மனசுக்குள் ஓரு மணிமண்டபம்

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 7,169 
 
 

அங்கங்கே கூட்டம் கூட்டமாக நின்று சிலர், பரபரப்பாக ஏதோ பேசிக் கொண்டு இருக்கிறார்களே என்பதைப் பற்றிக் கவலை ஏதும் இல்லாமல் வழக்கம் போல் கடையை விரிக்க ஆரம்பித்தாள் ராமாத்தாள் பாட்டி. மணி எட்டாகிவிட்டது. இன்னும் கொஞ்ச நேரத்தில் பள்ளிக்கூடம் வரத் தொடங்கி விடுவார்கள். அவர்கள் வருவதற்குள் மிட்டாய் பாட்டில்களை எல்லாம் எடுத்து வைத்தாக வேண்டும். கடை என்றால் ஒரு நரம்புக் கட்டில்தான், கடை. வியாபாரம் முடிந்ததும் மடக்கிக் தூக்கிக் கொண்டு போய்விடுவாள். ஒன்பது மணிக்கு பள்ளிக்கூட மணி அடித்துவிடுவார்கள். இந்த ஒரு மணி நேர வியாபாரம்தான் பாட்டிக்கு. ஆனால் அந்த ஒரு மணி நேரமும் வியாபாரம் சூடு பறக்கும்.

மனசுக்குள் ஓரு மணிமண்டபம்ஐம்பது பைசா சாக்லெட் தொடங்கி ஐந்து ரூபாய் சாக்லெட் வரை குழந்தைகள் எது கேட்டாலும் அவளிடம் கிடைக்கும். பேனா, பென்சில், ரப்பர், பென்சில் திருகி, இங்க் பாட்டில், ஸ்கேல், ஜாமெட்ரி பாக்ஸ், குச்சி டப்பா, நோட்டுப் புத்தகங்கள், கிராப் பேப்பர், மேப் புத்தகங்கள், கலர் பென்சில்கள், வாய்ப்பாடு, கோடு போட்ட பேப்பர், கோடு போடாத பேப்பர் என்று அவ்வளவும் ஒரு சின்ன நரம்புக் கட்டிலுக்குள் அடக்கம்.

குழந்தைகள் பார்த்தவுடன் ஆசைப்பட்டுக் கேட்கிற மாதிரி, தினமும் புதிது புதிதாக மிட்டாய்களை வாங்கிக் கொண்டு வந்து கண்ணில் படுகிற மாதிரி வைத்துவிடுவாள். இந்த இருபது வருட அனுபவத்தில் வியாபார நுணுக்கத்தை நன்றாகவே கற்றுக் கொண்டிருந்தாள்.

சனி, ஞாயிறு மற்றும் பள்ளி விடுமுறை நாட்களில் பக்கத்து டவுனுக்குப் போய் குழந்தைகளுக்குத் தேவையானதை வாங்கிக் கொண்டு வருவாள். தின்பண்டங்களும், விளையாட்டுப் பொருள்களும் வாங்குவதில் அவளிடம் ஒரு பட்டப் படிப்பே முடிக்கலாம். பொம்மை வைத்த பென்சில்கள், கீச்… கீச்… என்று கத்திக் கொண்டே எழுதும் பென்சில்கள், ரொம்பக் குட்டியாக இருக்கக் கூடிய கட்டைவிரல் சைஸ் பேனா, ரொம்பப் பெரிய மேஜிக் பேனா, பொம்மை செல்போன்கள், பொம்மை கார் என்று எல்லாவற்றையும் தேடிப்பிடித்து வாங்குவாள். தேவையே இல்லையென்றாலும் குழந்தைகள் அப்பாவிடம் அழுது புரண்டு இந்த பொம்மை பென்சில்களை வாங்கிக் கொண்டு போவார்கள்.

“”ஏன் பாட்டி இதையெல்லாம் வாங்கி வைக்கிற?” என்று சில பெற்றோர் இவளிடம் செல்லமாகக் கோபித்துக் கொள்வதும் உண்டு.

சில வருடங்களுக்கு முன்பு வரை, நெல்லிக்காய், இலந்தைப் பழம், மாங்காய்க் கீற்று இவற்றில் மிளகாய்ப் பொடி தூவி விற்றுக் கொண்டிருந்தாள். குழந்தைகளும் ஆசையாக விரும்பிச் சாப்பிடுவார்கள். ஆனால் சுகாதாரம் கருதி அவற்றையெல்லாம் இப்போது விற்பதில்லை. மிகச் சுத்தமாகச் சுற்றப்பட்டுள்ள, அல்லது பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டுள்ள தின்பண்டங்களை மட்டும்தான் இப்போதெல்லாம் இவள் கடையில் பார்க்க முடியும்.

காலையில் ஒரு மணி நேரத்துக்குள் கல்லாப் பெட்டியில் சில்லறைக்காசுகள் நிரம்பி வழியும். யாருக்கும் முகம் சுளிக்காமல் கேட்டதைக் கொடுப்பாள் ராமாத்தாள்.

“”உனக்கு என்ன ராஜா வேணும்? செல்லம் உனக்கு என்ன வேணும்? தங்கக்குட்டி நீ ஏன் அழற?” புன்னகை வழியப் பேசுவாள்.

“”சில்லறை இல்லாட்டி பாப்பாவை பள்ளிக் கூடத்துல விட்டுட்டு பிறகு வந்து குடு தம்பி… ஏன் இப்படி அரக்கபரக்க தேடறீங்க? ஓடியா போறீங்க…”

குழந்தைகள் யாராவது சாக்லெட்டைத் திருடிக் கொண்டு போனால் எல்லாருக்கும் முன்னால் திட்டமாட்டாள். அப்புறம் தனியாகக் கூப்பிட்டு, “”பாட்டி பாவம்ல… இப்படிச் செய்யலாமா?” என்று அழுவாள். அதோடு அந்தக் குழந்தைகள் திருடுவதையே விட்டுவிடுவார்கள்.

“”இன்னைக்கு அஞ்சாம் கிளாஸýக்கு சமூக அறிவியல் பரீட்சை, மேப் வாங்கிட்டுப் போகலியா?” என்று ஞாபகப்படுத்துவாள். பள்ளி விவகாரங்கள் அந்த அளவுக்கு அத்துப்படி.

“”இருபது வருசமா இந்தப் பள்ளிக்கூடத்து வாசல்லதான் உட்கார்ந்திருக்கேன். இது கூடத் தெரியாதா என்ன?” என்று அடிக்கடி பெருமையாகச் சொல்லிக் கொள்வாள்.

என்னைக்கு லீவ்? என்னைக்கு ஆண்டு விழா? எப்போது பரீட்சை தொடங்கும்? எப்போது பரீட்சை முடியும்? என்று எல்லா விவரமும் சொல்வாள்.

“”யேய்… போடா… உங்க அப்பாவே என்கிட்ட மிட்டாய் வாங்கிச் சாப்பிட்டவன்” என்று சொல்லிக் கொள்வதில் அவளுக்கு அப்படி ஒரு பெருமை.

ஒருமுறை இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் விழா எடுத்தபோது.. இவளையும் அழைத்துச் சால்வை அணிவித்துப் பாராட்டியபோது உச்சி குளிர்ந்து போனாள்.

“”ஏ… கிழவி உனக்குச் சேதி தெரியாதா? கொஞ்சங்கூட பதட்டமில்லாம முட்டாய் வித்துட்டு இருக்க?”

– கிருஷ்ணமூர்த்தி ஐயா கேட்ட போது எதுவும் தெரியாமல் குழம்பினாள் ராமாத்தாள். கிருஷ்ணமூர்த்திதான் இந்தப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர். வெள்ளை வேட்டி மடிப்பு கலையாமல் காரில் வந்து இறங்குவார்.

“”ஏ… கிழவி நீ என்ன கண்டதையும் கொண்டு வந்து இங்க விக்கற?” என்று அவ்வப்போது கத்திவிட்டு இவளின் பதிலுக்குக் கூட காத்திருக்காமல் போய்விடுவான்.

“”கெழவி… நான் பாட்டுக்குப் பேசிக்கிட்டு இருக்கேன். நீ என்ன பதில் பேசாம ஏதோ யோசனையில கெடக்க? ரொம்ப பிசியோ? ”

“”என்ன பிரச்னைய்யா… சொல்லுய்யா… நீ நல்ல நாள்லேயே சொல்லித் திட்டுவ… இன்னைக்கு ஏதோ பூடகம் போடற… சொல்லுய்யா…. என்ன பிரச்னை?”

“”நம்ம பள்ளிக்கூடம் இப்போ ஒரு நடுநிலைப் பள்ளியாதான இருக்குது. இதை உயர்நிலைப் பள்ளியா மாத்தப் போறாங்களாம். அதாவது இப்போ எட்டாங்கிளாஸ் வரைக்கும்தான பசங்க படிக்கிறாங்க… இதைப் பத்தாங் கிளாஸ் வரைக்கும் படிக்கிற பள்ளிக் கூடமா மாத்தப் போறாங்களாம்”

“”நல்ல சேதிதானய்யா… இதுல என்னய்யா பிரச்னை?”

“”அவசரப்படாத ஆத்தா… உயர்நிலைப் பள்ளியா மாத்தற அளவுக்கு இங்க இடவசதி பத்தாதாம். அதனால அஞ்சுகிலோ மீட்டருக்கு அப்பால அவனியாபுரத்துல இருக்குற அரசாங்கத்துக்குச் சொந்தமான எடத்துக்கு பள்ளிக்

கூடத்தை மாத்தப் போறாங்களாம்”

அவளுக்கு இடி விழுந்ததுபோல இருந்தது. அப்படியே கட்டில் ஓரமாக உட்கார்ந்து கொண்டாள்.

“”ஏய் பாட்டி… கவலைப்படாதே… உனக்கு மட்டுமா கவலை? இந்த ஊர்க்காரங்க எல்லாருக்கும்தான் கவலை. இங்கேயே ஹைஸ்கூல் கட்டணும்னா இன்னும் ஆறு சென்ட் இடம் வேணுமாம்… இப்ப விக்கிற விலையில ஆறு சென்ட் இடம்னா சும்மாவா போச்சு… சென்ட் ஒரு லட்சம் வச்சாக்கூட ஆறுலட்சம் ஆச்சே”

கிருஷ்ணமூர்த்தி பேசுவது எதுவுமே இவள் காதில் விழவில்லை. தன்னுடைய வீட்டுக்காரர் இருபது வருடங்களுக்கு முன்பு கரண்ட் ஷாக் அடித்து இறந்துபோனபோது அனாதையாக நின்ற இவளுக்கு ஆறுதல் கொடுத்து உதவியது இந்தப் பள்ளிதான்.

“”இங்க பாரு ராமாத்தா.. நீ பாட்டுக்கு வந்து ஸ்கூலுக்கு முன்னாடி தின்பண்டங்களை வெச்சு வியாபாரம் பண்ணிக்க… எந்தத் தொந்தரவும் இல்லாத வேலை… காலைல ஒரு மணிநேரம் சாயந்திரம் ஒரு மணி நேரம்… அதுல வந்த வருமானம் உன் ஒண்டிக்கட்டைக்குப் போதும்” என்று அன்றைக்குப் பள்ளியில் வேதவல்லி மேடம் சொன்னது நினைவுக்கு வந்தது ராமாத்தாளுக்கு.

அன்று முதல் இன்று வரை இவளுக்கு இந்தப் பள்ளிக்கூட வாசலும் மிட்டாய் தட்டும்தான் கதி.

பள்ளிக்கூடம் இருக்கிற நாட்கள்தான் ராமாத்தாளுக்கு சந்தோசம் தருகிற நாட்கள். பள்ளிக்கு விடுமுறை என்றால் பித்துப் பிடித்தது போல் அலைவாள். சனி, ஞாயிறு கூட மார்கெட்டுக்குப் போய்ப் பொருள் வாங்குவதில் பொழுதுபோய் விடும். கோடை விடுமுறையில்தான் என்ன செய்வது? என்று தெரியாமல் தவிப்பாள்.

“”எப்படா பள்ளிக்கூடம் திறக்கும்” என்றாகிவிடும்.

இந்த வருடம் கூட பதினைந்து நாள் தாமதமாகப் பள்ளிக்கூடம் திறந்ததால் படாதபாடு பட்டாள்.

சில சமயங்களில் சாயந்திரம் பள்ளிக் கூடம் விட்ட பிறகு, குழந்தைகளைக் கூப்பிட அப்பா, அம்மா வருவதற்கு லேட்டானால் குழந்தைகள் இவளிடம்தான் வந்து பேசிக் கொண்டிருப்பார்கள். குழந்தைகளின் அந்த கள்ளமில்லாச் சிரிப்பில் ஆனந்தப்பட்டுக் கிடப்பாள் ராமாத்தாள்.

அந்த ஆனந்தத்தில் இப்போது அடி விழுகிறபோது அதை தாங்கிக் கொல்ள முடியாமல் தவித்து அழுதாள்.

“இந்த ஊர்ல இருக்கறவங்க எல்லாம் ஏழை பாழைங்க. நம்மள மாதிரி அன்னாடங்காய்ச்சிங்க. பள்ளிக்கூடம் அடிவாசல்ல இருந்தும் பாதிப்பேர் படிக்காம சுத்தித் திரியறாங்க. இன்னும் அஞ்சு கிலோமீட்டருக்கு அப்பால பள்ளிக் கூடத்தை மாத்திட்டாங்கன்னா… பசங்க யாரும் படிக்கப் போகவே மாட்டாங்களே… பள்ளிக்கூடம் இல்லைன்னா இந்த இடம் என்ன ஆகும்? வெறும் மணல்திட்டு மைதானமாக போய்விடுமா? உயிரோட்டமாக இருக்கக் கூடிய இந்த இடம் உயிரற்ற கட்டிடமாக போய்விடுமா?..’

அவளுக்குள் ஆயிரம் கவலைகள் ஓட்டமாய் ஓடிவந்து ஒட்டிக் கொண்டன.

“”நீ ஏன் கிழவி அழுது மடியற… அவனவன்… குழந்தைங்க படிப்பு போய்டுமோன்னு கவலைப்படறான்… உனக்கு உன் வியாபாரம் போய்டுமேன்னு கவலையா இருக்காக்கும்?….

சரி…சரி… மூக்கச் சிந்தி ஒப்பாரி வைக்காத… இன்னைக்குச் சாயந்திரம் அஞ்சு மணிக்கு இது பத்தி பேசுறதுக்கு பெற்றோர் சங்கக் கூட்டம் போட்டிருக்கோம்… ஆளாளுக்கு ஆயிரமோ ரெண்டாயிரமோ கேட்கலாம்னு இருக்கோம். தேவைப்பட்ட காசு சேந்துடுச்சின்னா இங்கயே ஒரு ஆறு சென்ட் இடத்தை வாங்கி பள்ளிக் கூடத்துக்கு கொடுக்க முயற்சி பண்ணுவோம். நீயும் கடையைச் சீக்கிரமா கட்டி வச்சுட்டு வந்துடு.. உன்னால முடிஞ்சத அஞ்சோ, பத்தோ கொடு”

நான்கு மணிக்கே பள்ளி வளாகம் பெற்றோர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. எல்லாரும் வருத்தம் தோய்ந்த முகத்துடன் பேசிக் கொண்டிருந்தார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் ஓரமாக உட்கார்ந்து கொண்டாள் ராமாத்தாள். எல்லாரும் நூறு இருநூறு என கொண்டு வந்த பணத்தை தலைவரிடம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். மொய்க்கணக்கு எழுதுவது மாதிரி வருகிற பணத்துக்கு கணக்கு எழுதிக் கொண்டிருந்தார் கிருஷ்ணமூர்த்தி.

நிறையப் பெற்றோர்கள் கூலித் தொழிலாளிகள். வேலையை முடித்த கையோடு அப்படியே பள்ளிக்கு ஒடி வந்திருந்தார்கள். ஆட்டோ டிரைவர்கள், தள்ளுவண்டியில் காய்கறி, பழம் விற்பவர்கள், டீக்கடைக்காரர்கள் என்று ஏழைக் குடியானவர்களால் நிரம்பிக் கிடந்தது பள்ளிவளாகம்.

“”நமக்குத் தேவைப்படறது ஆறு சென்ட் நிலம் வாங்கணும்னா கொறஞ்சது ஆறு லட்ச ரூபாயாவது வேணும். ஆனா இங்க ஒரு லட்ச ரூபாய் கூட தேறல. அதிகமா நான்தான் பத்தாயிரம் ரூபாய் போட்ருக்கேன். மத்த எல்லாருமே நூறு இருநூறுதான் கொடுத்திருக்கீங்க”

கிருஷ்ணமூர்த்தி பேசுவதை எல்லாரும் சோகமாய் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

“”கிருஷ்ணமூர்த்திக்கு இருக்கற வசதிக்கு அவர் ஒருத்தரே இந்த ஆறுலட்ச ரூபாய் பணத்தையும் கொடுக்க முடியும். இப்படி வெறும் பத்தாயிரம் ரூபாயைக் கொடுத்திட்டுப் பீத்திக்கிறார் பாரு” சிலர் புலம்பித் தள்ளினர்.

“”நமக்குக் கொடுத்து வச்சது அவ்ளோதான். பரவால்ல… இதுக்கு மேலேயும் உங்ககிட்ட கேட்க முடியாது. அன்னாடங்காய்ச்சிங்க என்ன பண்ணுவீங்க… அவனியாபுரம் இங்க இருந்து அஞ்சு கிலோமீட்டர்தான். பசங்க அங்கயே போய் படிக்கட்டும்”

கிருஷ்ணமூர்த்தி பேசிவிட்டு எழுந்தபோது, ராமாத்தாள் கையில் ஏதோ பேப்பரைத் தூக்கிக் கொண்டு வேகமாக எழுந்து முன்னால் போனாள்.

“”தயவுசெஞ்சு பள்ளிக்கூடத்தை இந்த இடத்தைவிட்டு மாத்த வேணாம்ப்பா… இந்தாப்பா.. பத்து வருசத்துக்கு முன்னாடி நான் சீட்டுப் போட்டு வாங்கின இடத்தோட பத்திரம். இந்த இடத்தைப் பள்ளிக்கூடத்துக்கு எழுதிவெச்சுடறேன்யா… இதோ பக்கத்தால இருக்கிற இடம்தான். அப்போ மாசாமாசம் இருநூறோ முன்னூறோ கட்டி வாங்கின எடம்யா… ஏழெட்டு சென்ட் இருக்கும். இந்த இடத்தை வச்சுக்கிட்டு ஒண்டிக்கட்ட நான் என்னய்யா செய்யப் போறேன். ஏதோ வயசான காலத்துல உதவியா இருக்குமேன்னு வாங்கிப் போட்டதுய்யா… நான் புள்ள குட்டி இல்லாதவ… இப்ப என் எடத்துல ஆயிரம் புள்ளைங்க ஓடியாடி விளையாண்டா… அதுதான்யா எனக்குச் சந்தோசம்… அம்புட்டு புள்ளைகளும் என்னோட புள்ளைங்க மாதிரிய்யா… பள்ளிக்கூடத்தை இடம் மாத்தாதீங்கய்யா… நம்ம புள்ளைங்க இங்கயே படிக்கணும்… இந்தப் பள்ளிக்கூடம் இங்கேயே இருக்கணும்யா… இந்த இடத்தை எடுத்துக்கிட்டு ஆகுற வேலையைப் பாருங்கய்யா…”

அவள் கிருஷ்ணமூர்த்தியின் கையில் பத்திரத்தைத் திணித்துவிட்டு நடந்தாள்.

– ஆதலையூர் சூரியகுமார் (மார்ச் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *