகும்போது இரவு பத்து மணி ஆகிவிட்டிருந்தது. டைனிங் டேபிளின் மீது மனைவி வைத்திருந்த சோறும் மோரும்தான் அவனுக்கு உணவு..

எதிர்ப்பு அதிகரிக்க அதிகரிக்க தடுப்பதைச் செய்து விட வேண்டும் என்னும் எண்ணம் சிலருக்கு ஏற்படும் . அதுபோல எப்படியும் ஒரு கதை எழுதி அவளிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று சம்பத் உறுதி கொண்டான்.

அப்போது ஒரு பிரபல வாரப் பத்திரிகையில் சிறுகதைப் போட்டி அறிவிப்பு வந்திருந்தது. எப்போதும் கதையைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்ததால் என்ன, எப்பப் பார்த்தாலும் கற்பனை உலகில் மேய்ஞ்சிண்டிருக்கீங்க. அது ஒரு பொய்யான வாழ்க்கை” என்று நையாண்டி செய்வாள்.

”ஒண்ணுமில்லை” என்பான் அவன் . கற்பனைச் சக்கரத்தை சுழற்றிவிட்டு கதையைப் பற்றியே எப்போதும் சிந்தனையில் இருந்ததால்’ஆமாம் ‘என்பதற்கு இல்லையென்றும் ‘இல்லை’ என்பதற்கு ‘ஆமாம்’ என்றும் பொருள்படும்படி தலைஆட்டி விட்டு அவளிடம் திட்டு வாங்குவான்.

இரண்டு வாரத்தில். கஷ்டப்பட்டு .ஒரு கதையை எழுதிவிட்டான். . அந்தக் கதையை போட்டிக்கு அனுப்பி வைத்தான். பரிசு கிடைக்கும் என்று ஆவலுடன் இருந்தான்.. அவன் கதைக்குப் பரிசு கிடைக்கவில்லை.


ஒரு நாள் காலை தேநீர் சாப்பிட்டபின், நளினி, இன்றைக்கு அலுவலகம் விட்டதும் நூலகத்திற்குப் போய் புத்தகம் எடுத்து வருகிறேன் என்றான்.

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நீங்கள் ஆபீஸ் விட்டதும் வீட்டிக்கு நேராக வாருங்கள். சாயந்தரம் கோவிலுக்குப் போக வேண்டும்.

”நீ என்றைக்காவது ஒரு நாள் மனசு மாறணும் நளினி. ‘வாழு வாழ விடு” என்பதைப் போல் நீயும் நிறைய புத்தகங்களைப் படிக்க வேண்டும். நான் படித்தாலும் ஆட்சேபிக்கக் கூடாது”.

“நானாவது படிக்கிறதாவது. அது மட்டும் இந்த ஜென்மத்திலே நடக்காது….. நான் படிக்கவும் மாட்டேன். படிக்கவும் விட மாட்டேன் . நீங்கள், நான் சொல்றபடிதான் கேட்கணும்” என்று சிரித்தாள்.

அவளை மாற்றவே முடியாது என்று தோன்றியது சம்பத்துக்கு.

“அடுத்த ஜென்மத்தில் நீ பிறந்தால் புத்தக ரசனையோடு பிறக்க வேண்டும் என்று கடவுளைப் பிரார்த்திக்கிறேன்.. அதுதான் நான் ஆசைப்படுவது!” என்று சொல்லிவிட்டு பெருமூச்சு விட்டான்.

முகத்தைத் தோளில் ஒரு வெட்டு வெட்டியவள் சமையலறைக்குள் புகுந்தாள்.

அவளுக்கு அவனுடைய புத்தகப் பித்து பெருங்கவலை அளித்தது. அம்மாவிடம் அலைபேசியில் புலம்பினாள்.

”எங்க வீட்டுக்காரர் எப்ப பார்த்தாலும் புத்தகமும் கையுமாகத்தான் இருக்காரு. அவரை எப்படி மாத்தறதுன்னே தெரியலை. எல்லாம் என் தலையெழுத்து . ”

“அடிப்போடி பைத்தியகாரி. எனக்கு எழுபது வயசாகிறது. நான் ஆன்மீக புத்தகங்கள், நாவல்கள், பத்திரிகைகள்….படிக்கிறேன். என்னைப் பார்த்தாவது கத்துக்க. உனக்குப் பிடிச்சதை நீ செய். ஆனால் உனக்குப் பிடிச்சதை மத்தவங்க செய்யணும் என்று எதிர்பார்க்காதே. மத்த ஆம்பிளைகள் மாதிரி அவர் என்ன குடி, ரேஸ், சீட்டாட்டம் என்று தப்பான காரியங்களிலே ஈடுபடலை. நல்ல காரியத்தைத்தானே செய்கிறார் இதுக்குபோய் அலுத்துக்கிறயே. வேறு கெட்ட பழக்கம் இருக்கா? அவர் பாட்டுக்குப் படிச்சிண்டிருக்கார். குறை அவர் கிட்டே இல்ல; உங்கிட்டேதான் இருக்கு. பார்த்து நடந்துக்க” என்ற தாயிடம் ”போம்மா அந்த ஆளைப் பத்தி உனக்கு எதுவும் தெரியாது” என்றாள்.

“உன்னைப் பத்தி எனக்கு நல்லா தெரியுமே. நீ பள்ளியிலே படிக்கும்போது மோஸ்ட் ஒபிடியண்ட் ஸ்டுடண்ட் என்று டீச்சர் கிட்டே பேர் வாங்கின நீ. எப்படிடீ… எப்படிடீ ? இப்படி மாறிட்டே சொல்லவேண்டியதை சொல்லிட்டேன். இனிமே உன் பாடு . எப்படி நடந்துப்பியோ நடந்துக்க ஆனா இன்னொரு நாள் இப்படி ஒரு புகாரோடு வரக்கூடாது”. என்றாள்.

எதிர் வீட்டு மாலாவிடம் யோசனை கேட்டாள்.

“நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும், அது போல் நல்ல புத்தகத்தின் அருமை அதைப் படித்தால்தான் அறிய முடியும் நான் ஒவ்வொரு வருடமும் புத்தகக் கண்காட்சியின் போது குறைந்தது ஆயிரம் ரூபாய்க்காவது புத்தகம் வாங்குவேன். என்னுடன் வா . உனக்கு ஒரு புத்தகம் தருகிறேன். படித்துவிட்டு கொடு” என்று நளினி பின்தொடர அவள் வீட்டுக்குள் சென்றாள். ”இந்த புத்தகத்தைப் படி” என்று கல்கியின் பொன்னியின் செல்வன்’ புத்தகத்தை நளினியிடம் கொடுத்தாள்.

புத்தகத்தை ரசித்துப் படித்து முடித்த நளினி, போர் அடிக்கும் என்று நினைத்தேன். விறுவிறுப்புடன் கல்கண்டாய் இனிக்கிறதே. அடடா, இவ்வளவு நல்ல புத்தகத்தை இதுவரை படிக்காமல் விட்டு விட்டோமே” என்று வருத்தப்பட்டாள்.. அவளுக்குப் புத்தகங்களின் மேல் இதுவரை இருந்த வெறுப்பு விருப்பமாய் மாறிவிட்டது. மேலும் மேலும் புத்தகங்களை மாலாவிடம் வாங்கிப் படித்தாள்.

அவன் தான் எழுதிய கதையை வாராந்திர பத்திரிகைக்கு அனுப்பி விட்டு கதை வந்திருக்கிறதா: என்று ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை பத்திரிகையை வாங்கிப் பார்ப்பான்,. கதை வரவில்லையே என்று தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டான்.

அவன் சோகமாக இருந்ததைப் பார்த்து,”ஏங்க, ஒரு மாதிரியாய் இருக்கீங்க?” என்று நளினி வினவினாள்.

நானும் எவ்வளவோ முயற்சி செய்கிறேன். என் கதை எதுவும் பத்திரிகையில் பிரசுரம் ஆகவில்லை..

”கவலைப் படாதீங்க. எதையும் பாசிடிவா அப்ரோச் பண்ணுங்க. இனிமே. நீங்கள் கதையை எழுதி கொடுங்கள். நா மத்தியானம் கணினியில் டைப் செய்து கொடுக்கிறேன், நிறைய எழுதுங்க. பத்து கல்லை விட்டெறிஞ்சா ஒரு கல் பட்டாவது மாங்காய் விழுமல்லவா?” என்றாள்.

இப்போதெல்லாம் தன் கணவன் படிப்பது, எழுதுவது பற்றியோ அவள் கவலைப்படுவதும் இல்லை; அதைத் தடுப்பதுமில்லை. டீவி பார்ப்பதைக் குறைத்துக் கொண்டு தன் கணவன் படிக்கும்போது தானும் ஏதாவது ஒரு புத்தகத்தைப் படிப்பாள். குடும்பப் பொறுப்பு முழுவதையும் அவள் ஏற்றுக் கொண்டாள்.

அவர்களுடைய வாழ்க்கைப் படகு ஆனந்த நதியில் அழகாக போய்க் கொண்டிருக்கிறது. குழந்தைக்கு வைக்கும் திருஷ்டிப் பொட்டு போல் அவ்வப்போது வாரந்திர பத்திரிகையை யார் முதலில் படிப்பது என்பதற்காக உண்டாகும் சர்ச்சையை மட்டும் அவர்களால் தவிர்க்க முடியவில்லை!

எழுதி எழுதி அவனுக்கு எழுத்து வசப்பட்டு விட்டது.அவனுடைய கதைக்குப் பரிசு கிடைத்து விட்டது..

”நீ கொடுத்த ஊக்கத்தினால்தான் என் கதைக்குப் பரிசு கிடைத்தது” என்றவன் சந்தோஷ மிகுதியில் மனைவியை இறுக்கிக் கட்டிப் பிடித்து கன்னத்தில் இதழை வைத்தான். ”ஆமாம் புத்தகமென்றாலே விரோதியாக இருந்த நீ எப்படி மனசு மாறினாய்?” என்று கேட்டான்.

“எல்லாவற்றுக்கும் காரணம் மனசு என்னும் மந்திரவாதிதான். விரும்பும் ஒன்றின்மீது ஈடுபாடு குறைவதற்கும் விரும்பாத ஒன்றின்மீது விருப்பம் வருவதற்கும் மனசுதான் காரணம்!“ என்று அவள் சிரித்துக்கொண்டே கூறினாள்.

வெளியீடு: FreeTamilEbooks.com

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *